ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 36 of 41 in the series 13 மே 2012

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை
என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தியத் தூதரகத்தின் திட்டப்பணி உதவி தலைவர் (DCM) திரு, மனோகர் ராம்,
மன்னர் சவூத் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி பேராசிரியர்.
மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், இந்தநாள் இனியநாள் புகழ்
பேச்சாளர் கலைமாமணி சுகி.சிவம், மனோதத்துவப் பேராசிரியர் முனைவர்
அப்துல்லாஹ் (பெரியோன்தாசன்) ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாகப்
பங்கேற்று நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைக் கூறிச் சிறப்பித்தனர்.

முன்னதாக, மாணவ மாணவியருக்கான வினாடி வினா நிகழ்ச்சியை செயற்குழு
உறுப்பினர் லியோ டெரன்ஸ், சிவா ஆகியோர் சிறப்புற நடத்தினர்.
வினாடி வினாவில் வென்றவர்களுக்கும் பத்தாம் வகுப்பு, + 2 தேர்வுகளில்
இந்தியப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் சிறப்புப்
பரிசுகள் வழங்கப்பட்டன,

கவிஞர்கள் (பஃக்ருத்தீன்) இப்னுஹம்துன், மகேஷ் ஆகியோர் இனிய கவிதை
நடையில் தொகுத்தளித்த இவ்விழாவிற்கு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
எம். வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். செயலாளர் அ. அஹமதுஇம்தியாஸ்
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் காலடிச்சுவடுகளை நினைவுறுத்தி
இந்தியத்தூதரகத்தில் தமிழர்நலன் பேணும் அமைப்புதவிக்கு வேண்டுகோள்
விடுத்தார். துணைத்தலைவர் ஷாஹுல்ஹமீது, பொருளாளர் ஷேக்தாவூத் ஆகியோர்
முன்னிலை வகிக்க, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஷெரீஃப், விஜயகுமார்,
சிக்கந்தர், ஹைதர் அலி, ஜாஃபர் சாதிக், முஹைதீன் கஸ்ஸாலி, ஜவஹர்
சவரிமுத்து, அலெக்ஸ் ஆகியோர் நல்ல பங்களிப்பு செய்தனர்.

மனோதத்துவப் பேராசிரியர் முனைவர். அப்துல்லாஹ் பெரியோன் தாசன்
பேசுகையில் திருக்குறளின் அறநெறிக் குறள்களுக்கான விளக்கத்தைச் சொல்லி
அன்பைக் கொண்டே மனத்தை நிரப்ப வேண்டும், பொறாமை என்பது தன்னம்பிக்கைக்
குறைவு, அது அழிவையேத் தரும் என்பதை சுவையான முறையில் விளக்கிக்
கூறினார்.

கணவன் மனைவி உறவு மேம்பாட்டை வலியுறுத்திப் பேசிய கலைமாமணி சுகி.சிவம்
மனித உறவுகளுக்கிடைப்பட்ட புரிந்துணர்வுப் பிழைகளை களையவேண்டியதன்
தேவையையும், எதுவும் கிடைக்காதவரையே மலை; கிடைத்துவிட்டால் கடுகு என்று
கருதும் மனித மனத்தின் இயல்பினையும் நகைச்சுவையாக விளக்கினார்.

இனியதொரு மாலை நிகழ்வாக, மனம் மணக்க அமைந்த இந்நிகழ்வின் பின்னணியில்
நன்கு உழைத்து, நிகழ்ச்சி சிறக்கப் பாடுபட்ட அஹமது இம்தியாஸ், முஹம்மது
ஷெரீஃப் ஆகியோருக்கு தமிழ்மக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர்.

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பதுமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *