மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33

This entry is part 28 of 41 in the series 8 ஜூலை 2012

38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் சூரியன் எதிர்வீட்டு மோட்டுவளையை அவதானித்தபடி இருந்ததால் வந்த வண்டியையும் அதிலிருந்து யார் இறங்குகிறார்களென்பதும் தெளிவாயில்லை. தரையில் ஊன்றிருந்த கையைஎடுத்து புருவத்திற்கு மேலே மடக்கிப்பிடித்து கண்களை குறுக்கிப்பார்த்தும் பிரயோசனமில்லை.

– யாரு? குரலை நீட்டிக் கேட்டாள்.

வண்டியின் பின்புறம், ஏறுபலகையில் கால்வைத்து செல்வக்களையுடன் யாரோ இறங்குகிறார்கள் என்பதை மாத்திரம் விளங்கிக்கொண்டாள். ஒரு வேளை தண்டல்காரனாக இருக்குமோ. தீர்வை எதுவும் பாக்கியில்லை. கொஞ்சம் கொடுக்கவேண்டியிருந்தது, அதற்கும் பாழாய்ப்போனவன் ஒரு கிடாயை ஓட்டிப்போயிருந்தான். வண்டியிலிருந்து இறங்கிய ஆசாமி நேராக நிழல்போல அவளை நெருங்கினான். இவள் கூச்சப்பட்டு ஒதுங்க அவள் முன்கை அவன் கைகளுக்குள் இருந்தது. வந்தவனது உடல்வாடை இன்னாரென்று தெரிவித்து விட்டது.

– என்னைத் தெரியுதா?

பிடித்திருந்த கைகளை உதறிக்கொண்டு திரும்பி வீட்டுக்குள் நுழைந்தவளைத் தொடர்ந்து கார்மேகம் ஓடிவந்தான்.

– அவசரப் படவேண்டாம். சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்து கேள்.

– இரண்டு வருஷமா எங்கே போயிருந்தாய். ஆத்தாள் இருந்த இடத்தில் புல்பூண்டு முளைத்திருக்கிறதாவெனப் பார்க்கவந்தாயா?

– நானுமுன்னை கிருஷ்ணபட்டணம் வருமாறு பலமுறை சேதி அனுப்பினேன். ‘இந்த ஊரைவிட்டுவரமாட்டேனெனெனப் பிடிவாதமாக மறுத்துவந்தாய். தற்போது என்னைக்குற்றம் சொன்னாலெப்படி? வண்டியில் உம் பேர்த்தியும் மருமகளும் இருக்கிறார்கள், வந்து பார்.

– வரமாட்டேன். ஏன் உம் அருமைப்பொண்டாட்டிக்குத் தரையில் கால் பாவாதோ? உம் மகளைத் தூக்கிவந்து எனது கண்ணில் காட்டிவிட்டு போ.

– இரண்டுபேருமே இப்படிப் பண்ணினால் நானென்ன செய்வதாம்.

– முறைப்படி புருஷனும் பெண்சாதியும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நேராய் நம் வீட்டிற்கு வந்திருக்கவேணும்.

– உம்முடைய மனதில் என்ன நினைப்பு இருக்கிறது நேற்றுகாலமே புறப்பட்டது. பிரயாண அலுப்பு கண்களில் இருக்கிறது. உமது பேர்த்தியின் உடலும் அனலாய்க்கொதிக்கிறது. வைத்தியனிடம் காண்பிக்கவேணும். பெற்றவளைப்பார்க்காமல் போகக்கூடாதென்பதற்காக வண்டியை நேராய் நம் வீட்டிற்குப் போக சொன்னேன்.

– உமக்குத் தருமம் ஞாயமெல்லாம் கூட தெரியுமோ?

– தெரியாமலென்ன. உமக்கே இத்தனை வீம்பு இருக்கிறபோது செல்வத்தில் புரளும் உம்மருமகள் வீம்பைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. இரண்டுபேரும் சேர்ந்துகொண்டு என்னை வதைக்கிறீர்கள்

– சரி சரி போய் அவளை கையோடு அழைத்து வா! ஆளுக்கு ஒருவாய் மோர் குடித்துவிட்டுப்போகலாம். உமது பெண்டாட்டி பெருமைக்கு எந்த பங்கமும் நேராது.

– அம்மா அவள் பிடிவாதமும் தெரிந்ததுதானே! பயண அலுப்பிலிருக்கிறாள். இரண்டு தினங்கள் கழிந்து அழைத்து வருவேன். உம் பேர்த்திக்கு மொட்டைபோட்டு காது குத்தவேணும். இப்போது புறப்படுகிறேன்.

– கொஞ்சம் பொறு என்று உள்ளே போனவள் ஒரு குவளையில் மோர் கொண்டுவந்தான். அவன் குடித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டுமொருமுறை உள்ளே சென்றாள். கையில் ஒரு புட்டுக்கூடை இருந்தது. அதில் வறுத்தக்கொள்ளும் அவல்பொரியுமிருந்தன. வாங்கிக்கொண்டு புறப்பட்ட மகன் வண்டியில் ஏறுவதையும் அது புறப்பட்டுச் செல்வதையும் வாசலிலிருந்தபடி பார்த்தாள். சிறிது தூரம் வண்டி கடந்து சென்றிருக்கும், அவசரமாய் கால்களை எட்டிப்போட்டு வீதிக்குவந்தாள். பேர்த்தி வண்டியிற் தெரிகிறாளா என்று பார்த்தாள். குழந்தைக்குத் தாய் இவளைக் கவனித்திருக்கவேண்டும். குழந்தையை இருகைகளிலும் கவனமாகத் தூக்கிப்பிடித்து நோகாமல் ஆட்டினாள்.

– சிறுக்கிமகளுக்கு என் மேலே பிரியமில்லாமலில்லை- என முனகிக்கொண்டே வீட்டிற்கு வந்தாள். சாயங்காலம் ஒரு முறை பேர்த்தியைக் கண்டால்தான் மனம் ஆறும் போலிருந்தது.

நந்தகோபால் பிள்ளை இல்லம் களை கட்டியிருந்தது. வீட்டை முன் வாசல் தொடங்கி புறவாசல்வரை நீர்விட்டு கழுவி இருந்தனர். இல்லம் முழுதும் அரிசிமாக்கோலம் போட்டு முடிக்க அடிமைப்பெண்களுக்கு ஒரு நாள் தேவைப்பட்டிருந்தது. வாசற் பந்தலில் வேப்பிலை கொத்தும் மாவிலையும் செருகினார் கள். உள்ளே வாசலை அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். அங்கே நான்கு பக்கங்களிலும் கட்டியதுபோக கூடம் தாழ்வாரங்களையும் மாவிலை தோரணத்தால் அலங்கரித்திருந்தார்கள். அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை பிள்ளை அறியாதவரல்ல. இரண்டு வருடத்திற்குப் பிறகு மகளும் மருமகனும் வருகிறார்களென்றால் மற்றதை நினைக்க நேரமேது? நாயக்கரிடம் சமாதானம் சொல்ல காரணங்களா இல்லை.

வெளியில் வந்த பிள்ளை அங்கிருந்த சேவகனிடம்:

– பல்லக்குக் காவுவோரை தயாராக இருக்கச்சொல். மகள் வந்ததும் அரண்மனைக்கு புறப்படுவிடுவேன். பனந்தோப்பிற்கு யார் போயிருக்கிறார்கள்.

– நம் சின்னான் சாமி

– நீ என்ன செய்துகொண்டிருக்காய், தேன் வேண்டுமென்று சொல்லியிருந்தேனே.

– இதோ புறப்படுகிறேன் சாமி

அவன் புறப்படவும், வண்டி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தலையைத் திருப்பி குரல்கொடுத்தார்.

– கோவிந்தம்மா… வந்துவிட்டார்கள் பார். ஆரத்தி எடுக்கவேண்டியவர்களை அனுப்பு. பிள்ளை

மனைவி கோவிந்தம்மா என்கிற கோவிந்த அம்மாள் ஆரத்தி எடுக்கும் பெண்கள் சகிதம் வந்தாள். ஆரத்திதட்டில் கற்பூரம் ஏற்றினார்கள். ஆரத்தி எடுத்து முடிந்த நீரைக் வீதியில் ஊற்றினார்கள். குழந்தையை, பாட்டி கைகளில் வாங்கி தோளிற்போட்டுகொண்டாள். தரையில் விரித்திருந்த பாயில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். நலன் விசாரிப்புகள் முடிந்ததும் மனைவிடமிருந்து பேர்த்தியை பிள்ளை வாங்கி ஓரிரு நொடிகள் கொஞ்சியபிறகு மகளையும் மருமகனையும் பொதுவில் வைத்து பேசினார்;

கடந்த இரண்டு நாழிகைகளாக உங்கள் பேர்த்தியின் உடலில் வெப்பம் தெரிகிறது. இப்போது குறைந்திருக்கிறது. சுரமிருக்குமோவென்ற ஐயம். வைத்தியனுக்கு ஆளனுப்பினால் தேவலாம்.- பிள்ளை மகள்.

– பயப்பட வேண்டியதில்லை. பயணம் காரணமாக இருக்கலாம். சின்னான் வந்தவுடன் வைத்தியரை அழைத்துவரச்சொல்லுங்கள். விஜய நகர சாம்ராச்சியம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அநேகமாக கிருஷ்ணபட்டணத்திலும் இது விபரம் பேசியிருப்பார்கள். இராயர் மந்திராலோசனைக்கு முக்கியஸ்தர்களை அழைத்திருக்கிறார். எத்தனை நாழிகை அரண்மனையிலிருக்கவேணுமென தெரியாது. நீங்கள் உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். முடிந்தால் இரவு பேசலாம்- என்றார். குழந்தையை தம் மனைவியிடம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். பிள்ளையைப் பார்த்ததும் பல்லக்குக் காவுவோர் ஓடிவந்தனர். பல்லக்குப் புறப்பட்டது.

(தொடரும்)

Series Navigationராஜமௌலியின் “ நான் ஈ “அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *