அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்

author
1
0 minutes, 5 seconds Read
This entry is part 33 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012
டெக்ஸன்
 ரோனால்ட் ரீகன் காலத்திலிருந்து பார்த்து வரும் விளையாட்டு  இது. அமெரிக்கா வந்த புதிதில், தேர்தல் பிரச்சாரங்களும், போட்டியிடுபவர்களிடையே நடைபெறும் வாக்குவாதங்களும், வார்த்தைப் போர்களும், தொலைக்காட்சியில் நிருபர்களின் புத்திசாலித்தனமான நேர்காணல்களும் பிரமிப்பை ஏற்படுத்தும். இன்று இவை எப்போது முடியுமென்று எதிர்பார்க்க வைக்கும் சடங்குகளாகி விட்டன. ரீகனுக்குப் பிறகு அப்பா புஷ், க்ளிண்டன், மகன் புஷ், ஒபாமா என்று பல தலைவர்களைப் பார்த்தாகி விட்டது. நான்கு வருடம் முன்பாவது சற்று உற்சாகம் இருந்தது. இனி எந்த புஷ்ஷையும் பார்க்க வேண்டாமேயென்கிற நிம்மதியும் முதல் கறுப்பு ஜனாதிபதியின் வரவும் எல்லோருக்கும் உற்சாகத்தையும் அரசியலில் மாற்றங்கள் வரலாமோ என்ற நம்பிக்கையையும் அளித்திருந்தன.

 

இந்த நாலு வருடங்களில் மாற்றங்களெல்லாம் வெறும் மாயையாகி விட, ஒபாமாவும் ஒரு அரசியல்வாதியாகிவிட்டார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் குமுதத்தில் அந்தக் காலத்தில் வந்த ‘ஆறு வித்தியாசங்களை’ப் போலத்தான். கண்டுபிடிப்பது கஷ்டம். எல்லோரும் ஒரே குட்டையின் மட்டைகள்தாம்.

 

நாடு குட்டிச்சுவரானாலும் பரவாயில்லை, நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற பிடிவாதம். உனக்கு இரண்டு கண்கள் போகுமென்றால் எனக்கு ஒன்று போனாலும் பரவாயில்லை, சமரசம் என்பது கெட்ட வார்த்தை என்ற ரீதியில் சிந்தனை. ஒரு தேர்தலில் ஜெயித்தவுடனேயே, அடுத்த தேர்தலுக்கு நிதி திரட்டல் ஆரம்பம். இதுபோல் இன்னும் நிறையச் சொல்லலாம்.

 

நிதி திரட்டல் என்பது ஒரு அரிய கலையாகி விட்டது. கோடீசுவரர்களை அழைத்து விருந்து படைத்துத் தேர்தலுக்குப் பணம் திரட்டுவது இன்னும் நடைபெற்று வருகிறதென்றாலும், சில புதிய உக்திகளும் கையாளப்பட்டு வருகின்றன. உதாரணம்: சில டாலர்கள் நன்கொடை கொடுத்தால் போதும், உங்கள் பெயர் லாட்டரிப் பட்டியலில் சேர்க்கப்படும். பிறகு, நடத்தப்படும் குலுக்கலில் இந்தப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒபாமாவையோ ராம்னியையோ நேரில் சந்திக்கும் மகத்தான வாய்ப்பு கிடைக்கும். (எனவே, ஜென்ம சாபல்யமும்)

 

போன முறை ஒபாமா வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கியக் காரணம், இணையத்தின் மூலம் அவரால் பல கோடி இளைஞர்களிடமிருந்து சிறு தொகை வசூலிக்க முடிந்ததாகும். (ஒருமிக்க நூறை விட, ஒன்றொன்றாய் நூறு எளிதென்று உணர்ந்ததன் பலன்) இந்த முறை, பொருளாதார நிலை மந்தமாயிருப்பதால், பெரும்பாலான இந்த இளைஞர்கள், வேலையில்லாத சோகத்தில் ஓட்டுப் போட வருவார்களாவென்பதே சந்தேகம் என்று சொல்கிறார்கள்.

 

பெரும் நிறுவனங்கள் அரசியலுக்காகச் செலவு செய்வதை அரசாங்கம் தடுக்கமுடியாதென்று, 2010’ல் உச்ச நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்தது. அதாவது நிறுவனங்களும் குடிமக்களைப் போலத்தான் என்றும், எனவே, அடிப்படை உரிமைகளின் முதல் திருத்தத்தின் படி, குடிமக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் அரசாங்கத்தை விண்ணப்பிகும் உரிமைகள், எல்லா நிறுவனங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பதும் இதன் கோட்பாடு. இந்தத் தீர்ப்பின் விளைவாக, பலப்பல பிரம்மாண்டமான நிறுவனங்கள் தேர்தல் களத்தில் இறங்கி விட்டதால், இந்தத் தேர்தலில் பணப்புழக்கம் முன்பை விடப் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. 2008 தேர்தலிலேயே, சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் (பத்தாயிரம் கோடி ரூபாய்?) செலவழித்துத்தான் ஒபாமா வெற்றி பெற்றார். இந்த முறை – கோடியே கோடிக்கு மேல் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

ஆனால், தேர்தலில் ஜெயிக்கப் பணபலம் ஒன்று மட்டும் போதுமா? ஆமாமென்றால், இந்த முறை, ஒபாமா ஜெயிப்பது கஷ்டம். பெரும்பாலான பணக்காரர்களால் விரும்பப்படும் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் ராம்னி, ஒபாமாவைவிடப் பலமடங்கு அதிகப் பணம் திரட்டி வருகிறார். இந்தக் கேள்விக்கு விடை நவம்பரில் கிடைக்கும்.

 

 

மீண்டும் ஒரு (நிஜமான, தனுஷ் இல்லாத) கொலை வெறி

திரும்பத் திரும்ப வந்து பயமுறுத்தும் கெட்ட கனவைப் போல், அவ்வப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டினால் அப்பாவி மக்கள் இறப்பது வழக்கமாகி வருகிறது. கொலராடோவில், ‘வவ்வால்மனிதன்’ படத்தை நடு இரவில் பார்க்கச்சென்று உயிரிழந்த பல இளைஞர்களின் பிரேதங்கள் கூட புதைக்கப்படுவதற்குமுன், மில்வாக்கியில் சீக்கியர்களின் குருத்வாராவில் இன்னொரு பெருங்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

 

சினிமாத்தியேட்டரில் சுட்டவன் புத்தி பேதலித்த ஆசாமியென்றால், சீக்கியர்களைச் சுட்டவன் இனவெறியாளன். தாடிகளெல்லாம் தாகூர் அல்லவென்று நமக்குத் தெரிகிறது. ஆனால், தலைப்பாகையணிந்தவனெல்லாம் ஒஸாமா பின் லாடனின் வாரிசென்று நினக்கும் மூடனின் கையில் துப்பாக்கி கிடைத்தால் என்ன செய்வது? இதுபோல் துரதிருஷ்டம்தான். சீக்கியர்களுக்கெதிராக 2001இலிருந்தே பல அராஜகங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இந்தத் துக்கமான சம்பவம்.

அமெரிக்காவில் துப்பாக்கியின் கதையை அறிய வேண்டுமானால் 200 வருடங்கள் பின்னே செல்ல வேண்டும். அமெரிக்க அரசியலமைப்பின் விதிகளை வகுத்த புண்ணியவான்கள், அடிப்படை உரிமைகளின் இரண்டாவது திருத்தமாக, குடிமக்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் துப்பாக்கியை வைத்துக்கொள்ளும் உரிமையை அளித்துவிட்டுச் சென்றுவிட்டனர். அது எழுதிய காலம், அமெரிக்கா, ‘wild west’ என்று அறியப்படும், பெரும்பாலும் சட்டஒழுங்கற்ற காடாயிருந்த காலமென்றாலும், இன்றும் இந்த உரிமையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இதில் முக்கியமாய்க்குறிப்பிடவேண்டியது NRA (National Rifle Association). தேசிய துப்பாக்கிச் சங்கம்?

 

நூறு வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் சக்தி வாய்ந்த இந்த NRA யின் தயவு இல்லாமல் யாரும் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அதனால், இதுபோல் துயரச்சம்பவங்கள் நிகழும் போதெல்லாம், ஒபாமாவிலிருந்து தொடங்கி எல்லாத் தலைவர்களும், முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, இரங்கல்களும் அனுதாபங்களும் தெரிவித்துவிட்டு,  எல்லாவற்றையும் உடனே மறந்து விடுவார்கள்.

பல மாகாணங்களில், பெட்டிக் கடையில் சென்று பீடி வாங்குவதைவிட எளிதாக, துப்பாக்கி வாங்கிவிடமுடியுமென்று சொல்கிறார்கள். இதை மாற்ற எந்த அரசியல்வாதியாவது முயன்றால், அவர் NRA’ யின் கோபத்திற்காளாக நேரிடும். ஒரு தனி மனிதனுக்கு இருபது முப்பது துப்பாக்கிகள் எதற்கென்றோ, நூற்றுக்கணக்கில் தோட்டாக்கள் எதைச் சுடுவதற்கென்றோ யாராலும் கேட்க முடியாது. கேட்டால், அடிப்படை உரிமைகளின் இரண்டாவது திருத்தம்தான் பதிலாக வரும்.

——————————————————————–

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?
author

Similar Posts

Comments

  1. Avatar
    Rama Vairavan says:

    நன்றாய்ச் சொன்னீர்கள்! திருந்த மாட்டார்கள் இவர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *