2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்

This entry is part 12 of 28 in the series 29 ஏப்ரல் 2012

2-ஜி அலைக்கற்றை ஊழலின் தாக்கம்:

2-ஜி அலைக்கற்றை (2-G Spectrum) ஊழல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு பெரிய நில அதிர்வு போல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த நில அதிர்வின் அலைகள் இன்னும் நின்றபாடில்லை. 2011-ல் டைம்( Time) இதழ் உலகளாவின தலையாய பத்து அதிகார முறைகேடுகளில் 2-ஜி அலைக்கற்றை ஊழலை வாட்டர்கேட் ஊழலுக்கு(Watergate scandal) அடுத்து இரண்டாம் இடத்தில் தரப்படுத்துகிறது (விக்கிஃபீடியா). மேல்தட்டு மனிதரிலிருந்து கீழ்த்தட்டு மனிதர் வரை 2-ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிப் பேசாமலில்லை; முதல் முறையாக, எல்லோரின் பிரக்ஞையிலும் ஊழலின் மேலான அதிர்ச்சியும் அதிருப்தியும் , ஏன் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்திய ஜனநாயகத்தின் மேல் ஒரு அவநம்பிக்கையின் கருநிழல் படிந்து  விடுமோ என்று அக்கறைப்பட வேண்டியிருக்கிறது. 2-ஜி அலைக் கற்றை ஊழலின் இந்தப் பெருந்தாக்கத்திற்குக்  காரணங்களென்ன?

  • எல்லோருக்கும் தெரிந்தது 2-ஜி உரிம ஒதுக்கீட்டில் அரசுக்குக்கு ஏற்பட்ட அதிகபட்சமான அனுமான இழப்பு( presumptive loss). இது ரூபாய் 1.76 இலட்ச கோடி என்று சி.ஏ.ஜி(C.A.G( Comptroller and Auditor General) தமது அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.

  • அலைக்கற்றை என்பது வரையறைப்பட்ட ஒரு இயற்கை வளம் (Limited/Scarce natural resource). மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்து. அதனால் மக்களின் நம்பிக்கைக்கும் நலனுக்கும் பாத்திரமாக அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்; மிகவும் திறம்படப் பயன்படுத்தப்படும் வகையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மக்களின் அந்த நம்பிக்கையும் நலனும் கொஞ்சமும் கருத்தில் கொள்ளப்படாமல் குறைந்த விலையில் ஒரு பொதுச் சொத்து சூறையாடப்பட்டு விட்டதோ என்ற அளவில் 2-ஜி உரிம ஒதுக்கீட்டு முறைகளின் மேல் கேள்விகள் எழுந்துள்ளன.

  • மிகப் பெரிய அமைப்பு ரீதியிலான ஊழலாக 2-ஜி அலைக் கற்றை ஊழல் கருதப்படுகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வணிகக்குழும மேலாண்மையினர்( Coroporate executives), சினிமாத் துறையினர் என்றெல்லாம் இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வலைப்பின்னல் விரிகிறது. வருமான வரித்துறையால் பதிவு செய்யப்பட்டதாய், ஒபென் (Open) இதழ் வெளியிட்ட சரச்சைக்குரிய நிரா ரேடியாவின்(Nira Radia) அரசியல்வாதிகளோடும், ஊடகத்தோரோடும் மற்றும் வணிகக்குழுமங்களோடும் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் எப்படி செல்வாக்குள்ளவர்களின் அரசியல் மற்றும் வணிகக்குழும இடைத்தரகு இந்திய ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்பதைச் சொல்வதாய் அமைகிறது. ஆக, 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொலை தொடர்புத் துறையை மட்டும் சார்ந்தது என்று நில்லாமல், இந்திய ஜனநாயகத்தில் உள்ளரித்துக் கொண்டிருக்கும் ஊழலின் அதன் சகலவிதமான நோய்க்கூறுகளின் வெளிப்பாடாய் வெடித்தது போல் இருக்கிறது.

  • எங்கும் புரையோடியிருக்கும் ஊழலால் புழுங்கியும் கனன்றும் கொண்டிருந்த வெகுஜனங்கள்-முக்கியமாக நகர்களில் வாழும்  நடுத்தர வர்க்கமும் இளைய தலைமுறையும்- பொறுத்தது போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு ஊழலுக்கு எதிரான இயக்கங்களில் கலந்து கொண்டு களப் போராட்டத்துக்குத் தயாராகவும் ஆகி விட்டனர். அதனால் லோக்பால் மசோதா- அது ஜன் லோக்பால் மசோதாவோ அல்லது அரசு லோக்பால் மசோதவோ- என்பது இன்னும் வெகுகாலம் தள்ளிப் போட முடியாது என்ற ஒரு நெருக்கடியை மக்களமைப்புக்களும், வெகுஜன ஊழல் எதிர்ப்பு இயக்கங்களும் அரசுக்கு ஏற்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கை- ஒரு பின்னணி

2-ஜி உரிம ஒதுக்கீட்டு முறைகேடு எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது. அதற்கு இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கை  பற்றிய பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரேடியோ அலைக் கற்றை ( Radio spectrum) என்பது பல மின்காந்த அலைவரிசைகளின் மொத்தத் தொகுப்பாகும். கம்பியில்லாத் தொடர்புக்கான(Wireless communication) ஊடகமாக அலைக் கற்றை செயல்படுகிறது. அந்த வகையில் அலைபேசி (Mobile) போன்ற கம்பியில்லாத் தொலை தொடர்பு சேவைகளுக்கு அலைக்கற்றை ஆதாரமானது. அலைக் கற்றை வரையறைக்குள்ளான இயற்கை வளம் என்பதாலும் தொலை தொடர்பு சேவைகளில் அதன் தேவை அதிகமாகிக் கொண்டே இருப்பதாலும் அலைக் கற்றை அதிக பொருளாதார மதிப்புள்ளது(economic value). இந்தியாவில் 2-ஜி என்ற இரண்டாம் தலைமுறை அலைபேசி  சேவைக்கான அலைக்கற்றை , அலைபேசி சேவையின் உரிமத்தோடே சேர்த்துத் தரப்படுகிறது. அதனால் உரிமத்தின் மதிப்பு அலைக்கற்றையின் மதிப்பைச் சார்ந்ததாக ஏக கிராக்கியானது. (தேசிய தொலைதொடர்புக் கொள்கை,2011(National Telecom Policy,2011) அலைக்கற்றை உரிமத்தோடு சேர்த்துத் தரப்படாது என்றும் அலைக்கற்றையின் மதிப்பு சந்தை ஏலத்தில்(market auction) நிர்ணயிக்கப்படும் என்றும் அறுதியிட்டுள்ளது)

முதலில் தேசிய தொலை தொடர்புக் கொள்கை 1994(National Telecom Policy,1994) தனியார் முதலீட்டை தொலை தொடர்புத் துறையில் அங்கீகரித்தது.  1995-ல் இந்திய அரசு ஜி.எஸ்.எம் தொழில்நுட்ப(G.S.M Technology) அடிப்படையிலான அலைபேசி சேவைக்கான ஆரம்பக்கட்ட அலைக்கற்றையை (Startup spectrum (2*4.4MHz)) ஏலம் விட்டது. இந்தியா 22 உரிம சேவைப் பகுதிகளாகப்( Licensed Service Areas) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு உரிம சேவைப் பகுதியிலும் இரண்டு அலைபேசி செயல்படுநர்கள்( Mobile Operators) தெரிவு செய்யப்பட்டனர். 1999-ல் அறிவிக்கப்பட்ட புதிய தொலை தொடர்புக் கொள்கையின்( New Telecom Policy, 1999) படி செயல்படுநர்கள் மேலான எண்ணிக்கைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மூன்றாவது 2-ஜி சேவை உரிமம் அரசு செயல்படுநருக்கு( Government Operator-(DOT& MTNL) தரப்பட்டது. 2001-ல் உரிமத்தின் மதிப்பு மூன்று கட்ட ஏல முறையில் நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பக்கட்ட அலைக்கற்றையோடு நான்காம் செயல்படுநருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் ஒரு அகில இந்திய 2-ஜி உரிமத்திற்கான சந்தை மதிப்பு (a pan-India 2-G license value) ரூபாய் 1658 கோடி என்று நிர்ணயமானது. நவம்பர் 2003-ல் ஒருங்கிணந்த தொடர்புச் சேவைக்கான உரிமம் (Unified Access Service License(UASL) என்ற புதுக் கொள்கையை அரசு அறிவித்தது. புதுக் கொள்கை, UASL உரிமமுள்ளோர் எல்லாவிதமான தொலைதொடர்பு சேவைகளையும்- கம்பி சார்ந்தது(Wireline), கம்பியில்லாது(Wreless) , முழு அலைவிலானது (Full mobility), கட்டுப்பாடான அலைவிலானது(Limited mobility) என்றெல்லாம்- வழங்க வகை செய்தது. அதன் விளைவாக, அடிப்படைத் தொலைதொடர்பு சேவைக்கான (Basic telecom service) உரிமம் பெற்றிருந்த செயல்படுநர்களும் அலைபேசி சேவை தர ஏதுவாகியது. அப்படி அவர்கள் UASL உரிமத்தின் கீழ் வரும் போது, நுழைவுக் கட்டணமாய், 2001-ல் நான்காவது செயல்படுநருக்கு ஏல முறையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தவேண்டுமென்று விதிக்கப்பட்டது. புது UASL கொள்கை, 4-8 செயல்படுநர்கள் வரை பல உரிமம் பெற்ற பகுதிகளில் சேவை தர வாய்ப்பும் ஊக்கமும் கொடுக்க தொலை தொடர்புச் சேவையில் போட்டி அதிகரித்தது. இதற்கிடையில் ,2007-ல்  இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு ஆணையம்(TRAI(Telecom Regulatory Authority of India)) அலைக்கற்றை கையிருப்பு, அலைக்கற்றையின் சரியான பயன்பாடு, சந்தைப் போட்டியின் தேவை என்பவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு தொலை தொடர்பு செயல்படுநர்கள் எண்ணிக்கை மேல் கட்டுப்பாடு வேண்டாம் என்று  ஆலோசனை வழங்கியது. இது மேலும் புது நிறுவனங்களை சந்தையில் நுழைய வழிவகுத்தது. ஆனால் நுழைவுக் கட்டணம் 2001-ல் நான்காவது அலைபேசி செயல்படுநருக்கு நிர்ணயமான சந்தை விலை தான். செப்டம்பர் 23,2007 வரை உரிமம் கேட்டு 167 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இங்கிருந்து தான் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில் முறைகேடுகள் ஆரம்பித்தன.

2008-ல் வழங்கப்பட்ட 2-ஜி உரிமங்கள் – எப்படி முறைகேடுகள் நடந்தன?

தொலை தொடர்புத் துறை (DOT(Department of Telecommunications)),.2-ஜி உரிமத்திற்கான  இன்னும் புதிய விண்ணப்பங்களுக்கு அக்டோபர் 1,2007 தான் கடைசித் தேதி என்று மிகக் குறுகிய கால அவகாசம் கொடுத்து திடீரென்று அறிவித்தது. இதனால் மேலும்  408 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. நில பேர, உருக்கு மற்றும் சுரங்க, இசைக் குழுமங்கள் கூட 2-ஜி உரிமம் கேட்டு விண்ணப்பித்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 2-ஜி உரிமத்திற்கு இவ்வளவு கிராக்கி ஏன்? அகில இந்திய அளவிலான ஒரு 2-ஜி உரிமத்திற்கான (a pan- India License)  மதிப்பு 2001-ல் நிர்ணயிக்கப்ப்ட்ட ஏல மதிப்பான ரூபாய் 1658 கோடி. ஆனால் 2-ஜி உரிமத்தோடு சேர்த்துத் தரப்படும் அலைக்கற்றையின் (2*-4.4 MHz in the case of  G.S.M technology and 2*2.5MHz in the case of CDMA technology) தற்போதைய சந்தை மதிப்பு இதை விடப் பன்மடங்கானது. இதனால் தான் கிடைப்பருமையான அலைக்கற்றையை வாங்கிப் போட்டுக் கொள்வது தான் முக்கிய நோக்கமாக இவ்வளவு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. எப்படி உரிமத்தோடு இணந்து தரப்பட்ட அலைக்கற்றை மதிப்பால், தொலை தொடர்புத் துறையில் அனுபவமே இல்லாத இரு புதிய வணிகக் குழுமங்கள் தமது செயல்வலையைக்(network) கூடக் கட்டமைக்கும் முன்னமேயே தமது பங்குகளை  பன்மடங்கு விலைக்கு விற்று பன்னாட்டு முதலீட்டை ஈர்த்ததை சி.ஏ.ஜி அறிக்கை விளக்குகிறது. இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், இந்த வணிகக் குழுமங்கள் 2-ஜி அலைபேசி சேவையைத் தருவதற்கு முன்னமேயே பங்குகளை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டன என்பது தான் உண்மை.

அக்டோபர்1,2007 வரை குவிந்த 575 விண்ணப்பங்களை எங்ஙனம் பரிசீலிப்பது? இந்த விண்ணப்பங்கள் வந்து சேர்ந்த தேதிகளின் அடிப்படையில் வரிசையில் வைக்கப்பட்டு, ”முதலில் வந்தவர்க்கு  முதலில் கிடைக்கும்” (FCFS(First Come First Served)) என்ற கொள்கையின் அடிப்படையில் உரிமங்கள் தரப்பட வேண்டியது. இது தான் DOT, UASL உரிமங்கள் தரப்பட்டதிலிருந்து கடைப்பிடித்து வந்த நடைமுறை. சி.ஏ.ஜி அறிக்கை எப்படி இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை விவரிக்கிறது. விண்ணப்பம் வந்த தேதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்  ஒரே நாளில் 25 செப்டம்பர்,2007 வரை பெறப்பட்ட எல்லா விண்ணப்பதாரர்களுக்கும் கருதுவதன் கடிதம் (LOI(Letter of Intent))அனுப்பப்பட்டது. இங்கு கடைசித் தேதியும் முன்கூட்டி மாற்றப்பட்டதைக் கவனிக்க வேண்டியது. அனுப்பப்பட்ட LOI -யை ஒரு மணி நேரத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது. உரிமம் பெறுவதற்கான எல்லா நிபந்தனைகளயும் நிறைவேற்ற காலக் கெடு 15 நாட்கள் என்று விதிக்கப்பட்டது. நிபந்தனைகளில்  வினைசெயல் வங்கி உத்தரவாதம்(PBG(Performance Bank Gurantee)), நிதி ஆதார வங்கி உத்தரவாதம் ((FBG)Financial Bank Gurantee))  போன்ற வங்கி உத்தரவாதங்களும் அடங்கும். ஆக  FCFS என்ற நடைமுறை LOI என்ற நடைமுறையாய் மாற்றமாகி,   LOI நிபந்தனைகளுக்கு உடன்படும் தேதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதனால் ஒரு வருடத்திற்குப் பின்னால் விண்ணப்பித்திருந்தாலும் கூட அதற்கு முன் தேதிகளில் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு முன்பாகவே, LOI நிபந்தனைகளுக்கு உடன்பாடுடையதாயிருந்தால்  2-ஜி உரிமம் பெற்றுக் கொள்ள முடியும் என்று வரிசையில் முன் குதிக்கும் திரிபு நிலை உருவானது. எப்படி இந்த நடைமுறை மாற்றங்களை முன்னமே தெரிந்து, உரிமத்திற்கு விண்ணப்பித்த சிலர் DOT அறிவித்த கடைசித் தேதிக்கு முன்னமேயே LOI நிபந்தனைகளுக்கான PBG, FBG மற்றும் நுழைவுக் கட்டணத்துக்கான  காசோலைகளையும் தயாராக வைத்திருந்து வரிசையில் முன் குதித்து உரிமம் பெற்றனர் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது. சி.ஏ.ஜி அறிக்கை மேலும் எப்படி உரிமத்திற்கு விண்ணப்பித்த சில குழுமங்கள் உரிமம் பெற  அவற்றின் உண்மையான நிதி நிலைமைகளை மறைத்ததையும்  பொய்யான ஆவணங்கள் அளித்ததையும் குறிப்பிடுகிறது. 2008-ல் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய 122, 2-ஜி உரிமங்களில் 85 உரிமங்கள் DOT விதித்த உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு உடன்படாதவை என்று சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக்குகிறது. உச்ச நீதி மன்றம் சர்ச்சைக்குரிய இந்த 122 2-ஜி உரிமங்களைத் தாம் செல்லுபடியாகாதவை என்று தமது தற்போதைய பிப்ரவரி,2012 தீர்ப்பில் சொல்லியுள்ளது.

மேற்சொன்ன விவரங்களை விட,சி.ஏ.ஜி அறிக்கை மதிப்பிட்ட  2-ஜி ஊழலின் அனுமான இழப்பு தான்  பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. எப்படி 2001-ல் நிர்ணயமான அலைக்கற்றை மதிப்பு 2008-லும் 2-ஜி உரிமத் தொகையாக எடுத்துக் கொள்வது என்பது தான் சி.ஏ.ஜியின் அடிப்படைக் கேள்வி? 2001-ல் அலைபேசிகளின் எண்ணிக்கை 3.5 மில்லியன்கள். 2008-ல் அலைபேசிகளின் எண்ணிக்கை 261 மில்லியன்கள். 2001-ல் தொலை பேசி அடர்த்தி (Tele-density) 10.4%. 2008-ல் தொலைபேசி அடர்த்தி 72.47%. ஆக 2001-ல் தொலை தொடர்புச் சந்தை ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. 2008-ல் செயல்படுநர்களிடையே போட்டி அதிகமாகி சூடு பிடித்து வளர்ச்சியடைந்த வித்தியாசமான சந்தை நிலவரம். அப்படியிருக்க ,2008-ல் வழங்கப்பட்ட 2-ஜி உரிமங்களுக்கு 2001-ல் நிர்ணயமான அலைக்கற்றை மதிப்பையே உரிமத் தொகையாக எடுத்துக் கொண்டது சரியானதா? 2008-ல் சந்தைப் போட்டியாலும் அலைக்கற்றையின் தேவை கூடியதாலும் அலைக்கற்றையின் மதிப்பும், அதனால் 2-ஜி உரிமத்தின் ஒரு அகில இந்திய அளவிலான உரிமத்தின் மதிப்பும், 2001-ல் ரூபாய் 1658 கோடி என்ற மதிப்பை விட பன்மடங்காகக் கூடியிருக்கும். அப்படியென்றால்  2008-ல் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டிருந்தால் 2-ஜி அலைக்கற்றையின் உண்மையான சந்தை மதிப்பு தெரிந்திருக்கும். இந்த அடிப்படையில்  சி.ஏ.ஜி தமது அறிக்கையில் 2010-ல் 3-ஜி அலைபேசி சேவைக்காக நடத்தப்பட்ட அலைக்கற்றையின் ஏல விலையில் ஒரு அகில இந்திய அளவிலான உரிம மதிப்பான (3G rate for a pan-India license) ரூபாய் 16750 கோடியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, 2008-ல் வழங்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றையால்,புது உரிமங்களாலும் மற்றும் ஒப்பந்தத்திற்கு மேலாக அலைக்கற்றை வழங்கியதாலும், இரட்டைத் தொழில்நுட்ப(Dual Technology) உரிமங்களாலும், அரசுக்கு ஏற்பட்ட அனுமான இழப்பு அதிகபட்சமாக ரூபாய் 1.76 இலட்ச கோடி என்று மதிப்பிட்டது. வேறு  இரண்டு வித முறைகளில் சி.ஏ.ஜி கணக்கிட்ட அனுமான    இழப்பு இந்தத் தொகையை விடக் குறைவானது. குறைந்த பட்ச அனுமான இழப்பு ரூபாய் 57666 கோடி. இந்த இரண்டு எல்லைகளுக்கு இடையில் இன்னும் இரண்டு மதிப்பீடுகள் அடங்கியுள்ளன. சி.ஏ.ஜி அறிக்கை அரசுக்கு ஏற்பட்ட அனுமான இழப்பு இந்த நான்கு மதிப்பீடுகளையொட்டிய இடைநிலைகளில் இருக்கலாம் என்று கவனமாய்க் குறிப்பிடுகிறது. ஆனால் சி.ஏ.ஜி அறிக்கை மதிப்பிட்ட அதிக பட்ச அனுமான இழப்பு தான் எல்லோரும் பேசும் பேச்சாக ஆகி விட்டது.

2-ஜி அலைக்கற்றை ஊழல்- எப்படி இந்திய ஜனநாயகம் எதிர்கொள்கிறது?

ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களுடையதான ஒரு குடியாட்சி முறை. ஜனநாயகத்தின் மையம் மக்களென்றால் அதனைச் செயல்படுத்தும் கருவிகளாக இருப்பவை மூன்று முக்கிய அமைப்புகள். அவை ஆட்சி மன்றம்( Legislature), நீதி மன்றம்( Judiciary), நிர்வாக அமைப்பு( Bureaucracy). மக்கள் தங்களைத் தங்களே ஆளும் நெறிகளையும், முறைகளையும்  அரசியல் சட்டம் ஆவணப்படுத்தப்படுகிறது. இந்த அரசியல் சட்டத்தை ஆதாரமாய்க் கொண்டு ஜனநாயகத்தை நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பை  மூன்று அமைப்புகளிடம் மக்கள் நம்பி ஒப்படைக்கிறார்கள். ஆக ஜனநாயகம் மக்களின்  நம்பகத்தில்( Trust) மேல் கட்டமைக்கப்பட்ட ஒரு கூட்டு அறம் (collective ethics); ஜனநாயகத்தின் வலுவும் பயனும்  இந்தக் கூட்டு அறத்தின் வெற்றியில் ஆதாரம் கொண்டிருக்கிறது.  கூட்டு அறத்தைக் கட்டிக் காப்பதில் மூன்று அமைப்புகளுக்கும் பெரும் பங்கு இருக்கின்றன. ஒன்று தவறினாலும், இன்னொன்று கண்காணித்துச் சமன் செய்யும்( checks and balances) என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் கட்டமைப்பு இருக்கிறது. ஆட்சி மன்றம் மக்களுக்காக இயற்றும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றால் நீதிமன்றம் தலையிடும். நீதிபதிகள் ஒழுங்கின் வழுவினாரென்றால் ஆட்சி மன்றம் விசாரித்துக் குற்றம் செய்தவரென்று தண்டிக்கலாம் (impeachment). நிர்வாக அமைப்பு ஆட்சி மன்றம் இயற்றிய சட்டங்களையும் மக்கள் நலத் திட்டங்களையும் சரிவர நடைமுறைபடுத்தத் தவறினால் மக்களின் பிரதிநிதிகளாய் அரசியல்வாதிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். நிர்வாக அமைப்பும் விதிகளுக்கு முரணாக அரசியல்வாதிகள் தங்களது செயல்பாடுகளில் ஈடுபட்டால் ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை. இப்படி மூன்று அமைப்புக்களும் தங்களுக்குள் இயைந்து கண்காணித்துச் செயல்பட்டால் அதுவே ஒரு நேர்மறைப் பண்புச் சுழற்சியாகி ( positive virtuous cycle) ஜனநாயகம் வலுப்பெற வாய்ப்பாகிறது. ஆனால், மக்கள் தங்களைத் தாங்களே ஆளுவதற்காக அமைத்த அமைப்புக்களே- தனித்தோ அல்லது கூட்டாகவோ – மக்களிடமிருந்து விலகி  தத்தமது கடமையைச் செய்யத் தவறும் போது ஜனநாயகம் வலுவிழந்தும், செயலிழந்தும் போகிறது.

இந்த ஜனநாயகக் கட்டமைப்பின் பின்னணியில் பார்க்கும் போது,  2-ஜி உரிமம் ஒதுக்கீட்டு முறைகேடு இந்திய ஜனநாயகத்தின் மேலான மோசமான விமர்சனமா என்று ஒரு கேள்வி எழுகிறது. எப்படி இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள் தத்தமது செயல்பாடுகளில் தகுதியாகின்றன? முதலில் ஆட்சி மன்றம் மற்றும் நிர்வாக அமைப்பின் செயல்பாடுகளைக் கவனிக்கலாம். ஆட்சிமன்றத்தைச் சார்ந்த முதல் நிலை(Cabinet minister) அமைச்சராக இருந்த ஒருவரும், அவரின் உதவியாளரும் ,தொலை தொடர்புத் துறையின் உயர்செயலராய் இருந்த ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டு கைதாகும் நிலைமையை என்ன சொல்வது? (சி.ஏ.ஜி அறிக்கை அலைக்கற்றை விலையை மறுமதிப்பிடாமல் அவசரமாய் 2-ஜி உரிம ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்காதவர்களையும் குறிப்பிடுகிறது) இதைச் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் தவறுகள் என்று முடிவு செய்து விடுவதா? சம்பந்தப்பட்ட இருசாராரும் ஆடிய ஒரு கூட்டு விளையாட்டு ( collusive game) என்று எடுத்துக் கொள்வதா? அரசியல்வாதியும், அரசு அதிகாரியும் முறைகேட்டுக்கு சேர்ந்து துணை போனது எப்படி? துணைபோனதில் அவர்கள் எதிர்பார்த்த ஆதாயம்(pay-off) யாராவது ஒருவரோ அல்லது இருவருமே துணை போகாத நிலைகளான் கிடைக்கும் எதிர் பார்த்த  ஆதாயத்தை விடக் கூடவா? ஆனால் கடைசியில் கூட்டாகத் துணை போனதில் இருவரும் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் செல்லும் நிலைமைக்குச் சென்று விட்டதே? இது பொருளியலில் கைதிகளின் சஞ்சலம்(Prisoners’ Dilemma)  என்ற கருத்தாக்கத்தை அடிக்கோடிட்டுக்  காட்டுவது போல் இருக்கிறது. (பொருளியலில் பந்தயக் கோட்பாட்டின்(Game theory) கண்ணோட்டத்தில் ஊழலைப் பற்றிய ஆய்வுக்கு ஒரு தனிக் கட்டுரை தேவைப்படும்). 2-ஜி உரிம ஒதுக்கீட்டு முறைகேட்டின் வீச்சையும் அளவையும் பார்க்கும் போது தனிநபர்களின் தவறுகள் என்று சமாதானப்பட்டு விட முடியாது. ஒரு நிர்வாக அமைப்பின் கடமை ‘விளையாட்டு விதிகளின்’(Rules of the Game) படி ஆட்டம் ஆடப்படுகிறதா என்பதை நடுவுநிலையின் நின்று உறுதி செய்வது. முன்னை விட இப்போது நிர்வாக அமைப்புக்கு நடுவு நிலையின்கண் இருக்கும் தனது தர்மத்தைச் செயல்படுத்துவதில் நெருக்கடி இருக்கிறதா? ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் மாறும் போது அரசு அதிகாரிகளும் தொகை தொகையாக மாற்றப்படுகிறார்கள். இது அரசியல்வாதிகள் தங்களுக்கு இணக்கமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றதான ஒரு அபிப்ராயத்தை  ஏற்படுத்தாமலில்லை. அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரும் போது இருக்க வேண்டிய நேர்மையும், எளிமையும், அரசு அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய நடுவுநிலைமையும், அச்சமின்மையும் முன்னை விட இப்போது அருகிக் கொண்டிருப்பதின் விளைவால் மேற்சொன்ன ’கூட்டு விளையாட்டு’ இந்திய ஆட்சி முறையில் புரையோடிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை 2-ஜி உரிம ஒதுக்கீட்டு முறைகேடு வெளிப்படுத்துகிறது. இது அமைப்பு ரீதியிலான பின்னடைவு(systemic failure) என்றால் கவலைக்குரியது. ஆனால் இந்தப் பின்னடைவின் கருநிழல் நீண்டு இருள் படர்ந்து விடாது என்ற ஒரு நெகிழ்ச்சியையும், முதிர்ச்சியையும் இந்திய ஜனநாயக அமைப்பில் காண முடிவது ஆறுதலாயிருக்கிறது

இந்த ஆறுதலைத் தருவது இந்திய ஜனநாயகத்தின் நீதித்துறை. உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறும் 2-ஜி உரிம ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ விசாரணை மக்களிடம் ஒரு நம்பகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.  எப்படிப்பட்ட செல்வாக்குள்ளவர்களும், வணிகக் குழும முதலைகளும், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களும் மண்ணின் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று 2-ஜி உரிம முறைகேடு மீதான விசாரணயில் நீதித் துறையின் அணுகுமுறை கறாராயும் கண்டிப்பாயும் அமைந்துள்ளது. இதே விதமான கறாரையும் கண்டிப்பையும், ஆட்சி மன்றம் (பாராளுமன்றம்) 2-ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஷயத்தில் மட்டுமல்ல, ஊழலுக்கு எதிரான பொது நிலைப்பாட்டிலும், முன் முனைப்போடு(proactive) காட்டியிருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஊழலுக்கு எதிரான ஒரு லோக்பால் மசோதா வெகு காலமாய்த் தள்ளிப் போடப்பட்டு, அன்னா ஹஜாரே உண்ணா விரதத்தின் நெருக்கடியால் தான் அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது போன்றதான நிலைமை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. காலம் கழித்து தாக்கல் செய்யப்படும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவிலும் அரசுக்கும், சில  மக்கள் குழுக்களுக்கும்(civil society groups)பல கருத்துக்களில் உடன்பாடில்லை என்பது மேலும் வருந்தத்தக்கது. பாராளுமன்றக் குழுக்களில்- பொதுத் தணிக்கைக் குழுவாக(Public Accounts Committee) இருக்கட்டும், கூட்டு நாடாளுமன்றக் குழுவாக(Joint Parliament Committee) இருக்கட்டும்- கட்சி சார் நிலைப்பாடுகள் தலைதூக்குவது மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மேல் வைத்திருக்கும் நம்பகத்தைக் குலைத்து விடும் என்று சொல்ல வேண்டியதில்லை. நீதித் துறையின் தற்போதைய ‘நீதிச் செயலூக்கம்’(Judicial activism) ஒருவகையில் வரவேற்கப்படுவதாய் இருக்கும் போது அந்தச் செயலூக்கம் ஆட்சிமன்றத்தின் இயலாமையை ஈடுகட்ட வேண்டியதின் விளைவால் என்றால் இந்திய ஜனநாயகத்தில் அது எங்கோ இடிப்பது போல் இருக்கிறது. ஆட்சிமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இருக்க வேண்டிய சமநிலை(balance) ஜனநாயகத்தின் அடிப்படை. 2-ஜி உரிம ஒதுக்கீட்டு முறைகேடு மீதான பல் தரப்பு விசாரணைகள்—பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, சிறப்பு  நீதிமன்ற 2-ஜி விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை – இந்த சமன்பாட்டைக் குலைத்து விடக் கூடாது என்பதில் தான் இந்திய ஜனநாயகத்திற்கான சவாலாயும், முன்னோக்கிய பயணமாயும் இருக்க முடியும்.

இந்தக் கட்டத்தில் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டியது அவசியம். மற்ற இரு ஜனநாயக அமைப்புக்களை விட மக்களுக்கு ஆட்சிமன்றம் தான் நேரடியான இடைமுகமாக (direct interface) இருக்கிறது. ஆட்சிமன்றத்துக்கு வரும் அரசியல்வாதிகளும் மற்ற இரு ஜனநாயக அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் போலல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் மக்களிடமே செல்ல வேண்டும். எனவே அரசியல்வாதிகள் எவ்வளவுக்கு நேர்மையாகவும் பொறுப்பாகவும் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு ஆட்சி மன்றத்தின் அதிகாரமும் கண்ணியமும் உறுதிப்படுத்தப்பட முடியும். எந்த லோக்பால் சட்டமும் இந்த அடிப்படைக் கருத்தில் வேர் கொண்டால் தான் ஆட்சிமன்ற நீதிமன்றச் சமன்பாடும் ஜனநாயகமும் வலுப்பெறும். வலுவான லோக்பால் சட்டத்தோடு நம்பகமான தேர்தல் சீர்திருத்தங்களும் தேவை. 2-ஜி ஊழல் மட்டுமல்ல, இன்னும் பல ஊழல்கள் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் அடிப்படையாய் ஊழலைக் களைந்தெறியும் முன் நடவடிக்கைகளாய் தேர்தல் சீர்திருத்தங்கள் அமைவது நல்லது. இதைப் பாராளுமன்றம் தான் செய்ய முடியும். மக்கள் வேண்டுவது ’நாணயத்தைச்’ சுற்றிச் சுழலும் தேர்தல்களையல்ல. ’நாணயமான’ அரசியல்வாதிகள் பங்கு கொள்ளும் தேர்தல்களை. சோழர் காலத்துக் குடவோலை முறையிலான கிராம ஜனநாயகத்தில் தேர்தலுக்கு நிற்போருக்கு விதிக்கப்பட்ட தகுதிகளை உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. அரசுக்கு வருமானக் கணக்கு காட்டாதவர், வரிகள் கட்டாதவர், பிறர் மனை நயந்தவர், கொலை செய்தோர், பொய்யர்கள், குடிகாரர்கள், பிறர் செல்வம் கவர்ந்தோர், மனிதர்கள் உண்ணத் தகாததை உண்டோர்- இவர்களெல்லாம் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள். பதவிக் காலத்தில் யாராவது ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவரும், அவருடைய குடும்பத்தினரும், அவருடைய இரத்த சம்பந்தப்பட்ட உறவினரும் கூட அடுத்த ஏழு தலைமுறைகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை.  மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கடமையில் தவறினால் மக்களுக்கு திரும்பி அழைத்துக் கொள்ளும் உரிமையும் (right to recall) இருந்தது. ஊழலோடு கைகோர்த்துக் கொண்டு, வர வர அராஜகமாகிக் கொண்டிருக்கும்(criminilisation of politics) இன்றைய இந்திய அரசியல் சூழலில் மேற்சொன்ன சோழர் கால ஜனநாயக நெறிகள் நமக்குச் சில படிப்பினைகளைத் தருகின்றன. நாம் அவற்றில் சிலவற்றையேனும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுத்தினால் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை.

2-ஜி உரிம ஒதுக்கீட்டு ஊழலைப் பற்றிப் பேசும் போது ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தி இதழ்கள் மற்றும் ஊடகங்களின் பங்கைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலை வெளிக்கொணர்ந்து அலசியதில் அமெரிக்க இதழ்களின் பங்கு முக்கியமானது என்பார்கள். 2-ஜி உரிம ஊழலுக்கு எதிரான கருத்தாங்களில் இந்திய ஊடகங்களின் பங்கு துடிப்பானது. ஊழலுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களின் வெற்றியில் அவற்றின் பங்களிப்பு பிரத்தியேகமானது. ஆனால் நிரா ரேடியா நாடாக்களின் உரையாடல்களில் சில ஊடகக்கார்களின் பங்கும், சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தாலும், அடிபடுவது உற்சாகமான ஒருநிலையாய் இல்லை. எப்படி பிரபலமான பல பத்திரிக்கைகள், ஊடகங்கள் ஆரம்பக் கட்டத்தில் நிரா ரேடியா நாடாக்களின் விஷயத்தைப் பேசுவதில் தயக்கம் காட்டியதையும் இருட்டடிப்பு செய்ததையும், பின்னால் அது இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டு பன்னாட்டுச் செய்தியான பின் மேலும் பல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பேச முன்வந்ததையும் விக்கிஃபீடியா பதிவு செய்கிறது. எதுவானாலும் இந்தியாவில் நிலவும் பத்திரிகை சுதந்திரம் இந்திய ஜனநாயகத்தின் பிராண வாயு என்பதில் ஐயமில்லை.

முடிவுரை:

2-ஜி அலைக்கற்றை ஊழல் இழப்பின் அளவிலும், விதிகளையும் நெறிகளையும் புறக்கணித்த வீச்சிலும், பங்கு கொண்ட பெரும்புள்ளிகளின் செல்வாக்கிலும் சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் சூறாவளி போன்ற பெரும் ஊழல். இது ஒரு வகையில் இந்திய ஜனநாயகத்தின் பலவீனத்தைக் காண்பிக்காமல் இல்லை. அதே சமயத்தில் இந்திய ஜனநாயகம், இதை எதிர்கொள்ளும் நெகிழ்ச்சியையும் முதிர்ச்சியையும் தனது கட்டமைப்பில் கொண்டுள்ளது என்பதையும் காட்டுகின்ற வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜனநாயகம் என்பது எதுவும் அதிகம் செய்யாமலிருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி(Democray is an excellent way of ensuring that nothing much gets done) என்பார் எட்வர்டு டி போனோ.(Edward de Bono). ஆனால் அதே ஜனநாயகத்தின் இன்னொரு பரிமாணம் வலுவானது. எல்லா ஜனநாயகங்களும் விதிவிலக்கில்லாமல் பஞ்சத்தை (famine) ஒழித்து விட்டன என்பார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல் அறிஞர் அமர்ட்யா சென் (Amartya Sen). சுதந்திரமான பத்திரிக்கை ஊடகங்களும், துடிப்பான எதிர்க்கட்சிகளும் வறட்சியையும் பஞ்சத்தையும் பற்றிய முன் எச்சரிக்கைகளைத் தர அரசியல் போட்டி ஆளும் கட்சியைத் தேவையான தடுப்பு மற்றும் பஞ்சத்தைப் போக்கும் செயல்பாடுகளுக்குத் தூண்டுதலாய் அமைகிறது என்பது அமர்ட்யா சென்னின் வாதம். ஊழலை எதிர்கொள்வதில் கூட ஜனநாயகங்கள் இதே மாதிரியான முதிர்ச்சியையும், முனைப்பையும் காட்ட வல்லவை என்பதை இந்திய ஜனநாயகம் உலகிற்குச் சொல்ல 2-ஜி ஊழலால் எழுந்திருக்கும் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2-ஜி அலைக்கற்றை ஊழலால் அதிர்ச்சியுற்று ஆடிப்போயிருக்கும் இந்திய மக்கள் இந்திய ஜனநாயக அமைப்புக்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம்  தாங்கள் சுவாசிக்க ஊழல் மாசில்லதா ஒரு ஜனநாயக வெளி. இது அதிகபட்சமல்ல. ஏனென்றால் உலகிலே பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் உயிர்ப்பும் தழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது.

References

1.Performance Audit Report on the Issue of Licenses and Allocation of 2-G Spectrum by the Department of Telecommunications by Comptroller and Auditor General of India 2.Internet/Wikipedia sources

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்ரோஜா ரோஜாவல்ல….
author

கு.அழகர்சாமி

Similar Posts

3 Comments

  1. Avatar
    punai peyaril says:

    அப்படி ஒரு ஊழலே நடக்கவில்லை. இது பார்ப்பனர்கள் சதி. அப்படி ஊழல் என்றால் 1700000000000 ரூபாயை எங்கு பதுக்கி வைக்க முடியும். இல்லை செக்காகவோ டிமாண்ட் டிராப்டாகவோ வைத்திருப்பதற்கு எவிடன்ச் இருக்கிறதா…? ராஜா என்ன பில் கேட்ஸ் மாதிரி எல்லா கணிப்புபொறியையும் ஆகிரமிப்பா செய்தார்…? இல்லை ஸ்டீவ் ஜாப் மாதிரி மக்களின் காதுகளில் மைக்ரோ ஃபோனை மாட்டி விட்டாரா…?கங்கை கொண்டவன் கடாரம் வெண்டவனின் மீது ஜி ஜி என்று 2ஜி ஊழல் குற்றச்சாட்டா…?

    1. Avatar
      sathyanandhan says:

      Sir, i think your comment was sarcastic. In my view this is the best and most detailed article on 2G issue. I thank the author for the same. Coincidentally yesterday only i saw CBI dropping charges on former Telecom Minister Mr. Arun Shourie. Regards Sathyanandhan.

  2. Avatar
    G.Alagarsamy says:

    Dear Sir, Thank u very much. 2-G scam appears to be symptomatic of a larger issue i.e corruption that has spread its tentacles coorroding even the basic structures in a democratic system.This article is an attempt to focus on this larger dimension in an objective manner. Regards. G.Alagarsamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *