விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு

This entry is part 35 of 41 in the series 8 ஏப்ரல் 2012

1927 ஃபெப்ருவரி 28 அக்ஷய மாசி 16 திங்கள்

பிராமணோத்தமரே என்னை மன்னித்தேன் என்று சொல்லும். முதலில் அதைச் சொல்லாவிட்டால் நான் உம்மோடு ஒரு போதும் பேசப் போவதில்லை.

நான் காலில் விழாத குறையாகச் சொன்னேன். மலையாளத்துப் பிராமணன் மூச்சை உறிஞ்சி சமுத்திரத்து உப்புக் காற்று வாசனையை பரிமள சுகந்தமாக அனுபவித்தபடி என்னை தீர்க்கமாகப் பார்த்தான்.

ஆதி நாட்களில் அதாவது நான் மதராஸ் பட்டிணத்தில் காராகிரகம் புகுந்த காலத்தில் இவன் பார்வை பட்டுத்தான் இன்றைக்கு இப்படி கப்பலில் கக்கூஸ் கழுவி, துரை பீ துடைத்த காகிதத்தை வாரிப் போட்டு சேவகம் பண்ண வாய்த்திருக்கிறது. கழுக்குன்றத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இவன் என் கையில் ஒப்படைத்த அந்த செம்பை எங்கோ தவறவிடாமல் இருந்தால் இன்னேரம் நானும் துரை போல் லக்ஷரி சுவீட்டில் சுகம் அனுபவித்துக் கொண்டு இந்தக் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருப்பேன். இல்லாவிட்டால் குறைந்த பட்சம் ஜியார்ஜ் டவுண் மூக்குத்தூள் கடையில் தலைமை சிப்பந்தியாக எனக்குக் கீழே இன்னும் பத்து பேரை வைத்து ஏவி வேலை வாங்கிக் கொண்டிருப்பேன்.

அந்தக் கடைதான் வேறே இடத்துக்கு மாறி அங்கே தோலையும் துருத்தியையும் பாடப்படுத்தி செருப்புத் தைக்கத் தருகிற பட்டாணியன் கடை போட்டாச்சே. நீர் பட்டணத்தில் மாமியாரம்மாள் கிரகத்திலிருந்து இறங்கி வந்ததும் அங்கே தானே நேரே போய் நின்னீர்? மறந்துட்டீரா?

பாழாப் போனவனுக்கு எல்லாம் வெகு நுணுக்கமாகத் தெரிஞ்சிருக்கு. எத்தனையோ காலம் போயும், என்னமோ பக்கத்தில் நின்று பார்த்த மாதிரி பளிச்சென்று ஞாபகம் வைத்திருக்கான்.

அவன் சமுத்திரத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். குடுமி சிகை அவிழ்ந்து காற்றில் முகத்தை மறைத்தது. பாதி வெளுத்த நாலு நாள் தாடி முகத்தில் பராரிக் கோலத்தை அழுத்தமாக எழுதி வைத்திருந்தது. இன்னும் பத்து நாள் இவன் தாடி விட்டால், யோகீசுவரன் மாதிரி தெரிவானோ என்னமோ. மயிருக்கும் மகத்துவம் இருக்கப்பட்ட லோகம் இல்லையா இது. இவன் லோகத்தில் இல்லாது போனாலும்.

என்னமோ அவன் தொந்தரவு படுத்த வந்திருக்கான் என்று எப்பவும் தோணுகிற மாதிரி தோணவில்லை. பயமும் இல்லை. இந்த இருபது சில்லறை வருஷத்தில் நானும் எவ்வளவோ அடிபட்டு மனசும் உடம்பும் மரத்துப் போயிருக்கேன். இனிமேல் அனுபவிக்க சுகமும் இல்லை. துக்கமும் இல்லை. பயமும் கிடையாது. வேதனையும், சந்தோஷமும், ஆச்சரியமும், அதிர்ச்சியும் எதுவும் என்னை எதுவும் செய்யப் போவதில்லை. அதெல்லாம் வந்து அனுபவப்பட்டு கடந்து போக, யார் யாருக்கோ நல்லதும் இல்லாததும் கலந்து கட்டியானதுமாக எத்தனையோ செய்திருக்கேன். என் பிரியமான பாரியாள் லலிதாம்பிகைக்குத் தான் எந்த அரவணைப்பும் தர முடியாமல் அவளைத் தொலைத்து விட்டேன். மலையாளத்தான் கொடுத்த செம்பைப் போல.

மதராஸ் போய்ச் சேர்ந்ததும் சின்னம்பி நீலகண்டனைத் தேடிப் போய் இவனுடைய தீராத பிரச்சனையைப் பற்றி பிரஸ்தாபித்து அது நீங்க உபாயம் கண்டால் என்ன?
நீலகண்டன் முகம் கொடுத்துப் பேசுவானோ. அதுவும் என்னுடைய இத்தனை வருஷப் பிரதாபத்தை எல்லாம் தெரிந்த அப்புறமும்?

நீலகண்டனும் மற்றவனும் ஒண்ணும் வேணாம். எதுக்கு அலைஞ்சு சிரமப் படரீர்?

மலையாளத்தான் குரலில் எப்போதும் இல்லாத வாத்சல்யம் தெரிந்ததாகப் பட்டது எனக்கு. இல்லை பிரமையா? இவன் இங்கே இருப்பதே பிரமைதான் இல்லையோ.

சுவாமின், என்னை க்ஷமிக்கணும். நீரும் எவ்வளவோ காலமா என்னாண்டை சொல்லி அலுத்திருப்பீர். என்கிட்டே, அது எந்த சந்தர்ப்பமா இருந்தாலும் சரி, ஒப்படைச்ச பொருளை திரும்ப சேர்ப்பிக்க வேண்டியது என் கடமை ஆச்சே. அந்த கங்காஜலத்தையும்.

என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் கை காட்டினான் அவன். எல்லாம் கடந்த ஒரு பாவத்தில் அவன் முகம் கூட வழக்கமான சூனியமும் சோகமும் இல்லாமல் சாந்தமாக இருந்தது.

அது கங்கா ஜலம் இல்லே ஓய். எங்கம்மாவோட அஸ்திக் கலசம். அவ இன்னும் அதுக்குள்ளே பொரண்டு பொரண்டு நிம்மதியில்லாம புலம்பிண்டு இருக்கா.

அதுக்குத்தான் சொன்னேன். நீலகண்டனைப் பார்த்து, தம்பியானாலும் பரவாயில்லேன்னு கால்லே சாஷ்டாங்கமா விழுந்து.

நீர் சிரமப்பட வேணாம். உம்ம காரியங்களை அததுக்கான ஸ்திதியிலே நடக்கற மாதிரி பார்த்துண்டு இரும். மனசை நீச சிந்தையிலே செலுத்தாம இரும். வயசானாலும் மனசு கருங்குரங்கனா அங்கே தான் போய் நிக்கும். பிடிச்சு வலிச்சு பின்னாடி இழுத்து செய்யற வேலையிலே முழுக் கவனமா இரும். எல்லாம் எல்லாம் எல்லாம் போகிற தோதில் போகட்டும். நீர் ஒரு பாவம். நான் இன்னொரு பாவம்.

அவன் வார்த்தையை கடல் காற்று அடித்துப் போய் வெட்டவெளியில் பரத்தாத படிக்குக் அவனுக்கு வெகு அருகில் குனிந்து நான் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பயமும் இல்லை. அவன் துர்தேவதையோ பிரேத பைசாசமோ பிரம்மராட்சசமோ ஆக இருந்துட்டுப் போகட்டும். என் மேலும் லவலேசம் காருண்யம் காட்டி ரெண்டு வார்த்தை இதமாகச் சொன்னானே, வேறே யார் இதைச் செஞ்சிருக்கான் இந்தக் கஷ்டமான காலம் முழுக்க?

நான் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் உப்புக் காற்றில் கரைந்து போனான். இனிமேல் கொண்டு அவனை என்னென்னிக்கும் பார்க்கப் போவதில்லை என்று ஏனோ பலமாகத் தோண ஆரம்பித்தது.

சாமி, ஓ சாமி.

கீழே இஞ்சின் ரூமில் இருந்து வெள்ளைக்காரன் கத்தினான். குடலைப் பிரட்டும் எண்ணெய் வாசத்தில் இவன் எப்படி நாள் முச்சூடும் அங்கேயே சுத்திச் சுத்தி வருகிறானோ தெரியலை.

எண்ணெயை ஊத்தி எரிச்சு இஞ்சினை ஓட்ட வைக்கறது நூதனமான யந்திரக் கட்டுமானமாம். நான் கரும்புத் தோட்டத்துக்குப் புறப்பட்ட போது இருந்ததே கரியை எரிச்சு ஓட்டற கப்பல் அது எல்லாம் இப்போ பழைய பஞ்சாங்கமாகி உடைபட காலம் கனிஞ்சிருக்காம். கரி கண்ணைக் கரிச்சாலும் நாறிப் புடுங்காது. இந்த எண்ணெய் இருக்கே இது கூட வந்து படுத்தவளை சம்போகத்துக்கு அப்புறம் எங்கேயோ முகர்ந்து பார்த்த.

மகாலிங்கய்யரே, சித்தத்தை சிவ சிவன்னு சொல்லிக் கட்டுப்படுத்தி போற வழிக்கு சிராங்காய் புண்ணியமாவது தேடிண்டு போன்னு இப்பத்தானே சொன்னேன்?

ரொம்பப் பக்கத்தில் எங்கேயோ மலையாளத்தான் குரல் ஒரு க்ஷணம் கேட்டது. அதுவும் இஞ்சின் ரூமிலிருந்து வருகிற மாதிரித்தான் தெரிந்தது. வேணாம். எல்லா துவாரமும் நாறி அழுகிச் சொட்டும் மனுஷ உடம்பில் பிரேமை வைக்காது அவன் சொன்னபடி வேலையில் கவனம் வைக்க வேண்டிய தருணம். டெக்கை ஈரத் துணியால் மெழுகறதை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

சாமி, எங்கே தொலைஞ்சே.

வெள்ளைக்காரன் திரும்ப இரையும் சத்தம். ஓடிப் போய் பூட்ஸ் கால் சப்திக்க ஒரு சல்யூட் வைத்தால் சந்துஷ்டனாவான் இந்த வேசி மகன். என்ன எழவுக்குக் கூப்பிடறானோ.

நான் கீழே போய் பவ்யமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு அவனுக்கு முன்னால் நின்றேன். சாவகாசமாக கால் சராய் பொத்தான்களை அவிழ்க்க ஆரம்பித்தான் அந்த மூதேவி.

அட பொணமே, உனக்கு இதுவும் பண்ணி விடணுமோ? முடியாது போ.

மனசு என்னென்னமோ கணக்கு போட்டுக் கொண்டு நின்னது. அவன் உட்கார்ந்த வாக்கில் அந்த கால் சராயை உருவிக் கழற்றினான். உள் வஸ்திரம் மாத்திரம் தரித்த நிலையில் கால் மேல் கால் போட்டபடி ஒரு புகைச் சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு எனக்கு முன்னால் தீப்பெட்டியை விட்டெறிந்தான்.

லாவகமாக அதைப் பிடித்து உள்ளே இருந்து குச்சியை எடுத்துக் கொளுத்தினேன். காற்று அணைத்து விடாமல் ஜாக்கிரதையாக அவன் முகத்துக்கு நேரே நீட்டிப் பற்ற வைத்து அவனுக்கு புகை விட ஒத்தாசை செய்தேன். அடி வஸ்திரத்துக்குள் அந்த எரியும் குச்சியைப் போட முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

சாமி, இந்த டிரவுசரை அழுக்கும் இஞ்சின் எண்ணெய்ப் பிசுக்கும் போக நல்லபடிக்கு துவைத்துப் பிழிஞ்சு இரும்பு சூட்டால் சுருக்கம் எடுத்துக் கொண்டு வா. நாளைக்கு வேணும். கப்பல் கேப்டன் துரை விருந்து கொடுக்கறார். சராய் ஏறுமாறா இருந்தா என் புட்டத்தை அவர் வீங்க வைச்சுடுவார்.

துரை சிரித்தான். இல்லாவிட்டாலும் என்ன? தினசரி ராத்திரி சாப்பாடு முடிந்த அப்புறம் கேப்டன் துரை கேபினின் இந்த ரெண்டு களவாணிகளும் புகை ஊதும் போது அதேதான் செய்கிறதாக கப்பல் முழுக்கப் பேச்சு இருக்கே. இருந்து தொலையட்டும். எனக்கு என்ன போச்சு? ஊருக்குப் போகணும். அவ்வளவுதான்.

அவனுடைய மூத்திரம் உலர்ந்த அந்த திவ்ய வஸ்திரத்தை தோளில் சுமந்து கொண்டு டெக்கில் நீள நடந்தேன். கப்பல் சமையல்காரன் யாரையாவது கையைக் காலை உருவி இந்த கண்றாவித் துணியை சுத்தமாக்க சுத்த ஜலம் வாங்கணும். இல்லாவிட்டால் காப்டன் துரை இந்த பரிவார தேவனுக்குச் செய்கிற கைங்கரியத்தை இவன் எனக்கும் செய்து விடலாம். இத்தனை வயசுக்கு மேல் அது ஒண்ணு தான் பாக்கி.

மிடுக்காகப் போன கப்பல் வேலைக்காரன் ஒருத்தன் என்னைப் பார்த்துக் கையசைத்தபடி போனான். இவன் என்னைப் போல நரகல் கழுவவோ, துணி துவைக்கவோ, சமையல்காரன் போல பன்றிக்கறி சமைக்கவோ ஏற்பட்டவன் இல்லை. மாலுமி உத்தியோகத்துக்கு தயார் செய்து கொள்கிறவன். கப்பல் கிளம்பி ஒரு வாரமாகி விட்டது. இருந்தாலும் பேச யோசிக்கிறான். அவனைச் சொல்லிக் குற்றம் இல்லை. வயசான தோட்டி வேலைக்காரனோடு கப்பல் மாலுமிக்கு என்ன பேச்சு? துரையா என்ன, கால் சராயைக் கழட்டித் தர?

நான் கப்பல் சமையல்காரன் ஒருத்தனையாவது பிடிக்கும் உத்தேசத்தோடு குசினியிலும் சுத்து வட்டாரத்திலும் ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது உலர வைத்த மீனும், ஆட்டு மாமிசமும், மது வர்க்கங்களும் போத்தல் போத்தலாக அடுக்கி வச்சிருந்த ஸ்டோர் ரூம் கதவைத் திறக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். தள்ளித் திறந்தால் ரெண்டு இந்துஸ்தானி சமையல்காரர்களும், என்னாட்டம் சாக்கடை தள்ளுகிறா துருக்கி தேசத்து சிவப்புத் தோல் பையனும். அவனை நடுவில் உட்கார்த்தி சேஷ்டையும் சல்லாபமுமாக இருந்த அந்தப் பீடைகளிடம் சுத்த ஜலம் என்று கேட்டபோது என்னத்துக்கோ சிரிப்பு வந்தது. கேபினில் புகை விட்டபடி மாலுமி துரைகள் செய்கிறதை இந்தக் குப்பன்கள் சாக்கு மூட்டைக்கு நடுவிலே நடத்துக்கிறார்கள்.

நான் சகல கண்றாவியையும் பார்த்த காரணத்தாலோ என்னமோ அவன்கள் ரெண்டு பேரும் ஓடிப் போய் ஆளுக்கு ஒரு இரும்பு வாளி நிறைய தண்ணீரோடு வந்து சேர்ந்தார்கள். துருக்கிப் பையன் அப்படி இப்படிப் பார்த்து விட்டு மீன் சாக்கில் தலல வைத்து தூங்கிப் போய்விட்டான். அவன் சிரமம் அவனுக்கு.

துவைக்கிற துணியும் ரெண்டு வாளி தண்ணீருமாக மேலே டெக்குக்கு ஏற முற்பட்டேன். இதில் ஒரு வாளி ஜலத்தில் சுத்தமாகக் குளித்து தேக ஆரோக்கியத்தை மேன்மைப் படுத்திக் கொள்ளலாம். உப்புக் காற்று மேலே முழுக்க பொறபொற என்று காஞ்சு போன ரொட்டி மாதிரி ஆக்கி விட்டது.

படிக்கட்டுக்குப் பக்கம் ஒரு நூதன யந்திரம். இந்தக் கப்பலில் எண்ணெய் ஊத்தி எரிச்சு இஞ்சினை ஓட்டறதும், மூட்டை முடிச்சை உச்சந்தலைக்கு வெகு மேலே தூக்கி உள்ளே போடற தூக்குத் தூக்கியும் மாத்திரம் இல்லே. இந்த உசரம் போற யந்திரமும் புதுசா செஞ்சு பொருத்தினதுதான். காபின்லே கால் பாகத்துக்கு இருக்கப்பட்ட இதுக்கு உள்ளே போய் கதவை அரைஞ்சு சாத்தினா, யந்திரம் மேலே கிளம்பிப் போய் டெக்குலே நிக்கும். கால் வலிக்க படி ஏறிக் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனா இந்த வசதி நமக்காக ஏற்பட்டது இல்லே. துரைகள் மேலுக்கு நலுங்காம ஏறி இறங்கி எழவெடுக்க. இவன்கள் துரைசானியை சுகிக்கவும் யந்திரம் வச்சிருக்கலாம். யார் கண்டது?

ஏறி இறங்கற யந்திரத்துக்குப் பக்கமா அந்த சின்ன வயசு கப்பல்காரன் நிக்கறான். என்னமோ எங்கிட்டே கேட்க நினைச்ச மாதிரி, அப்புறம் வேண்டாம்னு வச்ச மாதிரி முகத்திலே ஒரு பாவம். அதை பூசி மெழுகி சிநேகிதமாச் சிரிச்சுண்டு கூடவே இன்னொரு முகபாவம். வெள்ளைக்காரனுக்கு அடிமை ஜனங்களை வசியம் பண்ண சொல்லித் தரணுமா என்ன?

என்ன தொரை, கால்சராய் துவைக்கணுமா?

நானாகத்தான் கேட்டேன். வேண்டாம்னு தலையை அசைச்சான்.

சாமி, உன்னை எங்கேயோ பார்த்திருக்கற ஞாபகம்.

இவன் வயசுக்கு இவன் அப்பனைப் பார்த்திருந்தாலே அதிசயம்.

இந்தியா வந்திருக்கீங்களா துரைன்னு கேட்டேன்.

இல்லையாம்.

பிக்பென் கடிகாரத்தைப் பார்க்கவும், தேம்ஸ் நதியிலே படகுலே போய் திரும்பி வர்றதுக்கும் குடும்பத்தோடு வாரா வாரம் போவேன். அப்போ, டவர் பிரிட்ஜ் ஓரமா.

இழுத்தான் அவன்.

நாசமாப் போச்சு. உலகம் இவ்வளவு சுருங்கிப் போனதா? டவர் பிரிட்ஜ் பக்கம் எப்போ பார்த்திருப்பான்? கையிலே தொப்பியை ஆட்டிண்டு பிச்சை எடுத்தபோதா இல்லை ஒத்தைக்கையன் ஜேம்ஸ் கூட சாராயம் சாப்பிட்டுட்டு பீட்டர் துரை கழுத்தை அறுக்கப் போனபோதா?

கோவண்ட் கார்டன்லே கறிகாய் மூட்டை ஏத்திப் போக வண்டி தேடி வந்திருப்பேனா இருக்கும். அங்கே ஒரு பெரிய மண்டிக்கடையிலே வேலை பார்த்தேன்.

இனிமே ஆயுசுக்கும் பொய் சொல்லக் கூடாதுன்னு வைச்சதை தள்ளிப் போட்டேன்.

போகட்டும். உமக்கு மதறாஸ் பட்டணத்திலே கையிலே காசு பணம் வச்சிருக்கற நாலைஞ்சு பேராவது பழக்கம் இருக்கா?

துரை விசாரித்தான். அவன் எதுக்கு அடி போடுகிறான் என்று புரியவில்லை.

எனக்கு என்னமோ திரும்ப நீலகண்டன் ஞாபகம் தான் உடனடியாக வந்தது. நல்ல ஸ்திதியில் இருப்பான் அவன். ஒரு குறைவும் அவனுக்குக் கற்பகாம்பாள் கடாட்சத்தில் வராது இருக்கட்டும்.

என்ன விஷயம் துரை?

சைக்கிளும், சாராயமும், கோக்கோ சாக்லெட்டும், பெண்ட்லே பிஸ்கட்டும் எடுத்துப் போறேன். வித்துக் கொடுக்கணும். பத்து சதவிகிதம் கமிஷன் தரேன்.

ஆக இவன் தொழிலைக் கவனிக்க வந்தவன். நமக்கும் பங்கு தரேங்கறான்.

கப்பல் மதராஸிலே தான் நிலையா நிக்குமா?

நான் கேட்டேன்.

ஒரு வாரம் இருந்துட்டு சிங்கப்பூர் போகறோம். நீ வர்றியா?

சிங்கப்பூர்லே எனக்கு என்ன வேலை? மதறாஸ்லே கொஞ்சம் அலைஞ்சு நீலகண்டனையும் அவனோட உத்தியோக சிநேகிதர்களையும் பார்த்து துரை கொண்டு வந்த சரக்கை வித்துக் கொடுத்து நாலு காசு பார்த்தா என்ன?

இது படிந்து வந்தா, அடுத்த அவதாரம் இந்த தரகு வேலை. பகவான் விட்ட வழி அப்படீன்னா நான் தீர்மானிக்க என்ன இருக்கு? லலிதாம்பிகையும் கெடச்சு தரகு ஜோலியும் அமோகமா வளர்ந்தா இன்னொரு நீலகண்டன் ஆக மாட்டேனா?

முக்கியஸ்தர்கள் பலரையும் பட்டணத்துலே தெரியும்னு சொன்னேன். துரை பையில் இருந்து ஒரு பவுண்டை எடுத்து நீட்டினான். தட்டாமல் வாங்கிக் கொண்டேன்.

சுங்கம் வங்கம்னு இதை எல்லாம் கரைக்குக் கொண்டு போக தகராறு பண்ணுவானோ.

அவன் கேட்டபோது கையமர்த்தினேன்.

அதை கப்பல் நங்கூரம் இட்டதும் பார்த்துக்கலாம்.

சாமஜ வர கமனான்னு ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டுப் பாடியபடிக்கு கழிப்பறையை ஒண்ணொண்ணாக சுத்தம் செய்ய ஆரம்பிச்சேன்,

(தொடரும்)

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *