சித்திரைத் தேரோட்டம்…!

This entry is part 17 of 40 in the series 6 மே 2012

 
சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே……அனைத்துக் கோவிலுக்கும்  கொண்டாட்டம் தான்…அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்….எத்தனை சின்னக் கோயிலாக இருந்தாலும்…சித்திரைத் தேர் அந்த ஊரை ஒரே ஒரு தரம் வலம் வந்த பிறகு  தகரக் கூடுக்குள் அடைந்து விட்டால் அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் பரம சந்தோஷம்…நிம்மதி…இனி அடுத்த வருஷம் தான்….அது வரும்போது வரட்டும் என்று அதுவரை அக்கடான்னு இருப்பார்கள்.பிறகு தேரைப் பற்றி யாரும் கவலைப் படுவதும் கிடையாது. பராமரிப்பதும் கிடையாது. கோயிலுக்கு உள்ளேயும்  சுத்தம் என்பதே… மருந்துக்கும் கிடையாது..கோயில் உள்ளே தரையைப் பார்த்து நடக்கணும் சறுக்கி விழுந்தால் நேரே கபால மோட்சம் தான். தினம் தினம் தெய்வத்தைக் கும்பிடுகிறோமே அவர்   குடியிருக்கும் கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாதா ?  …நவகிரக சன்னதியில் எண்ணைத் தரையில் காலை வைத்து வழுக்கி விழுந்து இடுப்பை உடைத்துக் கொண்டு போனவர் கூட இந்த ஊரில் உண்டு. அங்கங்கே வாழைப் பழத்தோலும்….தேங்காய் சிரட்டையும்…பிளாஸ்டிக் கவர்களும்..தீப்பெட்டி டப்பாவும்….நீங்கள் வந்திருப்பது கோயில்….கடைத் தெருவில்லை என்று வழியெல்லாம் நினைக்க வைக்கும். கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செலவாகப் போது ?

சின்னக் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி  வாய்ந்த சக்திவேல் முருகன் வள்ளி தெய்வானையோடு திருக்கோலம் பூண்டு  கோயில் கொண்டுள்ள திருத்தலம்  தான் இந்த திருச்சேவலாடி …..சின்ன கிராமம் தான்..இங்கு இந்த புராதனக் கோயில் தான் பிரசித்தி பெற்றது…இந்தக் கோயிலைத் தவிர இங்கு வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. பரிகாரஸ்தலம் என்பதால் தான் பிரசித்தம்.  சித்திரை மாதம் நடக்கும் தேர் திருவிழா மட்டும் தான் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப் படும்….கூட்டம் அலைமோதும்..சாதாரணமாக இங்கே இருக்கும் கோயில் உண்டியலில் ஒரு குட்டி யானையைத் திணித்து விடலாம் திருவிழாவின் போதோ….அதே மாதிரி நான்கு உண்டியல் வைத்தாலும் நிரம்பி வழியும்..!அந்தக் கோயிலில் செலவை விட உண்டியல் வருவாய் தான் மிக மிக அதிகம்!

இந்தக் கோயிலின் அறுபது அடித் தேர் ரொம்ப புராதானமானது….நூறு ஆண்டுகளுக்கும் முன்னால்  இந்தத் தேரை உபயமாக ஒரு பெரிய கோவிலிலிருந்து வழங்கப்பட்டு இங்கு எடுத்து வரப்பட்டது…தேர் முழுவதும் தேக்கு…கொங்கு போன்ற உயர்ந்த ரக  மரங்களால் செய்யப் பட்டது என்பதால் இன்றுவரை உறுதியாக இருக்கிறது. ராமாணய, மகாபாரத வரலாறுகளைக் குறிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இதில் வடிவமைக்கப்  பட்டதால் இந்த கிராமத்தின் மிகப் பெரிய சொத்தும் இந்தத் தேர் தான். சுமார் ஆயிரம் டன் எடையும் 60  அடி உயரமும் கொண்ட இந்தத் தேரின் நான்கு  பெரிய சக்கரங்களும் மரத்தால் ஆனதால்….இதை நகர்த்திக் கொண்டு சுற்றி வர மணிக்கணக்காகும். குறைந்தது ஆயிரம் பேர்களாவது கோஷமிட்டு  தேரின் வடம் பிடித்திழுத்து வருடா  வருடம்  புண்ணியம் தேடிக் கொள்வார்கள்.

கால காலத்துக்கும்….இந்தத் தேர் திருவிழா வழி வழியாக வந்து கொண்டிருப்பதால்…..கோவில் தர்மகர்த்தாவுக்கு
கொஞ்சம் வேலைகள் இந்த மாதம் கூடுதல் தான் இருக்கும். உண்டியல் காசு எண்ணுவது முதல் பல வேலைகள். அதுபோலவே செலவுகளும்….வரவு செலவு கணக்குகளும் கண்ணைக் கட்டும். அந்த சின்ன கிராமத்தில் இந்த நேரத்தில் பூ, பழம், தேங்காய், சூடம், சாம்பிராணி வியாபாரிகளின்   பெட்டிக் கடைகளிலும் வியாபாரம் களை கட்டும். எப்படா….. சித்திரை மாதம் வரும்…கண்ணுல காசைப் பார்க்கலாம்னு  பங்குனி மாதத்தில் இருந்தே இதற்காக காத்துக் கிடப்பார்கள் வியாபாரிகள்….தேங்காய் மண்டிகளும்  வாழைமர குத்தகைக் காரர்களும்….பூக்கடையும்….

பழக்கடையும்…வழி நெடுகக்  கடை விரித்து காத்திருக்கும்….சித்திரைத் தேரோட்டதிற்காக.

நந்தன வருஷம் ஆனந்தமா. வந்திருக்கு…..இந்தத் தடவை போன வருஷத்தை  விட அமோகமா இருக்கணம் நம்ம சித்திரைத் தேரோட்டம்….நாமெல்லாம்  நினைச்சே பார்க்காத மாதிரி இந்த முறை தேரோட்டம் இருக்கணும்னு நான்  நிறைய யோசனை செய்து வைத்திருக்கேன்….தர்மகர்த்தா கணக்குப்பிள்ளை சாம்பசிவத்திடம் சொல்லிக் கொணடிருந்தார். அதே சமயம் கோயில் மணி “டண்,,,,டண்…..டண்……” என்று அடிக்க…..பார்த்தேளா…ஒய் ..நான் சொன்னதும் எப்படி மணி சத்தம்னு…உள்ளேர்ந்து பகவானே…ஆமாம்…ஆமாம்…ன்னு சொல்றாப்பல இருக்கு இல்ல…! பெருமை ததும்ப சொல்லும்போது தர்மகர்த்தாவின் வாயில் வெற்றிலை போட்டு சிவந்த பற்களைத் தவிர வேறேதும் தெரியவில்லை சாம்பசிவத்துக்கு….புளிச் சென்று மூலையில் துப்பினார்.  பக்கத்தில் நின்றவர் வேஷ்டியிலும் வெற்றிலை எச்சில் தெறித்தது முகம் சுளிக்க வைத்தது.

“ஆமாம்…..சொல்றாரு…முருகன்.
…உங்க காதில் வந்து….எப்பப்பாரு பெருமை…தான்…என்னமோ…. நாங்கள்லாம் ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவங்க மாதிரியும் ….தன்னை மட்டும் “நான் தான்..டாப்பு….மீதியெல்லாம் டூப்பு…” ன்னு பெருமை பேசும் இந்த நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்…வாய் பூரா…வெத்தலை…கஞ்சப்பய…கஞ்சப்பய… கடைந்த மோரில் குடைந்து வெண்ணை எடுப்பவன்….இவனெல்லாம் கஷ்டப் பட்டு வேலை பார்க்கிற மத்தவங்களுக்கு ஒரு தேங்காய் மூடி கூட சும்மாத் தர விட மாட்டான்….வர்றதெல்லாம் வாரிச் சுருட்டி வீட்டுக்கு அனுப்பிடு…வீட்டுக்கு அனுப்பிடுன்னு….ஒரே பாட்டு தான் எப்போதும்.

“பார்க்கலாம்…இந்த திருவிழா… எப்படிப் போகும்னு…” நெஞ்சம் கருவினாலும்..ஆட்டியே பழக்கப் பட்ட தலை….அட…ஆம்மாம்ணா……உங்க வார்த்தைக்கு அங்கேர்ந்து முருகன் பதில் சொல்றார் ….பின்ன….தர்மகர்த்தா சரவணன்னா யாரு….சாக்ஷாத் முருகனே….தான்… என்று ஜால்ரா அடிக்கிறார்…..சாம்பசிவம்….இல்லாவிட்டால் இங்கே இப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டவர்.

அப்போது மடைப்பள்ளியில் இருந்து வெளியில் வரும் கணேசனைப் பார்த்து “இந்தாடா கணேசா….என்ன கொண்டு போறே…அதென்ன தாம்பாளத்தில்..”

பிரசாதம்….சக்கரைப் பொங்கலும்….வெண்பொங்கலும்….கொஞ்சம் மீதம் இருக்கு..அதாண்ணா…..அருகில் வந்து பௌயமாக சொல்லுகிறான் கணேசன் மடைப்பள்ளியில் சமையல் வேலை செய்பவன்.

சரி..சரி…இப்போவே மணியாயிடுத்து…இதக் கொண்டு ஆத்துல கொடுத்துட்டு…வந்துடு…இலையில் கட்டி எடுத்துண்டு போடா….அப்படியே கொண்டு போய் நீட்டாதே….மடையா…மடையா…!

சரிண்ணா…..இப்போவே போறேன்…அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன்….

“ம்ம்..ம்ம்…தொலை…தொலை…!

அப்பறம்….கணக்கு…..நீ என்ன பண்றே….போன தடவை  தேர் திருவிழாவுக்கு என்னெல்லாம் செலவு பண்ணினோம்…ன்னு….அந்த பழைய நோட்டைப் பார்த்து கணக்குபோட்டு எழுதி எங்கிட்ட இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளே காட்டறே….இந்த அம்பிப்பயல்  இருந்தா…. வந்து என்னைக் கொஞ்சம் உடனே பார்க்கச் சொல்லு….நான் சொன்னேன்னு சொல்லு….சரியா….கொஞ்சம் சுறுசுறுப்பா…இருங்கோடா….யாருக்கு வந்த விருந்தோன்னு……இருந்தால்….வேலைக்கு ஆகாது….அப்ப நான் புறப்படறேன்…..எல்லாம் நீ தான் பார்த்து பார்த்து செய்யணும்…..நான் ஒண்ணொண்ணா சொல்லனும்னு எதிர் பார்த்திண்டு மரமாட்டமா நிற்கக் கூடாது….என்ன புரிஞ்சுதா….? சலித்துக் கொண்டே  கிளம்பினார்…சரவணன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கு பாரு மரமண்டைகள்…!இதுகளையெல்லாம் வெச்சுண்டு  நான் ஆணி புடுங்கணும்னு…எழுதிருக்கு….!

கோயில் வாசலில் இருந்து அவரது ஸ்கூட்டி கிளம்பியதும்…அந்தக் கிராமத்திலேயே இவரிடம் தான் ஸ்கூட்டி இருக்கு அந்தத் தலைகனம் வேற அவருக்கு தலைக் கவசம் மாதிரி கின்னுன்னு இருக்கும். பெரியவரின் தலை மறைந்ததும் தான் சாம்பசிவத்துக்கு ஒரு கெத்து வந்தது…அப்பாடா…ஒருவழியா….கிளம்பித்து…..என்று நினைத்த படியே…மர மேசையின் டிராயரைப்  பூட்டி விட்டு…” ஆமா… இது ஒரு அழகாபுரியோட அந்தப்புர கஜானா …இதில் தங்கமும்…வைரமும்….கொட்டியாக் கிடக்கு…..இருக்கற நகை எல்லாம் கல்யாணி கவரிங் ல கையேந்தி வாங்கினது…..கோவில்ல வர பணத்தில் எல்லாம் கொஞ்சம் தெரியாமல் எடுத்து அவரோட மனைவிக்கே  ..தோடு ஜிமிக்கின்னு ..வாங்கி… வாங்கிப் போட்டால்….இங்க என்ன இருக்கும்..? அத்தனையும் பொய்..பித்தலாட்டம்…ஏமாத்து....இதைத் தவிர என்ன தெரியும் இவருக்கு..? ..இவரைப் பத்தி நேக்குத் தெரியாதா?

இவரோட தகுதியைப் பார்த்து வந்த பதவியா இது…..ஈட்டி எட்டு முழம் பாயும்…பணம் பாதாளம் மட்டும் பாயும்….
ன்னு பணத்தைக் அள்ளிக் கொடுத்து தக்க வெச்சுண்ட பதவி தானே இது. அந்த ஆதீனத்தைச் சொல்லணும்..!

இதுவே,,நானா இருந்திருந்தால்…கோயில் இப்படியா விடியா மூஞ்சி மாதிரி அழுது வடியும்….சும்மா ஜெகஜ் ஜோதியா…..வைக்க மாட்டேனோ……இந்த முருகன் எப்பக் கண்ணைத் திறந்து எல்லாத்தையும் பார்ப்பானோ…..? என்னைக்கு எனக்கு விடியுமோ…? ஏதோ ஒரு பழைய பைலை எடுத்துப் புரட்டிக் கொண்டே….அறையை விட்டு வெளியே வந்து மூலவர் சன்னதி பக்கம் போகிறார் சதாசிவம்.  அங்கு தானே ராஜாமணி இருப்பார்…..அவரிடம் கொஞ்சம் சரவணனைப் பற்றி தனது ஆற்றாமையை சொல்லாவிட்டால் மதியம் வயிற்றுக்குள்  சாதம் இறங்காது…இவருக்கு. இவர் சொல்வதை எல்லாம்  காது கொடுத்துக் கேட்பவரும் ராஜாமணி ஒருத்தர் தான் இந்தக் கோயிலில். மூலவர் உற்சவர் எல்லாருக்குமே  அர்ச்சகர் தான் ராஜாமணி ஒருத்தர் தான். …..நேர்மையும்…பொறுமையும்....அமைதியும் கொண்ட முருக பக்தர். தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப் படாமல்..என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பக்தியோடு வேலை பார்ப்பவர்.

சாம்பசிவம் கத்திக் கத்தி தன் தொண்டைத் தண்ணி வற்ற… சொன்னதெல்லாம்…ம்ம் ம்ம் என்று இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட்டுட்டு….” இவனுக்கு வேற வேலையில்லை…கோள் சொல்றதே வேலை…..முருகா….  முருகா….நான் என்ன பண்றது….இவன் சொல்றத்தை கேட்கலைன்னா…இங்க நான் வேலையில் இருக்க முடியுமா….அதான்…போனால் போட்டும்னு…..கேட்டுண்டு இருக்கேன்…முதல்ல… இவன் தொலையணும்….அப்போ தான் உன் சன்னதிக்கே நிம்மதி….ராஜாமணியும் மனசுக்குள்… நினைத்தபடியே வெளியில்… ம்ம்ம்…ம்ம்ம்ம்… ஆமாம்….ஆம்மாம்…என்று தலை ஆட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்பறம்…..இன்னைக்கு எவ்ளோ….வருமானம்….? இருபது முப்பது பேர் வந்தாளே…..ன்னு இளித்தபடியே சாம்பசிவம் கேட்க….

பத்திக்கொண்டு வந்தது ராஜாமணி அர்ச்சகருக்கு…..இருந்தும் சொன்னார்…ஒரு அம்பது ரூபாய் சில்லறைக் காசு….உமக்கேதும் வேணுமா….சொல்லும்…தரேன்…..!

இப்போ ஒண்ணும்  வேண்டாம்…..தேர் திருவிழா வருமே….அப்போ தாரும்….வாங்கிக்கறேன்…என்று பெரிய முத்தாய்ப்பாக ஒரு கோரிக்கையை முன்  வைத்தார்…அப்படியே அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த அம்பியைப் பார்த்ததும்….

டேய்….அம்பி….எங்கடா இருந்தே….இத்தனை நேரம்….உன்னத்தான் பெரியவர் இத்தனை நேரமாத் தேடினார்….சீக்கிரம் ஓடு…உன்னை உடனே…..பார்க்கணுமாம்…அவாத்துக்குப் போ…..நான் சொன்னேன்னு சொல்லு…சரியா….

இவரது வார்த்தையின் அவசரம் அம்பியை தொற்றிக் கொள்ள……நடையில் ஒரு விறுவிறுப்போடு ஓடுகிறான் அம்பி…..அவனோட அழுக்குப் படிந்த வேஷ்டியும்…எண்ணைக்கரை பிடித்த மேல் துண்டும்…ஒட்டிய வயிறும்….
அந்தக் கோயிலின் எடுபிடி என்று சொல்லாமல் சொன்னது.

கோயிலில் பிடித்த ஓட்டம்….பெரியவர் வீட்டு வாசலில் தான் நிறுத்தி மூச்சு வாங்கினான் அம்பி ..அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த தர்மகர்த்தா…

” வந்தியாடா அம்பி…தேரைச் சரி பார்க்கணும், சக்கரத்துக்கு மசவு தடவணும்.  ..நீ இப்போ என்ன பண்றே…நேரா போய்…மேலவீதி….முத்துசாமி மரத் தச்சனைப் பார்த்து கையோட அழைச்சுண்டு வர….ஒருவேளை அவன் அங்க இல்லைன்னா….நான் வரச்சொன்னேன் ன்னு விஷயத்தை சொல்லிட்டு வா” …இன்னும் பத்து நாளில் தேர் திருவிழா வர்றதோன்னோ….சொல்றது புரியுதா….சரியான மாங்கா மடையனாச்சே நீ….கடைசீல காது…காது ன்னா லேது லேதுன்னு சொல்லிட்டு வந்து நிக்கப் போறே….எகத்தாளமாக  சொல்லி முடித்தார்..அப்படியே…இந்தா இந்த ஆயிரம்  போஸ்டரை…சுவரெல்லாம் போய் ஓட்டிட்டு வந்துடு….கணக்கு கிட்ட போயி காசு வாங்கிக்கோ…பக்கத்து ஊருக்கெல்லாம் போகணும்னு…நான் சொன்னேன்னு சொல்லுடா…நான் போன் பண்ணி சொல்லிகறேன்…அவன்ட்ட…சரியா.…எல்லாம் காதுல வாங்கிண்டு போ…!

அவருக்கு எப்போதுமே அம்பி தன் காலுக்குக் கீழ் தான்னு ஒரு நினைப்பு. இந்தா இந்தத் தாம்பாளத்தை எடுத்துண்டு மடப்பள்ளியில் கொண்டு கணேசனிடம் கொடு.அதிகாரத் தோரணையில் சொல்லிவிட்டு இனி ஒன்றும் இல்லை நீ போகலாம் என்ற தோரணையில்…தான் உள்ளே சென்று கதவை சார்த்திக் கொண்டார். எப்போதுமே ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு கொண்டாட்டம் தானே.

தாம்பாளமும், சுவரொட்டிகளுமாக சுமக்க முடியாமல்  சுமந்து  கொண்டு ஓட்டமும் நடையுமாக மறுபடியும் வெற்றுக் காலோடு கோவிலுக்குள் நுழையும்போது ….உச்சி வெய்யில் காலைப் பதம் பார்க்க….எப்பப் பாரு இந்தப் பெரியவர் என்னைத் திட்டீண்டே இருக்கார்….எவ்ளோ வேலை செய்யறேன்…ஒரு நாளாவது …பாசமா ஒரு வார்த்தை பேசி இருக்காரா..?…நான் என்ன இவருக்கு வேண்டாதவ பெத்த பிள்ளையா…?சாப்டியாடா…அம்பின்னு ஒரு வார்த்தை கேட்டால் என்ன குறைந்து போய் விடுவாராம்…..! பாசத்துக்கு ஏங்கியது அம்பியின் வெள்ளை மனம்.

கையில் நாலு காசு சேரட்டும்….புதுசா ரெண்டு வேஷ்டி வாங்கீண்டு….இங்கேர்ந்து வேற ஏதாவது பெரிய கோயில் இருக்கற ஊருக்குப் போய்..அவா கைல கால்ல விழுந்தாவது ஒரு வேலையைத் தேடிக்கணும்…..இந்த முருகன் கோயில் இல்லைன்னா இன்னொரு பிள்ளையார் கோயில்….திருவிழா முடியட்டும்….போய்டலாம்…இந்த உலகம் ரொம்பப் பெரிசு…இங்க இருக்கற பெருசுகள் தான் பணம் தின்னும் வௌவால்கள்…இந்தக் கோவிலில் உத்தரத்தில் தொங்கிக் கொண்டு பழைய நாற்றமடிக்கும் வௌவால்களுக்கும் இதுகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் மனசளவில் எல்லாம் ஒண்ணு தான்… …மனசை சமாதானம் செய்து கொண்டு….கோவிலுக்குள் தாம்பாளத்தை வைத்து விட்டு அங்கிருந்து…..மரத்தச்சன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்று நினைத்தான்….உடனே.. “ஆமாம்…இவர் சொன்ன உடன் செய்து… செய்து… தான் என்னத்தக் கண்டேன்…..எல்லாம் அப்பறமாப் பார்த்துக்கலாம்….இப்போ நம்ம வீட்டுக்குப் போகலாம்.” மனசில் முதன் முறையாக பெரியவரை எதிர்த்த தைரியத்தில் மகிழ்வோடு அவன் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு உறங்கிப் போனான்.

அந்த நாள் முத்து சாமியைப் பார்க்காமலேயே கழிந்தது. அம்பி மட்டும் கணக்கரிடம் காசை வாங்கிக் கொண்டு இரவு முழுதும்..சித்திரைத் தேரோட்டப் .போஸ்டர் ஒட்டிவிட்டு ஓய்ந்து போய் வந்தான்.

அடுத்த நாள்….அம்பி காலையில் முதல் வேலையாக முத்துசாமியைப் பார்த்து விஷயம் சொல்லிவிட்டு வர மேல வீதிக்கு சென்ற பொது….அங்கு அவரது வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து ஊர் கோவில் வேலைக்கு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் கிளம்பி சென்றதாகவும்  அடுத்த நாள் தான் வருவார் என்ற விஷயத்தை பக்கத்து வீடு மூலம் அறிந்து கொண்டு திரும்பினான் அம்பி.

இந்த ஊரில் இருக்கும் ஒரே கைதேர்ந்த தச்சன் இவன் தான்…இவனை விட்டால் அசலூருக்குத் தான் போயாகணும்.அடிக்கடி பக்கத்து ஊருக்கும் முத்துசாமி போவது வழக்கம்….மர  வேலைகள்.தேர் வேலைகள் இதில் கை தேர்ந்தவர்….நாம நேத்தே வந்திருக்கணும்…தப்புப் பண்ணிட்டேனோ….ஒரு நிமிடம் எண்ணினாலும்…அதனால் என்ன….நாளைக்குப் பார்த்துக்கலாம்…என்று ஒத்திப் போட்டுவிட்டு கோவிலுக்குக் கிளம்பினான்.,,தான் எவ்வளவு பெரிய விஷயத்தை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் இருந்தான் அம்பி.

கோவிலுக்குள் எப்பவும் போல் முதல் கால பூஜை முடிந்த அடையாளம் தெரிந்தது….இன்றைக்குச் செவ்வாய்க் கிழமையா…அதான்…பக்தர்கள் நடமாட்டம் ஜாஸ்தியாய் இருக்கு…நானும் போய் முருகனைத் தொழுதுட்டு அப்படியே சாம்பசிவ ஐயாவைப் பார்த்தால் தான் தெரியும் இன்னைக்கு நேக்கு என்ன வேலைன்னு….சுற்றுப் பிரகாரத்தை கடக்கும் போதே…அங்கிருந்து ஒரு குரல் அம்பியைத் திரும்பச் சொல்லியது…

” டேய் அம்பி…இங்க வாடா..நீ பாட்டுக்கு போயிண்டே இருக்கே…வர வர உனக்கு….கொழுப்பு ஜாஸ்த்தியாயிடுத்துன்னேன்……அழைத்தது சாம்பசிவம்..கோயில் கணக்குப் பிள்ளை தான் ஆனால் பெரியவர் இல்லாத பொது அதிகாரம் அவரைவிட தூள் பறக்கும்.

” சொல்லுங்கோண்ணா…..என்ன விஷயம்…”

“நேத்து பெரியவரண்ட போனியாடா…என்ன சொன்னார்..”

“மேல வீதி மரத்தச்சனைப் பார்த்து வரச் சொன்னார்….போனேன்…அவன்  அங்க இல்லை…வெளியூர் போயிருக்கறதாக் கேள்வி…..நாளைக்குத் தான் வருவானாம்  ….சொல்லிட்டு வந்திருக்கேன்…”..அப்பறம்…பக்கத்து ஊரில் போஸ்டர் எல்லாம் கூட ஒட்டிட்டு வந்தாச்சுண்ணா ..என்று நிறுத்த…..

இதற்குள்ளாக அங்கு வந்த பெரியவர் சரவணன்…என்னடா விஷயம்னு கேட்க….அம்பி நேற்று நடந்ததை சொல்ல….
அவன் எப்படி நம்ம ஊர் தேரை மராமத்து  வேலை செய்யாமல் வெளியூருக்குப் போவான்…அதுவும்  என்னைக் கேட்காமல்…இங்கயும் தானே திருவிழா நெருங்கிட்டு வரது….எல்லாம் அதிகப் பிரசங்கிகள்…..ஒருத்தன் கூட சரியில்லை…..தான்தோன்றி மாதிரி வேலை செய்ய இவன் எதுக்கு இங்கே நமக்கு….இனி வேற ஆளப் பார்க்க வேண்டியது தான்….தாட்டு பூட்டுன்னு கத்திக் கொண்டிருந்தார்…பிறகு..போஸ்டர் வேலை முடிஞ்சுதா…என்று கேட்க…
ஆச்சு….என்று துண்டோடு சேர்த்து கையையும் கட்டிக் கொண்டு…பணிவாக நிற்க….

டேய்…அம்பி…இன்னைக்குப் பூரா நீ தேரை நன்னாத் ஜலத்தை  விட்டு அலம்பித் துடைச்சி பள பளன்னு வெக்கறே …அந்த வேலை எப்பவும் போல உன்னோடது….எங்கியாவது நூலாம்படையப் தேருல…பார்த்தேன்…அப்பறம்.. உன் வேலையத் தொலைச்சிட்டு நிப்ப…சொல்லிட்டேன்….என்று உறுமினார்.
டேய்…கணக்கு….இவனுக்கு என்ன வேணுமோ கொடு…சொல்லிக் கொண்டே…வெற்றிலைப் பெட்டியில் இருந்து வெற்றிலையை பாக்கு சுண்ணாம்பு போட்டு…மடக்கி வாய்க்குள் திணித்துக் கொண்டார்.

“முழல்ல…இவன்ழ …தேர்மூக்கியோழ   ஜாபிழக்  கொழுக்கு  விழுழா …” வெற்றிலை போட்ட வாய் வார்த்தையை குதப்பியது……

“முதல்ல இவன்ன்ட்ட..தேர்மூட்டியோட சாவியக் கொடுத்து விடுடா” அர்த்தம் புரிந்து  கொண்ட சதாசிவம்….சாவியைத் தேடலானார்.

அன்று முழுதும்…பெரியவர்….பழைய கணக்கு பார்த்து…இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று எழுதி பட்டியல் போட்டு….லிஸ்ட் எழுதிக் கொண்டு…கோவில் உண்டியல் கணக்கு சரி பார்த்து அதில் இருந்து ஒரு கணிசமான தொகையை தன் பாக்கெட்டில் வைத்து அழுத்திக் கொண்டு…அப்போ நான் கிளம்பறேன்…நீ பார்த்துக்கோ….நாளைக்கு தச்சன் வந்தால்..தேர் மராமத்து வேலை பண்ணி முடிக்கச் சொல்லு…போன தடவைத்  தேர் அங்கங்கே நகராமல் நின்று மக்கர் செய்தது இல்லையா…?

“ஆமாம்….ஆமாம்….”

இந்தத் தடவ அப்படி இருக்கக் கூடாது….தெருவில் வழுக்கிண்டு போகணுமாக்கும் சொல்லிட்டேன்..இதெல்லாம் உன் பொறுப்பு …! எல்லாம்… நான் சொல்லணுமாக்கும்….நான் என் வேலையைப் பார்க்கக் கிளம்பறேன்…அப்படியே கும்பகோணம் போய்ட்டு என் அம்மாவை பார்த்துட்டு  தான் வருவேன்….அப்படியே கொஞ்சம் கோயில் வேலை கூட இருக்கு…ஒரு நாள் தான் இருக்க மாட்டேன்…எதாவது எடா கூடமா செஞ்சு வைக்காதே …..ஏதாவது வேணும்னா என்னோட கைபேசியில் கூப்பிட்டுக் கேட்டுச் செய்…..என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

“சரி….வாங்கோ…வாங்கோ…பார்த்துட்டு வாங்கோ ” இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன் என்றார் சாம்பசிவம்.

பெரியவர் அங்கிருந்து நகர்ந்ததும்….சாம்பசிவத்தின் பன்னிரண்டு  வயது மகன் சங்கரன்…கோவிலுக்குள் ஓடி வருவது தெரிந்தது…அருகில் வந்தவன்…”அப்பா…பரிட்சை  நடக்கறதுப்பா…..புது பேனா..பரிட்சை அட்டை…எல்லாம் வாங்கணும்பா…ஒரு நூறு ரூபாய் வாங்கிட்டு வரச் சொன்னா டீச்சர்…ரொம்ப அவசரம்பா…தாப்பா…..” சொன்னவுடன்…மேஜை டிராயரைத் திறந்து ஒரு நூறு ரூபாய்த் தாள் எடுத்து மகன் கையில் திணித்துவிட்டு…சரி சரி…நீ ஓடு…என்றார். சே…அப்பாட்ட வெறும் நூறு ருபாய் தானே கேட்டோம்….இருநூறு  கேட்டிருந்தாலும் தந்திருப்பார்…எல்லாம் கோவில் பணம் தானே….சரி….இப்பவே…ஐம்பதுக்கு பதிலாக நூறு வாங்கியாச்சு…..அடுத்த தடவை பார்த்துக்கலாம் என்று கள்ள மனதை சமாதானப் படுத்தியபடியே  கிளம்பினான்…அப்பனுக்குத் தப்பாத பிள்ளையாக….சங்கரன். விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்று முளைக்குமா?

மாலை வரை…..தேரை சுத்தம்.. செய்த அம்பி….சோர்ந்து போய்…….கணக்குப் பிள்ளையிடம் சாவியைக் கொடுக்க வந்தான்….வந்தவன் தலையைச் சொரிந்த படியே……அண்ணா…ஒரு டஜன் கருந்தேள்…  தேருக்குள் இருந்து எடுத்து அடித்தேன் அதுல ஒரு தேள் என் கையை கெட்டியாப் பிடிச்சுண்டு விடவே இல்லை…உதறி உதறி…அப்படியே தேரில் ஒரு அடி….நசுங்கி செத்தது….நல்லவேளை என்னைக் கொட்டிக் கிட்டி வைக்கலை………எதாவது காசு கொடேன்….இப்போ தான் ராஜாமணி நாலு தேங்கா மூடியும் பழமும்  தந்துட்டுப் போனார்..என்று கையில் இருந்த பிளாஸ்டிக் கவரைக் காண்பிக்க…….

இந்தாடா….உன் கூலி என்று ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுக்க…….

“இவ்ளோ தானா…. என்னண்ணா….நீங்க உயிரைப் பணயம் வெச்சு தேள் எல்லாம் அடிச்சு….என்று இழுக்க….

” என்னடா…இன்னும் எவ்வளவு வேணும்…எல்லாம் போதும் போ….தொலைச்சுப் புடுவேன் படவா…..கொடுத்ததை வாங்கீண்டு… கம்பிய நீட்டு…தேள் அடிச்சேன்….தேங்காய் பொறுக்கினேன்…ன்னு கதை சொல்லீண்டு….”

ஏதாவது….எதிர் வாதம் பேசினா…உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு நிப்பே..இருக்கற இந்த வேலையையும் தொலைச்சிட்டு….ஆமா…….சொல்லிட்டேன்….

பெரியவர் தன்னிடம் சொன்ன அதே தொனியில்….அம்பியிடம் சதாசிவம் சொல்ல…..மேற்கொண்டு எந்த பதிலும் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டு…..அம்பி தளர்ந்து…துவண்டு நடக்கிறான்..போகும்போது அவன் மனம் தனக்குள்ளே பேசிக் கொள்கிறது…..

“செஞ்ச வேலைக்கு கூலி தராமல் வயிற்றில் அடிக்கிறான்…எப்படியும் இவன் ஜாஸ்தி கணக்கு எழுதி மிச்சப் பணத்தைத் தன்னோட சட்டைப் பாக்கெட்டில் தான் போட்டுப்பான்….”அடுத்த ஜென்மத்தில் இதே கோவில்ல….நீயும் வௌவாலாத் தொங்கப் போறே” அப்போ புரியும்.

காலையில்  இருந்து மாங்கு…. மாங்குன்னு… உயிரைக் கொடுத்து வேலை செய்ததற்கு…வெறும் அம்பது ரூபாய் தானா….? எளியாரை வலியார் அடித்தால்…..வலியாரை தெய்வம் அடிக்கும்…! எனக்குக் கெட்ட  தலையெழுத்து.  இங்க இருந்து பிச்சை எடுக்கறதுக்கு பதிலா…..சென்ட்ரல் ஸ்டேஷன் ல போயி  போர்டரா வேலை பார்க்கலாமே… எல்லாம் அம்மாவுக்காக…..பொறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணீண்டு படுத்த படுக்கையா இருக்கா……அவள் காலம் கழியட்டும் அதுவரையில் இப்படியே நான் இருந்துட்டுப் போறேன்…..!

“டேய்…அனந்தன்…..அரக்கப் பரக்கப்  பாடுபட்டாலும் உனக்குப் படுக்க பாயில்லைடா…..உனக்கு இங்க தாண்டா தண்ணியும் சோறும்…..போட்டுருக்கு ..!”  முதன் முறையாக அம்பி தனது பெயரை மனதுக்குள் சொல்லி மகிழ்ந்தான்…..”அனந்தன்” இதுவரை அவனது அம்மாவைத் தவிர யாருமே… அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை….”அனந்தன்” தான்…. ஏழை வயிற்றில்  பிறந்ததால்…”டேய் அம்பி” யாகவே மாறி இருந்தான்.

சதாசிவம்…அவன் போவதையே பார்த்தபடி….இப்போ…இதெல்லாம் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுத்து….முளைச்சு மூணு இலை விடலை…இதை வளர விடக் கூடாது…..முளையிலேயே கிள்ளி எறியணும்…இல்லன்னா தலையில் ஏறி உட்காரும்….எண்ணியபடியே…தன மகனுக்குக் கொடுத்த நூறு ரூபாயை….இஞ்சி லாபம் மஞ்சளில் ன்னு ..இவன் கணக்கில் சேர்த்து….எழுதிக் கொள்ளலாம் என்று நிம்மதியுடன்…..பற்றுச் சிட்டை எடுக்கிறார்…அதில்…” தேரை அலம்பி விட்ட கூலிக் கணக்கு என்று அம்பியின் பெயரைப் போட்டு….Rs.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) என்று எழுதி மூடி வைக்கிறார். மீதம் ஐம்பது ரூபாய் மறக்காமல் சாம்பசிவத்தில் சட்டைப் பையில் வந்து  உட்கார்ந்தது. இதெல்லாம் தான் இவரது கிம்பளப் பணம்…..!

பெரியவர் இருக்கற மூடுல இதை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்…அம்பியும் “எனக்கு இவ்வளவு தான் தந்தார் கணக்குப் பிள்ளை” என்று சொல்லவும் மாட்டான். எல்லாரோட குடுமியும் என் கையில் தான் இப்போ இருக்கு….! இந்த சமயத்தைத் தான் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்….என்று சுயநலத்தோடு ஆதாயம் பார்த்தது சாம்பசிவத்தின் கள்ள மனம் துள்ளியது.

இதற்குள்…..முத்துசாமி தனது சாமான்களோடு சாம்பசிவத்தைப் பார்த்து….” ஐயா வரச்சொன்னாங்க ன்னு பக்கத்து வீட்டுல சொன்னாங்க….அதான் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்….என்ன விஷயம் …தேருல ஏதாச்சும்   வேலை இருக்கா…என்ன…? என்று கேட்க…..

ஆமாம்…நீ எங்கே போயிட்டே முத்துசாமி….நம்ம ஊருல சித்திரைத் தேரோட்டம்  வருதுல்லியா…? கொஞ்சம் சரி பண்ணனுமே….எல்லாம் சரி பார்க்க வேண்டாமோ…என்று கேட்க…

சொல்லுங்க சாமி….என்ன வேலைன்னு…நான் நாளைக்கு மதுரை வேற போயாகணும்….அங்கயும் தேர் வேலை தான் பாக்கி நிக்குது…அக்கினி நட்சத்திரம் வேற ஆரம்பிச்சு வறுத்துத் தள்ளுது…வருஷம் ஓட ஓட வயசாகுதில்ல…முன்ன மாதிரியா…..கணக்கா ஓட முடியலை…..என்று கைத்துண்டால் முகத்தை துடைத்த வண்ணம்…சொல்ல..

இதோ பாரு…இப்போ இந்தத் தேருல என்ன வேலை பாக்கி இருக்குன்னு நீயே பார்த்து சொல்லு…எதாச்சும் இருந்தா பார்த்து செய்து கொடுத்துட்டுப் எங்க வேணாப் போ…இங்க முடிக்காமல் நீ எங்கியும் போக முடியாது…பெரியவர் ரொம்ப கோபக் காரர்……ஆமா சொல்லிப்புட்டேன்..அப்புறம் உன் இஷ்டம். பிறகு வேலை தா சாமின்னு என்கிட்டே வந்து நிக்கக் கூடாது…நானும் கறார் தான் இந்த விஷயத்தில்.

சாமி..நம்ம ஊரு தேரு…தான் எனக்கு முக்கியம்..நீங்க ஒண்ணு…இத்த முடிச்சிட்டு வேற வேலை பார்க்கறேன்…சரிங்களா…எனக்குப் தோரணம் கட்டற  வேலை வேற இருக்கு சாமி….ஆளப் போட்டுருக்கேன்…சரியா பண்ணி இருக்காங்களாப்  பசங்கன்னு போயி பார்க்கணும்..

அதான் சொல்றேன்…..நமக்கும் இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு…நாங்களும் மூணு நாளா உன்னை வலை போட்டுத் தேடறோம்…சரி சரி…உடனே போய் பாரு…அட…அம்பி இப்போ தான் தேரை அலம்பி விட்டுட்டு போனான்…
டேய் கணேசா…..என்னடா பண்றே…. சாயரட்சைக்கு நைவேத்தியம் ஆயிடுத்தோன்னோ…..முத்துசாமியோட போயி
தேர் மூட்டியத் திறந்து காமி…கூடப் போ…இந்தா சாவி… கணேசனிடம் சாவியை தந்து விட்டு…இந்த வெய்யில்ல யாரு அவ்ளோ தூரம் நடப்பா….எல்லாம்…கணேசன் பார்த்துப்பான்…என்று நிம்மதியாக தூணில் சாய்ந்து உட்கார்ந்தார் சாம்பசிவம்….உண்ட மயக்கத்தில் சாய்ந்தபடியே உறங்கிப் போனார்.

கணேசன் சாவியை வாங்கிக் கொண்டு…முத்துசாமியின் பின்னால் நடந்தான். அவனுக்கு சமையல் தவிர வேறென்ன தெரியும்…?

தகரக் கதவைத் திறந்து உள்ளே சென்று….தேரைப் பார்த்த முத்துசாமி…..இப்படி தண்ணிய ஊத்தி வெச்சுருக்கானே
ஆணியெல்லாம் துருப் பிடிச்சிருமே…சுத்த மடப் பயல் வேலை இல்ல   இது….அட…இந்த அச்சாணியப்…பாரு….பயங்கரத் துரு ஏறிக்கெடக்கே…ரெண்டு கிலோ கிரீசு வாங்கிப் போடணும்….அப்படியே வெளிய எடுத்து வேற மாத்தினால் தான் சரிப்பட்டு வரும்….விலை வேற கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு…இந்த சாமிக்கிட்ட கேட்டா….என்னமோ…நான் அதிகமா பணம் கேட்கிறேன்னு சொல்லும்….பெரியவர்ட்ட தான் பேசணும்….சரி பார்த்துக்கலாம்…வாடா கணேசா…பூட்டிட்டு சாவிய கொண்டு போயி அவர்ட்ட கொடு…நான் பிறகு வந்து பார்க்கறேன்னு சொல்லு….இப்போ வந்ததுக்கு…ரெண்டு கிலோ கேரீசு போடணும்னு சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வா….என்று இவனை விரட்டி விட்டு….பக்கத்துக் கடையில் டீ  குடிக்க வேட்டியை மடித்துக் கட்டியபடியே  சென்று விட்டான் முத்து சாமி.

ஒரு முக்கியமான வேலை….பொறுப்புகள் தட்டிக் கழிக்கப் பட்டு….ஒவ்வொரு கையாக மாறி….இறுதியில் சரிவர முடிக்கப் படாமலேயே நின்று விடும் என்பதை அறியாமல் இருந்தனர் அனைவரும். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர் என்பது  போல…பொறுப்பில்லாத தலைவன் உள்ள எந்த இடமும்…உருப்படாது…!இது அங்கிருக்கும் எவருக்குமே அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதுவரையில் வாய்க்கவில்லை.

மூச்சு வாங்க நடந்து வந்த கணேசன்….சாம்பசிவத்திடம்…..அதென்னமோ..அச்சாணி ரொம்ப துரு ஏறிடுத்தாம்…
வேற மாத்தியாகணுமாம்…இப்போ ஒரு ஐநூறு ரூபாய் கேட்டு வாங்கிண்டு வர சொன்னான்……என்னமோ ரெண்டு கிலோ கிரிசு…வாங்கித் தடவனும்னு சொன்னான்..முத்துசாமி. இந்தாங்கோ சாவி…பணத்தைக் கொடுத்தால் கொண்டு போயி கொடுத்துட்டு வரேன்….

சீட்டாளுக்கு ஒரு மூட்டாளோ….என்ன…அவன் என்கிட்டே வந்து சொல்ல மாட்டானா…?  நீ.. ஆணியே புடுங்க வேண்டாம்….கொடு சாவிய….நானே போய் அவன ரெண்டு பிடி பிடிக்கறேன்…!

தூக்கம் கலைத்த கோபத்தில்  விறு விறு வென்று   ஆவேசம் வந்தவரைப் போல நடந்தாலும்…மனசுக்குள் ஏதோ ஒரு கணக்குப் போட்டுக் கொண்டே தான் போனார் சாம்பசிவம்…. எப்படியும் இந்த டீலில் இருந்து  ஒரு ஆயிரம் ரூபாய் தேத்த வேண்டியது தான்…

கணேசன் கூட இருந்தால் இதெல்லாம் பேசக் கூட முடியாது….என் கோபம் எனக்கே  லாபம் தான்.

டீ குடித்து முடித்த முத்துசாமி…..சாம்பசிவத்தைக் கண்டதும்…வேஷ்டியை இறக்கி விட்டபடியே…” சாமி…அதான்…
நிறைய வேலை இருக்கு இந்தத் தேரில்..வேலை பார்க்க.ரெண்டு நாள் பிடிக்கும்…முதல்ல புதுசா ரெண்டு அச்சாணி மாத்தணும்…துருப் பிடிச்சிக் கெடக்கு ரெண்டும்….மதுரையில் புது மண்டபத்தில்…இல்லாட்டி…கும்பகோண பௌண்டிரியில் தான் கிடைக்கும்…ஐயாயிரம் ருபாய் வரை செலவாகும். ….ரொம்பப் பெருசு….பார்த்தீங்களா..அச்சு அடிக்கணும்…இரும்பைக் காய்ச்சி யந்திரத்தில் உருட்டிச் செய்யணும்… ஒருநாள் முழு வேலை,   அவசரமா செஞ்சி கொடுப்பாரோ ?..  கொஞ்சம் நோட்டுகளை தள்ளணும்  ……என்ன சொல்றீங்க சாமி…செஞ்சுபுடலாமா? என்று கேட்க…

ஆமை வேகத்தில் நாடு நகருதே  !   இந்த  அவசர வேலைகள் நினைச்சபடி அப்படி வேகமா  நடக்குமா ? என்ன முத்துசாமி இப்படி சொல்றே…வேற உபாயம் சொல்லு..அவ்ளோ மோசமாவா இருக்கு…?இந்த வருடத்தைக் கடத்தி விடலாமா ?   தேர் வலுத்த தேக்கு மரத்தாலே செஞ்சது.  இரும்பு மேலாப்பிலே துருப்பிடிச்சா என்ன ?  கெரோசின்ல துடைச்சா போச்சு !   என்ன சொல்றே ?   சும்மா துடைச்சுட்டு மாட்டிவிடு !    ஆமை வேகத்திலே போற தேரு.. என்ன சரிஞ்சா விழும் ?

வருசத்துக்கு ஒரு தடவை தானே ஓடுது….வேணும்னா அடுத்த வருஷத்துக்குள்ள மாத்திரலாம்…அதான் இப்போ ரெண்டு கிலோ கிரீசு வாங்கி வந்தால் வேலைய முடிச்சுத் தரேன்…..ஐநூறு ரூபாய் ஆகும்…ஆனா ஒண்ணு…. சொல்றேன் சாமி….எப்படியும் அச்சாணி மாத்தித்தான் ஆகோணும்…..அப்படியே கெட்டியா இறுக்கிப் பிடிச்சுக் கெடக்கு….தேரு அசையுமா..ஆடுமா….நகருமா…..சாயுமா…எல்லாம் கேட்கப் படாது…..எல்லாமே….எனக்கு
சந்தேகம் தான்…என்று சொல்ல…பெரியவர்ட்ட சொல்லுங்க..முதல்ல அவரு .என்ன சொல்லாருன்னு பாப்போம்…..இப்படி கடைசி நேரத்துல…அச்சாணி கிடைப்பதும் கஷ்டம் தான்….நிறைய அலையணும்….இந்தக் காலத்தில் எவன் உடனே பண்ணித் தரேன்ன்கறான்….அவனவனுக்கு ஆயிரம் வேலை….முக்கியம்னு சொன்னாத் தான் லேட்டாத்  தருவான்…

போன வருஷம் நல்லாத் தானே இழுத்தது தேரு…அதெல்லாம் ஒண்ணும் கிடையாது …நீ பணம் பண்ணக் கூட அப்படி எல்லாம் சொல்லுவ…இந்தா ஐநூறு…சொன்னபடி ரெண்டு கிலோ கிரீசப் போட்டு வண்டி மையை உள்ள வரைக்கும் போட்டு அடி….பொழைச்சுக் கிடந்தா அடுத்த வருஷத்துக்குள்ள மாத்திரலாம்…சரியா…?

சரிங்க சாமி…உங்க இஷ்டம்…பணத்தைக் கொடுங்க…வேலைய முடிச்சிட்டுப் போறேன்…அப்போ நாளைக்கு மதுரைக்கு போயாகணும்…அங்கயும் தேரு வேலை தான்…பாதில .நிக்குது…அவசரமாக் கூப்பிட்டாலும் வரமாட்டேன் சொல்லிப்புட்டேன்..நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.மதுரையிலப் பெரிய வேலை…மூணு தேரு வேலை அது.! இருபதாயிரம் ரூபாய் கூலி மட்டும்.

சரி…சரி…அதெல்லாம் கெடக்கட்டும்….இங்க மத்ததை நான் பார்த்துக்கறேன்….நீ சொன்னதை செய்துட்டு நடையக் கட்டு…! ஐநூறு ரூபாய்க்கு உன் கைநாட்டை வெச்சுட்டு போ….இந்தா சிட்டை…எடுத்து நீட்ட….கைநாட்டைப் பதித்த முத்துசாமி…..அப்போ நான் வரேன் சாமி….என் வேலை முடிஞ்சுது….உங்க நேரம் நல்லா இருந்தா ஓடிடும்…இல்லைன்னா என்னைக் கேட்கக் கூடாது….அனாவசியமா என் பேரை  பெரியவர் கிட்ட போட்டுக் கொடுக்காதீங்க….சொன்னவன்…..பலமரம்..கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்..என்பது போல…சாக்குப் போக்கு சொல்லி விட்டு .பணமரம்..இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டான்.

விஷயம் இவ்வளவு எளிமையாக முடியும் என்று சாம்பசிவம் எண்ணவில்லை…வெறும் ஐநூறு ரூபாயில் முடிந்து விட்டது…..அதில்…கூட ஒரு ஒண்ணைப்…போட்டால் போதுமே…ஆயிரத்து ஐந்நூறாகும்…..இன்னைக்கு ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் முள்ளங்கிப் பத்தையாய்…..! நான் பண்றது தப்பு தான்….என்ன பண்றது….நாள் பூரா உழைச்சாலும் மூவாயிரம் சம்பளம் தான்…தரார்…எப்படிக் காணும்…? தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு….ரெண்டு நாளா ஒரே வேலை….தானிக்கி தீனிக்கி சரி போயிந்தி….

காலையில் பெரியவரும்…ஜில் ஜிலுன்னு வந்து விட்டார் ஊருக்கு…. கோவிலுக்கு வந்தவர்…..” கணக்கு…என்ன பண்ணி வெச்சுருக்கே…எல்லாம் ரெடியா…எங்கே கணக்கைக் காட்டு..என்று கேட்க…

நீங்க இன்னைக்கு ரொம்பப் பிரமாதமா இருக்கேளே….அப்படியே….பெரிய கனபாடிகள் மாதிரின்னா இருக்கேள் பார்க்க…போன காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா…? இங்க நேக்கு மென்னியப் பிடிக்கிற வேலை…ஒரு நிமிஷம் உட்காரலை…..நீங்களா இருந்தால் ரொம்ப சிரமப் பட்டிருப்பேள் …

முத்தல்ல கணக்கைக் காமியும்…!

சிட்டை வாங்கிப் பார்த்து…..கண் பார்த்தலும்…..இந்தா….அப்போ ஏதோ…வேலை பண்ணியிருக்க….அடுத்த மாசத்தில் இருந்து ஒரு ஐநூறு சம்பளத்தில் கூடப் போட்டு தரேன்…சரியா…சந்தோஷம் தானே.. ஒய்…? அப்படியே ராஜாமணியை ஒரு நடை பார்த்துட்டுப் போறேன்…என்று சொல்லிக் கொண்டே உள்ளே போகிறார்.

நல்லவேளை தப்பிச்சோம்…..! பொழுது விடிஞ்சாத் தேரு….எல்லாம் ரெடி பண்ணனும்…நிம்மதியுடன்…எல்லாம் முருகன் பார்த்துப்பான்…என்று தானும் நடையைக் கட்டினார்.

தர்மகர்த்தா சொன்னபடியே…அம்பியும்..கணேசனும்…இன்னும் சிலருமாக சேர்ந்து தேர் வடத்தை…எடுத்து உதறி…சரி செய்து கொண்டிருந்தனர்…வேலைகள் முழு வேகத்தில் நடந்தேறியது…நாதஸ்வர நாயனக்காரர்கள் ஒரு பக்கம் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொழுதும் விடிந்தது…ஊரு முழுதும்….திருவிழாக் கோலம் கொண்டு…பக்தர்களின் வரவாக இருந்தது…எங்கிருந்தெல்லாமோ ஜனங்கள் வண்டியிலும்…காரிலும்….பஸ்சிலும் வந்த வண்ணம் இருந்ததால் நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. கூட்ட நெரிசலில் எல்லாவற்றையும் குறிப்பாக அச்சாணியை மறந்து போனார் சாம்பசிவம். தேர்…அலங்கரிக்கப் பட்டு…..கம்பீரமாக நின்றது…பக்கத்து ஊர் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்ப….ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்..பார்த்தவர் எல்லாரும் தேரின் அழகை வர்ணித்து வர்ணித்து மெய் மறந்தனர்….தர்மகர்த்தா  பட்டம் கட்டி…..பட்டு வேஷ்டியில் தன்னை அலங்காரம் பண்ணிக் கொண்டு..இங்கயும்…அங்கயும் நடந்து கொண்டிருந்தார்.

ராஜாமணியும்…வெளியூரில் இருந்து வந்திருந்த இன்னொரு அர்ச்சகருமாக தேரின் மேல் ஏறி…சுவாமியையும் அம்பாள் இருவரையும் நிறுத்திக்  கட்டி…அலங்காரம் செய்து…..நல்ல நேரம் பார்க்க…..வடம் இழுக்கத் தயாராக பக்தர்கள் வரிசையாக கோஷம் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நிற்க…போலீஸ அணிவகுப்பில் அங்கங்கே…மைக்கில் பாதுகாப்புக் கருதி…பிரச்சாரம் செய்ய….! முட்டுக் கட்டை போட முன்னும் பின்னும்..தயாராக அம்பியும்…கணேசனும்…..இன்னும் சிலரும் சக்கரத்தடியில் காத்திருக்க…..எல்லோரது கண்களும் தேரின் உள்ளே இருக்கும் தெய்வத்தையே குறி பார்த்துத் தொழ ….தேரின் தோரணங்கள் காற்றில் ஆடி ஆடி மகிழ……கண் கொள்ளாத காட்சியாக அந்த பிரமாண்டமானத் தேர்…..கம்பீரமாக நிமிர்ந்து நின்று அழகு காட்டியது.அணையப் போற தீபம் நேராக நின்று எரியும் …!

மேலிருந்து பெரியவர் கை அசைக்க…….பக்தர்கள் அனைவரும் ஒரு சேர..கோஷமிட்டு  ஆரவாரமோடு வடத்தைப் பிடித்து இழுக்க….இழுக்க…இழுக்க….தேர் அசையாமல் ஆடியது…! தேர் தள்ளாடியது !   யார் இப்போது அச்சாணி பற்றி நினைப்பார் ?   தேர் தவழும் குழந்தை போல் எட்டு நடை வைத்தது  !ஓடி வந்த கணக்கர் சாம்ப சிவம்…..அவரும் சேர்ந்து உற்சாகமாய்….அரோகரா….அரோகரா…என்று கோஷம் இட்டபடியே….நடக்க இருக்கும் அசம்பாவிதம் அறியாமல்…சக்கரத்தின் அருகிலேயே….இடித்த படி நடக்க…

இழுங்கோ…இன்னும்…வேகமா..இழுங்கோ…கந்தனுக்கு…..அரோகரா...என்று கோஷம் போட்டபடியே வடத்தை  இழுக்க…..”கர…கர…கர…கர...கர்ர்ரர்ர்ர்ர்   .” என்று ஒரு பெரிய  முறியும் சத்தம்…கேட்டதும் பலரும் விஷயம் புரிந்து கொண்டு பயத்துடன்….பக்தர்கள் தேரை விட்டு விலகிச் சிதற….முட்டுக் கட்டையைப் போடு….முட்டுக் கட்டைப் போடுடா…என்று ஒரு குரலின் கட்டளைக்கு அடி பணிய…கணேசனும்…அம்பியும் ஒரு சேர முன் சக்கரத்தின் அடியில் குனிந்து கட்டையை வைக்கப் போக…நொடிப் பொழுதில் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது…அப்படியே… சக்கரத்தின் அச்சாணி முறிந்து..60 அடித்தேர் சாய்ந்து  சரிந்து..கோணலாகி….அப்படியே சக்கரங்கள் நழுவி விடை பெற்றன … ! தேர் கொடை சாய்ந்தது…….அதன் அடியில் சிக்கிக் கொண்டனர்…பலர்…அலறல்  கூக்குரல் .. அதில்…கணேசனும்….அம்பியும்.…நசுங்கி…உருத் தெரியாமல்….ரத்த வெள்ளத்தில் கரைந்து குழம்பாகிக் கிடந்தனர். தேர் இழுத்தவர்,  தேர் இழுக்காதவர் எல்லாம் அஞ்சி ஓடினர்.  கூட்டம் சிதறியது.    அங்கே பூகம்ப அதிர்ச்சி !

சாம்பசிவம்….ஒரு காலும் கையும்…மாட்டிக் கொண்ட நிலையில்…..கதறி மரண ஓலம் இட்டு அப்படியே மயங்கிக் கிடந்தார். இன்னும் யாரெல்லாமோ…நசுங்கி….பிதுங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்….அரோகரா…கோஷம் போய்  இப்போது …ஐயோ…அம்மா..என்ற அவல  ஓலங்கள்…..விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. பார்த்தவர்கள் நெஞ்சங்கள் அப்படியே உறைந்து போய்….தாரை தாரையாக கண்ணீர் வார்த்தபடியே….செய்வதறியாது..…..நடுங்கிக் கொண்டு கூச்சலோடு…..ஓட….அடுத்த சில மணி நேரங்கள்…அங்கே…பிரளயம் வந்த பூமியாகி…..தொலைக்காட்சி….பிரஸ் எல்லாரும் பரபரப்பாகி…..தீயணைப்புப் படையினர்  வந்து மீட்புப்  பணி  ஆரம்பிக்க……!

உடனே முன்னேற்பாடாக இருந்த ஆம்புலன்சில் ஏற்றி…பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு ஓட…..அதற்குள்ளாக யாரோ போன் செய்து…108 அவசர சிகிச்சை வண்டிகள் வரிசையாக வந்து நிற்க…கட்டுக் கடங்காத கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது….வெளியூரில் இருந்து வந்தவர்கள்  எல்லாரும் அவசர அவசரமாக  ஊரை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்…..தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று. சிலர்…இது ஒரு அபசகுனம்…..இனி என்னவெல்லாம் இந்த உலகத்தில் நடக்கப் போகுதோ….ன்னு அலறிக் கொண்டிருந்தார்கள்.

கவனிப்பாரற்றுக் கிடந்ததால்…இரும்பு கூட துரும்பாகி…..உடைந்து…..உயிர்களைப் பறித்தது..அறிந்து செய்த பாவங்களை அழுதழுது தான் தொலைக்க் வேண்டும் என்பது போல….ஒரு கை ஒரு காலை இழந்த சாம்பசிவம்….ஏதேதோ எண்ணிக் கொண்டே ஐயோ..அம்மா..வலிக்கிறதே..யாராவது காப்பாத்துங்கோ….அம்பி…நீ எங்கடா இருக்கே….என்று அசைய முடியாமல்  கதறினார்….

தர்மகர்த்தா சரவணனோ…..பல இடங்களில் எலும்பு முறிவோடு….நகரக் கூட  முடியாமல் துடித்துக் கொண்டு கிடந்தார்……அர்ச்சகர் ராஜாமணிக்கு பெரிதாக ஒரு காயமும் இல்லாமல் சிறு காயத்துடன் தப்பினார்.
ஒரு  பாவமும் அறியாத அம்பியும்….கணேசனும்…..எந்த வலியும் தெரியாது….பகவான் திருவடியில் இறுதியாக மூச்சு விட்டுக் கரைந்தனர்.

தேரிழுத்தவர்கள்  புண்ணியம் செய்தவரா ? அல்லது உயிரிழந்தவர்கள்  பாபம் செய்தவரா ?  கடமை செய்யாத இந்த நாட்டில் பாபம் ஏது  ?  புண்ணியம் ஏது ?

எல்லோருக்கும் செய்தியாகிக் கொண்டிருந்த ஒரு விபத்து …இருவருக்கு மட்டும் பாடமாக  உடலில் .முத்திரை பதித்து வாழ்நாள் முழுதும்…வாட்டி எடுக்கத் தயாராகக்  காத்திருந்தது.

சாம்பசிவத்திற்கு…தான் இதுவரை செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைத்தது போல….உணர்ந்தார்…தப்புப் பண்ணிட்டேனே…தப்பு பண்ணிட்டேனே என்று அவரது  மனம் ஓலமிட்டது. கோயில் பணத்தை எடுத்தது எவ்வளவு பெரிய பாவம்….என்னை ..நம்பியவரை…ஏமாற்றியது மகா பாவம்….என்னால் தானே இன்று இவ்வளவு பெரிய துக்கம்..என் பேராசையால் தான் இந்தப் பேரழிவு….என்னை மன்னிச்சுடுங்கோ….என்று மானசீகமாக பெரியவரிடம் மன்னிப்பு கேட்டு  மனசு துடிக்க அழுது கொண்டிருந்தார்.

அங்கங்கே  நொறுங்கிப் போன உடம்போடு..தர்மகர்த்தா சரவணன்….இவ்வளவுக்கும் காரணம்  தன்னால் தான்…..பொறுப்பா ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நான் என் கடமையை செய்யத் தவறி….பொறுப்பைத் தட்டிக் கழித்ததால் விளைந்த அவலம் தான் இந்த விபத்து ….கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்….செய்வதில் பலனில்லை..நான் செய்த தவறுக்கு எனக்கு  தண்டனை கிடைத்து விட்டது…எனது அஜாக்கிரதையினால்….ஒரு பாவமும் அறியாத எத்தனை பக்தர்கள்…. வந்த இடத்தில் தங்கள் உயிரை விட்டு…எத்தனை  குடும்பத்தை நிற்கதியாக்கிய பாவி நான்…! யாருக்கெல்லாம் என்ன ஆச்சோ….? டேய் அம்பி…டேய்…கணேசா….இருக்கேளாடா…..? எங்கேடா இருக்கேள் ரெண்டு பேரும்….? முருகா அவாளுக்கு ஒண்ணும் ஆயிருக்கக் கூடாது…..மனசு ஓலமிட்டது. முருகன் எனக்குத் தக்க தண்டனை கொடுத்துட்டான்….தகுந்த பாடம் புகட்டிவிட்டான் ..முருகா…முருகா..!

இனியாவது  இதுபோல் வேறு எங்கும் எப்போதும் நடந்து விடாமல்  இருக்க இந்த ஊர் சித்திரை தேரோட்டம் அனைவருக்கும் ஒரு அனுபவ பாடமாக இருக்கட்டும்…முருகா என்னை மன்னித்துவிடு….என்று…வலியோடும் மன வேதனையோடும்….கண் மூடினார்…கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
========================================================================================================

Series Navigationபுதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

6 Comments

 1. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் ஜெயஸ்ரீ,

  சித்திரைத் தேரோட்டம் பற்றிய அழகான வர்ணனை பொறுமையாக, கோர்வையாக சம்பவங்களைக் கோர்த்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்,

  அன்புடன்
  பவள் சங்கரி

  1. Avatar
   jayashree shankar says:

   அன்பின் பவள் சங்கரி..தோழி..!
   ஆம் தோழி..இந்த அசம்பாவிதத்தை…கதையாக எழுதும்போது மனது கனத்தது. தங்கள் உணர்வுகளை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றி….
   அன்புடன்
   ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  Rajarajeswari says:

  கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்….செய்வதில் பலனில்லை. செய்த தவறுக்கு எனக்கு தண்டனை கிடைத்து விட்டது

  தேரோட்டம் என்றால் எத்தனை கோவில்களில் இந்தமாதிரி அஜாக்கிரதையால் விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நட்க்கின்றன என்று கனமான மனதைவிட்டு அகலாத பதிவு…

  1. Avatar
   jayashree shankar says:

   அன்பின் ராஜராஜேஸ்வரி ,

   ஆம்…தோழி..சமீபத்தில் மட்டும் மூன்று இடங்களில் வெவேறு காரணங்களால்…தேர் திருவிழாவில் பக்தர்கள் பலியானார்கள்….இதில் அஜாக்கிரதை மட்டும் தான் இதுபோன்ற விபத்துக்குக் காரணம்..எழுதும்போதே மனது கனத்தது…உண்மை. இனிமேலாவது தெரிந்தவர்கள் எடுத்துச் சொல்லி முன்னேற்பாடுகள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்…இந்தப் பதிவின் நோக்கம் அதுவே. இனி இதுபோன்ற அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு..தங்களின் உணர்வையும் என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
   அன்புடன்
   ஜெயஸ்ரீ ஷங்கர்.

 3. Avatar
  ganesan says:

  The writter reveals the fraud ,carelessness and false accounts in handling cash of the people while conducting a big event or festival like this…The tragedy occured in chittrai ther will teach them a lesson and make them to correct themselves while handling public money and conducting public events..well done jayshree shankar for delivering this story at an appropriate time…hats off

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *