சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்

This entry is part 27 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

சுஜாதாவின் மத்யமர் – எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர்.

முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்:

” இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் ” என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளது. சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம்

தர்ட்டி பை பார்ட்டி

பெங்களூரில் இருக்கும் நஞ்சுண்ட ராவ் ஒரு காலி நிலம் வாங்க அல்லாடுகிறார். ஒரு வழியாய் அவருக்கு ஒரு நிலம் கிடைக்கிறது. வக்கீலிடம் எல்லாம் கேட்டு விட்டு பணம் தந்து நிலத்தை பதிவு செய்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அவருக்கு காட்டிய நிலம் வேறு. பதிவு செய்து தந்த நிலம் வேறு என்று. அவருக்கு கிடைத்த நிலம் சரியான பாறை உள்ள இடம் அங்கு வீடு கட்ட, நிலம் வாங்கிய அளவுக்கு மேல் செலவு செய்தால் தான் தரை மட்டமாக்க முடியும். ஏமாந்து போன நஞ்சுண்ட ராவ் தனக்கு நிலம் விற்றவனை தேடி போக, அவர் ஊருக்கு போனதாக தகவல் கிடைக்கிறது. சில நாட்கள் பித்து பிடித்த மாதிரி அலைகிறார். தனக்கு நிலம் விற்றவனை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லியபடி இருக்கிறார். ஒரு நாள் கடப்பாரை எடுத்து கொண்டு காணாமல் போக, மனைவி அவர் நிலம் விற்றவனை கொல்ல சென்று விட்டார் என அழுது புலம்புகிறாள்.

ஆனால் கடைசி பாராவில் திரும்பும் நஞ்சுண்ட ராவ் ” நம்ம நிலத்துக்கு தான் போனேன். உடைச்சு பார்த்தேன். பாறை பேர்ந்து வருது. நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்து பாறை முழுக்க உடைசிடலாம்” என்கிறார் !

மிடில் கிளாஸ் மக்கள் என்பவர்களின் பல வித வலியை இந்த சின்ன கதையில் சொல்லி போகிறார் சுஜாதா ! இக்கதையின் பின்னால் உள்ள விமர்சன கடிதங்கள் இன்னும் பல பரிணாமத்தை காட்டுகிறது.

ஒருவர் “நிலம் வாங்கும் போதே மனைவி தடுத்தார் பாருங்க பெண்கள் எப்பவும் புத்தி சாலி தான் ” என்கிறார். இன்னொருவர் “அவரை ஏமாற்றுபவனும் மத்யமனே; ஆக வில்லனும் மத்யமர் தான் ” என்கிறார்.

அறிவுரை

லஞ்சம் வாங்காத ராமலிங்கம் என்கிற அரசு ஊழியர் பற்றி பேசுகிறது. அவர் மனைவியோ கூட வேலை செய்யும் நபரை காட்டி ” அவர் உங்களுக்கு சமான பதவி தான். ஆனால் கார் வைத்துள்ளார்; எப்படி?” என கேட்கிறார் ” அவன் லஞ்சம் வாங்குறான்மா” என்கிறார் கணவர். ” நீங்களும் வாங்குங்க; ஊரே வாங்குது ” என்கிறார் மனைவி.

ராமலிங்கத்தின் தந்தையும் ஒரு அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத அவர், மகனையும் அப்படியே வளர்த்துள்ளார். இம்முறை ராமலிங்கத்துக்கு ஒரு நல்ல பணம் கிடைக்க வாய்ப்பு. அவருக்கும் பணத்தேவை உள்ளது. சரி சேலத்தில் இருக்கும் அப்பாவை சந்தித்து பேசுவோம் என்று செல்கிறார். அவரிடம் இது பற்றி பேச, அப்பா சொல்லும் அறிவுரை அவரை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.

இந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் !

சாட்சி

சரளா என்ற பெண் தெருவில் நடக்கும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார். போலிஸ் வந்து இவரை விசாரிக்கும் என அவள் மாமனார், மாமியார் அனைவரும் கொலையை பார்த்ததை சொல்லி விடாதே; கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் என அலையணும் என்று சொல்ல, இறுதியில் அவள் சொன்னாளா என்பதை சுஜாதா ஸ்டைலில் சொல்கிறார்

நீலப்புடவை ரோஜாப்பூ

இந்த தொகுப்பில் மிக வித்யாசமான கதை. கணவன்- மனைவிக்கு இடையே சரியான உறவில்லை. இதனால் கணவன் வெளியே ஒரு பெண்ணை நாடுகிறான். பேனா நட்பில் ஒரு பெண் தெரிய வருகிறாள். இருவரும் கடிதத்தில் நிறைய பேசுகிறார்கள். இறுதியில்.. இறுதியில்… ஆம் நீங்கள் ஊகித்தது சரி தான்.. அது அவன் மனைவி தான் !

மகளின் சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் ஒரு அம்மா – திருமணம் ஆகாமல் கர்பமாகும் மகளை பிரசவம் முடியும் வரை எங்கோ கொண்டு சென்று டெலிவரி பார்க்கும் இன்னொரு தாய் இப்படி சர்ச்சையை கிளப்பிய கதைகளும் உண்டு. இதை விட அதிக சர்ச்சை கிளப்பிய கதை இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்பட்ட கதை. உயர் சமூகத்தை சார்ந்த, புத்தி சாலி ஏழைக்கு வேலை கிடைக்காமல், அதே வேலை இட ஒதுக்கீட்டால் சராசரி அறிவுள்ள வசதியான ஒரு பெண்ணுக்கு கிடைப்பதாக ஒரு கதை. இதன் விமர்சனத்தில் பாராட்டை விட கண்டன கணைகள் அதிகம் காண முடிகிறது.

முடிவுரையில் சுஜாதா விமர்சன கடிதங்கள் பற்றி குறிப்பிட்டு மிக நிறைய அவற்றை பாராட்டி ” விமர்சனம் எழுதியவர்கள் நிறைய யோசிக்கிறார்கள். இவ்வளவு சாத்தியக்கூறு எழுதும் போது நான் யோசிப்பதில்லை” என்கிறார். கதைகளில் பலரும் பிராமணர்களாக இருப்பது ஏன் என பலரும் கேட்டதாகவும், தனக்கு பரிச்சயமுள்ள மொழி என்பதால் அதை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் இதே பிரச்சனைகள் எந்த சமூகத்துக்கும் வரலாம் என்கிறார்

மொத்தத்தில் :

சிறுகதைகள்: சுஜாதாவுக்கு மிக பிடித்த கிரவுண்ட்- பிச்சு உதறி இருக்கார். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

நூல் பெயர்: மத்யமர்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 164
விலை : Rs. 65

Series Navigationமலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறைவானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
author

மோகன் குமார்

Similar Posts

2 Comments

  1. Avatar
    punai peyaril says:

    வாய்ப்பு ஏற்படுத்தி படிக்க வேண்டிய தொகுப்பு… தோகை விரித்தாடிய மயில் சுஜாதா…

  2. Avatar
    இளங்கோ says:

    இந்தக் கதைத் தொடர் கல்கியில் வந்தபோது( 1990?) அவற்றைத் தொடர்ந்து வாசித்தவன். இதில் வரும் “பரிசு” என்ற சிறுகதையை நான் பாராட்டி எழுதிய கடிதம் அப்போது கல்கியில் வெளியானது. இந்தக் கதைகள் புத்தகமாக வெளி வந்த போது, எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கப்ப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *