முள்வெளி – அத்தியாயம் -7

This entry is part 10 of 40 in the series 6 மே 2012

அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி”

“காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெயரையோ நினைவு வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை. “மாத்தித் தானே ஆவணும். எத்தனை விவகாரம்” என்று பெற்ற பெண்ணைப் பற்றி கசப்புடன் அவள் தாய் உதிர்த்த சொற்கள் நினைவுக்கு வந்தன. விவாகரத்துத் தீர்ப்பு வந்த அன்றிலிருந்து பிறந்த வீட்டுக்கு மகள் வந்தாலும் அம்மா பெண்ணின் முகத்தில் கூட விழிப்பதில்லை. சண்முக சுந்தரம் லதா வீட்டுக்குச் செல்வது தவிர இது போன்ற உணவகச் சந்திப்புகள் இருந்தன.

“மேடம் ஈஸ் ஆன் தி வே. உங்களை இதைப் படிக்கச் சொன்னாங்க”. வெளிச்சக் குறைவில் அவர் காகிதங்களைப் புரட்டிய போது கலா பேட்டரியில் இயங்கும் ஒரு மேசை விளக்கை எடுத்து வந்தாள்.

“தாழ்” என்று தலைப்பிட்டிருந்தது.

விடியற்காலை மணி நான்கு. யாரோ நெஞ்சின் மீது ஏறி அமர்ந்தது போல் மூச்சு முட்டி நெஞ்சு வலித்தது. உடலெல்லாம் இந்த டிசம்பர் குளிரிலும் வியர்வை. எப்படியாவது சியாமளாவை எழுப்ப வேண்டும். “ஏய்…சியாமி.”.குரல் எழும்பவில்லை. இருக்கிற பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழும்ப முயன்றார். எழுந்தே ஆக வேண்டும். வாந்தி வருவது போல இருந்தது. நிமிர்ந்து எழுந்திருக்க முடியவில்லை. கட்டிலின் ஓரத்தில் எப்போதும் இருக்கும் கைத்தடி சாய்ந்து ஸ்டூலுடன் ஒட்டி இருந்தது. சற்றே புரண்டு படுத்தால் கைக்கு எட்டி விடும் அது. அழுத்துகிற வலி அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘கடவுளே. எடுத்துக் கொள்ளுகிற உயிரை இம்சைப் படுத்தாமல் எடுத்துக் கொள்ள மாட்டாயா? எப்படியாவது புரண்டு படுத்தே ஆக வேண்டும். “சியாமி, உன்னோடு ஒரு வார்த்தை பேசி விட்டு போகட்டுமடி இந்த உயிர்”

இடது தோள் செயலற்று ஒத்துழைக்க மறுத்தது. குழந்தை குப்புறிக்கிற மாதிரி ஒரு வழியாய் மொத்த உடலும் திரும்பி கட்டில் முனைக்கு வந்தாகி விட்டது. கைத்தடியை எட்டிப் பிடிக்க முனைந்தார். வலியின் தீவிரத்தில் வலது கையை அசைப்பது பெரிய சவாலாயிருந்தது. ‘சியாமி..வலி தாங்க முடியலே..’ . மயக்கமுற்றார்.

முகத்தில் குளிர்ந்த நீர் பட்டது. ஆனால் விழிகளைத் திறக்க முடியவில்லை. மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருந்தது. வலி தோள்பட்டைகளுக்கும் பரவி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறக்க முடியவில்லை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.” தொடர்ந்து மனதை குவித்து பிரார்த்தனை செய்ய முடியவில்லை. அடுத்த ஜென்மத்திலும் உத்தமர் உறவிற்கு வாய்ப்பில்லையோ? கண்களைத் திறக்க முடியவில்லை. சிவனடி சேரும் முன் அவனது ஊழித் தாண்டவமோ இது? “இந்தாங்க.. வாயைத் திறங்க.. ” சியாமளாவின் குரல் தான். பரிச்சயமான அவளது விரல் ஸ்பரிசம் இதழ்களின் மீது பட்டது. ‘என்னாங்க.. தெறங்க வாயை.’. நாக்குக் கீழே கசப்பான மாத்திரையை வைத்து “அப்படியே இருங்க” என்றாள். அவள் குரலைக் கேட்டாகி விட்டது. இனி தடை ஏதும் இல்லை. “சிவாய நமஹ.. ஓம் சிவாய நமஹ” .

வலி குறைந்து கண்களைத் திறந்த போது சியாமளாவின் சுருக்கங்கள் விழுந்த தளர்ந்த முகம் தென்பட்டது. வென்னீர் நிரப்பிய ‘ஹாட் பேக்’ கை அவர் நெஞ்சின் மீது இதமாக வைத்து ஒத்தடம் கொடுத்தார் சியாமளா. “இந்த தடவை எனக்கு நம்பிக்கை இல்லே. சங்கரை எழுப்பேன். கடைசியாப் பாக்கலியேன்னு வருத்தப் படுவான்.”

“அபசகுனமாப் பேசாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆவாது. சிவ சிவான்னும் சொல்லுங்க”

“உன்னை நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு. என் காலத்துக்கப்புறம் உனக்கு ‘பேமிலி பென்ஷன்’ உண்டு. சங்கருக்குத்தான் இதெல்லாம் புரியும். அவனை எழுப்பு”
‘வீணா மனசை அலட்டிக்காதீங்க. அவன் நேத்திக்கி ஆபீஸிலேயிருந்து வரும் போதே ராத்திரி பத்து மணி. அவனை எழுப்பினா கைக்குழந்தை எளுந்திடுவான்”. வெளியே ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.

சியாமளா முன் வாயிற் கதவைத் திறந்து படியிறங்கிக் கீழே சென்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு ஆறடி நீள மரக்கழிகள் இடையே கித்தான் துணியுடன் இரண்டு வெள்ளை நிற உடையணிந்த இளைஞர்கள் வந்தார்கள். முதலில் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்து “ஸ்டிரெட்சரை ” மீதி இடத்தில் கட்டிலின் ஒரு ஓரத்தில் வைத்தார்கள். பிறகு அவரை இருவரும் தலை கால் இரண்டு பக்கமாக் நின்று தூக்கியதும் சியாமளா “ஸ்டிரெட்சரை “அவருக்குக் கீழே கட்டிலின் ஓரத்திலிருந்து நகர்த்தி மையமாக வைத்தார்..

வீட்டை விட்டு “ஸ்டிரெட்சரில்” படுத்த படி இறங்கியதும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். சியாமளா மரக் கதவில் பெரிய சாவியைப் போட்டுப் பூட்டினார். உள்ளே தூங்குபவர்களை எழுப்ப விரும்பவில்லை போலும். ஆம்புலன்ஸில் சற்று அகலமாக இருந்த நீண்ட இருக்கையில் அவர் “ஸ்டிரெட்சரோடு” படுக்க வைக்கப் பட்டார். அவர் அருகே பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்த சியாமளா “சாமி படத்தை எடுக்க மறந்து போச்சு” என்றபடி இறங்கியதும் பின் பக்கக் கதவை மூட வந்தவன் ஒதுங்கி வழி விட்டான். சியாமளா வீட்டுக்குள் போகாமல் உடனே திரும்பி விட்டார். “என்ன சியாமி உடனே திரும்பி வந்துட்ட?”

“சாவி போட்டுப் பாத்தேன். உள் பக்கமாத் தாப்பாப் போட்டிருக்கு”

“கதை பிடிச்சிரிந்ததாப்பா?”. அவருடைய கழுத்தைப் பின்புறமிருந்து அணைத்த லதாவின் குரல். பல சமயம் அவரது கண்களைத் தன் பிஞ்சு விரல்களால் அழுத்தி மறைத்து விளையாடிய கைகள் அவை. “நீ சொன்ன டிஃப்ரண்ட் ப்ராஜக்ட் இது தானா?”
“யா. இந்தப் ப்ராஜக்ட்ல எல்லாமே டிஃப்ரண்டா இருக்கும். ஓபனிங்க் ஸாங்க் ஒரே மாதிரி டைடில் ஸாங்கா இல்லாம ஒரு தமிழ் க்ளாஸிகல்லா இருக்கும். ‘தாழ்’ அப்படிங்கற இந்த எபிஸோடுக்கு ஜேஸுதாஸோட “குழலும் யாழும் மடியினில் சுமந்து கும்பிடும் வேளையிலே மழலை ஏசுவை மடியினில் சுமந்து மாதா வருவாளே; ஆரோக்ய மாதா வருவாளே” இந்தப் பாட்டு ஓபனிங்க்ல வரும். இதை கண்ணு தெரியாம ரோட்டோரமா ஒரு ‘வேன்’ல உக்காந்து பாடுற ஒருத்தர் கிட்டே பிராக்டிஸ் பண்ணிப் பாடச் சொல்லியிருக்கேன்.
“அப்படீன்னா இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ் இது டிஃப்ரண்ட் ப்ராஜக்ட் தான்”
“யா. இந்த தாழ் கதையிலே வர பெரியவர் ரோலை யார் பண்ணப் போறாரு தெரியுமாப்பா?”
“யாரும்மா?”
“நீங்க தான்”

“பிள்ளைங்களெல்லாம் ஜோராக் கை தட்டுங்க.” தட்டினார்கள்.
“கொல்லிமலையிலேயிருந்து பிடிச்சுக்கிட்டு வந்த ராஜ நாகங்க இது. கடிச்சிதுன்னா ரெண்டு நிமிஷத்துக்குள்ளே உயிர் போயிடும். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் இப்போ இது பொட்டிக்குள்ளே அடையப் போவுது. யாரும் கையைக் கட்டாதீங்க. அப்புறம் ரத்தம் கக்கிக் கீளே விளுந்துடுவீங்க”
பாம்பின் தலையில் ஒரு தட்டுத் தட்டினான். அது மறுபடியும் பெட்டிக்குள்ளே சுருண்டு கொண்டது.
“ஏய்.. யார்ரா அது?”
ஒரு சிறுவன் கூட்டத்தின் முன்பக்கத்திலிருந்து வந்து கீழே விழுந்து மல்லாக்கப் படுத்தான். அவன் வாயிலிருந்து சிவப்பு நிறமாக ஏதோ கொப்பளித்தது.
சொன்னதையும் கேக்காமக் கையக் கட்டிட்டான். இப்ப இவன் உசுரைக் காப்பாத்த மந்திரிச்ச தாயத்து ஒண்ணுதான் வளி”
“ஏய் ஜக்கம்மா” என்று உடுக்கையை அடித்தபடி ஒரு தாயத்தைக் கையில் வைத்து அந்தப் பையனின் முகத்தை மூன்று முறை கையால் சுற்றினான்.

ராஜேந்திரன் கூட்டத்தை விட்டு நகர்ந்து நடந்தான். காவிரிப்பாலமருகே வாகன இரைச்சல் மிகுந்திருந்தது. பாலத்தில் வெப்பம் தவிர கொஞ்சம் காற்றும் தென்பட்டது. காவிரியில் பெரு வெள்ளமாக நீரோட்டம் இருந்தது.

நுரைத்து இரு கரை புரண்டு ஓடினாலும் அது நதி தான். வற்றி மணல் மேடாகக் கிடந்தாலும் அது நதிதான். பெயரை மட்டும் வைத்துக் கொண்டு நதியால் நதியாக இருக்க முடியும். பெரியதாக சாதித்தும் இருந்து கொள்ள முடியும். நதியை ஒட்டியே மனிதன் வாழ விரும்பினான். பின்பு அதுவே பழக்கமானது. காட்டுக்குள்ளும் நாட்டுக்குள்ளும் கடலுக்குள்ளும் வாழ நதிக்கு இயலும். நதியில் நம் வாழ்வைத் தேட இயலும். நதியில் நம் முடிவையும் தேட இயலும்.

தடுப்புச் சுவரின் மீது ஒரு ஆள் ஏறிய பிறகு தான் அதைப் பலரும் கவனித்தார்கள். ஒருவர் ஓடி வந்து ராஜேந்திரனைப் பின் புறத்திலிருந்து அவனது காலை ஒட்டிப் பிடிக்க அவன் முதலில் முன் புறம் சரிந்து அவரின் இழுப்பால் பின் பக்கம் சாய்ந்தான்.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11“பெண் ” ஒரு மாதிரி……………!
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *