நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..

This entry is part 18 of 41 in the series 13 மே 2012

(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! )

பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம்
தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று நிம்மதியில்
இருந்தேன். ..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு…இப்போ என்னாச்சு…?
பெரிசா ஒண்ணும் ஆகலை…..அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து வேலைக்கு வந்து கொண்டிருந்த
ஆயிஷா…..சொல்லாமல் கொள்ளாமல் வருவதை மறுபடியும் நிறுத்தி விட்டிருந்தாள்…. பாவம் இப்போது என்ன பிரச்சனையோ..?

யார் என்ன சொன்னார்களோ..? .என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு…

ஆயிஷாவை மனது திட்டியது….” ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நின்றிருக்கலாம்..” கொஞ்சம் கூட பொறுப்பு உணர்வுகள் இருக்காதா…இவளுக்கு என்றெல்லாம் யோசித்தது….சரி அவளை இங்கு கொண்டு வந்து விட்ட பேகம் அவர்களின் வீட்டுக்கு ஒரு நடை சென்று பார்த்து விட்டு என்ன விஷயம் என்று கேட்டு விட்டு வருவோம்…
ஆயிஷாவுக்கு என்னாச்சு என்று அவர்களுக்குத் தெரியுமே…..

பேகம் வீட்டுக்கு சென்று காலிங் பெல் அழுத்திய உடனே கதவைத் திறந்தவள் என்னைக் கண்டதும்…”வாங்க வாங்க “என்று முகமலர்வோடு வரவேற்றாள்.

சௌக்கியமா பேகம்…நான் ஆயிஷாவைப் பத்தி தான் உங்க கிட்ட கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்…அவள் மறுபடியும் ஏனோ வருவதில்லை..இப்போ தான் மற்ற எல்லாப் பிரச்சனையும் முடிந்தது…என்று சொல்லவும்..

உட்காருங்க…என்றவள் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு விட்டு தனது மொபைலில் ஆயிஷாவின் எண்களை அழுத்தினாள். பேகம்..

நானும் ரெண்டு மூணு தரம் போன் பண்ணிப் பார்த்துட்டேன்…அவள் எடுப்பதில்லை..அதான் ஏனென்று தெரியலையே….உங்க கிட்ட வந்து கேட்டால் தெரியுமோன்னு…..வந்தேன்…என்றேன்.

இதோ….இருங்க…இப்போ ரிங் போகுது…இந்தாங்க நீங்களே கேளுங்கள் என்று என்னிடம் கைபேசியை நீட்டினாள்.
அவளது கைபேசியில்…”இறைவனிடம் கை ஏந்துங்கள்…அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்…அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை…” நாகூர் ஹனீபா வின் குரலில் பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது. அவள் மட்டும் போனை எடுக்கும் வழியைக் காணோம்.

பேகம் போனை எடுக்க மாட்டேங்கறா..ஆயிஷா …அப்போ…. நான் கிளம்பறேன் …முடிஞ்சாக் கேட்டு சொல்லுங்கோ…சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறேன்.

சரி…..போனால் போகட்டும்…நம்மிடம் தான் அவளது மொபைல் எண் இருக்கே…வீட்டுக்கு போய் இன்னொரு முறை செய்து பார்ப்போம்…என்று எண்ணைத் தேடி எடுத்து….அவளை அழைக்கிறேன்…..மனசுக்குள் பலவற்றை நினைத்துக் கொண்டிருப்பதை விட பேசித் தீர்த்துக் கொள்வது தானே நல்லது.

நான் பொறுமையை இழப்பதற்குள்…..” ஹலோ….யாருங்க…? என்றது ஒரு குரல்…
ஆயிஷா இருக்காங்களா…? என் கேள்விக்கு…
அம்மா….அம்மா….யாரோ…உனக்கு போன் பண்ணிருக்காங்க….எழுந்திருங்
கம்மா…!
என்னால் இது ஆயிஷாவின் மகள் என்று ஊகிக்க முடிந்தது…
” உடல்நிலை சரியில்லையோ….அடப் பாவமே…” என்று மனசு நினைத்தாலும்…
மறு முனையில்….
“ஹலோ…யாரு…? என்ற ஆயிஷாவின் குரலை அடையாளம் கண்டு கொண்டு…
“நான் தான்…உனக்கு என்னாச்சு ஆயிஷா…வரவே இல்லை….மறுபடியும் எதாச்சும் பிரச்சனையா?
யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா…? எங்க வீட்டிலே வேலை செய்யாதே என்று தடுத்தாரா ? இல்லை உனக்கு உடம்பு சரியில்லையா….?

என் அவசரம் எனக்கு….அடுக்கடுக்காக கேள்வி கேட்டது…
” ஒரு விக்கல்….ஒரு துக்கத்தால் தொண்டையில் வார்த்தை வராத நிலை….திக்கி திக்கி பேச ஆரம்பித்தாள்…”

” அம்மா…அங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லம்மா…ஆனா…ரெண்டு நாள் முன்னாடி என் வீட்டில் தான் பெரிய சண்டை…..” வழக்கம் போல என் புருஷன் வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லி அடி அடின்னு அடிச்சு.. உடம்பில் காயம் பட இடங்களில் …. இப்ப நான் எங்கம்மா வீட்டுக்கு வந்துட்டேன்…பரங்கிப் பேட்டைக்கு,,,,பிள்ளைங்கள கூட்டிக் கிட்டு வந்துட்டேன்….

என்ன சொல்றே நீ…..!

“முடியலம்மா..அந்தாளுட்ட..அடி வாங்கி..அடி வாங்கி..உடம்பு மரத்துப் போச்சு…ஆனால் மனசு….இப்போதான் உங்கூட்டு வேலை ஆரம்பிச்சேன்….ஆறு நூறு சம்பளம்னு சொன்னதும்….”எவடி தாரா ன்னு..கேவலமா பேசிச்சும்மா..அன்னிக்கின்னு பார்த்து எங்க குழுவுல கூப்பிட்டு அனுப்பிச்சாங்க…அங்க போயிருந்தேன்…
போயிட்டு வந்ததும்….என்னிய போட்டு அடிச்சு…கேவலமா பேசி…உனக்கு எதுக்கு மொபைல் போனு….நீ ஏன்னா… பெரிய இவளான்னு..கேட்டு…போனப் .புடுங்கி வீசி எறிஞ்சாரு…எங்கியாச்சும் வேலை கீலைன்னு ஊரை மேஞ்சியானா…..பாருன்னு…என்னியும்..புள்ளங்களையும் அடி அடின்னு அடிக்க ஆரம்பிச்சாரு… உன் கையில பணம் கிடைச்சா திமிர் ஏறும் உனக்கு.

அச்சச்சோ….கொஞ்சங்கூட நியாயமே இல்லாத தண்டனை உனக்கு …..இது.அக்கம் பக்கத்தில் யாரும் ஒண்ணும் தட்டிக் கேட்கலையா..?

யாரும் வர மாட்டாக……இதெல்லாம் சகஜம்….ன்னு வேடிக்க..பார்ப்பாக…

என் புருசனுக்கு புத்தி இல்ல……குடிச்சா….அப்புறம் வாயில நல்ல வார்த்தை வராது…எல்லாருக்கும் அது முன்னால வரவே பயம்…

அதாம்மா…..நான் புள்ளைங்களை கூட்டிக் கிட்டு இங்க வந்து சேர்ந்துட்டேன் …கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் நிம்மதியா குடிக்கணும்…என் பச்சப் புள்ளங்க அன்பா நடத்த வேண்டிய அவங்க அப்பன் கையால அடி வாங்கறத என்னால பார்த்து சகிச்சுக்க முடியலை…சொல்லும்போதே….தனது இயலாமையை…ஆற்றமையை எண்ணி…துக்கம் தொண்டை அடைக்க அழ ஆரம்பித்தாள்..ஆயிஷா…!

இங்க கூட வந்து அடிச்சு இழுத்துட்டுத் தான் போகும்…ஆனால் நான் இந்த வாட்டி ஒரு முடிவோடத் தான் இருக்கேன் அடிச்சாலும் வரத் தயாரா இல்லை..இனிமேட்டு வரமாட்டேன்னு சொல்லிடுவேன் …என் குழந்தைகளுக்கு இங்கனயே ஸ்கூல் மாத்திப் போட்டுக்குவேன்…உங்கள வந்து நாளைக்கு பார்க்கறேன்….மா…நீங்கள் உங்களால முடிஞ்ச உதவி செய்யுங்க. இங்கயே எதாச்சும் வேலை தேடிக்குவேன்….மன்னிசுக்கங்கம்மா…சொல்லாம நின்னுட்டேன்…

இல்ல…பரவாயில்லை…நீ கவலைப் படாதே….நீ நாளைக்கு வா…பார்த்துப் பண்ணறேன்….தைரியமா இரு….சரியா..
……எங்க சொல்லணுமோ அங்க சொல்லி சரி பண்ணலாம்…நீ தைரியமா இரு..குழந்தைகள் படிப்பு முக்கியம்…அவங்களுக்கு அப்பாவும் முக்கியம்.. தகப்பனை பிரிச்சிடாதே சரிதானே.. ஆனால் இப்படி அடிக்கிற அப்பன் வேண்டாம். கொஞ்ச நாள் தள்ளி வாழ்றது சரிதான். ஒருநாள் புத்தி வரும் அவருக்கு.

நான் சொன்னது பிடிக்காமல் கூட இருக்கலாம்…உடனே….சரிம்மா…வெச்சுடறேன்….நாளைக்கு வந்து பேசறேன் என்று…இணைப்பு துண்டிக்கப் பட்டது…..

மறுநாள் மதியம் பரங்கிப் பேட்டையில் இருந்து வந்த ஆயிஷாயைக் கண்டதும் என் மனது பதறியது…நெற்றியில் சுவரோடு மோதிய காயம்…..இன்னும் ஆறவில்லை…வண்டி மாட்டை அடிப்பது போல் அல்லவா அடித்திருக்கான்…உன் புருஷன் என்றேன்…இதென்ன கொடுமை….அந்த ராட்ஷசனை என்ன செய்தால் தேவலை…

ஆயிஷா…உடனே ஆமாம்மா இனிமேல் நான் இந்தாளோட வந்து வாழ மாட்டேன்…அதுக்கு வாழா வெட்டியாக இருந்தாலும் பரவா இல்லைன்னு தான் ஒரு முடிவோட எங்க ஊருக்கே போயிட்டேன். என்னிய வேலைய எங்கியும் இனிமேட்டு விடமாட்டேன்…வேலைக்கெல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லி தான் அடிச்சாரு..இத்தனை நாள் வேலை பார்த்த பணத்தைக் கொடுன்னு கேட்டு தொல்லை பண்ணிச்சு…என்னால் தாங்க முடியலை..அவளது விசும்பல் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.

சரி ஆயிஷா….என்ன செய்வது….ஒரு விதத்தில் நீ இப்போ செய்தது நல்லது தான்.. அங்கியே இரு…ஒரு பாதுகாப்பு இருக்கும்…உனக்கு. இந்தா சாப்பிடு…என்று அவளுக்கு பசிக்கு உணவு தந்து….அவள் சாப்பிடட்டும் என்று காத்திருந்தேன்.

பெண்களோட நிலை ஓர் இடத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தாலும்…இன்னும் சில இடங்களில் அதல பாதாளத்தில் தள்ளப் பட்டு அபயக் கரங்கள் நீட்ட ஏங்கிக் காத்திருக்கும் அபலைகள் இருக்கவே செய்கிறார்கள். இதுல ஜாதி. மதம் என்று எல்லாவற்றையும் கடந்தே பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் இழந்த நிலையில்…எண்ணச் சுதந்திரம் கூட இல்லாமல் இரவில் தவித்து விடியலை நோக்கி…உறக்கம் தொலைத்து விழித்திருக்கும் பெண்களுக்கு…என்னாலும்…பெரிதாக வேறு என்ன செய்து விட முடியும்..சட்டமும்…..காவல் துறையும் தலையிடாமல் இந்த புரையோடிய புண்ணை…அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

சாப்பிட்டுவிட்டு .செலவுக்கு என்னால் இயன்ற ஒரு தொகையையும் அவள் இத்தனை நாட்கள் எனக்காக வேலை செய்ததற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டு ..எனக்கு இப்போ மனசில் பாரம் குறைந்தா மாதிரி இருக்கும்மா…அப்போ நான் கிளம்பறேன்…என்று அவள் கிளம்பியதும்….

அவள் மனம் பாரம் குறைய…என் மனசில் பாரம் ஏறியது….இப்படி எத்தனை ஆயிஷாக்கள்….நிம்மதியான வாழ்கை என்றால் என்ன என்றே அறியாமல்…நித்தம் நித்தம்….”நித்ய கண்டம் பூர்ணாயுசு…” ன்னு போராட்டமாக வாழ்வோடு எதிர் நீச்சல் போட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்…அமைதியாக இருக்க வேண்டிய குடும்பங்கள் ஏன் இப்படி சிதறுகிறது…..? இதற்கெல்லாம் யார் காரணம்…? என்ன செய்தால் இந்த அராஜகம் நம் நாட்டை விட்டு ஒழியும்…
யாரால் இதைத் தடுக்க முடியும்….

இங்கு நாம் பார்ப்பது ஒரு ஆயிஷா மட்டும் தான்…ஆனால்…ஒரு விமலா ..ஒரு சுந்தரி…ஒரு முனியம்மா…இன்னும் பிலோமினா…..கிரேஸ்…. என்று திறமைகள் இருந்தும் துயரம் ஏந்தி வாழும் பெண்களின் நிலை மாறும்….
மாற்றும் தீர்வு தான் என்ன..? இந்த சமுதாயத்தின் அவலங்கள்….அரசியலால் சரி செய்ய இயலுமா…? இல்லையென்றால் …..சட்டம் தன் கையில் கோலை எடுக்குமா….? நீதி தேவதையே….உன் கைகளில் இருக்கும் தராசு எப்போது சமநிலையைக் காட்டும்…உனது கண்களையும் கறுப்புத் துணியால் கட்டி…பாராமுகம் செய்தவர்கள் யார்? எப்போது நம் நாட்டின் வறுமைக் கிராமப்புரங்கள்….நிமிரும்..!

சமுதாயம் உயர….சந்ததிகள் சந்தோஷமாக வாழ….சந்தேகப் பேய்….அழிக்கப் பட வேண்டும்…
புரையோடிய புண்களாக….உலகில் சில பகுதியை இன்னும் மருந்தில்லாமல்…ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருக்கும் அராஜகம் வேரோடு அழிக்கப் பாடு படவேண்டும்….!
முளைத்து விட்ட களையைப் பிடுங்கி எறிவதா..அழுக்கு நீரில் ஊறி ..முளை விடக் காத்திருக்கும் கறைபட்ட விதைகளுக்கு…நல்ல நீர் ஊற்றி கழுவி….சுத்தக் காற்றை சுவாசிக்க செய்வதா…? இரண்டு முக்கிய கடமைகள் இருக்கும் நிலையில்…..மெல்ல நீதிதேவதை கண் திறப்பாளா ?

நியாய தராசு சமமாகும்…..ஒவ்வொருவர் மனமும் சமன் செய்து சீர் தூக்கும் கோலாகும்…ஆக்கிக் காக்க வேண்டும்.. எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களே அதுவே புண்ணிய பூமி…இந்தப் புண்ணிய பூமியின் புனிதங்கள் காக்கப் படுமா…?இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் நாம் எங்கே போயகொண்டிருகிறோம்,..வீட்டுக்கு வீடு கேட்கும் பெண்களின் அழுகை ஒலி இன்னும் நின்ற பாடில்லையே…ஒரு மலர்ச்சி பூமி முழுதும் வந்தால் தானே சிறப்பு..!

நியாயம் பேசி சின்னச் சிறையிலிருந்து ஆயிஷாவை நான் எப்படியோ விடுவித்தேன். இப்போது அவள் சிக்கி இருப்பது விடுதலை கிடைக்காத பெரிய சிறை ! நுனிக் கிளையில் இருந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் ஆயிஷாவின் கணவர் என்றாவது திருந்த வேண்டும்…என்று நினைத்த படியே எனது அன்றைய வீடு வேலையில் மூழ்கினேன்.

=========================================================================================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சிதம்பரம்
தமிழ்நாடு

Click here to Reply, Reply to all, or For

Series Navigationவசந்தமே வருக!யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Comments

  1. Avatar
    ganesan says:

    siru kathai thodar kathai aanadhu….ஒரு மலர்ச்சி பூமி முழுதும் வந்தால் தானே சிறப்பு..!we along with the writer expect மலர்ச்சி sooner or later.hatsoff jayshree!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *