பெட்டி மஹாத்மியம்

This entry is part 6 of 43 in the series 17 ஜூன் 2012

திடீரென இடீஇடியெனச் சிரித்தார், கவிஞர். அதுவரை நெற்றியில் கோடுகள் விழ யோசனையில் ஆழ்ந்திருந்தவர் திடுமென அப்படிச் சிரித்ததும் எருக்கூர் நீலகண்டனும் கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணனும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அறையில் கவிஞரைத் தவிர்த்து அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மூன்றுபேர் சேர்ந்துட்டாலே அதுக்குக் கூட்டம்னு தான் பேரு. அதுவும் இந்த மாதிரி விஷயங்களுக்கு அவசியமான அளவுக்கு ஆட்கள் இருந்தாப் போதும் என்று சொல்லியிருந்தார், கவிஞர். பிரம்மச்சாரி, நீ வா என்று நீலகண்டனையும் சங்கரா, நீயும் வா. ஆரம்பிப்போம் நம்ம மந்திராலோசனை என்று அவர்கள் இரண்டு பேரை மட்டும் அழைத்துக்கொண்டார். உபாயம் தேடும் ஆலோசனையில் இறங்கினார்.

முதல் சுற்றில் ஸ்ரீநிவாசாச்சாரியார், ஹரிஹர சர்மா, நாகசாமி என எல்லாருமே கலந்துகொண்டார்கள். ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். எதுவும் தேறவில்லை. கவிஞர் மனதில் ஒரு விஷயம் மட்டும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. திட்டம் எதுவானாலும் அதை நிறைவேற்றப் போகிறவர்கள் நீலகண்ட பிரம்மசாரியும், அப்பாவிபோல் இருந்துகொண்டு எதற்கும் துணிந்த கடையநல்லூர் சங்கர கிருஷ்ணனும்தான் என்று அவருக்குப் பட்டுவிட்டது.

நீலகண்டனை பிரம்மசாரி என்றுதான் கவிஞர் அழைப்பது வழக்கம். இளவயதிலேயே துறவு பூண வைராக்கியம் செய்துகொண்டுவிட்டதால், வயதை உத்தேசித்து அப்படி அழைப்பார். கவிஞருக்குத் தொண்டு செய்வதே நோக்கமாய் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தவர். சங்கரக் கிருஷ்ணன் துறவியாகப் போவதாய் சங்கற்பம் ஏதும் செய்துகொள்ளவில்லை என்றாலும் விடுதலை வேடகை தவிர வேறு சிந்தனைக்கே இடமில்லாது வாழ்ந்து பழகிவிட்ட எளிய பிறவி.

புதுச்சேரியில் வெளியாகிற இந்தியா, சூரியோதயம், துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள் எல்லாமே பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைய முடியாதபடி எல்லா வாசல்களையும் சென்னை ராஜதானி சர்க்கார் அடைத்துவிட்ட பிறகு, அவற்றையெல்லாம் வெளியிட்டுக் கொண்டிருந்த சுதேசிகளுக்குத் திண்டாட்டமாகி விட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வசித்த தேசிய வாதிகள் அவ்வப்போது அனுப்பி வந்த பிரசுரங்களைத் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் விநியோகம் செய்வதும் சாத்தியமில்லாமற் போயிற்று. முக்கியமாக, சிப்பாய்க் கலகம் என்று  ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் திரித்து எழுதிய  கிளார்ச்சியின் நிஜ சொரூபத்தை மறுக்க முடியாத ஆதாரங் களுடன் விநாயக தாமோதர ஸாவர்க்கர் எழுதிய இந்திய சுதந்திரப் போர் 1857 என்கிற புத்தகத்தின் ஏராளமான பிரதிகள் லண்டன் இந்தியா ஹவுஸிலிருந்து வந்து சேர்ந்திருந்தன. எதை அனுப்ப முடியாவிட்டாலும் ஸாவர்க்கரின் புத்தகத்தை மட்டுமேனும்  எப்படியாவது கண்டிப்பாக விநியோகித்தே ஆக வேண்டும் என்று புதுச்சேரி சுதேசிகள் தவித்தனர். ஸாவர்க்கரின் புத்தகம் மட்டுமின்றி, பாரத நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையைத் தூண்டுவதற்காக அமெரிக்காவிலிருந்த லட்சியவாதிகள் நடத்தி வந்த காலிக் அமெரிக்கன், நியூயார்க் ப்ரெஸ், நியூயார்க் கால், முதலான பத்திரிகைகளும், அவற்றோடு  ஃப்ரீ ஹிந்துஸ்தான், இண்டியன் சோஷியாலஜிஸ்ட், பந்தேமாதரம் ஆஃப் ஜெனிவா, தல்வார்(போர்வாள்) போன்ற இதழ்களும் வெளியுலகத்தைக் காண வழியின்றி அட்டைப் பெட்டிகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தன.

எத்தனை நாட்கள் இப்படிச் செயலற்றுக் கிடப்பது என்று சலித்துப்போன சுதேசிகள், தென்னாப்பிரிக்காவில் உள்ள நேட்டாலுக்குக் கடல் மார்க்கமாக அந்தப் பிரசுரங்களும் தடை செய்யப்பட்ட இந்தியா, சூரியோதயம் இதழ்களும் அடங்கிய பார்சல்களை அனுப்பி அங்கு  தேசபக்தியுள்ள சில நம்பிக்கைக் குரிய தமிழர்கள் மூலம் கொழும்பு வழியாகத் தூத்துக்குடித் துறைமுகத்துக்கு அனுப்பத் தொடங்கினார்கள். இது மிகுந்த கால தாமதமும் அதிகப் பொருட் செலவுமுமான நடைமுறையாக இருந்தது. அந்த ஒரு முறையை விட்டால் வேறு மார்க்கமும் இல்லாததால் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி, தெருவிலே தட்டேந்தி  வசூல் செய்து இன்னும் எப்படி யெல்லாமோ செலவுக்குப் பணம் திரட்டி அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே அதற்கும் முடிவேற்பட்டுவிட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் கொழும்பு விலிருந்து வந்த கப்பலில் வந்த பார்சல்களை சுங்க வரி அதிகாரிகள் தற்செயலாகக் கிளறிக் கிளறி சோதனை செய்யப் போக, மேலே இருந்த மலிவான துணிகளுக்கு அடியிலே அடுக்கப்பட்டிருந்த புதுச்சேரிப் பிரசுரங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படலாயின. அத்தனையும் தடை செய்யப்பட்டவை! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், யார் யார்  பெயர்களுக்கு அந்தப் பார்சல்கள் வந்திருக்கின்றன என்று பார்த்து உடனே உள்ளூர் போலீசுக்குத் தகவல் கொடுத்தார்கள்.  போலீசார் அந்த நபர் களைத் தேடிப்போனபோது  எல்லாமே போலியான பெயர்கள், பொய்யான முகவரிகள் என்று தெரிய வந்தது.. போலீசார் புத்திசாலித்தனமாக மாறு வேடங்களில்தான் அந்த முகவரி களைத் தேடிச் சென்றார்கள். ஆனால் சுதந்திரம் வேண்டித் துணிந்து நின்றோர் அவர்களைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருந்தார்கள். சரி, எப்படியும் பார்சல்களை எடுத்துப்போக யாராவது வந்துதானே ஆக வேண்டும், பொறிவைத்துப் பிடித்து விடலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றந்தான் மிஞ்சியது. பார்சல்கள் தூத்துக்குடி துறைமுகத்திலேயே நாதியற்றுக் கிடந்தன.

தலையைச் சுற்றிக் காதைத் தொடுகிற தென்னாப்ரிக்க மார்க்கத்தை இனித் தொடர்வதில் பயனில்லை என்று புரிந்துகொண்ட புதுச்சேரி சுதேசிகளுக்கு வேறு வழி தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

கிருஷ்ணா, அதர்மத்தை வெல்ல எத்தனையோ உபாயங்கள் சொல்பவனாயிற்றே நீ, எனக்கும் ஒன்று சொல்ல மாட்டாயா என்று கண்ணபிரானிடம் உரிமையுடன் கேட்கத் தொடங்கி விட்டார், கவிஞர்.

பொல்லாத கிருஷ்ணன் உடனே மசிந்துவிடுவானா, என்ன? கொஞ்சமாவது ஆட்டங் காட்டாவிட்டால் அவனுக்கு சுவாரசியம் ஏது?

காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே-நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே கண்ண பெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ண பெருமானே

என்றெல்லாம் அவர் நைச்சியம் பண்ணத் தொடங்கிய பிறகுதான் கொஞ்சம் மனமிளகத் தொடங்கினான் போலும்.

போற்றினோரைக் காப்பதென்னே கண்ண பெருமானே-நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே கண்ண பெருமானே

என்று அவர் இறுதி வரிகளுக்கு வந்தபோது கண்ணன் முற்றிலுமாக விழுந்து விட்டிருக்க வேண்டும்.

கவிஞரின் குழம்பிய மனம் கொஞ்சங் கொஞ்சமாகத் தெளிய ஆரம்பித்தது. ரகசியமாக ஓர் அறையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்த அட்டைப் பெட்டிகளைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அத்தனையும் சுதந்திர தாகத்தைத் தூண்டிவிடுகிற அக்னிப் பொறிகள். பாரத தேசத்து இளைஞர் களையெல்லாம் திரட்டி அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எத்தகைய தியாகத்துக்கும் தயாராக்கக் கூடிய மந்திர யந்திரங்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு இவற்றை வெட்டியாக இங்கு அடுக்கி வைத்துக்கொண்டிருக்கப் போகிறோம்?
உடனடியாக இதற்கொரு வழி கண்டு பிடிக்காவிட்டால் இவை இங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற சேதி வெளியே கசிந்து காரியம் அடியோடு கெட்டுப் போகும். என்ன செய்யலாம்?

நீலகண்ட பிரம்மசாரியையும் சங்கரக் கிருஷ்ணனையும்
வைத்துக்கொண்டு கவிஞர் மந்திராலோசனை செய்து கொண்டிருந்தபோதுதான் திடீரென அட்டகாசமாகச் சிரித்து அவர்களைத் திகைக்க வைத்தார்.

நீலகண்டனும் சங்கரனும் கவிஞரின் முகத்தையே குழப்பத்துடன் பார்த்திருக்கையில்,.திடுமென எழுந்துகொண்ட கவிஞர் குதித்துக் கூத்தாடிக்கொண்டே பாடலானார்:

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளி
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது, வளருது!

புதுச்சேரியில் வியாபாரம் பெருகுதா? அதென்ன வியாபாரம்? அதனால நமகென்ன லாபம்? – நீலகண்டன் கேட்டான்.

நாம் செய்வதென்ன? புத்தகங்கள், பத்திரிகைகள் உற்பத்தியும்  விற்பனையும்தானே? இது வியாபாரம் இல்லாமல் வேறென்ன?
என்றார், கவிஞர்.

தொழில் பெருகுது என்கிறீகளே, அது?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் என்று சிரித்தார், கவிஞர்.

சரி, அதற்கும் இப்போ உள்ள பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? என்றான் நீலகண்டன்.

சூத்திரம் தெரியுது, தந்திரம் வளருது என்று உரக்கச் சிரித்தார், கவிஞர்.

தயவு செய்து புதிர் போடாமல் கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன். எங்களால் தாங்க முடியவில்லை என்று நீலகண்டன் சொன்னதும், பாண்டியா, கிடைத்துவிட்டது உபாயம் என்று நாடகபாணியில் அறிவித்தார், கவிஞர்.

சொல்லுங்க, சொல்லுங்க என்று அவர்கள் ஆவல் ததும்ப அவரை அவசரப்படுத்தினார்கள்.

சொல்லுகிறேன். பிரசுரங்களை ரயில் மார்க்கமாகவே அனுப்ப ஆரம்பித்துவிடலாம். இனிக் கவலையில்லை என்றார், கவிஞர்.

ரயில் மார்க்கமாவா? அதெப்படி முடியும்? வழியில் கண்ட மங்கலத்திலேயே சுங்க வரிச் சோதனையில் எல்லாம் பிடிபட்டுவிடுமே! என்றான் சங்கரக் கிருஷ்ணன்.

நம்பிக்கையான நாலைந்து கிராமவாசிகளிடம் சிறுசிறு பொட்டலங்களாகப் பிரசுரங்களைக் கட்டிக் கொடுத்து அவர்கள் காய்கறிக் கூடைகளில் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் எல்லை தாண்டிக் கொடுத்துவிட்டு அப்படியே அவரவர் ஊர் போய்ச் சேர ஏற்பாடு செய்தோம். அதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை. நமக்கு உதவிசெய்யப்போய் அந்த அப்பாவிகள் உளவுப் போலீசிடம் மாட்டிக்கொண்டு அடியும் உதையும் பட்டதுதான் கண்ட பலன். அத்தனை பிரசுரங்களும் பறிமுதலாகி நமக்கும் ஏகப்பட்ட நஷ்டம்! என்று சலித்துக் கொண்டான், நீலகண்டன்.

ஆனால் நான் இப்போ சொல்லப்போற திட்டத்திலே அந்த மாதிரி சேதாரம் எல்லாம் விளையாது என்று உறுதியாகக் கூறினார், கவிஞர்.

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. சீக்கிரம் சொல்லுங்கள் அந்த அதிசயத் திட்டத்தை! – சங்கரக் கிருஷ்ணன் மறுபடியும் அவசரப்படுத்தினான்.

ஒரே அளவுல மாம்பலகையில ரெண்டு பெட்டிகள் தயார் பண்ணுங்க. ரெண்டுக்கும் வித்தியாசமே தெரியக் கூடாது. ரெண்டு பெட்டிகளுக்கும் அழுத்தமான வர்ணம் பூசுங்க. ஒரு பெட்டி பிரம்மசாரிக்கு. இன்னொரு பெட்டி சங்கரக் கிருஷ்ணனுக்கு. பிரம்மசாரி பெட்டியிலே வினியோகம் பண்ண வேண்டிய பிரசுரங்கள் இருக்கணும். சங்கரக் கிருஷ்ணன் பெட்டியிலே. வெறும் பழந்துணிகள் இருக்கட்டும். பிரம்மச்சாரி, நீ அவசரக் காரன். சங்கரக் கிருஷ்ணன் நிதானம் உள்ளவன். அவன் உடம்புல எந்த விதமான பரபரப்பும் தென்படாது, எவ்வளவுதான் அபாயகரமான நிலைமை ஏற்பட்டாலும் அப்பாவி மாதிரிதான் நிப்பான். சரியான கல்லுளி மங்கன். அதனால பிரசுரங்கள் உள்ள பெட்டியை அவனே கையாளட்டும். ஆனா அவன் பெட்டியிலே பழந்துணிகள் இருக்கற ஏற்பாடு புதுச்சேரி ரயிலடி வரைக்குந்தான் என்றார், கவிஞர்.

அப்புறம்?

ரெண்டுபேரும் ராத்திரி ரயிலிலே விழுப்புரம் வரைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டியது. பிரம்மசாரிக்கு மூன்றாம் வகுப்பு. சங்கரக் கிருஷ்ணனுக்கு மட்டும் ரெண்டாம் வகுப்பு டிக்கெட்.

அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் புரிபடுகிற மாதிரி இருந்தது. ஆனால் கவிஞர் விளக்கமாகவே சொல்லிவிடட்டும் என்று காத்திருந்தார்கள். கவிஞர் சந்தேகத்துக்குச் சிறிதும் இடம் வைக்காமல் திட்டத்தை முழுமையாக விவரித்தார். கேட்டு முடித்த அவர்களுக்குக் குதூகலம் தாங்கவில்லை. கவிஞருடன் சேர்ந்து அவர்களும் கூத்தாடத் தொடங்கிவிட்டார்கள்.

கவிஞரின் திட்டத்தைக் கேள்வியுற்ற மற்றவர்களும் பிரமித்துப் போனார்கள். நம்ம கவிஞருக்கு இப்படியெல்லாங்கூட மூளை வேலை செய்யுமா என்று வியந்தார்கள்.

கவிஞரின் திட்டப் பிரகாரம் நீலகண்ட பிரம்மசாரியும் சங்கரக் கிருஷ்ணனும் ஆளுக்கொரு பெட்டியை எடுத்துக்கொண்டு புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு வாரம் ஒருமுறை போய் வரலானர்கள். பிரிட்டிஷ் ஆளுகைப் பிரதேசமான விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிரசுரங்கள் யாவும் பத்திரமாகக் கை மாறலாயின.

மோப்ப சக்தியில் கைதேர்ந்த சென்னை ராஜதானி போலீசார் புதுச்சேரியிலிருந்து தருவிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு விரோதமான பிரசுரங்களைத் தமிழ் நாட்டில் அவ்வப்போது கைப்பற்றிய போதிலும், புதுச்சேரியிலிருந்து அவை எவ்வாறு கடத்திக் கொண்டு வரப்படுகின்றன என்பதை அவர்களால் துப்புத் துலக்கவே இயலவில்லை. பிரசுரங்களுடன் பிடிபட்டவர்கள் தமிழ்நாட்டிலேயேதான் தங்களுக்கு அவை கிடைத்ததாக சாதித்தார்கள்.

புதுச்சேரியிலிருந்து தடை செய்யப்பட்ட பிரசுரங்கள் பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைகிற மர்மம் கடைசிவரை துலங்கவே இல்லை.

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய நீலகண்ட பிரம்மசாரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்த வாக்கு மூலத்தில்தான் அது வெட்ட வெளிச்சமாகியது.

ஒரே மாதிரியான இரண்டு பெட்டிகளுக்கு மேல்புறத்தில் மட்டும் கதவு வைக்காமல் அடிப்பாகத்திலும் கண்ணுக்குத் தெரியாதபடி ஒரு திறப்பு வைக்கப்பட்டிருந்தது. மேல்புறக் கதவுகளைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே வெளிப் பார்வைக்குப் புலப்படாத அடிப்புறத் திறப்புகள் வழியாக இரண்டு பெட்டிகளிலும் உள்ள சரக்குகளை சுலபமாக இடமாற்றம் செய்ய முடிந்தது.
புதுச்சேரியிலிருந்து ரயில் மார்க்கமாக ஃப்ரெஞ்ச் இந்திய எல்லை தாண்டிப் போகிறவர்கள் கொண்டு போகிற சாமான்களை அவர்கள் இரண்டாம் வகுப்புப் பிரயாணிகளாக இருக்கும் பட்சத்தில் புதுச்சேரி ரயிலடியிலேயே பரிசோதித்து, சோதனையிடப் பட்டுவிட்டது என்று முத்திரை குத்தி விடுவார்கள். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சாமான்கள் மட்டும் கண்ட மங்கலம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் சோதனையிடப்படும். இரண்டாம் வகுப்புப் பிரயாணிகளின் சாமான்கள் புதுச்சேரி ரயில் நிலையத்திலேயே சோதனை செய்யப்பட்டு விட்டதாக முத்திரை குத்தப்பட்டிருப்பதால் அவற்றை மறுபடியும் திறந்து சோதிக்க மாட்டார்கள். இதனால்தான் பிரசுரங்களை விழுப்புரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய சங்கரக் கிருஷ்ணனை இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யச் சொன்னார், கவிஞர்.

சங்கரக் கிருஷ்ணன் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு எடுத்துப் போகிற பெட்டியில் பழந்துணிகள் இருக்கும். நீலகண்டன் பெட்டியில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்கள். சங்கரக் கிருஷ்ணன் இரண்டாம் வகுப்புப் பயணி என்பதால் அவனது பெட்டியை அங்கேயே சோதனை செய்து அதில் ஆட்சேபணைக்குரிய எதுவும் இல்லாததால் மூடி முத்திரை குத்தி விடுவார்கள். நீலகண்டனும் தன்பங்கிறகு மூன்றாம் வகுப்புச் சீட்டு எடுத்துகொண்டு தனது பெட்டியுடன் உள்ளே போவான்.

அங்கே ரயில் முன்னதாகவே வந்து நடைமேடையை ஒட்டினாற் போல நின்றிருக்கும். நீலகண்டனும் சங்கரக் கிருஷ்ணனும் யார் கண்ணிலும் படாமல் ஒரு மறைவான இடத்தில் பெட்டிகளின் அடிப்புறத் திறப்புகள் வழியாகப் பண்ட மாற்றுச் செய்து கொள்வார்கள். இப்போது சோதனையிட்டு முத்திரை வைத்த சங்கரக் கிருஷ்ணன் பெட்டியில் பிரசுரங்கள் இடம் பெறும். சோதனைக்குள்ளாகாத நீலகண்டன் பெட்டியில் பழந்துணிகள் நிரம்பியிருக்கும். கண்டமங்கலத்தில் மூன்றாம் வகுப்புப் பயணி நீலகண்டனின் பெட்டி மட்டும் சோதனையிடப்பட்டு அதில் வெறும் துணிகளே இருப்பதால் தொடர்ந்து எடுத்துப்போக அனுமதி பெறும். சங்கரக் கிருஷ்ணனின் பெட்டியும் முன்னரே பரிசோதிக்கப்பட்டுவிட்டது என்கிற சான்று முத்திரையைத் தாங்கிக் கொண்டு எவ்வித இடையூறும் இன்றி பத்திரமாக பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பிரவேசித்துவிடும்!

இந்தத் திட்டம் தன்னுடையதுதான் என்று நீலகண்ட பிரம்மசாரி தன் வாக்குமூலத்தில் கூறியிருந்ததற்கு, உண்மையைச் சொன்னால்  ஒருவேளை அந்தத் திட்டதைத் தோற்றுவித்த சி. சுப்பிரமணிய பாரதி என்கிற தங்களுடைய ஆதர்ச புருஷருக்கு ஏதேனும்  சங்கடமும் வந்துவிடுமோ என்கிற அச்சம் காரணமாயிருக்கலாம். ஏனென்றால் அப்போது மிகவும் இளைஞனாக இருந்த பிரம்மசாரிக்கு அதற்குள்ளாக அந்த அளவுக்குத் தந்திரம் செய்யப் போதுமான அனுபவம் கிட்டியிருக்குமா என்பது சந்தேகம்தான்!
================================================================


ஆதாரம்: டாக்டர் வி. வெங்கட்ராமன் எழுதிய பாரதிக்குத் தடை  (சுதந்திரா வெளியீடு, ராஜபாளையம்) நன்றி: அமுதசுரபி, ஜூன் 2012


 


Series Navigationஈழத்து மறைந்த அறிஞர்களைப்பற்றிய கட்டுரைகளின்தொகுப்புரிங்கிள் குமாரி – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்
author

மலர்மன்னன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *