வாத்தியார் வேணு நாயக்கருக்குக் கலியாணம்.
வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல. கழி சுழற்றவும் பிடிகள் போட்டு எதிராளிக்கு முதுகில் மண் ஒட்டச் செய்யவும் கற்றுக்கொடுக்கிற வாத்தியார். அதனாலேயே அவருக்கு வாலிப வயது சிஷ்யப் பிள்ளைகள் அதிகம். ஆனால் வாத்தியார் வேணு கவிஞருக்கு சீடர் மாதிரி. கவிஞரிடம் பாட்டுக் கட்டப் படிப்பதெல்லாம் அவரால் நடக்கிற காரியம் இல்லை. கவிஞரிடமும் வேணுவுக்குக் கற்றுக் கொடுக்கும்படியான வித்தை எதுவும் இல்லை. சொல்லப் போனால் கவிஞர்தான் வேணுவிடம் சில உடற் பயிற்சி முறைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் கவிஞரைக் கண்டாலே வாத்தியார் வேணுவுக்கு எங்கிருந்தோ அசாத்தியமான ஒரு பணிவு வந்துவிடும். கைகளைக் கட்டிக்கொண்டு, ஓரடி பின்வாங்கியே நிற்பார். இந்த மாதிரி மரியாதையெல்லாம் தேவையில்லை என்று கவிஞர் பலமுறை சொல்லியும் வேணுவிடம் எவ்வித மாற்றமும் இல்லை. அதனால்தான் கவிஞருக்கு அவர் சீடப் பிள்ளை மாதிரி.
புதுச்சேரியில் பேட்டைக்குப் பேட்டை மணல் பரப்பிய ஒரு கொட்டடி இருக்கும். ஒரு வாத்தியாரும் இருப்பார். இளைஞர்கள் அங்கு சிலம்பம், மல்யுத்தம் என்றெல்லாம் பழகுவார்கள். அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்கள். அப்படியொரு கொட்டடியைத்தான் வேணு நாயக்கரும் நடத்திக்கொண்டிருந்தார்.
கவிஞர் வாத்தியார் வேணுவை உஸ்தாத் என்று முதல் முதலில் அழைத்தபோது ‘அப்டீனா என்னங்க’ என்று பவ்வியமாகக் கேட்டார், வேணு.
“ஹிந்துஸ்தானியில உஸ்தாதுன்னா வாத்தியார்னு அர்த்தம். அதத்தான் இங்கல்லாம் வஸ்தாதுன்னு சொல்லறாங்க. எந்தக் கலையைக் கத்துக் கொடுக்கிறவரும் உஸ்தாத்தான். ஆனா இங்க வஸ்தாதுன்னா பயில்வான்தான்னு ஆகிப்போச்சு” என்றார், கவிஞர்.
“இங்கே வேதபுரத்திலே நீங்க பேட்டைக்குப் பேட்டை ஒருகாலி மனைக்கு வேலி கட்டி மணல் கொட்டி குஸ்தி, சிலம்பம் னெல்லாம் வாலிபப் பிள்ளைகளுக்குக் கத்துக் கொடுக்கிற மாதிரி வடக்கே, முக்கியமா ஹிந்துஸ்தானி வழங்கற இடங்கள்ள எல்லாம் பிரம்மசாரி சந்நியாசிகள் உஸ்தாதுகளா இருந்து இளைஞர்களுக்குப் போர்க் கலைகள் எல்லாம் கத்துக் கொடுக்கிறது. உண்டு. அவங்க நடத்தற பயிற்சிக் கூடங்களுக்கெல்லாம் அக்காடானு பேரு. காலங் காலமா இருந்து வர நம்ம கலாசாரத்தையும் நாசம் செய்யற அந்நிய தீய சக்திகளை யெல்லாம் அடிச்சு விரட்டணும்னே பயில்வான் சந்நியாசிகள் அந்தப் பயிற்சிக் கூடங்களை நடத்தி வந்ததால துறவிகளோட ஆசிரமங்களுக்குக்கூட அக்காடான்னு பேராகிப் போச்சு. இங்க உன்னை மாதிரி உஸ்தாதுகள் வஸ்தாதுகள் ஆகிப்போன மாதிரி!”
அந்த வஸ்தாதுக்குத்தான் இப்போது கலியாணம். திருமணம் சடங்கு சம்பிரதாயப் பிரகாரம்தான் நடந்தது என்றாலும் பிற்பகலில் மணமக்களையும் விருந்தினரையும் மகிழ்விக்க வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தன. வாத்தியாரின் சீடர்கள் உடற் பயிற்சிகளையும் மல்யுத்த சாகசங்களையும் சபையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த கவிஞருக்கு செய்து காட்டி மகிழ்வித்தார்கள்.
“சுப்பு, நீதான் நல்லா பாடுவியே, எல்லாருக்கும் இப்பக் கொஞ்சம் பாடிக்காட்டு பார்க்கலாம்” என்று கூட்டத்தோடு அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்துச் சொன்னார், புது மாப்பிள்ளை வேணு.
சுப்பு என்று அழைக்கப்பட்ட இளைஞர் நடுவே வந்து கம்பீரமாக நின்றார். எடுத்த எடுப்பிலேயே குரலை உச்ச ஸ்தாயியில் தூக்கி ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்று ஆரம்பித்தார்.
விருந்தினர் மத்தியில் பிரதானமாக அமர்ந்திருந்த கவிஞர் மெல்லப் புன்னகைத்தார்.
சுப்பு பாடப்பாட அங்கே இருந்தவர்களுக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறத் தொடங்கியது.
‘மண்ணிலின்பங்கள் விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?’
என்று அவர் தொடர்ந்தபோது அங்கே உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகலாயிற்று.
‘வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?’
என்று அவர் முடித்தபோது அவர்கள் உடல் சிலிர்த்தனர்.
“இன்னும் பாடு சுப்பு” என்றார், வேணு நாய்க்கர்.
‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலி வாணர்களும்’ என்று அடுத்த பாட்டை ஆரம்பித்தார், சுப்பு. கவிஞர் இப்போது முகம் மலரச் சிரித்தார்.
சபையில் முப்பதுபேர்போலத்தான் இருந்தார்கள். அவர்களில் சுமார் இருபத்தைந்துபேர் கவிஞரையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை சுப்பு கவனிக்கத் தவறவில்லை. மனசுக்குள் ‘யார் இந்த அதிசயப் பிறவி’ என்று ஒரு ஆச்சரியம் கிளர்ந்து கொண்டுதான் இருந்தது.
சுப்பு ஏற்கனவே நகரின் பல இடங்களிலும் ஊருக்கு வெளியேயும் அவரைப் பார்த்ததுண்டு. ரவிவர்மா போட்ட பரம சிவன் படம் ரத்தமும் சதையும் உயிரோட்டமுமாக வந்ததுபோல் காணப்படும் இவர் யாராயிருக்கும் என்று அப்போதெல்லாம் வியந்ததுண்டு. ஆனால் அதென்னவோ யாரிடமும் விசாரிக்கத் தோன்றிய தில்லை.
இன்று அதே ரவிவர்மா போட்ட பரமசிவன் படம் வேணு நாயக்கர் திருமணத்துக்கு வந்து ஒரு பிரதான விருந்தினருக்குரிய மரியாதையைப் பெற்று வருவதையும் சுப்பு முதலிலேயே பார்த்துவிட்ட போதிலும். சமயம் வரும்போது வாத்தியாரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று அப்போதைக்குச் சும்மா இருந்து விட்டார்.
சுப்பு பாடி முடித்ததும், வேணுவே அந்த ரவிவர்மா பரமசிவத்தின் பக்கத்தில் நின்றுகொண்டு, “சுப்பு, இங்க வா” என்று அழைத்தார்.
சுப்பு ஆர்வத்துடன் அருகே சென்றதும் “ஐயா யாரு தெரியு தில்லே” என்று கேட்டார்.
சுப்பு ‘தெரியாது’ என்று பதில் சொல்வதற்குள் கவிஞர், “நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?” என்று விசாரித்தார்.
“ஏதோ கொஞ்சம்” என்றார் சுப்பு, அடக்கத்துடன், ஏனென்று புரிபடாமலேயே. அவர் முன் தமிழில் வித்துவான் கல்வி பெற்றவன் என்று தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்வது பொருத்தமின்மைபோலத் தோன்றியது..
“நன்றாக உணர்ந்து பாடுகிறீர்கள்” என்று பாராட்டினார், கவிஞர்.
“சுதேச கீதங்கள் பாட்டுப் புத்தகம் வெச்சிட்டிருக்கேன். அதுல உள்ள எல்லாப் பாடல்களுமே எனக்கு மனப் பாடம். அந்தப் பாட்டுகள்ள சிலதுதான் இப்ப நா பாடினது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார், சுப்பு.
“அட, அப்படியா” என்று ஆச்சரியப்படுவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார், கவிஞர்.
அதற்குள் வாத்தியார் வேணு அடக்க மாட்டாமல் சிரித்தபடி, “அட, நீ ஒண்ணு! அந்தப் பாட்டையெல்லாம் போட்டதே இவருதானே! அவர்கிட்டயே போய் அளக்கறியே, தேன்சிட்டுகிட்டப் போயி தித்திப்பைப் பத்திப் பேசறாப்பல” என்றார், ஏளனமாக.
கவிஞர் உரத்த குரலெடுத்து நகைத்தார். சுப்புவுக்கு மயக்கமே வந்துவிடும்போலிருந்தது. ஒரே சமயத்தில் களிப்பு, வியப்பு, அதிர்ச்சி, வெட்கம், அச்சம் என உணர்ச்சிகளின் தாக்கம் முழு வீச்சில் புறப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“இவர் பேரு சுப்பு ரத்தினம் சாமீ. கனகன்னு அப்பா பேர்ல உள்ள மூணு எழுத்தைப் பேருக்கு முன்னால போட்டு கனக சுப்புரத்தினம்னு பேரைப் போட்டுக்குவாரு.”
“ஓகோ.”
சுப்பு என்கிற கனக சுப்பு ரத்தினம் அபோதுதான் பிரக்ஞை வந்ததுபோல் கவிஞரைக் கை கூப்பி வணங்கினார்.
“வேணு, நீ ஏன் இதுவரை நம்ம வீட்டுக்கு இவரை அழைச்சிட்டு வரலே?” – சிறிது கோபம் தெரியக் கடிந்துகொண்டார், கவிஞர்.
“தப்புதான். ஏதோ நேரம் வாய்க்கலே. நாளைக்கிக் காலம்பரவே அழைச்சிட்டு வந்துடரேன்” வாத்தியார் வேணு வாக்களித்தார்.
நாளைக்குக் காலையிலேயிலேயே அழைத்து வருகிறேன் என்று வேணு சொன்னதைக் கேட்டதுமே சுப்பு மேகத்தில் மிதக்கத் தொடங்கிவிட்டார்.
அன்றிரவெல்லாம் மறுநாள் அந்த ரவிவர்மா படப் பரமசிவனோடு தனிமையில் பேசப் போகிறோம் என்கிற நினைப்பில் உறக்கம் பிடிக்கவில்லை.
பொழுது விடிந்த சுருக்கில் வேணு நாயக்கருடன் சுப்பு ரத்தினம் கவிஞர் வீட்டு மாடிப்படியேறிச் செல்லும்போதே மேலேயிருந்து பாட்டுக் குரல் கேட்டது. பழக்கமான குரல்தான். மாடி அறையில் சிவா நாயக்கர், கோவிந்த ராஜுலு நாயுடு, ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரின் தம்பி சுவாமிநாதன் எனக் கவிஞரின் அபிமானிகள் அவரது பேச்சுத் திறத்தில் திளைப்பதற்காக வந்து கூடி யிருந்தார்கள். கவிஞர் சொல்லித்தானோ என்னவோ, சிவா நாயக்கர் கவிஞரின் பாடல் ஒன்றை உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்தார்.
இவர்கள் தலை தெரிந்ததும், ‘வாங்கோ, வாங்கோ’ என்று பாசத்துடன் வரவேற்றார், கவிஞர். “உட்கார்ந்து குயில் பாடறதைக் கேளுங்கோ” என்று உபசரித்தார்.
சுப்பு ரத்தினத்துடன் கவிஞர் பேச்சுக் கொடுத்தார். பிரபல தமிழ் வித்துவான் பங்காரு பத்தரின் மாணாக்கர் என்றும், மகா வித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை நடத்தி வரும் கலைமகள் இலக்கியக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருபவர் என்றும் கேட்டறிந்தார்.
“தமிழ் படிச்சிருக்கேங்கறீரே, எதாவது எழுதறதுண்டா” என்று விசாரித்தார், கவிஞர்.
“நானும் எழுதுவதுண்டு. ஆனால் எல்லாம் பண்டிதத் தமிழில் லேசில் உச்சரிக்க வராத செய்யுள்கள்தான். கவனம் இலக்கியத்தைவிட இலக்கணத்தில்தான் இருக்கும். சாரமில்லே” என்று கூச்சத்துடன் .சொன்னார், சுப்பு ரத்தினம்.
“அதனாலென்ன, நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு அப்படி எழுதியவந்தான். கவிதை பிடிபட்டுவிட்டால் அப்புறம் எல்லாம் சரியாகிப் போகும்” – சமாதானம் சொன்னார், கவிஞர். பிறகு, தனியாக ஒரு மூலைக்குச் சென்று எழுதும் முயற்சியில் இறங்கினார்.
சுப்பு ரத்தினத்துக்கு மற்றவர்களுடன் பேச்சுக் கொடுப்பதில் மனம் செல்லவில்லை. அங்கே பாயில் கிடந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை மெதுவாக எடுத்துப் புரட்டினார். ஒவ்வொரு பக்கமும் மணி மணியான எழுத்தில் அருமையான பாடல்கள்! கவிதை என்பது எவ்வாறு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் என்று ஒருவாறு புலப்படுவதுபோல் தோன்றியது.
சுப்பு ரத்தினம் நோட்டுப் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டதை கவனித்த சிவா நாயக்கர், “இவரு அதிகம் தமிழ் படிச்சவர் சுவாமி” என்றார்.
“இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்க முடியும்?” என்று சிரித்த கவிஞர், சுப்புவை அன்பொழுகப் பார்த்தார்.
அன்று வெகு நேரம் கவிஞருடன் பொழுதைப்போக்கிய பின்னரும் மனம் நிறைவடையாமல் அவரைப் பிரிய மனமின்றியேதான் விடை பெற்றுக்கொண்டார், சுப்பு ரத்தினம்.
“அடிக்கடி வந்து போய்க் கொண்டிரும்” என்று வழியனுப்பி வைத்தார், கவிஞர்.
கவிஞரின் அந்த வார்த்தைகள் அளித்த தைரியத்தில் அவர் வீட்டுக்குப் போவதை வாடிக்கையாக்கிக் கொண்டார், சுப்பு ரத்தினம். கவிஞரின் சுதேச கீதங்களைப் படித்த போதே பாடல்கள் இன்னவாறுதான் இருக்க வேண்டும் என்கிற புரிதல் அவருக்கு ஏற்பட்டுவிட்ட போதிலும், அவை பிரசாரத்துடன் எழுதப் பட்டதால் மக்களுக்கு எளிதில் விளங்கும்படியாக எழுதப்பட் டிருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கவிஞர் எழுதுவது எல்லாமே எளிய சொற்களின் பலத்தில் நிற்கக் கண்டு அவருக்குக் கவிதையின் முகம் மனதில் மெல்ல மெல்லப் பதிய ஆரம்பித்தது. அவரும் அதே வழியில் எழுதத் தொடங்கி னார். ஆனால் அவருக்கே அவையெல்லாம் திருப்தி அளிப்பதாக இல்லை. எழுதிய சுருக்கில் உடனுக்குடன் கிழித்தெறிந்து கொண்டிருந்தார்.
நுரைத்து மடங்கி விழும் அலைகளை இடையறாது அனுப்பிக் கொண்டிருக்கும் நீலக் கடலைக் கரை மணலில் நின்று கண்ணயராது நோக்கியவாறு நேரம் போக்கியும், நள்ளிரவுகளில் அண்ணாந்து கரிய வானில் இறைந்துகிடக்கும் வெளிச்சப் புள்ளிக் கோலங்களைப் பார்த்தவாறும், சில போதுகளில் மழை மேகங்கள் உராய்ந்து மின்னல் தெறிப்பதைக் கண்களில் வாங்கிக்கொண்டும் காலங் கழித்தபின் சிறுகச்சிறுக அவருக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக, கவிதையின் லட்சணங்களுடன் ஒரு பாடல் அமைந்தது. இதை எப்படியும் கவிஞரிடம் காண்பித்துவிட வேண்டும் என்று துணிவை வரவழைதுக்கொண்டு புறப்பட்டார்.
கவிஞர் வீட்டு மாடியில் எப்போதும்போல் சபை கூடியிருந்தது. முதலில் சுப்பு தயங்கினார். அவர் ஏதோ சொல்ல முயற்சிப்பதைக் கவிஞர் புரிந்துகொண்டுவிட்டார். ‘என்ன விஷயம், சொல்லும்’ என்று தைரியம் அளித்தார். சுப்பு சட்டென்று தன் கையிலிருந்த காகிதத்தைக் கவிஞர் கையில் திணித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். கவிஞர் ஆவலுடன் காகிதத்தைப் பிரித்து வாசிக்கலானார். அவர் முகம் மலரத் தொடங்கியது. படித்து முடித்ததும் சுப்புவைப் பெருமிதத்துடன் பார்த்தார்.
“நம்ம கவிதா மண்டலத்துக்கு ஒரு புதுக் கவிராயர் கிடைச்சுட் டார்” என்று ஆர்ப்பாட்டமாக ஆறிவித்தார்.
எல்லோரும் ‘என்ன, என்ன,’ என்றார்கள்.
“இந்தாரும், நீரே படிச்சுக்காட்டும், உம்ம சிம்மக் குரல்ல” என்று கவிஞர் காகிதத்தை சுப்புவிடமே திருப்பிக் கொடுத்தார்.
சுப்பு தாம் இயற்றிய பாடலை உறுதியான குரலெடுத்துப் படிக்கத் தொடங்கினார்:
‘காளை யொருவன் கவிச்சுவையைக் – கரை
காண நினைத்த முழு நினைப்பில் – அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள் – இவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!- தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம் – எங்கள்
தாயின் கைப் பந்தென ஓடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம் – அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!’
“சரிதான். ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்” என்றார், கவிஞர்.
“அம்மை தோளசைத்து நடம் புரிவது, கோடியண்டங்களும் அவளோட கைப் பந்துகளா ஓடறது, மங்கை நகைத்த ஒலி, வாயில் குறுநகையா மின்னல் வெட்டறது மாதிரியான வரிகள் கண்ணுல காட்சிப் படிமங்கள் விரியும்படியா அமைஞ்சிருக்கு” என்று பாராட்டிய கவிஞர், மேலும் தொடர்ந்தார்:
“நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்யறதைவிட புகழுக்கு நெய்யறது மேல். பணம் நல்லதுதான்; ஆனா பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேணும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய ணும். ‘மல்’ நெசவு கூடாது. ‘மஸ்லின்’ நீடிச்சு நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்கணும். இதுக்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லே. சேராமலிருந்தால் விசேஷம்.” என்று கவிதைக்கு லட்சணம் சொன்னார்.
அந்த வார்த்தைகள் ஒரு நீண்ட மந்திரோபதேசமாய் செவிகளில் பாய்ந்த கணத்தில் கவிஞரையே தனது குருவாய் மானசீகமாக வரித்துக் கொண்டு பாரதிக்கு தாசனாய் அவர் காலில் விழுந்து வணங்கினார், சுப்பு.
“எழுக! நீ புலவன்!” என்றார், கவிஞர்.
ஆதாரம்: 1. பாரதியார் இயற்றிய ‘தராசு.’ 2. ரா. அ. பத்மநாபன் தொகுத்த பாரதி புதையல் மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் கட்டுரை. 1939 ஆம் ஆண்டு ‘ஹிந்துஸ்தான்’ வார இதழ் வெளியிட்ட பாரதி மலருக்காக ‘ரவி வர்மா பரமசிவப் பட பாரதி’ என்ற தலைப்பில் இக்கட்டுரையை எழுதினார், பாரதிதாசன்.
நன்றி: கணையாழி ஏப்ரல் 2012
++++++
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011