வீணையடி நான் எனக்கு…!

This entry is part 5 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம் 

மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை வீணை.

அவளின்  வரவிற்காகவே காத்திருந்த ரசிகர்கள் கூட்டம் உற்சாகமாக, இதயக் கதவைத்  திறந்து வைத்தபடி பார்கவியின் வீணை இசையை ரசிக்கத் தயாராக அமர்ந்திருந்தனர்.  முன் வரிசையில் அம்மாவும் அப்பாவும் பெருமிதத்துடன் தலையசைக்க, சந்தோஷ மயக்கத்தில் விநாயகரை வீணைக்குள் இழுத்தாள் பார்கவி.  அரங்கமே அமைதியில் இருக்க ஒவ்வொருவரின் தூங்கும் இதய வீணையை எழுப்பி  ஜதி போட வைத்தது பார்கவியின் சரஸ்வதி வீணை.

மூன்று  மணி நேரம் போனதே தெரியாமல்  அத்தனை இதயங்களும் வீணைக்குள்  ஒளிந்து கொள்ள, இறுதியாக  “தில்லானா” வை மீட்டிவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்…எத்தனை வருடங்கள் இந்த ஒரு நிகழ்வுக்காக பயிற்சி பெற்றுக் கனாக் கண்டிருப்பாள் பார்கவி. தனது கனவு நனவாவதைக் காதைப் பிளக்கும் கைதட்டல் அவளைப் புகழ் மயக்கத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தது. பாராட்டில் இதயம் ஜிவ்வென்று பறந்தது  வானில். அதீதப் பிரகாச விளக்கொளியில் அங்கங்கே  கிளிக் கிளிக் என்று காமெராக்கள், வீடியோக்கள் அவளோடு கூட நகர்ந்து அவளை சிறைப் பிடித்துக் கொண்டு நினைவுச் சுவடுகளில்  சேமித்துக் கொண்டிருந்தது. அந்த நிமிஷத்தில் சந்தோஷ கோபுரத்தின் உச்சியைக் கட்டித் தழுவியது போல் உணர்ந்தாள் பார்கவி. புகழ் இவ்வளவு மயக்கம் தருமா என்ன?  மனசுக்குள் வியந்தவள் தன்னையே லேசாகக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

இந்தப் பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..”வீணை காயத்ரி, வீணை ஜெயந்தி குமரேஷ் மாதிரி பெரிய வீணை வித்வானாக வருவாள் பாரேன்..” என்று கூட்டம் வாழ்த்தும் வாக்கும்  சொல்லிய படியே கலைந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் அம்மாக் கட்டிப் பிடிச்சு ஆரத்தி எடுத்து “ரொம்ப நன்னா வாசிச்சே” ன்னு  உச்சி முகர்ந்து திருஷ்டி சுற்றிப் போட்டு இவள் மனதில் பெரிய கற்பனையை மாளிகை அளவுக்கு கட்ட வைத்து, அந்தப் பிரம்மிப்பில் இருந்து இவளை விலகாமல் பார்த்துக் கொண்டனர்.

கூடவே…தங்களது கடமையாக மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர் பெற்றோர்கள்.

இதெல்லாம் போன மாதம் நடந்த கதை…அதன் பின்பு தான் ஒரே மாதத்தில் வேறு கதை உருவானது..அவளது வீணை இசையைக் கேட்க வந்து முதல் வரிசையில் பார்கவியின் பெற்றோர்  அருகில் அமர்ந்து இவளை வைத்த கண் வாங்காமல் ரசித்த ஆகாஷின் அத்தை மனதுக்குள்  போட்ட கணக்கு, பார்கவியின் வாழ்க்கையை திசை திருப்பியது.

தன் அண்ணன் மகன் ஆகாஷுக்கு பார்கவியைத் தான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று தீவிரமாக மனசுக்குள்  முடிவு கட்டினாள் ஆகாஷின் அத்தை.அவளது பெற்றோர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து தன்
அண்ணன் மகன் ஆகாஷுக்கு ஏத்த மாதிரி  பெண் தேடிண்டு இருக்கோம் , பெங்களூர்ல இருக்கான்…என் அண்ணாவுக்கு அவன் ஒரே பையன் தான், எங்க குடும்பத்தில் எல்லார்க்கும் இசைன்னா ரொம்பப் பிடிக்கும். என் மன்னி ரொம்பத் தங்கமான குணம் …ஆகாஷ் அருமையான பையன் என்றெல்லாம் அம்மாவிடம் உயர்த்திச் சொன்னதில் இருந்தே அம்மாவுக்கு ஆகாஷைப் பார்க்காமலேயே அந்த வரனைப் பிடித்துப் போனது. ஃபோட்டோவைப் பார்த்ததும் அனைவருக்கும் ஆகாஷைப் பிடித்துப் போனது.

பன்னாட்டு கம்பெனியில் சாஃபட்வேர் இஞ்சினியர்,  சம வயது வேறு, பெங்களுர் வாசம், கை நிறைய சம்பாத்தியம், காரும், பங்களாவும், இவளுக்காகவே  பிறந்தவன் போன்ற தோற்றமும்…எந்தப் பிக்கலும்,பிடுங்கலும் இல்லாத குடும்பம்  .இன்னும் என்ன வேண்டும்..பெற்றோருக்கு.? இதை விட்டால் உனக்கு இவ்வளவு நல்ல வரன் அமையவே அமையாது…என்று அவர்கள்  போட்ட தூபத்தில் இவளும் மயங்கிப் போய் கச்சேரிக் கனவில் இருந்து விடுபட்டு கல்யாணக் கனவில் மூழ்கிப் போனாள்.

நல்ல வரன் கண்ணில் பட்டதும் காலம் தாழ்த்தாமல் உடனே நிச்சயதார்த்தம்  வரை எளிதாக கொண்டு வந்து விட்டாள் ஆகாஷின் அத்தை.

பார்கவியின் அழகின் மேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்த ஆகாஷ்…நிச்சயமான  நிமிஷம் முதல்..அவளைத் தாங்கித் தாங்கி பரிசுப் பொருட்களை வாங்கித தந்து  திக்கு முக்காட வைத்து கொண்டிருந்தான்…வித விதமாகச் சுடிதார்கள், ஷிஃபான் புடவைகள்,  டெம்பிள் ஜுவெல்லரி,என்று பரிசுகள் அனுப்பி பார்கவியைத் திக்கு முக்காட வைத்தான். பார்சலைத் டெலிவரி செய்து விட்டு  கொரியர் பையன்  கூட ரொம்பப் பரிச்சயமாக பேசி விட்டுத் தான் போவான்.

ஒரு நாள் தங்கை பிரணதி கூட .”.பார்கவி…உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையா இருக்கு…இப்போ தான் நீ நிஜமான அதிர்ஷ்டக்காரிடி” என்றாள். பார்கவிக்குத் தலைகால் புரியவில்லை.

உயர்ந்த ரக மொபைல் ஃபோனும் புது சிம் கார்டும் கொடுத்து ஓய்வு நேரமெல்லாம் ஃபோன் செய்து  “என்ன நான் அனுப்பிச்ச புடவைப் பிடித்ததா..? கட்டிப் பார்த்தியா? ஸ்கைப்ல பேசணும்…வாயேன்…இன்னும் என்ன வேணும்..? இன்னும் எது பிடிக்கும்?என்று கேட்டு..கேட்டு  அன்பால் அபிஷேகம் செய்து  கொண்டிருக்க.

இதோ பாரு ஆகாஷ்….நேக்கு ஒண்ணும் வேண்டாம்….உன்னைப் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்…என்னைப் பத்தி நீ.தெரிஞ்சுக்கணும். .!  உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்…? பிடிக்காது,,ன்னு  சொல்லேன் ப்ளீஸ்..என்று பார்கவி கெஞ்ச…

இப்போ போய் இதைக் கேட்கறியே..வேற பேசேன்..எனக்கு உன்னைத் தான் பிடிக்கும்….எத்தனை தடவை வேணாக் கேளு…பதில் மாறாது….”நேக்கு பார்கவியை மட்டும்  ரொம்பப்  பிடிக்கும்..போதுமா..? இன்னும் சொல்லட்டுமா ஒன்…டூ….த்ரீ.தௌசென்ட் டைம்ஸ்….என்று குழந்தைத் தனமாக அடுக்குவதைக் கேட்டதும்…பெண்மைக்குரிய மன மயக்கத்தில் மேற்கொண்டு எதையுமே கேட்காமல்….சிரித்துப் பேசிவிட்டு வைத்து விடுவாள்.

அவனோ….அவளுக்கு என்ன பரிசுப்  பொருள்கள் பிடிக்கும் என்று மட்டுமே யோசித்து வேறு விருப்பு வெறுப்பு சிந்தனைகள் பற்றி யோசிக்காமல்…தனக்குப்  பிடித்ததெல்லாம் உனக்கும் பிடிக்கணும்…நமக்கு ஒருமித்த சிந்தனைகள் தான்….என்னும்  போக்கில் தான் சிந்திக்கலானான். அவனிடம் பேசப் பேசப் புரிந்து கொண்டவள்..இதோ இது என்னோட போன மாசம் நடந்த மேடைக் கச்சேரியின்  சிடி பார்த்துக் கேட்டுட்டு சொல்லுங்கோ என்று தர…

ம்ம்…அத்தை சொன்னா…நீ ரொம்ப நன்னா வீணை இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பேன்னு..எனக்கு அதைப் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது, புரியாது…தா… நேரம் இருக்கும்போது பார்க்கறேன் என்று கிளம்பும்போது சாதாரணமாக வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்ட ஆகாஷ் அதன் பின்பு அதைப் பற்றி மறந்தே போனான், என்பதை அவனிடமிருந்து அதைப் பற்றி எந்தப் பாராட்டோ,பேச்சோ வராததைப் பார்த்தே புரிந்து  கொண்டாள் பார்கவி.

போகட்டும் ..அவருக்கு நேரம் இருக்காது ,நாம் அதையே கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதி காத்தாள். ஆனால் மனசுக்குள் அத்தை சொன்னது மீண்டும் நினைவுக்குள் வந்து வந்து போனது….”எங்க குடும்பத்தில் எல்லார்க்கும் இசைன்னா ரொம்பப் பிடிக்கும். ” என்று.  ஒருவேளை அத்தை பொய் சொல்லியிருப்பாளோ….என்று கூடத் தோன்றியது…ச்சே..ச்சே…இருக்காது…அத்தை ரொம்ப நல்லவர் தான்…..நாம் அவசரப் படக் கூடாது….எதுவாயிருந்தாலும் அப்பறமாப் பார்த்துக்கலாம்…என்று தனக்குள் சமாதானமானாள். பார்கவிக்கும் ஆகாஷை மிகவும் பிடித்திருந்தது தான் அதற்குக் காரணம்.

கடைசியில் போன மாதம் கச்சேரி மேடை ஏறியவளை…இன்று  கல்யாண மேடையில்.ஏற்றி விட்டது விதி.. எல்லாம் கனவு போலவே நடந்தது பார்கவிக்கு. மார்கழி உற்சவம் தை மாசம் அந்த ஆண்டாளே வரம் தந்தது போல மாப்பிள்ளை அமைந்து விட்டதை அம்மா சொல்லிச் சொல்லி பூரித்துப் போனாள்.

கல்யாணம் முடிந்த கையோடு, மரகதப் பச்சை பட்டுப் புடவையில் அரக்கு கலரில் சங்கு  ஜரிகை போட்ட பட்டுப் புடவையில் சந்தனத் தேராக அமர்ந்திருந்தாள். தனது மனைவியின் அழகை ஓரக்  கண்ணால் ரசித்துப் பெருமை பொங்கப் பார்த்த  ஆகாஷ்…எல்லார்டையும் சொல்லிண்டு கிளம்பலாம்….என்றவன்…..உனக்கு வேண்டிய சாமான்கள் மட்டும் எடுத்துக்கோ….அனாவசியமா ஒண்ணும் வேண்டாம்….பார்த்துக்கோ…என்றான்…அவளது சீர் பாத்திரங்கள்,பக்ஷணங்கள், என்று எல்லாம் புத்தம் புதிதாக ஏற்கனவே தன் மாமியார் மாமனார் சென்ற முந்தைய வண்டியில் அனுப்பிவிட்டபடியால் இவள் மெல்ல  இதோ…இதை மட்டும்  ஜாக்கிரதையாக….என்று வீணையை அணைத்தபடி…நிற்க…

இதுவா…இதென்னத்துக்கு பார்கவி…அங்கே..வீணை வீணா….இடத்தை அடைக்கும்… நமக்கு இப்போ வீணை மீட்டிக் கேட்க நேரம் எது…? வீணையும் வேண்டாம் பானையும் வேண்டாம்… அப்புறம் நீ வந்து எடுத்துக்கோ.   நாம் ரெண்டு நாள்ல ஹனிமூன் போறோம் ஊட்டிக்கு தெரியும்ல்ல…பார்கவியின் மூக்கைச செல்லமாக  நிமிண்டி விட்டு அழகு பார்த்தபடியே …அவ்ளோ  தான் ஆச்சு நீங்க வண்டியக் கிளப்பலாம் ….என்று இன்னோவாவைக் கிளப்பச்  சொல்லிவிட்டு….”நீயும் சொல்லிட்டு கிளம்பு கவி ” முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஆகாஷ் யதார்த்தமாக நடக்க..

இவள் மனம்  “டொட..டோயங்……டோடயிங்….டொ…டொ…டொ…டொ…டொ….டோடோயங்…டோடைங்…டோடைங்…என்று முகாரி மீட்டிக் கொண்டிருந்தது.

அம்மாவிடம் மெல்லத் திரும்பி…”அம்மா…வீணையை  வேண்டாங்கறார்…என்று ரகசியமாக காதைக் கடிக்க…”

இப்ப அவர்  சொன்னபடி சரின்னு கேளு..எல்லாம் அப்பறமாப் பார்த்துக்கலாம்….என்று அம்மா பல்லைக் கடிக்கிறாள்.

எங்கிருந்தோ ஓடி வந்த தங்கை பிரணதி….”அப்போ இந்த வீணை இனி என்னோடது…..என்று வீணையைக் கட்டிக் கொள்கிறாள்…

“சரி…நீயே வெச்சுக்கோ..என்று சொல்ல மனம் வராத பார்கவி, இங்கயே இருக்கட்டும், எனக்கு வேணும்…..என்று சொல்லிக் கொண்டாள்.

கார் சுமக்காத வீணையை மனசில் சுமந்தபடி பிரயாணமானாள்  பார்கவி. உயிரை கழட்டி வைத்து விட்டு வந்த நிலையில் மடியில் கனவாக கனத்தது…வீணை…விரல் நுனிகள் காற்றை மீட்டி பார்த்து சூனியத்தில் தவித்தது.

பாரு….என்ன ஒரு மாதிரி டல்லா இருக்கே….? என்று கேட்க..

“பாரு…மோரு…எல்லாம் வேண்டாம்…பார்கவி…ன்னு  முழுபெரைச் சொல்லி கூப்டுங்கோ..மகாலட்சிமியோட பேரு இது…என்று மென்மையாகச் சொன்னாள்.

ஒ..எனக்கு .அதெல்லாம் தெரியாது…உனக்கு நிறைய தெரிஞ்சுருக்கே….வெரி குட்..என்மேல் ஏதாவது கோபமா கவி….? இப்போ சரியா..? அவன் நெருங்கி வந்து அவளை அணைத்தான்.  அந்த அணைப்பு ஏனோ பார்கவிக்கு ஒரு முதலை பிடித்துக் கொண்டது போல் உறுத்தியது.

வீணை அவள் உயிர்.  வீணை இல்லாத பார்கவி வெறும் கூடு ! அவள் உயிராக நினைத்திருந்த வீணையை  வெறும் பானை என்று சொல்லி விட்டானே..மனதுக்குள் புழுங்கினாள் பார்கவி.இதை எப்படிப் புரிய வைப்பேன் இவருக்கு?

ம்ம்….உங்களை மாதிரி எனக்கு ஒண்ணும் அவ்வளவாத் தெரியாது..ஆனா….என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்  கொண்டபடியே…இப்போது வேண்டாம் என்ற எண்ணத்தில்….இல்லையே…எதுக்குக் கோவம்…? நன்னாத் தான் இருக்கேன்….வேண்டுமென்றே புன்னகையை முகத்தோடு ஓட்டவைக்க முயன்று தோற்றுப் போனாள்.

“அம்மா, அப்பா. தங்கை எல்லாரையும் விட்டுட்டு வரோம்னு தானே மனசு கவலைப் படறே…..நான் கண்டு பிடிச்சுட்டேன்….டோன்ட்…வொர்ரி…வாரா வாரம்…வந்துடலாம்…  வீணை வாசி உன் வீட்டில்.  வீணை அங்கேயே இருக்கட்டும்.   இங்கே நான் தான் உன் வீணை. சரியா? தடுக்கி விழுந்தா பெங்களூரு என்று சொல்லிச் சிரித்தான்.

அட என் செல்லப் புருஷா.. .நீ  செல்லாப் புருஷா..! என் மனசில் இப்போ நான் எதை இழந்து தவிக்கிறேன்னு கூட உன்னால உணர முடியலையே…என்று விரக்தியில் முணங்கிக் கொண்டே முகத்தைத் திருப்பிக்  கொண்டாள் பார்கவி.

ஏய்…கவி..இப்போ என்ன நினைச்சு முணங்குரே ? சொல்லு… சொல்லு….  நீ சிரிக்கணும்.  எப்போதும் சிரிச்ச முகமா இருக்கணும், எங்கே முகத்தைத் திருப்பு அன்றவன் அவள் கன்னத்தைத் திருப்பி முகத்தைப் பார்க்கவும்.

நான் எப்படிச் சிரிப்பேன், நான் நானாக இல்லாத போது ?  என் வீணை அங்கே தூசியில்  வாடும் போது..!எடுத்துண்டாவது வந்திருக்கலாம்…வாசிக்கலைன்னாலும் துடைத்து வைத்து கண்ணாரப் பார்த்துண்டாவது இருந்திருப்பேன்.அவள் மனசு ஏனோ வீணையையே சுற்றிச் சுற்றி வந்தது.எதையோ பெரிதாக இழக்கப் போகிறாய் ஜாக்கிரதை என்று பார்கவியின்  உள்மனம் சொல்லிக் கொண்டே வந்தது.

அவள் கண்கள் ரொம்பி வழியத் தயாராயிருந்தது. கட்டுப் படுத்திக் கொண்டவளின் கண்கள் ஆற்றாமையில்  ஜன்னல் வழியாகக் நடனம் ஆடும்  மரக் கிளைகளை வேடிக்கை பார்த்து அமைதியானது.

அவள் நகர்ந்து அமர்ந்தும் அதைப் பொருட்படுத்தாது அவள் மீது அவனது உரசல்கள் அவளைத் தடுமாற வைக்க, கழுத்தோடு மின்னிய மாங்கல்யத்தைத் விரல்களால் நீவிவிட்டபடியே கண்களால் சொல்லிப் பார்த்தாள்…நான் உன்னவள் தானே….பொறுமை…பொறுமை…
என்று கண்களோடு சேர்ந்து உடலும் நெளிந்தது நாணத்தால்.

அவளது சிந்தனை பூரா வேறு விஷயத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அவள் சொன்ன எந்த மௌன பாஷையும்  அவனிடத்தில் காலாவதியானதால் இவளும் மெல்ல தன் கணவனின் கையை அன்போடு எடுத்து தன் கன்னத்தின் மேல் தடவிக் கொள்ள….இவளது விரல்கள் தன்னிச்சையாக அவனது கரங்களை வீணையாக்கி மீட்டியது. மனசு சஹானா ராகத்தைத் தேடியது. கண்களை மூடிக் கொண்டவள் .பகவானே….எல்லாரும் பொறாமைப் படறா மாதிரி தான் எனக்கு வாழ்க்கையைத் தந்திருக்கே…ஆனாலும் அந்த சந்தோஷத்தைக் கூட மனசு அனுபவிக்காமல் நான் ஏன் எதையோ தேடறேன்…..? கிடைக்காமல் அலை மோதுகிறேன்.   நான் தேடும் ஆத்ம  திருப்தி எனக்கு எதில் கிடைக்கும்….வீணை மீட்டுவதால் மட்டும் தானா? அல்லது தாம்பத்திய உறவில் மட்டும் தானா ?   கலை வாழ்வும், குடும்ப வாழ்வும் ஏன் கலந்து அமைவது அபூர்வமாகிறது ஒரு  பெண்ணுக்கு ? இப்போ என்னோடு கூட வீணையையும் எடுத்து  வந்திருந்தால்…சந்தோஷமாய் இருப்பேனா? அப்பவும் வேறு எதையாவது மனசு நினைத்துக் கொண்டு சஞ்சலப் படுமா…? என்னாச்சு எனக்கு..நான் கட்டிய கற்பனைக் கோட்டை, புகழ் எல்லாம் மறைந்து விட்டதோ என்ற வருத்தமா?

மனசின் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு நாலு சக்கரங்களும் வீடு வந்து சேர்ந்து நிம்மதி மூச்சு விட்டது.
ஆகாஷின் அம்மா,அப்பா மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக வரவேற்று கூடி நின்று ஆரத்தி எடுத்து   வலது கால் எடுத்து வைத்து உள்ளே வாம்மா என்று அழைக்கையில்….ஆகாஷின் பற்றிய விரல்கள் தந்த அழுத்தம்…மனசுக்குள் ஜிவ்வென்று பாய…உள்ளே நுழைந்தவளுக்கு சொர்க்கவாசல் திறந்தது போன்ற உணர்வு.சந்தன மனம் கமழ ஊதுபத்தி வாசனையோடு பூஜை அறையில் தயாராக வைத்திருந்த ஏற்றப் படாத விளக்கு பார்கவிக்காகக்  காத்திருந்து அந்த வீட்டில் அவளின்  முக்கியத்துவத்தைச் சொல்லாமல் சொல்லியது.

கை கால்கள் அலம்பிக் கொண்டு, அம்மா அப்பாவிற்கு நமஸ்காரம் செய்து விட்டு பூஜை அறை விளக்கை ஐந்து முகமும் ஏற்றியதும்..அங்கு பரவிய ஒளியில் மனசெல்லாம் பிரகாசமாக….இந்த வீடு தான் இனி உனது என்ற உணர்வு ஆழமாகப் பதிய…மெல்ல சமையலறை பக்கம் சென்றவள்..அங்கே பால் கலந்து  கொண்டிருந்த ஆகாஷின் அம்மாவை கட்டிக் கொண்டு அம்மா….என்று சொல்லி தோள் மீது சாய்ந்தவளை ஆனந்தத்தோடு சேர்த்து அணைத்தபடி நெகிழ்வோடு ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்கவி….உன்னை மாதிரி ஒரு வாஞ்சையான அன்பான ஒரு பெண்  இந்த வீட்டுக்கு மகளாகி வரணும்னு…எத்தனை வேண்டிண்டேன் தெரியுமா…?.நாங்க எல்லாரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கோம்னு சொல்லி தலையை வருடி விட்டபடியே…கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் அன்பை அழகாகச் சொன்ன தான் அம்மாவைப்  பெருமை பொங்கப் பார்த்தான் ஆகாஷ்.ஆகாஷின் அப்பாவும் தட்டு நிறைய வித விதமாக இனிப்புகளை எடுத்துத் தந்து இனிமேல் இது உன் வீடு..இங்கே நீ சந்தோஷமா இருக்கணும்…என்று சொல்ல..

“சரிப்பா…” என்றவளுக்கு நிம்மதியாக இருந்தது.எத்தனை அன்பான குடும்பம் எனக்குக் கிடைத்திருக்கு…இது தானே ஒரு பெண்ணுக்குப் பூரண சுகம், இன்பம், பாதுகாப்பு..இந்த வாழ்கை கிடைக்காமல் இந்த உலகத்தில் எத்தனை பெண்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிறிய அளவு வாழ்க்கை கிடைத்தாலும் எத்தனையோ பெண்கள் தங்களுக்கு விமோச்சனம் கிடைத்தது போல மகிழ்வார்களே. எனக்கு அந்த அமைதியும் நிம்மதியும் கிடைத்திருக்கு…அன்பான உறவுகள் மூலமாக.

பகவான் ஒரு இதயத்தின் அத்தனை ஆசைகளையும், தேவைகளையும், தேடல்களையும் எப்பவுமே பூர்த்தி செய்வதில்லை.தன்னை நினைக்கவென்று ஒரு சின்ன இடத்தை குறையாகவே வைத்திருப்பாரோ என்னவோ..?. இல்லாவிட்டால் வேண்டவோ , கேட்கவோ ஒன்றுமே இருக்காதே. அது போல இதுவும் அவன் சித்தம் தான். நான் செய்த புண்ணியம்,  எனக்கு இந்தப் பிறவியில் அன்பான உறவுகள்  மத்தியில்  வாழும் பாக்கியத்தை வாழ்க்கையாக்கிக் கொடுத்திருக்கார். இதைக் கூடப் புரிஞ்சுக்காமல் நான் வீணைக்காக இத்தனை நேரமாக அதையே குறையாகச்  சுமந்தேனே….ஒரு இனிமையான நேரத்தைக் கூட என் மனக் குறை அனுபவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதே.

இப்போவாவது புத்தி வந்ததே. இனிமேல் ஆகாஷுக்கு விருப்பமில்லாத எதையும் என் மனம் விரும்பாது. நிச்சயமாக அன்புக்கு அந்த சக்தி உண்டு. இதில் தியாகம் இல்லை. அன்பைப் பரிபூரணமா உணர்வது. கொடுப்பதில் இருக்கும் இன்பம் விட்டுக் கொடுத்தலிலும் இருக்கும். எப்படி ஒரு  வீணை மீட்டுபவரின்  விரல் அசைவுக்குத்  தக்க அதிர்ந்து இனிய இசையை உள்ளிருந்து அள்ளித் தருமோ…அது போல்…வீணையடி…நான்… எனக்கு.! ஒரு இல்லறத்துக்கு வேண்டிய இனியவை எல்லாம் இனி என்னுள்ளே…தீர்மானத்தோடு மனப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தவளாக…எண்ணிக் கொண்டிருக்கையில்….என்ன ..பலமான யோசனை..இன்னும் நிறைய இருக்கு நீ பார்க்க வேண்டிய சர்ப்ரைஸ் என்று ஆகாஷ் அவள் தோள் மேலே கை போட்டு அணைத்த படியே அழைத்துச் செல்ல…அவள் உள்ளமெங்கும் பரவசமாய்…..அவனைப் பார்த்து சிநேகமாய் சிரிக்கிறாள்.

அப்போது  தன் மனதைத் தழுவிக் கொண்டிருந்த வீணை இசை அந்த வீடு முழுதும் நழுவி ஒலித்துக் கொண்டிருப்பதை…கவனித்தவள் ஆகாஷ் , அன்று தான் கொடுத்த அவளது சிடி  யை இசைக்க விட்டிருப்பது தெரிந்ததும். கண்கள் பனிக்க தான் வந்து சேர்ந்த வீடு  தான் வாழ நினைத்த கோவில் என்று உணர்ந்து மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தாள். இருந்தும் மனதின் ஓரத்தில் அவளது வீணை அழுது கொண்டிருந்தது போலவே இருந்தது.மனசுக்குள் “மோட்சமு காலதா…என்று சாராமதி ராகத்தில்” துடித்துக் கொண்டிருந்தது.

பார்கவிக்கு….ஆகாஷின் தோளில் சாய்ந்து அழவேண்டும்  போலிருந்தது..அவளுக்கு. அவள் பார்வைத் தேடலைப் உணர்ந்து கொண்டவன் போல் ..கவி…இங்கே வா…நம் அறைக்கு என்று அவளின் கையைப் பிடித்து ஒரு குழந்தையை அழைத்துப் போவதைப் போல அழைத்துச் சென்றவனைப் பின்தொடர்ந்தவள் அறைக்குள் நுழையும் முன்பே திடுமென அவளது கையை விடுத்து கண்களைப் பொத்திய படி..கதவைக் கால்களால் தள்ளித் திறந்தவன்…”ம்ம்ம்…என்னாச்சு  உனக்கு ஆகாஷ் என்னை விடு….அம்மா…” என்று சிணுங்கி நெளிந்தவளை விடாமல் இரு…. இரு…இது தான் உனக்குப் பெரிய ஸர்ப்ரைஸ்…என்றவன் அவளது மூடிய கண்களைத் திறக்க…..அவள் கண்முன்பு பெரிய மேஜையில் கம்பீரமாக நீலப்பட்டுத் துணியால் போர்த்தி இருந்ததைப் பார்த்தவள்…ஆகாஷைப் பார்க்க….” ம்ம்…..திற…என்று கைகளால் காட்ட….ஏகப்பட்ட எதிர்பார்போடு நெஞ்சு திக் திக் என்று சந்தோஷத்தில் உள்ளுணர்வுகள் எல்லாம் அலை மோத  மெல்லத்  திறந்தவளுக்கு…ஆச்சரியமாக பார்கவியைப் பார்த்து சிரித்தது பளபளவென்று புத்தம்புதிய சரஸ்வதி வீணை.

அவளது அத்தனை மகிழ்வும் ஒருசேர முகத்தில் வெளிச்சம் போட, அந்த  அழகை ரசித்த வண்ணம்…ஆகாஷ் கை கட்டி புன்முறுவலோடு நின்றிருந்தான்…”என் லட்சுமி கிட்டேர்ந்து சரஸ்வதியைப் பிரிக்க மாட்டேன்” என்று மென்மையாகச் சொன்ன கணவனின் மார்பில் அன்போடு சாய்ந்தாள் பார்கவி..ஆனந்த ராகம் அம்ருத வர்ஷிணியாய் நெஞ்சம் முழுதும் பாய, கணவனின் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பார்கவி.அதில் அவள் வாழ்க்கையைத் திணித்தது போல் உணர்ந்தான் ஆகாஷ். பார்கவியின் இத‌ய‌வீணை மீண்டும் இயங்க ஆரம்பித்தது 

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *