புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்

This entry is part 24 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ம ந ராமசாமி

>>>
என் இலக்கியப் பணியை அங்கிகரிக்கும் நிமித்தமாக இங்கே எனக்கு விருது வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு விவரத்தை நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். விருது வழங்கப்பட்டதால் இனி நான் எழுதும் எழுத்தில் ஒரு தயக்கம் ஏற்படும் என்பதான ஐயம் என்னுள் எழுகிறது. பெற்ற பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்பதான அச்சம்.
அக்காலத்தில் கல்கி சொல்வார். ”ஒருவர் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவரை அழைத்து கழுத்தில் ஒரு பூமாலையைப் போடுங்கள். அதன்பின் அவர் எழுதமாட்டார்” என்பார்.
நண்பர் ஷங்கரநாராயணன் ஓகோ, எனப் பாராட்டி எனக்கு வரவேற்புரை வாசித்து இருக்கிறார். இந்த நேரத்தில் எங்கள் இருவர் இடையே எழுந்த நட்பு பற்றித் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் பாரதி. அவர் கண்ணன். ‘எங்கிருந்தோ வந்தான்.’ நான் பாரதியாக இல்லாவிட்டாலும், அவர் கண்ணன். கர்ணன்.
எனது இடதுசாரி முற்போக்கான படைப்புகள் பற்றி அவர் குறிப்பிட்டார். அது ஒரு காலம். இப்போது அந்த காலகட்டம் என்னைவிட்டு விலகி விட்டது. ஆனாலும் மிச்ச சொச்சம், கொள்வினை கொடுப்பினை இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு வரலாற்று சிறு விவரம் உண்டு. உங்களில் சிலர் அறிந்தும் இருக்கலாம். அன்றைய பிரிட்டிஷ் தொழிற்கட்சிப் பிரதமர், கிளமென்ட் அட்லி அவர்கள் இந்தியா வந்தார். இவர்தான் நம் நாட்டுக்கு சுதந்திரம் வழங்க வழி வகுத்தவர். வந்தவர் அவரது இந்திய நண்பர் மினு ஆர். மசானி அவர்களை சந்தித்தார். அப்போது மசானியிடம் அட்லி அவர்கள் ”இன்னும் நீங்கள் நம்யூனிஸ்டா?” என்று கேட்டு இருக்கிறார். ”இல்லை” என்றாராம் மசானி. உடனே அட்லி, ”அதானே பார்த்தேன்! இருபத்தைந்து வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவனுக்கு இதயம் கிடையாது. நாற்பது வயதிலுமி கம்யூனிஸ்டாக இருப்பவனுக்கு மூளை கிடையாது” என்றாராம். பதினெட்டு வயதில் எனக்கு இதயம் இருப்பது தெரிந்தது. ஆனால் அறுபது வயதில்தான் மூளை இருப்பது புரிந்தது.
2002ஆம் ஆண்டுவரை பல சிறுகதைகள், குறுநாவல்கள், இரு நாவல்கள் என நான் எழுதி இருந்தாலும், அவை நூல் வடிவம் பெற்று இருந்தாலும், நண்பர் ஷங்கரநாராயணனுடன் கிட்டிய நெருங்கிய நட்புக்குப் பிறகே, என் படைப்புகள் வெகுவாக நூல வடிவம் பெறலாயின. சொல்வதானால், நல்ல ‘ரீடர்ஷிப்’ வாய்ந்த இளைஞர் இவர். இவருடைய தலையைப் பார்த்து, நரையைக் கண்டு, ‘இவரா இளைஞர்?’ என்று கேட்கக் கூடாது. என்னைவிட வயதில் குறைந்தவர்களை இளைஞர்களாகவே நான் மதிக்கிறேன்.
தலைமை ஏற்று நடத்தி சாதிக்கும் திறன் இயல்பாகவே ஷங்கருக்கு வாய்த்திருக்கிறது. ”காடு” பற்றி ஒரு நாவல் எழுதுங்கள், என்றார். எழுதினேன். ‘மந்த்ரபுஷ்பம்’ மலர்ந்தது. ”இசை” குறித்து நாவல் எழுதுக, என்றார். ‘நாதலயம்’ ஒலித்தது. ‘அப் ஃப்ரம் ஸ்லேவரி’ என்பதான புக்கர் டி. வாஷிங்டன் அவர்களின் சுயசரிதையை மொழிபெயர்த்துத் தருக, என்றார். ‘அடிமையின் மீட்சி’ நல்லி – திசை எட்டும் விருது பெற்றது. அப்படித் திறன் அறிந்து பணியளித்து சாதனை செய்பவர் ஷங்கர்.
>>>
பாரதி என் குரு. அனேகமாக என் படைப்புகளில் பாரதி இடம்பெறுவது உண்டு. ஆனாலும் அவரிடமும் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு.
மொழி குறித்து என் கருத்து வெகுஜனக் கருத்துகளில் இருந்து மாறுபட்டது. மன்னிக்க. அவைத்தலைவர் கோவை ஞானி அவர்களுக்கும் தாய்மொழி பற்றிய என் கருத்து தெரியும். மொழி என்பது எனக்கு கருவி. ஸ்குரூ டிரைவர், ஸ்பானர் போல. குதிரையாகவும் மொழி எனக்கு உதவுவது உண்டு. அப்படி மொழியை நான் கையாளும்போது, மொழி பளபளப்பு பெறுகிறது. ஒளிர்கிறது. புதிது ஆகிறது. துரு ஏறுவது இல்லை.
ஆங்கில மொழி வெகு காலமாக உலகு எங்கும் உலா வருகிறது. ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை விட பலவீனமான மொழி எதுவும் கிடையாது என்று சொல்வர். அதன் தொண்ணூறு சதம் சொல்கள் அந்நிய மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. கூலி என்கிற ஆங்கிலச் சொல் தமிழில் இருந்து பெறப்பட்டதே. ஷுகர், என்பதான சர்க்கரை சமஸ்கிருதம். ஆங்கிலேயர் தம் மொழியை வழிபாடு செய்வது இல்லை. படைக்கிறார்கள். விஞ்ஞானம், வர்த்தகம் வாயிலாக அம் மொழி வளர்ச்சி பெறுகிறது. பரவுகிறது. ஆங்கில மொழி பற்றி பெர்னாட் ஷா அவர்களின் கருத்து வியப்புடன் சிரிப்பை வரவழைப்பதாக இ,ருக்கும்.
ஜி. எச். ஓ. ட்டி. ஐ. என்னும் எழுத்துகள் கொண்ட சொல்லை ‘ஃபிஷ்’ என உச்சரிக்க வேண்டும் என்பார். கிண்டல். அதாவது, ENOUGH, ROUGH என்னும் சொல்களில் உள்ள ஜி எச் ‘எஃப்’ என்னும் உச்சரிப்பில் உள்ளது. அடுத்து WOMEN என்னும் சொல்லில் உள்ள ஓ என்னும் எழுத்து ஐ என்னும் உச்சரிப்பில் உள்ளது. கடைசி இரண்டு எழுத்துகளான ட்டி ஐ, என்பன OPTION, ACTION என்னும் சொல்களில் எஃப் என்பதான ஒலி உச்சரிப்பைத் தருகின்றன. ஆகவே GHOTI என்னும் சொல்லை FISH என்பதாக உச்சரிக்கச் சொல்லி பெர்னாட் ஷா தன் தாய்மொழியையே கிண்டல் செய்கிறார். அற்புதமான நாடகங்கள் தாய்மொழியில் தந்த அறிஞர் பெர்னாட் ஷா தன் தாய்மொழியை வழிபாடு செய்யவில்லை. ஒருமுறை ‘இங்கலிஷ் இஸ் எ பாஸ்டர்ட் லாங்குவேஜ்’ என்று கூட சொல்லியிருக்கிறார்.
தம் நூல்களுக்கு அவர் அளித்த முன்னுரைகளே தனி நூலாகப் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது. ‘அன் இன்டலிஜென்ட் உமன்ஸ் கைடு டு காபிடலிசம், சோஷலிசம் அன்ட் கம்யூனிசம்,’ என்பதான அருமையான நூலையும் நமது வி.கே. கிருஷ்ணமேனன் அவர்களுடன் இணைந்து எழுதியவர் பெர்னாட் ஷா.
இனம் தேசம் பற்றிய வித்தியாசமான கருத்துகளும் எனக்கு உண்டு. வங்காள மொழி பேசும் மக்கள் மதங்கள் காரணமாக மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் எனப் பிரிந்து வாழ்கின்றனர். வெவ்வேறு தேசங்கள்! ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு பேசும் மக்களில் ஒரு பகுதியினர் தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு போராடி வருகின்றனர். அதிகாரம், ஆதிக்கம் பெற எண்ணுபவர்களே பிரிவினை பேசுகின்றனர் எனலாம். இதுகுறித்து மேலும் பேசி, விளக்கி, இம்மேடையை விவாத மேடையாக ஆக்க நான் விரும்பவில்லை.
எந்த ஒரு விஷயத்தையும் அணுக இருவேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று விவேகமான அணுகுமுறை. (லாஜிகல் அப்ரோச்.) மற்றது உணர்ச்சிபூர்வமான அணுகுமுறை. (எமோஷனல் அப்ரோச்.) சாதாரணமாக மனிதர் எதையும் உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறார்கள். மந்தையாகக் கூடுவதால், விவேகம் அவர்களிடம் இருந்து விடை பெறுகிறது. அதேநேரத்தில் உணர்ச்சிபூர்வமாக அணுகப்பட வேண்டியவையும் உள்ளன.
குழந்தையை, சிறுவர் சிறுமியரைக் கண்டதும் வாரி, கட்டியணைத்து அன்பைச் சொரிகிறோம். உணர்ச்சி வாயிலான அணுகுமுறை இது. மரணம் நிகழ்ந்த ஒரு வீட்டில் இருந்து அழுகுரல் வருகிறது. அங்கு சென்று, ஆண்டு ஆண்டு காலம் அழுது புரண்டாலும், மாண்டவர் மீண்டு வருவாரோ…’ எனச் சொல்லக் கூடாது. அழுது கொட்டித்தீர்த்து தங்கள் பாசத்தை, உறவை அவர்கள் அறுத்துக் கொள்கின்றனர்.
இவ்விதம் விவேகத்தையும், உணர்ச்சிகளையும் அறிந்து செயல்படுவதில் தான் மனித இனத்தின் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, தாங்கள் பிழைப்பு நடத்துகின்றனர். இனம், மொழி என்பதான பிரிவினை வாதத்தைத் தங்கள் சுயநலத்துக்காகவே அவர்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
>>>
‘அக்பர் சாஸ்திரி’ கதைபற்றி ஷங்கர் சொன்னார். வம்பு, தும்புக்காக நான் அலைவதாய்ப் பொருள்பட அவருடைய கருத்து இருக்கிறது, நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கதை அது.
நான் பணிபுரிந்த தொழிற்சாலை நிறுவனத்தில் எந்த ஒரு புதுப்பணியை மேற்கொண்டாலும் பூஜை செய்துவிட்டுத் தான் தொடங்குவர். விக்கிரக பூஜை அல்ல இது. பணி சம்பந்தப்பட்ட சாதனங்களுக்கான பூஜை. புதுக் கார், மோட்டார் சைகிள் ஆகியவற்றுக்கு பூஜை போடுவது போல. டைம் ஆபிசில் பணி புரியும் ஓர் இளைஞர் மந்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி மணி அடித்து பூஜை செய்வார். பணியை மேற்கொள்ளும் கான்ட்ராக்டர் கேரள மாப்ளா முஸ்லிம். பூஜைக்குப் பின் வழங்க சாக்லேட்டுகள் வாங்கி வைத்திருப்பார். ஒருசமயம் சம்பந்தப்பட்ட டைம் ஆபிஸ் ஊழியர் வராது போக, பூஜையைக் கண்டு அனுபவப்பட்ட அந்த முஸ்லிம் கான்ட்ராக்டரே அன்றைக்கு கற்பூர தீபம் காட்டி, மணி அடித்து பூஜை செய்தார். சந்தர்ப்பங்கள் செயல்களை ஊக்குவித்து நடைப்படுத்துகின்றன. நியாயப்படுத்துகின்றன. இதில் வம்பு, தும்பு இருந்தால் எதிர்பாராதவை. பாகிஸ்தான் பஞ்சாப் மாநில லாகூர் நகரில் முஸ்லிம்கள் இன்றும் வசந்த் பஞ்சமி கொண்டாடி வருகிறார்கள்.
ஷங்கருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் நாங்கள் கருத்து சுதந்திரத்தை மதிக்கிறோம். அவருடைய ஒரு கதையில் ‘கதையே இல்லையே’ என நான் எழுதியபோது, ‘கதை இல்லாமல் கதைப்பது தான் இன்றைய கதை உலகின் சாமர்த்தியம்’ என்பதாக பதில் எழுதினார்.

என் படைப்புகள் சிலரை பாதித்தது உண்டு. மேல் எழுந்த சிறு தடுமாற்றம் அவ்வளவுதான். ஒரு அரிச்சந்திரன் கதை ஒரு மகாத்மாவை உரு ஆக்கி இருக்கலாம். மற்றபடி எந்த எழுத்தும் எவரையும்அதிகமாக மாற்றிவிடுவது இல்லை. ‘யந்மே மாதா’ சிறுகதையை வாசித்துவிட்டு எவரும் திதி, திவசம் செய்வதை விட்டுவிடவில்லை. நண்பர் சிட்டி சுந்தரராஜன் உட்பட. அவரும் சிவபாதசுந்தரம் அவர்களும் இணைந்து எழுதிய ‘சிறுகதைகள் விமரிசனம்’ என்ற நூலில் இந்தக் கதை இரு பக்க அளவில்அலசப்பட்டு உள்ளது.
‘மந்த்ரபுஷ்பம்’ வரலாற்று நாவலை வாசித்த இரு பெரியவர்கள் பரவசப்பட்டு கடிதங்கள் எழுதினர். அவர்களில் ஒருவர் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். ‘நாதலயம்’ இசை பற்றிய நாவலை வாசித்த வித்வான் ஒருவர் வீடுதேடி வந்து, என்னையும், என் மனைவியையும் தரையில் விழுந்து வணங்கி எழுந்தார். ”புத்தகத்தை வைக்கவே மனம் இல்லை. அழுதுவிட்டேன்” என்றார்.
மேலும் நான் பெருமைகொள்வது என்ன எனில், எழுத்தாளர்கள் பலரும் என் இல்லம் வந்து போயிருக்கிறார்கள். கவனத்தில் இருப்பவர்கள், லா.ச. ராமாமிர்தம், கி. ராஜநாராயணன் தம்பதியர், நா. பார்த்தசாரதி, கவிஞர் சேவற்கொடியோன், ஜெயந்தன், சி.சு. செல்லப்பா, அசோகமித்திரன், வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், ஷங்கரநாராயணன், களந்தை பீர் முகம்மது, சிட்டி பெ.கோ. சுந்தரராஜன், சிவபாதசுந்தரம், தஞ்சை பிரகாஷ், அம்பை, யுகமாயினி சித்தன்… சென்னை எழும்பூரில் நான் அறை எடுத்துத் தங்கியிருந்தபோது ஜெயகாந்தன் வந்திருந்தார்.
>>>
கவிதையில் எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. எழுதியது உண்டு. இன்றைய வசன கவிராயர்களுடன் போட்டியிட எனக்கு விருப்பம் கிடையாது. இலக்கணம் பற்றி ஆவேசத்துடன் பேசுபவர்களின் வாயை அழுத்தமாக மூடுகிறது இன்றைய புதுக் கவிதை.
உரைநடை என்பது போல கவிதை ஒரு வசதி, பெட்டி, வாகனம், அவ்வளவுதான். கவிதைக்கு ஒரு காலத்தில அவசியம் இருந்தது. எளுதாக்கிளவி காலம். வடமொழியில் வேதங்களும், இதிகாச புராணங்களும், உபநிடத்துகளும் கவிதைகளால் ஆக்கப்பட்டவை. அணி அலங்காரப் படைப்புகளாக அவை இருந்தால் மனதில் நிலைபெறும் என்ற கருத்தை வலுவாகக் கொண்டிருந்த காலம். எழுத்துகள் பிறக்காத காலம் அது. கவிதைகள் ஸ்ருதியாகக் காதுகளில் விழ, அக்கவிதைகள் மனதினுள் ஸ்மிரிதியாக நிலைத்தன. எழுத்துகள் பிறந்தபின், சீடர்கள் வழிவழியாக வந்த அக்கவிதைகளை ஏடுகளில் குறித்தனர். எளுதாக்கிளவி காலத்தில் குரு ஆனவர்கள் தங்கள் சீடர்களுக்கு போதிக்கும்போது அவரவர் கற்பனையில் உதித்தனவும் இடைச் செருகல்களாகச் சேர்ந்து கொண்டன. எழுத்துகள் உதித்து கற்பவர்களின் கவன சக்தி என்பதான வலிமையைக் குன்றச் செய்து விட்டது.
அன்றைய கவிதைகள் மரபுக்கவிதை இலக்கணத்துள் அடங்குபவை. இன்று அக் கவிதைக்கு அவசியம் இல்லை. ஆகவே புதுக்கவிதை என்பதான வகை கவிதை பிறந்தது. அதாவது கவிதை பண்ணுவதற்காகவே வசன கவிதையே தவிர, உள்ளார்ந்த பொருளுக்காக அல்ல.
ஸ்டீஃபன் லீகாக் என ஓர் ஆங்கில எழுத்தாளர். HOW TO WRITE என்பதாக ஒரு நூல் எழுதியிருக்கிறார். How to write short stories, How to write novels, How to write more novels, How to write historical novels, என்பதான அத்தியாயங்களை எழுதியவர், கவிதைகள் பற்றி எழுதும்போது, How not to write verses, How not to write more verses.. என்பதாகத் தெரிவித்தார். அதாவது கவிதைகள் எழுதாமல் இருப்பது எப்படி என்பதான அத்தியாயங்கள்.
ஷங்கரநாராயணனும் கவிதைகள் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார். ஹைகூ என்பதான குறுங் கவிதைகளும் எழுதியுள்ளார். என் கருத்தில் ஹைகூ என்பது கவிதை தேய்ந்து கட்டெறும்பு. ஷங்கரநாராயணனின் ஒரு ஹைகூ.
படிப்பது ராமாயணம்
இடிப்பது பெருமாள் கோவில்
அல்ல
சட் என்று கவிதையின் பொருள் புரியாது தான். புதுக் கவிதை இது. புதிர் கவிதை.
படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில், என்பதான சொல்லாடல் நம் இடையே உண்டு. சொல் வேறு, செயல் வேறு, என்பது பொருள். இங்கே ‘பெருமாள் கோவில் அல்ல’ என்னும் போது, வேறு என்ன என்னும் கேள்வி மனதுள் எழுகிறது. வேறு எது? மசூதி!
>>>
முடிவாக ஒன்று. ஜீவாத்மா, என்பதான என் குறுநாவல் கணையாழி தி. ஜானகிராமன் நினைவுப்போட்டியில் தேர்வான ஒன்று. அதன் உரிமையை ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் என்னிடம் இருந்து உரிமம் பெற்றுச் சென்றார். இன்றுவரை அது திரைப்படம் ஆகவில்லை. பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. அதே குறுநாவலின் கரு இரு தொலைக்காட்சி நாடகங்களில் இடம் பெற்றன.
இந்த விருது வழங்கிய ‘புதுப்புனல்’ ஆசிரியர் திரு. ஆர். ரவிச்சந்திரன் அவர்களுக்கும், உடன் இருந்து உதவிய ‘யுகமாயினி’ சித்தன் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
>>>
(April 01 2012)

Series Navigationவிளையாட்டுமொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
author

ம ந ராமசாமி

Similar Posts

Comments

  1. Avatar
    ushadeepan says:

    திரு ம.ந. ராமசாமி அவர்களின் படைப்புக்களைப் படித்து விட்டு எழுதுவதற்கான உந்துதல் பெற்றவன் நான். அதில் அறுபத்தொன்பது சத விழுக்காடு குறுநாவல் மிகவும் பாதித்த ஒன்று. அவருக்கு புனல் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பெரியவரிடம் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும். அத்தனை மதிப்பிற்குரியவர் அவர். திரு எஸ்.ஷ. வின் முயற்சிகள் என்றும் அர்த்தமுள்ளவையாகவே இருக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பன் உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *