சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘

This entry is part 13 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, புகழ் நட்சத்திரங்களின் படங்கள் மத்தியில் சிக்கி, நசுங்கி, வெளியேறிய படம். முரணாக, படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த வெங்காயம்! இயக்குனர் சேரன் அதைத் துடைத்து மறு வெளியீடு செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.

காவல் அதிகாரி அன்புமணிக்கும் தமிழுக்கும் காதல். கிராமப்புறங்களில் திடீரெனக் காணாமல் போகும் போலிச்சாமியார்களைக் கண்டுபிடிக்கும் பணி அன்புக்கு. சாமியார்களைக் கடத்த கையாண்டிருக்கும் உத்திகளும் கிராமத்துப் பின்னணியிலேயே. அன்புமணி, கடத்தி கட்டி வைத்திருக்கும் சாமியார்களைக் கண்டுபிடிக்கும் முன்பே, அவரது காதலி தமிழ், ஒரு சாமியாரால் கெடுக்கப்படுவதற்கு ஒத்துழையாமல், கொல்லப்படுகிறார் . கடத்துபவர்கள் சாமியார்களால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள், ஒரு சிறுமி. கடத்தி வந்தவர்களைக் கொல்லாமல் விடுவிக்கும் சிறுவர்களை, சாமியார்களே கட்டிப்போட்டு கொல்ல முற்படும்போது, அன்பு அவர்களைச் சுட்டுக் கொல்கிறார். சிறுவர்களுடன் கை கோர்க்கிறார்.

சங்ககிரி ராஜ்குமாருக்கு கதை சொல்லத் தெரிகிறது, அதுவும் சினிமா மொழியில். உறுத்தாத பாடல்களை செருகத் தெரிகிறது. இயல்பான நகைச்சுவை இழையோட படம் எடுக்கத் தெரிகிறது. ஆனால் அடுத்த படமும் கொள்கை ரீதியாக எடுத்தால் பிழைப்பது கடினம். எப்போதும் ஒரு சேரன் துணைக்கு வரமாட்டார்.

சேலம் சார்ந்த பகுதியில் உள்ள கிராமங்களில் கதை செல்கிறது. பகுதிக்கு பகுதி வட்டார மொழி மாறுவதைக் கூட, துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். பிக்காசோ ஓவியம் போல், வண்ணத் தீற்றல்களாக பாத்திரங்கள். பஞ்சாலையில் வேலை செய்யும் பாத்திரம், கூத்து கட்டும் பாத்திரம், பரிசல் ஓட்டும் பாத்திரம், சாமியாரிடமே வேலை செய்து சீரழியும் பாத்திரம் என எல்லாமே மண் வாசனை மனிதர்கள்.

பிரதான பாத்திரங்கள் 3 சிறுவர்கள், ஒரு சிறுமி . ஆனால் இடைவேளைக்குச் சற்று முன்பு வரை, அவர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். பின்னால் அவர்களுக்கு கதையில் முக்கிய இடம் கிடைக்கிறபோது, அவர்கள் வந்து போன காட்சிகள் நமக்கு நினைவுக்கு வருவது, இயக்குனரின் திரைக்கதைக்கு ஒரு வெற்றி.

ஓரிரு காட்சிகளில், கதைக்குத் திருப்புமுனை தரும் பாத்திரத்தில் வரும் சத்யராஜ், அவராகவே வருகிறார். கதையும் அவர் வெகுவாக கொள்கைரீதியாக எதிர்க்கும் மூட நம்பிக்கை , கடவுள் ஆராதனை, போலிச்சாமியார்கள், சாதி, இவைகளை சொல்கிறது வாழ்வை ஒத்த பாத்திரம் என்பதால், அவர் நம்மால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.

எல்லோராலும் மறக்கப்பட்டு வரும் கூத்து, சுள்ளி அடுப்பில், மண்பானையில் செய்யப்படும், உரித்த சின்ன வெங்காயம் போட்ட கூழ், பனை ஓலைக்கிண்ணத்தில் குடிக்கப்படும் பனங்கள்ளு என்று பல காட்சிகள் அசை போட வைக்கின்றன. நரபலிக்குச் சிறுவர்களைக் கடத்தும் கூட்டம் அதிர வைக்கிறது. கொஞ்சம் மூன்றாம் பிறை பாணியில் கூத்துக்காரர் அவரது கலையை தெருவில் நடத்தி பார்ப்போரை நம்பவைப்பது கமல் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை.

எல்லோரும் புதுமுகங்கள். ஆனால் வாயசைவும் குரலும் ஒன்றிப்போய் இருப்பது, இயக்குனரின் உழைப்பைக் காட்டுகிறது. சிறுமி, சிறுவர்கள், வயதான பாட்டி என எல்லோரும் அழகான வட்டாரத் தமிழை தெளிவாகப் பேசுகிறார்கள். உச்சக் காட்சியில் இயக்குனர் சிறுவர்கள்/சிறுமி மூலம் சோதிடம், மூட நம்பிக்கைக்கு எதிராக வைக்கும் வாதங்கள் சலிக்காமல் இருப்பது அவருக்கு வெற்றி. கூத்துக் கலைஞராக நடிக்கும் நடிகருக்கு இன்னமும் சில படங்கள் கிடைக்கலாம். அதேபோல அந்தச் சிறுமியும், அவர்கள் தலைவனாக நடிக்கும் சிறுவனும் சில படங்களில் தலை காட்டலாம். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் பிரபலமாகலாம்.

திகிலான காட்சிகளைக்கூட விட்டுவைக்கவில்லை இயக்குனர். அதலபாதாளத்துக்கு மேல் போலிச் சாமியாரின் கார் தொங்கிக்கொண்டிருக்க, சிறுவர் கூட்டம் அவரை உயிருடன் கடத்த போராடும் காட்சி, நுனிசீட் காட்சி. சாமியாரை இழுத்துப் போட்டவுடன் சிறுவர்களில் ஒருவன் ஆடிக்கொண்டிருக்கும் காரின் முன்பக்கம் தொங்கிக் கொண்டிருப்பதும், கிடைத்த பொருட்களைக் கொண்டு அவனை இன்னொரு சிறுவன் காப்பாற்றுவதும் இயக்குனர் லாஜிக் மீறாத காட்சி. கண்ணாடியைத் துண்டு போடும் வைரக் கட்டரைப்போல காட்சிகள் தொய்வில்லாமல் போவது ஒரு ப்ளஸ்.

வெள்ளந்தி நகைச்சுவை இனிமேல் வடிவேலு ராச்சியமில்லை. வேறு ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அன்பு, தமிழை நிச்சயம் செய்யும் காட்சி. ஒரு கிராமத்து மூதாட்டி கேட்கிறாள்:

‘ தம்பி என்ன படிச்சிருக்கு? ‘

‘ பி ஈ ‘

‘ என்னதான் கிராமத்துப் பொம்பளைன்னாலும் இவ்வளவு எடக்கு கூடாது தம்பி.. படிக்கலேன்னாலும் அறிவிருக்குது.. படிக்கற படிப்புக்கு, பீயி மூத்திரம்னா பேர் வைப்பாங்க? ‘
துல்லியமான ஒளிப்பதிவு, காதை வருடும் கிராம இசை என ஜமாய்த்திருக்கிறார்கள். உச்ச நட்சத்திரங்கள் இம்மாதிரி தொழில் நுட்பக் கலைஞர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

சங்ககிரி ராஜ்குமாருக்கு அடுத்த படத்தை சேரனே வாங்கித் தரவேண்டும். அதில் அவர் பிரச்சாரத்தை விட்டு, நல்ல கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெங்காயம் வெறும் விசிட்டிங் கார்டுதான். அடுத்த படம் வியாபாரம் ஆனால்தான் இன்சென்டிவ் கிடைக்கும்.

#
கொசுறு

விருகம்பாக்கம் பேம் மல்டிப்ளெக்சில் மாலைக் காட்சி. மல்டிப்ளெக்சில் பத்து ரூபாய் டிக்கெட் இருக்கிறதா என்று சோதனை செய்யும் விபரீத ஆசையுடன் போனேன். டிக்கட் கொடுக்கும் தம்பி ஏற இறங்கப் பார்த்தார். என்ன யோசித்தாரோ பத்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார். மேலாளர் யாரையாவது கூப்பிடுவாரோ என்கிற அச்சத்தில் கீழ்படியில் ஒரு காலுடன் நின்றேன். ஆச்சர்யம்! பத்து ரூபாய் டிக்கட்டை கொடுத்தே விட்டார்.

முதல் வரிசை. 23 இருக்கைகள். அதுதான் பத்து ரூபாய்க்கு . வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் போலும். சாதி ஒழிப்பு வசனங்கள் பேசும் படம் காட்டப்படும் அரங்கில், முதல் வரிசைக்கும் இரண்டாவது வரிசைக்கும் இடையில் தீண்டாமை போல் பத்தடி இடைவெளி. அரங்கில் மொத்தமே இருபது நபர்கள் தான். ஆனாலும் படம் ஆரம்பித்த அரைமணி நேரம் வரை, டிக்கெட் கிழிப்பவர் அரங்கத்தின் உள்ளே நின்று கொண்டு, என்னையே கண்காணித்துக் கொண்டிருந்தார். முக்கியமான விசயம்.. பத்து ரூபாய் டிக்கெட்டிற்கு கேளிக்கை வரியில்லை.

#

Series Navigationஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயாபஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    balaiyer says:

    A very nice review of the film. In fact, it is not only that such Rajkumars should be encouraged, but also chiragu Ravichandrans. Hats off to you Mr. Chiragu Ravi. Your review reads like a beautiful story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *