முன்னணியின் பின்னணிகள் – 32

This entry is part 23 of 36 in the series 18 மார்ச் 2012

 

சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

>>>

பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் எனக்கு நடக்கலாமாய் இருந்தது. அடுத்த நாள் மதியச் சாப்பாட்டுக்கு அவசியம் வருகிறேன், என விடைபெற்றுக் கொண்டேன். அதனிடையே எட்வர்ட் திரிஃபீல்டுடன் நான் கலந்துறவாடிய அந்த இரு பருவங்கள், அவற்றைப் பற்றிய என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தர முடியுமா என்றும் யத்தனிக்கலாம். பாதை பாம்பு வளைசலாய்ப் போனது. வழியில் நடமாட்டமே யில்லை. இவர்களிடம் என்னவெல்லாம் தகவல்கள் பரிமாறலாம், (என்னவெல்லாம் வேண்டாம் என்றும்) மெல்ல மனசை அலையவிட்டேன். அட எல்லாருந்தான் சொல்கிறார்கள்? நடை என்பது என்ன? வேணாததைப் புறந்தள்ளி சுவாரஸ்மானதைச் சொல். அணிவது அழகு. மறைப்பதும்அழகு.

ரொம்ப அழகான ஒரு படைப்பு நான் எழுத வேண்டும். எழுத்தாளன் எழுதும் ஒரு படைப்பு வெறும் குறிப்பாக இன்னொரு எழுத்தாளன் பயன்படுத்துவதே துக்ககரமானது. அட எதுவெல்லாம் அந்தப் புத்தகத்தில் நியாயமாக இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுவதை எழுதிக்கொடுத்தால்?… என நினைக்கவே குபுக்கென்று சிரிப்பு வந்தது. எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றியும், அவரது முதல் கல்யாணம் பற்றியும் என்ன தெரியணுமோ, எல்லாவற்றையுமே சொல்ல முடிகிற ஒரே நபர், அந்த நபரை நான் அடையாளங் காட்டப் போவதில்லை. ஆ ரோசி இறந்துவிட்டாள் என்கிறார்கள்… அவர்களுக்குத் தெரியாது, ரோசி இன்னும் உயிருடன் இருக்கிறாள்.

ஒரு நாடகத் தயாரிப்பு என்று நியு யார்க் போயிருந்தேன். எனது நிகழ்ச்சி நிர்வாகியின் பத்திரிகைத் தொடர்பாளர் ரொம்ப ஊக்கமாய் என் வருகை எல்லா சின்ன, பெரிய செய்தித்தாள்களிலும் வெளிவர ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து பரிச்சயம் போல இருந்தது, சட்டென யார் என்று பிடிபடவில்லை. குண்டு குண்டு உருட்டை எழுத்துக்கள். அழுத்தமான பாமர எழுத்து.

இந்த எழுத்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும், யார், யார்… என்று உள்ளே குடைய ஆரம்பித்துவிட்டது. உடனே உறையைக் கிழித்தால் யார் தெரிந்துவிடும் தான். என்றாலும் உறையையே பார்த்தபடி மூளைக்குள் இங்குமங்கும் உலவினேன். வாழ்க்கை சார்ந்த அலுப்புடன் லேசாய் நடுங்கிய அளவில் இப்படிக் கையெழுத்துகள் அமைந்திருக்கும். அவற்றைப் பார்க்கவே அலுப்பு தட்டி வாரக் கணக்கில் அதைப் பிரிக்காமலேயே மூலையில் வீசியுமிருக்கிறேன். ஒருவழியாய் உறையைக் கிழித்… என்னிடம் ஒரு விநோத உணர்வு. சம்பிரதாயமெல்லாம் இல்லாமல் குபீரென்று ஆரம்பித்த கடிதம்.

இப்பதான் நீங்க நியு யார்க்கில் இருக்கிறதாகப் பார்த்தேன். உங்களை மறுபடியும் பார்க்க வாய்க்குமா? நான் நியு யார்க்கில் இல்லை, என்றாலும் யாங்கர்ஸ், பக்கத்தில் தான் இருக்கிறது. உங்களிடம் கார் இருந்தால் அரை மணி. நீங்கள் உங்கள் வேலைகளில் மும்முரமாய் இருப்பீர்கள் என்று தெரியும் ஆதலால் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் வந்து போங்கள். நாம சந்திச்சே கொள்ளை வருஷமாச்சி, என்றாலும் உங்களுக்கு உங்கள் பழைய சிநேகிதியை, ரோசி இகல்தனை (அப்போது திரிஃபீல்ட்) ஞாபகம் இருக்கும்.

முகவரி பார்த்தேன். அல்பர்மார்லே. ஒரு விடுதி அல்லது அடுக்கக இல்லமாக இருக்கலாம். ஒரு தெருவின் பெயர். யாங்கர்ஸ் என கடைசி வரி. கல்லறைக்குள் நான், என் மீது யாரோ தடதடவென்று நடந்து போகிறாப்போல இருந்தது. கடந்துபோன வருடங்களில் எனக்கு எப்பவாவது அவள்ஞாபகம் வருவது உண்டு. அவள் இந்நேரம் காலமாகி யிருப்பாள் என்று சொல்லிக் கொள்வேன். அந்தப் பெயரைப் பார்த்ததுமே என்னுள் ஒரு திகைப்பு. ஏன் இகல்தன், கெம்ப் இல்லையே? ஆ, ஒருவேளை இன்னொரு கென்ட் பெயரை மாற்றி வைத்துக்கொண்டிருப்பார்களோ என்னமோ? இங்கிலாந்தில் இருந்து ஊர்மாற்றிக் கிளம்பியபோதே பேர்மாற்றிக் கொண்டிருக்கலாம்.

பேசாமல், இந்தமுறை வர ஒழியவில்லை, என்று எதும் காரணம் சொல்லிவிடலாமா? எப்பவுமே ஒருகாலத்தில் பரிச்சயப்பட்ட நபரைத் திரும்பப் பார்ப்பதில் எனக்கு ஒரு கூச்சம் இருந்தது. இப்ப நிலைமை எப்படி யிருக்குமோ? ஆனால் அவளைச் சந்திக்கிற ஆர்வத்தை அடக்க முடியவில்லை… இப்ப எப்பிடி யிருக்கிறாள் அவள் என்று பார்க்க துடிப்பு. அவள் கதையை அவள் வாய்மூலமே கேட்கவேண்டும் என்று ஆசை. வார இறுதியில் டாப்ஸ் ஃபெரி போவதாக இருந்தேன். யாங்கர்ஸ் தாண்டிதான் போக வேண்டியிருக்கும். சனிக்கிழமை ஒரு நாலுமணி போல அங்கே வருகிறேன், என்று பதில் எழுதிவிட்டேன்.

அல்பர்மார்லே – கொத்தான அடுக்ககங்கள். ஓரளவு புதிய கட்டடம். வசதியானவர்கள் வசிக்கும் இடம்தான். சீருடை அணிந்த நீக்ரோ என் பெயரை தொலைபேசி மூலம் தெரிவித்தான். இன்னொரு வேலையாள் வந்து என்னை மின்தூக்கியில் அழைத்துப் போனான். ரோசி ரோசி ரோசி… எனக்கு உள்ளே கடபுடா.

கருமை நிறத்தில் ஒரு வேலைக்காரி வந்து கதவைத் திறந்தாள். ”வாங்க உள்ள வாங்க” என வரவேற்றாள். ”திருமதி இகல்தன் உங்கள் வரவுக்காகக் காத்திருக்கிறாள்.”

உள்ளே வரவேற்பறை, உணவுகொள்ளும் கூடமும் அதுவாகவே அமைக்கப் பட்டிருந்தது. நல்ல வேலைப்பாடமைந்த ஓக் மர சதுர மேசை ஓரத்தில். அதனோடு கூடவே உடைகள் வைக்கிற உள்பெட்டிகள். நாலு நாற்காலிகள். முதலாம் ஜேம்ஸ் காலத்தில் பிரமுகர்கள் வந்தமர என்று வடிவமைத்த வகைமாதிரி இது என்று இதன் தயாரிப்பாளர்கள் கிராண்ட் ராபிட்ஸ் மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அறையின் மறுபக்கம் பதினைந்தாம் லூயி கால அலங்காரம். எங்கும் வெளிர்நீல ஆட்சி. சின்னச் சின்ன மேசைகள். செதுக்கல்களும் குடாய்வுகளுமான கலைப் படைப்புகள். அதில் ஆர்மலு வேலைப்பாடுகளுடன் ஜாடிகள். அவற்றில் பித்தளையில் நிர்வாணப் பெண் சிலைகள். சிலவற்றில் துகில் ஹாயாகப் பறந்து வேணுங்கறதை மாத்திரம் ஏதோ மறைக்கிறாப் போல, கௌரவம் பங்கப்படாத அளவில். அவர்கள் கையை வீ…யென விரிக்க ஓரங்களில் சின்ன மின்மினி விளக்கு மினுக்குகிறது. ரொம்ப சமீபத்திய புது மாடல் கிராமஃபோன். பளபளவென்று பொலிந்தது. ஒரு சேணத்தின் வடிவம். அதில் வார்த்து நடன மங்கைகள் உருவம் வரைந்திருந்தது.

ஒரு அஞ்சி நிமிஷம் போல நான் காத்திருந்தேன். கதவு திறக்க ரோசி உற்சாகமாக வந்தாள். என்னிடம் ரெண்டு கையும் நீட்டினாள்.

”ஆகா, என்ன ஆச்சர்யம்…” என்றாள். ”நாம சந்திச்சி கொள்ளை வருடங்கள் போயிட்டது. ஹா, அதைப் பத்தி என்ன? ஒரு நிமிஷம்…” என்றவள் கதவுபக்கமாய்ப் போய் அழைத்தாள். ”ஜெஸ்சி, தேநீர் கொண்டு வரலாம். தண்ணி நல்லா கொதி வரட்டும். சூடா போட்டுக் கொண்டா.” என்னிடம் திரும்பி வந்தாள். ”இவளுக்கு தேநீர் எப்பிடிப் போடணும்னு சொல்லிக்குடுத்து நான் படற பாடு இருக்கே, நீ நம்ப மாட்டே…”

ஒரு எழுபது வயசு இருக்கும் இப்போது. பச்சை ஷிஃபான் கைவைக்காத கவுன் மகா அழகாய் இருந்தது. அதில் வைர நட்சத்திரங்கள். கழுத்துப் பக்கம் சதுரக் குட்டையாய் கத்தரிப்பு. ஒரு பொம்மிய கையுறைக்குள் போல அவள் இருந்தாள். உள்ளே ரப்பர் உள்ளாடைகள் இருக்கலாம். ரத்தச் சிவப்பாய் நகப்பூச்சு. புருவந் திருத்தியிருந்தாள். ஆளே தாட்டிகமாக ரெட்டை நாடி போட்டிருந்தாள். கழுத்துக்குக் கீழ்ப் பகுதிகளில் பவுடர் அடித்திருந்தாலும் செவேலென்றிருந்தது. அந்த முகமே கூட செம்மைதட்டியிருந்தது. ஆனால் உடலில் செழுமையும் ஆரோக்கியமும் நல்லுரமும் தெரிந்தது.

இன்னமும் நிறைய சிகை, நிறந்தான் வெண்மையாய் கலைந்து நெளிநெளியாய் இருந்தது. இளமையில் மென்மையான இயல்பாகவே நெளிவுசுழிவுகள் கண்ட கூந்தல் இப்போது பிசிர்கள் இருந்தன. நேரே சிகையலங்காரம் முடித்து வரவில்லை தான் என்றாலும் அவளை வேறாளாகவே அடையாளங் காட்டின.

ஆனால் ஆ அந்தப் புன்னகை… அது அப்படியே மிச்சம் இருக்கிறது அவளிடம். அதே குழந்தைசாயல் காட்டும், குறும்பு கொப்பளிக்கும் இனிய புன்னகை. அந்தப் பற்கள் ஒழுங்காக இருந்த சரித்திரமே கிடையாது. வரிசையும் கிடையாது. ஒரே அமைப்பாகவும் இராது. ஆனால் இப்ப பார்த்தால் பழைசையெல்லாம் விட்டெறிந்து, ஒரே உயர அகலத்தில் மாற்றிமைக்கப் பட்டுவிட்டன. அடடா என்ன பளபளப்பு. உயர்தர சிகிச்சையின், அதி உயர்தரப் பற்கள்.

கருத்த வேலைக்காரி உள்ளே தேநீர்த் தாம்பாளத்துடன் வந்தாள். அதில் குவியலாய் ‘பேட்’ வகை இனிப்புகள், சான்ட்விச்கள், சின்ன பிஸ்கெட்கள், மிட்டாய்கள். கூட சின்னக் கத்திகள், குத்துகரண்டிகள், கைத் துணிகள். எல்லாமே படு சுத்தம். படு அழகு.

”இந்த ஒண்ணுதான், எனக்கு உதவிக்கு ஆள் இல்லாமல் முடியாது. தேநீர்…” என்றாள் ரோசி. உள்ளே வெண்ணெயிட்டு சூடு பண்ணிய ஸ்கோன் பிஸ்கெட்டை எடுத்துக் கடித்தாள். ”இதுதான் என் சாப்பாடு, நிசமாத்தான். இத்தனை வெண்ணெய் நான் சாப்பிடவே கூடாது, மருத்துவர் ம்ஹும்னு இடமும் வலமுமா மண்டைய ஆட்டிட்டே யிருக்காரு… அட அதைப் பத்தி என்ன? திருமதி இகல்தன், எப்பவும் ஒரு அரை டசன் குக்கி உள்ள தள்ளிட்டு தேநீர் அருந்தினா எப்பிடி? அப்பறம் எப்பிடி உங்க உடம்பு குறையும்?-ன்றார்” என்றபடியே என்னைப் பார்த்து புன்னகை சிந்தினாள்.  ஆ, அந்த நெளியலை வெண்சிகை, அந்த முக ஒப்பனை, அந்த குண்டடிச்ச உடம்பு… எல்லாமும் இருந்தாலும் இவள் ரோசி. எ ரோசி இஸ் எ ரோசி இஸ் எ ரோசி. ”ஆனால் நான் என்ன சொல்றது, எது பிடிக்குதோ, அதைக் கொஞ்சமாச்சும் அனுபவிக்காமல் எப்பிடி?”

எப்பவுமே அவள் அப்படித்தான். சட்டென இயல்பாய்ப் பேச ஆரம்பித்து விடுவாள். கூடிய சீக்கிரம் நாங்கள் சகஜமான கலகலப்புடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தோம், என்னவோ நாங்கள் பிரிந்து ஒரே வாரம் தான் ஆனாப் போலிருந்தது.

”ஏய் என் கடிதம் பார்த்து ஆச்சர்யப்பட்டியா? யார்ட்டேர்ந்து வந்திருக்குன்னு உனக்குத் தெரியணுமே, அதனால்தான் திரிஃபீல்ட் பேரையும் போடவேண்டியதா யிருந்தது. அமெரிக்காவில் வந்து இறங்கினப்ப நாங்க இகல்தன் பேர் வெச்சிக்கிட்டம். பிளாக்ஸ்டேபிளை விட்டுக் கிளம்பி வந்தப்ப ஜார்ஜுக்கு கொஞ்சம் அசௌகர்யம் ஏற்பட்டது. ஒருவேளை நீயும் கேள்விப்பட்டிருக்கலாம். சரி, புது நாடு, புதுப் பேர்னு புதுசா எல்லாத்தையும் ஆரம்பிப்பம்னு அவருக்கு ஒரு இது… விளங்குதில்லையா?”

என்னத்த, என்றாலும் தலையாட்டினேன்.

”ச் பாவம், பத்து வருஷம் முன்னாடி இறந்து போனார்…”

”கேட்க வருத்தமா யிருக்கு.”

”ஹ்ம் அவருக்கும் வயசாகுதே இல்லியா? எழுபது தாண்டிட்டது. பார்க்க அத்தனைக்கு வயசாளியாத் தெரியாது. ச், எனக்கு அப்பவே ரொம்ப மனசொடிஞ்சி போச்சு. எனக்கு அவர் அத்தனை நல்ல கணவரா இருந்தார். எந்தப் பெண்ணும் இதைவிட உயர்ந்த ஆத்மாவை எதிர்பார்க்க முடியாது. நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள் முதல் அவரது மரணம் வரை ஒருநாள் ஒருவார்த்தை எனக்கும் அவருக்கும் பிணக்கு வந்ததேயில்லை. அத்தோட எனக்கு எல்லா வசதிகளையும் வெச்சிட்டுதான் அவர் காலமானார்… அது திருப்தியான விஷயம் இல்லியா?”

”பரவால்ல, கேட்க சந்தோஷம்” என்றேன்.

”ஆமாம். இங்க அவர் கொடி பறந்ததுன்னுதான் சொல்லணும். கட்டடம் கட்டித் தர்றதுலதான் இறங்கினார். அதான் அவருக்கு எப்பவுமே இஷ்டமாய் இருந்தது. தம்மனியும் அவருமா பிசினெஸ் பண்ணினார்கள். நான் பண்ணிய பெரிய தப்பு, இங்க ஒரு இருபது வருஷம் முன்னாடியே வராமல் போனதுதான்னு சொல்லுவாரு. இங்க காலடி பதிச்ச முதல்நாளில் இருந்தே இந்த நாடு அவருக்கு ரொம்பப் பிடிச்சிட்டது. அவருக்கும் நிறைய வேலை இருந்தது, அதானே வேணும் நமக்கு. ஓடற வண்டில தொத்திக்கிட்டாப்ல அவரு சமாளிச்சி இந்த ஓட்டத்துக்கு உள்ள வந்திட்டார்.”

‘      ”அப்பறமா நீங்க இங்கிலாந்து பக்கம் வரவே இல்லியா?”

”ம்ஹும். எனக்கு வரணும்னே இல்லை. ஜார்ஜ் அதைப்பத்தி எப்பவாச்சும் பேச்செடுப்பார். சும்மா போயி ஊரைச் சுத்திட்டு வரலாமேம்பாரு. ஆனால் நாங்க போனதே இல்லை. இப்ப அவர்காலமே ஆயிட்டது. எனக்கு அங்க வர அபிப்ராயமே இல்லை. நான் நியு யார்க் வந்த பிறகு லண்டன் என் நினைவில், பாதி உசிர் பாதி சவமா இருக்கு. நாங்க நியு யார்க்கில் ரொம்ப காலமா இருக்கோம் இல்லியா. அவர் காலத்துக்குப் பிறகு நான் யாங்கர்ஸ் வந்தேன்.”

”சரி, எப்பிடி இந்த யாங்கர்சை தேர்வு செய்தாய்?”

”ம், எனக்கு இந்த இடம் எப்பவுமே பிடிக்கும். ஜார்ஜ் கிட்ட நான் சொல்லிட்டே யிருப்பேன், நாம ஓய்வுகாலத்தில் யாங்கர்ஸ்லதான் குடி போகணும்பேன். இது ஒரு மாதிரி குட்டி இங்கிலாந்தாட்டம் எனக்கு இருக்கு. நம்ம மெய்ட்ஸ்டோனோ, கில்ட்ஃபோர்டோ… அந்த மாதிரி ஒரு இடம் இது.”

புன்னகைத்தேன். அவள் என்ன சொல்ல வருகிறாள் புரிந்துகொண்டேன். இங்கத்திய ட்ராம்கள். கார் இரைச்சல். சினிமாத் தியேட்டர்கள். மினசார போக்குவரத்து சிக்னல்கள்… இவைகள் எப்படி யிருந்தாலும், நெளிந்து வளைந்து போகும் பிரதான சாலையில் ஒரு இங்கிலாந்து வணிகச் சந்ததையின் சாயல் தெரிந்தது.

”சில சமயம் நான் நம்ம பிளாக்ஸடேபிள் சனங்களைப் பத்தி, அவளுக்கு என்னாச்சி, இவருக்கு என்னாச்சின்னு யோசிப்பேன். நம்ம நினைவில் இன்னும் இருக்கிற நிறைய ஆசாமிகள் இந்நேரம் டிக்கெட் எடுத்திருப்பார்கள். ஹா, அவர்களும் நான் செத்திருப்பேன்னு நினைக்கலாம்.”

”நானே அங்கபோயி ஒரு முப்பது வருஷமாச்சி.”

ரோசி இறந்துவிட்டதான வதந்தி அப்போது பிளாக்ஸ்டேபிள் வரை போனதா தெரியாது. ஜார்ஜ் கெம்ப் இறந்துவிட்ட சேதி அங்கே போக, அது காதுகாதாய்த் திரிந்து இப்படி, ரோசி இறந்துவிட்டதாக திரிந்து போயிருக்கலாம்.

”இங்க யாருக்குமே, நீ எட்வர்ட் திரிஃபீல்டின் முதல் மனைவின்னு தெரியாது, இல்லியா?”

”ஆமாமா, தெரியாது. ஏன் தெரியணும்? அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தால் இந்த பத்திரிகை நிருபர்கள் தேனீக்களாய் இங்க அப்படியே வந்து மொய்ச்சிருப்பார்கள். சிலப்ப நான் எங்காவது பிரிட்ஜ் ஆடிட்டிருப்பேன். பக்கத்தில் யாராவது டெட்டின் புத்தகங்கள் பத்தி பேசிட்டிருப்பார்கள். சிரிச்சிக்குவேன். அமெர்க்காவில் அவர் புத்தகங்கள் கொண்டாடப் படுகின்றன. அவங்க புகழற அளவு அதைப் பத்தி எனக்கே தெரியாது.”

”நீ ஒண்ணும் பெரிசா நாவல் வாசிக்கிறது இல்லியே?”

”வரலாறுதான் எனக்கு தெரிஞ்சிக்க ஆர்வம். இப்ப அதையும் வாசிக்க நேரம் கிடைக்கிறது இல்லை. எனக்கு ஞாயிற்றுக் கிழமை ரொம்பப் பிடிக்கும். இங்கத்திய ஞாயிறு நாளிதழ்கள் ரொம்ப அட்டகாசம். இங்கிலாந்தில் இந்த அளவு சிறப்பா வெளியிடற மாதிரி தெரியவில்லை. ம், அத்தோட நிறைய பிரிட்ஜ் விளையாடறேன். அதில் கான்ட்ராக்ட்… எனக்கு அந்த ஆட்டத்தில் பைத்தியம்.”

எனக்கு ஞாபகம் வந்தது, அவளை நான் முதலில் பார்த்தபோது, விஸ்ட் ஆட்டத்தில் அவள் டேயப்பா, முடிசூடா மன்னி. துரிதமாய், தைரியமாய், சரியான முடிவுகள் எடுக்க, அவள் லாயக்கானவள். நம்ம பக்கம் ஆடினால் அருமையான கூட்டாளி. ஆனால் எதிரணியில் இருந்தால் மகா பயங்கரி.

”டெட் இறந்தப்ப, ஜிமீபீ வீs பீமீணீபீ- னு ஆனப்ப, இங்க ஒரே அமர்க்களம். அவரைப்பத்தி சனங்கள் பேசிவந்தார்கள் தெரியும், ஆனால் இத்தனை மதிப்பு அவருக்கு என்று தெரியவே தெரியாது. எல்லா இதழிலும் முழுசாய் அவர் ஆக்கிரமித்திருந்தார். அவரது படங்கள், அவர் கடைசியாய் வாழ்ந்துவந்த ஃபெர்ன் கோர்ட்… அங்கே வசிப்பது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அந்த ஆஸ்பத்திரி நர்ஸ், அவளை எப்பிடி அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ! அவர் திருமதி பார்த்தன் திரஃபோர்டைப் பண்ணிக்குவார் என்று நினைச்சிருக்கேன். அவங்களுக்குக் குழந்தை இல்லை, இருந்ததா?”

”இல்லை.”

”டெட்டுக்கு ஒண்ணு ரெண்டு குழந்தை பெத்துக்கலாம்னு ஆசை உண்டு. எனக்கு முதல் குழந்தைக்குப் பிறகு இனி இல்லைன்னு ஆயிட்டதில் அவருக்கு பெரிய இடி.”

”உனக்கு ஒரு குழந்தையா? தெரியவே தெரியாதே” என்று வாயைப் பிளந்தேன்.

”ம். இருந்தது. அதனால்தான் டெட் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனால் அது கருவானபோது எனக்கு ரொம்பப் போதாத காலம். மருத்துவர்கள் எல்லாரும் இனி அடுத்த குழந்தைக்கு வழி இல்லைன்னுட்டாங்க. பாவம், அதுக்கு ஆயுசு நல்லாயிருந்திருந்தால் நான் ஜார்ஜ் கெம்ப்போட கிளம்ப நினைச்சிருக்கவே மாட்டேன். ஆறு வயசில இறந்து போனாள். என்ன அருமையான குழந்தை, ஒரு ஓவியம் போலிருப்பாள்.”

”அதைப் பத்தி நீ சொன்னதே கிடையாது.”

”ம்ஹும். அவள்பேச்சே எனக்கு ரொம்ப துக்கத்தைக் கொண்டு வந்துரும். மெனின்ஜைடிஸ், மூளைக்காய்ச்சல் வந்தது அவளுக்கு. மருத்துவமனைக்கு எடுத்திட்டுப் போனோம். தனியறை தந்து எங்களையும் கூட அனுமதிச்சாங்க. ஐயோ அவள் பட்ட பாடுகள்… மறக்கவே முடியாது என்னால். எப்பவும் அழுதிட்டே யிருப்பாள். அவ வியாதி, அவ அனுபவிக்கிறாள்… அதை நாம எப்பிடி வாங்கிக்க முடியும்? அழாதேன்னு எப்பிடி ஆறுதல் சொல்லறது?”

அவள் குரல் உடைந்து சிதறியது.

”திரிஃபீல்ட் கோப்பையில் வாழ்க்கை கதைல விவரிக்கிறாரே, அது இந்த மரணம் தானா?”

”ஆமாமா, இதே தான். டெட் கிட்ட இது ஒரு விநோத அம்சம்னு எப்பவுமே நினைப்பேன். இப்பிடி அனுபவங்களை யெல்லாம் அவர் வெளிப்படையா பேச மாட்டார். எனக்கும் பேச வாய் வராதுன்னு வெய்யி. ஆனா என்ன, அவர் எல்லாத்தையும் எழுதிருவார். ஒரு விஷயத்தையும் அவர் விட்டுறல. சின்னச் சின்ன சமாச்சாரங்களைக் கூட, நான் அதையெல்லாம் கவனிச்சிருக்கவே மாட்டேன்… அவர் எழுத்தில் கொண்டுவந்திருப்பார். அதை வாசிக்கையில் எனக்கு ஞாபகத்தில் திரும்ப வரும். ஐய இதையெல்லாமா எழுதறது, அந்தாளுக்கு இரக்கமே கிடையாதோ, வக்ரம் பிடிச்சவரோன்னிருக்கும் சில பேருக்கு. ஆனால் அப்படியாப்பட்டவர் இல்லை அவரு. நான் எப்பிடி அதிர்ந்து உருக்குலைஞ்சி போனேனோ, அதே அளவு அவருக்கும் உள்ள அந்த சோகம் ஆட்டிட்டிருந்தது. ராத்திரிகளில் நாங்கள் வீடு திரும்பினால், அவர் குழந்தை மாதிரி அழுதுகிட்டே வருவார். கிறுக்குத் தனம்தான், அப்டிதானே தெரியுது?”

அந்தக் கதை கோப்பையில் வாழ்க்கை, அது பெரிய ஆத்திரப் புயலைக் கிளப்பியது. என்ன கதை அது? ஒரு குழந்தையின் மரணம், அதன் பிறகு நடந்த நிகழ்வுகளாக திரிஃபீல்ட் சொன்னவை பெரும் சர்ச்சையை சம்பாதித்தன. அந்த வர்ணனைகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பயங்கரமான வரிகள். அதில் ஒரு மன அவசமும் கிடையாது. பட்டவர்த்தனம். வாசகனை கண்ணீர் சிந்த வைக்கிற பிரயத்தனம் அதில் தவிர்க்கப் பட்டிருந்தது. ஆனால் கோபத்தை வரவழைக்க வைத்தது, சின்னக் குழந்தையின் மரணம், அது செத்துப்போக பட்ட பாடுகளின் வர்ணனை… தேவையா, என்று கொதித்தார்கள் எல்லாரும்.

இல்ல, இதுல விஷயம் என்னவென்றால், தீர்ப்பு நாளில் கடவுளாகப்பட்டவர் இப்படித்தான் கணக்கு பார்ப்பார், என்று நான் நினைக்கிறேன். ரொம்ப அழுத்தமான வரிகள். ஆனால் இந்த சம்பவம் வாழ்க்கையில் இருந்து பெறப்பட்டது என்றால், அதன் பின்னாக அவர் காட்டிய நிகழ்ச்சிப் போக்குகளும் நிசமா? தொண்ணூறுகளில் அந்தப் பின் பகுதிதான் சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. (1890)

விமரிசகர்கள் இதை அநாகரிகமான எழுத்து என்றார்கள். நடக்க முடியாத சம்பவம்… என்றார்கள். கோப்பையில் வாழ்க்கை, கதையில் அந்தக் கணவனும் மனைவியும் (அவர்கள் பெயர்கள் இப்போது ஞாபகம் இல்லை.) குழந்தை இறந்து விடுகிறது. கணவனும் மனைவியும் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்ப¤ வருகிறார்கள் – வசதியற்ற ஏழை சனங்கள் அவர்கள். சிறு விடுதிகளில் மாடா உழைச்சி ஓடாய்த் தேய்ந்து எதோ வயிற்றைக் கழுவுகிற நபர்கள். தேநீர் அருந்துகிறார்கள். அந்தி சாய்ந்துவிட்டது. ஒரு ஏழு மணி. ஒரு வாரம் விடாது அழுத்திக் கொண்டிருந்த கவலையில் களைத்திருந்தார்கள். இதுவரை மேலே பாறாங்கல்லாய் உட்கார்ந்திருந்தது துக்கம். அவர்களுக்கு ஒருவரிடம் மற்றவர்க்குச் சொல்ல எதுவும் இல்லை. ஒரு பரிதாபமான அமைதியுடன் அப்படியே உட்கார்ந்தார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த மனைவி எழுந்து கொண்டாள். படுக்கையறை  வரை போய் தனது தொப்பியை மாட்டிக் கொண்டாள்.

”நான் வெளில போறேன்” என்றாள்.

”ம்.”

விக்டோரியா ரயில் நிலையத்தருகே அவர்கள் ஜாகை. பக்கிங்ஹாம் அரண்மனை சாலை வழியே அவள், இடைப்பட்ட பூங்காவுள் நுழைந்து, நடந்து போனாள். பிகாதிலி வந்தது. அங்கே ஒரு சர்க்கஸ் கூடாரம். அதை நோக்கிப் போனாள். வழியில் அவள் கண்ணில் அந்த மனிதன் பட்டான். நின்றான். அவளைப் பார்க்கத் திரும்பினான்.

”மாலை வணக்கம்” என்றான் அவன்.

”மாலை வணக்கம்.”

அவளும் நின்று, புன்னகைத்தாள்.

”வாங்களேன், ஒரு பானம் அருந்தறீங்களா?” என்று கேட்டான்.

”அதுக்கென்ன…”

அங்கே விலைமாதர்கள் குழுமிக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் உள்ளே வந்து ஒவ்வொருத்தியாய்க் கூட்டிப்போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் பீர் அருந்தினார்கள் இவர்கள். அந்தப் புதியவனுடன் அவள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். தன்னைப் பற்றி இட்டுக்கட்டி ஒரு கதை சொன்னாள். என்னோட வீட்டுக்கு வரியா, என அவன் அவளைக் கேட்டான். ம்ஹும், என அவள் மறுத்து விட்டாள். என்னால அது முடியாது… என்றாள். எதும் ஓட்டலுக்கானால் தேவலை, என்றாள்.

ஒரு வாடகைக் கார் பிடித்தார்கள். புளூம்ஸ்பரி வந்தார்கள். அங்கே ராத்திரிக்கு ஒரு அறை எடுத்தார்கள். அடுத்த நாள் காலை. அவள் திரஃபல்கர் சதுக்கம் வரை பஸ் பிடித்தாள். பூங்காவுள் புகுந்து நடந்தாள். அவள் வீடடைந்த போது அவள் கணவன் காலை உணவுக்காக உட்கார்ந்திருந்தான். காலையுணவு முடிந்ததும் அவர்கள் ஆஸ்பத்திரிக்குத் திரும்பப் போனார்கள். குழந்தையின் இறுதிச் சடங்குகள் காத்திருந்தன.

>>>

முடிவுப்பகுதி அடுத்த இதழில்

storysankar@gmail.com

Series Navigationசாதிகள் வேணுமடி பாப்பா‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *