சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்

This entry is part 22 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் !

2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்:

“வஸந்த் முதலில் கதையில் தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆக வில்லை. வஸந்த் பெண்களை பார்த்தால் சற்று அசடு வழிவதோடு சரி (நாம் எல்லோருமே தானே!) ”

கதை

இனியா என்கிற பெண்ணை காதலிக்கிறான் வஸந்த். இனியாவின் தந்தை ஒரு வரலாற்று பேராசிரியர். அவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை கடத்தி போகிறது ஒரு கூட்டம். அந்த கட்டுரை வேண்டும் என அவர் சொன்னதால் அதை தேடி போகின்றனர் வஸந்தும் கணேஷும்.

அந்த கட்டுரையில் ராஜராஜன் கிணறு பற்றி எழுத பட்டுள்ளது என அறிந்து அந்த கிணறு இருக்கும் உக்கல் என்கிற கிராமத்துக்கு செல்கின்றனர் கணேஷ் & வஸந்த். அங்கு வினோதமான பல அனுபவங்கள் கிட்டுகின்றன. கிணற்றில் புதையல் உண்டா, தங்க காசுகள் உண்டா என்கிற கேள்வி எல்லாம் தாண்டி, அந்த கிணற்றின் நீருக்காக தான் அவ்வளவு போராட்டம் என்பது தெரிகிறது. அப்படி என்ன அந்த நீரில் விசேஷம், அதை வைத்து என்ன செய்கிறார்கள் வில்லன்கள் என்பது கதையின் இறுதியில் தெரிகிறது.

நாவலின் இறுதியில் இனியா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்க, வஸந்த் அடுத்த காதலுக்கு தயார் ஆகிறார் !

கிணறு குறித்த அந்த சஸ்பென்ஸ் செமையாக உள்ளது. அது என்ன என அறியும் ஆவலிலேயே பக்கங்கள் பறக்கின்றன. அது தெரியும் போது நமக்கே வியப்பாக தான் உள்ளது

வஸந்த் ஸ்டைல் குறும்புகள் சில :

“என்னமா எழுதிருக்கார் மகாகவி பாரதி. தலைப்பாவை விலக்கி தலையை தடவி கொடுக்கணும் போல இருக்கு பாஸ் ”

” என் பேரு ரங்காச்சாரி. சமீபத்தில் தமிழ் நாட்டில் ஜாதி பேர் கூடாதுன்னதால் ரங்கா. வீட்டில் கூப்பிடுறது ‘…ங்கா’ ”

ஆங்காங்கு சுய எள்ளலும் உண்டு ” வர வர சுஜாதா கதை நிறைய படிக்க ஆரம்பிசிட்டீயா நீ? “. இன்னொரு இடத்தில் ” வேண்டாம் அந்த வார்த்தை சொல்லாதே தொடர் கதையை பாதியில் நிறுத்திடுவாங்க”

நூலகம், மருத்துவமனை என தான் போகும் இடமெல்லாம் பெண்களிடம் கடலை போடுவதும், தன் நகைச்சுவை பேச்சால் பெண்களை கவர்வதும் என வஸந்த் எப்போதும் போல் வசீகரிக்கிறார்

அரிதாக இந்த கதையில் வஸந்துக்கு கல்யாணம் என்றும், பிறிதோர் இடத்தில வஸந்த் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க போவதாகவும் சொல்கிறார். இரண்டுமே நடக்க வில்லை. (வஸந்த் இறக்க போகிற மாதிரி ஒரு வாரம் முடித்த போது ” வஸந்தை கொன்று விடாதீர்கள்” என பலரும் தந்தி அடித்ததாக சுஜாதா சொன்னது.. நீங்களும் அறிந்திருக்கலாம்)

சோடியம் ஹைட்ராக்சைட் , சோடியம் மானோ சல்பேட் என அறிவியலுக்குள் சென்று விளக்கும் போதும், எளிமையாக சுவாரஸ்யமாக சொல்வதில் தான் சுஜாதா நிற்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் படித்து முடித்தேன். செம விறுவிறுப்பு

கணேஷ் -வஸந்த்தின் துப்பறியும் நாவலை சுஜாதாவின் வழக்கமான பாணியில் வாசிக்க விரும்பினால் அவசியம் வாசியுங்கள் !

************
நூல்: வஸந்த் வஸந்த்
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 176
விலை: ரூ. 100

Series Navigationஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *