சிறுகதை – இராம வயிரவன்
—————————-
‘நண்பா…சாரி டு டிஸ்டப் யு. நாலுநாள் ஹாலிடே வருதுல்ல. ஜென்ட்டிங் போலாமுன்னு கெளம்பியாச்சு. எல்லாம் அந்த லதாவின் ஏற்பாடு. ரெண்டுநாள் அங்கே தங்கப்போறோம். ரூம் எல்லாம் அவளே புக் பண்ணிட்டா..யாராவது என்னை கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க… ரொம்பத்தொந்தரவு பண்ணினாச்செத்துட்டான்னு சொல்லிடுங்க..நண்பா!..வர்ட்டா…? என்ஜாய்னு சொல்லி வாழ்த்தி அனுப்புங்க நண்பா!…’
நவீன் என்னை வாழ்த்தச் சொல்லிக் கேட்டபோது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி. சற்று முன்னர்தான் கடின உழைப்புக்குப் பிறகு கட்டையை நீட்டிக் கண்ணை மூடியிருந்தேன்.
போர்வையை விலக்கி ‘ஏண்டா…நீயோ இன்னும் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன். அவளும் கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு. ரூம் போட்டு அப்பிடி என்னத்தடா யோசிக்கப் போறீங்க?’ என்று கோபமாய்க்கேட்கத்தோன்றியது. தலையை வெளியே நீட்டி முறைத்தேன்.
அவன் லெவி ‘ஜீன்ஸ்’ஸும், அடிதாஸ் ‘ஷூவு’மாக கையில் ‘ஹேண்ட்கேரி’யின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ‘ஹாலிடே மூடி’ல் நின்று கொண்டிருந்தான். ‘பெர்ஃயூம்’ வாடை மூஞ்சியில் அறைந்தது. அவன் பிடித்திருந்த ‘ஹேண்ட்கேரி’ வயிற்றை உப்பிக் கொண்டு இழுத்த இழுப்புக்கு ஓடி வருகிற நாய்க்குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு நின்றுகொண்டிருந்தது. ‘ஹேண்ட்கேரி’ மட்டுமில்லை பெண்களும்தான் அவனிடம் அப்படி ஒட்டிக்கொள்கிறார்கள். இவனுக்கு உடம்பெல்லாம் எண்ணிவிடமுடியாத அளவிற்கு மச்சம் இருக்கவேண்டும்.
என் பொறாமைப் பார்வையை அவன் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நான் ஒன்றும் கேட்காமலேயே அவன் பதில் சொன்னான்.
‘ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு நண்பா. ஸ்ட்ரெஸ்ஸ ரீலீஸ் பண்ணப்போறோம் நண்பா…’ என்றான்.
‘வர வர நீ அடிக்கிற லூட்டிக்கி அளவே இல்லாமப் போச்சு. போ..போ…கற்பு பத்தறம்பா..’ என்று சொல்லிவிட்டுத் தலையணையை கவட்டுக்குள் இழுத்துக் கட்டியணைத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். நவீனின் நினைவுகள் போர்வைக்குள் அத்துமீறி நுழைந்து நினைவில் நிழலாடின.
கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். என் மேலாளர் நவீனைப் ‘புதிதாய்ச் சேர்ந்திருக்கிற அனலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்திப் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுப் போனாள். நல்ல நிறம். நெடு நெடு உயரம். சின்னதாகச் சிரிக்கும் கண்கள். மீசையில்லை. சிரித்தால் கன்னத்தில் 20 சென்ட் அளவுக்குக்குழி விழ இந்திப் பட கதாநாயகனைப் போல இருந்தான்.
என்ன செய்கிறான் என்று பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டே ‘ஃபேஸ் புக் ரெஸ்ட்ரிக்டெட்?’ என்றான். ‘ஆமாம்பா ஆமாம்’ என்று என் அலுப்பைக்கொட்டிவிட்டு வேலையில் மூழ்கினேன்.
‘என்ன நண்பா? ரொம்ப பிசி? ஏன் இப்பிடி சீரியசா வேலை பாக்குறீங்க?’ என்று கரிசனமாய் ஒரு கேள்வியைப் போட்டான்.
‘என்ன செய்ய…இந்த பாழாப் போன ப்ரொகிராம் கம்பைல் ஆக மாட்டேன்குது. நானும் என்னவெல்லாமோ பண்ணிப் பார்த்துவிட்டேன்’ என்றேன்.
‘கொஞ்சம் தள்ளுங்க, நான் பாக்குறேன்’, என்று சொல்லிவிட்டு க்ளிக்கினான். பத்தே நிமிடத்தில் கம்பைல் செய்து விட்டான்.
‘எப்பிடி?’ என்று மகிழ்ச்சியில் துள்ளினேன் நான்.
‘நண்பா…இதுக்கெல்லாம் மண்டையப் போட்டு ஒடைச்சுக்கலாமா? ரொம்ப சிம்பிள்..நம்மளப் போல இன்னும் நூறு பேருக்கு இதே ப்ராப்ளம் வந்திருக்கும். எவனோ ஒரு மாம்ஸ் இதுக்குத் தீர்வு கண்டு பிடிச்சுருப்பான். அதை இணையத்துல தேடிப்பிடிச்சா முடிஞ்சுது நம்ம வேலை’.
‘நானும்தான் தேடிப்பார்த்தேன், ஒன்னும் சரியாகச்சிக்கவில்லை. நன்றி நண்பா!’ என்றேன். அதுதான் நன்றிப்பெருக்கோடு நான் போட்ட முதல் நண்பா. அதன்பிறகு நிறைய நண்பாக்கள். நிறைய நட்பு வளர்த்தான். கூடவே நிறையக் காதல்களும் வளர்த்தான்.
இந்தியாவிலிருந்து வந்து ஒரு வாரம்தான் ஆவதாகவும், செங்காங்கில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகவும் சொன்னான். சிங்கப்பூரில் ஏறிப்போன வீட்டுவாடகையைப் பாதியாய்க்குறைக்க இவனை இணைத்துக் கொள்ளலாமா? என்று மூளை யோசித்தது. ‘நீ வேணுமின்னா என்கூட ரூம்ல வந்து…’ என்று நான் முடிப்பதற்குள், ‘ஒகே நண்பா…இன்று மாலையே பெட்டி படுக்கையோட வந்துவிடுகிறேன்’ என்று வந்து ஒட்டிக் கொண்டான் நவீன்.
நவீனிடம் ஏதோ ஒரு வசீகரம் பொங்கி வழிந்தது. போகிற இடமெல்லாம் பெண்கள் அவனோடு ஒட்டிக்கொண்டார்கள். எல்லாப் பெண்களையுமே உணர்வுபூர்வமாக லவ்வினான். கேட்டால் எல்லாம் சும்மா ஒரு அன்புதான் நண்பா என்பான்.
செங்காங்கில் அவன் தங்கியிருந்தது கூட அவன் விமானத்தில் சந்தித்த ஒருத்தியின் வீட்டில்தான். அவள் பெயர் லதா. ‘எனக்குச் சிங்கப்பூரில் ஒருவரையும் தெரியாது. வேலை ஆர்டரோடு பிளைட்டில் ஏறிவிட்டேன். போய்த்தான் ரூம் தேடவேண்டும்’ என்று அப்பாவித்தனமாகச் சொல்ல அவள் (இவனின் ஏதோ ஒன்றில் மயங்கி!?) ‘என் கசின் என்று ஹவுஸ் ஓனரிடம் சொல்லிக் கொள்கிறேன். ரூம் தேடும் வரை என் வீட்டில் தங்கிக்கொள்’ என்று சொல்லி அழைத்திருக்கிறாள். ‘உங்களுக்கு ஏதும் சிரமம் என்றால் வேண்டாம்…’ என்று ஒப்புக்குச்சொல்லி விட்டு அவளோடு போய் விட்டான்.
லதா இப்போது அவனின் உற்ற தோழி. இப்போது அவளோடு மணிக்கணக்காகக் கதைக்கா விட்டால் இவனுக்குத் தூக்கம் வராது. அதாவது பரவாயில்லை. லதா தங்க இடம்கொடுத்து பின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டாள் என்று சொல்லிவிடலாம். ஆனால் அவளின் தோழிகள் வித்யா, லாவண்யா இருவரோடும் இவன் ஓட்டிக்கொண்டிருப்பதுதான் கொடுமை.
வித்யாவுடன் வாரந்தோறும் புதன்கிழமை யோகாக் கிளாஸ். லாவண்யாவுடன் சனிக்கிழமைகளில் நடனம் கற்றுக்கொள்கிறான். ‘உனக்கே இது நியாயமாடான்னு கேட்டா, ‘வாழ்க்கை ஒரு ஆனந்த நடனம் பாஸ், அதை அனுபவிச்சு ஆடணும் பாஸ்’ என்பான். ‘எப்புடிடா மூனுபேரையும் மேனேஸ் பண்ணுறேன்’னு கேட்டா ‘இதுக்குன்னு மேனேஸ்மெண்ட் கோர்ஸா படிக்க முடியும்..எல்லாம் ஒரு தெறமைதான் மச்சி! ஒருத்தி இமெயிலு, இன்னொருத்தி குறுந்தகவல் குறும்புக்காரி.. மூனாவது…தொல்லைப்பேசி…ஒவ்வொருத்திக்கும் தனிச்சேனல் நண்பா!’ என்பான்.
‘சேனல் கிராஸ் ஆச்சு அம்புட்டதேன்! மாட்னே மவனே நீ செத்தே…’ என்று சொல்வேன். அதற்கெல்லாம் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அன்று இப்படித்தான், வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய எனக்கு அதிர்ச்சி. படியவாரிய தலையோடு ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ‘நண்பா…இவங்கதான் மீனா. நல்ல கவிஞர். கவிச்சோலையில நண்பர் ஆனாங்க. வெண்பா நல்லா எழுதுவாங்க! நானும் கத்துக்கிறேன் நண்பா! நம்ம பிளோக்குலதான் இருக்காங்க.’ என்றான். அதன் பிறகு மீனா ‘வெண்பாவிற்கு ஈற்றடி கொடுப்பதற்காகவும், அசை பிரித்துக் காட்டுவதற்காகவும், இவன் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும்போது இவன் தலையில் தட்டுவற்காகவும் அடிக்கடி அறைக்கதவைத் தட்டினாள். இருவரும் சேர்ந்து தமிழ் என்னும் இன்பத்தேன் பருகுவதாகச் சொல்லுவான். ‘பருகு…பருகு’ என்று கவுண்டமணியாய் மாறிக் கருவினேன் நான்.
நானும் சிங்கப்பூர் வந்து ஐந்து வருடங்களாகிறது. வீடும் அலுவலகமுமாகவே முடிந்து விடுகிறது என் அன்றாடம். இவனுக்கு மட்டும் எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கிறது. எப்படி உன்னால் முடிகிறது என்று கேட்டால் சொல்லுவான் ‘இந்தப் பெண்கள்தான் என்னைச் செலுத்துகிறார்கள். அவர்களால்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்று.
அந்த நினைகளோடு தூங்கிப்போன நான் அடுத்த நாள் விடுமுறையாதலால் மதியம் வரை நன்றாகத் தூங்கி விட்டேன். எழ மனமில்லாமல் படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்த என்னைத் தொலைபேசி அழைத்தது.
போய் எடுத்தேன். பரிச்சயமில்லாத சற்று வயசான பெண்குரல் ‘ஹலோ’ என்றது. ‘சொல்லுங்கம்மா.. ம் சொல்லுங்க..’ என்றேன். நான் நவீனோட அம்மா பேசறேன். தம்பி நீங்க ரவிதானே?’
‘ஆமாம்மா…நவீன் வீட்ல இல்லம்மா’.
‘சரி, நான் ஒங்கிட்டதாப்பா பேசணும். ஒன்னப்பத்தி நவீன் சொல்லியிருக்கான். இப்பதான்ப்பா ஒன்கிட்ட பேசுறேன்…’
‘சரி .. சொல்லுங்கம்மா’.
‘நவீன் அங்க வந்து ஒருவருசம் ஆகப் போகுது. அவனத் திருப்பி ஊருக்கு அனுப்பி வச்சிருப்பா. அடுத்த வாரம் டாக்டர் அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்காரு. அவனுக்குத் தெரியும். வராம இருந்துடுவானோன்னு எனக்குப் பயம். அதனால உனக்கிட்ட சொல்றேன்ப்பா. அவனுக்கு ஒரு ப்ராப்ளம் இருக்குப்பா….ம்…ம்’ மேலும் பேசமுடியாமல் அழ ஆரம்பிச்சுட்டாங்க அவன் அம்மா.
‘அழாதீங்கம்மா… சொல்லுங்க..’
‘அவனுக்கு ஒரு ஆபரேசன் செய்யணும்பா. இதயத்துல ‘ப்ராப்ளம்’ இருக்காம்பா. ஆபரேசன் பண்ணாலும் பொழைக்கிறது ரொம்பக் கஸ்டமுன்னு சொல்றாங்கப்பா..அவன் திரும்பி சிங்கப்பூரு வரமாட்டாம்பா. அதனால அவனோட எல்லாத்தையும் பாத்து அனுப்பி வெச்சுடுப்பா.’
‘என்னம்மா ..சொல்றீங்க?
‘உன்க்கிட்ட நான் சொன்னதாக்காட்டிக்காதப்பா. அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு முன்னாடியே எல்லாம் தெரியும்ப்பா. டாக்டர் ஆபரேசனை ஒருவருடம் பாத்துட்டுப் பண்ணலாம்னு சொல்லிட்டாரு. அவன்தான் ஒருவருடம் சும்மா இருந்தா எனக்கு அந்த நெனப்பு வந்தே நான் செத்துருவேன்மா. அதுனால சிங்கப்பூரு போயி வேலைபாத்துட்டு வர்றேன். நீங்க யாரும் என்னப் பாத்துப் பாத்துக் கவலைப் படுறத என்னால தாங்கிக்க முடியாதும்மா. அதுனால நீங்க யாரும் வரவேண்டாம்னுட்டான். ஒருவருசம் நான் ஜாலியா இருந்துட்டு வர்றனேன்னு கேட்டுக்கிட்டான்’.
‘இல்லம்மா..நவீன் பொழைச்சிருவாம்மா..நீங்க அழாதீங்கம்மா..கண்டிப்பா அவன் பொழைச்சிருவாம்மா..’ என்று சொல்லும்போதே எனக்கு மனம் கனத்தது.
‘சரி வெச்சுடுறேன்ப்பா’ என்று போனை வைத்து விட்டார் நவீனின் அம்மா. எனக்குத்தான் வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது. இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டியேடா பாவி என்று தலையில் அடித்துக் கொண்டேன்.
அவன் ‘டூர்’ முடிந்து வந்து விட்டான். இந்தியா புறப்பட வேண்டுமென்றான். நான் ஒன்றையும் காட்டிக்கொள்ளவில்லை. வேலையிடத்தில் ‘செட்டில்’ செய்யவேண்டிய வேலைகள், பயணஏற்பாடுகளைக் கவனித்தான். இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிடப் போவதாகவும், இனி வரமாட்டேன் என்றும் எல்லோரிடமும் சொன்னான். அந்த ஒருவாரமும் அவன் எப்போதும் போலக் கலகலப்பாகத்தான் இருந்தான். நான்தான் அவனைப் பார்க்கிற போதெல்லாம் முகம் மாறிப்போனேன். அழுது விடுவேனோ என்றுகூடப் பயமாக இருந்தது. ‘என்ன நண்பா, முன்னமாதிரி இல்ல நீங்க..’ என்றான்.
அடுத்த வாரம்.. அவன் புறப்படுகிற நாள் வந்தது. எல்லோரும் விமானநிலையத்திற்கு நவீனை வழியனுப்பச் சென்றிருந்தோம். லதா, லாவண்யா, வித்யா, மீனா என எல்லோரும் வந்திருந்தார்கள். எங்கள் அலுவலக நண்பர்களும் வந்திருந்தார்கள். ‘செக்இன்’ முடிந்ததும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டான். எல்லோருமே ஜாலியாக இருந்தார்கள். அவனைக் கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. நான் மட்டும் அவனைவிட்டுத் தள்ளியே நின்றேன்.
என்னிடம் வந்தான், ‘என்ன நண்பா! ஒருமாதிரி இருக்கீங்க. ஒருவாரமாவே நீங்க சரியில்ல நண்பா! வர்ட்டா? ஜாலியா இருங்க நண்பா!’ என்று தட்டிக்கொடுத்துக் கைகுலுக்கினான்.
அவனுக்காகச் சிரித்து ‘ஹேண்ட்கேரீ எடை பாத்துட்டியா? எல்லாம் சரியா இருக்கா?’ என்று கேட்டு என்னை சகஜமாக்கிக்கொண்டேன்.
அதற்கு அவன் ‘என் நினைவுகளை யாரால் எடைபோட முடியும் நண்பா? ஒரு 100 கிலோ இருக்குமா? அவ்வளவு நினைவுகளைச் சுமந்து செல்கிறேன் நண்பா’ என்றான்.
வித்யாவும், லாவண்யாவும் ‘பை’ சொன்னார்கள். வித்யா யோகாவை விடாமல் செய்யும்படி கேட்டுக்கொண்டாள். லாவண்யா தொடர்ந்து நடனம் கற்றுக்கொள்ளச்சொன்னாள். மீனா அவனுக்காகக் கவிதை எழுதிக்கொண்டு வந்து கொடுத்துக் கைகுலுக்கி ‘பை’ சொன்னாள். லதா அவனை இறுக்கமாய் அணைத்து ‘மறந்துவிடாதே’ என்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
கண்ணாடிச்சுவர்களின் வழியாக நவீனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நவீன் குடிநுழைவுச்சோதனை முடிந்து கையை அசைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். அவன் மறையும் வரை இருந்து விட்டு ‘எம்மார்ட்டி’ எடுத்து வீடு திரும்பினேன். மனம் ‘கடவுளே..அவனைக்காப்பாற்று’ என்று ரகசியமாய் வேண்டிக்கொண்டேயிருந்தது.
—
- மீளாத பிருந்தாவனம்..!
- குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்
- எனக்கு வந்த கடிதம்
- லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)
- காத்திருப்பு
- என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.
- நட்ட ஈடு
- சிறிய பொருள் என்றாலும்…
- நகரமும் நடைபாதையும்
- கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”
- மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21
- முள்வெளி அத்தியாயம் -17
- கல்வியில் அரசியல் -1
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்
- தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?
- அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்
- நினைவுகளின் சுவட்டில் (93)
- பொன்னாத்தா அம்படவேயில்ல…
- பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
- 100 கிலோ நினைவுகள்
- 2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34
- வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு
- பில்லா -2 இருத்தலியல்
- உய்குர் இனக்கதைகள் (2)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)
- பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்
- இழப்பு
- மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்