பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

This entry is part 9 of 45 in the series 4 மார்ச் 2012

மலையாள மூலம் – ஆர். உன்னி

ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி

பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ

அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அவனை மாறி மாறித்தான் சோதனை போட்டார்கள். அவனுடைய நரைத்த தலை முடி முகம் தொங்கும் தாடி, வாயொடு குதத்திறப்பு எல்லாமே சோதனைக்குள்ளானது.
இதோ தெரிகிறதே காவல் நிலையம் அதன் உள்ளே இருக்கும் ஒரு சிற்றரை. அதனுள்ளே பாருங்களேன் அங்கே மங்கலானதொரு வெளிச்சம். எழுபது வயது தாண்டிய அந்தக்கிழவனை அங்கே வைத்துத்தான் நிர்வாணமாக்கி தொங்கவிட்டிருக்கிறார்கள்.
‘ பொட்டை நாயிக்கிப்பிறந்தவனை ப்பாரு’
சொல்லிக்கொண்க்கொண்டே தன் பற்களுக்கிடை மாட்டிகொண்ட ஏதோ ஒன்றை வெளிக்கொணர முனைகிறார் அந்தக்காவல் நிலையத்தின் ஆய்வாளர். இடை இடையேயே அவர் தன் மூக்கை உறிஞ்சிக்கொள்கிறார்.
அருகே நின்ற காவலர்,
‘ எங்கனாச்சிம் ரவ அச்சம்ங்கறது இருக்குதா’ அவர் தன் பங்குக்குச்சொல்லிக்கொண்டார்
சிற்றறையிலிருந்து வெளிவந்த காவலர்கள் ஆய்வாளரிடம் தங்களால் அந்தக்கிழவனிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் கறக்கவே முடியவில்லை என நொந்துகொண்டார்கள்.
ஆய்வாளர் அந்தக் காவலர்கள் யாரையும் சட்டை செய்யாமலேயே தன் பற்களுக்கிடையே மாட்டிக்கொண்டு வெளிப்பட்ட அந்த ஒரு உணவுத்துகளை மட்டுமே பார்த்து மகிழ்ச்சிகொண்டு கிழவனின் சிறை அறையை முறைத்துக்கொண்டே இருந்தார்.
‘ என்னதான் செய்யுறான் அந்தக்கிழவன் தூங்குறானா’
ஆய்வாளர் சொல்லிக்கொண்டார்.
காவலர் ஒருவர் அக்கிழவன் அடைப்பட்டுக்கிடக்கும் அரையின் இரும்புக்கதவினைத்திறக்க ஆய்வாளர் உள்ளே நுழைந்து கிழவனின் கன்னத்தில் பளார் பளார் என அறைவிடுகிறார்.
அருகே இருந்த காவலர் ‘ இதுக எல்லாம் உன்ன எழுப்பி விடறதுக்குத்தான்’
அந்தக்கிழவனிடம் சொல்லிக்கொண்டார்.
திகைத்துப்போன அந்தக்கிழவன் பரிதாபமாக அவர்களின் முகம் நோக்கினான்.
கிழவன் முகத்தில் சிறிய புன்னகை கூட எப்படி வர முயற்சிக்கிறது.
‘ சும்மா சொல்லக்கூடாது நல்லாதான்டா சிரிக்குற’ என்றார் அந்த ஆய்வாளர்.
அந்தக்கிழவன் நன்றியோடு ஆய்வாளரையே ப்பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆய்வாளர் கிழவனின் சிண்டை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, அப்படியே தன் உடலை வில் போல் வளைத்து அக்கிழவனின் தோள்பட்டைமீது ஔங்கி ஒரு குத்து விட்டார்.
அப்படியே தன் உடலை நிமிர்த்திக்கொண்ட ஆய்வாளர்
‘ இப்ப சிரியேன் பாக்குலாம்’ என்று கேள்:வி வைத்தார்.
கிழவனின் உடல் தள்ளாடிக்கொண்டு தவித்தது. அது நிமிரமுயற்சித்தது. முடிந்தால்தானே. ஆய்வாளரின் மூடிய கை இருகி விறைத்துக் கிழவனின் மூக்கையும் வாயையும் பதம் பார்த்தது ஆய்வாளரின் கை எங்கும் கிழவனின் முகம் வழிந்த ரத்தம். தன் கை வழிந்த அந்தக் குருதியை ஆய்வாளர் கிழவனின் நெஞ்சின் மீதே துடைத்து முடித்தார்.
‘ தேவிடியா மவனே உன்னை கொன்னுபோடுவேன்’ சீறிக்கொண்டார்.
ஆய்வாளர் தன் இடத்துக்குத்திரும்பும் அந்த சமயம்
‘ சார்’ எனக்கெஞ்சும் கிழவனின் சன்னக்குரல் கேட்டது.
ஆய்வாளர் திரும்பிப்பார்த்தார். அவரின் பார்வை பரிணாம வளர்ச்சியில் பாதியில் நின்றுபோன கோர உருக்கொண்ட மிருகம் ஒன்றினை ஒத்திருந்தது. அப்படியே தன் இடது காலால் கிழவனின் நெஞ்சில் எட்டி ஒரு உதை விட்டுக்கொண்டே,
‘ பண்ணிப்பயலே உனக்கு என்னா தெரிஞ்சிக்கணும்’
வினா வைத்தார்.
சிறைஅறையின் சுவர் மீது சாய்ந்தப்டி தான் ஏதோ சொல்லிவிட கிழவன் பெருமுயற்சி செய்கிறான். அது வார்த்தையாகி வெளிப்படும் முன்னே, ஆய்வாளர், கிழவனின் சிண்டைப்பிடித்துத்தூக்கி,
‘ ஒரு வார்த்தை பேசாதே’
கட்டளை தருகிறார்.
கிழவனால் எதனையும் பேசவோ பார்க்கவோ முடியாமல் போனது. அக்கணமே அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதுவாகவே தெரிந்தது.
‘ பண்ணி.ப்பய சரியான கல்லுளிமங்கனா இருப்பான் போல’
சொல்லிக்கொண்டே ஆய்வாளர் சிறை அறையிலிருந்து வெளியே வந்தார்.
அருகிருந்த காவலர், ‘ இவனுவ எல்லாம் இதுக்குத் தனிப்பயிற்சி எடுத்து இருப்பானுவ’
ஆய்வாளர் ‘சரித்தான்’ என்றார்.
காவலர் ஒருவர் ஆய்வாளர் அருகே வந்து ஒரு குறிப்பு ச்சீட்டை ஒப்படைத்தார்.
‘ஐ ஜியும் டி ஐ ஜி ஒரு மணி நேரத்தில இங்க வர்ராங்களாம்’

காவலர் ஆய்வாளரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
‘ இந்த கிழச்சனியன் வேல முடியறவரைக்கும் இங்கயே கெடக்கவேண்டியத்துதான்’
சொல்லிய ஆய்வாளர் நீண்ட குசு ஒன்றை விட்டு முடித்தார்.
‘ எங்கனா ரவ கண்ணுதான் அசர முடிதா எனக்கு’ சொல்லிக்கொண்டார்.
மணி நான்கு அடித்தது. அக்காவல் நிலையத்தில் தேங்காய் மட்டை அழுகிய மாதிரி ஒரு துர்நாற்றம் பரவிக்கொண்டு வந்தது.
சிறை அறையில் இருந்த கிழவன் லேசாக தானே அசைந்து பார்க்க முயற்சித்தான். மின்னல் மாதிரி ஒரு வலி முதுகுத்தண்டில் புகுந்துகொண்டு அதனையே முறித்துவிடும் போலிருந்தது.
மூன்று மணி நேரத்துக்கு முன்னர்தான் அவன் பால் நிலவு பொழியும் ஆகாயத்தை ப்பார்த்தவண்ணம் இருந்தான். அதற்கு சற்று முன்னர் பொவுசியா வோடு வீட்டு க்கதவில் சாய்ந்துகொண்டிருந்தவன்தான்.
அவன் வெளியே போகும் சமயம் அவள் கேட்டாள்,
‘ இந்த நிசி வேளையில் செல்கிறாயே உனக்கு ப்பித்தா என்ன?’
‘ ஆமாம்’ அவன் புன்னகைத்தான்
‘ டார்ச் எதுவும் தரட்டுமா’
ஆகாயம் காட்டினான். நிலலவு பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
‘ எவ்விடம் சென்று நடக்கப்போகிறாய்’
‘கடற்கரைக்கு முதலில் செல்கிறேன் பிறகு’
‘ பிறகு எங்கே’
‘ அல்லாவின் விருப்பம் போலே’ அவன் சொல்லிப்போனான்.
வீடுகள் அத்தனையும் நித்திரையில் இருந்தன. சில வீடுகளின் சன்னல் வழி குறட்டை ஒலிகூட வெளிப்பட்டது. அவன் கொஞ்சதூரம் போயிருப்பான். நாயொன்று அவனிடம் குதித்துக்கொண்டு வந்தது.
நாயை முறைத்துப்பார்த்தான். ‘ என்னைத்தெரியல நான்தான்டா பாதுஷா’ அதனிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.
‘ உன் பேர் என்ன’
நாய் தன் வாலை ஆட்டியது. எதோ சொல்லவும் முயற்சித்தது.
‘ உன்னை பாதூ ன்னு கூப்பிடட்டா என் வாப்பாகூட என்னை அப்படித்தானே சிறுவனாய் இருந்தபோது அழைத்தார்’
நாய் தன் வாலை உற்சாகமாய் ஆட்டிக்கட்டியது.
‘ என்னோடு நடைபயில வருவாயா’
நாய் அமைதியாய் நின்றது.
எவ்விடம் தன்னை அழைக்கிறார்கள் என்று ஐயத்தோடு பார்த்தது. அதனால் அது அடைபட்டுக்கிடக்கும் தன்வீட்டிற்கு வெளியே வரமுடியவில்லை..
‘ சரி விடு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்’ சொல்லிக்கொண்ட அவன் கடற்கரை¨ச் செல்லும் அந்தச் சாலையில் நடக்கத்தொடங்கினான்.
அவன் பாதங்கள் கடல் அலையில் நனைந்தன.தன் இரண்டு கைகளையும் ஆகாயம் நோக்கி உயர்த்தினான். எங்கோ தூரத்தில் நிழல்போலத்தெரியும் படகுகளைத்தொட்டுவிடப்பார்த்தான்.
கடல் மணலில் சிறுநீர் கழித்துவிட்ட அவன் நண்டுகள் பின்னே ஒடினான்.
இரவின் சிறகினை க் கிளறிக்கொண்டு ஒரு கப்பல் தூரத்தில் நகர்ந்த வண்ணமிருக்கிறது பாருங்கள்.. அக்கப்பல் கோஜா கமீஸ் என்னும் ஒரு சகோதரனின் கப்பல். தன் வாப்பாதான் இப்படிச் சொல்வார். அவரின் ஆட்காட்டி விரலையே பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் தம் தலயை ஆட்டுவர். வாஸ் கோட காமா எரித்துவிட்ட கப்பல் அது. மெக்காவுக்கு புனித யாத்திரைக்குப்போய் வந்தது அந்தக் கப்பல். அதனுள்ளாய் இருந்த குழைந்தைகள் ஆண்கள் பெண்கள் என அக் கப்பல் பயணிகள் எல்லோருமேதான் அப்படியே சாம்பலாகிப்போனார்கள். எல்லா குழந்தைகளும் வாப்பாவின் துயரம் தோய்ந்த முகத்தையே நோக்கிக்கொண்டிருப்பர்கள். அவரின் கண்கள் மட்டும் குளமாகி இருக்கும். எகிப்து நாட்டு சுல்தானின் தூதுவன் அந்த ஜாவிர் பைக் கூட அக்கப்பலில்தான் இருந்தான். குழந்தைகள் தம் தலையை ஆட்டுவர்.’
‘எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்பார் வாப்பா.
எல்லோரும் தம் கண்களை மூடிக்கொள்வர்.
‘ இப்போது கடல் அலை ஔசை கேட்கிறதா?
‘ ஆமாம்’
‘குழந்தைகளின் அலறல் கேட்கிறதா’
‘ ஆமாம்’
‘ இப்போது கண்களை த்திறவுங்கள்’
குழந்தைகள் எல்லோரும் கண்களைத்திறப்பார்கள்.
வாப்பா தன் ஆட்காட்டி விரலை எங்கோ காட்டிக்கொண்டே இருப்பார். அங்கே ஒய்ந்துபோன அறையொன்றின் சுவர் மட்டுமே எதிரே நிற்கும்.
தன் கண்கள் மூடும் வரை வாப்பா இறந்த காலத்தில்தானே வாழ்ந்தார். வேட்டை நாயின் குரைப்பாகவே அவருக்கு நினைவுகள் வந்துபோயின.
தன் எழுபது வயதில் கண்களை மூடி தன் வாப்பா சொல்லாத ரகசியம் ஏதும் உண்டா எனக்கவனித்துப்பார்த்தான்.
கடல் அலைகள் ஒலித்து வணக்கம் சொல்லின. கடலும் கடல் மணலும் அவனுக்கு பாலைவனத்தை நினைவூட்டின.
கண்களை மூடினான். திறந்தான். எதிரே போர்க்கப்பல்கள். வெடிமருந்தின் நெடி. குழந்தைகளின் அலறல், அகதிக்கூட்டம். அவன் கடல் மணலில் அமர்ந்தான். முதியவன் ஒருவனின் மன உளைச்சல்கள். நினைவுத்தடுமாற்றங்கள் அவனுக்கு த்துணையாய் வந்தன. வெண்ணிற கொக்கு ஒன்று த்தாழப்பறந்து ஆஸ்துமா நோயாளியெனத்தன் குரல் எழுப்பியது.
அவன் கடற்கரையினின்று வெளிவந்தான். தீவு ஒன்று நோக்கி நடக்க ஆரம்பித்தான். தீவின் உள்ளிருக்கும் பழைய குடோனிலிருந்து சிட்டுக்குருவிகள் ஹம் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர் பிரிட்டீஷார் என எல்லோரும் புழங்கிய பாதைதானே இது. பழைய ஆட்சியாளர்களின் அடையாளங்கள் மட்டும் மறையத்தான் மறுக்கின்றன.
கடலிலிருந்து வரும் உப்புக்காற்று அவன் தலைக்குல்லாயை முத்தமிட்டு பின்னே சென்றது.
அவன் அத்தீவு நோக்கி த்திரும்பி நடந்தான். அப்போதுதான் அவன் முன்னே காவல் துறையின் ஜீப் ஒன்று வந்து நின்றது.
‘ எங்கே பயணம்?’ ஆய்வாளர் அவனிடம் தான் கேட்டார். அவன் கேட்பது யாரென்று உற்று நோக்கினான்.
‘ பதில் சொல்ல மாட்ட’
‘ சும்மா நடக்குறேன்’
‘ இந்த ராவுலயா’
‘ எதுக்கு’
‘ நடப்பது சுகம் எனக்கு’
‘ உன் பேர் என்ன’
‘பாதுஷா’
ஆய்வாளர் அருகே நின்றிருந்த காவலர்களை ப்பார்த்தார். ஆய்வாளரின் பின்னே இருந்த காவலர் அவனை ஔங்கி ஒரு குத்து விட்டார். அவன் அப்படியே கீழே சரிந்தான். ஒரு பந்தை உதைப்பது போலே அவனைக் காலால் எட்டி உதைத்து இழுத்து வந்து அந்த போலீஸ் ஜீப்பின் பின்னே அடைத்துக்கொண்டு கிளம்பி வந்தனர்.
மணி ஐந்து அடித்தது.
காலை த்தொழுகையின் அழைப்பொலி சிறை அறையை லேசாக எட்டிப்பார்த்தது. பகல் என்பதுவே உணர முடியா இருட்டுச் சிறை அறை அது. சிறை ச்சுவரில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் இருந்த அந்த கிழவனை அவ்வொலியே எழுப்பி விட்டது.
எங்கும் மலத்தின் மூத்திரத்தின் துர் நாற்றம். வணங்கி வணங்கித்தேய்ந்த தன் நெற்றியை எழுபதுவயதுக்கிழவன் சிறைத்தரையின் மீது வைத்து வணங்க ஆரம்பித்தான். மீண்டும் மீண்டும் அவன் தன் சிரம் தரை தொட்டது..
அவனுடைய கழுத்தும் முதுகும் காய்ந்துபோய்ச் சுருக்கிக்கொண்டு சுண்டி சுண்டி வலித்தது.
.
‘ பண்ணிப்பயலே நீ என்னா பீய பேண்டுட்டு அதச் சுருட்டிகிருட்டி வச்சிருக்கியா ? £ எழுந்திருடா எழுந்திருங்கறேன்ல’ ஆய்வாளர் அவனை விரட்டிக்கொண்டே இருந்தார்..
———————————————

.

.

.

.

.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *