காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)

This entry is part 25 of 40 in the series 1 ஏப்ரல் 2012

(1)

காட்டுக்குள்

காலடி வைப்பேன்.

காடு

நகைக்கும்.

’ஒரு மிருகமோ நான்’ என்று

ஒரு சந்தேகம் எனக்கு.

காடு

மறுபடியும் நகைக்கும்.

”ஒரு மிருகமில்லையோ நான்” என்று

மறு சந்தேகம் எனக்கு.

இரண்டுமே நானோ?

இன்னும் தீராது சந்தேகம் எனக்கு.

காடு தொடர்ந்து நகைக்கும்.

காட்டுக்குத் தெரியுமோ?

(2)

ஏறி இறங்கி
இறங்கி ஏறி
அடுக்கு மலை
தாலாட்டும்.

அடர்ந்த காடு
துயில் கொள்ளும்
அமைதியில்.

(3)

அடர்ந்த காடு.

பறவை

ஒலிக்கும்.

காட்டின் அமைதி

ஆழமாகும்.

பறவை

ஒலிக்கவில்லை.

பறவை

ஒலிக்கக் காத்திருப்பதில்

காட்டின் அமைதி

இன்னும் ஆழமாகும்.

(4)

காட்டின் அமைதியில்

பறவை மறைந்திருக்கும்.

பறவையின் ஒலியில்

காடு மறைந்திருக்கும்.

(5)
காட்டில் மழை
வரும் போகும்.
வரும் போகும்.

”‘நான்’
மழையில் நனைகிறேன்”
என்று மனக்கவலை.

ஒரு மின்னல் என் பிரக்ஞையில்
சில விநாடிகளுக்குப் பின்னால்
’நான்’ மட்டுமா?

நான் சவாரித்து வரும்
குதிரை நனைந்திருக்கும்
குதிரைக்காரன் நனைந்திருப்பான்.
மரங்கள் நனைந்திருக்கும்.
காடு நனைந்திருக்கும்.

முதலில் “நான்”
நனைந்தது எப்படி?

(6)
காட்டில்
விழும்
இடி

காட்டின்
ஒவ்வொரு மரமும்
சடசட வென
முறிந்து
விழுகிறதா?

காட்டில்

விழும்

இடி.

(7)

காட்டில்
இடி.

மழை வானின்
மின்னல் பறவை
காட்டில் பறந்து
ஒலிக்கிறதா இப்படி?

பறவையின்
ஒலியில் நிசப்தம் கூடும்
காடு
கண்டு கொள்ளும்
’இது ஒரு பறவையுடையதல்ல’
என்று.

காட்டில்
இடி.

(8)

மலை
மலைப் பாதையில்
மழையில்
நெளிந்து நெளிந்து ஓடும்.

ஓடி அது
ஒரு
ஆறு போல மாறி
என் மனம் போல்
ஓடும்.

(9)

பாறையில்
தேங்கிய
கொஞ்சம் மழையில்
பாறை
கரைந்து போகப் பார்க்கும்.

(10)
ஒரு
மழைச் சொட்டு
காட்டில்
விழும்
ஆகாய விதையா?

(11)
காலையில்
காட்டுக்குள் விழுந்த
சூரியன்
வெயிலையும் நிழலையும் சேர்த்து
வர்ணம் குழைத்துக் கொண்டே
இருப்பான்.

சாகும் வரை
வாழ்வைப் புரிந்து கொள்ளாதவன் போல
பொழுது சாயும் வரை
காட்டை
வரைய முடியவில்லை.

(12)

ஒரு மரமும்
தள்ளி இன்னொரு மரமும்
காதலில்
தழுவிக் கொண்டிருக்கும்
நிழல்களில் விழுந்து.

அதனைத்
தேடிச் செல்லும்
என் அடிநிழலின் வேர்
உணரும்.

(13)

சூரியன்
மண்ணில்
காட்டைச் சாய்க்க முடியாமல்
ஒரு
காட்டு மரத்தைச் சாய்த்திருப்பான்
நிழலை வீசி.

(14)
எது
எந்த மரத்தின் நிழல்?

எந்த மரத்தின் நிழல்
எந்த மரத்தின்
நிழல் மேல்?

மேடு பள்ளங்களில்
தடுக்கி விழுந்து
காயமாகிக் கிடக்கும்
கரு நிழல்களில்
எழுந்து நிற்கும் மரங்களும்
நிழல்களின் நிழல்களா?

வெளிச்சமும் நிழலும்
பின்னிய மாயவலையில்
அகல்விரியும் காடு
சிக்கிக் கிடக்கும்
ஆயிரங்கால் சிலந்தியாய்.

(15)
காட்டின்
எந்தப் பாதை
எங்கு செல்லும்?

காட்டுக்குச்
செல்லும்.

(16)

எப்படி
இந்தக் குதிரை
பாதை மாறி
பாதை மாறி
’பெரிய’ மலையின்
அனுமானம் மீறி
விநாடிக்கு விநாடி
நடக்கிறது?

(17)
விழுந்து கிடக்கும்
முறிந்த
ஒரு வயோதிக மரத்தின்
சவம்.

அதன் மேல்
விழுந்து கிடக்கும்
ஒரு
பச்சை மரத்தின் நிழல்
கறுப்புத் துணியைப் போர்த்தி.

(18)
அடுத்த பனியில்
எதன் சாவு?

இன்னொரு
வயோதிக மரத்தின் சாவா?

காடு
முடியாது செல்லும்
சாவை ஏமாற்றி.

(19)

காட்டின் ஓடையில்
கால் நனைத்த
என்
காலடிச் சுவடுகள்
நீந்தி
நீந்திப் போகும்
காதல்
கரையாமல்.
கரையேறாமல்.

(20)

காட்டில்
ஓடை
ஒரு நெடுங் கவிதையாய்
ஓடும்.

முங்கியிருக்கும்
கற்கள்
முழுமை தேடி
உடையும் சொற்களாய்
ஓடையை எழுதும்.

ஓடை அதில்
சலசலத்து ஓடும்.

(21)
ஒரு
ஃபைன் மரத்தில்
காகம்
கத்துவதைக்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
காடு.

’வளர்ந்த’
ஃபைன் மரம் தான்
காட்டிடம்
பேசும் அப்படி.

(22)

எவ்வளவு
பெரிய
காடு!

ஒரு
முறிந்த
மரத்தில்
சோகமாய்க்
கிடக்கும்.

(23)
”ஆகாயத்திலிருந்து
நீ பார்த்த
நான்
எப்படி ?”

காட்டுக்குத் திரும்பிய
பறவையிடம்
காடு கேட்கும்.

பறவை சொல்லும்:
“பூமி தாங்குவது
நீ தான்”

(24)
மல்லாந்து
மலைச்சரிவின் காட்டில்
ஆகாயம் பார்ப்பேன்.

மிக உயரே
வெகு தொலைவில்
சிறுத்துச்
சிறுத்துக் கொண்டேயிருக்கும்
இரு புள்ளிகளாய்ப்
பறந்து பறந்து போகும்
இரு குஞ்சுகள்.

எதைக்
காதலில் நோக்கி?

ஆகாய ஏரியில் விழுந்து
காடும் மலையும்
காட்சி தெரியுமோ
அவைகளுக்கு?

(25)

மலையில்
என் குதிரை
செல்லும் வழியில்
என் கூட
காடு
செல்லும்.

கூடச் செல்லும் காட்டில்
சிறகடிக்க
’என்னுள் பறவை’
கூடு விட்டுப் போகச்
சிறகடிக்கும்.

(26)

குதிரை குனிந்து
தாகம் தீர்க்க
கண்ணாடி ஓடை
கலங்கிப் போகும்.

கலங்கிய
கண்ணாடி ஓடையில்
சூரியன் துளைந்து துளைந்து
சூடு தீர்க்க
சூரியன் கண்
’கலங்கிப்’ போவான்.

(27)
சென்று
சென்று கொண்டிருக்கும்
குதிரையின் நிழல்
பாறைகளின் கூர்களை
உராய்ந்து செல்லும்.

குதிரைக்குத் தெரியும்
உழைத்திறுகிய
அதன் நிழலை விடப்
பாறைகள்
இறுகலானதல்ல என்று.

குதிரை
வளைந்து வளைந்து
கண்டு செல்லும்
ஒற்றையடிப்பாதையில்
ஒடுங்கி மலை சரணடைந்திருக்கும்.

(28)

பனி மலைக்குள்
பனி குகை
குடைந்திருக்கும்

இறுதியில்
நேரும் சாவு போல
இரவில்
சேர்ந்திருக்கும்
பனி.

பகற் சூரியனில்
பனி குகை உருகி
சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் விடும்
தன் சாவுக்கு.

(29)

நீரோடை
பிரிந்து பிரிந்து
’ஓடிக் கொண்டே’
இருக்கும்.

கிளைகள்
பிரிந்து பிரிந்து ஓடும்
ஒரு மரம் ஓடாது
கரையில் நின்றிருக்கும்.

’ஓடாது’ மரம்
சும்மா
வேடிக்கை பார்க்கும்
’ஓடும்’ ஓடையை.

(30)

மண்ணில்
எங்கெங்கோ
செல்லும்
எந்தெந்தோ வேர்கள்
காட்டில்
தங்கள் தங்கள் மரத்தை
மறக்கவில்லை.

(31)
மரத்தின்
பச்சை இலைகள்
மத்தியில்
பழுப்பு இலைகள்.

காற்றுக்குப்
பிடிக்கவில்லையா?

காற்றடித்துக்
கீழே சரியும்
பழுப்பு இலைகள்.

ஒரு பழுப்பு இலையின்
பின்னால்
இன்னொன்று ஓடும்.

இன்னொன்றின் பின்னால்
இன்னொன்று ஓடும்.

எங்கு போய்
எது முடியும்?

காற்றுக்குத் தெரியும்
அதனதன்
கதை.

(32)
பத்து வயதுக்
குதிரை மேல்
போகும்
நான் வயதில்
ஆறு குதிரைகள்
பளு.

எந்த
ஆத்மா
எந்த
ஆத்மாவைச் சுமக்கிறது?
ஏன் சுமக்கிறது?

என் விஷ நிழலில்
என்னை வீழ்த்திச் செல்லும்
குதிரை
ஆக்ரோஷமாய்.

(33)

பாறை விளிம்பின் ஓரம்
செல்லும்
குதிரையின் முன்
குப்புற விழும்
என் பயம்.

பயத்தில்
வீழ்ந்த என் நிழல்
எழுந்து உயிர்க்க
குதிரை மேல்
சவாரிக்கும் ’நான்’ யார்?

(34)
உறைபனி வாள்
உள்தாக்கி முறிந்து விழுந்து
அரைகுறையாய் எரிந்த
அனாதைப் பிணம் போல்
பாதி எரிந்து
கருத்துக் கிடக்கும்
பாழ் மரம் ஒன்று.

அதன் கரிந்த கை போலும்
கிளை நுனியில்
அமர்ந்து ஒரு காகம்
அங்குமிங்குமாய்
ஆகாயம் பார்க்கும்.

வாழ்ந்து முடிந்த மரத்திற்கு
எந்த ஞாபகம் இருக்கும்
காகத்திற்கு
எதை
ஞாபகப்படுத்த?

பனிக்கட்டி தின்னப்
பனிமலைக்குப் பறப்பதாய்ப்
பறக்கும் காகம்
அடுத்த விநாடி.

(35)

இந்தப்
பனி மலைக்காகவா
இந்தச்
சூரியன்
பொன் மகுடமாகிறான்?

(36)

மலை வயல் வெளியில்
சோளக் கொல்லை
பொம்மை
மலையையே
பயமுறுத்தும்.

(37)

காடு கண்டு திரும்பும்
தாயின் தோளில்
சாய்ந்து கொண்டே குழந்தை
பின்னால்
பார்த்து வரும் காடு.

குழந்தை
பின்னால் பார்த்து வரும் காடு
தாய்
முன்னால் பார்த்த காடல்ல.

(38)
தாயின் தோளில்
சாய்ந்து கொண்டே
குழந்தை காணும்
மலை
”மலை”யில்லாத
மலையா?

(39)

மலை கிராமத்துச் சிறுமியோடும்
மருளும் அவள் முயலோடும்
ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வேன்.

புகைப்படத்தில்
முயலைத்
தேடிப் பார்ப்பேன்.

அது
உயிர் கொண்டு
காட்டுக்குள் ஓடிப் போயிருக்குமோ?

(40)

மலைக் காட்டில்
ஏறி இறங்கி
இறங்கி ஏறி
வருந்தும் குதிரை மேல்
சவாரிக்கும் என்னைச்
சாய்ந்து பாறையில் காண்பான்
ஒரு
காட்டுச் சிறுவன்.

இரு கவண் கற்களை
என் மேல் எறிவான்.

அவன்
கண்கள் எறிந்தவை
அவை.

(41)

அவள்
வனதேவதையா?
என்று மயங்குவேன்.

என் பிடரியில் அடித்துச் சொல்லும்
காடு
”அவள்
உலர் அக்ரூட் பழங்களை விற்கும்
ஒரு மனுஷி” என்று.

(42)

காடா?
இல்லை
காட்டின்
ஒவ்வொரு மரத்தின் மேல்
ஒரு
ஆகாய வீடா?

(43)
காட்டின் மேல் பிரியம்.
என்ன செய்யலாம்?

கட்டிப் பிடிப்பேன்
ஒரு மரத்தை.

காடு
சேர்த்துக் கொள்ளும்
பிரியமாய்
நடக்கும் மரமென என்னை.

(44)

எங்கெங்கோ
என்னை அழைத்துக் கொண்டு
அலைந்து திரியும்
காடு.

களைத்துப் போய்
ஒரு
மரத்தடியில் நிற்பேன்.

காடு சிரிக்கும்
மறைந்து கொண்டு.

(45)
காடு மலையிடை ஏறி
ஒரு முகடு சேர
முன்னால்
தீராத வெறுங்கம்பளமாய்
விரிந்து கிடக்கும்
ஒரு சமவெளி.

அதன்
பொன்னிறப் பூக்கள் பூக்கும்
வசந்த காலம் இன்னும் வரவில்லை.

வசந்த காலத்தின்
சமவெளி அழகில் என்னைக்
கனவு கண்டு கொண்டிருப்பேன்
நான்.

”காடு
தன்னழகைக் கனவு காண்பதில்லை”
காலம் சொல்லும்.

(46)

விடை பெறும் சமயம்.

குதிரையோடும்

குதிரைக்காரனோடும்

வெகுகாலமாய்ப் பழகியது போல்

ஒரு பிரியம் எழும்.

அந்தப் பிரியம்

உண்மையானதாய்ப் படும்.

காட்டின் முன்னும்

மலையின் முன்னும்

உண்மையொன்றே

உரைக்க ஒண்ணும்.

அடுத்த சவாரிக்குக் காத்திருக்கும்

குதிரை மேல்

இன்னும்

என் மனம் சவாரிக்கும்.

(47)
காடும் மலையும்
கண்டு மகிழ்ந்து
விட்டு வர மனதில்லை.

“விரும்புவதால் எதுவும்
விட்டுப் போகாமலிருப்பதில்லை

விரும்பாததால் எதுவும்
விடாது வாராமலிருப்பதில்லை.

வரும் போகும்
வரும் போகும்
பறவை நீ”

காட்டின் குரல் போல்
என்னுள்
எதிரொலிக்கும் குரல்
மெல்ல மெல்ல அடங்கும்.

Series Navigationஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூபாரதி 2.0 +
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *