சித்ரா சிவகுமார்
ஹாங்காங்
அவரது ஆணையை எவரும் எதிர்த்தவர் இல்லை. யாரேனும் ஆணைப்படி நடக்கவில்லையென்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர், குடும்பத்தினர் உட்பட!
அரசர் மியாவிற்கு, அழகான மூன்று மகள்கள் இருந்தனர். மூத்தவள் மியாவ் யின். இரண்டாமவள் மியாவ் யான். இளையவள் மியாவ் ஷான்.
இளையவள் பிறந்த உடன், அவளைக் கண்ட அரசருக்கு, அவளது முகம் பரிசுத்தமாகவும் கருணை மிக்கும் காணப்பட்டதாக எண்ணினார். மிருதுவான மேகங்கள் அவளது உடலை தடவிக் கொண்டார் போல காணப்பட்டாள். இவையெல்லாம் மிகச் சிறந்த நல்ல அருமையான மகள் அவள் என்று அரசருக்குப் பட்டது. அதனால் தன்னுடைய இளைய மகளுக்கு, “அருமையான பண்பு” என்று பொருள் படும்படியாக ‘மியாவ் ஷான்’ என்று பெயரிட்டார்.
பெண்கள் சற்றே வளர்ந்ததும், ஒரு நாள் அரசர், “நம்முடைய இளைய மகள் மற்ற சகோதரிகளைப் போல் எப்போதும் நடந்து கொள்வதில்லை. அவள் மேலும் சற்றே வளர்ந்ததும், நம் குடும்பத்தினரைப் போல நடந்து கொள்வாள், மாறுவாள் என்றே எண்ணுகிறேன்” என்று தன் கருத்தைத் தன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டார்.
அதற்கு அவர் மனைவி, “ஆமாம்.. சற்று விந்தையான குணத்துடன் இருப்பது போல் தான் தெரிகிறது. ஆனாலும் அவள் மிகுந்த கருணையும் பண்பும் கொண்டவளாக இருக்கிறாள்” என்றார் தன் பங்கிற்கு.
“மியாவ் ஷான் நம்மிடம் இருக்கும் நல்ல அழகிய உடைகளை என்றுமே அணிவதில்லை. மிகச் சிறந்த நகைகளையும் அணிந்ததில்லை” என்றாள் அவளது மூத்த சகோதரி மியாவ் யின்.
“தந்தையே.. மியாவ் ஷான்.. எப்போதும் வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு, முக அலங்காரங்களை செய்து கொள்வதுமில்லை. ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே உண்கிறாள். அதுவும் சோறும் காய்கறியும் மட்டுமே” என்றாள் இரண்டாம் சகோதரி மியாவ் யான்.
ஒரு நாள் அரண்மனைச் சமையலறையில், வேலையாட்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது.
“அது எப்படி? நீ காய்கறிகள் தீர்ந்ததை எனக்குச் சொல்ல மறந்தாய்” என்று கேட்டான் ஒரு வேலையாள்.
“மன்னித்து விடுங்கள். நேற்று எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் இப்போதே சந்தைக்குச் சென்று புத்தம் புதிய காய்கறிகளை வாங்கி வருகிறேன்” என்றான் மற்றவன்.
“வேண்டாம்.. இப்போது நேரமில்லை” என்று தடுத்தவன், “அரசருக்கு இந்தக் காய்கறி விவரம் தெரிந்தால், இளவரசிக்கு கொடுக்க உணவில்லை என்று தெரிந்தால், நமக்கு தண்டனை நிச்சயம்” என்றான் பயத்துடன்.
அப்போது, அவர்கள் பேசியபடியே திரும்பிய போது, அவர்களுக்கு நேர் பின்னால், மியாவ் ஷான் நின்றிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
“இந்தச் சின்ன விஷயத்திற்காகப் பெரிதும் வருந்த வேண்டாம். நான் நேற்று மீதமுள்ளதைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அதுவே எனக்குப் போதுமானது” என்றாள் அமைதியாக மியாவ் ஷான்.
அவளது அன்பான நடத்தையை உதாரணமாகக் கொண்டு, மற்ற வேலையாட்களும் அரண்மனை உறுப்பினர்களும், அவளைப் போன்றே கருணையுடன் நடந்து கொள்ள முயன்றனர். நாட்கள் செல்லச் செல்ல பலரும் மாமிச உணவை விட்டு, அலங்காரப் பொருட்களை அணியாமலே இருக்க ஆரம்பித்தனர்.
சில ஆண்டுகள் கழிந்த பின்பு, அரசர் மியாவ்வைப் பார்த்து, அரண்மனை ஆட்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் அவர்கள் மீது அவளின் ஆதிக்கம் அதிகமாவதையும் கண்டு, கோபம் கொண்டார். ஒரு நாள் மனைவியையும் மகளையும் அழைத்தார்.
“மியான் ஷான்.. உன்னுடைய குழந்தைத்தனமான இத்தகைய நடத்தை எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. நீ நம்முடைய பழக்க வழக்கங்களை மதிக்காமல், மக்களை குழப்புவது தவறு. நீ அரசனின் மகள் என்பதையே மறந்துவிட்டாயா?” என்று கேட்டார்.
“மியாவ் ஷான் நீ இப்போது வளர்ந்து விட்டாய். உன்னுடைய தந்தை உனக்கு நல்ல கணவரைத் தேட முடிவு செய்துள்ளார்” என்றாள் மனைவி.
“தந்தையாரே.. தாயாரே.. எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நான் வீட்டை விட்டுச் சென்று கோயிலில் தங்கியிருந்து ஞானம் பெற வழி தேட விரும்புகிறேன். இம்முறையில் தான் நான் நீங்கள் காட்டும் கருணைக்குக் கைமாறு செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்” என்றாள் மியாவ்.
“எனக்கு.. எனக்கு.. எதுவும் விளங்கவில்லை..” என்று தடுமாற்றத்துடனும் கோபத்துடனும் வெடித்தார் அரசர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “நான் உனக்கு எல்லாம் கொடுத்தேன். ஆனால் நீயோ.. அரண்மனையை விட்டுச் செல்ல வேண்டும் என்கிறாயே?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
“மியாவ் ஷான்.. தந்தை சொல்வதைக் கேள்..” என்று தாய் கெஞ்சினாள். “உன்னுடைய மூத்த சகோதரிகளைப் பார்.. அவர்கள் எப்போதும் தந்தைக்குப் பணிந்து நடப்பதைப் பார்..” என்றாள்.
“எனக்கு கணவராக வருபவர், கட்டாயமாக உண்மையில் நடந்தேறும் மூன்று விஷயங்களைத் தடுத்தாரென்றால், நான் தந்தைக்கு நிச்சயம் பணிவேன்..” என்றாள் மிகுந்தப் பணிவுடன்.
“அதென்ன மூன்று கட்டாய விஷயங்கள்?” என்றாள் தாய் குழப்பத்துடன்.
“முதல் உண்மை.. நாம் இளமையாக இருக்கும் போது, நம்முடைய உடல் தோல் மிருதுவாகவும், நிலவின் ஒளியைப் போன்று இருக்கும். ஆனால் வயது ஆக ஆக, நம் முகத்தில் சுருக்கமும் தலை முடி நரைக்கவும் செய்கிறது. அதைத் தடுக்க வேண்டும்..” என்றாள்.
“முடியாத காரியத்தைச் சொல்லி எங்களை முட்டாளாக்குகிறாயா?” என்றார் மேலும் கோபத்துடன் தந்தை.
சற்றும் தயங்காமல், அதேக் குரலில், “இரண்டாவது உண்மை.. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, இறக்கை கட்டியிருப்பது போல், குதிக்கவும், நடக்கவும், ஓடவும் முடியும். ஆனால் உடல் நலக்குறைவு ஏற்படும்போது, நாம் படுத்தப் படுக்கையில் விழுந்து, வாழ்க்கையின் எந்தச் சுகமும் இல்லாமல் ஆகிவிடுகிறோம். மிகவும் சாதாரணச் செயலான நடக்கவும் முடியாமல் தடுமாறுவோம்” என்றாள்.
தாய் மகள் கூறும் விஷயங்களைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
இறுதியாக, மியாவ் ஷான், “கடைசி உண்மை.. நமக்கு எவ்வளவு தான் அன்பான உறவினர்களும் நண்பர்களும் இருந்த போதும், நாம் இறக்கும் போது உறவினர்களோ நண்பர்களோ நம் இடத்தைப் பிடிக்க முடியாது” என்று சற்றே நிறுத்தினாள்.
தாய்க்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
மியாவ் ஷான் தொடர்ந்து தன்னுடைய நம்பிக்கையைச் சொன்னாள். “அதனால் எனக்கு கணவனாக வருபவள், முதுமையால், உடல்நலக் குறைவால், இறப்பால் வரும் அனைத்து வலிகளையும் தடுத்தாரென்றால், அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன். முடியவில்லையென்றால், நான் மணக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். நான் என் வாழ்வில் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதிலும், மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற வழி தேடுவேன்” என்றாள்.
மியாவ் ஷானின் உறுதியைக் கண்டு ஆத்திரம் கொண்ட அரசர் அவளுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி, “இப்போது முதல் நீ அரண்மனையின் பின்னால் உள்ள தோட்டத்தில் வாழ வேண்டும். உதவியில்லாமல் உன் வேலைகளை நீயே செய்து கொள்ள வேண்டும். இந்தப் பைத்தியக்காரத்தனம் எவ்வளவு நாளுக்கு இருக்கும் என்று அப்போது பார்க்கலாம்” என்றார்.
உடன் மியாவ் தோட்டத்தில் கொண்டு விடப்பட்டாள். ஒவ்வொரு நாளும் தன் வேலையைத் தானே செய்து கொண்டாள். எந்தவித எதிர் முறையீடும் இல்லாமல் தன்னுடைய தண்டனையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாள். ஆனால் சில வாரங்களில் தன்னுடைய மகளின் நிலையைக் காணச் சகிக்காதத் தாய், அரசரிடம் சென்று மியாவ் ஷானை மன்னிக்கக் கோரினாள்.
“ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்..” என்று அரசரிடம் கெஞ்சினாள்.
“சரி.. சரி.. நீ போய் அவளிடம் பேசிப் பார்.. “ என்றார் வெறுப்புடன்.
“மியாவ் ஷான்.. உன் தந்தை சொல்படி நடந்து கொண்டால், இந்தத் தண்டனையிலிருந்து விடுபடலாம்..” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். “நீ மிகவும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பதைக் காணச் சகிக்கவில்லை..” என்றாள் மேலும்.
மியாவ் ஷான் உடனே, “அன்பான தாயே.. நான் எல்லோரையும் மகிழ்விக்க விரும்புபவள். நான் இந்த வாழ்க்கையை விட்டுத் தூரமாகக் கண்காணா இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன்..” என்றாள் திடமாக.
மகளின் முடிவைக் கேட்ட அரசருக்கு, என்றுமில்லாத கோபம் வந்தது. வெள்ளைக் குருவி மடாலயத்தில் வாழும் சகோதரி ஹ_ய் சென்னை வரவழைத்தார்.
“என் மகள் அரண்மனையை விட்டுச் செல்ல வேண்டும் என்று துடிக்கிறாள். நான் ஒரு வருடத்திற்கு அவளை உன் மடாலயத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளேன். அவளது இந்த முட்டாள்தனமான செய்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உன்னால் முடிந்தால், அதற்கு பரிசாக உங்கள் மடாலயத்தை புதுப்பிக்க உதவி செய்கிறேன்” என்றார்.
“மதிப்பிற்குரிய அரசரே.. கோயில் வாழ்க்கை சாதாரணமானதல்ல.. மிகவும் சிறந்த மதவாதிக்கும் அங்கு இருப்பது கடினம்..” என்றார் சென் சகோதரி.
ஆனாலும், பல யோசனைகளுககுப் பிறகு, ஹ_ய் சென் சகோதரி, அரசரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டாள். மிகுந்த தயக்கத்துடன் அரசரது ஆணையை ஏற்றார்.
“மிக விரைவிலேயே அவள் உண்மையைப் புரிந்து கொண்டு, இளவரசி அரண்மனையைச் சேர்ந்தவள் என்பதை உணர்வாள்” என்று சொன்ன அரசர், மியாவ்வை அங்கிருந்து அகற்றும்படி வீரர்களைப் பணித்தார்.
இரவு முழுவதும் நீண்ட பயணம் செய்து, மியாவ் ஷானும், ஹ_ய் சென் சகோதரியும், வெள்ளைக் குருவி மடாலயத்திற்கு அதிகாலையில் வந்துச் சேர்ந்தார்கள். அந்தப் பழைய மடாலயம் ஒரு உயர்ந்த குன்றின் மேல் இருந்தது. மிகவும் சிதிலமடைந்து, சீர்கெட்டு இருந்தது.
“மதவாதியாக இருக்க பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்” என்று ஹ_ய் சென் அமைதியாக எடுத்துச் சொன்னார். அமைதியாக எதுவும் பேசாமல் இருக்கும் மியாவ்வைக் கண்டு மேலும், “இங்கு எல்லோரும் எதாவது வேலை செய்தே ஆக வேண்டும். அதனால் இன்று முதல் இங்கு இருக்கும் எல்லோருக்கும் நீதான் தினமும் நேரத்திற்கு உணவைத் தயாரித்துப் பரிமாற வேண்டும்” என்று ஆணை பிறப்பித்தார்.
தினமும் காட்டிலே விறகுகளை வெட்ட வேண்டி இருந்தது. மடாலயத்தில் சமைக்கவும், பாத்திரங்களை குழுவ, உடைகளைத் துவைக்க, பல காத தூரத்திற்குச் சென்று வாளி நிறைய நீர் கொண்டு வர வேண்டி இருந்தது. உண்ண காட்டுக் கிழங்குளை தோண்டி எடுத்து வர வேண்டியிருந்தது.
நாட்களும் வாரங்களும் செல்லச் செல்ல, மியாவ்வின் கடமைகள் மிகவும் கடினமாக இருந்தன. வேறு யாராக இருந்தாலும் தோற்றோடியிருப்பார்கள். ஆனால் மியாவ் ஒரு நாள் கூட, தன் கடமையில் தவறியதேயில்லை. இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும், இருக்கும் குறைந்த உணவை நேரம் தவறாமல் பரிமாறினாள்.
ஆனாலும், சொர்க்கத்தின் அதிபதி, மியாவ் ஷான் அமைதியாக நாளுக்கு நாள் எந்தவித எதிர்ப்பும் இன்றி, எந்தக் குறைகளையும் சொல்லாமல், தன் கடமையைச் சீராகச் செய்வதைக் கண்டார். அதனால் ஒரு நாள் அவளுக்கு உதவி புரிய முடிவு செய்தார்.
அவர் காட்டிலே விறகுகளைக் கொண்டு வர புலியை அனுப்பினார். வேறூன்றிய காட்டுக் கிழங்குகைளத் தோண்டி எடுக்க, காட்டுப் பன்றிகளை அனுப்பினார். உணவுத் தயாரிக்க மிகத் தொலைவிலிருந்து பல வாளி நீர் எடுத்த வர வேண்டியிருந்தது. அதற்கு மலையில் இருந்த டிராகன் ஆவியை அனுப்பி, உணவகத்தின் உள்ளேயே ஒரு கிணறை உருவாக்க உதவினார்.
“தங்களது தெய்வீகத் தலையிடுதலுக்கு, உதவிக்கு மிக்க நன்றி. நான் இந்த வெள்ளை குருவி மடாலயத்தில் வசிக்கும் சகோதரிகளுக்கு சளைக்காமல் நிச்சயம் தொடர்ந்து உதவி செய்வேன்” என்று ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தாள் மியாவ் ஷான்.
பல மாதங்கள் கழித்து, அரசரிடம் சகோதரி ஹ_ய் சென் அறிவித்தார்.
“மதிப்பிற்குரிய அரசரே.. மியாவ் சென் தன்னுடைய சுமையை மந்திர மாயைகளை பயன்படுத்தி, எளிதாக்கிக் கொள்கிறாள். வேறு எந்த விளக்கமும் தர இயலாது. அவள் தொடர்ந்து எங்களுக்கு உணவினைத் தருகிறாள். மிகவும் கடினமான வேலைகளை எந்தவிதச் சலிப்பும் இன்று செய்து விடுகிறாள்”.
“மியாவ் ஷானை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்” என்று கோபத்துடன் ஆணையிட்ட அரசர், “அவளை மக்கள் பொதுவில் வைத்து தலையைத் துண்டிக்கிறேன். யாருமே.. என்னுடைய மகளானாலும் சரி, அரசு ஆணைகளை எதிர்க்கக் கூடாது..” என்றார்.
அதனால் ஆணைப்படி, மன்னருக்கு பணியாத காரணத்தால் தண்டனை கொடுப்பதற்கென்று மியாவ் ஷான் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டாள்.
மியாவ் ஷான் தந்தையின் முன்னால் நிறுத்தப்பட்டாள். ஆனால் அவள் மறுபடியும் தன்னுடைய மத வாழ்க்கையிலிருந்து விலக முடியாது என்று மறுத்தாள். அதனால் அவள் மிகவும் அமைதியாக மக்கள் கூடுமிடத்தில் நின்றாள். கண்களை மூடிக் கொண்டு, அரசர் தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள் என்று சொல்லும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.
அந்தத் தருணத்தில், மேகங்கள் கருத்தன. சூறாவளி வருவது போன்று, மிகப் பயங்கரமான காற்றும், இடியுடன் கூடிய புயல் அந்த இடத்தை ஆட்கொண்டது. பயந்துப் போன மக்களும் வீரர்களும் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கினர்.
அப்போது, வானத்திலிருந்து ஒரு பெரிய புலி கீழிறங்கியது. அவள் புலியைக் கண்டு எந்த விதப் பயமுமின்றி, அதன் அருகே சென்று, அதன் மேல் ஏறிக் கொண்டாள்.
திடீரென்று புயல் நின்றது. மியாவ் ஷானுடன் புலியையும் காண முடியவில்லை. அரசர் உடனே வெறி கொண்டு கத்தினார்.
“வெள்ளைக் குருவி மடாலயத்தை எரித்து நாசமாக்குங்கள். அங்கிருக்கும் துறவிகளை நாடு கடத்துங்கள். அப்போது அவள் எங்கு தப்பிப் போகிறாள் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் ஆணையிட்டார்.
பிறகு வெகு விரைவிலேயே, மகள் பணியாமல் சென்ற வேதனையாலும் ஏமாற்றத்தாலும் அரசர் மியாவ் நோய்வாய்பட்டார். மூன்று வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் வௌ;வேறு வலியால் துன்பப்பட்டார். இறுதியில், மருத்துவர்கள் அனைவரும் அரசர் இன்னும் வெகு நாட்களுக்கு வாழ மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர்.
அப்போது, ஒரு நாள், இறக்கும் தருவாயில் அரசர் இருந்த போது, ஒரு வயதான துறவி அரசரைக் காண வந்தார்.
“அரசரின் நோய்க்கு என்னிடம் மருந்துண்டு” என்று அரண்மனைக் காப்பாளிடனிடம் சொன்னார்.
துறவி மிகவும் கன்னியமானவராகத் தெரியவே, காப்பாளன் அவரை அரசரின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
மிகவும் தொய்ந்துப் போயிருந்த அரசர், எழுந்து அமர்ந்து, “எனக்கு உதவ நீங்கள் என்ன மருந்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“இந்த மருந்தைச் செய்ய, எனக்கு ஒரு தெய்வீக மனமும் அன்பான இதயமும் கொண்ட ஒருவரது கைகளும் கண்களும் தேவைப்படுகிறது” என்று பதிலளித்தார் துறவி.
அரசர் துறவி தன்னை கேலி செய்வதாக எண்ணி, “என்ன முட்டாள்தனம்! நான் ஒருவரது கைகளையும் கண்களையும் எடுத்தால் அவருக்கு கோபம் தானே வரும்? எடுத்தவர்களைப் பழி வாங்கத் தானே துணிவார்கள்?” என்று கேட்டார்.
“ஆனால் மேன்மை தங்கிய அரசரே.. அது போன்ற அன்புள்ளம் கொண்ட மனிதர் உங்கள் ராஜ்யத்தில் இருக்கிறார்..” என்று திடமாகச் சொன்னார்.
அரசருக்கோ ஆச்சரியம்.
“அவர் உங்களுக்காக தன் கைகளையும் கண்களையும் தரத் துணிவார். அவரை நீங்கள் சியாங் ஷான் முகட்டில் காணலாம்” என்றார் அமைதியாக மருந்து கொடுக்க வந்த முதிய துறவி.
உடனே ஒரு தூதுவன் அந்த மலை முகட்டிற்கு அனுப்பப்பட்டான். அவன் குதிரையில் வெறிக் கொண்டு, வேகமாக சவாரி செய்தான். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சியாங் ஷான் மலை முகட்டை வந்தடைந்தான்.
அங்கிருந்த ஒரு பெரிய பழமையான ஆலமரத்தடியில், மொட்டைத் தலையுடன் ஒரு பெண் துறவி யோக நிலையில் இருப்பதைக் கண்டான்.
அவரருகே சென்று பணிந்தான்.
“எங்கள் அரசர் மிகப் பெரிய நோயால் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு வயதான துறவி அதற்கான மருந்தைத் தருவதாகச் சொல்கிறார். அதைக் கோபமற்ற மனம் கொண்ட, வஞ்சம் கொள்ளாத மனிதரின் கைகளையும் கண்களையும் கொண்டு செய்ய வேண்டுமாம். அப்படிப்பட்ட மனிதர் இந்தப் பகுதியில் இருப்பதாக அவரேச் சொன்னார்” என்று தூதுவன் சொல்லிவிட்டு வணங்கி நின்றான்.
“அரசர் என் கொள்கைக்கு விரோதமாகப் பல காரியங்களைச் செய்து இருக்கிறார்” என்று ஆரம்பித்தத் துறவி, “என்னுடைய வெள்ளைக் குருவி சகோதரிகளை நாடு கடத்தினார். மடாலயத்தைக் கொளுத்தி, அவர்களுக்கு வாழ இடமில்லாமல் செய்தார். இவை மிகப் பெரிய குற்றங்கள் என்ற போதும், அவரது கஷ்டத்தை நான் போக்கவே விரும்புகின்றேன்” என்றார் பரிசுத்த மனதுடன்.
பிறகு துறவி அருகே இருந்த தன் குடிசைக்குள் சென்று, மேலும் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, சில நொடிகளில் தூதுவனை வாயிலுக்கு வருமாறு அழைத்தார். வாயிலருகே சென்ற போது, தூதுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துறவியின் கைகள் குடிசைக்கு வெளியே நீட்டப்பட்டிருந்து. அதில் இரண்டு கண்களும் இருந்தன. அதை எடுத்துக் கொள்ளுமாறு துறவி கூறினார். அடுத்து, குடிசைக்கு வெளியே தன் கைகளை நீட்டி, அதை வாளால் வெட்டிச் செல்லும்படிப் பணித்தார்.
பேச்சற்றுப் போன தூதுவன், உடனே தான் ஒரு தலைசிறந்த மனிதர் முன்னால் இருப்பதை உணர்ந்து, நெடுஞ்சான்கிடையாக தரையில் விழுந்து அவரை வணங்கினான்.
“வாழ்த்துக்கள் நல்லவரே..” என்று உறக்கக் கத்தினான்.
மருந்துக்குத் தேவையான பொருட்களுடன் தூதுவன் திரும்பியதும், வயதான துறவி அரசருக்கு உடனே தெய்வீக மருந்தைத் தயாரித்தார்.
பத்து நாட்கள் அம்மருந்தை சிறிதுசிறிதாகக் குடித்தார். ஆச்சரியவசமாக உடல்நிலைத் தேற ஆரம்பித்தது.
அதனால், அரசர் தன் நோயிலிருந்து முழுவதும் மீண்டார். நல்ல உடல் நிலையைத் திரும்பப் பெற்றதும், தான் கொடூரமான அரசனாக இல்லாமல் அன்பான அரசனாக இருப்பது நல்லது என்று உணர்ந்தார். தான் நலமடைய வாய்ப்புக் கிடைத்தது பெரும்பாக்கியம் என்றும் உணர்ந்தார். ஆனால் சுயநலமற்ற அன்பான மனிதர் தன்னுடைய ராஜ்யத்தில் இருந்ததை மட்டும் அவரால் நம்பவே முடியவில்லை.
அரசர் வயதான துறவிக்கு நன்றி கூறி சன்மானம் கொடுக்க எண்ணினார்.
“துறவியே.. உங்கள் ஆசையைக் கூறுங்கள். நிறைவேற்றுகிறேன். உங்களைக் கௌரவிக்கும் வகையில் கோயில் கட்டித் தருகிறேன்..” என்றார்.
“எனக்கெதற்கு நன்றி? நான் ஒன்றுமே செய்யவில்லை. மேன்மை தங்கிய அரசரே.. நீங்கள் சியாங் ஷான் சென்று அந்தத் துறவிக்கு நன்றி செலுத்துங்கள்” என்றார் நிதானமாக.
உடனே அரசரும் அவருடைய மனைவியும் சியாங் ஷானுக்குப் பயணமானார்கள். மாலை நேரத்தில் முகட்டை வந்தடைந்தார்கள். துறவியின் குடிசைக்கருகே சென்றனர். இடம் அமைதியாக மாலை மங்கிய ஒளியில் இருந்தது.
தூரத்திலிருந்தே, அந்தத் துறவி தியானம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அரசரும் அரசியும் குடிசை அருகே நெருங்கிச் சென்றனர்.
துறவிக்குக் பேசினால் கேட்கும் தூரத்திற்கு வந்ததுமே, “நான் நன்றி சொல்ல வந்திருக்கிறேன்” என்றார் அரசர் பணிவுடன். “இப்படிப்பட்ட மனிதர் பூமியில் இருப்பதை இன்று வரையிலும் என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மேலும்.
அந்த மங்கலான நிலவொளியிலும் அரசிக்கு தன் மகளை அடையாளம் தெரிந்தது. அப்போது தான் அரசருக்கு அந்தப் பயங்கர உண்மை புரிய ஆரம்பித்தது.
தன்னுடைய மகளின் தியாகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், அப்படியே நிலத்தில் விழுந்து வெட்கி அழுதார். தாயும் கண்ணீருடன், மகளை ஆரத்தழுவ ஓடினார்.
தாயின் கைகளில் அடைக்கலம் புகுந்த மகள் மியாவ் ஷான், “நான் நன்றாக இருக்கிறேன் அம்மா.. நான் என் தந்தையின் அன்பிற்கு கைமாறாக கண்களையும் கைகளை மட்டுமே கொடுத்தேன்..” என்றார்.
மியாவ்வின் பக்தியைக் கண்டு அதிர்ந்த அரசர், மகள் முன்னிலையில் பணிந்தார்.
“நான் உனக்கு எவ்வளவோ கஷ்டங்கள் தந்திருக்கிறேன். பாவ காரியங்களை செய்து இருக்கிறேன். நான் எல்லாக் கடவுள்களையும் சொர்க்கத்திலுள்ளவர்களையும் வேண்டுகிறேன். என் மகள் கண்களையும் கைகளையும் திருப்பிக் கொடுங்கள்” என்று மன்றாடினார்கள்.
திடீரென்று, மேலே கருமேகங்கள் சூழ, மியாவ் ஷான் மறைந்து போனார். அந்த நொடியிலேயே நிலம் அதிர்ந்தது. வாசம் மிக்க மலர் மேகங்கள் வானம் முழுவதையும் நிறைத்தது.
சில நொடிகளிலேயே, மியாவ் ஷான், மறுபடியும் தோன்றினார். அன்பும் பண்பும் மிக்க பெண் தெய்வமாக, ஆயிரம் கைகளும் ஆயிரம் கண்களும் கொண்ட உருவமாகத் தோன்றினார். குவான் யின் என்று அழைக்கத்தக்கவளாக, அரசருக்கும் அரசிக்கும் முன்னால் தோன்றினாள். அவளைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான தெய்வீக உதவியாளர்கள், அவளது பண்பைப் போன்றி நின்றார்கள். அவர்களது குரல் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் எதிரொலித்தன. குவான் யின் தன் தெய்வீகச் சக்தியைக் கொண்டு மறுபடியும் மறைந்தாள்.
அமைதியான மாலை வெளிச்சம் சியாவ் ஷான் மலையில் திரும்பியதும், மியாவ் ஷான் தன் பெற்றோர் முன் மகளாகத் தோன்றினாள். அந்தச் சிறிய இடைவெளியில் அவளது கண்களும் கைகளும் அரசரின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் தோன்றியிருந்தது.
தன்னுடைய பெற்றோருக்கு விடையளிக்கும் வகையில், மியாவ் ஷான் தன் கைகளை தியான நிலைக்குக் கொண்டு சென்று அமைதியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
அவளது தியாகமும் பண்பும் பல நூற்றாண்டுகளாக அவளை வணங்கும் தெய்வமாக ஆக்கியது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.
தன் மகளின் நினைவாக அவளுக்குக் கோயிலொன்றைக் கட்டியும் வெள்ளைக் குருவி மடாலயத்தை புனர்நிர்மாணம் செய்து கொடுத்தும் அன்பான அரசராக நாட்டை ஆண்டார்.
சீனாவிலும் மற்ற நாடுகளிலும், அன்பும் பண்பும் கொண்ட தெய்வமாக குவான் யின் மதிப்புக் கொடுக்கப்பட்டு, பல வீடுகளில் வணங்கும் மாடத்தில் தெய்வமாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் மியாவ் ஷான்.
குறிப்பு : மகாவ் நகருக்குச் சென்ற போது, கடலுக்கு இருகே மிகப் பெரிய தங்க முலாம் பூசிய சிலை ஒன்றைக் காண நேர்ந்தது. அருகே சென்று பார்த்த போது, அது கருணைக்கடவுள் குவான் யின் சிலை என்று தெரிய வந்தது. அவரைப் பற்றிய செய்திகள் பல, சிலைக்குக் கீழே இருக்கும் அரங்கத்தில் தரப்பட்டு இருந்தது. அப்போது தான் குவான் யின் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அவரைப் பற்றிய புத்தகம் கையில் கிடைத்து, அவரது கதையைப் படித்ததுமே, அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், அந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன்.
இணையத்தில் குவான் யின் சிலைகளும் கோயில்களும் பல சீன நகரங்களிலும், பல நாடுகளிலும் இருப்பதைக் காணலாம்.
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்