பர்த் டே

This entry is part 13 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒரு மாதத்திற்கு முன்பே தாமன் வரப்போகிற சுபதினத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவன் அதை மறக்காமல் இருக்க எல்லா பிரயத்தன்ங்களும் செய்தான். அதில் ஓன்று :

அந்த அடுக்கத்தில் அவனது ஓவ்வொரு நண்பர்களுக்கான பிறந்த நாள் முடிந்ததும் அவன் வீட்டின் சபையை கூட்டுவான். அன்றைய நிகழ்வு பற்றிய அவனது ஆச்சரியம், அதிசியம், ஏமாற்றம், விவரிப்பு, விளக்கம், பிரச்சாரம், அதிலிருந்து பெற்றது, கற்றது என்று அவன் லயிப்போடு பேசுகிற பாணியை வீட்டில் எல்லோரும் மெல்லிய சிரிப்போடு எதிர்ப்பார்த்திருந்தோம் என்பதே உண்மை.

சபை முடிவில் அன்றைய நிகழ்வில் அவனுக்கு பிடித்த சில விசயங்களை, தனது பிறந்த நாளுக்கான குறிப்பேட்டில் சேர்ப்பான். சில சமயம் அப்படியே, சில சமயம் சில திருத்தங்களோடு. இப்படியாக புதுப்புது ஐடியாக்கள் அந்த குறிப்பேட்டில் சேர்ந்த வண்ணமிருந்தன. அந்த பெருநாளுக்கான பிம்பத்தை, வரைபடத்தை அவன் வியந்த விழிகளோடும், துள்ளும் மனத்தோடும் குடும்பத்தாருக்கு கடை பரப்பிக் கொண்டிருந்தான்.

முதலில் கடுப்பாயிருந்தாலும், அவனது ஆச்சரியம் நிறைந்த பேச்சால் குடும்பமே கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தது. பாட்டி வெகு கவனமாய் அதை காதில் விழுங்கி ஏற்றுக்கொண்டாள், விமர்சித்தாள். தாமனின் அம்மா அரைகுறையாய் கேட்டுக் கொண்டாள். அப்பா ரமணி தனது வழமையான விமர்சனத்தோடு அதை தேவையான அளவு மட்டுமே வாங்கிக்கொண்டார்.

மற்றவர் பற்றி கவலையின்றி அவன் சதப்பிரஞ்ஞானாயிருந்தான். அவன் விவரிப்பு, வியாஞ்ஞானம், ஞாபகப்படுத்தல் மூலம் அவனது கனவை மற்றவர்களின் இதயத்தில் ஏற்றிக் கொண்டேயிருந்தான். தன்னோடு கனவில் மற்றவர்களையும் பங்கு பெறச் செய்ததில் அவன் ஓரளவு வெற்றி பெற்றான் என்றே சொல்ல வேண்டும்.

தாமனின் சபை விவாத்த்தில் சில முக்கிய நிகழ்வுகள் :

தேஜஸீன் பிறந்த நாள் விருந்தில் எல்லோருக்கும் ரிட்டன் கிப்ட் பேக்கோடு சேர்த்து பாரதமாதா படம் கொடுக்கப்பட்டிருந்தது. அவனது தாத்தா மிகுந்த தேசப்பக்தி கொண்டவர். தனது 84 வயதிலும் தினமும் காலையில் காக்கி ட்ரவுசர் போட்டுக்கொண்டு அடுக்ககத்தின் நடு புல் மைதானத்தில் சின்னதாய் ஸாகா (Saka) உடற்பயிற்சி செய்துவிட்டு, பாரதமாதாவிற்கு நின்றபடியே கழுத்தை வளைத்து நமஸ்கரித்து, அருகம்புல்லை மாட்டிற்கு கொடுத்துவிட்டு தனது காலை உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்.

புரியாதபோதும் அந்த சின்ன குழந்தைகள் கையில் பாராத மாதா படம் கொடுத்து மராத்தியில் ஒரு ஐந்து நிமிடம் பேசினாராம். ஹிந்தியில் பேசமுடியும் என்றாலும் மராத்தியில் மட்டுமே பேசக்கூடியவர். மற்றவர்கள் மராத்தி தெரியாது என்று சொன்னால் மட்டுமே ஹிந்திக்கு தாவுவார். ( எப்போதும் தாத்தா உளறுவார் என்பான் பேரன் ; ’என்ன செய்ய தாங்க முடியலை, சாரி’ அலுத்துகொள்வாள் அவர் மருமகள்)

தாத்தா கொடுத்த பாரதமாதாவை வைத்து தாமன் குழுவால் விளையாடமுடியாது. அதில் பாரதமாதா கையில் ஆயுதங்கள் வைத்திருந்தார். எல்லைகளற்று அகண்டிருந்தார். சிங்கத்தின் மேல் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார். அவன் பள்ளிக்கூடங்களில் கலரிட்டு வரையப்படும் எல்லைக் கோடுகளில் எங்கேயும் அப்படி ஒரு உருவத்தை அவர்கள் பார்த்ததேயில்லை.
ஸ்பைடர் மேனோ, ப்ளாக் மோனோ படமாயிருந்திருந்தால் அதை வைத்து விளையாடலாம். அதன் மீது அதற்கான சரியான கலர் வரையலாம். பாரதமாதாவை வைத்து என்ன செய்ய ? ஆகவே தாமன் பாரதமாதா கடவுளாயிருக்கும் என்று ஊகித்து கொண்டு சாமிப் படத்தின் பின்னால் வைத்துவிட்டான்.

மானஸ்வியின் பிறந்த நாள் அவள் அழுது அடம் பிடித்ததால் வீட்டில் வைக்காமல் ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டது. அவளின் பத்தாவது பிறந்தநாள் என்பதாலும் இதற்கு மேல் இவ்வளவு பெரிய பிறந்த நாள் வீட்டில் கொண்டாடப்பட போவதில்லை என்பதாலும், இனிவரும் பிற்ந்த நாடகள் தனது நண்பர்களுக்கான பிரத்யோகமானவை என்பதாலும் இந்த பிற்ந்த நாள் மிக ‘கிராண்டாக’ அமைய வேண்டும் என்கிற பிடிவாதத்தாலுமே இப்படி செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் அப்பா கேத்தன் மேத்தா அலுத்துக் கொண்டார்.

செலவு பட்டியல் இல்லாமல் கேத்தனுக்கு பேசத் தெரியாது என்பதால் எல்லோரிடமும் எவ்வளவு செலவானது என்பதை அலுக்காமல் சொல்லிக் கொண்டே போனார். (கித்னா கரீச்சகே சாப்.. ‘ எல்லாம் என்ன விலை விக்குது ? )

கேத்தான் பங்குச் சந்தை தரகர். எல்லா பொருட்களின் விலைப்பட்டியலும் அவருக்கு மனனம். இந்திரனுக்கு இருந்த ஆயிரம் சாபக் கண்கள் போல உடம்பெல்லாம் விலைப்பட்டியல் தொங்கும் போல. என்ன, எதையுமே உயர்த்தி சொல்லுபவர் என்பதால் அவர் சொல்கிற வார்த்தையைக் கொஞ்சம் கழிவு செய்ய வேண்டியிருக்கும்.

கிப்ட் பேக்கில் ஏதாவது பில் வைத்து அனுப்பியிருக்கிறாரோ என்கிற பயத்தில் எல்லோரும் தங்களது பையை ஒருதரம் பயத்தோடு செக் செய்து கொண்டனர்.

ராகேஸ் வீட்டில் நடந்த கர்பா ( குஜராத்தி நடனம்), சோகன் சேட்டர்ஜீ வீட்டு ரஜகுல்லாவும், தாகூர் சங்கீத், மித்ராவின் வீட்டில் அனாதை குழந்தைகளை அழைத்து அவர்களையும் விருந்தில் கலந்து கொள்ள வைத்த்து, சர்மா வீட்டில் டீவி தொடர்நடிகை வந்திருந்தது (அவர்கள் குடும்பத்து சொந்தம்), ஆதித்தாயா வீட்டு புட்டுக் குழம்பு, சங்கீத்தின் வீட்டு கேட்பரீஸ் பெரிய கிப்ட் பாக்கெட் (அவனது அத்தை காட்பரீசில் வேலை), ராவ் வீட்டில் பிறந்தநாள் போது எல்லோரும் சேர்ந்து சொல்லும் கீதை ஸ்லோகங்கள் (அடுத்த முறையிலிருந்து தனது மகனை அனுப்பமாட்டேன் என்றாள் சார்லஸீன் அம்மா- ஒரு ஆசார பிரட்டஸ்டண்ட்), சார்மிளாவின் வீட்டு புரோட்டா, சூரஜ் ஐயர் வீட்டு மைசூர் பாக்கு பொட்டலம், தன்வீஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட பெட் டைம் ஸ்டோரி புத்தகம், ஜான்வி வீட்டில் நடநத கேண்டில் லைட் நடனம் என மேலும்… மேலும்.. மேலும்..

இது போல அந்த வருடத்தில் வந்த ஓவ்வொரு பிறந்த நாளின் போதும் ஓவ்வொருவரும் செய்த புதுமைகள், புதுமைகளாக காட்ட முனைந்த சிறுமைகள் என எல்லாம் அன்றைய இரவு சபையில்
தாமனால் விவரிக்கபடும். அதற்கு செவி சாய்ப்பது குடும்பத்தினரின் கடமை. அவன் விழிகள் விரிய ஓவ்வொன்றையும் சொல்லுவான். அதோடு அதனைப் பற்றிய தனது அடிக்குறிப்பையும் சேர்த்துக் கொள்வான்.

அதிலிருந்து சிறுக சிறுக தனது பிறந்த நாளுக்கான ஒரு தயாரிப்பு வரைபட்த்தை அவன் மெல்ல மெல்ல மெருகேற்றியிருந்தான். அதை அவன் விளையாட்டாக அல்ல, கொஞ்சம் சீரியசாகவே செய்கிறான் என்பதை அவனிடம் புதிதாய் தொத்திக்கொண்ட ஒரு வழக்கம் நிருபித்த்து.

தனது ஒரு நோட்டு புத்தகத்தில் கடைசி பக்கத்தில் தனது பிற்நத நாளுக்கான குறிப்புகளை, செயல் திட்டங்களை எழுத ஆரம்பித்திருந்தான். அழைக்க வேண்டிய நண்பர்களின் பெயர்கள், அம்மா, அப்பாவிற்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் என ஒரு முழு செயல் திட்டமே இருந்தது. அந்த கிறுக்கல் புத்தகத்தை அவனது எந்த பாடப் புத்தகத்தை விடவும் பக்தி சிரத்தையாய் பாதுகாத்து வந்தான்.

அதன் குறிப்புகள் ரமணியின் நிறுவன ஆண்டு கூட்டத்திற்கான தயாரிப்பிற்கு ஓத்ததாய் இருந்தது. ஆனால் அதில் திட்டங்கள் மாறிக் கொண்டேயிருந்தன். ஓவ்வொரு நண்பர்களின் பிறந்த நாளுக்கு பிறகும் அவனது திட்டங்கள் மாறுவது குறித்து அவனுக்கும், பாட்டிக்குமான சண்டை பிரசித்தமானது.

” ஸ்லோகம் சொல்ல சொன்னா, கை வணங்க மாட்டேங்கறது.. இதுக்கு மட்டும் மணிக்கனக்கா.. உக்கார முடியாறதோ.. பர்தேடேக்கு எத்தனை நா இருக்கு.. இப்பவே உக்காந்து தலைய உடைச்சிக்கனுமா..“

“ ஸ்லோகத்திற்கு ஏன் பாட்டி கை வணங்கனும்.. வாய்தான் வணங்கனம்..ஏதாவது உளராதே.. “

“ ஆமா.. நாந்தான் உளர்றேன்.. நீ ஒழுங்கா பேசேன்.. “

“ பாட்டி.. வெறும் சிக்ஸ் மன் த் தான் இருக்கு.. எவ்வளவு வேலையிருக்கு .. உனக்கென்ன தெரியும்.. “

“ போடா.. சும்மா உளறிண்டு.. பர்த்டே பைத்தியம் பிடிச்சு அலையற.. ஒரு நா கூத்துக்கு இந்த பாட்டமா.. “

“ உனக்கு தெரியாது பாட்டி.. ஜான்வி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தா.. எப்படி பிரிப்பேர் பண்றதுன்னு.. “

”என்ன இழவோ.. ரொம்பதான் பைத்தியம் பிடிச்சு அலையறதுகள்.. பிறந்த நான்னா.. ஒரு பாயசம் வைச்சு, ஒரு கேக் வெட்டி கொண்டாடுவா.. இப்படியாடா. இந்த ஊர்ல எல்லாமே. கோசம் தான்.. காசு கொழுப்புடா.. எல்லாம் தலை, கால் தெரியாமன்னா ஆடறதுகள்.. ஹீம்.. ‘ ரமணயிடம் அவன் அம்மா அலுத்துக் கொள்வாள்.

பேச்சில் தான் அலுப்பு. ஒரு பிறந்த நாள் முடிந்து வரும் பேரனிடம் பாட்டிதான் முதலில் கேட்பாள்.

‘என்னடா.. இன்னிக்கு என்னடா.. சாப்பாடு போட்டா.. “

பழைய சண்டைகளை மறந்து தாமன் ஆரம்பிப்பான்.

“ புதுசா.. பாவ் பாஜி போட்டா பாட்டி.. அப்புறமால்ல.. ஒரு சாக்கெலேட் கொடுத்தா.. “

“ ஆமா.. ஒரு பீத்த சாக்லெட்டு.. உங்கம்மாதானே ஓவ்வொரு வாரமும்.. அந்த பவ்வு பாஜியா.. பண்ணி போட்டுண்டே இருக்காளேடா… “ தனது அதிருப்தியின் மூலமே சம்பாசணையை தொடருவது அம்மாவின் வழக்கம். சாப்பாடு பற்றி குற்றப் பத்திரிக்கையில் அம்மாவின் தேர்ச்சி பிரசித்தம். வயிறு நீண்டு வாயானதோ ? என்று குழம்புமளவுக்கு.

“ இதுக்காதான் போனியாக்கும்.. வேற என்னடா கொடுத்தா.. “

பேசியபடியே ரிட்டர்ன் கிப்டை பிரித்துப் பார்ப்பாள்.

“ ரித்திசுவேட்தாடா.. எம்புட்டு பணக்காரா.. முனு காரு வெச்சிண்டிருக்கான்.. வெறும் நாறக் கலர் பென்சிலை கொடுத்திருக்கு பாரு.. ஈசுவட்டி கஞ்சம்னா இது.. “

” ஒரு ச்மோசா வெச்சு கொடுத்திருக்க பாரு ஜான்வி அம்மா.. என்ன சமத்திடீ.. இது என்ன குழந்தைக்கு காணுமா.. போன தடவை வந்தப்ப்போ அந்த பொண்ணே நாலு வடை முழுங்கித்து.. என்ன கணக்கு போடறதுகளோ.. ”

” புரோக்கர் மாமா என்ன தான் பேசினாலும்.. ஓவ்வொரு தடவையும் என்னமா ஐடியா பண்ணி கொடுக்கறா பாரேன்..போன வருசத்து முந்தின வருசம் ரப்பர் பாத் டாப்பு, போன வருசம் டைம் வைச்ச பேனா, இந்த வருசம் சின்ன வெயிட் போர்டுன்னு.. புதுசு புதுசான்னா கொடுக்கிறான்.. சைனா மாலா இருக்கும் போல.. என்னயிருந்தா என்ன.. கொடுக்கிறானே.. “

” என்னடா.. சித்தேசு அம்மாவா.. அவளுக்கு என்ன சமைக்கத் தெரியும்.. எல்லாதுக்கும் வெளியிருந்து ஒரு டப்பாவை வாங்கி கொடுத்திருவள். இங்கதான் எல்லாம் டப்பால இருக்கே. ஒரு வடாபாவ்வு, ஒரு ஸ்வீடு, ஒரு டோக்ளான்னு.. எல்லா வருசமும் இப்படித்தான்.. எல்லாத்தையும் டப்பால கொடுத்தாதனே.. அவளும் பாவமும் எல்லோரோட சேர்ந்து ஆடமுடியும்.. என்ன கரும்ம்டா அது.. பங்காராவா.. இந்த உடம்பு வெச்சிண்டு எப்படித்தான் ஆடறாளோ.. “

“ மித்ராவோட அம்மா தானே.. பேச்சு தான் பெத்த பேச்சு..மதர் தெரஸா மாதிரி பேசுவள்.. பாரு.. பீஸா துண்டுல பாதி போட்டிருக்கா.. என்ன மூலைக்கு காணும்.. மூதிகளுக்கு மூலை எங்க போச்சோ ? முடியலைன்னா.. என்னதுக்கு காமிக்கணும். பாவம்.. குழந்தைகள் பிடிச்சிருக்குன்னா. .கூட கேக்காதோ.. ? “

“ தேஜஸ் தாத்தா கிழம் இந்த வருசம் என்னடா பேத்தித்து ? “

பின் தொடரும் வார்த்தைகள். விவாதங்கள். சபை குறிப்புகள். ரமணி அம்மாவிற்கும், தாமனுக்குமான அந்த உரையாடல், விவாதம் முடிவில் தாமன் அதிலிருந்து சில யோசனைகளை, குறிப்புகளை தனது பிறந்த நாள் தயாரிப்பு குறிப்பேட்டில் குறித்து/கிறுக்கி கொள்வான்.

அவர்களது விவாதம் பெரும்பாலும் சண்டையிலும் அஸ்வத் அழுகையிலும் முடிவடைந்தாலும், அந்த குறிப்பேடு அப்டேட் செய்யும் வேலை தடைபடவேயில்லை.

*

பிறந்த பெருநாள் விழாவிற்கு ஒரு மாதங்களுக்கு முன் அவனும் பாட்டியும் சேர்ந்து தயாரித்த குறிப்பு ஒரு முடிவுக்கு வந்து அது ஒரு ஞாயிறின் சாயங்கால வேளையில் ரமணியின் நல்ல மூடு தெரிந்து அவன் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட்து.

ரமணிக்கு குறிப்பை பார்த்து கிட்டதட்ட மயக்கம் வந்தது. குழந்தை முன் எதுவும் சொல்ல வேண்டாமென்று ‘ சரி அப்புறம் பேசிக்கலாம் ‘ என்றபடி தனது மடிக் கணனியில் தஞ்சம் புகுந்தான். தாமன் தூங்கியபின் ரமணி தன் அம்மாவிடமும், மனைவியிடமும் சண்டை போட்டான்.

“என்னம்மா.. அவந்தான். ஏதாவது சொல்றான்னா.. நீயும் அவனோட சேர்ந்து.. பிறந்த நாளைக்கு போயா இவ்வளவு செலவு செய்வா.. ஒரு லிமிட் வேண்டாமா.. “

ரமணியால் கொடுக்க முடியாது என்பதல்ல..இப்படி செலவழித்து பணத்தின் அருமை தனது தவப் புதல்வனுக்கு தெரியாமல் போய்விடுவோமோ என்கிற மத்திமர் தந்தையின் பயத்தால் எச்சில் பட்டிருந்தான். அந்த பயம் அவனை எங்கெங்கோ இழுத்து சென்றிருந்தது. செலவு, கட்டுப்பாடு என்கிற இரு எல்லைகளுக்குள் அவ்வப்போது ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலமாய் அவன் அசைந்து கொண்டிருந்தான்.

ரமணியின் அம்மாதான் முழுமையாய் தெளிவாயிருந்தாள்.

“ சும்மாயிருடா.. பணத்தை சேத்து வைச்சு.. வைச்சு.. என்ன பண்ணப் போறேள்.. அது பிரதிவந்தமா.. நினைச்சு நினைச்சு எழுதியிண்டுருக்கு.. “

திருப்பி படித்துப் பார்த்தேன். குறைந்தது எழுபது நபர்கள், குழந்தைகள் பெரியவர்கள் சேர்த்து. பார்ட்டி, நேரம் போட்டிருந்தான். நண்பர்களின் பெற்றோர்களின் அலைபேசி எண்கள். அது நீளும் என்பதற்காக கொஞ்சம் இடம் விட்டு அடுத்த பக்கம் எழுதப்பட்டிருந்த்து.

இருப்பிடம்
எல்லோரது வசதி பொறுத்தி புதன் கிழமைக்கு பதிலாக வெள்ளி இரவு அந்த பார்ட்டி மாற்றப்பட்டிருந்த்து. முக்கியமாக எழுபது பேர் வீடு தாங்காது என்பதால் பார்ட்டி வீட்டில் இல்லை. பக்கத்து ஹோட்டலின் சின்ன பார்ட்டி அறையில். மானஜ்விக்கு பிறந்த நாள் நடந்த அதே ஹாலில். [ அடுத்த சில பக்கங்களில் அந்த ஹோட்டல் எண், அதன் நான்கு மணி நேர வாடகை, அதன் அலங்கரிப்பிற்கான கூடுதல் விலை, அதோடு இந்த மாதிரி விழாக்களை நட்த்து இவெண்ட் மேனேஜரின் எண், மற்றும் அதற்கான விலை – எல்லாம் எழுதியிருந்தது. விலை குறிப்புகள் அங்காங்கே சிதறியிருந்த்து.

இது மனைவியின் கைங்கர்யம். எதையும் ஒரு சேர சொல்ல மாட்டாள். சின்ன சின்னதாய் சொல்லி மொத்த விலையை மறக்க வைக்கும் ரகசியம். எல்லா விலையும் சொன்னது போலவும் இருக்கும் மொத்த விலை சொல்லாதது போலவும் இருக்கும் ]

பரிசு
அதற்கு அடுத்த பக்கம் தாமன் கிறுக்கியிருந்தான். அது ரிடர்ன் கிப்ட் பக்கம். அதாவது விருந்திற்கு வந்து பரிசு கொடுப்பவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டிய பரிசு. இதில் தான் விருந்து நட்த்துபவரின் கெளரவம், புத்தியூக்கம், புதுமை எல்லாம் அடங்கியிருக்கிறது. இதுவே அடுத்த ஒரு வாரம் பேசு பொருளாக அவர்களது வித்வ ஞான சபையில் இடம் பெறும். இதை வைத்து கொஞ்சம் மரியாதை, சில சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. எல்லா பொருட்களும் அலசப்பட்டு இதுவரை யாரும் கொடுக்காத ஒரு பரிசு தேர்வாகாயிருந்தது.

ரிட்டர்ன் கிப்ட் பே ப்ளேடு – குறைந்தது 35. லைட்னிங் எல் ரேகோ[வெயிட்- ராயூகா -11 ], ஸ்டார்ம் பெகசிஸ்[புளு, ஜீங்கா அஹானே – 14 ], ராக் எரிஸ்[டார்க் பிரெளன், ஓஸ் – 7 ], ஃப்ளேம் லிபரா [எல்லோ, யூ – 3].

மிக நெருக்கமான ஐந்து நண்பர்களுக்கு டிரான்ஸ்பார்மர் [ அக்டோமஸ் பைரம், பம்பள் பீ ]. சிலருக்கு கிரிக்கெட் வீர்ர்களின் சீட்டு போல அவர்களின் தரவரிசை கொண்ட கார்டுகளும் உண்டு.

இதில் விருந்துக்கு வரமுடியாத ஆனால் நெருங்கிய பள்ளி நண்பர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

பெண் குழந்தைகளுக்கு பிங்க் நிற கைக்குட்டை, ஸ்கார்ப் – எந்த உடை மீதும் அப்படியே பின் வைத்து குத்தி கொள்வதற்கு ஏற்ப மாடர்ன் பின், சின்னதான லிப்ஸ்டிக் செட். என் மனைவியின் யோசனையாயிருக்கும். இந்த சாக்கில் மேலும் சில பல அழகு உபகரணங்கள் அலங்கார மேசையை அலங்கோலப்படுத்தலாம்.

உணவு

வடக்கத்திய மற்றும் தெற்கத்திய உணவு பதார்த்தம், மற்றும் எல்லோரும் சுவைக்கும், ரசிக்கும் பொதுவான ஐயிட்டங்கள், ஐஸ்கீரிம், சேவ் பூரி, பானி பூரி ஐட்டங்கள், அமுல் பீஸா.

வடக்கத்திய அயிட்ட்த்தில் – சப்பாத்தி, பூரி, ஸீரிகண்ட, டால், இரு சப்ஜிகள். தெற்கத்திய அயிட்ட்த்தில் சூடச் சுட தோசை, மசால தனி கிண்ணத்தில். தேவையெனில் தோசையோடு சேர்த்து போட்டு கொடுக்கப்படும். கிட்ட்த்தட்ட மூணு வகை தோசை. வடை. சாம்பார், சட்னி தனி.

ஜெயின்காரர்களுக்கு வெங்காயம் இல்லாமல் எல்லா அயிட்ட்த்திலும் கொஞ்சம் தயார் செய்து தனியாக வைக்கப்படும்.

[ இது கண்டிப்பாய் அம்மாவின் கைங்கர்யமாகத்தானிருக்க வேண்டும். ஓவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும், எந்த குழந்தை எதற்கு ’பேயா’ பறக்கும் என்று அவளுக்கு அத்துப்படி. இந்த உணவுப் பட்டியல் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளின் ரசனையையும் உள்ளடக்கியிருந்தது. அவைகளே ஒரு ஹோட்டலில் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்யும் வகையில் அது அமைந்திருந்தது ]

அடுத்த சில நாட்களில் ரமணி கோபத்தில் கொஞ்சம் கத்தி, உண்ணாவிரதம் இருப்பதாய் தாமனுக்கு பூச்சாண்டி காட்டிய செய்கைகள் அனைத்தும் நிழலுக்கு இறைத்த நீர். தாமனும், பாட்டியும், மனைவியும் எதற்கு அஞ்சாத முழுப் பலம் கொண்ட அரசாஙகம் போல நடந்து கொண்டார்கள்.

அம்மாதான் பாவம் பிள்ளையேன்று தூதுக்கு வந்தாள்.

” அதெல்லாம் சரிம்மா.. இதோட செலவு என்னன்னு தெரியுமா.. எதுக்கும் ஒரு லிமிட் வேணாமாம்மா.. என்னம்மா ஒரு பூணுல் செலவுக்கு இழுத்து விடச் சொல்றியேமா.. அப்டரால் ஒருநா இவெண்டும்மா.. “

“ எனக்கும், உனக்கும் பூணூல், பெரிசுடா.. இதுகளுக்கெல்லாம் இதாண்டா பெரிசு.. நூலை மாட்டிண்டு ஸ்டாண்டில் தொங்க விடறதுக்கா அவ்வளவு செலவு பண்ணப் போறாள். அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது.. அவளோட சந்தோசம்தாண்டா பிரம்ம்ம்.. போ..

தான் செலவு செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்து டூர் போனதற்கப்புறமும் அவர்கள் சொன்னபடியே பார்ட்டி செய்திருந்தார்கள். ரமணி அன்றைய தினத்தில் மிக தாமதமாக அலுவலக வேலையிலிருந்து வந்து கலந்து கொண்டான், விருப்பமேயின்றி.

அம்மா தன்னிடம் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவழிக்க சொன்னதாக மனைவி சொன்னாள். தான் கொடுக்கிறேன் சொன்னபோதும் வேண்டாமென்று தீர்மானமாய் மறுத்து விட்ட்தாகவும் இந்த முறை நானே முழுக்க செய்கிறேன் என்று சொன்னதாகவும் சொன்னாள்.

அன்று ரமணியைத்தவிர எல்லோரும் மும்மரமாயிருந்தார்கள். மொழி தெரியாவிட்டாலும் அம்மாவிற்கு குழந்தையின் வயிறு தெரிந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு வந்து அதே குற்றப் பரணி பாடிக்கொண்டிருந்தாள்.

“ என்னமா.. திங்கறதுகள்டா.. இது.. வயிறா. வண்ணாந் தாழியா.. அதுதான்.. பெருத்து அலையறதுகள் ..”

ரமணி தன் பங்கு இல்லாமல் நிகழ்ந்த அந்த நிகழ்வால் இன்னும் கனமாய்த்தான் உண்ர்ந்தான். திடமாயிருந்த அந்த கனம், அடுத்தநாள் வந்து தாமன் அதை சொன்னபின் திரவமாயிற்று.

*

“ பாப்பா.. கல் து குச் புல்கயா.. [ நேற்று ஒன்று மறந்துவிட்டாய். ]

ரமணி எதுவும் சொல்லாத்தால், அவனே ஒரு முத்தம் கொடுத்து சொன்னான்.

“ ஓவ்வொரு பிறந்த நாளும் கேக்வாயோடு நீ கொடுக்கும் முத்தம் “

ரமணிக்கு கலங்கியது. யாருக்கும் தெரியாமல் அடக்கியும் அம்மா அதை கண்டுபிடித்து சொன்னாள்.

“ நீ உங்கப்பா மாதிரி.. உலக ஞானத்தை உங்க தலையில தாங்கறா. மாதிரி.. இலகுவா.. குழந்தை மாதிரி இருக்க பாருங்களோண்டா.. “

*

MIME-Version: 1.0
Received: by 10.142.165.4 with HTTP; Thu, 30 Feb 2012 01:55:17 -0800 (PST)
Date: Thu, 30 Feb 2012 15:25:17 +0530
Delivered-To: raamani1973@gmail.com
Message-ID:
Subject: = நல்ல கதை -8?B?4K6V4K6f4K+N4K6f4K+B4K6w4K+IIC0g4K614K6y4K+I4K6vIOCupOCus+CupOCvjeCupA==?=
=?UTF-8?B?4K6/4K6x4K+N4K6V4K6+4K6VLi4=?=
From: S khannan Ramesh
To:
Content-Type: multipart/alternative; boundary=000e0cd23edaf9aab104bab84552

Hi Mani,

உன் பர்த்டே கதையை படித்தேன்.. ரொம்பவே அருமை.. உனக்கு இன்னொரு செய்தி இது சார்ந்து சொல்ல்லாம் என்றுதான் எழுதினேன். நேற்று உன் கதையை பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது, நடந்த இன்னொரு செய்தியையும் பிரனவ் சொன்னான்.

போனதடவை பிரனவ், துருவ் உன் வீட்டிற்கு வந்திருந்த போது, துருவ்விற்கு அன்று பர்த்டே.. ஒரு சர்ப்பரைசிற்காக யாரும் வெளியெ சொல்லவில்லை. அவர்கள் சொன்னபோது தாமன் ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தானாம்.

பிறந்தநாள் செய்தி அப்போது கசிந்துவிட, தாமன் அவனது விழிகள் விரிய சடக்கென்று தனது பிக்கி பேக்கிலிருந்து ( piggy bank) கையில் கிடைத்த்தை அள்ளி கொடுத்தானாம்.. பின் கைகொடுத்தபடி ஸ்கூலுக்கு ஓடினானாம்.

துருவிற்கு இன்னும் அந்த குழந்தைத்தனம் நிறைந்த செய்கை நெகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. எந்த பணத்தையும் உடனே உணவாய் மாற்றி உள்ளே தள்ளும் துருவ் இன்னம் அந்த 47 ரூபாய், 50 காசுகளை அப்படியே வைத்திருக்கிறானாம்.

குழந்தைகளை நமது தந்தைகளை போல் நாம் பிரிந்து கொள்வதேயில்லை. நாம் புரிந்து கொண்ட்தாய் நினைப்பது நமது புரிதல் மட்டுமே அது எப்போதுமே முழுப்புரிதல் இல்லை. அப்படியான முழுப்புரிதல் என்பது எப்போதும் இருக்காது போல.

அம்மாவிற்கு என் பிரனாம். மனைவிக்கு என் விசாரிப்பு. தாமனுக்கு என் முத்தங்கள்.

அடுத்த கான்பரன்சுக்கு வரும்போது கண்டிப்பாய் என்ஒய்ற்கு (NY) ஒரு விசிட் அடி…. ஏதாவது நல்ல தமிழ் புத்தகங்களை கொண்டு வா..

பை.. டேக் கேர்.
கண்ணன்.

–000e0cd23edaf9aab104bab84552–

*

அடுத்த பிறந்த நாளுக்குள் அம்மா போய்விட்டாள். ஏனோ அதற்கு பிறகு தாமனும் பிறந்த நாள் கொண்டாடுவதில் எந்த விருப்பமும் காட்டவில்லை. அவனோடு சண்டையிட, விவாதிக்க யாருமில்லாதது ஒரு காரணமாயிருக்கலாம்.

இல்லையெனில் இதையெல்லாம் தாண்டி அவன் வேறு உலகத்திற்கு வளர்ந்திருக்கலாம்.

Series Navigationஅக்கரை…. இச்சை….!வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
author

மணி ராமலிங்கம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    திரு.மணி ராமலிங்கம்,
    தங்களது கதை நல்ல நடையோடு யதார்த்தமான குழந்தைகளின் உணர்வை படம்பிடித்ததோடு..
    பெரியவர்களின் மனநிலையையும் அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீர்கள். பாட்டிக்கும் பேரக்
    குழந்தைகளுக்கும் இருக்கும் ஒரு உன்னத பாசத்தை அழகாக விளக்கி இருக்கிறீர்கள். கதையின் இறுதியில்
    மனது நெகிழ்ந்தது. இது தான் நிஜமான நேசம். பர்த்டே அருமை.
    நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    வளர்பிறை says:

    இக்கதை சொல்வனம் இதழிலும் வெளியாகியிருக்கிறதே ! ஆனால் அதில் எழுதியவரின் பெயர் கே ஆர் மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *