“என்ன சொல்லி என்ன செய்ய…!”

1
0 minutes, 0 seconds Read
This entry is part 34 of 40 in the series 6 மே 2012

மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது.

“ஒரு சாண் வயித்த நெப்புறதுக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு?” என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம்.

வெறும் சோறும் பச்சை மிளகாயும், வெறும் சோறும் வெங்காயமும் என்றும் நீரில் கலந்த, நீரில் கரைத்த சோறு என்றும் குடிபடைகள் பிழிந்து பிழிந்து உண்டு ஜீவிதம் கழிப்பதை உணர்ந்துதான் இருக்கிறோம்.

இதற்கு ஒரு படி மேலே போனால் கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், பிறகு உயர் நடுத்தர வர்க்கம், அதற்கும் மேலான வசதி வாய்ப்பு உள்ளவர்கள் என்று படிப்படியாக பலரது வாழ்க்கையும் பல்வேறு படி நிலைகளில் ஸ்தானித்துக் கிடக்கிறது.

வெறும் கஞ்சியும் பட்ட மிளகாயும், வெங்காயமும் கடித்துத் தின்று கழிக்கும் ஜனாகாரம் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. கவலை கொள்வதென்ன? நினைத்துப் பார்ப்பதே இல்லை எனலாம். ஏது நேரம்? ஜீவிதத்திற்கான ஓட்டமே அவர்களை அனுதினமும் விரட்டிக் கொண்டிருக்கிறதே? இதற்கு அடுத்த நிலைபற்றி நாம் யோசிக்க முனைகையில்?

பெரும்பாலானவர்களின், ஏன் அத்தனை பேருடையதுமான என்றே சொல்லலாம். அப்படியானவர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுவது சைவ உணவு வகையான காய்கறிகள்.

கொஞ்சமேனும் இது இல்லாமல் அன்றாட சாப்பாடு கழியாது என்பதுதான் சத்தியமான உண்மை.

“என்னா, வெறும் சோத்தத் தூக்கி வைக்கிற? காய் கீய்னு ஒண்ணும் கிடையாதா? நானென்ன விரலையா கடிச்சிக்கிறது?”

“கொழம்புன்னு இருந்தா அதுல ஏதாச்சும் ஒரு காயாவது போட மாட்டியா? இப்டியா மொட்டக் கொழம்பா வைப்ப?” என்றும் எத்தனையோ வீடுகளில் பேச்சு எழுவதை நாம் அறியலாம்.

இந்தச் சைவ உணவு வகையான காய்கறிகள் பெருத்த ஏற்ற இறக்கமுடையதாக சமீப காலங்களில் நொண்டியடித்தும், ஓட்டமெடுத்தும் இருப்பவர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பொதுவாகவே இவை பண்டிகை காலங்களிலும், முகூர்த்தக் காலங்களிலும் உச்சிக்கு ஏறி நிற்பது நடைமுறை. இதுக்கு அசைவமே பரவால்ல போலிருக்கே? என்று சொல்லுமளவுக்கு வந்துவிடுகிறது.

பிறகு ஒரு நிலையான ஸ்திதிக்கு வந்து நிற்கும். இன்னொன்று அந்தந்த ஸீசன் வகைக் காய்கறிகள் அவ்வப்போது வெகுவாக விலை குறைவதும், சீரழிவதும், வாங்க ஆள் இன்றி வீணாவதும், சகஜமாக இருந்து வருகின்ற ஒன்று. தக்காளி, வாழை போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

எப்படியாயினும் காய்கறிகளைத் தவிர்த்து, நாம் உணவு வகைகளைப் பின்பற்ற முடியாது என்பது நிதர்சனம்.  வெறும் அரிசிச் சோற்றை விட காய்கறிகள்தான் உடலுக்கு வலு சேர்ப்பவை. இதன் எல்லாக் காலகட்டத்தின் தேவையை அனுசரித்தும், விலைவாசி ஏற்றத்தின் பெயர் கெடுக்கும் வகையான வஸ்துவாகவும் இது பங்கேற்கிறது என்பதாலும், மக்களுக்கு குறைந்த விலையில,; நியாயமான எடையில், நல்ல, தரமான, சுகாதாரமிக்க தோட்டப் பயிர்கள் கிடைக்க வேண்டும் என்ற நன் நோக்கில்தான் உழவர்களுக்கான உழவர் சந்தைகள் அரசால் ஏற்படுத்தப் பட்டன. வியாபாரிகள் அல்லாத உழவர்கள், தோட்டப்பயிர் உற்பத்தியாளர்கள் பலனடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

ஆந்திர மாநிலத்தில் இத்திட்டம் சிறப்புற்றது கண்டு தமிழகத்திலும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த உழவர் சந்தைகளின் தற்போதைய நிலை என்ன? பொது ஜனத்தின் நன்மை கருதி இதை நாம் கண்ணுற்றுத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

சுகாதாரமற்ற இட அமைப்பு.

அன்றாடம் பறித்து வரப்படும் புதிய காய்கறிகள் என்பது இல்லாமல,; அன்று விற்பனை செய்தது போக மீதியை அப்படியே சாக்கில் கட்டி அங்கேயே வைத்து விட்டு, மறு நாள் வந்து அதையும் புதிதாகக் கொண்டு வந்தவைகளையும் கலந்து, அல்லது இரு வகையாக வைத்து, தண்ணீர் தெளித்து புதிது போலாக்கி, விற்பனை செய்தல்.

பழுது சரி பார்க்காமல் ரிப்பேராகவே கிடக்கும் தரையோடு பதித்த தராசுகள்.

எடை சரியில்லாத முத்திரை புதுப்பிக்கப்படாத பழைய படிக்கற்கள்

நூறு கிராம், ஐம்பது கிராம்களுக்கு படிக்கற்கள் இல்லாமல் அதற்கு எடையாக ஒரு உருளைக்கிழங்கை வைத்தல், வெங்காயத்தை வைத்தல், காரட்டை வைத்தல் என்பதான பழக்கங்கள்.

உழவர்களுக்கு பதிலாக வியாபாரிகள் உழவர்களாய்ப் புகுந்து கடைகளை ஆக்ரமித்துக் கொண்ட நிலை.

அன்றாடம் துறையினரால் நிர்ணயிக்கப்படும் விலைகளை எழுதிப் போட்டாலும் அந்த விலைக்குத் தர முடியாது என்றும், கட்டுபடியாகாது என்றும் அந்த விலையிலிருந்து கூட்டி அதிகமாக விற்றல் என்கிற விதிமுறைகளுக்குக் கட்டுப்படாத போக்கு

தகவல் பலகையில் எழுதிய விலைக்கு அதிகமாக விற்கக் கூடாது என்கிற ஒலி பெருக்கி மூலமான அறிவுரைகளைப் பொருட்படுத்தாமை

சொல்லிச் சொல்லித் திருந்தாத நிலையில், நுகர்வோரைத் திருப்திப்படுத்தும் வகையில்  அம்மாதிரி நடவடிக்கைகளைப் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பினைப் பெயருக்கு அறிவிக்கும் போக்கு

கால் கிலோ, அரை கிலோ என்று வாங்கும் சாதாரண ஜனங்களுக்கு சரியான எடையின்றி நூறு கிராம், நூற்றைம்பது கிராம் குறைவான எடையில், தராசு சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லி நிறுத்துப் போடுதல்

சில்லரை இல்லை என்று சொல்லிச் சொல்லியே எட்டு என்றால் பத்து ரூபாய்க்குப் போடுதல், நாலு என்றால் ஐந்திற்குப் போடுதல், பதினெட்டு என்றால் இருபதிற்குப் போடுதல் என்பதாக எல்லோரும் பேசி வைத்துக் கொண்டதுபோல் விற்றல்,

எந்தக் கடையிலுமே இல்லாத ஒரு காய்க்கு எகத்தாராக விலை சொல்லி அநியாயத்திற்கு விற்றல், அதற்கு விலை நிர்ணயிக்கப்படாமை,

உழவர் சந்தை ஓயும், அதாவது மூடப்படும் நேரத்துக்குக் கொஞ்சம் முன்னதாக வழக்கம்போல் பையைத் தூக்கிக் கொண்டு அக்கா, அண்ணே என்று வந்து நிற்கும் பணியாளருக்கு ரெண்டு ரெண்டாக அல்லது ஒரு கை என்று அள்ளிப் போட்டு அவர் பையை நிரப்பி, மறு நாள் அதே விருப்பப்பட்ட இடத்தில் கடை தொடர்வதற்கு வில்லையைப் பெறுதல், இன்று போலவே என்றும் எழுதியதற்கு மேலாக விலை கூட்டி விற்றுக் கொள்வதற்கும் சொல்லாத அனுமதியைப் பெறுதல் (அதாவது கண்டு கொள்ளாமல் இருத்தல்)

இப்படியாக இன்று உழவர் சந்தைகள் வியாபாரிகளின் சந்தையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களும் ஏழைகள்தான். இரக்கத்திற்குரியவர்கள்தான். ஆனாலும் அரசு பொது மக்களின் நலன்களுக்காகவும், உழவர்களின் நன்மைக்காகவும் ஏற்படுத்திய ஒரு அற்புதமான திட்டம் என்கிற நோக்கில்தான் இவற்றையெல்லாம் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. விடிகாலையில் அரசு இதற்கென்று தனி பேருந்து விடுவதும், அதில் காய்கறிகளை ஏற்றி வருவோர்க்கு இலவசம் என்பதும் எல்லோரும் அறிந்ததே!

கண்கூடாகக் கண்ட பல குறைபாடுகள் எழுதப் படாத விதிகளாக நடைமுறையில் தொடர்கின்றன என்பதுதான் உண்மை.

அரசின் நன்நோக்கில் ஆரம்பிக்கப்படும் பலவும், நாளடைவில் தேய்ந்து மாய்ந்து சீரழிந்துதான் போகின்றன. அதில் மக்களாகிய நமக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை நாமும் மறுப்பதற்கில்லை.

ஆனாலும் அடிப்படையில் என்னவோ உதைக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!.

இம்மாதிரிக் குறைபாடுகளால்தான் கூட்டுறவுக் காய்கறி மையங்கள் இப்பொழுது அரசால் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றனவோ என்னவோ?

——————————————-

Series Navigation‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Comments

  1. Avatar
    தி.தா.நாராயணன் says:

    என்ன சொல்லி என்ன செய்ய?— என்ற கட்டுரை மூலம் நாட்டு நடப்பை படம்பிடித்துள்ளீர்கள்.நன்றாக வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *