‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 30 of 33 in the series 27 மே 2012

கணினியில் தமிழைப் பரப்புவதை இலட்சியமாகக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் `கனவு மெய்ப்பட வேண்டும்` என்ற தலைப்பில் வெகு சிறப்பாக துபாய் ஸ்டார் இண்டர் நேஷனல் பள்ளிக்கூட வளாக அரங்கத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அமீரகத் தமிழ் மன்றம் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வண்ணம் மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே சமையல் போட்டிகள், கைவினைக் கலைஞருக்கான போட்டிகள், கட்டுரை போட்டிகள் என பல போட்டிகளை அமீரகத் தமிழ் மன்றம் நடத்தியது.
விழாவின் துவக்கமாக அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் அணியினர் ஒருங்கிணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட தொடர்ந்து அமீரா அமீன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நடனத்தை நஷ்வா மற்றும் நவ்ஷீன் ஆகியோர் சிறப்புற வடிவமைத்து வழங்க, மதர் ப்ரீஸ் குழுவினரின் சார்பில் வழங்கப்பட்ட நடனம் தேசிய உணர்வுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது பாரவையாளர்களைக் கவர்ந்தது
மகளிர் தினம் – ஒரு பார்வை என்ற தலைப்பில் திருமதி.நர்கீஸ் ஜியாவுதீன் மகளிர் தினம் குறித்த செய்திகளையும் மகளிரின் அன்றாட சிக்கல்களையும் சிறப்பாக எடுத்துரைத்தார். மூன்றிலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மேடை பயத்தை அகற்றும் விதமாக `அரும்புகளின் தளிர்நடை` என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பான அலங்காரம் செய்து கொண்ட 20 குழந்தைகள் கலந்து கொண்டு பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியை செல்வி. லாவண்யா அழகுற ஒருங்கிணைத்தார்.
அடுத்து நடைபெற்ற மதர் ப்ரீஸ் குழுவினரின் நடனத்தில் நிவேதிதா மற்றும் அபி ஆகியோர் ஆண் பெண் என இரு தோற்றங்களில் நடனமாடியதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் `கனவு மெய்ப்பட வேண்டும்` என்ற தலைப்பில் குறுநாடகமும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பெண்கள் பிரிவினரால் சிறப்புற அரங்கேற்றப்பட்டது. பெண்களுக்கும் மனதும் உணர்வும் இருக்கிறதென்பதை அழுத்தமுறச் சொன்ன இந்தக் குறுநாடகத்தில் லாவண்யா, நிவேதிதா, ரோஷினி, அபி, ஸ்ரீவாணி ஆனந்தன், கோமதி, சுஜாதா, பொற்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
அன்னையும் மகளும் ஒரே அணியில் கலந்து கொண்ட `என்னுயிர்த்தோழி` என்ற வேடிக்கை வினோத நிகழ்ச்சியை லட்சுமி ப்ரியா வழங்கினார். பொது அறிவு, திரைப்படப் பாடல்கள், பழமொழிகள் என்று பல்சுவை கொண்ட இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருமதி ரேணுகாவும் தமிழகத்திலிருந்து வந்திருந்த அவரது அன்னையாரும் முதல் பரிசை வென்றனர்.
தொடர்ந்து நிகழ்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை ரேகா அவர்களைக் குறித்த காணொளி திரையிடப்பட்டது
விழாவில் இந்த ஆண்டின் சுவை அரசியாக திருமதி. நஸீம் நாஸர் தேர்வு செய்யப்பட்டு அதற்குண்டான விருது அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருது நஷ்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
`மகளிரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே மகளிருக்காக மகளிரே நடத்தும் மகளிர் தின நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்தாலும் தங்களுக்கு வழங்கப்படும் இந்த வாய்ப்புகளை பெண்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக இருப்பதாகக் கூறிய அமீரகத் தமிழ் மன்றத்தின் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் `சமூகத்திற்குச் சிறந்த வகையில் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வரும் மகளிரைக் கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த மூன்றாண்டுகளாக அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணி விருதை அமீரகத் தமிழ் மன்றம் வழங்கி வருவதாகவும், இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் பெண்மணியாக தனது சிறப்பான சமூகப் பங்களிப்பிற்காக திருமதி. மர்யம் சலாஹூதீன் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்` என்பதையும் ஜெஸிலா ரியாஸ் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
சிறந்த தமிழ்ப்பெண்மணிக்கான விருதையும், கிரீடத்தையும் ரேகா வழங்க மர்யம் சலாஹூதின் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். தனது ஏற்புரையில், குழந்தைகளுக்கான கல்வி குறித்தும் பெண்கள் கல்வி குறித்தும் சிறப்புற எடுத்துரைத்த மர்யம் ஸலாஹூதீன், குழந்தைகளை அவர்களது திறனறிந்து அந்தத் திறனுக்கேற்றவாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் எல்லா குழந்தைகளாலும் நூறு சதவீதம் கற்றுக் கொள்ள முடியாது சிலரால் 50 சதவீதம் மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் என்றால் அந்த 50 சதவீதத்தை முழுமையாக குழந்தைகள் வெளிப்படுத்த பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஏன் நூறு சதவீதம் எடுக்கவில்லை எனப் புரியாமல் நச்சரிக்கத் தேவையில்லை` என்று குழந்தைகள் கல்வி குறித்த கருத்தை வெளிப்படுத்தினார். தனக்கு வழங்கப்பட்ட இந்த விருது தனது பெற்றோர்களின் நன்கொடைதான் என்று பணிவுடன் குறிப்பிடவும் அவர் தவறவில்லை.
சிறப்பு விருந்தினருக்கான நினைவுப்பரிசுகளை அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ரேகாவுக்கு வழங்கியதன் பின்னர் சிறப்புரையாற்ற வந்த ரேகா நிகழ்ச்சி தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார். நடனங்கள், குறுநாடகங்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் அனைத்திலுமே பெண்களே நிறைந்திருந்தது மகிழ்ச்சியை அளிப்பதாகச் சொன்ன அவர் நிகழ்ச்சிகள் அனைத்துமே தரமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்ததற்காகப் பங்கேற்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பெண்கள் கல்வி எவ்வாறு ஒரு சமூகத்தை மேம்படுத்த முக்கியமான பங்க்ளிப்பாக அமையும் என்பது குறித்தும் பேசினார். துபாயில் ஏற்கெனவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட இந்நிகழ்ச்சி தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருப்பதாகக் கூறிய ரேகா தனது வாழ்வின் மிக முக்கியமான அங்கமான தனது மகளின் பிறந்த தினத்தை பார்வையாளர்கள் ஆசிகளோடு மேடையிலேயே கொண்டாடப் போவதாகச் சொல்லி தனது மகளை மேடைக்கழைக்க பார்வையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாட, ரேகா தனது நன்றியுடன் பேச்சை நிறைவு செய்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மருத்துவர் தஸ்னீம் முன்னிலை வகித்தார் அவரது நிறுவனமான ப்ரைம் மெடிகல் செண்டர் மூலமாக இலவச மருத்துவ முகாமொன்றினையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியை சின்னத்திரை புகழ் ஐஸ்வர்யா சிறப்புற தொகுத்து வழங்கினார். விழா தொடர்பான ஏற்பாடுகளை அமீரகத் தமிழ் மன்ற நிர்வாகிகள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.துருக்கி பயணம்-3
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *