பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்

This entry is part 13 of 45 in the series 4 மார்ச் 2012

பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும்

கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘நாம் எல்லோரும் மிகவும் சிக்கலான, புரிந்து கொள்ள முடியாத இந்தப் பூகோளத்தில் புகுத்தப் பட்டிருக் கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒருசிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது. ‘

டாக்டர் டேவிட் சுஸுக்கி (Dr. David Suzuki, Scientist & Environmentalist May 2005)
இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள் ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டறியும் நியதிகளாய் ஆகிவிட்டன. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு, செழிப்பான நீர்வள, நிலவளச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆய்வுகள் மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியப் பணியாகி விட்டது.

 

AECL கனடா  டிசைன் குழுவினர்முன்னுரை:  இயற்கையால் படைக்கப்பட்ட மனித இனங்களும், உயிரினங்களும், பயிரினங்களும் எத்தனை, எத்தனை விதமான கழிவுகளைத் தினமும் உற்பத்தி செய்து வருகின்றன! மனிதர் படைக்கும் தொழிற் துறைகள் மூலமாக எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்தாலும், எவ்வித முறையில் மின்சக்தி படைத்துப் பரிமாறி வந்தாலும் ஓரளவு அல்லது பேரளவுக் கழிவுகள் எச்சமாவதை யாவரும் தவிர்க்க முடியாது! இருபதாம் நூற்றாண்டில் யந்திர, இராசயன, மின்சாரத் தொழிற் சாலைகள் உலகில் பலமடங்கு பெருகி, இரண்டாம் தொழிற்புரட்சி பூத வடிவெடுத்தது! இரண்டாம் உலகப் போருக்குப் பின், அணு ஆயுத ஒலிம்பிக் பந்தயப் போட்டி உலகெங்கும் மறைவாக நிகழ்ந்து, அணு ஆயுத வெடிப்புகள் கதிரியக்கப் பொழிவுகளைப் பூகோள மெங்கும் பரப்பி விட்டன! ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி மீது அணு ஆயுதங்களை வீசிய ஒரே ஒரு வல்லரசு அமெரிக்கா! ஆனால் இனி வரும் எதிர்பாராத போரில் அபாயகரமான அணு ஆயுதங் களைப், போரிடும் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று வீசி பந்து விளையாடலாம்! அல்லது மறைவாக உதவி புரியும் வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை விலைக்குக் கொடுத்து, வீசவிட்டு வேடிக்கை பார்க்கலாம்! விடுதலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லரசுகள், தமது புதிய ஆயுதங் களைப் பிறர்மேல் சோதிக்கப் போர் தொடுத்துத், தாமே தமது வலையில் சிக்கிக் கொள்ளலாம்! இவ்வாறு கலியுகத்தில் பல உலக நாடுகள், யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல், தமது உற்பத்திக் கழிவுகளைத் தம் குடிமக்கள் மீதே தெளித்துக் கொண்டு வருகின்றன என்று, கனடாவின் சூழ்வெளிக் காப்பு விஞ்ஞானி, டாக்டர் டேவிட் சுஸுக்கி கூறுகிறார்!

 

 

கழிவுகளை முற்றிலும் நீக்க சபதம் பூண்டு மனித சமுதாயம் முன்வந்தால், அணுமின்சக்தி நிலையங்கள் நிரந்தரமாய் மூடப்பட வேண்டும்! நிலக்கரி மின்சார நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். அநேக தொழிற் சாலைகளின் கதவுகளில் பூட்டுப் போட வேண்டும்! ஆனால் அணு ஆயுத வல்லரசுகள் அவற்றின் பெருக்கத்தையும், சோதனைகளையும் உலகத்தில் முற்றிலும் நிறுத்தலாம்! கைவசம் பதுக்கப் பட்டிருக்கும் அணு ஆயுதங்களின் தூண்டு விசையை வெட்டி, குண்டுகளை முடமாக் கலாம்! மேலும் தொழிற் சாலைகளின் எச்சக் கழிவுகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும், வீரியத்தை வடிகட்டவும் நாம் முயலலாம்! புகைபோக்கிகள் மூலம் வெளியேறும் விஷ வாயுக்களை வடிகட்டிச் சுத்தீகரிப்பு செய்யலாம்! ஆற்றிலும், அணைகளிலும், கால்வாய்களிலும், ஏரிகளிலும், தடாகங்களிலும் கழிவுத் துணுக்குகள் புகாவண்ணம் நாம் கண்காணித்து வர முடியும்! இவை அனைத்தையும் யார் தொடர்ந்து செய்ய வேண்டும் ? ஒவ்வொரு நாடும், நகரமும், ஊரும், கிராமமும், வாழும் குடிமக்களும் பொறுப்புடன், பொறுமையுடன் புரிய வேண்டும்! அப்பணிகளைக் கடைப்பிடிக்க அரசாங்கம் குடிமக்களுக்கு அறிவித்து, பயிற்சி அளித்து, சட்டமிட்டு, கண்காணித்து, நெறியுடன் கண்டித்து வருவதைத் தவிர, மனித இனங்கள் முன்னேறுவதற்கு வேறு வழியே யில்லை!


கனடாவில் அணு உலைகளில் உண்டாகும் கதிரியக்கக் கழிவுகள்
கனடாவில் இயக்கத் தகுதி பெற்ற 22 வணிகத்துறை அணுமின் நிலயங்கள் கடந்த 30 ஆண்டுகளாக 2003 ஆண்டு முடிவு வரை 1.7 மில்லியன் தீய்ந்த எருக் கட்டுகளை [Spent Fuel Bundles] வெளியாக்கி யுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் அந்த அணுமின் உலைகள் சுமார் 85,000 தீய்ந்த எருக்கட்டுகளை உற்பத்தி செய்யும். இயக்க ஆயுள் எல்லை கடந்து அவை யாவும் காலாவதியாகும் போது, மொத்தம் 3.6 மில்லியன் எரிக்கழிவுக் கட்டுகள் சேரும் என்று மதிப்பிடப் படுகிறது. அணுமின் உலைத் தளங்களில் கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாய்ச் சேர்த்து வைக்க, நீர்த் தடாகங்கள் எனப்படும் ‘நீர்நிலைச் சேமிப்பு ‘ [Wet Storage], காங்கீரிட் இரும்புக்கலன் எனப்படும் ‘வரண்ட சேமிப்பு ‘ [Dry Storage] ஆகியவை தற்காலிகச் சேமிப்புக்கு அமைக்கப் பட்டுள்ளன. முதல் சேமிப்புத் தடாகத்தில் [Primary Storage Bay] தீய்ந்த எருக்கட்டுகள் 6 அல்லது 9 மாதங்கள் தங்கியும், அதற்குப் பிறகு இரண்டாம் சேமிப்புத் தடாகத்தில் [Secondary Storage Bay] 2 அல்லது 3 வருடங்கள் தங்கியும், தொடர்ந்து நீரோட்டத்தால் வெப்பசக்தி நீக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நீண்ட கால வரண்ட சேமிப்புக்கு 50 முதல்-100 ஆண்டுகள் வரை காங்கிரீட் கலன்களில் சேமிக்கப்பட வேண்டும். 2002 ஆண்டு கனடாவில் நிறைவேறிய அணுவியல் கழிவு புதைப்புச் சட்டப்படி [Nuclear Fuel Waste Act], அணுவியல் கழிவு மேற்பார்வை துறையகம் [Nuclear Waste Management Organization (NWMO)] தோன்றி பணி செய்ய ஆரம்பித்தது.

 

 

வெளிவரும் தீய்ந்த கழிவுகளை நீர்த் தடாகத்தில் சேமித்து வைக்க, இரண்டு நீக்க முறைகளில் அவை பாதுகாக்கப்பட வேண்டும். முதலாவது: வெப்ப நீக்கம் [Heat Removal]. இரண்டாவது: கதிர்வீச்சு குறைப்பு [Radiation Reduction]. கழிவுகள் முதலில் சேமிக்கப்படும் நீர்த் தடாகம் அவ்விரு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அணு உலையிலிருந்து உடனே நீக்கப்படும் சூடான எருக்கட்டு சுமார் 10% வெப்பசக்தி உண்டாக்குகிறது. அந்த வெப்பத்தைத் தணிப்பது நீர்த் தடாகத்தில் இயங்கிவரும் நீரோட்டமாகும். அவ்விதச் சுற்று நீரோட்டம் வெப்பக் கடத்தி [Heat Exchangers] மூலமாக அனுப்பப்பட்டு, வடிகட்டுச் சாதனங்கள் [Filter Equipment] வழியாக ஓடி, பிளவுக் கழிவுகளின் வெப்பத்தையும் [Fission Product Delay Heat], கதிரிக்க வீரியத்தையும், துணுக்குகளையும் குறைக்கிறது. ஒரே நாள் தேக்கத்தில் 10% வெப்பசக்தி, 1% வெப்பசக்தியாக எருக்கட்டுகளில் தணிகிறது. ஓராண்டில் 0.1% ஆக வெப்பசக்தி குன்றுகிறது. அதாவது சராசரி 100 W வெப்பத்தை தீய்ந்த ஒரு காண்டு எருக்கட்டு [One CANDU Spent Fuel Bundle] ஓராண்டுக்குப் பிறகு வெளியாக்குகிறது! கழிவுகளின் கதிர்வீச்சுக்குப் போதிய கவசம் அளித்துக் கதிரியக்கத்தைத் தணிக்க, குறைந்தது 10 அடி [3 மீடர்] ஆழமுள்ள நீர்த்தடாகம் தேவைப்படும். நீர்க் கவச மில்லாத கதிரியக்கக் கழிவு முதலில் வீசும் கதிரடி [5000-6000 Rem/Hr (50-60 Sv/Hr)], சில நிமிடத் தாக்குதலில் ஒருவருக்கு மரண அளவு [Lethal Dose] தருகிறது! 50 ஆண்டுக்குப் பிறகு 1 Sv/Hr ஆகவும், 100 ஆண்டுக்குப் பிறகு 0.3 Sv/Hr ஆகவும், 500 ஆண்டுக்குப் பிறகு 0.001 Sv/Hr (100 mRem/Hr) ஆகவும் மிக மெதுவாகக் குறைகிறது! [Sv means Sievert Radiation Dose, 1 Sv=100 Rem]

 

 

1978 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம், அண்டாரியோ மாநில அரசுக் குழுவினருடன் இணைந்து, நீண்ட கால நிரந்தரப் புதைப்புக்கு, அணுவியல் கழிவுக் கண்காணிப்புத் திட்டத்தைச் [Nuclear Waste Management Program] சீராய் நிறைவேற்றியது. கனடா அணுவியல் துறையகம் [Atomic Energy Canada Ltd (AECL)] அதன் ஆய்வு, விருத்திப் பணிகளின் [Research & Development Tasks] பொறுப்பை ஏற்றுக் கொண்டது. AECL அம்முறையில் டிசைன் செய்து முடிவு செய்த அமைப்பு இதுதான்: 1600 முதல் 3600 அடி [500 முதல் 1000 மீடர்] ஆழமுள்ள கடினப் பாறைச் சுரங்களின் குகைப் பாதைகளில் காங்கீரிட் அரண்கள் அமைக்கப் பட்டு, கதிரியக்கக் கழிவுகள் நிரந்தரமாக நீண்ட காலச் சேமிப்பு செய்யப்படும். அத்திட்டம் 1994 அக்டோபரில் தயாரிக்கப்பட்டு, 1998 மார்ச்சில் கனடாவின் சூழ்வெளிக் காப்பகம் மக்களுடன் உரையாடி 2002 ஆம் ஆண்டில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அணுவியல் கழிவு அரண் அமைப்புத் துறையகம் [Nuclear Waste Management Organization (NWMO)] அமைப்பாகி இயங்க ஆரம்பித்தது. கனடாவின் நிதி ஒதுக்கமான (8-11) பில்லியன் அமெரிக்கன் டாலர் தொகை (60-90) ஆண்டுகளுக்குப் பகுக்கப்பட்டு அளிக்கப்படும். அப்பணியில் உச்ச வேலை நடக்கும் போது சுமார் 1000 பேர் பணி செய்வார்கள்.

 

மூன்று விதமான கதிரியக்கக் கழிவுகள்

அணுமின்சக்தி உலைகள் இயங்கிவரும் போது, தொடர்ந்து கதிரியக்கக் கழிவுகள் விளைந்து வருகின்றன. கதிரியக்கத்தால் மனிதருக்கு தீங்குகள் விளைவதால் அவற்றைக் கவனமுடனும், பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் கையாள வேண்டும். முதலில் கழிவுகளை வெளிவர வைத்து நீர்த் தடாகத்தில் முடக்கும் பணியாளிகள் பாதுகாக்கப் படவேண்டும். அடுத்து நிலையத்தைச் சுற்றி வாழும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் கதிரியக்க வாயுக்கள் அரணை விட்டு வெளியேறாமல், சூழ்வெளி சுத்தமாக இருக்க பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் அணுவியல் கழிவுகள் அனைத்தும் வெகு கவனமாகக் கட்டுப்பாட்டு நெறி முறைகளில் கையாளப்பட்டு, நிரந்தரச் சுரங்கங்களில் புதைக்கப்பட வேண்டும். அணு உலைகள் மூலமாக வெளியேறும் கதிரியக்கக் கழிவுகள் மூன்று தரத்தில் பிரிக்கப் படுகின்றன. வீரிய நிலை, இடைநிலை, கீழ்நிலை [High Level, Intermediate Level, Low Level] என்று மூன்று வகுப்பில் தனித்திடப்பட்டு சேமிக்கப் படுகின்றன. இக்கட்டுரையில் வீரிய நிலைக் கழிவுகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது. மற்ற இடைநிலை, கீழ்நிலைக் கழிவு சேமிப்பு முறைகளை நான் முன்பு திண்ணையில் எழுதிய கட்டுரைகளில் காணலாம் [கீழ்த் தகவல் குறிப்புகள்: 12, 13].

 

 

இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள் ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டறியும் நியதிகளாய் ஆகி விட்டன. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு, செழிப்பான நீர்வள, நிலவளச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியப் பணியாகி விட்டது! அந்த முயற்சிகளில் ஈடுபடும் போது புதைப்பிடத்தில் நீண்ட கால பூதள-இரசாயன, அடித்தள நீரோட்ட இயக்கங்களால் [Geochemical & Hydrologic Behaviour] சூழ்மண்டலம் பாதிக்கப்படுமா என்று ஆழ்ந்து நோக்க வேண்டும். அவற்றைச் சோதனை செய்ய AECL ஓர் அடித்தள ஆய்வுக் கூடத்தை [Underground Research Laboratory] மானிடோபா மாநிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் வெகு ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கக் குகையில் நிறுவகம் செய்துள்ளது.

 


நிரந்தரப்  புதைப்பிடத் தேர்ந்தெடுப்பும், முடிவு அறிவிப்பும்

1998 ஆம் ஆண்டில் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவிற்கு [Nuclear Waste Management Organization] மூன்று வித சேமிப்பு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, மூன்றாண்டுகள் தரப்பட்டன. புதைப்பிட முடிவு 2005 நவம்பர் மாதம் வெளியிடப்படும்.

1. கனடாவில் மூடப் பட்டிருக்கும் பாதாளச் சுரங்கக் கிடங்குகள் [Deep Underground in the Canadian Mines]

2. அணுமின் உலைத் தளங்களில் மேற்தள அமைப்புகள் [Disposal Sites Above-ground at Reactor Locations]

கனடா நாட்டு நடுவில் அமைக்கப்படும் பொதுவான புதைப்பிடம் [Common Centralized Disposal Area].
AECL கம்பெனி, மற்றும் அணுமின் சக்தி உற்பத்தியாளர்கள் முதலில் தரவேண்டிய மொத்த பணம்: 424 மில்லியன் அமெரிக்க டாலர். (அண்டாரியோ பவர் கம்பெனி: 400 மில்லியன்; குவெபெக் பவர் கம்பெனி: 16 மில்லியன்; AECL கம்பெனி: 8 மில்லியன்). மேலும் ஒவ்வோர் ஆண்டிலும் அந்தக் கம்பெனிகள் 2-100 மில்லியன் டாலர் தொகையும் அளிக்க வேண்டும்.

 

 

கனடா புரூஸ் தளத்தில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் :

அண்டாரியோ பவர் கம்பெனி [Ontario Power Generation (OPG)] புரூஸ் அணுமின்சக்தித் தளத்தில் தற்போது அமைந்துள்ள கழிவுச் சேமிப்புக் கூடத்தின் கீழே 2150 அடி [660 மீடர்] ஆழத்தில் பூதளக் குழிக் குகையில் [Geologic Repository] கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்கத் திட்டமிட்டுச் சுற்றுப்புற நகர மாந்தரிடம் உரையாடி விளக்கம் தந்து வருகிறது.

1. அருகில் ஹூரான் ஏரி [Huron Lake] உள்ளதால், நீரோட்டச் சீர்கேடுகள் நேராதவாறு இருக்க 2150 அடி ஆழத்தைத் தேர்ந்தெடுக்க நேரிட்டது.

2. மேலும் ஹூரான் ஏரியின் நீர் அடித்தள உயரம் குகைக்கு மேல் குறைந்தது 1300 அடி [400 மீடர்] உயரத்தில் இருக்கும்.

3. தேர்ந்தெடுத்த ஆழக் குகை அருகே உள்ள நிலத்து நீரின் உப்பளவு [Ground-water Salinity ] கடல் நீரின் உப்பளவை விட மூன்று மடங்காக உளவு செய்யப் பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு மில்லியன் ஆண்டுகளாக ஹூரான் ஏரிச் சுவைநீரும், குகை அடித்தள உப்புநீரும் கலந்திட வில்லை என்று அறியப் பட்டுள்ளது. அதனால் குகையில் புதைபடும் கதிரியக்கக் கழிவுகள் ஹூரான் ஏரியின் சுவைநீரில் கலக்க முடியாது என்பது உறுதியான சான்றாக கருதப்படுகிறது.

4. குகைப் பகுதியில் 450 மில்லியன் ஆண்டு வயதுடைய சுண்ணாம்புக் கல் மாதிரிகள் [Lime-stone Samples] எடுக்கப்பட்டுச் சோதிக்கப்பட்ட போது நிலநடுக்க அமைதிநிலை பெற்றவை [Seismically Stable Condition] என்று காணப்பட்டன.

5. 450 மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட பெருத்த காலநிலை மாறுதல்கள், பனியுகம் தாக்கிப் பரவியது, நில நடுக்கங்கள் போன்ற எவையும் பாறைகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்க வில்லை.

6. அங்கிருக்கும் சுண்ணாம்புக் கல் ஆண்டுக்கு ஒரு மில்லி மீடர் நகர்ச்சி அடைந்து ‘தணிந்த நீர்க்கசிவுத் திரட்சி ‘ [Low Permeability] உள்ளதாக அறியப்பட்டது. அதாவது நீர்க்கசிவு நகர்ச்சி 1000 ஆண்டுகளில் ஒரு மீடர் நீளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது! கழிவுகளுக்கு இது ஒரு முக்கிய கவசம். ஏனென்றால் புதைபடும் கழிவுகளின் நகர்ச்சி ஒடுக்கம் இதனால் உறுதிப் படுகின்றது.

7.  200 மீடர் உயரமுள்ள தணிந்த நீர்க்கசிவு திரட்சி உள்ள களிமண் தட்டின் [Shale] மீது சுண்ணாம்புக் கல் மேலடுக்கு இருப்பது, கதிரியக்கக் கழிவுகளுக்கு கூடுமான அரணாக அமைந்திருக்கிறது.

 


இந்தியாவில் அணுவியல் கழிவுகளின் நீண்ட காலப் புதைப்பு ?
இந்தியாவில் இயங்கிவரும் பல அணுமின் நிலையங்களும், அணுவியல் ஆய்வு உலைகளும், வேகப் பெருக்கி உலைகளும், அணு ஆயுதங்களுக்காகப் பயன்படும் தீய்ந்த எருக்கோல் சுத்தீகரிப்பு இரசாயனத் தொழிற்சாலைகளும் இராப்பகலாய் டன் கணக்கில் கதிரியக்கக் கழிவுகளைப் பெருக்கி வருகின்றன. அவற்றை எல்லாம் பாரதம் பாதுகாப்பாக அடக்கம் செய்ய, நீண்ட காலப் புதைப்பிடத்தை எங்கே, எப்படி, எப்போது நிறுவப் போகிறது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்காமலே இருக்கிறது.
இந்தியா கனடாவின் காண்டு கனநீர் அணுமின் உலை டிசைன்களை வாங்கிப் பன்மடங்கு அணுமின்சக்தி உற்பத்தியைப் பெருக்கினாலும், கனடாவின் கதிரியக்கக் கழிவு புதைப்பு விதி முறைகளை ஏனோ பின்பற்ற வில்லை! 2003 நவம்பரில் கனடாவின் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவினர், அனைத்து அணு உலைகளின் தீய்ந்த எருக்கட்டுகளின் மொத்த எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்து எப்போது, எங்கே, எவ்விதம், யார் பொறுப்பில் நிறைவேறப் போகிறது என்று அச்சிட்டு, பதிப்புகளை இலவசமாக அளித்து, ஊர் மக்களிடம் விவாத மன்றங்களில் வாதித்து உடன்பாடைப் பெற்றுக் கொண்டது. ஆனால் உலகப் பெரும் குடியரசான பாரத தேசத்தில், அணுவியல் கழிவு புதைப்பு விதி முறைகளில் அவ்விதம் நடந்து கொள்ளவில்லை என்பது வருந்தத் தக்க வரலாறு!

******************************

India’s Nuclear Waste Handling and Storage.


Twenty Nuclear Power Reactors produce about 3% of India’s electricity, and seven more are under construction.[37] Spent fuel is processed at facilities in Trombay near Mumbai, at Tarapur on the west coast north of Mumbai, and at Kalpakkam on the southeast coast of India. Plutonium will be used in a fast breeder reactor (under construction) to produce more fuel, and other waste vitrified at Tarapur and Trombay.[39][40] Interim storage for 30 years is expected, with eventual disposal in a deep geological repository in crystalline rock near Kalpakkam.[41]
1.    ^ Raj, Kanwar (2005). “Commissioning and operation of high level radioactive waste vitrification and storage facilities: The Indian experience” (PDF). International Journal of Nuclear Energy Science and Technology (1): 148–63. http://inderscience.metapress.com/media/pe669ujopp4tumbobk91/contributions/n/9/t/v/n9tvnnka28k1r73a.pdf. Retrieved 2008-12-24.

2.    ”Nuclear power in India and Pakistan”. UIC Nuclear Issues Briefing Paper #45. World Nuclear Association. 2006. Archived from the original on 2009-01-12. http://web.archive.org/web/20071214195305/http://world-nuclear.org/info/inf53.html.
+++++++++++++++++++++++++++++

தகவல்:

1. Bruce A Restart, Bruce County Environmental Assessment, Bruce Power Report [Dec 2004]
2. Bruce Power Community Update [March 2004]
3. President & CEO Report, Bruce Power [www.brucepower.com (2004)]
4. Cameco (Uranium) Corporation Report [March 31 2005]
5. New Fuel Project, Bruce County Environmental Assessment Report [July 2004]
6. The Future Management of Canada ‘s Used Nuclear Fuel [Nuclear Waste Management Organization (Report Nov. 2003)]
7. Deep Geologic Repository Proposal, Long-term Management of Low & Intermediate Waste at Western Waste Management Facility [Fall 2004]
8. Update on Ontario Power Generation ‘s Proposed Deep Geologic Repository [Kincardine News (May 4, 2005)]
9. Ontario Power Generation Western Waste Management Facility (April 2005)
10 Summary of the Environmental Impact Statement on the Concept of Disposal of Canada ‘s Nuclear Fuel Waste By: Atomic Energy of Canada Ltd (AECL Report, 1994)
11 Canadian Geographic Nuclear Reactor, Environmental Issue: Nuclear Resurrection Article By: Elaine Dewar (May 2005).
12 http://www.thinnai.com/science/sc0724031.html [திண்ணைக் கட்டுரை (ஜூலை 24, 2003)]
13 http://www.thinnai.com/science/sc0802032.html [திண்ணைக் கட்டுரை (ஆகஸ்டு 1, 2003)]
14  http://en.wikipedia.org/wiki/High-level_radioactive_waste_management  (High-level radioactive waste management by World Nations.)  (February 19, 2012)
15  http://en.wikipedia.org/wiki/Dry_cask_storage  (Dry cask storage) (November 20, 2011)
16  http://www.nuclearfaq.ca/cnf_sectionE.htm  (Nuclear Waste Management in Canada)
17  http://www.nrc.gov/waste.html ( US  NRC Radioactive Management)
*************

jayabarat@tnt21.com [S. Jayabarathan  (March 2,  2012)]   (R-1)

Series Navigationஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *