தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அரியநாச்சி

ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், ‘வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன’ என்ற சாப்ளினின் கோட்பாடுதான்.

நவின உத்திகளையும் தொழில்நுட்ப வசதிகளையையும் நிராகரத்துவிட்டு யாராலும் இப்போ வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. இந்த நிலையில் உலகம் இயங்கிவரும்போது ஆர்டிஸ்ட் படத்தை பழைய ஊமைப்படமாக கருப்புவெள்ளையில் எடுத்து ஆஸ்கார் விருதும் பெற்றிருப்பதால் அறிவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும், பிரக்ஞையற்றுப் பின்தொடரும் பல நம்பிக்கைகளுக்கு எதிரானவற்றை இதிலிருந்து தரவிறக்கம் செய்ய நிர்பந்திக்கும் வாய்ப்புகள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்.

முதலாவதாக, ஆர்டிஸ்ட் படத்தின் கதை பிண்ணப்பட்டிருக்கும் ஆழ்மனதில் மொழிமத இனதேசப் பிரிவினைகள் தாண்டி எதிரெதிர் மக்கட்பிரிவிற்குள் பிணப்பை ஏற்படுத்தும் காதல், பொருத்தமாக இந்தப் படத்தில் பொருந்தியிருக்கிறது. காதல் ஒரு விபத்து என்பதும் அது எப்போ எப்படி யாருக்குத் தோன்றுமென்றெல்லாம் சொல்லமுடியாதென்னும் கூற்றிற்கு ஒத்தாற்போன்ற தமிழ்ச்சினிமாதான் ஆர்டிஸ்ட் என்றாலும், அந்தக் காதலர்கள் மழையில் ஆடி அரைநிர்வாணத்தோடு கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக அன்பின் பரிமாற்றத்தில் ஒரு மாசற்ற உணர்வாக இருவருக்குள்ளும் வளர்ந்து கிளர்ந்தெழும் இனிய உற(ணர்)வானது பெருமரமாகும் என்பதைச் சத்தியம் செய்யும் ஆர்டிஸ்ட் படம் காதலின் கன்னியத்தைக் கட்டிக்காக்கிறது, காதலி எப்போதும் காதலன் மனக்குதிருக்குள் நீங்கா கனவாக உலவும் முடிவிலா பாடல் என்பதை உறுதி செய்கிறது. பிரபலமான ஒரு நடிகனோடு எடுத்துக்கொண்ட போட்டோவினால் ஊர்முழுக்கப் பேசப்படும் பெண்ணாக மாறும் பெப்பி மெரில் சினிமா வாசலுக்குள் துணை நடிகையாக காலெடுத்து வைக்க, மெல்ல மெல்ல தன் திறமையால் தரத்தை உயர்த்திக்கொண்டே சினிமாத் துறையினை தன் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறாள், காதலன் தோல்வியுற்று சோகத்தில் மூழ்கி விபத்தில் சிக்கியிருக்கும் கட்டத்தில் அவனைக் காண செல்லும் ஆர்வத்தால் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறும் காட்சியில் அவளது காதல்பற்று திரையைத்தாண்டி அருமையாக விரிந்து செல்கிறது. இந்த ஆண்பெண் காதல், கலையின்பால் பிடிப்பு ஏற்பட்டு பெப்பி மெரிலின் நடனக்கால்களைப் பின்தொடர்ந்து வாழ்க்கையை தடம்மாற்றும் ஜார்ஜ் வெலான்தானுக்கு அவனது காதல் வயது வித்தியாசத்தை மீறுச்செய்கிறது, சினிமாக் கேமிராவின் முன் உதட்டிற்கு மேலே இட்ட புள்ளியினால் பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்பிக்கொண்டுவிட்ட பெப்பி மெரில், வேலான்தான் பேசி நடிக்க மறுத்ததால் சினிமாவில் தோல்விகண்டும், வாழ்க்கையில் பொருளாதாரத்திலும், தாரத்தினாலும் சந்தித்தத் தோல்விகளால் அனுபவிக்கும் துன்பவேளைகளில் பெப்பி மெரில் அவனை நிமிர்த்த முட்டுக்கட்டைகளோடு அலைவதாவது – ஊரே துன்பத்திலிருக்க தன் காதல் இணையைத் தேடும் எதிர் ஜோடி, அலைந்து அலைந்து துயர் துடைப்பதுபோல “ஆர்டிஸ்டு”ம் உப்புப்புளிக் காரத்தோடு கதையை சமைத்திருக்கிறது.

ஊமைப்படத்தைத்தான் எடுப்பேன், பேசும்பட வாய்ப்புகளுக்கு இடம் தரமாட்டேன் என பட வாய்பில்லாமல் ஏழ்மையை விரும்பி உடுத்திக்கொள்வதால் நடிகன் வேலான்தான் தன்னிடம் கடைசியாக இருந்த கார் ட்ரைவரிடம் சம்பளபாக்கிக்காக காரை கொடுத்து அனுப்ப, பெப்பி மெரில் அந்த ட்ரைவரை மட்டுமல்லாது, அவன் ஏலத்தில் விட்ட எல்லாப்பொருட்களையும் மீட்டெடுத்துப் பாதுகாத்து வைத்திருப்பது வரை அவன் மீது அவளுக்கு இருந்த அன்பும் அக்கரையும் இரண்டும் கலந்தெழுந்த காதல் அருமையாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எந்தத் தெருமுனையிலும் ஆபாசமான செயல்களில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு பொது இடம் எது என்றும் காதலர்களின் பிரத்தியேகப் பகுதி எதுவென்றும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. நாகரிகமானக் காதல்தான் இது. கலைமீதான காதலில் அடிமைப்பட்டிருக்கும் கணவனின் கண்களைத் திறக்க, அவனோடு அவளும் சேர்ந்து ஒரு நீண்ட நடனத்தைப் பதிவு செய்கிறது ஆர்டிஸ்ட் படச்சுருள்.

சினிமாவின் பரிணாமவளர்ச்சி, இப்போ எந்தவகையில் இருக்கிறதென்று அறிய, சார்பற்ற மேசை ஒன்றின் மீதுகிடத்தி குறுக்குவெட்டு ஆராய்க்சிக்குட்படுத்து வோமானால், ‘கலை கலைக்காகவே’ எனும் கூற்றிலிருந்து விலகி உயிரற்ற கசாப்புக்கடை ஆடுகளாக தோலுறிக்கப்பட்டிருப்பதும், சதா எதிரியை உருவாக்கி நிறுத்தி வைத்து சப்பையனும் சவலையனும் பீமனையும் பகாசூரனையும் சுண்டுவிரலால் குத்துவதும், வெட்டுவதும், சுடுவதும், வெடி வைத்துத் தகர்ப்பதுமாக…, வெறியை பத்தவைக்கும் ஆக்ரோஷமான உலைக்களத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தால் பார்வையாளர்களின் புலன்களும் தீய்ந்து போய்தான் இருக்கிறது என்பதை உணரலாம். உச்சபச்ச ஒலி, கண்ணைப் பிடுங்கும் ஒளி, மனதைப் பிராண்டும் கதை என extreme பதிவுகளே வளர்ச்சியாக கலையில் வழக்கத்தில் இருப்பதற்குத் தோதாக, அது சவாரி செய்யும் தொழில்நுட்பக் குதிரையும் சலைத்ததாக இல்லை. பிரமாண்டங்களாக வித்தியாசத்தையும், வித்தியசமாகப் பிரம்மாண்டங்களையும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருப்பதை தொழில்நட்ப முன்னேற்றம் என மதிமயங்கி மிரண்டுபோய் அடிமையாவதற்கு ஓர் மாற்றத்தைக் காண்பிப்பது ‘தி ஆர்டிஸ்ட்’ படத்தின் உட்கருத்தாக தோன்றுவது நம்பகத்திற்குரியதாகவே இருக்கிறது.

அதனால் பின்னோக்கி நகர்தலை தாழ்நிலையில் வைத்துப்போசப்படும் கடந்துவந்த அனைத்து அறிவும் கண்டுபிடிப்பும் எவ்வளவுக்கெவ்வளவு தவறான அபிப்பிராயம் என்பதை ஆர்டிஸ்ட் வாயிலாக உணர்ந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. கூடங்குளத்தை ஆதரிப்பவர்களுக்கும் ஆதரிக்காதவர்களுக்கும் கதைசொல்லி புரியவைக்கிறது இந்த படம். ஆயிரங்கோடி பணத்தைச் செலவழித்துவிட்டதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு புலம்பவேண்டாம் என்கிறது. அணு உலையில்லாத உலகில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பளிச்செனக் காட்டுகிறது. என்ன தான் நவநாகரிக அடுப்புகள் வந்தாலும் மீன் குழம்பை சட்டியில் சமைத்து உண்டு ருசிக்கவேண்டும். மெல்லிய காதலை கலையின் மீதான ஆழ்ந்தக் காதல் சுமந்துசெல்லும் ஆர்டிஸ்ட் படத்தின் கதை, எல்லா நல்லச் செயல்களையும் நவீனமென்ற ஆயுதத்தால் கிழித்தெறியாதிருக்க மனதிற்கு உற்சாகம் தருகிறது, திரும்பவும் பழைய நிலைக்குச் செல்வது எளிது என்றும், அதில் சேதாரம் குறைவு என்றும் மிகவும் பளிச்சென கட்டப்பட்ட ஒரு கட்டிடம், ஆரடிஸ்ட்.

அறிவியல் வளர்ச்சியால் அவயங்களைப் பயன்படுத்தாமல் அனைத்து வேலைகளையும் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கி நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து மறைந்துவிடவேண்டும் என்பதாகத் தான் இப்போ இருக்கிறது மனிதர்களின் வாழிசம். மின்சாரம் நிற்கும் ஒரு கணம் நம் இதயம் (ஒரு நிமிடம்) நின்று உயிர்பெறும், அததன் வலுவைப்பொருத்து. ஆட்டோவோ பஸ்சோ வராத ஒரு கட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து படபடத்து துடித்து இதயம் நம்பியிருக்கும் இயந்திரங்களுக்கு அப்படியென்ன உயிரோடு தொடர்ப்பு இருக்கவேண்டியிருக்கிறது? இருந்தாலும் செல்போன் சரியாக வேலைசெய்யாதபோது தொடர்பு எல்லைக்கப்பாலோ, சுவிட் ஆஃப் செய்திருப்பதாகத் தகவல் வந்தாலோ ஏற்படும் கோபமும் நடுக்கமும் மேற்படிக்காண நோய்கள் குடியேறக் காரணமாக இருக்கிறது. இது இல்லையேல் என்னால் வாழமுடியாது என்ற தேவை நரம்பில் தொங்கும் வாழ்க்கையிலிருந்து மனிதர்களை பின்னோக்கியும் சென்று வாழலாம் என்பதற்கான சாத்தியத்திற்கான நூலை எடுத்து வைக்கும் ஆர்ட்டிஸ்ட் படம் வெறும் கலரிலிருந்து கருப்பு வெள்ளைக்குத் திரும்பிய படம் மட்டுமல்ல. கருப்பு வெள்ளை ஊமைப்படத்தின் வார்த்தைகளை மீறிய ஒரு வாழ்தளப்புரிதலை நமக்கு புரியவைப்பதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நாம் வாழாத அல்லது வாழ நினைக்கிற வாழ்க்கையைத் தான் பேசுகிறோமே அன்றி வாழ்வதை ஒருபோதும் பேசுவதே இல்லை. பேசுவதையும் வாழ்வதில்லை. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியால் முன்னே நிற்கும் நபரோடு உரையாடல் கொள்ளும் தொடர்பு பொய்யாகவும் நம் புலன்கள் தொடர்புகொள்வது மெய்யாகவும் கருப்பு வெள்ளையாக வேறுபட்டுக்கிடக்கிறது. அறுபட்டும் துடிக்கிறது. அதனால் தானோ என்னவோ மௌனம் நிறைய பேசுவதாக கவிதைகள் தூக்கிப்பிடிக்கிறது.

அணு ஆயுதம் மட்டுமே சனத்தொகையின் எல்லாத்தேவைகளையும் கொடுக்க வல்லது என்பது எவ்வளவுக்கெவ்வளவு நிரூபிக்கப்படுகிறதோ அதைவிட சற்றுக்கூடதலாக மீட்கமுடியாத இழப்புகளான உயிர்களை இழக்கிறோம் என்பதை ‘பணம் போகிறதே பணம் போகிறதே’ என கூக்குரலிடுபவர்களுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது. ‘நீ சாகப்போவதில்லை. உன்னை நாங்கள் பல வழிகளில் பாதுகாக்கிறோம்’ என்பவர்கள் இதுவரை யாரையும் காப்பாற்றியதில்லை. எல்லா இழவுகளும் நடந்தேறியபின் போன உயிர்க்காக இழப்பீட்டுத் தொகையை தாரைத்தப்பட்டையோடு தெருமுனையிலிருந்து கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு பணத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உறவையும் தெளிவாக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள், பிணவீட்டில். பணம் தான் எல்லாம். அது கொலை செய்தாவது பெறுவேன் என்பதுதான் இப்போதைய பணப்போய்களின் கொள்கையாக இருக்கிறது. இங்கே போர்கள் நிறைய நடந்திருக்கலாம், அணுகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் ஆனாலும் மனிதர்கள் உலகில் தோன்றித் தோன்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், எல்லாவற்றையும் மறந்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி நினைவு நாளன்று கூடிநின்று உள்ளுக்குள் நடிகையின் பிம்பத்தோடு வெளியே கோரஸாக வார்த்தைகளைப் பிரயோகித்துப் பிரார்த்தனை செய்தபடி. காந்தியின் அகிம்சையால் நாட்டைக் காப்பாற்றினார் என்றால், நாட்டைக் காப்பாற்றுவதாக பதிவி கேட்டு வாசல் முன் நின்ற அந்தக் கொலைகார கொள்ளைக்கார அரசியல் மிருகம் ஏன் நம்மை இம்சித்து நம் நாட்டின் சொத்தைச் சுரண்டவேண்டும்? வர்ணஜாலம்காட்டும் இப்போதைய இலவசங்கள் ஒரு நாள் விஷமென உமிழப்பட்டு transparent அரசியல் நம்மை Black and white ஆக மாறி ஆண்டு காப்பாற்றும்.

சரித்திரம் என்பதெல்லாம் முடிந்துபோன பழையக் கதைகள் என்ற தொனியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு நேற்றைய நிகழ்வுகளின் தொடர்ச்சியான இன்றைய நிகழ்வின் நகர்வு அனைத்திற்குமான உயிர் சக்தியாக இருப்பதால் காலத்தை கொன்று போடும் இடமாக இவ்விடத்தை நாம் அவதானிக்கலாம். அறிவு முன்னும் பின்னும் போக வல்லது என்பதை நிரூபித்துவிட்ட ஆர்ட்டிஸ் இனி புதியது என்று உலகில் ஒன்றுமே இல்லை என்பதையும் தான் கண்டுபிடித்தக் கருத்தாக முன்வைத்துவிடுகிறது. ரகசியமாக. ஒரு வேளை பிரக்ஞையில்லாமல் கூட.

அரியநாச்சி

Series Navigationஆணுக்கும் அடி சறுக்கும்…!கருணாகரன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *