இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்

This entry is part 2 of 36 in the series 18 மார்ச் 2012

 

(I)

வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம்

1.முன்னுரை

இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line) குறித்த  ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை வாசகர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை வாசகர்களின் பரவலான கருத்தலைகள் மூலம் அறிய முடிந்தது.  மத்திய திட்டக் குழு(Central Planning Commission)  இந்தியாவின் வறுமைக் கோடு குறித்த தனது மதிப்பீடுகளாக- நகர்ப்புறங்களில் தனிநபர் ஒரு நாள் ரூபாய் 32 என்றும், கிராமப் புறங்களில் அதுவே ரூபாய் 26 என்றும்- உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததின் விளைவாக எழுந்த விவாதத்தின் பின்னணியில் அந்தக் கட்டுரை கவனம் பெற்றது இயல்பே. ஆனால் அதை விட முக்கியமாக வறுமைக்கோடு குறித்த கோட்பாட்டு, கணக்கியல் ரீதியிலான அறிவார்த்த செயலாக அது அமையாமல், இரு இளைஞர்களின் அனுபவங்களின் அடிப்படையிலான கட்டுரையாக அமைந்து வறுமைக் கோடு குறித்த மதிப்பீடுகளை அடங்கிய குரலில் விமர்சிப்பதாய் அதிர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வறுமையின் பொருளாதாரப் பிரச்சினையோடு ஒரு மனித அறம் சார்ந்த பிரச்சினையின் தளத்தையும் தொட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இந்தக் கட்டுரையில் முதற் பகுதியில் வறுமைக் கோடு குறித்த கோட்பாட்டு(conceptual) விளக்கமும், இரண்டாவது பகுதியில் ஹர்ஸ் மந்தரின் கட்டுரையின் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளன.

2. 1993 –ன் படியான மதிப்பீட்டு முறை

வறுமைக் கோடு என்றால் என்ன? இந்தியாவில் எப்படி வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது? கொஞ்சம் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது. இது குறித்த விவரங்கள் மத்திய திட்டக் குழுவின் இணைய தளத்தில் விரவிக் கிடக்கின்றன. வறுமைக் கோடு என்றவுடனே எளிதில் புரிந்து கொள்வது வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் வறியோர் என்றும் மேலிருப்போர் வறியோரல்லாதார் என்றும் பிரிக்கும் ஒரு பொருளாதாரக் கோடு என்று தான். ஆனால் வறுமையை மதிப்பிடும் முறை அவ்வளவு  எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. இந்தியாவில் வறுமைக் கோடு 1993-ல் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு ஏற்கனவே 1979 –ல் ஒரு பணிக்குழு (Task force) நிர்ணயித்த  மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொண்டு பரிந்துரைத்ததின் அடிப்படையிலானது. அந்த மதிப்பீட்டு முறை குறிப்பிட்ட ஊட்டச் சத்து தரக் கூடிய கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு சராசரி நுகர்வுக் கூடையிலான( Consumption basket) செலவை அடிப்படையாகக் கொண்டது.. அந்தக் கலோரி தேவைகள்  கிராமப்புறத்தில் தனி நபர் ஒரு நாள் 2400 கலோரிகள் என்றும் நகர்ப்புறத்தில் 2100 கலோரிகள் என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1973-74 ஆண்டு விலைகளில் மேற்சொன்ன கலோரிகளைத் தரக்கூடிய நுகர்வுக் கூடையின் தனிநபர் ஒரு நாள் செலவைக் கணக்கிட்டு( per capita expenditure per day) அதனை பண அளவீட்டிலான( money equivalent) வறுமைக் கோடென்று வரையறுக்கப்பட்டது. இந்த வகையில்  1973-74 விலைகளில் அகில இந்திய அளவில் வறுமைக் கோடு கிராமப் புறத்தில் தனிநபர் ஒரு மாதம் ரூபாய் 49 என்றும், நகர்ப்புறத்தில் தனி நபர் ஒரு மாதம்   ரூபாய் 57 என்றும் முறையே கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த வறுமை வரையறைக்கான நுகர்வுக் கூடையில் பெரிதும் உணவு சார் தேவைகளே இடம் பிடிக்க உணவு சாரா மற்ற முக்கிய தேவைகளான கல்வி மருத்துவம் போன்றவை உள்ளடக்கப்படவில்லை. மேலும் 1973-74 –ல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்ட நுகர்வுக் கூடையையே மாறாததாய் எடுத்துக் கொண்டு நுகர்வு விலைக் குறியீடுகளைப்( consumer price indices) பயன்படுத்தி பின் வரும் ஆண்டுகளில் வறுமைக் கூட்டின் அளவுகள் புதுக்கப்பட்டன.( update). ஆக , வறுமைக்கோடு என்பது மாறாத ஒரு குறைந்த பட்ச நுகர்வுத் தேவையின் பெரிதும் உணவுத் தேவையின் அடிப்படையில் அமைந்து உணவு வறுமையின் அளவு கோலேயன்றி மற்ற முக்கிய உணவு சாரா தேவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பொதுவில் வறுமையின் அளவு கோல் என்பதாய் அமையவில்லை..

மேற்குறித்த வறுமைக் கோட்டின் வரையறை  பல் வித விமர்சனங்களுக்கு உள்ளாகியது. முக்கியமாக 1973-74 ல் நிர்ணயிக்கப்பட்ட  நுகர்வுக் கூடை எப்படி மாறாததாய் இருக்கும்? நுகர்வின் சேர்மானம் (consumption pattern) வரும் ஆண்டுகளில் மாறிப் போயிருக்கலாம் என்பதை  வறுமைக் கோட்டை அளக்கும் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் சில கேள்விகள் எழுந்தன. தனி நபர் நுகர் செலவு கூடினாலும் தனி நபர் கலோரி நுகர்வு குறைந்து கொண்டிருந்தது. தனிநபர் கலோரி நுகர்வு குறைந்து ஊட்டச் சத்து போதாக் குறையைப் பிரதிபலிக்கிறதா? அது உடல் நலம் குறித்த பிரச்சினைகளுக்கு இழுத்துச் செல்லாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.  ஒரு வேளை  உடல் வேலையை எளிதாக்கின விவசாயக் கருவிகள், உயர்தர மருத்துவ வசதிகள் போன்றவையால் கலோரி தேவைகள் குறைந்திருக்கலாம் என்று காரணம் கண்டறியப்பட்டது. மேலும் தான்யம் போன்ற உணவு சார் பொருள்களின் நுகர்வு குறைந்து தான்யம் தவிர்ந்த மற்ற உணவு சார் தேவைகளின் நுகர்வு கூடியிருக்கும் என்றும் அனுமானிக்கபட்டது. அப்படியானால்  நுகர் சேர்மானம் மாறி விட்டதால் நுகர்வுக் கூடையில் இருக்கின்ற பொருள்களின் அளவெடைகளும்  (weights) மாற வேண்டி வரும். அப்போது வறுமைக் கோட்டின் மதிப்பீடுகளும் மாறும்.  அதே போல மருத்துவம் , கல்வி என்பவை அரசு தரக் கூடியவை என்ற அனுமானத்தில் அவைகளுக்கான செலவை- அதுவும் காலப் போக்கில் உயர்ந்து கொண்டே இருக்கும் செலவீனங்களாக இருக்கும் போது- நுகர்வுக் கூடையில் எடுத்துக் கொண்டால் எப்படி  பண அளவீடுகளாய் வரையறுக்கப்பட்ட மேற் குறித்த வறுமைக் கோடு மதிப்பீடுகள் இன்றைய வறுமை யதார்த்தை பிரதிபலிக்க முடியும்? மேலும் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், குறைந்த பட்ச வாழ்க்கைத் தரமும் உயர, அதற்கேற்ப வறுமைக்கோடும் மறு மேல்மதிப்பீடு செய்யப்பட வேண்டியதாகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் குறைந்த பட்ச  கலோரித் தேவைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் முறை இன்றைய சமயத்தில் இன்னும் ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. இப்படியான காரணங்களைக் கருத்தில் கொண்டு, திட்டக் குழு 2005  வரை நடைமுறையிலிருந்த  வறுமைக்கோட்டை புதிதாய் வரையறுக்கும் முறைகளைப்  பரிந்துரைக்க, 2005-ல் பேராசிரியர் சுரேஷ்.டி.டெண்டுல்கர்   (Professor. Suresh.D. Tendulkar) தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்தது.

3. டெண்டுல்கர் குழு மதிப்பீட்டு முறை

2009-ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை புதிய  மொந்தையில் பழைய கள் என்பது போல் தான் அமைந்தது எனலாம். டெண்டுல்கர் குழு வறுமைக் கோட்டை அளப்பதற்கான  புதிய கணக்கெடுப்பு அணுகு முறையைச் சொன்னாலும், வறுமையை நிர்ணயிக்கும் புதிய அடிப்படைகளை- கலோரித் தேவைகளைத் தவிர்த்த புது அடிப்படைகளிலோ அல்லது வேறுவிதமான  குறைந்த பட்சத் தேவைகளின் மேலாகவோ – பரிந்துரைக்கவில்லை. ஆனால் 2009 அறிக்கையில் வறுமைக் கோட்டின் மதிப்பீட்டு முறை கலோரித் தேவைகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் இது வரையிலான நடைமுறையிலிருந்து விலகியதென்று குறிப்பிடப்படுகிறது. அதற்காக இந்த அறிக்கை 2004-05-ல் நடத்திய தேசிய மாதிரிக் கணக்கெடுப்பிலான(National Sample Survey(NSS)) ஒரு ஒப்பு நோக்கு நுகர்வுக் கூடையைத் தெரிவு செய்தது. அதை 2004-05 விலைகளில் பணமதிப்பிட, அது நகர்ப்புற தனிநபரின் மாத நுகர்வுச் செலவோடு சமமாக இருப்பது காணப்பட்டது.  இந்த நுகர்வுச் செலவு தற்செயலாய் 1973-74 விலைகளில்  2100 கலோரிகளின் நுகர்வின் அனுமானத்தில் நிர்ணயமான நகர்ப்புற வறுமைக் கோட்டை விலைக் குறியீடுகளில் 2004-05—க்குப் புதுக்கினால் என்ன பண மதிப்பிலான தனிநபர் மாத வறுமைக் கோடு வருமோ அதனோடு சமமாய் இருக்கக் கண்டது.(S.Subramanian(2011)) இது தவிர 2009 அறிக்கை கிராமப் புற வறுமைக் கோடு நகர்ப்புற நுகர்வுக் கூடையின் அதே நுகர்வளவு பணமதிப்பில் கிராமப் புற விலைகளில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆக மொத்தத்தில், 2009 அறிக்கையில் 2004-05-ல் புதுக்கப்பட்ட  பழைய நகர்ப்புற வறுமைக் கோடே, 2004-05 –க்கான நகர்ப்புறத்துக்கும் கிராமப் புறத்துக்குமான புதிய  வறுமைக் கோடுகளுக்கான ஒரே அடிப்படையாக  உருவானது. ஆக மதிப்பீட்டு முறையில், அடிப்படை ஆண்டு 1973-74 லிருந்து 2004-05-க்கும்,நகர்ப்புற கிராமப்புற நுகர்வளவுகளில் வித்தியாசமில்லாமலுமான சில மாற்றங்களை 2009 அறிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்களினால் சில புதிய விளைவுகள் நேர்ந்தன. முதலில், புதிய மதிப்பீட்டு முறையில் நகர்ப்புற வறுமைக் கோட்டின் நுகர்வுத் தொகுதியால் தனிநபர் கலோரி நுகர்வு பழைய  2100 கலோரிகளிலிருந்து 1776 கலோரிகள் என்று குறைந்து விட்டது. ஆனால் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agricultural Organisation(FAO))  இந்தியாவுக்குப் பரிந்துரைத்த 1800 கலோரி அளவுகளோடு கிட்டத்தட்ட மேற்சொன்ன புதிய  நகர்ப்புற வறுமைக் கோட்டின் குறைவான கலோரி அளவுகள் ஒப்பிடுமாறு இருக்க, தனது மதிப்பீட்டு முறை நிரூபணமானது என்று 2009 அறிக்கை வாதிடுகிறது. வேடிக்கை என்னவென்றால் கலோரி அளவுகளின் மேலான வறுமைக் கோட்டு  மதிப்பீட்டு முறையைப் புறக்கணித்த 2009 அறிக்கை, உணவு மற்றும் விவசாய அமைப்பின்  கலோரி அளவுகளின் கருத்தாக்கத்தையே தனது மதிப்பீட்டு முறைக்கு நிரூபணமாக எடுத்துக் கொள்வது. எனினும் FAO-வின் கலோரி அளவுகள் மிதமான அல்லது மந்தமான செயல்பாடுகளுக்கான உணவுத் தேவைகளுக்கானது போன்ற அனுமானங்களின் மேலானது. இந்த மாதிரியான அனுமானங்கள் இந்தியச் சூழல்களில் பொருந்தாதவையாக, 2009 அறிக்கையின் கலோரி அளவுகளின் மீதான நிரூபணமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது( Madhura Swaminathan(2010)). இரண்டாவதாக, 2009 அறிக்கையின் விளைவாக, கிராமப் புறத்தில் வறுமைக்   கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம்(Head Count Ratio)  28.3% லிருந்து 41.8% க்கு உயர்ந்து விட்டது. நகர்ப்புற வறுமைக் கோட்டு விகிதம் 25.7% -ல் நிலை கொண்டுள்ளது. மொத்தத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும்  இந்திய ஜனத் தொகை 27.5% லிருந்து 37.2% க்கு  உயர்ந்து விட்டது.( 2009 அறிக்கையின் படி, 2004-05 விலைகளில்  கிராமப் புறத்தின் வறுமைக் கோடு தனிநபர் மாதம் ரூபாய் 446.68 என்றும் நகர்ப்புறத்தின் வறுமைக் கோடு தனிநபர் மாதம் ரூபாய் 578.80 என்றும் கணக்கிடப்பட்டுள்ளன.  தமிழ் நாடு பொறுத்த மட்டில் கிராமப்புற வறுமைக்கோடு ரூபாய் 441.69 என்றும் நகர்ப்புற வறுமைக் கோடு 559.79 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தமிழ் நாட்டில் கிராமப் புறத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் 37.5%; நகர்ப்புறத்தில் 19.7%. மொத்தத்தில் 28.9 % இந்த மதிப்பீடுகள் அகில இந்திய சராசரி  மதிப்பீடுகளை விட ஓரளவு குறைவானாவை)

இந்தக் கட்டத்தில் இன்னொரு கருத்தையும் ஆராய வேண்டியுள்ளது. டெண்டுல்கர் குழுவின் மதிப்பீட்டு முறையில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான உணவு சாரா தேவைகளை அளிப்பது அரசின் பொறுப்பைச் சார்ந்தது என்ற அனுமானத்தின் பேரில் அவைகளை ஒப்பு நோக்கு நுகர்வுக் கூடையில் எடுத்துக் கொள்ளாத பழைய மதிப்பீட்டு முறை போலன்றி, கல்வி மருத்துவம் மீதான தனிநபர் செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால் இந்தச் செலவுகள் கூட்டிவகுத்த சராசரியின் (Arithmetic Mean Average) அடிப்படையில் இல்லாமல் நடுவில் பிரிக்கும் சராசரியின் (Median Average) மீதில் கணக்கிடப்பட்டன. ஆனால் கல்விக்கான செலவு கீழ்த்தட்டு  மக்களுக்கும், மேற்தட்டு மக்களுக்கும், கிராமப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருப்பது வெள்ளிடை மலை. திலக்(Tilak(2009)) என்ற பொருளாளரின் மதிப்பீடுகள் 2006-07-ல் கிராமப்புற இல்லங்களில் குறைவான  செலவீன வகுப்பில்(lower expenditure ) தனி நபர் கல்வி செலவு ரூபாய் 1.91 என்றும், அதிக செலவீன வகுப்பில்( higher expenditure class)  ரூபாய் 95 என்றும் அமைகின்றன. அதே போல   2007-08 விலைகளில் கல்வி மீதான தனிநபர் மாதச் செலவு  கிராமப் புறத்தில் ரூபாய் 23 என்றும், நகர்ப்புறத்தில் ரூபாய் 96 என்றும் திலக்கின் மதிப்பீடுகள் அமைகின்றன. இந்தப் பின்னணியில் நடுவில் பிரிக்கும் சராசரி எப்படி கல்வி மீதான செலவின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும்? மருத்துவம் மீதான செலவின் கதையும் இப்படித்தான். மருத்துவச் செலவுகள் வியாதிகள் என்னவென்பதிலும் சிகிச்சையின் அளவையும் காலத்தையும் அவைகள் தாக்கும் வாய்ப்புக்களையும் பொறுத்து மேலும் கீழுமாய்ப் பெரிதும் வேறுபடும் நிலைகளில் எப்படி நடுவில் பிரிக்கும் சராசரி நிதர்சனத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்கும்? ஆக, 2009 அறிக்கையின் கல்வி மருத்துவச் செலவுகளில் குறைத்து மதிப்பிடுவதாக, வறுமைக் கோடும் குறைத்து மதிப்பிடுவாதாகாதா என்ற விமர்சனத்துக்கு உள்ளாக நேர்கிறது. அப்படியானால் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர்  விகிதம் இன்னும் கூடும் வாய்ப்பை இல்லை என்று சொல்லி விட முடியாது.

மேற் சொன்னவாறு பொருளியலாளர்களால்(Economists) பல் வித விமர்சனங்களுக்குள்ளான டெண்டுல்கர் குழு அறிக்கை அரசின் பரிசீலிப்பிற்குப் பிறகு அரசால்  ஏற்கப்பட்டுள்ளது.  2009-2010- க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்புக்களில் டெண்டுல்கர் குழுவின்  புதிய மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதி மன்ற வழக்கின் எதிரொலியில் ஏழைகளின் நலத்திட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் வறுமைக் கோட்டை அடிப்படையாய் எடுத்துக் கொள்ளாமல் வறுமையின் பன்முகப் பரிமாணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று  அரசு கூறியுள்ளது.

4. வறுமைக் கோடு மதிப்பீடுகள் யதார்த்தமானவையா?

உண்மையில் வறுமை மலைக்க வைப்பதை விட டெண்டுல்கர் குழுவின் அறிக்கையில் இருக்கும் வறுமைக் கோட்டை மதிப்பிடுவதற்கான புள்ளியல், கணக்கியல் அளவை முறைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. இவ்வளவு விரிவான கள ஆய்வின் அடிப்படையில் திரட்டிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த மதிப்பீடுகள் கடைசியில் வறுமைக் கோடு ரூபாய் 32 (நகர்ப்புறம்)/  26(கிராமப் புறம்)  என்ற அளவுகளில் 2011- ல் நிர்ணயம் செய்யப்படும் போது திகைப்பாகின்றன. அதுவும் 1960-61 விலைகளிலேயே குறைந்த பட்ச ஊட்டச் சத்துக்கும் உடல் நலத்திற்குமான தேவையான  தேசிய அளவில் குறைந்த பட்ச மாதச் செலவு ரூபாய் 20( நகர்ப் புறத்தில் ரூபாய் 25)(M.H Suryanarayanaa(2009))  என்று நிர்ணயமாயிருக்க, 2011-ல் வறுமைக் கோட்டின் மதிப்பிடூகள் உயர்வு இவ்வளவு தானா என்று திகைக்க வைக்கின்றது. கேட்டால், பண வீக்கத்துக்கு ஈடு செய்த(Inflation adjusted) மதிப்பீடுகள் என்று பொருளாதார விளக்கம் தரப்படும். எப்படி 2011 வறுமைக் கோட்டின் மதிப்பீடுகள் செய்யப்பட்டன?  டெண்டுல்கர் குழு பரிந்துரைத்த வறுமைக் கோட்டு 2004-05 ஆண்டு அளவுகளின் மேல் ஜுன் 2011 ஆண்டுக்கான   பணவீக்கத்துக்கு ஈடு செய்து  தனிநபர் ஒருநாள் உணவு சார் செலவு ரூபாய் 18(நகர்ப்புறம்)/ 16 (கிராமப் புறம்) என்று  கணக்கிடப்பட்டு,  அவற்றின் மேல் தினசரி உணவு சாரா செலவுகளைக் கூட்டி வறுமைக் கோட்டின் அளவுகளாக மேற் சொன்னபடி ரூபாய் 32(நகர்ப்புறம்)/26(கிராமப் புறம்) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வறுமைக் கோடுகளுக்குக் கீழுள்ளோர்  விரதம் பூண்டாலொழிய இந்த அளவு குறைந்த செலவினங்களில் வாழ முடியுமா?  ஏழையர் வாழ்வின் யதார்த்தங்கள் பற்றிய பிரக்ஞை ஏன் தப்பிப் போயிற்று? உண்மையில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் டெண்டுல்கர் குழு மதிப்பிட்ட 37% விடக் கூடவா? மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே தினக் கூலி ரூபாய் 100 என்பதாகும். ஹர்ஸ் மந்தரின் கட்டுரையில் வரும் இளைஞர்கள் 100 ரூபாயில் வாழ முயன்று திண்டாடிப் போனார்கள். அப்படியாக வறுமைக் கோடு ஒரு வேளை ரூபாய் 100 என்றோ அல்லது அதற்கும் குறைவாக ஆனால் ரூபாய் 32/26- க்கு மேலாகவோ நிச்சயிக்கப்பட்டால் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் விகிதம் 37% தாண்டி எங்கோ இன்னும் அதிகமாக  இருக்குமோ? மேலும் வறுமைக் கோடு மூன்று முறைகளில் கணக்கிடப்படலாம். கலோரிகளின் அளவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு கணக்கிடப்படுவது  ஒரு முறை தான். இரண்டாவது முறை  ஆக்ஸ்போர்டு பன்முக வகையைச்(Oxford multidimensional category) சார்ந்தது  அதன் படி அடிப்படைத் தேவைகளான வீடு, தண்ணீர், கல்வி , மருத்துவம் போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியதின் அடிப்படையில் வறுமை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையின் படி 55% இந்திய மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருக்கின்றனர். மூன்றாவது முறை பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்தது. பட்டினிக் குறியீடு ஐந்து தரவரிசைகளை முன் வைக்கின்றன- மிக அச்சுறுத்தலான  பட்டினி,(extremely alarmaing hunger), அச்சுறுத்தலான பட்டினி ( alarming hunger-), மோசமான பட்டினி (serious hunger), மிதமான பட்டினி( mild hunger) , பட்டினியின்மை (no hunger). இந்தியா அச்சுறுத்தலான பட்டினி தர வரிசையில் இருக்கிறது. ஆக மூன்று வறுமை நிர்ணயிப்பு முறைகள் இருக்க, கலோரிகளின் அடிப்படையிலான ஒற்றைப்படை முறை எப்படி வறுமையின் பன்முகங்களை உள்ளடக்கியதாய் நம்பகப்படும்? மேலும் அதனால் வழி நடத்தப்படும் அரசின் கொள்கைகளும் நலத் திட்டங்களும், எப்படி பயன்பட வேண்டிய  எல்லோரயும் தழுவியதாய் அமைய முடியும்? அதுவும் முக்கியமாக அரசு வறுமைக் கோட்டின் அடிப்படையில் இலக்கு சார் சலுகைகளை (targeted subsidies) அமல்படுத்தினால், தகுதியான வறியோர் எல்லோரும் உள்ளடங்குவதற்கான வாய்ப்பு குறைவாகும். அதனால் தான் பொருளியலாளர்களில் பலர்  யாவருக்குமான பொது விநியோக முறை (Universal public distribution system) ஏற்புடைத்து  என்றும் கருதுகிறார்கள்..

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நடைமுறையில் இருக்கும் வறுமைகோட்டு அளவுகள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை  யதார்த்தங்களில் உரைத்துப் பார்க்கப்படும் போது நம்பகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். உயர்தரமான புள்ளியியல், கணக்கியல் முறைகள் மட்டும் வறுமைக் கோட்டு மதிப்பீட்டுகளை ஒப்புக் கொள்ளதாக்கி விட முடியாது. எல்லா மாநிலங்களிலும் சில மாதிரி கிராமங்களையும் நகரங்களை எடுத்துக் கொண்டு அங்கு வாழ்வோரின் உடை, உறையுள் உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் வேறு சில அடிப்படையான வசதிகளுக்கான மாதச் செலவை சாதாரணமாகக் கணக்கிட்டிருந்தால் கூட நம்பகமான வறுமைக் கோட்டு மதிப்பீடுகள் செய்திருக்கலாம். முக்கியமாக தாழ்த்தப்பட்ட தலித்கள், பழங்குடியினரின் வறுமைக்கென தனி மதிப்பீடுகள் இருந்தால் கூட நல்லது. பொருளாதார வளர்ச்சியின் போக்கில் சமூக அமைப்பு நிலைகளிலேயே இவர்கள் வடி கட்டப்பட்டு விடுகிறார்கள். அது போன்று தான் கிராமப் புறத்தில் வாழும் ஏழைப் பெண்களின் நிலையும். வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர்களிலேயும் உட்பிரிவுகளை அடையாளம் கண்டு அவற்றிக்கான தனி மதிப்பீடுகள் செய்வது களத்திலிருக்கும் உண்மை நிலையைப் படம் பிடிக்க உதவும். இன்னும் அடிக்கடி நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளைக் கேள்விப்படுகிறோமே? மொத்த தேசிய உற்பத்தி( Gross national product) 7-8 % இருந்தும் 40% அளவில் குழந்தைகள்  போதுமான ஊட்டச்சத்தின்றி நலிகின்றனவே? ஆக , ஒற்றைப்படை போன்ற வறுமை மதிப்பீடுகள் பன்முக வறுமை யதார்த்தங்களை படம் பிடிக்கத் தவற விட்டு  விடுகின்றன.   மேலும் வறுமைக் கோடு பொருளாதாரா வளர்ச்சி ஒரு உள்ளடக்கிய வளர்ச்சியா (Inclusive Growth) என்பதற்கான ஒரு அளவை முறையாகப் பார்க்கப்படும் போது அதனது கள நம்பகத் தன்மை சர்வதேச நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறியீடுகளை விடவும் மிகவும் முக்கியமானது. வறுமைக் கோட்டு விகிதம் கூடி விட்டதா குறைந்து விட்டதா என்பது மட்டுமல்ல பிரச்சினை. வறுமையில் வாடும் எவரும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிக் கிடப்பது உண்மையாக இருக்கும் போது  அது முழுமையில்லாத பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் தப்பிப் போனதால் அரசின் நலத் திட்டங்களில் அவர்கள் விடுபட்டு போய் விடக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கான பொறுப்பையும் கடமையையும் இந்திய ஏழை மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது அதிக பட்சமல்ல. அவர்களின் பொறுமையாலும், முதிர்ச்சியாலும் ஏன் ஒரு வித இயலாமையானும் தான் இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்கிறது. ஹர்ஸ்மந்தரின் கட்டுரையைப் படித்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். இனி அவரது கட்டுரையின் தமிழாக்கத்தை அடுத்து வரும் பகுதியில் படியுங்கள்.

II

வாழ்க்கையின் மறுபக்கம்.- ஹர்ஸ் மந்தர் கட்டுரை (தமிழாக்கம்)

வாழ்க்கையை மாற்றிய அனுபவம்:

அதிகாரப் பூர்வமாக கிராமப் புற இந்தியாவின் ஏழ்மைக்கான  தனி நபர் ஒரு நாள் வருமானமாக வரையறுக்கப்பட்ட  26 ரூபாயில் யாராவது ஒருவர் உண்மையில் வாழ முடியுமா? இரண்டு இளைஞர்கள் முயன்று பார்த்தனர். கடந்த ஆண்டு இரண்டு இளைஞர்கள் ஒரு சராசரி இந்திய ஏழையின் வருமானத்தில் ஒரு மாதம் வாழ்க்கையை நடத்த முடிவு செய்தனர். அவர்களில் ஒருவர் துஷார்(Tushar)- ஒரு காவல் அதிகாரியின் மகன்; பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பயின்றவர்; அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் முதலீட்டு வங்கியாளராக மூன்று ஆண்டுகள் பணி புரிந்தவர். இன்னொருவர் மட்(Matt) .சின்ன வயதிலேயே பெற்றோரோடு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்; எம்.ஐ.டி (MIT) யில் படித்தவர். இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர் இருவேறு கால கட்டங்களில்; இருவரும் பெங்களூரில் யு.ஐ.டி(UID) திட்டப்பணியில் சேர்ந்தனர்; ஒரே அடுக்ககத்தில்(Flat) சேர்ந்து வசித்தனர்; மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர்.

ஒரு நாள், அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. இருவரும் இந்தியா திரும்பிய போது அவர்களுடைய நாட்டுக்கு அவர்கள் உதவ முடியுமென்ற ஒரு தெளிவில்லாத நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், நமது நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் அறிந்தது குறைவே. ஒரு மாலையில் துஷார் ‘சராசரி வருமானத்தில் சராசரி இந்தியன் போல் வாழ்ந்து பார்த்தாலென்ன’ என்று  ஒரு கருத்தை எடுத்து வைத்தார். அதைக் கேட்டதும் அவருடைய நண்பர் மட் உடனடியாக அந்தக் கருத்தில் உடன்பட்டார். அவர்கள் இருவரும் ஆரம்பித்த ஒரு வாழ்க்கைப் பயணம் அவர்களையே புரட்டிப் போடுவது போலாயிற்று. முதலில்  ஒரு சராசரி இந்தியனின் வருமானம் என்ன என்று அவர்கள் கணிக்க வேண்டி இருந்தது. இந்தியாவின் சராசரி தேசிய மாத வருமானம் ரூபாய் 4500;அதாவது நாளொன்றுக்கு ரூபாய் 150. உலகளவில் மக்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை  வாடகைக்கு செலவிடுகின்றனர். ஆக மீதம் ரூபாய் 100. அதை அவர்கள் தங்கள் ஒரு நாட் செலவாக வாழ்வதென முடிவு செய்தனர். அவர்களுக்குத் தெரியும் இந்த ஒரு நாட் செலவு கூட அவர்களின் சராசரி வாழ்க்கைக்கேயன்றி ஏழ்மை வாழ்க்கைக்கல்ல என்று. 75% இந்தியர்கள்  இந்த சராசரிச் செலவுக்கும் குறைவாகவே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இளைஞர்கள் இருவரும் அவர்களின் வீட்டு வேலைக்காரியின் ஒரு சிறிய குடியிருப்புக்கு (apartment) அவளின் நகைப்புக்கு ஆளாகும்படி குடிபெயர்ந்தனர். ஒவ்வொரு நாளும் எப்படி உணவுக்கு வகை செய்வது என்பதைத் திட்டமிடுவதிலும் நடைமுறைபடுத்துவதிலுமே பெரும்பாலான நேரத்தை அவர்கள்  செலவழிக்க வேண்டியிருந்தது. பாலும் தயிரும் மிகவும் செலவீனமாக ஆனதால் எப்போதாவது அருந்தினர். இறைச்சியை நினைத்துப் பார்க்க முடியாது. அது போலவே ரொட்டி போன்ற தயாரிக்கப்பட்ட பொருள்கள். நெய், வெண்ணெயெல்லாம் கிடையாது; கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட சமையலெண்ணெய் தான்; இருவரும் ஆரோக்கியமான பசியுள்ள தேர்ந்த சமையல்காரர்கள். அவர்கள்  சோயாபீன் புரோட்டின் சத்து நிறைந்தும் கட்டுபடியாகவும் உள்ள உணவாகக் கண்டறிந்து அதில் வித விதமான உணவு வகைகளைச் செய்வதில் முனைந்தனர்; பார்லி பிஸ்கட் தான் மிகவும் குறைந்த கட்டணத்தில் – 25 பைசாவுக்கு 27 கலோரிகள்!  வறுத்த வாழைப்பழத்தை பிஸ்கட்டோடு சேர்த்து ஒரு பதார்த்தத்தையும்(dessert) புதிதாய்ச் செய்தனர். இது தான் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விருந்து!

கட்டுப்பாடான வாழ்க்கை:

நூறு ரூபாயில் வாழ்க்கை நடத்துவதில் அவர்களின் வட்டம் மிகவும் சுருங்கிப் போனது. ஒரு நாளில் ஐந்து கி.மீ. க்கு மேலாக பயணம் செய்ய செலவுக்குக் காசில்லை என்று அவர்களுக்குப் புரிந்தது. அந்த தூரத்திற்கும் அப்பால் செல்ல வேண்டுமென்றால் நடந்து தான் போக வேண்டும். மின்சாரம் ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குத் தான்  பயன்படுத்த வகையிருக்கும். அதனால் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் மிகக் குறைவாகவே பயன்படுத்தினர். ஆனாலும் அவர்கள் தங்கள் செல்பேசிகளையும், கணிகளையும் மின்படுத்த (charge) வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு லைஃப் பாய் சோப் இரண்டாக உடைத்துப் பயன்படுத்தப்பட்டது.  பொருள்களைக் கடைகளில் வாங்க முடியாது கண்டு வெறிக்கத் தான் முடிந்தது. திரைப்படங்களுக்குச் செல்ல முடியாது. அவர்கள் நோய்வாய்ப்பட்டு விடமாட்டார்கள் என்று நம்பினர். ஆனாலும், ஒரு பெரிய சவால் அவர்களுக்குக் காத்திருந்தது. அதிகாரப் பூர்வமான வறுமைக் கோடான ரூபாய் 32 ல் வாழ்ந்து விட முடியுமா?- நகரங்களில்  வறுமைக்கோடு ரூபாய் 32 என்று உச்ச நீதி மன்றத்தில் திட்டக் குழு சொல்லி இது பிரச்சினையானது (கிராமங்களில் வறுமைக்கோடு ஒரு நபர் ஒரு நாள் ரூபாய் 26 என்று  இன்னும் குறைவானது)

கொடுமையான அனுபவம்:

சவாலைச் சந்திக்க இருவரும் கேரளாவில்  ’மட்’டினுடைய கருக்காசல் (Karucachal) என்ற கிராமத்திற்குச் சென்று ரூபாய் 26-ல் வாழ முடிவெடுத்தனர். அவர்கள் பாதி புழுங்கிய புழுங்கலரிசியையும் தண்டையும், வாழைப்பழத்தையும் உண்டனர், கடுங்காபி குடித்தனர். அவர்களாகவே வரித்துக் கொண்ட வறுமையால் முடிந்த  18 ரூபாயில் ஒரு சரிவிகித உணவு அவர்களுக்கு அரிதாகிப் போனது. நாள் முழுதும் சாப்பாடே நினைவாகி விட்டது. நெடுந்தொலைவு  நடந்தனர்; சோப்பு பயன்படுத்துவதிலும் சிக்கனம் சேர்த்தனர். தகவல் பரிமாற்றம், செல் பேசி, இணையதளம் என்பதெல்லாம் அருமையுடையாதாயிற்று. அவர்கள் நோய்வாய்ப்பட்டால் ஒரு பெரிய விபரீதம் தான். 26 வயது நிறைந்த இளைஞர்கள் இருவருக்கும் அதிகாரப்பூர்வமான வறுமைக்கோட்டில் வாழ்வது ஒரு கொடுமையான அனுபவமாகி விட்டது.

தீபாவளியோடு அவர்களின் வறுமையோடான பரிசோதனை முடிவுக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எழுதியது: ”நாங்கள்  எங்களுடைய இயல்பான வாழ்க்கை நிலைக்குத் திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறோம். எங்களுடைய சோதனையின் நெடுக நாங்கள் எதிர்பார்த்திருந்தது போலவே இரண்டு இரவுகளுக்கு முன்னால் நடந்த தடபுடலான கொண்டாட்ட  விருந்து திருப்தியாய் இருந்தது. எங்களுடைய விருந்தினர் பேரன்போடு அளித்த அந்த விருந்து இது வரை நாங்கள் உண்ட விருந்துகளிலிலேயே சிறந்த ஒன்றாகக் கருதலாம். ஆனால் உண்ணும் ஒவ்வொரு கவளமும் இந்த மாதிரியான உணவு 400 மில்லியன் மக்களுக்கு  ஒரு எட்டாக் கனவாகவே இன்னும் கொஞ்சம் காலங்களுக்கு இருக்கும் என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கும். நாம் நம்முடைய சொகுசான வாழ்க்கையை நடாத்திக் கொண்டு செல்லலாம்; ஆனால் அவர்களோ கடுமையான தேர்வுகளும்(choices) தடைகளும்(constraints) நிறைந்த  வாழ்வில் மீண்டு வரும் போர்க்களத்தில் இருக்கிறார்கள். சுதந்திரம் குறைந்தும் பசிப்பிணி பல்கியும் இருக்கும் வாழ்வு அவர்கள் வாழ்வு.

ஆடம்பரங்கள் என்று இப்போது எங்களுக்குத்  தெரியவருகின்ற பெரும்பாலான பொருள்களின் மேல் செலவு செய்வது உருத்தலாய்  இருக்கிறது. உண்மையாகவே  முத்திரை பொறித்த(branded) கேசத் தைலம் நமக்குத்  தேவையா? வார இறுதியில் களி கொள்ள ஆடம்பர உணவகங்களில் விருந்து தேவையா? ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இது போன்ற சுகங்களுக்கு நாம் தகுதியானவர்களா? சொகுசான வாழ்க்கையைக் கட்டியமைக்கக் கூடிய சூழல்களில் நாம் பிறந்ததும் வெறும்  ஒரு அதிர்ஷ்டமா? இன்னொரு பாதி மக்கள் தொகை நாம் இன்றியமையாதது என்று கருதுகின்ற பெரும்பாலான லெளகீகத் தேவைகளுக்கு எந்த வகையில் குறைந்து தகுதியாகிறது? சுய முன்னேற்றதிற்கான கல்வி போன்றதும் சுய பராமரிப்புக்கான மருத்துவம் போன்றதுமான கருவிகளில் இது மிக முக்கியமாகிறது.

இந்தக்  கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களிடம் உள்ள குற்ற உணர்வை அறிகிறோம். கடினமான வாழ்க்கையிலும் மறுபக்கத்தில் வாழ்கின்ற மக்கள் எங்களுக்கு வழங்கிய அன்பும் தாராளமும் கூடிக் கூடின குற்ற உணர்வை அறிகிறோம். நாம் அவர்களை முன்பின் தெரியாதவர்களாய் நடத்தியிருக்கலாம்; ஆனால் நிச்சயமாக அவர்கள் நம்மை அப்படி நடத்தியதில்லை—-”

ஆக, வறுமையோடு நடத்திய சிறு பரிசோதனையில் இந்த இளைஞர்கள் இருவர் என்ன அறிந்து கொண்டனர்? அந்தப் பசிக் கொடுமை  உங்களிடம் சினத்தை மூட்டலாம். எல்லோருக்கும் போதுமான ஊட்டத்தை உறுதி செய்கிற ஒரு உணவுச் சட்டம் தேவையானது. வறுமை சாதாரணமான கனவுகளைக் கூட நீங்கள் அடைய முடியாதவைகளாய்ச் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ’மட்’டின் வார்த்தைகளில் சொன்னால், இரக்கம் ஜனநாயகத்துக்குத் தேவை.

Series Navigationஇந்த வார நூலகம்ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)
author

கு.அழகர்சாமி

Similar Posts

Comments

  1. Avatar
    sathyanandhan says:

    Sir, Thanks for this thought provoking rich article. This subject was originally analyzed by Nobel laureate Mr.Amartiya Sen. He did extensive research on the poverty of Bangladesh poor. What he found that any step forward for the poor or downtrodden fail not only due to corruption but also due their inability to appreciate the benefits of schemes for their welfare. This inability is due to lack of education. Education is of equal priority or probably the only priority. But populist steps like freebies and wage with or without work dont take people forward. Regards, Sathyanandhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *