விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு

This entry is part 25 of 28 in the series 29 ஏப்ரல் 2012

 

1927 மார்ச் 6  அக்ஷய  மாசி 22  ஞாயிற்றுக்கிழமை

 

காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது. அதை அனுபவிக்க விடாமல், போக வேளையில் வாசல் கதவைத் தட்டி மூட்டு வலித் தைலம் கேட்கிற அண்டை வீட்டுக்காரன் போல் இந்த மனுஷர்கள் கரடி விடறான்களே?

 

எரிச்சலோடு ஒரு கவளத்தை அழுத்தமாகப் பிசைந்தேன். அவன் விரையைப் பிசைந்து கூழாக்கினாலும் பாதகமில்லை. பாதிரி சொல்ற மாதிரி இந்த அசத்துகள் நரகத்துக்கோ அதுக்கு அப்பாலுமோ அரையைப் பொத்திக் கொண்டு போகட்டும்.

 

சாமி கப்பல் சாமி தானே?

 

திரும்ப விசாரித்தான் பக்கத்தில் இருந்தவன். நான் சாப்பிட்ட படிக்கே அவனைப் பார்த்தேன். தெருத் தெருவாக அலைந்து திரிந்து பட்டுத் துணி விற்கிற சீனாக்காரன் போல தொங்கு மீசையோடு ஒரு நோஞ்சான்.

 

தெரிஞ்சு உமக்கு என்ன ஓய் ஆகப் போறது? சாப்பிட வந்தீர் சாப்பிட்டுட்டுப் போமே.

 

அதிகாரமாகவே சொன்னேன். இவன்களை உடனுக்குடன் கருவறுத்து விடணும்.

 

அட சாமி கோபிச்சிக்கறாங்க பாரு செல்லையா.

 

அவன் பக்கத்தில் இருந்த சிநேகிதனிடம் குறைச்சல் பட்டுக் கொண்டான்.

 

நான் நிமிர்ந்தே பார்க்காமல் இலையில் விழுந்த ரசம் தரைக்கு வழியாமல் சாதத்தைப் பரப்பி விட்டு, கூடுதலாக ஒரு சிராங்காய் ரசத்துக்கு உள்ளங்கையைக் குவித்தேன். சுடச்சுட விழுந்த தக்காளி அமிர்தத்தை ஆசமனீயம் போல உறிஞ்சின போது செல்லையா என்று சொல்லப் பட்டவன் மெல்லச் சிரித்தது கேட்டது.

 

பாவம் பசி அடங்க சாப்பிடற நேரத்துலே அதையும் இதையும் கேட்டு நச்சரிச்சா அவர் தான் என்ன பண்ணுவாருங்கறே. கப்பல்லே வெறும் அரிசியை எச்சியிலே ஊற வச்சுத் துண்ருப்பாரு. சோறு பார்த்தா சுகப்படாதா என்ன?

 

நான் கப்பலில் என்ன தின்று எழவைக் கூட்டினேன் என்கிறதில் இவன்களுக்கு ஏன் அக்கறை? கோபமாக எகிற தலையை நிமிர்த்தியபோது கட்டித் தயிரை இலையில் தாராளமாக வார்த்து, பரிமாறிய பையன் வாயை அடைத்து விட்டான்.

 

அந்த ரெண்டு மனுஷ்யர்களும் எழுந்து போவதை ஓரக் கண்ணால் பார்த்தபடி, ஒரு குத்து காரம் வழிகிற எலுமிச்சங்காய் ஊறுகாயை வாங்கி பட்சணம் மாதிரி சாப்பிட்டு விட்டு தயிர் சாதத்தைத் தொட்டேன். ஓட்டல் வைத்த புண்ணியவான் மதிமோசம் பண்ணி போன வருஷம் போட்ட ஊறுகாயை வைத்து ஒப்பேத்தினவனாக இருந்தாலும் சரிதான். அவனுக்கு சகல சுகமும் கிட்டட்டும்.

 

இலையை எடுத்துண்டு போய்ப் போட்டுடுங்கோ அண்ணா. நம்ம பக்கத்து ஆசாரம் இன்னும் மாறலியே. அண்ணா சீமைக்குப் போய்ட்டு வந்தாலும் அதானே ஸ்திதி?

 

மோர் வாளியை பக்கத்தில் வைத்து நசுங்கின பித்தளை லோட்டாவில் ரெண்டு கரண்டி பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை கிள்ளிப் போட்டு கடுகு தாளிச்சு விட்ட மோரை வார்த்தபடி சொன்னான் பையன்.

 

இவ்வளவு திவ்யமான மோர் கொடுத்தால் என்னோட எச்சல் இலை மட்டும் என்ன, அங்கே உட்கார்ந்து கொட்டிக் கொண்ட அத்தனை சும்பன்களின் எச்சலையும் வாரி வழித்துப் போய்ப் போட்டிருப்பேன். கப்பலில் மாசக் கணக்கில் எச்சல் தட்டு அலம்பின கையில்லையா இது ரெண்டும்.

 

இந்த மூட்டை முடிச்சை எல்லாம் ஒரு நிமிஷம் பாத்துக்கோடா குழந்தை.

 

பையனை ஏவி விட்டு கையில் மடக்கிப் பிடித்த எச்சில் இலை காலில் வழியாமல் பின்கட்டுக்குப் போனேன்,

 

தொட்டியில் இலையை விட்டெறிந்து விட்டு இரும்பு வாளியில் நிறைத்து வைத்திருந்த அசுத்த ஜலத்தில் கையும் வாயும் கழுவுகிறதாக பாவனை செய்து விட்டு உள்ளே வரும் வரை மனசு பை பை என்று பரபரத்துக் கொண்டிருந்தது.

 

மோர் வாளியோடு காவலுக்கு நின்ற பையனுக்கு பையில் தேடி நாலணா தட்சணை கொடுத்தேன். வெகு சந்தோஷமாக வாங்கி குப்பாயத்தில் இடது கையால் முடிந்து கொண்டு, ராத்திரி பலகாரம் பண்ண வருவேளா அண்ணா என்று பிரியத்தோடு விசாரித்தான். ராத்திரிக்கு அடை, பூஷணிக்காய் சாம்பார், பீர்க்கங்காய் சட்னி.

 

அவன் சொன்னபோதே நாக்கில் எச்சில் ஊறினது. கர்ப்பிணிப் பொண்ணு போல நிறைந்து புரண்டு கொண்டிருந்த வயிறு பாதகா சண்டாளா கொஞ்சம் என்னை சும்மா விட மாட்டியா என்று தீனமாக ஓலமிட்டது.

 

திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து ரெண்டு வெத்திலை மென்று விட்டு கிளம்பலாம் என்று நினைத்தேன்.

 

வெற்றிலைத் தட்டுக்குப் பக்கத்தில் அந்தத் தொங்கு மீசைக்காரன். அட பழியே, இவன் சாப்பிட வரலை. என்னோடு ஒட்டுணி போல ஒட்டிக் கொண்டு பின்னாலேயே வந்திருக்கான். என்ன திட்டமோ எழவெடுத்தவனுக்கு?

 

இவனைப் பார்த்து ஓடினால் இளக்காரமாகி விடும். என்னைத் தொந்தரவு செய் என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த மாதிரி காரியம் அது. ரெண்டு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு கிளம்பலாம். நிஜமாகவே சரக்கு வாங்க வந்தவன் என்றால் ஆள் ஆழம் பார்க்க நூல் விட்டுப் பார்த்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது உத்தமம்.

 

பைகளை பத்திரமாக சுவரோரம் வைத்தேன். அதுகளுக்கு அண்டக் கொடுக்கிற மாதிரி சுவரில் சாய்ந்து கொண்டு வெத்திலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்த மனுஷனை சாதாரணமாகப் பார்த்தேன்.

 

சாமி, கப்பல் சரக்கு ஏதாச்சும் உண்டுமா?

 

நான் கப்பல்லே வந்தேன்னு உனக்கு யாரு சொன்னது?

 

அவன் என் முதுகுக்குப் பின்னால் ரெண்டு பெரிய தார்ச்சீலைப் பையையும் காட்டினான். கப்பல் படம் அடித்து பெயர் எழுதின பை அந்த ரெண்டும். கப்பலில் ஏறி வருகிறவர்களுக்கு இனாமாகக் கொடுக்கிற வழக்கத்தை உள்ளே உத்தியோகம் பார்த்த எங்களிடம்  கேப்டன் துரை ஆரம்பித்து வைத்திருந்தார்.

 

அதெல்லாம் பழந்துணிப்பா. அட்டுப் பிடிச்சு கப்பல் அழுக்கும் சமுத்திர நாத்தமுமா சுருட்டி வச்சது. வண்ணாந்துறையிலே கொடுத்துத் துவைச்சு எடுத்துண்டு போகணும்.

 

நம்ம சாமி நல்ல சாமி. சாமர்த்தியமாத்தான் பேசுவாக. நம்ம சமீந்தார் ஐயா மாதிரி.

 

புளிமூட்டை மாதிரியான இன்னொரு மனுஷனும் தூண் ஓரத்தில் இருந்து முன்னால் வந்து உட்கார்ந்தான்.

 

என்னப்பா சாமர்த்தியத்தைக் கண்டே.

 

நான் வெகுளியாகக் கேட்டேன்.

 

அது யார் ஜமீந்தார்? இந்த சம்பாஷணையில் அவர் எங்கே வந்தார்?

 

சாமிகளே, நாங்க, சிங்கம்பட்டி ஜமீந்தரோட ஜமீன் உத்யோகஸ்தர்கள்.

 

தொங்கு மீசை கதை சொல்கிற தோரணையோடு ஆரம்பித்தான்.

 

மாசம் ஒரு தடவை டாக்டர் கிட்டே ஊசி போட்டுக்க சமீந்தார் துரை வரும்போது கூடவே ஒத்தாசைக்கு வருவோம். வைத்தியத்தோட, இங்கே கப்பல் வர்ற நேரமா இருந்தா துரைக்கும் அம்மாளுக்கும் செண்டு பாட்டில், சோப்பு இப்படி ஒஸ்தியான சரக்கு அதுவும் நம்பிக்கையான மனுஷங்க மூலம் கெடச்சா வாங்கறதுலே துரைக்கு அலாதி பிரியம்.

 

நான் நம்பிக்கையான மனுஷன்னு உனக்கு யாருப்பா சொன்னது?

 

கேட்டபடி இன்னொரு வெத்திலையில் சுண்ணாம்பு தடவினேன். அவனை நிமிர்ந்து பார்த்தே பேசக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டேன். கொஞ்சம் போல அலட்சியம் காட்டுவதும் நல்லதுக்குத்தான். நம் ஸ்திதி மெச்சமானதென்றும், நாம் யாதொன்றுக்கும் பயப்படுகிறதில்லை என்றும் அடுத்தவனுக்கு எடுத்துக் காட்டும்.

 

பிராமணாள் சாப்பிடற இடத்திலே இருட்டுலே உட்கார்ந்து அவதி அவதியா வழிச்சுத் திங்காம, சகல ஜாதியோடும் வெளியிலே உட்கார்ந்து போஜனத்தை ருஜிச்சு சாப்பிடற போதே ரொம்ப வித்தியாசமான மனுஷ்யர்னு புரிஞ்சு போச்சு. என்னமோ மனசுக்குள்ளே சொல்லுது. இந்த ஆள் நம்பிக்கைக்கு உரியவர். ஜமீந்தார் பேசிப் பழக தகுதியானவர்னு தோணிச்சு. தப்புன்னா சொல்லுங்க சாமி.

 

இவ்வளவு பெரிய கிரீடத்தைத் தலையில் வைத்ததுக்கு அப்புறம் கழட்டச் சொல்ல முடியலை.

 

ஜமீந்தார் எங்கே இருக்கார்?

 

நான் கேட்க வேணுமென்றே காத்திருந்தது போல அவர்கள் எதிர் சாரியில் கையைக் காட்டினார்கள்.

 

அடுத்த தெருவில் ஒரு மாடி வீட்டை புதுசாகக் கட்டுவித்து இங்கே வரும்போதெல்லாம் தங்கி இளைப்பாறிப் போக ஏற்பாடு பண்ணியிருக்கார் எஜமான். ரெண்டே எட்டுலே போய்ட்டு வந்துடலாம். வரீங்களா சாமி?

 

நான் பைகளைத் தூக்கிக் கொண்டேன். அந்த ரெண்டு பேரும் ஆளுக்கு ஒண்ணு எடுத்து வருவதாகச் சொன்னபோது திடமாக வேணாம் என்று சொல்லி விட்டேன். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருந்தாலும் மகாலிங்க ஐயனுக்குத் தெரியும். எத்தனை ஊர்த் தண்ணி குடிச்சவன்?

 

உண்ட மயக்கத்தில் கண் கிறங்கிக் கொண்டு வந்தது. வேணாம்டா மகாலிங்கம். தூங்கி விழுந்தா அப்புறம் எழுந்திருக்கவே முடியாது.

 

எதிர்ப் புறத்துத் தெரு விசாலமானது. அங்கே இருந்து சின்னதும் பெரிதுமான குறுக்குச் சந்துகள் பத்தடிக்கு ஒன்றாக ரெண்டு பக்கத்திலும் பிரிந்து வளைந்து நெளிந்து எங்கேயோ முடிவதற்காகப் போய்க் கொண்டிருந்தன.

 

கோடியில் மோட்டார் கார் நிற்கிற ஓரு மாடி வீட்டைச் சுட்டிக் காட்டினான் புளிமூட்டை மனுஷன்.

 

சமீந்தார் எஜமான் அங்கே தான் இருக்கறாப்பல.

 

வசதியான இடம் தான். சோப்பு, சீப்பு, கண்ணாடி இப்படி சொத்தை சாமான் எல்லாம் கிடக்கட்டும். மனுஷன் லாகிரி வஸ்து உபயோகிக்கிறவனா? கொஞ்சம் தெளிவானால் கஞ்சா பொட்டலத்தையும் கண்ணில் காட்டி கப்பலுக்குக் கூட்டிப் போய் வெள்ளைக்காரன் கிட்டே நிறுத்தலாம்.

 

கப்பலுக்கு எல்லாம் ஜமீந்தார் வருவானா என்ன? கூப்பிட்டால் மாட்டேன் என்றா சொல்லப் போறான். வெள்ளைக்காரக் குட்டிகள் இருக்கா என்று மோப்பம் பிடிக்கவாவது வந்து எட்டிப் பார்க்க மாட்டானா?

 

எப்படி வருவான்?

 

மோட்டார் கார் எதுக்கு வச்சிருக்கான்?

 

ரெண்டு எட்டில் வீட்டு வாசலுக்கு ஓடி வாசலில் போட்டிருந்த கம்பி கிராதி கதவை மட்ட மல்லாக்கத் திறந்தான் தொங்கு மீசைக்காரன்.

 

அவன் ஏற்படுத்திக் கொடுத்த இடத்தில் நான் மட்டுமில்லாமல் இன்னும் நாலைந்து பேர் ஒற்றை வரிசையாக நுழையலாம். மரியாதை காட்டுகிறானாம் எனக்கு.

 

படியேறினதும் மரக் கதவு அடைத்து இருந்தது. உள்ளே இருந்து கிராமபோன் பெட்டியில் இந்துஸ்தானி சங்கீதம் கேட்டது. உல்லாசப் பிரியன் தான்.

 

சாமிகளே, அழுக்குத் துணி மூட்டையோட ஜமீந்தாரைப் போய்ப் பார்க்கணுமா?

 

புளிமூட்டை கரிசனத்தோடு ஞாபகப்படுத்தினான்.

 

நான்  கையில் சுமந்து வந்த ரெண்டு மூட்டையையும் திண்ணையில் தூணுக்குப் பக்கமாக வைக்கப் போனேன்.

 

அங்கே வேணாம் சாமிகளே. தெருவோட போறவன் எவனாவது பார்த்தா அடிச்சுட்டுப் போயிடுவான். அவனுக்குக் கப்பல் பைன்னு தான் தெரியும். உள்ளே கட்டித் தங்கம் இருக்கா, கட்டிட்டு வந்த கோமணம் இருக்கான்னு தெரியாது.

 

உள்ளே ரெண்டு எட்டு நடந்து அவன் காட்டின மேஜை மேல் ரெண்டு பைகளையும் வைத்தேன்.

 

அங்கே அடுத்தாற்போல் திறந்து இருந்த கதவு இடைவெளியில் பக்கத்து முடுக்குச் சந்து கண்ணில் பட்டது. இதெதுக்கு அன்ன திரேஷமாக இப்படி அரண்மனை மாதிரி வீட்டுக் கதவை சந்து பொந்தெல்லாம் தெரியக் காட்டிக் கொண்டு இருக்க வேணும்?

 

அவன் ஒரே ஓட்டமாக மாடிக்கு ஓடினான். அங்கே முத்துச் சிதறின மாதிரி சிரிப்பு சத்தம் கேட்டது. பெண் பிள்ளை சிரிக்கிற சத்தம்.

 

ஜமீந்தார் தூங்கறார்.

 

அதி ரூப சுந்தரியான ஒரு ஸ்திரி குரல் முன்னால் வந்தது. பின்னால் அவள் வந்தாள்.

 

ஜமீந்தாரிணியா? இல்லை, பட்டணத்துத் தொடுப்பா?

 

தெரிஞ்சு என்ன ஆகணும்?

 

நான் தோள்பையில் கையை விட்டு சோப்புக் கட்டி எடுப்பதற்கு முன்னால் அவள் ரகசியம் பேசுகிற குரலில் சொன்னாள்.

 

கஞ்சா அபின்னு கர்மாந்திரம் ஏதாவது இருந்து தொலைச்சு அந்த மனுஷர் கண்ணுலே காட்டிடாதேயும். உம்மை தயவாயிட்டு கேட்டுக்கறேன்.

 

நான் தலையை ஆட்டும்போது அவள் ரவிக்கையைக் கவனித்தேன்.

 

தயவாயிட்டு. மலையாளத்துக்காரி. திண்ணென்று தான் இருக்காள்.

 

உச்சிக் குடுமி ஐயரை எதுக்குடா கூட்டி வந்து எழவெடுக்கறீங்க? தெவசமா கொடுக்கப் போறேன். ஒரு பொட்டலம் கஞ்சா வாங்கி வரத் துப்பு இல்லே.

 

மாடியில் குரல் கேட்டது. ஆஜானுபாகுவான ஒரு முப்பது வயசுக்காரன் இறங்கிக் கொண்டிருந்தான்.

 

நான் விஷமச் சிரிப்போடு தோள்பையிலிருந்து கஞ்சா பொட்டலத்தைத் தேடி எடுத்தேன். அந்தப் பெண்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்கிற தோரணையை ஒரு வினாடி அபிநயித்து விட்டு பொட்டலத்தை அப்படியே நீட்டினேன்.

 

எனக்குப் பின்னால் ஏழெட்டு ஜதை தோல் ஜோடு மாட்டிய கால்கள் படி ஏறி வரும் சத்தம். நீளமாக ஒரு பிகில் சத்தமும் கூடவே கேட்டது. போலீஸ்காரன்கள்.

(தொடரும்)

Series Navigation‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’முன்னால் வந்தவன்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *