அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்

This entry is part 2 of 35 in the series 11 மார்ச் 2012

ம.சந்திரசேகரன்

உதவிப் பேராசிரியர்

பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி

தருமபுரி.05.

மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை அகநானூற்று ஔவையார் பாடல்களில் இக்கட்டுரை ஆராய்கிறது.

அகநானூற்றில் ஔவையார் பாடிய 11, 147, 273, 303 எனும் எண்கள் கொண்ட நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் பாலை திணைக்குரியதாகவும், தலைவி கூற்று பாடல்களாகவும் பாடப்பட்டுள்ளன.

ஒன்றுதல்

ஒரு சிறந்த நபரை இழந்ததால் அந்த நபரின் தன்மைகள் பண்புகள், குணநலன்கள் ஆகியவற்றை மேற்கொள்ளுவதாகப் பாவித்தல் ஒன்றுதலாகும். புகழ்வாய்ந்த ஒரு நபரோடு அல்லது ஒரு நிறுவனத்தோடு ஒன்றித்து ஒருமை காணுதலும் ஒன்றுதலாம்1

தலைவி தலைவனோடு வாழ்ந்து இன்பம் அடைந்தவள். தலைவனின் பண்பு நலன்களை நன்கு உணர்ந்தவள். எனவே, தலைவன் பிரிவை ஏற்க அவள் மனம் உடன்படவில்லை. மேலும் அவனில்லா இடம் துன்பம் தருவதாகக் கருதுகிறாள். தன் துன்பம் நீங்க தலைவன் சென்ற வழியில் தானும் செல்ல வேண்டும் என எண்ணுதல் ஒன்றுதல் எனும் உளவெளிப்பாட்டைக் காட்டுகின்றது. இதனை>

அழிநீர் மீன் பெயர்ந் தாங்கு>அவர்

வழிநடைச் சேறல் வலித்திசின் யானே 303:19-20

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.

மனவெழுச்சி

மனவெழுச்சி என்பது உணர்ச்சிகளின் மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும். நம்மைப்பாதிக்கும் நிகழ்ச்சியிலோ நாம் மிக்க ஆர்வம் கொண்டுள்ள ஒரு சூழ்நிலையிலோ மனவெழுச்சிகள் நம்மிடம் இயல்பாகத் தோன்றுகின்றன2.

மனவெழுச்சி வகைபாட்டை உளவியல் அறிஞர்கள் கூறுவதாக சந்தானம் பின்வருமாறு கூறுகிறார். அவை:

1. ஆதாரமான இலக்கு நோக்கிச்செயற்படும் மனவெழுச்சிகள் (சினம்> மகிழ்ச்சி> அச்சம்> துயரம்).

2. புலனுணர்ச்சிகளால் தூண்டப்படும் மனவெழுச்சிகள் (வலி> அருவருப்பு> உற்சாகம்).

3. தற்கருத்து> தனது அவாநிலை (டநஎநட ழக யுளிசையவழை) ஆகியவற்றுடன் இணைந்தவை (பெருமிதம்> அவமானம்> குற்ற உணர்வு).

4. பிறரைச் சார்ந்து எழும் மனவெழுச்சிகள் (அன்பு> பொறாமை> பரிதாபம்).

5. ஆச்சரியம்> மரியாதை போன்ற பாராட்டுத் தொடர்பான மனவெழுச்சிகள்3. என்பனவாகும்.

வினை காரணமாகப் பிரிந்த தலைவன் காலம் நீட்டித்தான். பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி தன் நெஞ்சிடம்>

தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அலர்அரும்பு ஊழ்ப்பவும்> வாரா தோரே 273: 10-17

என மொழிகின்றாள். தலைவன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தலைவி> அவன் பிரிந்த காலத்தில் தனக்கு நேர்ந்த உள்ளுணர்வுகளை இயம்புகின்றாள்.

வெளிப்படையான பண்பு நடத்தைகளை வெளிப்படுத்தி பரவக்கூடிய உளவியல் மாற்றங்களை உள்ளடக்கிய சிக்கலான ஒரு உணர்வு அனுபவமே மனவெழுச்சியாகும்4 எனச் சார்லஸ்.ஜி. மாரிஸ் கூறுகிறார்.

இயற்கையாக வந்த வாடைக் காற்று தனக்கு வேட்கை நோய் எனும் இளைய முளை முலையின் கண் முளைத்து> துன்பம் எனும் தண்டாக வளர்ந்து> ஊர்ப் பெண்கள் பழிச்சொற்கள் எனும் கிளையாகக் கிளைத்து> ஆராக்காதல் என்னும் தளிர்களை ஈன்று> நாணமில் பெரும்மரமாகி> அலராகிய அரும்புகளைத் தோற்றுவித்தது> இச்சூழலிலும் காதலர் வாரார் எனத் தன் துயரத்தைத் தலைவி மொழிகின்றாள். இஃது தலைவியின் மனவெழுச்சி உளவெளிப்பாடாக அமைந்துள்ளது.

நிலைமாற்றம்

உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாக உடல் நோய்கள் ஏற்படுவதுண்டு. உள்ள நோய் உடல் நோயாக (Psychosomatic) மாறுவதை நிலைமாற்றம் என உளவியலார் குறிப்பிடுவர்5.

செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள்>

செலவுஅயர்ந் திசினால் யானே; பலபுலந்து

உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்

தோளும் தொல்கவின் தொலைய> நாளும்

பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி

மருந்துபிறிது இன்மையின்> இருந்துவினை இலனே!147: 10 – 14

எனக் கூறுகின்றாள். தலைவனின் பிரிவால் உளபாதிப்புக்கு உள்ளானத் தலைவி யாவற்றையும் வெறுத்து> உண்ணாமல் உடல் மெலிவுற்று> தன் அழகு கெட்டதாகக் கூறுகிறாள். மேலும்> தலைவனால் ஏற்பட்ட நோய்க்குத் தலைவனே மருந்து பிறிது இல்லை எனவும் மொழிகின்றாள். எனவே> தலைவனின் பிரிவு தலைவியின் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வுணர்வே நோயாக மாறியது நிலைமாற்றம் ஆகும்.

பிணிக்கு மருந்து பிறமன் அணிஇழை

தன்நோய்க்குத் தானே மருந்து. (குறள். 1102.)

எனும் குறள் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். மேலும்>

புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்

நலம்கவர் பசலை நலியவும்> நம்துயர் 273: 4 – 5

என்ற அடிகளும் தலைவியின் நிலைமாற்றத்தைக் குறிக்கின்றன.

நினைவூட்டல்

நாம் கற்றவைகளையோ> அனுபவித்து உணர்ந்தவைகளையோதாம் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ளமுடியும். ஆகையால் அனுபவம் அல்லது கற்றல் நினைவின் முதற்பகுதியாக அமைகிறது. நமக்கு அவை மீண்டும் தேவைப்படும் வரை கற்ற அல்லது அனுபவித்து உணர்ந்தவை மனத்தில் இருத்தி வைக்கப்படும். இவ்வாறு அமையும் நினைவின் பகுதியை மனத்திருத்தல்) எனலாம். இப்படி மனத்தில் இருப்பனவற்றை நாம் நினைவுட்டிக் கொள்கிறோம். இந்நினைவுட்டுதல் மீட்டுக்கொணர்தல் () அல்லது மீட்டு அறிதல் ( என இருவகையாக அமைகிறது6.

தன் கணவனைத் தேடி காணாது துயர் அடைந்த ஆதிமந்தி போல் யானும் வருத்தமுற்று திரிவேனோ (அகம்.45) என வெள்ளிவீதி வருந்தி தன் கணவனைத் தேடிச் சென்றுள்ளாள் (அகம்.147). இந்நிகழ்வை தலைவி மனதில் பதியவைத்துள்ளாள்; தனக்கும் அத்தகைய நிலை வரும் சூழலில் அந்நிகழ்வை நினைக்கின்றாள். பெற்ற அனுபவங்களைத் தேக்கி வைத்து> நனவு நிலைக்குக் கொண்டு வருவதற்காக நாம் பெற்றிருக்கும் ஆற்றலைத்தான் நினைவுபடுத்தல்7 என ரைபர்ன் கூறுகிறார்.

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை

வெள்ளி வீதியைப் போல நன்றும்

செலவுஅயர்ந் திசினால் யானே; பலபுலந்து 147 : 8 – 10

எனக் கூறுவதன் மூலம் தலைவி உள்ளத்துள் தேக்கி வைத்த நிகழ்வு நனவு நிலையில்> யானும் வெள்ளவீதியைப் போல் தலைவனைத் தேடிச் செல்வதற்கு விரும்பினேன் என்று வெளிப்பட்டுள்ளது. தலைவியின் இக்கூற்று நினைவுட்டல் எனும் உளவெளிப்பாடாக அமைகின்றது.

பாலுணர்ச்சி

ப்ராய்ட்> பாலுணர்ச்சியை வாழ்வுணர்ச்சிகளின் முக்கிய அடங்களாகக் காண்கிறார்.8 மனிதனிடத்தில் பாலுணர்ச்சி பால் வெறி ஆகியவை உள்ளன. மூளையிலிருந்து பாலுறுப்புக்கும் பாலுறுப்பிலிருந்து மூளைக்கும் இருவழி இணைப்பை ஏற்படுத்துவது பாலுணர்ச்சியாகும். மாறாக மூளையிலிருந்து பாலுறுப்புக்கு ஒரு வழி இணைப்பை மட்டும் ஏற்படுத்துவது பால் வெறியாகும்.9 மனிதனின் பெரும்பாலான செயல்களில் பாலுணர்ச்சிப் பங்கு கொள்கிறது என உளவியல் அறிஞர்கள் மொழிகின்றனர்.

தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் தலைவி பெரிதும் வருந்தினாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி> இவள் பிரிவாற்றாமையால் இறந்துபடுவாளோ என எண்ணி வருந்தியவளிடம் தலைவி> தலைவர் பிரியுங்காலத்து என்னையும் உடன் அழைத்து சென்றனர் ஆயின் கச்சினை விரித்துப் பரப்பி வைத்தமை போன்று விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினது நெருங்கிப் புத்த புங்கொத்துகளையுடைய பெரிய கிளைகள் தாழ்ந்துள்ள மணல் மேட்டில் ஒருவரது மெய் மற்றவரது மெய்யுள் புகுந்தாற் போன்ற கைகள் விரும்புகின்ற புணர்ச்சியை யானும் பெறுவேன்> அன்பு தோன்ற அவரும் பெறுவர். ஆனால் அதனைச் செய்தாரிலையே என இயம்புகின்றாள். இதனை>

வம்பு வரித்தன்ன பொங்கு மணற்கான் யாற்றுப்

படுசினை தாழ்ந்த பயில்இணர் எக்கர்

மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்

அவரும் பெறுகுவர் மன்னே நயவர 11: 8 – 11

எனும் அடிகள் உணர்த்துகின்றன. உள்ளுணர்ச்சிகளில் பாலுணர்ச்சிக்கு உடலைவிட உள்ளம்தான் பிரதானமாகும். இன்பத்தை மையமாகக் கொண்டு பாலுணர்ச்சி செயல்படுவது உள நிறைவுக்காக அன்றி வேறில்லை. இதனால் மனிதனின் பாலின்பம் உடலைச் சார்ந்திராமல் உள்ளத்தைச் சார்ந்து இருக்கிறது10 எனவே> தலைவியின் பாலுணர்ச்சியும் இங்கு உள்ளம் சார்ந்ததாக உள்ளது. உள்ளம் மகிழ்வடைந்தால் அவள் கண்களும் மகிழ்ந்து உறக்கம் கொள்ளும்.

முடிபுகள்

– ஒன்றுதல்> மனவெழுச்சி> நிலைமாற்றம்> நினைவுட்டல்> பாலுணர்ச்சி எனும் உளவெளிப்பாடுகள் இடம்பெறுகின்றன.

– தலைவி தோழிக்குக் கூறுவதாக இரணடுபாடல்களும் (11>147)> தன் நெஞ்சுக்குக் கூறியதாக ஒன்றும் (303)> அறிவு மயங்கிச் சொல்லியதாக ஒன்றும் (273) ஔவையார் பாடியுள்ளார்.

– அகநிலை> புறநிலை அடிப்படையில் பெண் அடையும் உள்ளுணர்வுகளே பாடல்களில் வெளிப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. பெ.நா.கமலா, தொல்காப்பியர் முதல் தெரிதா வரை, ப.308.

2. எஸ்.சந்தானம், கல்வியில் மனவியல், ப.159.

3. மேலது. ப.160.

4. எஸ்.ஆரோக்கியசாமி, கற்றலின் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, ப.103

5. பெ.நா.கமலா, தொல்காப்பியர் முதல் தெரிதா வரை, ப.304.

6. எஸ்.சந்தானம், கல்வியின் உளவியல் அடிப்படைகள், ப.282.

7. எஸ்.ஆரோக்கியசாமி, கற்றலின் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, ப.142.

8. தி.கு.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.211.

9. மேலது, ப.212.

10. மேலது, ப.215.

Series Navigationவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்கவிதைகள்
author

ம.சந்திரசேகரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *