நெஞ்சு பொறுக்குதில்லையே

author
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 41 in the series 10 ஜூன் 2012

ஆக்கம்: நடராஜா கண்ணப்பு 
லண்டன்


“திருப்பி அனுப்பாதே ” சுலோகம் தாங்கியவர்கள்
“ச்சிப்போல்” விமான நிலைய தடுப்பு முகாம் பின்பக்க தெருவில் நிறைந்து விட்டார்கள்.
முதலாவது மேல் மாடி யன்னலில் தெரிந்த குழந்தை கையிலேந்திய அந்தச் சோகமான தாயின் முகத்தைப் பார்த்ததும்.
“அவையளைத் தான் திருப்பி அனுப்பப் போறாங்களாம்”
பிள்ளையோடு நிக்கும் அந்த அனுப்பப் படப் போகும் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டார் மூர்த்தி
“என்ட மடியில் தவழ்ந்த பிள்ளை இப்ப இங்க இந்தச் சிறைக்குள்ள.” மனம் உருகி உடைந்து போனார். அவரால் என்ன செய்ய முடியும்.
அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாய்.
ஒரு சில வாலிபர்கள் மதிலில் ஏறி கூரை மீது தாவி விட்டார்கள். அந்த யன்னலை நோக்கி அவர்கள் அந்தச் சரிவான கூரை மீது வேகமாக தவழ ஆரம்பித்து விட்டார்கள்.
“யன்னலை உடை”
மூர்த்தி ஆவேசத்தில் கத்தியே விட்டார்.
அந்த உயரமான டச்சுக்காரர் – அங்குமிங்குமாய் ஓடிய வண்ணமிருந்தார் – கீழே இறங்கும் படியாய் வாலிபரை கேட்டுக்கொண்டார்..
பத்திரிகைக்காரர்கள் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே எதிர்பார்த்தபடி, கூட்டத்தினரில் பலரை சாதாரண உடையில் நின்ற உளவுப் போலீசார் படம் பிடித்துகொண்டிருக்கிறார்கள்.
சைகை எழுப்பியபடி போலீசார் வாகனங்களில் வந்து விட்டார்கள்.
இதைக் கண்ட கூரையில் ஏறிய வாலிபர்கள் மதிலில் தாவி கிழே குதித்துக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
டச்சுக்காரப் பெரியவர் தலைமையில் கூடிய அனைவரும் சுலோக அட்டைகளை அசைத்தவண்ணம்.
“தஞ்சம் கேட்டவர்களை, கொலைக்களத்திற்குத் திருப்பி அனுப்பாதே”
கண்ணாடி யன்னலில் நிக்கும் அந்தப் பெண்ணையும் பிள்ளையையும் நோக்கி கை அசைத்தவன்னமிருன்தனர் சிலர்.
அங்கே இன்னும் சிலர் நெருக்கிக் கொண்டு நிற்பது தெரிந்தது, பிள்ளையோடு நிற்கும் தாய் மயங்கி நிலை குலையவும்.பக்கத்திலுள்ள கன்னிப் பெண் அவளைத் தாங்குவதும் தெரிகிறது.
“என்ர பிள்ளை ஐயோ” மூர்த்தியர் நெஞ்சு வெடிக்க திகைச்சு நிற்கிறார்.
யன்னலில் யாரும் இல்லை.
பத்திரிகையாளர் பேட்டி எடுத்துக்கொள்கின்றனர்.
தலைமை தாங்கும் ஜன் விரிவாக விளக்குகிறார்.
83 இனக்கலவரம் தொடரும் அச்சம் அதன் காரணமாய் வெளியேறும் மக்கள் தஞ்சம் கோரி வரும் இந்த மக்களைப் பாதுகாக்கவேண்டியது எமது கடமை என்று விளக்கினார் அவர் பத்திரிகைகளுக்கு.
யன்னலில் மீண்டும் திருப்பி அனுப்படவுள்ள தமிழ் அகதிகளில் பிள்ளையோடு அவள் வர மூர்த்தி முகம் மலர்கிறார்.
எல்லாரும் ஏறுங்கோ
உங்களுக்குப் பக்கத்தில இருந்தவர்களைச் சரி பாருங்கோ
கொண்டு வந்த வடை முறுக்கைப் பரிமாறத் தொடங்கினான் சிவா
அண்ணா இவன் சரியாய்க் கூட்டத்தில கத்தினவன் இவனுக்கு இரண்டு கொடுங்கோ.
அந்த டச்சுக்காரர் சிவாவிடமிருந்து கேட்டு வாங்கி ருசித்தபடி…”ம்ம்ம்மம்மம்ம்ம்ம் லெக்கர்(நல்ல ருசி)”
மூர்த்தி தமிழ் நாட்டைச் சேர்ந்த புலமைப் பாரிசில் படிக்க வந்த மாணவனோடு பேசியபடி இருந்தவர் சிவா வடையை நீட்ட மறுத்தவர், மாணவனுக்கு விளக்கினார் “தம்பி நாங்கள் சைவம் இதெல்லாம் சாப்பிடுறதில்லை. …எதோ இங்க வந்திட்டம் எல்லாரிட்டையும் வாங்கிச் சாப்பிடலாமோ, நாங்கள் கோயில் மூலஸ்தானம் வரை போற பரம்பரை.. ……..”
சிவாவுக்கு ரத்தம் கொதித்தது ” என்ன சொல்றீங்க வயசில பெரியவர் எண்டு பார்க்கிறன், அந்நியனுக்கு அடிமையாய் அகதியாய் இருந்தும் என்னும் அந்தப் புத்தி விட்டுப் போகேல்ல, உங்கட கொடுமையால்தான் மூலஸ்தானத்தை விட்டு எங்கட சாமியள் ஓடிப் போய் ஒழிஞ்சு கொண்டினம், இவ்வளவு தமிழர் அநியாயமாய்க் கொல்லப்பட்டும் “
“அவருக்கு அறளை பெறந்து போச்சு, பழசுகள் அப்படித்தான், பெரிசு படுத்தாதீங்கோ” ஒரு சக ஆர்ப்பாட்டக்காரன்.
“இந்தா நீங்கள் கொடுங்கோ” பக்கத்திலுருந்தவனிடம் தட்டை ஒப்படைத்து சிவா வடை கொடுப்பதை நிறுத்திவிட்டவன்.
வலியெடுக்கும் கையைப் பார்த்தான்,
அவன் மதிலால் குதித்தபோது  தோல் கிழிந்த சிராய்ப்பிலுருந்து ரத்தம் வழிகிறது.
Series Navigationஅன்பின் தீக்கொடிஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *