மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3

This entry is part 12 of 32 in the series 15 ஜூலை 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்


(இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -3


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

 

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -3


இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் :  வேனிற் கால இரவு


அரங்க அமைப்பு:  மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள்.  கூட ஃபிராங்க் வருகிறான்.  வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான். அவர்கள் பேசிக் கொண்டுள்ள போது, பாதிரியார், வாலஸ் நுழைகிறார்.  அதன் பின் உலவச் சென்ற விவியனும், வில்லியமும் வருகிறார்.  எல்லோரும் சப்பருக்கு அழைக்கப் படுகிறார்.

மேடம் மோனிகா:  ஜார்ஜ் ! உனக்கு என்ன வந்து விட்டது ? நீ ஏன் தடுக்கிறாய் என் மகள் ஃபிராங்க் இருவரின் திருமணத்தை ?

ஃபிராங்க்:  நானும் இதே வினாவைக் கேட்க நினைத்தேன் என் நளின மொழியில் !

ஜார்ஜ் வாலஸ்:  மோனிகா !  உன் பெண்ணை விட வயது குறைந்த வாலிபனுக்குத் திருமணம் செய்ய நீ ஒப்புக் கொள்வாயா ?   இவனுக்கு வீடில்லை, வேலை யில்லை, மனைவியைக் கட்டிக் காக்க கைவசம் சில்லரைக் காசுகள் கூட இல்லை. சுற்றிக் கொண்டிருக்கும் சோம்பேறிப் பயல் இவன் !  பாதிரியாரே ! உன் மகன் திருமணத்துக்கு எவ்வளவு பணம் கொடுக்க முடியும் ? குடும்பத்தை நடத்த மாதா மாதமும் பணம் தருவாயா ?

 

பாதிரியார்:  (கோபமாக) நான் இனிப் பணம் தரப் போவதில்லை என் மகனுக்கு. பரம்பரைச் சொத்தை எல்லாம் விற்றுக் கடைசி நாணயத்தையும் காலி செய்து விட்டான். என்னிடம் பணம் கேட்டு வராதே என்று வீட்டுக் கதவை மூடி விட்டேன்.  உழைத்துச் சம்பாதித்துப் பிழைத்துக் கொள் என்று அவனிடம் உறுதியாய்ச் சொல்லி விட்டேன்.

(மேடம் மோனிகாவின் முகம் சோகத்தில் தாழ்ந்து போகிறது).

ஜார்ஜ் வாலஸ்:  மோனிகா ! நான் தடுத்ததும் அதனால்தான் ! திருமணத் தம்பதிகளுக்கு நீ உண்ண உணவு, உடுக்க உடை, தங்க வீடெல்லாம் சீதனமாய்த் தரப் போகிறாயா ?

ஃபிராங்க்:  மேடம் மோனிகா ஒரு செல்வந்த மாது !  அவள் பரிவு மனம் பெரிது.  அவளது சொத்தெல்லாம் விவியனுக்குத்தான் வரப் போகுது. ஆனாலும் நான் பணத்துக்காக விவியனை மணக்க வில்லை !  அவள் என்னைத்தான் நேசிக்கிறாள்.  காதல் உள்ள போது எனக்குக் காசு பணம் இல்லை என்பது விவியனைத் தடுக்காது.

மேடம் மோனிகா:  கையில் காசில்லாதவன், பிழைக்க வழியில்லாதவன் விவியனை மணக்க முடியாது, நான் அதை அனுமதிக்கப் போவதில்லை. ஃபிராங்க் ! நீ விவியன் பக்கத்தில் வராதே !  உன் காதல் மலிவான காரணம். உண்ண பிரெட் தராது.

ஃபிராங்க்:  (பாதிரியாரைப் பார்த்து)  இதற்கு என்ன சொல்கிறீர் அப்பா ? விவியன் என்னை மிகவும் நேசிக்கிறாள்.  இந்தத் திருமணம் தடைப் படக் கூடாது.

பாதிரியார்:  மேடம் மோனிகா சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்.  பண மில்லாத உனக்கு மணம் எதற்கு ? வேலை இல்லாத உனக்கு மனைவி எதற்கு ?

ஃபிராங்க்:  பணம் உதவ மறுக்கும் பாதிரியாருக்கு மகன் எதற்கு ? நீங்கள் என் தந்தை இல்லை என்று சொல்லி விடுகிறேன்.  மிஸ்டர் வாலஸ் ! சிறிது நேரத்துக்கு முன்பு என் தந்தை போல் பேசினீர்.  எனக்கு ஒரு தந்தை போதும் உமது ஆலோசனை வேண்டாம்.

ஜார்ஜ் வாலஸ்:  உன்னருமைத் தந்தையே உன்னை ஒதுக்கி விட்டார் !  உனக்கொரு தந்தையும் தேவை யில்லை.  விவியனை மறந்து விடு.

மேடம் மோனிகா:  ஆமாம் இந்த திருமணம் நடக்காது.  நீ இனி இந்த வீட்டுக்குள் நுழையாதே !  என் மகள் விவியன் பின்னால் சுற்றாதே.

ஃபிராங்க்:  (எழுந்து கொண்டு) மேடம் மோனிகா !  உமக்காக நான் விவியனை இழக்கப் போவதில்லை. அவள் என்னை மனப் பூர்வமாய் நேசிக்கிறாள்.

மேடம் மோனிகா:  நீ ஓர் அயோக்கியப் பயல் ! அவளைக் கவர்ச்சி மொழியால் ஏமாற்றி இருக்கிறாய்.

ஃபிராங்க்:  உன் தடைகளை மீறி நான் அடையப் போவது விவியனை ! யார் வெல்லுகிறார் என்று பார் ?  நீயா ? அல்லது நானா ?  விதியை வெல்பவன் நான் !  விவியன் என்னவள், எனக்குரியவள்.

(அப்போது கதவைத் திறந்து கொண்டு விவியனும், வில்லியமும் நுழைகிறார்.  மேடம் மோனிகாவுக்கு விவியனைப் பார்த்துக் கோபம் வருகிறது)

மேடம் மோனிகா:  மாலையில் எங்கே சுற்றிக் கொண்டு இருந்தீர் இருவரும் ?

விவியன்:  (தலைத் தொப்பியை எடுத்து தொங்கவிட்டு)  குன்றின் மேல் ஏறினோம்.

 

 

மேடம் மோனிகா:  இந்த நேரத்தில் என்னிடம் அனுமதி பெறாமல் இப்படி நீ சுற்றக் கூடாது.  உனக்கு எதுவும் ஏற்பட்டால் எப்படி உதவிக்கு வருவது, இருக்கும் இடம் தெரியாமல் ?  இருட்டிக் கொண்டு வருவது கூட உங்களுக்குத் தெரிய வில்லையா ?

விவியன்:  இப்போது சப்பரைப் பற்றிப் பேசுவோம்.  இருப்பவர் எண்ணிக்கை அதிகம்.  டைனிங் மேஜையில் ஆறு பேருக்கு மேல் இடமில்லை.  நாலு பேர்தான் உட்கார்ந்து உண்ண முடியும்.  இருவர் அடுத்த பந்திக்குக் காத்திருக்க வேண்டும்.

மேடம் மோனிகா:  நான் சொல்லியது உன் காதில் விழுந்ததா விவியன் ?

விவியன்:  தெளிவாய் விழுந்தது அம்மா.

வில்லியம்:  என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.

விவியன்:  நீங்கள் நீண்ட தூரம் குன்றின் மேல் ஏறி, இறங்கி உள்ளீர்.  உடனே உண்ண வேண்டும் நீங்கள்.  நான் பொறுத்திருக்கிறேன்.  ஃபிராங்க் ! உனக்குப் பசிக்குதா ?

ஃபிராங்க்:  எனக்கு வயிற்றுப் பசி இல்லை.  ஆனால் நானும் விவியனும் சேர்ந்து உண்ணும் ஒரு வாய்ப்புக்குக் காத்திருப்பேன். அதைக் கைவிட மாட்டேன்.

விவியன்:  எண்ணிக்கை சரியாய் வந்து விட்டது.  வாலஸ், வில்லியம், ஸாமுவெல் என் தாய் முதல் பந்தியில் அமருங்கள்.  நானும் ஃபிராங்கும் அடுத்த பந்தியில் உண்போம்.

(விவியன் டைனிங் அறைக்குப் போகிறாள்.)

 

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *