நினைவுகளின் சுவட்டில் – 90

This entry is part 5 of 43 in the series 24 ஜூன் 2012

 

அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் இச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயனத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எதுவும் அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக்கொண்டோமே தவிர முன் ஏற்பாடுகள் வசதிகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இப்படி ஒரு பயணம் இப்போது என்ன, அதன் பிறகு எங்காவது எப்போதாவது சாத்தியமா என்பது சந்தேகம் தான். அது பற்றிய நினைப்பே இல்லாமல் தான் நாங்கள் புர்லாவை விட்டுக் கிளம்பினோம். அது பற்றிய சிந்தனையே எங்களில் யாருக்கும் எழவில்லை. இது பற்றி நாங்கள் யாரிடமும் கேள்வி எழுப்பவில்லை. பேசிக்கொள்ளவும் இல்லை.

 

இப்படித்தான் ராஜ்காங்க்பூர் போவது பற்றிய எண்ணமும். எழுந்தது. ராஜ்காங்பூர் கலுங்கா ஸ்டேஷனிலிருந்து பக்கத்தில் தான் சில ஸ்டேஷன்கள் தள்ளி அதே பம்பாய் – ஹௌரா ரயில் பாதையில் உள்ள ஊர். அங்கு ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருந்தது. அந்நாட்களில் ஒரிஸ்ஸாவில் இருந்த பெரிய தொழிற்சாலையும் அது தான். அதன் பின் என்னவோ நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன தான். எங்களுக்கு ஒரிஸ்ஸாவிலேயே உள்ள பெரிய தொழிற்சாலையைப் பார்க்க வேண்டும் அதுவும் பக்கத்திலேயே இருக்கும் ஒன்று. ஹிராகுட் அணைக்கு மிகத் தேவையான பொருள் சிமெண்ட். அங்கிருந்து தான் ஹிராகுட்டுக்கும் சிமெண்ட் வந்துகொண்டிருக்கும் என்பதும் நாங்களாகத் தீர்மானித்துக்கொண்ட விஷயம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதைப் பார்க்காமல் எப்படி புர்லா திரும்புவது? புர்லாவில் உள்ள நண்பர்கள் கேட்க மாட்டார்களா? போகவில்லை என்றால் சிரிக்கமாட்டார்களா?

 

அந்த நாட்கள் எங்கும் அமைதியும் சாந்தமும் நிறைந்த நாட்கள். இப்போது எங்கும் எந்த தொழிற்சாலைக்கும் நினைத்த மாத்திரத்தில் ஏதோ கோவிலுக்கு கடைவீதிக்குப் போவது போல போய்விட முடியாது. இப்போதெல்லாம் பாது காப்பு ஏற்பாடுகள் அதிகமாகிவிட்டன. அதிகமாகிக் கொண்டும் , இருக்கின்றன. சில வருஷங்கள் கழித்து நானே தில்லியிலிருந்து  கல்கத்தாவுக்கும் சென்னைக்கும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்கான நிபுணர்கள் காவலர்கள் கொண்ட ஆராய்வுக்  குழுவில் சேரவிருந்தேன். ஆனால் அன்று என் நினைவில் நாங்கள் ஏதோ  பார்க்குக்கு போவது போல் தான் சிமெண்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்தோம். சுற்றிப் பார்த்தோம். காம்பவுண்டு சுவரோ வாசல் காக்கும் துப்பாக்கி தாங்கிய  கூர்க்காவோ இருக்கவில்லை. எங்கும் ஒரே சுண்ணாம்புப் புழுதியும் எங்கும் நீண்ட தொடர் ட்ராலிகளில் பொருட்களைச் நிரப்பிச் செல்லும், காலி செய்து திரும்பும்,  சின்ன ரயில் பாதை ரயில் வண்டியும் கணடது தான் நினைவிலிருக்கிறது. மேலே போவதும் கீழே இறங்குவதுமாக இருந்த கன்வேயர் பெல்டின் இயக்கமும் பெரிய பெரிய உலைகளும் தான் கண்ட நினைவுகள். வேறு என்ன பார்த்தோம், என்ன புரிந்து கொண்டோம் என்பதெல்லாம் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரிய தொழிற்சாலை பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் வானத்தைத் தொடும் காட்சி தான். பட்டிக்காட்டான் யானை பார்த்த கதை. புர்லா திரும்பினால் சொல்லிக்கொள்ளலாம். ராஜ்காங்பூர் சிமெண்ட் தொழிற்சாலையைப் பார்த்தோம் என்று. இதற்கு முன் ஜாம்ஷெட்பூபரில் இருந்த போது எனக்கு டாட்டா இரும்புத் தொழிற்சாலையைப் பார்த்த அனுபவம் என்னை அவர்களிடமிருந்து வேறு படுத்தி அவர்களைவிட என்னை விஷயம் தெரிந்தவனாக்கிக் காட்டியது. அந்த நாட்களில் (1949-ல்) டாடா இரும்புத் தொழிற்சாலையை விட பெரிதானது இந்தியாவில் அன்று இருக்கவில்லை.

 

எங்களுக்குப் பசி எடுத்தது. ”வாங்க அந்த நாயர் என்ன செய்து வைத்திருக்கிறான் பார்க்கலாம்” என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். இந்தத் தொழிற்சாலைக்கு வரும் முன், வழியில் தனித்து எழுப்பப் பட்டிருந்த ஒரு அஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் ஒரு நாயர் ஹோட்டல் இருந்தது.

“அட இங்கேயும் ஒரு நாயர் ஹோட்டலா,” என்று ஆச்சரியப்பட்டோம். ஹிராகுட்டிலேயே எங்களுக்கு முதலில் தென்பட்டது 1948-ல் ஒரு மார்வாரியின் துணிக்கடையும் ஒரு நாயரின் ஹோட்டலும் தான். நாயர் சாயாக்கடை இல்லாத இடம் உலகில் உண்டா? பின்னால் டென்சிங் எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற போது அங்கும் ஒரு நாயர் மூன்று அடி நீளத்துக்கு சூடா ஒரு சாயா ஆற்றிக்கொண்டு வந்து முன்னால் நின்றார் எனற ஜோக் உடன் வர இருந்தது ஒரு வருஷத்துக்குள். அங்கு டீ சாப்பிட்டோம். பிறகு அந்த நாயர் கேட்டார்.” ஃபாக்டரிக்குப் போய்ட்டு வாங்க இங்கே சாப்பாடு தயார் பண்ணி வைக்கிறோம்,” என்று சொன்னார். அது எங்களுக்கு சௌகரியமாக மட்டும் இல்லை. அவர் ஏதோ எங்களுக்கு வலிய அழைத்து விருந்தளிப்பது போன்ற பாவனை இருந்தது.  எங்கள் முகம் மலர்வதைப் பார்த்து, நாயர் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தார். “சொல்லுங்க வேணும்னா ஒரு கோழி அறுத்து பிரியாணி பண்ணி வைக்கிறேன்,” என்று சொன்னதும் எல்லாருக்கும் ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதை எங்களுக்கு மலர் மாரி பொழிவது போல இருந்தது. அந்த பசி நேரத்தில் காலையில் நடந்த இந்த சம்பாஷணை நினைவுக்கு வர பிரியாணியும் கண்முன் காட்சி அளிக்கத் தொடங்கியது. அந்த நாயர் என்னதான் செஞ்சு வச்சிருக்கான் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டோம்

 

நாயர் ஹோட்டலை அந்த அஸ்பெஸ்டாஸ் கொட்டகையை அடைந்தோம். முகம் கழுவி உட்கார்ந்ததும் பிரியாணி வந்தது. ”நல்ல வேளையா சுடச் சுட இருக்கு. சாப்பிடுங்க. உங்களுக்குப் பிடிச்சிருக்கா சொல்லுங்க. பிடிச்சிருந்தா உங்க ஊருக்கே வந்து அங்கே தினம் உங்களுக்கு பிரியாணி போட்டுடலாம்” என்றார். நாயரின் பேச்சு சாமர்த்தியத்துக்கு நாங்கள் ஈடு சொல்ல முடியாது என்று தெரிந்தது. தேவசகாயமும் மணியும் பிரியாணியை சுட்டு விரலால் புரட்டிப் கிளறி என்னென்னவோ செய்து கொண்டிருந்தனர். “கோழிப் பிரியாணின்னார் நாயர். கோழியைக் காணோமே. என்ன ஜார்ஜ்? உங்க தட்டிலேயாவது ஏதாச்சும் தட்டுப் படுதா என்று சிரித்துக்கொண்டே எங்களில் ஒருவர் கேட்க, அப்போது உள்ளேயிருந்து வந்த நாயர், “என்னங்க, எப்படி இருக்கு நல்லாருக்குங்களா” என்று விசாரிக்கத் தொடங்கினார். “ என்னங்க கோழியவே காணோம்” என்று ஒருத்தர் கேட்க, அதான் ப்ரியாணி பண்ணிட்டமே, பின்னே எங்கேருந்து கோழி இருக்கும்? காலையிலே நாலு பாத்திங்கல்லியா, இப்போ மூணுதான் சுத்திட்டு இருக்கு. ஒண்ணு பிரியாணிக்குப் போயிருச்சு” என்றார். “அதான் கேக்கேன். காணோமே தட்டிலே” என்றார் மணி. நீங்க அஞ்சு பேர் இருக்கீங்களே. எல்லாருக்கும் கிடைக்கணுமில்லியா அதான் துண்டு துண்டா வெட்டாமே கொஞ்சம் சன்னமா கொத்துக்கறி மாதிரி போட்ருக்காங்க. சாப்பிட்டுப் பாருங்க, தூரத்திலேருந்தே எனக்கு கோழிக்கறி மணக்குதே” என்றார் நாயர். இதற்கு மேல் என்ன சொல்வது?

 

நாயர் விடவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். “ இப்போ சாவகாசமா சொல்லுங்க. புர்லாவிலே எப்படிங்க? நிறைய நம்மாட்கள் இருங்காங்களா? அங்கே கடைய எடுத்துட்டு வரலாம்களா” என்று கேட்டார். “வாங்க. கட்டாயம். அங்கே ஒரு ஐயர் மெஸ் இருக்கு. ஒரு பஞ்சாபி ஹோட்டல் இருக்கு. உங்களுக்கும் அங்கே வியாபாரம் நடக்கும். நம்ம ஆட்கள் ஆயிரக்கணக்கில் இல்லையா அணைக்கட்டிலே வேலை செய்யறாங்க” என்று நாங்கள் அவரை உற்சாகப் படுத்தினோம்.

 

அவ்வளவு தான் அவருக்குத் தேவையாக இருந்தது. நாங்கள் புர்லா திரும்பிய ஒன்றிரண்டு மாதங்களில் புர்லாவின் கடைத் தெருவில் அவர் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு கடை வைத்துவிட்டார். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு தான் வாடிக்கையாளர் ஆனார்கள். நான் பஞ்சாபி ஹோட்டலுக்குப் போவேன். இல்லையானால் ஐயர் மெஸ். ஐயரின் மெஸ் சாப்பாட்டை விட பஞ்சாபி தாபாவின் ஃபுல்காவும் சப்ஜி வகையறாவும்  எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் காலையில் கிடைக்கும் இட்லிக்கும் வெங்காய சாம்பாருக்கும் எங்கே போகிறது? அதனால் ஐயரையும் விட மனசில்லை.

 

நாயருக்கு தேவசகாயத்தை ரொம்பவும் பிடித்துப் போயிற்று என்று தெரிந்தது. ஆனால் நாயர் பேச்சில் தான் இனிப்பாக இருந்தாரே ஒழிய மற்ற விஷயங்களில் ரொம்ப கெட்டி என்பது எல்லாருக்கும் தெரிந்தது.  ஒரு நாள் நாயர் தன்னிடம் இருந்த ரேடியோவை யாருக்காவது தந்துவிடலாம் என்று நினைப்பதாகச் சொன்னார். எல்லாரும் ஆளுக்கு ஒரு ரூபாய் சீட்டுக்கட்டுங்க. யாருக்கு விழுதோ அவருக்கு அதிர்ஷ்டம். மத்தவங்களுக்கும் ஒண்ணும் மோசமில்லை. ஒரு ரூபாய் தானே. பெரிசில்லை என்றார்.. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சீட்டு கட்டினார்கள் .எனக்கு இந்த நாயரின் சாப்பாடும் பிடிக்கவில்லை. அந்த ஆளும் அவர் பேச்சும் பிடித்ததில்லை.

அப்போது ரேடியோ எல்லார் வீட்டிலும் இருந்ததில்லை. இரண்டு ரேடியோ கம்பெனிகள் தான் பிரபலமாக இருந்தன. ஒன்று மர்ஃபி. ஒரு குழந்தையின் படம் போட்டு விளம்பரங்கள் காலண்டர்கள் பார்க்குமிடமெல்லாம் கண்ணில் படும். இன்னொன்று ஜி.இ.சி. என்று. ஜெம்ஷெட்பூரில் மாமாவிடம் இருந்தது ஒரு பெரிய பெட்டி. ஜி.இ.சி. பெட்டி. மூன்றாவதாக டெலிஃபங்கன் என்று புதிதாக வந்தது. ஜெர்மன் தயாரிப்பாக்கும் என்று அதை வாங்கியவர்கள் கொஞ்சம் அழுத்தி நீட்டிச் சொல்வார்கள். எங்கள் ரூமுக்கு மலேயாவில் வியாபாரம் செய்துவந்தவர்கள் இரண்டு பேர் வந்திருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் மலாய் மொழியில் என்ன சொல்வார்கள் என்று அவர்கள் பேசிக்காட்டுவார்கள். பெனாங் அனுபவங்கள் பற்றி அடிக்கடி பேசுவார்கள். இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், எங்களுக்கு எதிர்த்த சரகில் இருந்த சத்யமூர்த்தி என்று தான் பெயர் என்று நினைக்கிறேன். அவர். டெலிஃபங்கன் ரேடியோ வாங்கியிருந்தார். அதில் பாட்டுக் கேட்க எங்களையெல்லாம் அழைத்திருந்தார். “இதான் ஜெர்மன் ரேடியோங்களா, நல்லாத்தான் இருக்கு பாக்கறதுக்கு. நல்லாவும் கேட்குது” என்றார் அந்த மலாய் நண்பர்கள். அடுத்து அப்போது பிரபலமாக இருந்த சிலோன் ரேடியோவின் தமிழ்ப் பாட்டு ஒன்று வந்தது. “எங்கள் மலாய் நண்பருக்கு ஆச்சரியம். “என்னங்க ஜெர்மனிக்காரன் பண்ணினதுங்கறீங்க, தமிழ்ப் பாட்டெல்லாம் கூடப் பாடுது! எப்படீங்க. நல்லா விசாரிச்சிட்டுத் தான் வாங்கினீங்களா,? “ என்று சொல்லவே எல்லாரும் சிரிக்கத் தான் செய்தோம். அடக்க முடியவில்லை

 

தேவசகாயமும் சிரித்தார் தான். ஆனால் நாயர் அடக்கமாகச் சிரித்த சிரிப்புத் தான் பெரிய சிரிப்பாக இருந்தது. நாயரின் ரேடியோ பெட்டிக்கு தேவசகாயமும் ஒரு ரூபா சீட்டுக் கட்டினாரே. அவருக்குத் தான் சீட்டு விழுந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். நாயருக்கு ரொம்ப பிடித்தவராக தேவசகாயம் இருக்கலாம். ஆனால் சீட்டு குலுக்கிப் போட்டா தேவசகாயத்துக்குத் தான் விழுணும்னு நாயர் செய்திருக்க முடியுமா என்ன? ”அவர்கள் சினேகத்துக்கு கர்த்தர் கொடுத்த பரிசு,” என்று சொன்னோம். ஆனால் தேவசகாயம் முகம் பார்க்க சுவாரஸ்யமாக இல்லை. என்ன ஆச்சு? என்று கேட்டோம். ”இது ரேடியோ இல்லிங்க. ரேடியோ பெட்டி. வெறும் பெட்டிங்க. இதில் வால்வ் ஒண்ணும் கிடையாது.  என்னாச்சுன்னு கேட்டா, வால்வ் எல்லாம் நீங்க போட்டுக்கணும்க. வால்வ் சேத்தி இல்லிங்கன்னுட்டார். உங்களுக்கு ஒரு ரூபாய்க்கு இது கிடைச்சதே பெரிசு இல்லீங்களா. ஒரு ரூபாய்க்கு எவ்வளவு கிடைக்கும்” என்று சொல்றார் நாயர். அவர் கெட்டிக்காரத்தனத்தை அவர் விடலை.” என்றார் தேவசகாயம்.

 

தேவசகாயம் அதை என்ன செய்தார் என்று நினைவில்லை. ஆனால் அந்த ரேடியோ பெட்டிக்கு வால்வ் வாங்கிப் போட்டதாகவோ அதிலிருந்து எந்த சத்தமும் எப்போதும் எங்கும் கேட்கும் “கொர்ர்ர்ர்ர்ர்” சத்தம் கூட அதிலிருந்து வந்த நினைவில்லை எனக்கு. “என்னாத்துக்கு அதைப் போட்டு வாங்கிட்டு……” என்ற அவரது வழக்கமான “வெளங்காததை” உதறி எறியும் பேச்சுதான் வரும். . .  .

.

Series Navigationஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *