2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.

This entry is part 5 of 44 in the series 22 ஏப்ரல் 2012

(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது)

முன்னுரை:

தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும் என்றோ, இப்படி இருக்க வேண்டும் என்றோ நமக்குச் சொன்னவர்கள் அதிகம் இல்லை. ஜோசியர்கள் தனிப்பட்டவர்களுக்குச் சொல்லுகிறார்கள். சமுகத்திற்குச் சொல்லுவதில்லை. அரசு பட்ஜெட்டில் மட்டும் அடுத்த ஆண்டு என்றும் அடுத்த ஐந்தாண்டுகள் என்றும் எதிர்காலம் சிந்திக்கப் படுகிறது. மலேசியாவில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கென்று தீர்க்க தரிசனப் பொருளாதாரச் சிந்தனைகள் திட்டங்களாக வெளிப்படுத்தப் படுவது நடந்து வருகிறது.

பாரதி தமிழ் நாடு பற்றியும் தமிழர் பற்றியும் அதிகம் சிந்தித்து அவற்றை ஆசைக் கனவுகளாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இவற்றுக்கெல்லாம் அவர் காலக் கெடு ஒன்றும் வைக்கவில்லை. “வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்” என்னும் அவரது பாரதம் தழுவிய ஆசைகளும் இந்த 2000ஆம் ஆண்டில் பார்க்கும்போது எளிமையானவைகளாகத்தான் தோன்றுகின்றன. அவற்றில் பல நிறைவேறியிருக்கின்றன. பொருளாதாரத்தில் அவரது எளிய இலட்சியங்களை இந்தியா மிஞ்சியும் உள்ளது. தமிழை எண்ணித் “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற அவருடைய ஆசை நிறைவேறியதாகத் தெரியவில்லை. “தெருவெல்லாம் தமிழ் முழக்கம்” கூட தமிழ் நாட்டிலேயேகூட நிறைவேறவில்லை.

George Orwellஇன் “1984” நாவலை இன்னேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளலாம். 1984 நிகழ்ந்தபோது ஆர்வெல்லின் தீர்க்க தரிசனம் பலித்ததா என மேற்கத்திய நாடுகள் சுயவிமர்சனம் செய்து கொண்டன. ஓர் அடக்குமுறை மிகுந்த “பெரிய அண்ணன்” ஆதிக்கத்தில் உலகம் முடங்கியிருக்கும் என்னும் அவரது கணிப்பு சரியாக வரவில்லை. அவருடைய கணிப்புக்கு அண்மையாக வந்த சோவியத் ஆதிக்க முறைகளும் சிதைந்துவிட்டன.

இந்த வகையில் 2000ஆம் ஆண்டு நடந்து முடியவிருக்கும் தறுவாயில் அறிஞர் மு.வ. அவர்கள் எழுதிய கி.பி. 2000 நாவலை நாம் நினைவு படுத்திக கொண்டு அதனை மீள் பார்வை செய்வது தகும்.

கி.பி. 2000, 1947-இல் பதிப்பிக்கப்பட்ட நூல். அவ்வாறானால் மு.வ. காலத்தால் அரை நூற்றாண்டுக்கு முன் செல்ல விரும்பியுள்ளார். எந்த அறிஞருக்கும் இத்தனை கால வெளியைத் தாண்டி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுவதென்பது மிகச் சிரமமான காரியம்தான். (Orwell, 1984ஐ 1949இல் மு.வ.வுக்குப் பின்தான் எழுதினார். 35 ஆண்டுகள் முன்னோக்கி எட்டிப் பார்த்தார்.) உண்மையில் அடுத்த பத்தாண்டுகளில் ஒரு நாட்டில் என்ன நடக்கும் என்பதைக்கூட கணித்துச் சொல்லும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. ஓர் அனுமானமாக, விவேகத்துடன் கூடிய அனுமானமாகச் சொல்ல முடியும். ஆனாலும் இதில் எதிர்பாராதவை பல உள்ளன. இவற்றை முன்னறிந்து சொல்ல முடியாது.

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிந்தது. ஜர்மனியும் ஜப்பானும் உலக ஆதிக்கத்திற்குப் போட்ட கணக்குகள் பலிக்கவில்லை. நசுக்கப்பட்ட ஜப்பான் பின்னர் பொருளாதார வல்லரசாக வந்தது. சோவியத் யூனியன் உலகத்தை பொதுவுடைமை ஆக்கும் கொள்கையை மேற்கொண்டு பின்னர் வீழ்ந்து நொறுங்கியது. எண்ணெய் வளத்தால் அரேபியர்கள் உலகை ஒரு காலத்தில் விலை பேசினார்கள். சாதாம் உசெய்ன் என ஒருவர் வந்து அசுரனாக அட்டகாசம் செய்து அமெரிக்கக் கடவுள்களால் நசுக்கப் பட்டு அந்தக் கனவுகளை மண்ணாக்கினார்.

ஆளும் அரசுகளின் மாற்றம், வெளிநாட்டுப் பொருளாதாரங்களின் திசை மாற்றம், அறிவியல் கண்டுபிடிப்புகள், போர், இயற்கை அழிவு ஆகியவை யாருடைய கணிப்பையும் தடம் மாறிப்போகச் செய்யக் கூடியவை. எதிர்காலம் என்பது எந்த அடிப்படையிலும் உறுதியாகக் கணித்துக் கூறக் கூடிய பொருள் அல்ல. எனினும் சாதாரணர்கள் அதற்கு ஆசைப் படுவதையும் அறிஞர்கள் முயலுவதையும் தடுக்க முடியாது. ஆக்கப்படும் அந்நேரத்தில் நிலவும் உண்மைகள் அனுமானங்களுக்கு இட்டுச் செல்கின்றன. பெரும்பாலும் அந்த அனுமானங்கள் பொய்க்கின்றன.

இந்த அடிப்படைகளில் கி.பி. 2000த்தை மீள் பார்வை செய்யும் பொழுது நமக்கு முதலில் தோன்றுவது அந்தச் சிந்தனைகளில் உள்ள எளிமைதான். இதன் கதாநாயகர் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற சாதாரண மனிதர். மிகப் பண்பானவர். இரக்க சிந்தனை உள்ளவர். ஆனால் அன்றாட வாழ்வுக்குப் போராடும் ஏழை. ஆகவே இந்த நாவலில் வருகின்ற சிந்தனைகள் அவருடையவை என்று வெகுளியாக எடுத்துக் கொண்டால் இந்த எளிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவை நூலாசிரியரின் கருத்துக்கள் என எடுத்துக் கொண்டோமானால் இந்த சிந்தனைகளின் ஆழமின்மை நம்மை வருத்தவே செய்யும்.

நூல் பதிப்பிக்கப் பட்ட 1947இல் இந்தியாவும் தமிழ் நாடும் காலனித்துவத்தால் சுத்தமாகச் சுரண்டப்பட்ட ஏழைமைப் பிரதேசங்கள். இந்தக் கதாநாயகனின் வறுமையே அவன் சிந்தனைகளை ஆட்கொண்டிருப்பதால் அவனது எதிர்காலம் பற்றிய கனவிலும் வறுமை ஒழிப்பே முக்கிய கருப்பொருளாக இருக்கிறது.

இந்த கதாநாயகனின் எதிர்காலக் கனவில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு மத்திய அரசாங்கத்தால் நல்லெண்ண அடிப்படையிலும் பொதுவுடைமை முறையிலும் நடத்தப்படுகிறது. மூலப் பொருள்களை நாட்டின் தேவைகளுக்கு (மக்கள் தொகைக்கு) ஏற்பப் பங்கிட்டுக் கொடுத்தல் இந்த அமைப்பில் முக்கியமான அம்சமாக இருக்கிறது.

அரசாட்சி:

இந்த நாடுகள் ஓர் “உலகப் பேரவையால்” ஆளப்படுகின்றன. ஐக்கிய நாட்டு சபை போன்ற ஒரு அமைப்புத்தான். ஆனால் இது ஒரு புதிய ஏற்பாடு என்பதுபோல் காட்டப் படுகிறது. இந்த உலகப் பேரவையின் உறுப்பின நாடுகளுக்கு ஒரு மாதிரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப் படுகிறது: “ஒரு லட்சம் மக்கள் கொண்ட பகுதிகளையெல்லாம் ஊர் என்று வகுத்து ஓர் அரண்மனை ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வோர் அரண்மனையிலிருந்தும் இரண்டு இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து உலகப் பேரவைக்கு அனுப்புகிறார்கள். அப்படியே மக்களின் தொகைக்கு ஏற்ப உலக அரண்மனையில் இடம் பெருகிறார்கள். முன்னெல்லாம் நாட்டுக்கு இத்தனை உறுப்பினர் என்று கண் மூடிக் கொண்டு வகுத்தார்கள். அந்த முறை பொருத்தமற்றது. அதனால் சில நாடுகளுக்கு மிகுதியான செல்வாக்குக் கிடைத்தது. அந்த நாடுகளின் மேல் மற்ற நாட்டு மக்களுக்குப் பொறாமை இருந்து வந்தது. இப்போது பத்து ஆண்டுகளாக (1990 முதல்?)அந்தக் குறை தீர்ந்தது. உலகம் எல்லாம் எந்த நாட்டாராக இருந்தாலும், எந்த மொழியராக இருந்தாலும், அரண்மனைக்கு இரண்டு பேராக – நூறாயிர மக்களுக்கு இருவராகப் போய்ச் சேர்ந்து உலகப் பேரவை கூடி உலகத்தை நடத்துகிறார்கள். அதனால் எல்லாம் செம்மையாகி விட்டது. மூலப் பொருள் பங்கிடும் போராட்டமும் தீர்ந்தது” (பக்கம் 114).

2000ஆம் ஆண்டில் உலகப் பேரவையில் மொத்த உறுப்பினர்கள் 4,000 பேர் என்று அறிகிறோம் (பக். 115). இந்தக் கணக்குப்படி 2000ஆம் ஆண்டில் (ஒரு லட்சம் மக்களுக்கு இருவர் என்னும் அடிப்படையில்) உலக மக்கள் தொகை 200 மில்லியன் மட்டுமே இருக்க வேண்டும். இந்தக் கணக்கிலேயே சிந்தனையின் எளிமை துலங்கி விடுகிறது.

இந்தக் கணிதப் படி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உலகப் பேரவையில் மற்ற எந்த நாடுகளைக் காட்டிலும் அதிக உறுப்பியம் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் குறையும். குட்டி நாடுகள் கதி என்ன எனத் தெரியவில்லை.

ஐ.நா. அமைப்பில் அன்று உள்ள குறைபாடுகளே மு.வ.வின் இந்தக் கற்பனைத் திட்டத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. நாடுகளின் ஆதிக்க அதிகார அடிப்படையில் இல்லாமல் ஒரு proportional representation போல பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர் விரும்பியுள்ளார். ஆனால் அவர் நினைத்த படி மாற்றம் வந்திருக்கவில்லை. வருவதும் முடியாது என இப்போது தெரிகிறது.

மு.வ.வின் இந்த மானசீக 2000ஆம் ஆண்டில் தேசியம் என்பதும் நாட்டுப் பற்று என்பதும் கண்டிக்கப் படுகின்றன. “ஒரு காலத்தில் தாய் நாடு தாய் நாடு என்று நாடுகளைக் காரணம் இல்லாமல் பிரித்துக் கண்மூடித் தனமாக நாட்டுப் பற்றை வளர்த்து வந்தார்கள்” (பக்107). எந்த ஒரு ஊரிலும் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வாழ அனுமதிக்கப் படவில்லை (பக்.72). நாட்டுப் பற்றைக் கண்டித்த இதே வேகத்தில் சமயப் பற்றையும் அவர் கண்டித்தார் (பக்.109)

தேர்தல்:

அரண்மனை என்ற ஆளும் அமைப்புக்குத் தேர்தல் மூலம் ஆட்கள் சேர்க்கப் படுகிறார்கள். ஒவ்வோர் ஆயிரம் பேருக்கு ஒரு நிர்வாகக் குழு. தேர்தல் குலுக்கல் முறையில் நடை பெறுகிறது. கல்லூரிப் படிப்பு உள்ளவர்கள் மட்டும் தேர்தலுக்கு நிற்கலாம். உள்ளூர் நிர்வாகங்களுக்கு நடை பெறுகின்ற தேர்தல் மட்டுமே இங்கு பேசப்படுகிறது.

“இந்தத் தேர்தல் முறை நமக்குப் புதுமையானது அல்ல. இந்த முறைதான் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்ததாம். பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இப்படித் தேர்தல் (நடத்தியுள்ளார்கள்)” (பக். 89).

“இதுதான் சிறந்தது என்று இந்தப் பழைய தமிழ்நாட்டு முறையை இப்போது உலகத்தில் உள்ள மற்ற நாட்டு அரசியலாரும் கடை பிடித்து வருகின்றார்கள்” (பக்.90).

இப்படித் தேர்தல் நடைமுறைகளில் நிகழ் 2000இத்தில் பழங்காலத்துக்குத் திரும்பிப்போவது நடைபெறவில்லை. அரசியல் கட்சித் தேர்தல்கள் இன்னும் தீவிரம் பெற்று மேலும் குழப்பங்களையும் முறை கேடுகளையும்தான் அதிகரித்து வருகின்றன.

தேர்தலில் “புகழ் முதல்” என்பது ஒழிந்து விட்டது என்பது பற்றியும் மு.வ. பேசுகிறார். “புகழ் தேடுவதற்கு … தேர்தல், கட்சிப் பத்திரிகை, கட்சி ஒழுங்கு என்னும் மூன்றையும் பயன் படுத்திக்கொண்டு தகுதி இல்லாதவர்கள் புகழ் பெற்றார்கள். உண்மையாகவே தகுதி உடையவர்கள் பெயர்கள் மக்களுக்குத் தெரிய வழி இல்லாமல் இருந்தது” (பக்.92).

“அறிஞர்கள் மறுபடியும் ஒன்று பட்டுப் புது வழி அமைத்த போதுதான், தனி மனிதன் அளவற்ற செல்வம் சேர்க்க இடம் தருவது சமூகத்திற்கு எவ்வளவு கெடுதியோ, தனி மனிதன் அளவற்ற புகழ் தேட இடங் கொடுப்பதும் அவ்வளவு கெடுதியாகும் என்று உலகத்திற்கு உணர்த்தினார்கள். இந்தப் புது வழி வகுத்த பிறகுதான்… கட்சிப் பத்திரிகைகளும் கட்சி ஒழுங்குகளும் அழிந்தன” (பக். 93).

ஆகவே தனது லட்சிய எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்றே அவர் விரும்பினார். ஆனால் உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் “ஆல்போல் தழைத்து “அரசாக” வேரோடி” அமோகமாக இருக்கின்றன.

மு.வ.வின் லட்சிய உலகில் அறிஞர்களுக்குப் பெரும் இடம் கொடுத்திருக்கிறார். அவர்கள் ஆளும் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களே சட்டம் வகுத்து செயலாக்கவும் முடிகிறது. அறிஞர்கள் என்பவர்கள் எப்படி அறிஞர்களாகத் தீர்மானிக்கப் படுவார்கள் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் கைகளிலிருந்து அறிஞர்கள் கைக்கு அதிகாரம் எப்படிக் கைமாறும் என்பதும் தெரியவில்லை. அறிஞர்கள் அதிகாரிகளாக ஆகும்போது அதிகார வெறி வராதா என்பதும் சிந்திக்கப் படவில்லை. மு.வ.வின் கதாநாயகன் 53 ஆண்டுகள் quantum leap செய்து விட்டதால் இந்தச் சிறிய தொந்திரவு படுத்தும் விவரணைகள் பற்றி அவர் அக்கறை கொள்ள வேண்டி இருக்கவில்லை.

ஆனால் மு.வ.வின் இந்தச் சிந்தனை Arthur Clarkஇன் இப்படிப்பட்ட எதிர்காலம் பற்றிய அறிவியல் புனைகதையில் வரும் ஒரு சிந்தனையோடு ஒப்பிடத் தக்கது. அந்த சிந்தனையில் யார் ஒருவர் அதிகார பீடங்களுக்கு இடம் பிடிக்க பெரும் முயற்சி செய்கிறாரோ அவர் தேர்தலினின்றும் தடுக்கப் படுகிறார். அதிகாரத்தில் விருப்பில்லாத சாதாரண மக்களே வற்புறுத்தித் தலைவர்கள் ஆக்கப் படுகிறார்கள்.

கல்வி:

மு.வ.வின் லட்சிய உலகில் கல்வி முற்றும் அரசாங்கத்தால் அளிக்கப் படுகிறது. பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து அகற்றப் பட்டு விடுதிகளில் வைக்கப்படுகிறார்கள். ஆரம்ப, இடைநிலை, உயர்நிலக் கல்வி ஒரே கட்டிடத்தில். இந்த கட்டிட அடுக்குகள் நிலைக்கு ஏற்றாற்போல சிமிட்டி, உலோகம், பளிங்கு ஆகியவற்றால் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பொருள் வேறுபாட்டின் முக்கியத்துவம் என்ன என்பது விளக்கப் படவில்லை.

மாணவர்கள் அனைவரும் ஒழுங்காக வரிசைப் பிடித்து அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த அமைதியை கெடுக்கும் மாணவர்களுக்கு விடுமுறை கொடுக்கப் பட்டு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். கல்வியில் சிறக்கும் மாணவர்களுக்குப் பரிசும் இல்லை; குறைபாடுடையவர்களுக்குத் தணடனையும் இல்லை.

உயர்கல்வியில் அனைவரும் ஒரே மாதிரிப் பாடங்களையே பயில வேண்டும். உடலியல், தாவரவியல், விலங்கியல், பூகோளம், வரலாறு, சமுகவியல், உளநூல் என இவை மட்டுமே (பக்.104). எதிலும் specialisation என்பது இல்லை.

பொருளாதாரம்:

கி.பி. 2000இத்தில் குறிக்கப் படும் பொருளாதாரச் சிந்தனைகள் பெரும்பாலும் கம்யூனிசப் பொதுவுடைமைச் சிந்தனைகளை ஒத்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் பொதுவுடைமைச் சித்தாந்தங்களுக்குள் அமர்த்தி வைக்க அவர் விரும்பவில்லை. ஒரு சித்தாந்த சூனியத்தில் உள்ள பொதுவுடைமையாகவே அது உள்ளது.

இவர் மானசீக உலகில் பொதுச் சமையலறையிலிருந்துதான் எல்லாருக்கும் சாப்பாடு. வாகனங்கள் (கார்கள்) பொது. சாப்பாடும் போகுவரத்தும் வேண்டுவோர் அதற்குரிய சீட்டுக்கள் பெற்றுக்கொண்டு முறை வைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். “உணவுச் சீட்டு, உடைச் சீட்டு, நாடகச் சீட்டு, வாழ் மனைச் சீட்டு, உலகம் சுற்றும் சீட்டு, விடுமுறைச் சீட்டு, தவமுறைச் சீட்டு, ஓய்வுச் சீட்டு” (பக். 75). வேலைகள் கூட பொதுவாக இருக்கின்றன. “இப்போது வேலைகளைப் பொதுவாக்கி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் செய்கிறோம்” (பக். 70). வெளியே போகும் போது பொது உடை அணிந்தே போக வேண்டும். ஊரின் புதிய வருகையாளருக்கு 20 பக்கம் கொண்ட “விதிப் புத்தகம்” கொடுக்கப் படுகிறது (பக்.49). மொத்தத்தில் கட்டளைகளின் கீழ் இயக்கப் படும் இயந்திரத் தனமான சமுதாயமாகவே இது இருக்கிறது.

“மூலப் பொருள் பங்கீடு” எனபது பற்றி மு.வ. பேசுகிறார். இதைபற்றிய எந்த விவரத்தையும் அவர் கொடுக்கவில்லை. மூலப்பொருள்கள் என்பவை யாவை என்று கூட அவர் சொல்லாமல் விட்டு விடுகிறார். “முன்னெல்லாம் எந்த நாட்டுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டுக் கணெக்கெடுப்பார்கள். அது சில நாடுகளில்தான் கிடைக்கும். அனால் அது எல்லா நாட்டாருக்கும் வேண்டும்… இப்போது முடிவு செய்யப் படுவது அவ்வாறு அல்ல. அந்தந்த ஊர்களிலும் நாடுகளிலும் மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கெடுத்து அதற்குத் தகுந்தாற்போல அந்தந்தப் பகுதிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்திடுவார்கள்” (பக். 113).

சமுதாய வாழ்வு:

தம் உலகில் மு.வ. காதல், திருமணம், குடும்பம் ஆகிய மூன்றையும் ஒழித்துவிட நினைத்திருந்தார். பிள்ளைகள் விடுதிகளில் வளர்க்கப் படுகிறார்கள். விடுமுறை காலத்தில் மட்டுமே பெற்றோர்களிடம் விடப் படுவார்கள். காதல் முதலில் போற்றப்பட்டு பின்னர் இதனால் மரணங்கள் நிகழ்வதால் கைவிடப்பட்டது. திருமணம் போன்ற உடன்பாடுகளும் இல்லை (பக்.110). வீடுதோறும் சமையல் அறைகள் ஒழிக்கப் பட்டன. பொதுக் கூடத்தில்தான் சமையல். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் உலகப் பேரவை முடிவு செய்கிறது.

ஒரு பண்பட்ட உள்ளம் உடைய அறிஞரான மு.வ. காதல், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வை ஒழிக்க நினைத்துள்ளார் என்பது அதிர்ச்சி தரக் கூடியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகள் பெரும் இயந்திரங்கள் போல ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.

மு.வ. நினைத்திராதவை:

இப்படிப் பல எளிய தீர்வுகளை மு.வ. சொல்லிச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் கண்ட உலகம் மிக சிறியதாக இருக்கிறது. உலகம் இத்தனை பெரிதாகும் விரிவாகும் பரபரப்பாகும் என்பதை அவரால் கண்டறிந்திருக்க முடியவில்லை. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கூட அவரால் சரியாகக் கணித்திருக்க முடியவில்லை.

அவர் அன்று நினைத்துப் பார்த்திராத பல சமுதாய, அறிவியல், பொருளாதார வளர்ச்சிகள் இந்த 2000ஆம் ஆண்டில் நிதர்சனமாய் விட்டன. முக்கியமாக அவருடைய பொதுவுடைமைக் கனவு முற்றாகப் பொய்த்துப் போனது. உலகில் இன்று மூலதனத்துவமும் சந்தைப் பொருளாதாரமும் லாப ஈட்டலுமே முதன்மையாக உள்ளன. இதுதான் உலகிற்கு வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது.

மு.வ. அறிவியல் இந்த அளவு வளரும் என்றும் முன்னறிந்திருக்கவில்லை. கணினி மக்களின் வாழ்க்கையை மிக மாற்றி இருக்கிறது. சில வசதிகளைச் சமப் படுத்தியிருக்கிறது. பல வசதிகளின் வேற்றுமையைப் பெருக்கியிருக்கிறது.

உலகப் பொருளாதாரம் செல்வ – வறிய வேறுபாட்டை மிகப் பெரியாதாகியிருக்கிறது என்றாலும் அடிநிலை வறுமையைக் குறைத்திருக்கிறது.

கைத்தொலை பேசி, வீட்டுக்கு வீடு கார் எனபனவும் அவர் எதிர் பாராதவை. அளவளாவி என்னும் videophone போன்ற கையில் எடுத்துச் செல்லும் கருவியை அவர் சொல்லியிருக்கிறார். இது மட்டுமே இன்னும் அதிகமாக நடைமுறைக்கு வரவில்லை.

தேசியமும் நாட்டுப் பற்றும் அவர் விரும்பியதற்கு மாறாக வீறு கொண்டு வளர்ந்துள்ளன. காதல், திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புகள் மேலும் அழுத்தமாகியுள்ளன. எங்கே இவை குலைகின்றனவோ அங்கே சமுதாயச் சீர்குலைவே அதிகம் காணப் படுகிறது என்பதும் இப்போது விளக்கமாகி வருகிறது.

முடிவுரை

ஆனால் மு.வ.வைக் குறை சொல்ல முடியாது. அவர் வளர்ச்சியை விட அமைதியை அதிகம் நாடினார். சவால்கள், சாதனைகள் உலகில் இருப்பதை விட சமாதானமும் சாந்தியும் இருப்பதையே விரும்பினார். முன்னேற்றத்தை விட சமத்துவத்தை அதிகம் வலியுறுத்தினார். அதுவும் மேலிருந்து கட்டளை இடப்பட்டு நிர்ணயிக்கப் பட்ட சமத்துவம். ஆனால் சமத்துவம் என்பது எந்தக் காலத்திலும் நடைமுறை சாத்தியமில்லாதது என்பது அவருக்குத் தோன்றவில்லை.

அவர் உலகில் தனி மனித சுதந்திரம் குறைவு. தனிமனித முயற்சியும் குறைவு. திருமணமும், குடும்பமும் சமையலும் அவற்றினால் வரும் சந்தோஷங்களும் இல்லாத உலகம்.

மேலிருந்து கீழே பாயும் கட்டளைகளினால் நெறிப்படுத்தப் பட்ட வாழ்வு அது. தனி மனித சுய வளர்ச்சியிலும் சுயத் திறமை வெளிப்பாட்டிலும் நம்பிக்கை இல்லாதவராக அவர் இருந்திருக்கிறார்.

அவர் உலகம் ஓர் ஆசிரமம் போல இருந்திருக்கும். அதில் உற்சாகத்தையோ கேளிக்கையையோ நாம் பார்த்திருக்க முடியாது. வண்ணங்கள் இல்லாத, ஆரவாரங்கள் இல்லாத கருப்பு வெள்ளைக்கு இடைப்பட்ட சாம்பல் பூத்த உலகம்.

மு.வ.வின் கனவு உலகம் மிக எளிமையானதுதான். உலகின் குழப்பமான பிரச்சினைகளுக்கு மிக எளிய தீர்வுகள் எற்பட முடியும் என அவர் நினைத்திருக்கிறார். அந்த எளிய சிந்தனைகள் அனைத்தும் நிறைவேறாமல் போனதைத்தான் இந்த நிகழும் 2000ஆம் ஆண்டு உறுதிப் படுத்தியுள்ளது.

அவை நிறைவேறாமல் இருந்தது நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒருவகையில் Orwell ஆதிக்க சமுதாயம் ஏற்படும் என்று கவலைப்பட்டு எழுதியதற்கு மாறாக, மனிதர்கள் தன்னிச்சையாக அந்த ஆதிக்க சமுதாயத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே மு.வ கருதியதாகத் தோன்றுகிறது.

(முடிந்தது)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *