நகரமும் நடைபாதையும்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 32 in the series 15 ஜூலை 2012

கு.அழகர்சாமி

ஒரு நகரின் நிலை நன்றா இல்லையா என்பதை எப்படித் தேர்வது? அந்த நகரின் நடை பாதைகள் நிலையைப் பாருங்கள். இப்படி ஒரு கருத்தை சென்னைக்கு வருகை தந்த ஒரு வெளி நாட்டு மேயர் ஒருவர் சொன்னதாய் இந்து நாளிதழில் எப்போதோ படித்த நினைவு. சொன்ன கருத்தில் ஒரு மேலை நாட்டுப் பின்னணியும் கண்ணோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாட்டு நகர் ஜனத் தொகையையும் , நம் நகரங்களின் ஜன நெரிசலையும் ஒப்பிட முடியாது தான். இந்த ஒப்பீட்டைத் தவிர்த்து விட்டால் கூட ஒரு விருப்பு வெறுப்பில்லாத கண்ணோட்டத்தில் சென்னை நகர் நடை பாதைகளின் பொதுவான நிலையென்ன? நடை பாதைகளில் தான் பாட்டுக்கு நடக்க முடிகிறதா? நடைபாதையில் நடப்பவர் ஜென் துறவி போல் நடை நினைப்போடு(mindful walking) நடந்தாலொழிய பத்திரமாய் வீடு போய்ச் சேர முடியாது. தை- நாத்- ஹன் (Thich Nhat Hanh) என்ற வியட்நாமிய ஜென் துறவி ஜென்னின் கவனமாய் வாழும்(mindful living) கலையின் தினசரி நடைமுறைப் பயிற்சிக்கு மாடிப்படிகளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள் என்பார். ஒவ்வொரு படியிலும் காலடி வைக்கும் போதும் நடக்கிற கவனம் சிதறாத நடை செய் என்பார். நடந்தால் நட. கிடந்தால் கிட. அது தான் நடைமுறை ஜென் தியானம். நமது சென்னை நகரின் நடை பாதைகளில் நடக்கும் போது இப்படிப்பட்ட ஜென் தியானம் கைகூடினாலும் ஆச்சரியமில்லை.
ஏராளமான நடைபாதைகள் பராமரிப்பின்றி இருக்கின்றன. பார்த்து நடக்க வேண்டும். பள்ளங்கள் ஒன்றும் தெரியாதது போல் பதுங்கி இருக்கும். கால்களும் கண்களும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். கவனம் தப்பினால் கரணம் தான். ஏற்கனவே நடை பாதைகளில் ஏராளமான கடைகள்- பூக்கடை, ஜூஸ் கடை, செருப்புக் கடை, துணிக்கடை, பிளாஸ்டிக் சாமான்கள் கடை, இட்லி கடை என்று. கிளி ஜோஸ்யம் பார்ப்பவனும் வாடிக்கையாளர் ஒருவருக்காக வதங்கிக் காத்திருப்பான். பலூன் வியாபாரியும் ‘போனி’யாவதற்கு நடைபாதையின் கம்பத்தில் கலர் கலராய்ப் பலூன் பறவைகளைக் கட்டிப் போட்டிருப்பான். குடும்பத்தோடேயே தங்கியிருக்கும் நரிக்குரவர்களும், செருப்புக்களை நாய்க்குட்டிகள் போல் பக்கத்தில் வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் கையேந்தும் பிச்சைக்காரர்களும் நடைபாதைகளில் தான் புகலிடம் கொள்வர். இவர்களெல்லாம் வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நடைபாதைகளில் சந்தை போட்டாலொழிய வாழ முடியாது. எங்கு போவது அவர்கள் குளிர் சாதன ‘மால்’களில் வியாபாரம் செய்ய? ஆனால் என்ன புரியாதது என்பது போல் புரிவதென்றால் நடை பாதைகள் இடத்தைச் சாமர்த்தியமாகச் சிலர் பயன்படுத்துவது.( நாகரிகமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது). நடை பாதைகளில் தான் வாகனங்களை – ஃபைக், ஸ்கூட்டர், கார்- சொந்த இடம் போல் நிறுத்தியிருப்பார்கள். வாகனங்களும் மமதையோடு அவற்றின் பிறப்புரிமை போல் நின்றிருக்கும். நடைபாதையில் நடப்போர் சாலையில் இறங்கிப் போக வேண்டியது தான். சில சமயங்களில் தப்பித் தவறி நல்ல நடை பாதை என்று நடக்கத் துவங்கினால், எங்கிருந்தோ புலிப்பாய்ச்சலில் சிலர் ஃபைக் வாகனங்களை ஓட்டி வருவார்கள் நடைபாதை மேலேயே. நடை பாதையில் நடப்போர் தாம் அந்த வாகனங்களுக்கு வழி விட வேண்டும். நடைபாதைகள் சாலையின் விரிவுகள் தாம் என்று நடை பாதையில் நடப்பவர்க்குத் தெரிவதில்லையோ?. நடை பாதைகள் மேல் ஓட்டி விரைவோருக்கு என்ன அவசரமோ? அப்படியொன்றும் தலை முழுகிப் போகிற காரியம் ஒன்றும் இருக்காது. ஆனாலும் அவசரப்பட்டுப் போன மனங்களுக்கு நெரிசல்களில் நடைபாதைகளில் ஓட்டித் தீரச் செயல் செய்யும் போது நடைபாதைகளில் நடப்போரின் பாதுகாப்பும், அக உணர்வுகளும் அப்படியொன்றும் முக்கியமானதாய்ப் படுவதில்லை.
நடைபாதைகள் சேரும் ஒரு மும்முரமான சாலைச் சந்தியில் அகப்பட்டுக் கொண்டால் நிலைமை எக்கச் சக்கம் தான். நின்று கொண்டே இருக்க வேண்டியது தான். ஒவ்வொரு திசையிலும் இருக்கும் வாகனாதியருக்கு எப்போது சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு எரியும் என்று காத்திருப்பு தான். அதுவும் யுகங்களாய்க் காத்திருப்பது போல் எல்லைக் கோட்டையும் தாண்டி போக்குவரத்து சமிக்ஞைகளில் வழி மேல் விழி வைத்திருப்பர். தீரமான சிலர் முந்திக் கொண்டு பச்சை விளக்கு எரியும் முன்னமேயே பச்சைக் கொடி காட்டி விட்டு பறந்து விடுவார்கள். இந்த இடர்ப்பாடுகளையெல்லாம் பாராது சாலைச் சந்தியைக் கடக்க முனைந்தாலும், சாலையைக் கடப்போர்- அவர்களிலும் முக்கியமாக முதியவர்கள்- வாகனங்களின் இடுக்கு வழிகளில் இப்படியும் அப்படியுமாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டு வர வேண்டும். சில சமயங்களில் வெள்ளையுடை அணிந்த போக்குவரத்துப் போலீசார் கைகளைக் காட்டி திமிறிச் செல்லக் காத்திருக்கும் வாகனாதியரை ஒழுங்கு செய்யும் போது சாலையைக் கடப்போர் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பார்கள். ஒரு கவிதை எழுத முடிந்தால் ஒன்றெழுதி அதை அவர்களுக்குச் சமர்ப்பிப்பார்கள். இப்படி ஒரு கவிதை; வாசித்துப் பாருங்கள்.

எனக்கு நான் மருங்கு

எப்படிச் சாலையைக்
கடப்பது?

வாகனங்கள் மேல்
என் மனிதர்கள்
திசைகளை அச்சுறுத்திக் கொண்டு
ஏன் பறக்கிறார்கள்?

என் கைகள்
இறக்கைகளானாலென்ன?
பறந்து சாலையைக்
கடந்து விடலாம்.

மருண்டு நான்
நின்று கொண்டேயிருப்பது
மனத்தில் நெருடவில்லையா
என் சக மனிதர் ஒருவருக்கும்?

எப்போது அவசரம்
கருணையில்லாமல் போனது?

விரையும் பறவைகள்
என்றும்
மரங்களை அச்சுறுத்தியதில்லையே?

என் நிழலின் மேலேறி
நில்லாமல் விரையும்
என் மனிதர்கள் மேல்
தெறிக்கும் என் இரத்தம்.

யாரும் யாரையும்
கண்டு கொள்ளாத அவசரத்தில்
கண்டு கொள்ள
மருங்கு நிற்பேன்
எனக்கு நானே.

Series Navigationசிறிய பொருள் என்றாலும்…கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *