வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26

This entry is part 4 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

 

ஒரு பெண்ணின் பயணம்

ஆம் , எனது பயணம்

முதுமையில் கூண்டுப் பறவையாக ஒடுங்கியிருக்கும் பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். எனக்கே வியப்பாக இருக்கின்றது. எனக்குப் பல பெயர்கள் உண்டு. வீட்டிலேயும் நாட்டிலேயும் கூறும் பெயர்கள். அவைகளில் ஒன்று காட்டாறு. அடங்காமல் ஓடும் வெள்ளமும் ஓரிடத்தில் அடங்கித் தேங்கித்தானே ஆக வேண்டும்.

பிறந்தது பட்டணத்தில், வளர்ந்தது பட்டிக்காட்டில்

பயணமோ பல்லாயிரக்கணக்கான இடங்கள்

பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் நினைவுச் சுரங்கத்தில் அப்படியே தங்கியிருக்கின்றன. சோதனை, வேதனை சாதனை எல்லாம் உண்டு.

என் பார்வையை கூர்மையாக்கியவர்கள், தேடலை அர்த்தமுள்ள தாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் முக்கியமான ஒருவரைப்பற்றிக் கூற விரும்புகின்றேன். அவரைப்பற்றியும் கணினியில் வலம்வந்து தெரிந்து கொள்ளலாம். புத்தகங்களும் இருக்கின்றன. எழுத்தில் இல்லாதது நான் எழுத விரும்புகின்றேன். அவருடன் பழகியது, அவரால் நான் கற்றது, கற்றதில் விளைந்தது  – சில எடுத்துக்காட்டுக்கள் பதியப்பட வேண்டும். அவர் பெயர் என்ன ?

திருமதி. மேரி கிளப்வாலா ஜாதவ்

Mary-Klubwala-Jadav
Mary-Klubwala-Jadav

சமுதாயப்பணிகளின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இடத்தில் வாழ்பவர் இவர். அரசியல் பின்புலத்தால் நுழைந்தவர் இல்லை. ஆரம்ப நிலையிலிருந்து உழைத்து, திறன்காட்டி தானாக உயர்ந்தவர். அவருடைய ஏணிப்படிகள் தன்னலமற்ற உழைப்பு மட்டுமல்ல அதில் அவரின் புத்தி கூர்மை, கையாண்டவிதங்கள். 150 நிறுவனங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பினும் அவைகளில் சில நிறுவனங்களில் அதிகமாக இணைத்துக் கொண்டவர்

Guild of service

School of social work

The YWCA

The Indian Redcross

The Bharats Scouts and Guides

The Indian Council for Social Welfare

The Womens Indian Association

The Seva samajam boys and girls homes

The Balavihar

The Juvenile Bereau

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் சென்னையில் இத்தகைய நற்பணிகள் பல பெண்கள் செய்த பொழுது போட்டி, பொறாமை இல்லை. புகழுக்காக செய்யவில்லை. ஒன்றுபட்டு செயதார்கள். நான் நேரில் பார்த்து உணர்ந்தவை.

வீட்டுக்குள் இருந்த பெண்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவர ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஏற்பட்ட அறிமுகங்கள், செய்த சிறு சிறு பணிகள் வரலாற்றில் நல்லதொரு தொடக்கமாயிற்று. போர் காலங்களில் போர் வீர்ர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் செய்த பணிகளிலும் அவர்கள் அனுபவங்களைப் பெற்றனர். பள்ளிக்குச் செல்லும் அத்தனை பேர்களும் மிகச் சிறந்தவர்கள் ஆகிவிடமுடியும் என்று சொல்ல முடியாது. அதே போல் சமுதாயப் பணிகளுக்கு வந்தவர்கள் எல்லோரும் உயரத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்றும் கூறமுடியாது. ஆனால் கிடைத்த எண்ணிக்கை குறைவானதல்ல. இன்றும் அவர்களின் பெயர்கள் பேசப்படுகின்றது. அவர்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

என் வயதும் நூற்றாண்டில் முக்கால் பாகத்திற்கு வந்துவிட்டேன்.. நடந்தவை களுக்குச் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நிறுவனங்கள் மூலம் பணிகளை அறிந்து கொள்ளலாம். அதற்காகப் பாடுபட்டவர்களின் இயல்புகள், உழைப்பின் தன்மை இவைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குரல் இல்லாதவன் பாட முடியாது.

உழைத்தவர்களின் தனிச் சிறப்புகளையும் தெரிந்து கொண்டால் நல்ல படிப்பினை பெறுவோம்.  எனவே நான் பழகி அறிந்து கொண்டவைகளைப் பதிவு செய்கின்றேன்.

மேரி அம்மாவிடம் நான் கற்றது நிறைய.  எனக்கு அவர்கள் முதல் பாடம் ஆரம்பித்தது ஊட்டி மலையுச்சியில் தொட்டபெட்டாவில்தான். முதலில் நிறுவனங்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பின்னர் ஊட்டிக்குப் போகலாம்.

இவர்கள் நடத்திய நிறுவனங்களில் கல்வி நிறுவனமும் ஒன்று. . இவர்களிடம் படித்தவர்கள் என் துறையில் பணி புரிகின்றார்கள். “சமூகப்பணி” பொருளில் ஓர் படிப்பு இருப்பது அப்பொழுது தான் எனக்குத் தெரியும். சென்னைக்கு நான் பயிற்சிக்குச் சென்ற பொழுது இந்த நிறுவனத்திற்கு முதல்முறையாகச் சென்றேன்

GROUP DISCUSSION

இதில்தான் எத்தனை வகைகள்! கலந்துரையாடல் முறையில் தெளிவை ஏற்படுத்துவதிலும் புதிய உத்திகள். சாதாரணமாக ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து பேசிவிட்டுச் சென்றுவிடுவார். புத்தி கூர்மையாக உள்ளவனுக்குப் புரியும். மற்றவர்களுக்கும் கொஞ்சம் முயற்சி செய்தால் புரிய வைக்க முடியும். ஆனால் கல்வி நிறுவனங்களில் ஏனோ ஒரே வழியில் செல்வது வழக்கமாகிவிட்டது. படிப்பில் பின் தங்கியவர்களையும் நினைத்து செய்யப்பட வேண்டிய முயற்சிகள் இல்லை. இவர்கள் கல்விக் கூடத்தில் பல முறைகளில் அணுகுமுறை இருப்பதைக் கண்டு பிரமித்தேன். ஆய்வுசெய்ய ஆர்வம் தானாக வந்துவிடும்.

ஆய்வுகள். சமூகப்பணிக்கு  இன்றியமையாதது

ஒரு பிரச்சனையைச் சரியாக மதிப்பீடு செய்ய ஆய்வுகள் அவசியமாகின்றது. ஆய்வுகளிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டுமல்ல, இடையிலும் சிறிய அளவில் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்வப்பொழுது காணும் குறைகளைக் களைய முடியும்.

உதாரணம் ஒன்று கூறுகின்றேன்

ஒரு கிராமத்தில் அந்த கிராமத்தின் வீடுகள் பார்வையிடப்பட்டு பதிவேட்டில் விபரங்கள் குறிக்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் என்னென்ன விசாரிக்க வேண்டுமென்பதனை விளக்கி அதற்கேற்ப குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.  பிறப்பு இறப்பு மட்டுமல்ல புதியதாக வெளியிருந்து வருகின்றவர்கள் போகின்றவர்களைப் பற்றியும் குறிக்க வேண்டும். மதிப்பீடு செய்ய வருகின்றவர்கள் இக்குறிப்பேட்டை சரிபார்க்க வீடுகளுக்குச் செல்வர். பிறப்பு, இறப்பு சரிவரக் குறிக்காமல் இருக்கலாம். சேதமடைந்த வீட்டிற்கும் கூட கணக்கு எழுதி வைத்திருப்பர். இத்தனை வீடுகள் ஒரு கிராமத்தில் இருக்கிற தென்றால் அந்த ஊரின் ஜனத்தொகையை என்னால் கூறிவிட முடியும். ஐந்து சதவிகிதம் மட்டும் முன் பின் இருக்கலாம். அதிலும் 6 வயதுக்குழந்தைகள் எத்தனை பேர்கள் என்பதையும் பதிவேட்டைப் பார்க்காமல் சொல்லிவிட முடியும்.

இது எப்படி எங்களால் முடிகின்றது? இது போன்ற கல்வி நிறுவனங்களில் வழிவகைகள் சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு திட்டம் செவ்வனே நடைபெற  monitoring and evaluvation மிக மிக முக்கியம். அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஆனல் நடைமுறையில் மேற்பார்வைக்குச் செல்கின்றவர்கள் பதிவேட்டில் தங்கள் வருகைக்குச் சான்றாக கையொப்பம் மட்டும் இட்டுவிட்டு வருவர். மனிதனின் மெத்தனம்.

ஒருமுறை. பிறந்த குழந்தையின் எடை 12 கிலோ என்று பதிவேட்டில் குறிக்கப்பட்டு அதில் பலரும் கையொப்பமும் இட்டிருப்பதைக் கண்டு எனக்குக் கோபம் வந்தது. அதனை ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கூறிய பொழுது தங்கள் தவறுகளுக்காக வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக தவறைக் கண்டுபிடித்த என்னுடன் சண்டையிட்டனர். சிந்தித்துப்பாருங்கள். திட்டங்கள் ஒழுங்காகத் தீட்டப்பட்டாலும்  செயல்படுவதும் ஒழுங்காக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. குறைகள் பேசுகின்றோம். அது எளிது. செயல்படுவது எளிதல்ல.

நிர்வாகம் என்பது எளிதானதல்ல.

பல தொண்டு நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர். பல பதவிகள் வகித்தவர் , பல விருதுகள் பெற்றவர் மேரி கிளப்வாலா ஜாதவ் அவர்கள்.  அவருடைய பணி ஆலமரமாய் வளர்ந்து மற்ற மாநிலங்களிலும் தன் விழுதுகளை ஊன்றி வளர்ந்தது. பன்னாட்டு அமைப்புகளிலும் இவருக்குப் பங்குண்டு.

இவர்களை முதலில் சென்னையில் பார்த்திருந்தாலும் இவர்களுடன் பழகியது ஊட்டியில். இவர்கள் ஊட்டிக்கு வரும் பொழுது சில சமயங்களில் கூப்பிட்டனுப்புவார்கள் நான் செல்வேன். இருவரும் சேர்ந்து வெளியில் செல்வோம்.. இவர்கள் முகம் களையாக இருக்கும். நான் ரசித்த முகம். உடல் பருமன். அப்படியிருந்தும் மலை ஏறுவதிலும் இறங்குவதிலும் சுறுசுறுப்பைக் கண்டேன். அவர்கள், நடை முதல் பார்வை வரை பார்த்து நான் பல கற்றுக் கொண்டேன்.

ஒரு நாள் கேத்திப் பள்ளத்தாக்கு பக்கம் வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். இருவரும் இறங்கினோம். இறங்கிவர்கள் இருவரும் பேசவில்லை. அவரவர் உலகில் சஞ்சரித்தோம். அங்கே நின்று எதிரில் தெரியும் மலைத்தொடரின் முகட்டைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் படுத்திருப்பாள். நீண்ட கூந்தல் விரிந்து கிடக்கும். பரந்த நெற்றி, கூர்மையான நாசி, இதழ்கள், நாடி, பின் கழுத்து பின் நிமிர்ந்த மார்பகங்கள் அதன் பின் ஒன்றும் உருவம் தெரியாது. ஒருத்தி நிமிர்ந்து படுத்திருக்கும் காட்சி. இவளுக்கு நான் வைத்திருந்த பெயர் நீலமலையரசி. அம்மாவிற்கு அதனைக் காட்டிவிட்டு, வைத்த பெயரையும் சொன்னேன். அவர்கள் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கண்டேன்.

அவர்கள் கேத்தி பள்ளத்தாக்கைக் காட்டி ஒன்று சொன்னார்கள்

“சீதா, நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கின்றேன். பார்த்த பள்ளத் தாக்குகளில் இது வெகு அழகாக இருக்கின்றது. நீயும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்விட்ஸர்லாண்ட்டில் உள்ள இடங்களை ஒரு முறையாவது போய்ப்பார். நம் நாடு அழகானது. சிறந்த வரலாற்றைக் கொண்டது. ஆனால் சுற்றுலாத் துறையில் இன்னும் வளர்ச்சி வேண்டும். மேலை நாட்டார் தங்களின் சிறிய பெருமையையும் அரியதாகக் காட்டி பெருமை கொள்வார்கள். அது தற்பெருமையல்ல, தன்னம்பிக்கையை வளர்க்கும்.

இதனைச் சொல்லும் பொழுது அவர்கள் முகத்தில் வாட்டம்.

என்னால் காஷ்மீரத்திற்கே போக முடியாதே எப்படி வெளிநாடுகளில் போய்ப் பார்க்க முடியும் ? மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள் இந்த கிராமத்துப் பெண்.. ஆனால் இறைவன் காஷ்மீர் மட்டுமல்ல பல நாடுகளுக்கு அழைத்துச் சென்று விட்டார். எங்கு சென்றாலும் என் நினைவுடன் வருபவர்களில் மேரி அம்மாவும் ஒருவராவார்.

சுற்றுலாத்துறை இன்னும் வளர வேண்டும். இந்த அம்மாவின் கூற்று மட்டுமல்ல. ஓர் ஆங்கிலேயன் தஞ்சை கோயிலைப் பார்த்துவிட்டுக் கூறியது

கட்டடக்கலையைக் காட்டுகின்றார்கள். அந்தக் கட்டடத்தில் செதுக்கப் பட்டிருக்கும் வார்த்தைகளை, அதன் அர்த்தங்களை வருகின்றவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழனின் நிர்வாகத் திறமையைக் காணலாம். கணக்கைக் கணக்காகச் செதுக்கப்பட்டிருக்கின்றது. கோயில் வழிபாட்டுத்தலமட்டுமல்ல. ஓர் கலை மண்டபம் அத்துடன் அரசு நிர்வாகங்களின் ஆவணங்களின் பெட்டகம்.

உத்தீரமேரூர் கல்வெட்டின் படி தவறு செய்கின்றவன் தேர்தலில் நிற்க முடியாது அச்சட்டம் தொடர்ந்திருந்தால் குற்றவாளிப் பட்டியல்களில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் நிற்க இடம் கிடைக்காது. உலகில் இத்தகைய சட்டங்கள் இல்லாத காலத்தில் தமிழன் வகுத்த சட்டங்கள். காகிதத்தில் இருந்திருந்தால் அழிந்து போயிருக்கும் கல்லிலே பதித்துவிட்ட கெட்டிக்காரத் தனத்தை நாம் பார்வையாளர்களுக்குச் சொல்வதில்லையே. இதைக் கூட வெளிநாட்டான் சொல்லிக் காட்டும் நிலையில் நாம் இருக்கின்றோம்.

இன்னொருமுறை கோத்தகிரிக்கு இருவரும் சென்று கொண்டிருந்தோம். தொட்டபெட்டா பார்த்துவிட்டுச் செல்லலாமே என்றேன். அவர்களும் சரியென்றார்கள். மலையுச்சியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மாவிடம் ஒரு அனுபவம் கூறினேன்.

கிறிஸ்தவக் கல்லூரியில் அங்குள்ள விடுதியில் நான்கு ஆண்டுகள் தங்கிப் படித்தேன். ஓர் பழக்கம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் புத்தாண்டு பிறக்கும் முன்னர் டிசம்பர் 31 இரவு நடந்தவைகளை எண்ணிப் பார்ப்பேன். தவறுகளைக் குறைக்க ஓர் உறுதிமொழி எடுப்பேன். முழுமையாக திருந்தாவிட்டாலும் ஓரளவு இந்தப்பழக்கம் என்னைத் திருத்தியது. டிசம்பர் மாதம் நள்ளிரவு 12 மணியை இப்பொழுதும் முக்கியமாகக் கருதி விழித்திருந்து புத்தாண்டை வரவேற்பேன்.

ஊட்டியில் இருக்கும் பொழுது ஓர் ஆசை வந்துவிட்டது. வருஷம் பிறக்கும் பொழுது தொட்டபெட்டா மலையுச்சியில் நிற்க வேண்டும். விண்ணையும் மண்ணையும் பார்த்து புத்தாண்டு வாழ்த்து கூற வேண்டும். டிசம்பர் மாதம் குளிர் அதிகமாக இருக்கும். பனிமூட்டமும் இருக்கும். என் டிரைவர் துரைராஜிடம் ஆசையைக் கூறவும் அவன் உடன் வந்துவிட்டான். என் மகனாயிற்றே. அன்று மலையுச்சியில் நின்று வாய்விட்டு கத்தி புத்தாண்டை வரவேற்றேன்.

இந்த அனுபவத்தை அம்மாவிடம் கூறவும் மீண்டும் அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மலர்ந்தது.

“சீதா உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

அவர்களுக்கு என்மேல் ஏதோ நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும்.

அவர்களின் உபதேசம் ஆரம்பமானது. ஒன்றா இரண்டா, அன்று முதல் அவர்கள் சந்திப்பின் போதெல்லாம் ஏதாவது புதிய செய்திகள் கூறுவார்கள். ஒருவரின் பார்வை, கவனம், செயல்பாடுகள், சோதனைகளை சமாளிக்கும் திறன், இன்னும் பல கோணங்களில் நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டு மென்பதைக் கூறினர்கள். இயல்பாக எனக்குத் தேடல்குணம் உண்டு. அதனை அர்த்தமுள்ள தாக்கியது மேரியம்மா. சில எடுத்துக்காட்டுகள் கூறும் முன்னர் வாசகர்களுக்கு ஒன்றைக் கூற நினைக்கின்றேன். என் அனுபவங்களைச் சாதனைகளைக் காட்டுவதற்காக விளக்கவில்லை. சோதனை வரும் பொழுது எப்படி அதனைக் கையாளவேண்டும் என்பதற்காகவே விளக்கமாக எழுதுகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் பொழுது வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும். தோல்வி காணும் பொழுது துவண்டுவிடக் கூடாது. வெற்றி தோல்விகளின் காரணங்களயும் உடனுக்குடன் அலசிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறை நம்மைப் பண்படுத்தும்.

மனிதனாகப் பிறந்தவன் தன் வாழ்நாளில் சில நற்பணிகளாவது செய்ய வேண்டும். இளமையில், நடுவயதில் வாழ்க்கை ஓடிவிடும். ஆனால் முதுமையில்தான் இயலாமை வரும். நம்மைச் சுற்றியிருந்தவர்களும் விலகி தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிடுவர். அப்பொழுது ஏற்படும் தனிமை முதுமையில் சுமையாகி விடும். நம்முடன் தங்கப் போவது நம் நினைவுகள் மட்டுமே. நல்லவைகள் செய்திருந்தால் அந்த நினைவுகள் நம்மை அமைதிப் படுத்தும். செத்தபின் சொர்க்கம், நரகம் இருகின்றதோ, இல்லையோ ஆனால் சாகும் முன் முதுமையின் கடைசித் தருணங்களில் துணை நிற்கும் ஊன்று கோல் நாம் செய்யும் நற்பணிகளே. நல்ல சிந்தனையும் ,நற்செயல்களூம் நமக்கு அமைதியைக் கொடுக்கும்.  இங்கே பாவம், புண்ணியம் பேசவில்லை. மன அமைதி வேண்டாமா?

மிகமிக உயர்ந்தது அமைதி.  காசுக்கு வாங்க முடியாதது அமைதி.

இனி மேரி அம்மாவின் அறிவுரைகளும் செயல் வடிவமும் சில பார்க்கலாம்

மனிதனுக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. ஏதோ அசம்பாவிதம் என்று தோன்றினால் ஒதுங்கி செல்லக் கூடாது. என்னவென்று பார்த்து முடிந்தவரை முயற்சி செய்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.

போகும் நடைபாதையில் ஓர் கல் இருந்தால் ஒன்று ஒதுங்கிப் போகின்றோம் அல்லது தாண்டிப் போய்விடுகின்றோம். அதனை ஒதுக்குப் புறமாய்த் தள்ளிவிட்டு போவதில்லை. வருகின்றவர் ஏதோ மன அழுத்தத்தில் கவனிக்காது நடந்து சென்றால் தவறி விழுந்து காயம்பட நேரிடலாம்.

ஒரு சம்பவம் கூறினார்கள். நடைபாதை ஒன்றில் ஓர் குழந்தை கீழே கிடந்து அழுது கொண்டிருந்தது. துண்டுவிரித்து அதன்மேல்தான் படுக்க வைக்கப் பட்டிருந்தது.. கண்களைத் துணியால் கட்டியிருந்தது. அருகில் யாரும் இல்லை.  பாதையில் போனவர்கள் சாதாரணமாகப் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் பலர்.  காசு போட்டுவிட்டு சென்றவர்கள் சிலர். குழந்தையின் கண்கட்டிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்திருக்கின்றது. அப்பொழுதும் பார்வையாளர்களுக்கு அக்கறையில்லை. பயமோ அசட்டையோ அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தனர். ஒருவனுக்கு ஏதோ தோன்றியிருக்கின்றது. அவன் நின்று சுற்றி சுற்றி பார்த்து கத்தியிருக்கின்றான். ஒருவரும் குழந்தையை எடுக்க வில்லை. அவன் கத்தலால் கூட்டம் கூட ஆரம்பித்தது. அவன் துணிச்சலுடன் குழந்தையை எடுத்து கண்கட்டைப் பிரித்துப் பார்த்திருக்கின்றான். கண்ணில் வண்டைவைத்துக் கட்டியிருப்பது தெரிந்தது அதன்பின் பரபரப்பும் நடவடிக்கையும்.தொடர்ந்தன. யார்பெற்ற குழந்தையோ? காசுக்காக ஓர் குழந்தையைச் சித்திரவதைக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

கிண்டியிலிருந்து நந்தனம் போக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். சைதாப்பேட்டையில் பஸ் நிற்கவும் ஓர் பெண்மணி கையில் குழந்தையை வைத்துக் கொண்டு காட்டி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். என் பக்கத்தில் வரும் பொழுது நான் கண்ட காட்சி என்னைப் பதற வைத்தது. குழந்தையின் ஆசனவாயில் ஓர் பெரிய இரத்த கட்டி. வைத்தியத்துக்குப் பணம் கேட்டு பிச்சை. கூட்ட நேரம் உடனே பஸ் புறப்பட்டுவிட்டது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வந்தாலும் கூட்டத்தில் அவளைக் காண முடியாது. மனத்தில் ஓர் உறுத்தல், வேதனை. ஆத்மார்த்தமான வேதனை. என் எண்ணத்தின் வலிவோ என்னமோ அவளை மீண்டும் பார்க்க நேர்ந்தது. கிண்டியிலிருந்து எக்மோர் போக மின்சார ரயில்வண்டியில் சென்று கொண்டிருந்தேன். சைதாப் பேட்டையில் அந்தப் பெண்மணி ரயில் ஏறினாள். இம்முறை அவளைத் தவற விடக் கூடாது. ரயிலில் கூட்டம் அதிகம். அவள் பிச்சை கேட்டுக் கொண்டே வந்தாள். நானும் எழுந்திருந்து ஓரளவு அவளை ஒட்டியே நின்று கொண்டேன். எக்மோர் வரவும் அவள் இறங்கினாள். நானும் இறங்கினேன். அவளை நிறுத்தி காசு கொடுப்பது போல் எனது பையைத்திறந்தேன். அவளும் காசு கிடைக்கும் என்று நின்றாள்.

“எக்மோர் ஆஸ்பத்திரியில் குழந்தையைக் காட்டியிருக்கலாமே” என்று கேட்டேன். அங்கும் காசு கேட்டதாகச் சொன்னாள். திடீரென்று அவளை இறுகப் பற்றினேன். திமிறினாள். வேடிக்கை பார்த்தவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உதவிக்கு அழைத்தேன். ரயில்வே காவல் நிலையத்தில் எங்கள் இருவரையம் கொண்டுவிடச் சொன்னேன். அவர்கள் யாரும் சாட்சிக்கு வர வேண்டியிருக்காது என்றும் சொன்னேன். சிலர் உடனே உதவிக்கு வந்தனர். அவளை இழுத்துக் கொண்டு காவல் நிலையம் போனோம். கத்திக் கொண்டும் திமிறிக் கொண்டும் வந்தாள். காவல் நிலையம் நுழையவும் சோர்ந்து போய்விட்டாள். காவல் நிலையத்திலும் என்னைப் பற்றி கூறிவிட்டு எங்கள் இயக்குனருக்குத் தொலைபெசியில் செய்தி கூற விரும்புவதைச் சொன்னேன்.  எல்லாம் வேகமாக நடந்தது. காவலர்கள் வண்டியில் காவலர்கள் துணை வர குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கு போக விட்டுத்தான் தெரிந்தது. ஏற்கனவே குழந்தையைக் காட்டி யிருக்கின்றாள். அறுவை சிகிச்சை செய்தால் தங்க வேண்டிவரும் என்று தெரியவும் ஓடிவிட்டாள். இப்பொழுது அவள் உண்மையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் கணவன் ஒரு குடிகாரன். இவள் பிச்சை எடுத்து அவனுக்குக் காசு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடி உதை. வேலையும் கிடைக்க வில்லை. குழந்தையை இப்படி காட்டினால் காசு நிறைய கிடைத்ததாம். தாய்ப்பாசம் என்னவாயிற்று? இந்த மூன்று நாட்களாகத்தான் பிச்சை எடுக்க வருகின்றாளாம். அவள் வீட்டு விலாசம் தெரிந்து அவள் கணவனைக் கூட்டிவந்து இயக்குனர் முன் நிறுத்தினேன். எல்லாம் அலுவலக முறைப்படி எழுதப்பட்டு விட்டதால் இனி அவன் மனைவிக்கோ குழந்தைக்கோ பாதிப்புவரின் அவன் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. அவளிடமும் குழந்தையுடன் வந்தால் சேவை இல்லத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினோம். தொடர் கண்கானிப்பும் இருந்தது.

பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த பொழுது என் மகன் கணினி கொடுத்து கற்றுக் கொள்ளச் சொன்னான். நானும் ஏதோ தெரிந்து கொண்டதில் அரட்டை மூலம் பலர் பழக்கமாயினர். அப்பொழுது என்னுடைய நண்பர்களில் ஒருவர் ஓர் எச்சரிக்கைவிடுத்தார். அவர் ஓர் போலீஸ் அதிகாரி. வருகின்றவர்களில் யாராவது ஒருவன் பொருளுக்காக கொலைகூட செய்ய நேரிடலாம் என்றார். வந்தவர்களில் ஒருவன் என்னிடம் கூறிய செய்தி எனக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

ஓர் காதல் ஜோடி. அந்த இளைஞன் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனும் அவன் காதலியும் சுற்றிச் சுற்றி அலைந்தார்கள். அவர்கள் ஆடம்பர உலாவிற்குக் காசு போதவில்லை. காசுக்காக அவர்கள் எடுத்த முடிவுதான் கொடியது. அந்தப்பெண் வாடகைக் காதலியானாள். சினிமாவிற்குத் துணை ஒரு ரேட்,  மாலை நேரம் என்றால் அது வேறு விலை, ஓர் இரவு தங்க என்றால் இனொரு ரேட். காதலனே தன் காதலியை வியாபாரப் பொருளாக்கி விட்டான். இது கதையல்ல நிஜம். 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். என் வீட்டிற்கு வந்தவர்களில் ஒருவனுக்கு அவன் நண்பன். இவன் கண்டித்தும் அவன் திருந்தவில்லை. என்னிடம் கூறி அவனைக் கூப்பிட்டு புத்திமதி கூறி திருத்தச் சொன்னான். ஏனோ இந்தப் பிரச்சனையில் இறங்க தயக்கம் வந்துவிட்டது. போலிசுக்குச் சொல்லி விடுவேனோ என்று நினைத்து விபரங்கள் அவர்கள் கொடுக்கவில்லை. செய்தியறிந்தும் கையாலாகத நிலை. பல நாட்கள் என்னை வேதனைப் படுத்திக் கொண்டிருந்த சம்பவம்.  பணியில் இருந்திருந்தால் துணிவுடன் செயலாற்றியிருப்பேன். முதுமையில் முடங்கிப் போனேன்.

எண்ணங்கள் நல்லதாயினும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்று கூறமுடியாது.. அது தெரிந்தாலும் இயன்றவரை முயற்சிகள் செய்வேன். ஒதுங்கமாட்டேன். இப்பொழுதும் யாராவது பிரச்சனைகள் கூறின் முடிந்த உதவிகளைச் செய்கின்றேன். தமிழகம் வந்தால் எனக்கு ஓய்வு இருக்காது. அதில் ஓர் ஆத்ம திருப்தி.

நம்மிடையே தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் வளர்த்த வைகளே. அவைகளையும் அடுத்துப் பார்ப்போம். நரகக் குழிக்குள் விழும் முன் காப்பாற்ற முடிகின்றதா என்று சிறிய முயற்சி. நம்பிக்கைதானே வாழ்வியலின் அச்சாணி.

எட்டுநெறிகள்

நல் அறிவு ,   நன் நினைவு   நற்பேச்சு,  நற்செயல் ,  நல்வாழ்வு ,  நன் முயற்சி,  நல் விழிப்பு,  நல் ஒருமை

போதனைகள்

கொல்லாதே,  களவு செய்யாதே,  விபச்சாரம் செய்யாதே,  பொய் பேசாதே ,  பழி சொல்லாதே,  கடுமொழி சொல்லாதே,  வம்பு பேசாதே,  பிறர் பொருளை விரும்பாதே, பகைமை கொள்ளாதே,  நேர்மையாக நினை

புண்ணியச்செயல்கள்

தகுந்தவர்களுக்கு தானம் செய்.  ஒழுக்க போதனைகளைப் பின்பற்று

நல் எண்ணங்களை நினை,  பிறருக்குப் பணிசெய், பிறரைக் கவனித்துக்கொள்

பெற்றோரையும் மூத்தோரையும் மதித்து நட; அவர்களுக்கு வேண்டுவன செய்.

உன் புண்ணியங்களில் ஒரு பகுதியைப் பிறருக்குக் கொடு

பிறர் உனக்குக் கொடுக்கும் புண்ணியங்களை ஏற்றுக்கொள்

நல்ல கருத்துக்களைக் கேட்டு உணர்  நல்ல கருத்துக்களைப் பிறருக்குக் கற்றுக் கொடு

உன் குற்றங்களை நீக்கு”

புத்தரின் குரல்

(தொடரும்)

படத்திற்கு நன்றி

Series Navigationஅன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,வீணையடி நான் எனக்கு…!
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

  1. Avatar
    balaiyer says:

    Dear madam,
    Your writings are quite inspiring. In fact these passages should become reference texts for students of psychology and social work. Please, mention the title and publishers of your works. We want to buy and keep them in our library for everybody’s attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *