சொல்லாமல் போனது

2
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 42 in the series 25 மார்ச் 2012

நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு எப்போதாவது அவள் அசந்திருக்கும்போதோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருக்கும்போதோ எதையாவது எடுத்துத் தின்றுவிடும் வலது பக்க வீட்டுப் பெண் சகுந்தலாவையோ அல்லது என்னையும் சகுந்தலாவையும்விட பெரியவளான வயதில் பெரிய, என் பெரிய சகோதரிகளையொத்த தனது பெண்ணான நளினியைக் கடிந்து கொள்ளும்போதோ அவள் எழுப்பும் டெசிபல்களில் நாங்கள் வசித்த நான்கு வீடுகள் கொண்ட ஏ 10 என்ற ப்ளாக்கே அதிர்ந்து ஆடும். அதற்காக அவள் ஒன்றும் சிடுமூஞ்சி அம்மா அல்ல. கலகலவென அவர்கள் சிரிப்பது வான் கோழி கத்துவதைப்போல அடுக்கடுக்காய் சப்தம் படிப்படியாய் ஏறி, தொலைதூரம் போய்விட்ட லாரியின் சத்தம் தன்னுடைய டயர்களின் கீழேயே சிக்கி அரைபட்டு நம் காதுகளைவிட்டு அகன்றுவிடுவதைப்போல இருக்கும். இப்படி ஒருவிஷயத்துக்காக நாலைந்து முறை சிரித்து நிற்கும்போதும் எங்களின் ஏ 10 அதிரும். அவளது அகன்ற முகத்தில் கண்கள், காதுகள், மூக்கு, மூக்கின் நாசிகள், புருவங்கள் எல்லாம் தனித்தனியாய் செய்து ஒட்ட வைத்ததுபோல் இருக்கும். தலை முடி நரைக்க ஆரம்பித்து அக்டோபர் மாதத்து மழைகனத்த வானம்போல் வெளிர் கருமையில் பளபளத்து இடுப்பு தாண்டித் தொங்கும். ” அத்தைக்கு எவ்ளோ நீள முடி ” என்று சகுந்தலா ஒருமுறை வியந்து சொன்ன போது ” முடி மட்டுமா? வாயும்தான் ! ” என்று சகுந்தலாவின் அம்மா சொன்னது பொப்பா என்று நாங்கள்கூப்பிடும் நளினியின் அப்பாவின் காதில் விழுமளவுக்குச் சத்தமாகத்தான் இருந்தது.

பொப்பா தன் மனைவிக்கு நேர் எதிர். வெண்ணையில் தோய்த்தெடுத்த மாதிரிதான் அவரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்துவிழும். சிரிக்கும் கண்கள். பொன்மலை ஒர்க் ஷாப்பில் ” ஹைலி ஸ்கில்ட் ” உழைப்பாளியாக இருந்தார். ஒர்க் ஷாப்பில் முக்கால்வாசிப்பேர் ” ஹைலி ஸ்கில்ட் ” ஆகத்தான் இருந்தார்கள். மல்ட்டி நேஷனல் நிறுவனங்களில் பலபேர் ” வைஸ் பிரஸிடெண்டுகளாக ” ஆக இருப்பதைப்போன்று. எனக்கு என்னவோ சாதாரண வேலை நேரத்துச் சமயங்களைவிட ஓவர் டயத்தில் இவர்கள் வேலை செய்யும்போதுதான் ஒர்க் ஷாப்பிலிருந்து வேலை செய்வதால் வரக்கூடிய அதிக சத்தம் கேட்பதாகத் தோன்றும். பொப்பா வேலை செய்துவிட்டு மதியம் சாப்பிட வரும்போதோ அல்லது சாயங்காலம் வேலை விட்டு வரும்போதோ ஒரு நாள்கூட களைப்பாக வந்து பார்த்ததே இல்லை. ” என்ன பொப்பா, என்ன இன்னிக்கு ஷாப்பில நல்ல தூக்கமா ? ” என்று பெரியவர்கள் கெலியாகக் கேட்பதைக் காப்பியடித்துச் சின்னப் பசங்களான நாங்கள் கேட்டால்கூட இயல்பிலேயே சிரித்துக்கொண்டிருக்கும் கண்கள் மேலும் சிரிக்கும்.

சாப்பிடும் நேரம் மற்றும் தூங்கும் நேரம் தவிர எப்போதும் நளினி அம்மாவின் வீட்டிலேயே இருக்கும் எனக்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் வீட்டிற்குப் போக முடியாது. அன்றுதான் அவர்கள் மீனோ கறியோ சமைக்கும் நாள். எனக்கு அந்த வாசனையே ஆகாது. ஆனால், பக்கத்து வீட்டு சகுந்தலா ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் வீட்டிற்கே போகாது நளினி அம்மா வீட்டிலேயே காலை முதல் பழியாய்க் கிடப்பாள். சகுந்தலா என் வயதொத்தவள் என்றாலும் வயதுக்கு மீறிய பேச்சும் செயல்களும் இருக்கும். அந்தச் சின்ன வயதிலேயே கண்களைச் சுழற்றி, நீட்டி முழக்கிப் பேசும் பேச்சிற்கு பெரியவர்களே கொஞ்சம் ஆடித்தான் போவார்கள். ரயில்வே காலனியில் எந்த வீட்டிலிருந்தாவது முருங்கைக்காயோ மாங்காயோ அல்லது தோட்டத்திலிருக்கும் எந்தக்காயையோ யாருக்கும் தெரியாமல் பறித்துக் கொண்டு வந்துவிடுவாள். அவள் அம்மாவுடன் காய்கறி மார்க்கெட்டுக்கு போனால் அவள் சாம்பிள் பார்க்கும் கேரட்டும், திராட்சையும் அரை கிலோவிற்குக் குறையாது. இவ்வளவு இருந்தும் சகுந்தலாவின் அம்மா த்ருஷ்டிபட்டுவிடக்கூடாது என்று மற்றவர்களிடம் பேசும்போது, ” சகுந்தலாவிற்குச் சாமர்த்தியம் போதாது ” என்று சகுந்தலா பிரசவத்தின் போது கோணலாகிப்போன வாய் மேலும் கோணலாக வருத்தப் பட்டுக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். ஆனால் நளினி அக்கா மாத்திரம் சகுந்தலாவிடம் பிரியமாக இருப்பது நளினி அம்மாவிற்கே அவ்வளவாகப் பிடிக்காது.

நளினி அக்கா அவர்கள் குடும்பத்தில் ஒரே பெண் என்பதால் பொப்பாவின் செல்லம். நளினி அம்மாவும் அவ்வப்போது ஹை டெசிபலில் திட்டுவாளே தவிர பெண்ணிற்கு எந்தக்குறையும் வைக்க மாட்டாள். கொஞ்ச காலமாக நளினி அக்கா நார்மலாக இல்லை. நளினி அக்கா வெளியில் கிளம்பும்போது பார்க்கவே பார்க்காத மாதிரி இருந்து விழிகள் வலது ஓரத்தில் திரும்ப எடுக்க முடியாமல் சொருகிக்கொண்டுவிடுமோ எனும் அளவுக்கு நைசாகப் பார்த்துவிட்டு ” ரொம்ப ஸ்டைல் போடறா ” என்று என் தமக்கைகள் ஒருசேர கொடுத்த சர்ட்டிஃபிகேட்டில் பொறாமை வழிந்து ஓடியது. அதுவும் என் சின்ன அக்கா அவளுக்கு வாங்கிக்கொடுத்திருந்த புடவைகளைத் தோய்த்து மடித்து வைக்கும்போது நளினி அக்காவின் ஸ்டைல் மனதில் ஓட, புடவைகளை ஒருவித விரக்தியில் ஷெல்ஃபிற்குள் தூக்கி எறியும் வேகம் அவளது அசூயையின் அளவைப் பிரதிபலிக்கும். ஆனாலும் நளினி அக்கா இப்போதெல்லாம் கால்கள் அனாவசியத்துக்குப் பின்னிக்கொள்ள நடந்து செல்லும் விதமே எங்கள் ஏரியாவிற்கு அதிக வாலிபத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. என் அம்மா, என் அண்ணன்களையெல்லாம் ” அங்க வாசல்ல என்னடா நிக்க வேண்டிக்கிடக்கு? ஒண்ணு உள்ள போ, இல்ல வெளிய போ ” என்று சாமி வந்தமாதிரி கத்துவது ஏன் என்று அப்போது புரியவில்லை. என்னையும் ” என்னடா எப்பப்ப்பாத்தாலும் நளினி அக்கா நொளினி அக்கான்னு? “என்று நிறைய ‘ப்’களைச் சேர்த்துச் சத்தம்போடும்போது நான் பயந்துபோய் கண்கள் தெரித்து வெளியே விழுந்துவிடுவதுபோல இரும ஆரம்பித்துவிடுவேன். நளினி அக்கா ஒரு புதிய வாசனையோடு இதெல்லாம் சகஜமப்பா என்று நடமாடிக் கொண்டிருந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நளினி அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து, ” ஐயரூட்டம்மா! நேத்தைக்கு டவுனுக்குப் போயி இந்தப்பொண்ணுக்கு ஒரு நெக்லஸ் வாங்கியாந்தேன். நல்லாருக்கா பாருங்க ” என்று நடந்துவந்த ஸ்ரமத்தில் மூச்சுவாங்கச் சொல்லி உட்கார இடம் தேடினார். நான் ஓடிப்போய் ஒரு ஸ்டூல் கொண்டுவந்ததில் சந்தோஷமாகி, என்னை அணைத்துக்கொண்டு ” சமத்துப் புள்ளம்மா! வீட்டுக்கு வந்தா ஓரமா உக்காந்துக்கும். எதுனாச்சும் சாப்பிடக் குடுத்தா தலய யானக்கணக்கா ஆட்டி வேணாம்னு அளுத்தம் திருத்தமா சொல்லும். ஆனா, அந்த சிறுக்கி இருக்காளே! யம்மாடி! அவ கண் ணுக்கு ஒண்ணும் தப்பாது! “என்று கண்களை இன்னும் அகலமாக்கிச் சொன்னபோது அம்மாவுக்கு என்னை பாராட்டியதைவிட சகுந்தலாவைத் திட்டியபோது அதிக சந்தோஷம் இருந்ததை கண்கள் நன்றாகக் காட்டிக்கொடுத்தது. ” நெக்லஸ் ரொம்பப் ப்ரமாதம் ” என்று அதிகப் பாராட்டை வழங்கிய அம்மா என் அக்காக்கள் யாரும் அப்போது வெளியில் வராதபடி பார்த்துக்கொள்ளக் கதவை வெளிப்பக்கம் சாத்திவிட்டாள். நளினிக்குக் கல்யாணத்திற்குப் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும் அவளை நினைத்தால் ரொம்பக் கவலையாக இருப்பாதாகவும் நளினி அம்மா கவலைப் பட்டதை என் அம்மா வெகு சுலபமாகக் கலைத்து, ” அதெல்லாம் ஒண்ணும் கவலைப் படாதீங்க! நளினியோட அழகுக்கும் குணத்துக்கும் நல்ல மாப்பிள்ளையா கெடைப்பான் ” என்று நளினியின் அழகைப் பற்றிச் சொன்னதை நளினி அம்மா பாதிதான் ஏற்றுக்கொண்டாள் என்பதை அவள் முகம் சொல்லிற்று. அழகைவிட அவள் குணம்தான் தன்னைக் கவலைப் படவைப்பதாக நளினி அம்மா சொல்லி அழ ஆரம்பித்த போது ” போடா உள்ள ” என்று அம்மா என்னை விரட்டி விட்டாள். அதன் பிறகு நளினி அம்மா ஒருமணி நேரம் கழித்துத்தான் சென்றார்கள். எனக்கு நளினி அம்மாவைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எங்கள் வீட்டில் மூன்று பெண்கள் இருந்ததில் என் அம்மாவின் முகத்தில் நளினி அம்மாவைவிட மூன்றுமடங்கு கவலை தெரிந்தது. ஆனால் அம்மா என் தமக்கைகள் ஸ்டைல் போடாமல் பார்த்துக் கொண்டாள். நளினி அக்கா என் தமக்கைகளைச் சினிமா பார்க்கக் கூப்பிட்டபோது என் அம்மா ஏதோ காரணம்சொல்லி அனுப்பாமல் இருந்துவிட்டாள்.

அடுத்த சில நாட்களில் நான் வழக்கம் போல நளினி அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டே அவர்கள் வீட்டிற்குள் போனபோது நளினி அக்கா ஹாலின் ஓரத்தில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் கூப்பிட்டுக்கொண்டே போனபோதும் முகத்தை எடுக்காமல் இருந்தாள். திடீரென முதுகு அசைந்ததில் அவள் மீண்டும் விட்ட அழுகையைத் தொடர ஆரம்பித்தது தெரிந்தது. நளினி அம்மா சமையலறையில் இருந்து வந்தார்கள். முகம் பாறாங்கல் போல இறுகிக்கிடந்தது. நளினி அம்மா ஏதும் பேசாததால் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். நான் வெளியே வரும்போது, சகுந்தலா நளினி அம்மா வீட்டிற்குள் நுழைந்தாள். அடுத்த சில நிமிடங்களில் சகுந்தலாவை இழுத்து வாசலுக்கு வெளியே தள்ளிக் கதவைச் சாத்திச் சென்றார் நளினி அம்மா. சகுந்தலா அழுது கொண்டே அவள் வீட்டிற்கு ஓடிச் சென்ற அடுத்த சில நிமிடங்களில் வாசலில் ஒரே சத்தமாக இருந்தது. என் அம்மா பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள். நளினி அம்மா , ” இந்த வயசுலயே இப்படித் திருடியாக வளர்ந்திருக்கியே உம் பொண்ண ” என்று சகுந்தலாவின் அம்மாவைப் பார்த்துக் கத்த, ” ஒம் பொண்ண நீ ஒழுங்கா வளத்திருக்கியான்னு பாரு. வயசுப்பொண்ண ஊரு மேய வச்சிட்டு என்ன சொல்ல வந்துட்டா ” என்று எதிர்த்துக் கத்தி போனசாக , ” ஒன் வீட்டு நெக்லஸ் காணாமப் போனா அத என் பொண்ணுதான் எடுத்தான்னு எப்படி சொல்லமுடியும்? ஒன் வீட்டுக்கு எவனெவனோ வர்றான். அதோ அந்த ஐயர் வூட்டுப் புள்ள கூடதான் ஒன் வீடே பழியாக் கெடக்குது. அதச் சொல்லவேண்டியதுதான? ” என்று ஒரு பெரிய குண்டைப் போட்டாள். என் அம்மா அதிர்ந்து போய் அடுப்பில் வைத்ததை மறந்து சமையல் தீய்ந்துபோய்க் கொண்டிருந்ததுபோல் மனசு தீய்ந்துபோய் மயங்கி உட்கார்ந்து விட்டாள்.

சண்டை வெய்யில் ஏற ஏற இன்னும் உக்ரமாகிக்கொண்டிருந்தது. பதிணொன்னரை மணிக்கு ஒர்க் ஷாப்பின் சங்கு ஒலிக்க வேலைக்குப் போன ஆண்கள் எல்லோரும் சாப்பிட வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பொப்பாவும் வழக்கம்போலவே ஃப்ரஷ் ஆக வேலை செய்ததின் அலுப்பு தெரியாமல் வந்தார். ஆண்களைப் பார்த்ததும் பெண்களின் சண்டை புதிய உச்சத்தைத் தொட்டது. நல்ல வேளை ஆண்கள் சண்டைக்குள் நுழையாமலும் பெண்களை அடக்கமுடியாமலும் மேலும் பசியிலும் தவித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆவேசம் வந்தவள்போல் சகுந்தலாவின் அம்மா, நளினி அம்மாவிடம் ஒரு டீலுக்கு வந்தாள். ” வாடி மாரியம்மன் கோவிலுக்குப் போலாம். ஆத்தாகிட்டயே கேட்டுடுவோம்!. எம் பொண்ணு உங்க வீட்டு நெக்லஸை எடுக்கலேன்னு நான் சூடம் ஏத்தி சத்தியம் பண்றேன். நீ சொல்றதுது பொய்யா நான் சொல்றது பொய்யான்னு பார்த்திடுவோம். யார் பொய்சொன்னாலும் அவங்க குடும்பம் செதஞ்சி போகட்டும் ” என வெறி கொண்டவள்போல் கத்திக்கொண்டே கட்டியிருந்த தலைமுடியை அவிழ்த்துவைட்டு தலைவிரி கோலமாய்க் கோவிலை நோக்கிப்போனாள். இதைக்கேட்ட நளினி அக்காவின் முகம் வெளிற அவள் வெளியே ஓடிவந்தபோது புத்தர்போன்றிருக்கும் பொப்பா அவள் கையைப்பிடித்திழுத்து நிறுத்தி கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டதில் நளினி அக்கா மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருமே கலங்கிவிட்டோம்.

சகுந்தலாவின் அம்மாவோ மாரியம்மனிடம் கண்ணீரும் கம்பலையுமாய் முறையிட்டுக்கொண்டிருந்தாள். சூடம் ஏற்றினாள். கைகளை ஓங்கித் தரையிலடித்துச் சூடத்தை அணைத்தாள். பின் வீடுவந்து கதவைச் சாத்திக்கொண்டுவிட்டாள். பின் ஒரு மாதத்தில் நளினி அம்மா இறந்துபோனார். இன்னும் சிறிது காலம் கழித்துப் பொப்பாவிற்கு விபத்தில் கால் போயிற்று. நளினி அக்கா இளைத்துக்கொண்டே வந்தாள். ஒரு நாள் அம்மா கோவிலுக்குப் போயிருந்தபோது நான் என் அம்மா பேச்சையும் மீறி நளினி அக்காவைப் பார்க்கப் போன போது, அக்கா ஹாலில் தன் புதிய கடவுளான யேசு நாதரின் முன் மண்டியிட்டு ” கர்த்தரே! என்னை மன்னியும். இல்லை எனக்கு மன்னிப்பே கிடையாது. நெக்லஸை நான் சினிமாவிற்குப் போனபோது காணாமல் போக்கிவிட்டதை நான் அம்மாவிடம் சொல்லாமல் போனதற்கு எனக்கு எப்படி மன்னிப்புக் கிடைக்கும் ? என்று அழுதுகொண்டிருந்ததை, நளினி அக்காவைப் போலவே நானும் இன்றுவரை யாரிடமும் சொல்லவே இல்லை.

ரமணி

Series Navigationதேவ‌னும் சாத்தானும்காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
author

ரமணி

Similar Posts

2 Comments

  1. Avatar
    N. SRINIVASAN says:

    Hello Ramani, ungal colony anubavangal dinathanthi Kannitheevai vida Romba naal odum polirukkirathu. Aanal narration arumai. Paavam naliniyin amma innoru pen saabathirku baliyagivittall.

  2. Avatar
    sivagami says:

    Sometimes it happens! Fearing parents’ wrath wards do abstain from telling the truth which has disastrous consequences. Also, the usual mischief mongers may not be the culprits who would become the suspects in the eyes of everyone because of their dubious past. But the end is really sad. But what is that Nalini’s ” Puthiya Kadavul ” ? Ramani.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *