மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 27 of 36 in the series 18 மார்ச் 2012

போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் தயக்கமில்லை.

19. இதே நாட்களில் மக்களை வாட்டிவதைத்த வெயிற் காலங்களுமுண்டு. அப்போதெல்லாம் சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்துவிட்டு, கிருஷ்னபுரத்தையும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மிதித்திடவேண்டுமென்று நான்கு திசைகளிலிருந்து கால் நடையாகவும், வண்டிகட்டிக்கொண்டும் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மக்கட் கூட்டத்தினராலும், மன்னரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்ககளின் குதிரைகளின் குளம்படிபட்டும், முன்னூறுக்கு மேற்பட்ட யானைகள் அவ்வபோது வீதிகளில் நடமாட நேர்வதாலும், தெருப்புழுதி காற்றில் பறந்து மக்களின் கண்கள், மூக்கு, வாய்களென்று எதனையும் விட்டுவைக்காமல் துவம்சம் செய்வதுண்டு. புழுதிக் குதிரைகளின் விலா, யானைகளில் வயிறு, முகபடாமென்று நாசம் செய்துவிடும். விலங்குகளை ஒரு முறைக்கு இருமுறை தேய்த்து கழுவவேண்டிய நிர்ப்பந்தம் பணியாட்களுக்கிருந்தது. நந்தியாவட்டத்தை, சண்பகத்தையும் தலையிலணிந்து ஒய்யாரமாக வராக நதியில் இறங்கி மகிழ்ச்சியோடு நீராடும் பெண்கள் குதிரைகளுடன் நீரிலிறங்கும் பணியாட்களை சாபமிட்டுக்கொண்டே அவசரவசரமாக கரையேறுவார்கள். இன்று அதிசயமாக வெப்பம் அத்தனை கடுமையாக இல்லை. தெற்கிலிருந்து வீசியக்காற்று வராகநதியின்மீது படர்ந்து குளிர்ந்தகாற்று கிருஷ்ணபுரத்தை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.

– Maravilhosa, eu nunca vi uma cidade tão na minha vida! (அடேங்கப்பா! என் வாழ்நாளில் இதுபோன்றதொரு நகரை இதுவரை பார்த்ததில்லை!) இந்தியாவிலேயே இதுதான் பெரிய நகரமாக இருக்குமோ! போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் தயக்கமில்லை.

பாதரே பிமாண்ட்டா அருகிலிருந்த சக குருமார்களுடன் கிருஷ்ணபுரத்தைப்பற்றிய தமது அபிமானத்தை பிரம்பிப்புடன் பகிர்ந்துகொண்டார். நால்வரும் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதுபோல தலையாட்டினார்கள். பாதரே ரோமியோ மட்டும் ஆட்சேபிப்பவர்போல:

– ஏது கொஞ்சம் மிகையாகத் தோன்றவில்லையா? முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் மேலுள்ள பிரியத்தால் கூறுகிறீர்களென நாங்கள் இதைக் கருதலாமா? -என்றார்

உண்மை. சிதம்பரத்தில் அவ்வளவு நெருக்கடியான சூழலிலும், கிருஷ்ணப்ப நாயக்கர் தம்மை சமூகம் காண அழைப்பாரென பாதரெ பீமாண்ட்டா நினைக்கவில்லை. இந்த அழைப்பு ஒரு வேளை கொள்ளிடப் பாளையகார கிழவனின் மகனுக்கு செஞ்சி மன்னரிடமுள்ள செல்வாக்கால் கிடைத்திருக்குமென இவரது நண்பர்கள் தெரிவித்தார்கள். அதனாலென்ன? அப்படித்தான் இருக்கட்டுமே! வேறுமன்னர்களாக இருப்பின் சிதம்பரத்தில் அன்று அரங்கேறிய கொடூரத்தைக் கண்டு கதிகலங்கியிருப்பார்கள். போர்க்களத்தில் உயிர்ப்பலியென்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமூக வாழ்க்கையில் பொது நோக்கத்திற்காக தம்மைத் தாமே பலியிட்டுக்கொள்வது இந்த மண்ணில் மட்டுமே நிகழும் போலும். அன்றிரவு முழுக்க கோபுரத்தின் பிறைமாடத்திலிருந்து ஆணும் பெண்ணுமாய் குதித்து கண்முன்னே சிதைந்த காட்சியை இப்பொழுது நினைத்துப் பார்க்க நேர்ந்தாலும் உடல் சிலிர்க்கிறது. தமது நாடுகளில் இவர் பார்க்காத உயிர்ப்பலிகளா? அவ்வளவு உயிர்ப்பலிகளுக்குச் தாம் சாட்சியென்கிறபோதும் மனதை திடப்படுத்திக்கொண்டு சத்ரிய அறத்தினின்று வழுவாதவராக நாயக்கர் நடந்துகொண்டது இவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாகவிருந்தது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மட்டுமே பாவங்களிலிருந்து மீட்கவும் பரலோகத்திற்கான திறவு கோலை கைய்யளிக்கவும் ஆற்றலுள்ளதென்பதைக் காப்ரிகளுக்கு போதிக்க இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்கமுடியுமா என்ன?

மன்னரின் அழைப்பை ஏற்று பாதரே பிமெண்ட்டாவும் அவரது சகசேசுசபையினரும் கிருஷ்ணபுரம் வந்திருந்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வந்திருப்பவர்கள் அரசருடைய விருந்தினர்கள் என்பதாலும், அவர்கள் சரீரமும் தோற்றமும் மேலுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வதந்தியை பரப்பியிருந்ததாலும் அதிகாலையிலிருந்தே மக்கள் வீதிகளிற் கூடியிருந்தனர். நீலவானத்தின் வெண்மேகங்கள் கூட அன்றைய தினம் கிருஷ்ணபுரத்திற்கு மேலாக மிகக்கணிசமாக திரண்டிருந்தன. கண்ணுக்கெட்டியவரை தோரணங்கள். வீதியின் இரு மருங்கிலும் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்றார்கள். பெண்கள் ஆரத்தியுடன் வரவேற்று குருமார்கள் நெற்றியில் திலகமிட்டு மாலை சூடவும், பீரங்கிகளில் குண்டைத் திணித்து மூன்றுமுறை சுட்டார்கள். பொது மக்கள் காதுகளைப்பொத்திக்கொண்டும் கைதட்டியும் ரசித்தனர். புளியமரங்களில் அமைதியாக ஊசலாடிகொண்டிருந்த வௌவால்கள் கிரீச்சிட்டுக்கொண்டு நான்கு திசைகளிலும் பறந்தன. மேய்ச்சலிலிருந்த கால்நடைகள் வெருண்டோட இடையர்கள் அவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். முரசுகள் டமடமவென்று ஒலிக்க, கொம்புகள் முழங்கின. படைவீரர்களின் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசரே தமது ராஜகுருவான ராகவ அய்யங்கார், பிரதானியான நந்தகோபால் பிள்ளை ஆகியோருடன் கோட்டைவாயில்வரை வந்து வரவேற்கவும், குடைதாங்கிகள் தங்கள் குடையைச்சுறுக்கினார்கள். அரண்மனைக்குள் சேசு சபையினர் நுழைந்ததும் அவர்கள் கொஞ்சம் நின்றுபோகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். திருமண்தரித்திருந்த பார்ப்பணர்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். எண்ணிக்கையில் அவர்கள் இருநூறுபேரென பின்னர் பாதரே தெரிந்துகொண்டார். வந்த பார்ப்பணர்கள் திருமஞ்சன நீரை அரண்மணையெங்கும் தெளிக்கக் கண்டார். அரசரை எல்லா தீங்குகளினின்று காக்கும் மகிமை அந்நீருக்கு இருப்பதாகச் சொல்லபட்டது. சேசு சபையினர் அரசவைக்குள் நுழைந்ததும் தங்க ரேக்குகள் தைத்த இலவம் பஞ்சினலான இருக்கைகள் இடப்பட்டன. இருக்கைக்கு முன்பாக சிறிய மேசையிடப்பட்டு தாம்பூலத் தட்டுகள் வந்தன. அவற்றில் பச்சிலைகளையும் காய்களையும் சேசுசபையினர் கண்டனர். அவற்றை என்னசெய்வதென தெரியாது அவர்கள் விழித்துக்கொண்டிருக்க, மன்னரும் பிறரும் அவ்விலைகளை கையிலெடுத்து மென்று தின்பதை வேடிக்கையாகப் பார்த்தார்கள். இவர்கள் அருவருப்புடன் வேண்டாமென்பதுபோல கைகளை அசைக்கவும், அதைப்பார்த்துக்கொண்டிருந்த சோழக இளவரசன் பிமெண்ட்டா அருகில்வந்தான். அவர் காதருகே குனிந்தவன்: ஐயா தாம்பூலம் தரித்துதான் ஆகவேண்டும். அதை எப்படி தரிப்பதென்று நீங்கள் அறிந்திராதப் பட்சத்தில், அதற்கெனவுள்ள பெண்ணை அனுப்பி வைக்கிறேன். ஒன்றிரண்டு இலைகளையேனும் நீங்கள் மென்று துப்பத்தான்வேண்டும். இங்கே அதுவொரு சம்பிரதாயம். தவறினால் உபசரிப்பவர்களை அவமானப்படுத்தியது போலாகும் என்றான். இரவு உணவின்போது நாயகர் தமது மனைவிமார்களில் மூவரை அழைத்துவந்திருந்தார். அரிசி சோறும், மீன் பொரியலும், மானிறைச்சியும், அதிரசமும், பாயசமும் பரிமாறப்பட்டன. கையோடு கொண்டுவந்திருந்த ஒயினை சேசுசபயினர் பருகியபோது மன்னரும் அவர்தம் மனைவிமார்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

ராஜகிரியிலுள்ள கல்யாணமகாலில் பாதரே பிமெண்ட்டாவும் அவரது சகாக்களும் இரவு தங்கவைக்கபட்டனர். அக்கட்டிடத்தின் வனப்பைப் பார்த்து பிமெண்ட்டா மீண்டும் வியப்பில் மூழ்கினார். கல்யாணமகாலின் அடிவாரத்தில் பலத்த காவலிடப்பட்டிருந்தது. வேங்கடவனை விசாரித்தபோது அரசரின் மனைவியரும், அவர்கள்தம் பணிப்பெண்களும் அங்கே தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். மூன்று நிலைகள் கடந்து நான்காவது நிலையும் அதற்கு மேலிருந்த நிலைகளும் பிமெண்ட்டாவுக்கும் அவரது சகாக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. அவரது அறையில் தேவைக்குரிய அனைத்தும் இருக்கின்றன எனக்கூறிய வேங்கடவன், வேறு ஏதேனும் தேவையெனின் மணியை அடித்தால் உங்களைக் கவனித்துக்கொள்ள ஏவலர்கள் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.

படுப்பதற்கு முன்பாக ஓலை நறுக்கில் அன்று நடந்தவற்றையெல்லாம் ஒரு வரிவிடாமல் பாதரெ பிமெண்ட்டா எழுதிக்கொண்டு வந்தவர் கல்யாணமகாலின் பெயரை நினைவுபடுத்தமுடியாமல் குழம்பினார். தற்போதைக்கு ஒரு செவ்வக வடிவக் கட்டிடமென்று பதிவுசெய்வது, விடிந்ததும் விசாரித்து பெயரை தெரிந்துகொள்வதென்று முடிவுக்கு வந்தார். கட்டில் வசதியாகவே இருந்தது ஆடைகளைக் க¨ளைந்துவிட்டு வெகு நேரம் உறக்கமின்றி தவித்தார். அறைக்குள் அனல் வீசுவதுபோல இருந்தது. சாளரத்தை திறந்தால் ஏதேனும் விமோசனம் கிடைக்குமா எனக் காத்திருந்தார். தூரத்தில் மரங்கள் கரிய ஆனைகள்போல நின்றுகொண்டிருந்தன. காலார நடந்து சென்று மரங்களடியில் நிற்கலாமா என்று தோன்றியது. மேல் நிகைகளில் தங்கியிருந்த நண்பர்களை அழைத்துக்கொண்டு கீழிறங்கிச்செல்லலாமா என முதலில் யோசித்து, பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார். படிகளைப்பிடித்து கீழிறங்கிவந்தார். குளிர்ந்தக் காற்று உடலைத் தொட்டதும் சுகமாக இருந்தது. மெல்ல நடந்து முன்னேறியபொழுது இரண்டு ஆண்குரல்கள் தயங்கி நின்றார். அவர்கள் உரையாடுவது தெளிவாகவே கேட்டன.

– அவளை ஏன் பலியிடவில்லை?

– கன்னிகழியாத பெண்ணோ, ஆண்களென்றால் தலைச்சன் பிள்ளையாகவா இருக்கவேண்டுமாம். இவள் வயிற்றில் பிள்ளையுடன் இருக்கிறாள்.

– பிறகு?

– பிறகென்ன அவளை மரணக்கிணறில் தள்ளிவிடுமாறு உத்தரவு வந்தது தள்ளிவிட்டாயுற்று. இன்னும் மூன்று உயிர்களை பலியிட்டால் காரியம் சித்திபெற்றுவிடும், என்கிறார்கள்.

– அப்படியா?

பாதரெ பிமெண்டா தமது கழுத்தைத் தடவுப்பார்த்துக்கொண்டே கல்யாணமகாலை நோக்கி நடந்தார்.

(தொடரும்)

Series Navigationவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *