(98) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு யார் எப்போது எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நினைவு படுத்திச் சொல்வது கடினம். வந்தார்கள். பிறகு வேறு வீடு கிடைத்ததும் சென்றார்கள். சிலர் தேவசகாயம் போல் தமக்கென வீடு கிடைத்த பிறகும், “என்னத்துக்கு அங்கே போய்க் கிடந்துக்கிட்டு..” என்று அலுப்புடன் என்னுடனேயே தங்கினார்கள். இந்த வீட்டில் கிடைக்கும் நண்பர்கள் குழுவையும் அது தந்த கலகலப்பையும் ஆனந்தத்தையும் வீட்டு தனியே போய் எங்கோ முடங்கிக் கிடப்பானேன்.

 

என்னுடன் தங்குவதென்றால், ஒரு கட்டத்தில் என் வீட்டில் தங்கியிருந்த 12 பேருடன் வாழ்வேண்டும். மாலை 6 மணியிலிருந்து மறு நாள் காலை 9 மணி வரை தான். இருப்பினும்…… இரண்டு பேர் என்றால் ஒரு பூட்டு ஆளுக்கொரு சாவி. பின்னர் இரண்டு பூட்டுக்களாயின. நாதாங்கியோடு ஒரு பூட்டின் வளையம். அந்த வளையத்தோடு இன்னொரு பூட்டின் வளையத்தைக் கோர்த்து விட்டால் ஆச்சு காரியம்.. இப்படி.  நான்கு பேருக்கு இது வசதி செய்து தரும். மூன்று பூட்டுக்களுக்கு மேல் சங்கிலியாகக் கோர்த்து எல்லோருக்கும் ஒரு சாவி கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இவ்வள்வு பேர் இருக்கோம். யாராவது ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருத்தர் வீட்டில் இருப்போம். இங்கு எல்லோருக்கும் இந்த சத்திரம் பற்றித் தெரியும். பூட்டவே வேண்டாமே என்று தீர்மானித்தோம்.

 

அப்படி எங்கள் வீடு புகழ் பெறக் காரணமான சம்பவம், ஒரு நாள் மாலை வந்தபோது பெட்டி, அலமாரியெல்லாம் திறந்து எல்லாம் அறை முழுவதும் சாமான்கள் சிதறிக்கிடந்திருந்தன. ஆக, திருடன் வந்திருக்கிறான். என் புத்தகங்கள், துணிமணிகள் எல்லாம் தாறுமாறாக விசிறிக்கிடந்தன. திருடனுக்கு கோபம் தாங்கவில்லை என்று தெரிந்தது. இதற்குள் இன்னும் சிலர் வரவே அவர்களுக்கும் வீடு இருந்த அலங்கோல நிலையைக் கண்டு அதிர்ச்சி. கடைசியில் அவரவர் சாமான்கள் சரி பார்க்கப்பட்ட போது, எதுவுமே திருட்டுப் போகவில்லை என்பது தெரிந்தது. திருடனுக்கு வேண்டியது எதுவுமே எங்களிடம் இருக்கவில்லை. பணம். நகை எங்களிடம் ஏது? இதனால் ஏற்பட்ட ஒரு நன்மை, இனி இந்த வீட்டுக்கு திருடன் யாரும் வரமாட்டான். இங்கு ஒன்றுமில்லை என்ற செய்தி பரவியிருக்கும் என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். முதலில் அதிர்ச்சி தந்தாலும், பின்னர் இது எங்களுக்குள் தமாஷாக மாறிப் போயிற்று. சௌகரியமாகவும் இருந்தது. கம்பன் பேசிய பூட்டாத, வீடுகள். யாரும் நுழைய சுதந்திரம் தரும் திறந்த வீடு. எங்கள் வீட்டில் ராமராஜ்யம் ஆட்சி புரிந்தது.

 

இன்னமும் பெரிய தமாஷ் நடக்க விருந்தது. ஒரு நாள் நான் அலுவலக நேரத்தில் இடையில் சற்று முன்னதாகவே வீட்டுக்கு வந்த போது,, இரண்டு பேர் முன் பின் தெரியாதவர்கள் என் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ மும்முரமாக தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் வந்தது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை தாங்கள் யார், எப்படி இங்கு என் வீட்டுக்கு வர நேர்ந்தது என்று எனக்குச் சொல்லும் அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. நான் எப்படிக் கேட்பது என்ற தயக்கத்தில் நான் இருந்தேன்.. நண்பர்கள் சொல்லி அவர்கள் வந்திருந்தால், அவர்களை ஏதும் விசாரிப்பது அவர்களை அவமானப்படுத்துவதாகுமோ என்ற பயமும் எனக்கு இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். அவர்கள் இருவருக்கும். கிராமத்தார்கள் போன்று காட்சி தந்தனர். கிராமத்து மக்கள் போலவே ஆனால் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக, அவர்கள் உடை தரித்திருந்தது சொன்னது. பஞ்சகச்சம், சட்டை, அவர்களுக்குள் ஒடியாவில் பேசிக்கொண்டிர்ந்தனர்..யார் இவர்கள்? யார் சொல்லி அழைத்து வந்திருக் கிறார்கள்? யாரும் சொல்லவில்லையே என்று நான் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன். இவர்களானால் என் கட்டிலில் உட்கார்ந்து நான் வந்ததைக் கூட சட்டை செய்யாமல் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டுக்கு வந்த என்னிடம் ஒரு நமஸ்தே கூட சொல்லும் அவசியத்தை அவர்கள் காட்டவில்லை. வழக்கம் போல நான் குளிக்கப் போனேன். வெயில் காலத்தில் மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் குளித்தாக வேண்டும். நான் குளித்து வெளியே வந்ததும் ஒவ்வொருத்தராக அறை நண்பர்கள் வர ஆரம்பித்தனர். முதலில் வந்தவன் “யார்ரா இது? என்று மெல்லிய குரலில் ரகசியமாகக் கேட்டான். “தெரியாது” நான் அழைத்து வரவில்லை. யார் அழைத்து வந்தார்கள் என்றும் தெரியாது.” என்றேன். நீ கேட்கலையா? யார் என்ன என்று?” என்று மறுபடியும் கேள்வி. இதற்குள் இன்னொருவனும் வந்தாச்சு. “நீ கேட்டியா? இல்லையே. என்னிடம் தானே கேட்கிறாய்?” யார் நீங்கள் இரண்டு பேரும் யார்? உங்களை அழைத்து வந்தது என்று எப்படிக் கேட்பது?” யாரோ நம்மாட்களில் ஒருத்தர் அழைத்துத் தான் வந்திருக்க வேண்டும். தானே தெரிந்து போகப் போகிறது,” என்றேன்

 

நாங்கள் பிறகு அவரவர் காரியங்களில் முனைந்தோம். யாராவது ஒருத்தர் கட்டாயம் வீட்டில் இருக்கப் போகிறோம். எல்லோரும் வந்த பிறகு யார் அழைத்து வந்தவர்கள் இவர்கள், எத்தனை நாட்கள் இருப்பார்கள்,? போன்ற சமாசாரங்கள் பின்னர் தெரிய வரும். கவலை இல்லை. எங்களுள் ஒருவரோ இருவரோ அவரவர் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போவதும் வருவதுமாக இருந்தோம். நான் இரவு எட்டு மணிக்குப் போய் சாப்பிட்டு வந்தேன். வந்த போது அவர்கள் இல்லை. எங்கேய்யா அந்த ஆட்கள்? என்று அறையிலிருந்தவனைக் கேட்க, அவர்கள் போய் விட்டார்கள்,மூட்டை முடிச்சோடு” என்றான் அவங்க கிட்டே ஏது மூட்டையும் முடிச்சும்? ஏதோ பை ஆளுக்கொன்னைத் தூக்கிட்டு வந்தது தானே? என்றேன். ஆமாம். அதைத் தான் சொன்னேன். “அச்சா ஹம் சல்தே ஹை” என்று மாத்திரம் சொல்லிவிட்டுப் போனார்கள். அதை வச்சு சொல்றேன். என்றான். வேடிக்கையாக இருந்தது. நல்ல மனுஷங்களாத்தான் இருந்திருக்காங்க. ஏதோ சத்திரத்துக்கு வர்ரது போல திறந்த வீட்டிலே என்ன ஏதுன்னு கூட கேட்காம ரொம்ப சுதந்திரமா வர்ரதும் போறதும், வேடிக்கையா இல்லே?” என்றேன். ஆமாம் வேடிக்கைதான் என்றான் இந்த மாதிரி வேடிக்கை வேறே எங்கும் நடக்காது என்றான். யோசித்துப் பார்க்கும் போது இந்த மனிதர்கள் ஏதோ காலத்து மனிதர்கள் தான் என்று தோன்றியது.

 

மூணு வருஷத்துக்கு முன்னாலே இங்கே ஹிராகுட்டுக்கு முதன் முதல் வந்த போது சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் இல்லை ரண்டு ரூபாய் காணாமப் போகும். இல்லாவிட்டால் ஏதாவது சில்லரை. திருட்டுத் தான் போயிருக்கிறது என்பது பின்னர் ஊரில் எங்களுக்கும் முன் வந்தவர்களின் பேச்சில், இந்த தகவல் வெகு சாதாரணமாக வந்து விழுந்தது. அதைக் கேட்க ஆச்சரியாமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதே சமயம் சிரிக்கவும் தோன்றியது. எவ்வளவு எளிய மக்கள்? எவ்வளவு நல்ல குணம் படைத்தவர்கள் என்று. குளம் ஏரி, கிணறு இவற்றில் சேமித்திருக்கும் தண்ணீரை அவரவர் தேவைக்கு எடுத்துக்கொள்வது போலத் தான் செல்வந்தர்களின் பணமும் என்று காந்தியே சொல்லியிருக்கிறார். இந்த ஒரியா கிராமத்து மக்கள் காந்தியை அறிவார்களோ என்னமோ, அவர் போதித்த பொருளாதார தர்மங்களை (Trusteeship) இவர்கள் தாமாகவே வாழ்ந்து காட்டுகிறார்கள். “என்ன வேணும் அவங்களுக்கு? பசிச்சா வெறும் நெல்லுப் பொறியைச் சாப்பிட்டு காலத்தைக் கடத்து கிறவர்கள். ஒரு வேளை ஒரு வயித்துப் பொறிக்கு எவ்வளவு காசு வேணும்?” என்று இவர்களைத் தெரிந்த பெரியவர் தமாஷாகச் சொன்னார்.

 

இங்கு வந்த ஆரம்ப வருஷங்களில் நான் பார்த்திருக்கிறேன். அலுவலகக் கட்டிடத்தை விட்டு மாலையில் வெளியே வந்தால் நிறைய கிராமத்துப் பெண்கள் தெருவின் நடைபாதையில் துணியைப் பரப்பி, கடலை, காய்கறி இப்படி ஏதோ விற்றுக் கொண்டிருப்பார்கள். காசு குறைந்தால் “லே லே பாபு கல்  தே தோ” (பரவாயில்லை, நாளக்குக்கொடு, பாபூ) என்று சொல்வது மிக சகஜமாக இருந்தது. இவள் நாளைக்கு இங்கு எங்கு இருப்பாள்?, அப்படி இதே இடத்தில் அடையாளம் காண இருந்தாலும், நாங்கள் படித்த நாகரீக மனிதர்களாயிற்றே. நினைவு வைத்து கொடுக்கும் நேர்மை எங்களில் எத்தனை பேருக்கு இருக்கும்? எட்டோ, பத்தோ அணா . போனது போனது தான் அந்த ஸ்திரீக்கு. ஆக, பாண்ட் சர்ட் ஷூ போட்டுக்கொண்டு வந்துள்ள எங்களுடன் பழகிய பிறகு, அவர்களுக்கும் நாங்கள் யார் என்று தெளிந்திருக்கும். ஆக, இப்போது இங்கு அப்படி இல்லை. எல்லாம்  மெதுவாக மாறிக் கொண்டு வருகிறது.

 

அடுத்த தடவை, சீனிவாசன் வந்த போது, உடனே கேட்டார்

“நான் ரண்டு பேரை இங்கே அனுப்பினேனே, ஊருக்குப் புதுசு, பரவாயில்லே எஙகாளுங்கதான்  இங்கே இருக்காங்க, போய் தங்கிக்கோ”ன்னு சொல்லி அனுப்பினேன். வந்தானுங்களா?, திரும்பி வந்து, இன்னும் என்னைப் பாக்கலை அவங்க”. என்று. எங்களுக்கு ஒரே சிரிப்பு. “ஓ, அவங்க நீங்க அனுப்பின ஆட்களா? ஊம் வந்தாங்க. ரொம்ப சுதந்திரமா இருந்துட்டுப் போனாங்க. யார் இவங்க, எப்படி இங்கே வந்தாங்கன்னே தெரியலை. யாரைக் கேட்டாலும் “நான் அழைச்சிட்டு வரலைன்னு எல்லாரும் சொன்னா பின்னே எங்கேருந்து இவங்க குதிச்சானுகன்னு ஏதோ துப்பறியும் கதை மாதிரி ஆயிடுத்து” என்று சொன்னோம். அவரும் சிரித்துக்கொண்டார். “நல்லவேளை விரட்டாமே இருந்தீங்களே” என்றார்.

 

அப்படி இல்லே சீனிவாசன், அவர்கள் பாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போனார்கள். அலட்டிக் கொள்ளவில்லை. சுமையாக இருக்கவில்லை. எந்தத் தொந்திரவும் இல்லை. இப்படி நாம இருப்போமோ வந்த சுவடு தெரியாது போய்விட்டார்கள்.” என்றேன்.

 

”வாங்களேன் எல்லாரும். ஒரு நாளைக்கு ஒரு கிராமத்தில் தங்கிப் பார்க்கலாம். அது ஒரு அனுபவமாக இருக்கும்,” என்று அப்போது சீனிவாசன் சொன்னார். அது எப்பவோ ஒரு நாள் நடக்கவும் நடந்தது.

 

நாங்கள் மூணு பேர்தான். மற்றவர்களுக்கு அதில் அக்கறை இல்லை. கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். கிராமம். அதனால் என்ன? ஒரு அனுபவம் என்று நினைத்துக் கொண்டோம். எவ்வளவு தூரம் போனோம் என்று நினைவில் இல்லை. எப்படி போனோம் என்பதும் நினைவில் இல்லை. பஸ் போகவில்லை அங்கு. ஜீப்பில் தான் போயிருக்கவேண்டும். நாங்கள் அந்த கிராமத்து சாலை ஓரத்தில் இறங்கியதும் ஒரு பெரியவர் வந்தார். வாங்க என்று சொல்லி எங்களை அழைத்துக்கொண்டு போய் ஒரு குடிசையில் உட்கார வைத்தார். அங்கு எல்லாமே நம்மூர் கிராமத்தில் உள்ளது போல கூரை வேய்ந்த மண் சுவர் ஆறடி உயரத்தில் எழுப்பிய அறைதான். குடிசை. எங்களுக்குக் கிடைத்ததும் ஒரு அறை குடிசை தான். “இங்கே சௌகரியமா இருங்க. கொஞ்ச நேரத்திலே வரேன் என்று சொல்லிப் போனார். வெளியே நல்ல வெயில். காலை மணி பத்து இருக்கும். உள்ளே சூடு தெரியவில்லை. இதமாக இருந்தது. சுற்றி எல்லாம் குடிசைகள் தான். நெருக்கமாக இல்லை. விசாலமான இடைவெளியும் மரங்களுமாக இருக்க குடிசைகள் சுற்றி இருந்தன. அரை மணி நேரமாகியிருக்கும். ஒரு சின்னப் பெண், டீயும் ரொட்டியும் சிங்காடாவும் கொண்டு வந்தாள். சின்னப் பெண் என்றால் 15 அல்லது 16 வயதிருக்கும். நாங்கள் சாப்பிட்டதும் அந்த அலுமினிய பாத்திரங்களையெல்லாம் எடுத்துப் போனாள். “பாபா வருவார்” என்று சொல்லிப் போனாள். “என்னடா இது,இங்கே வந்து இப்படி மாட்டிக்கொண்டோம்,” என்று தோன்றியது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்துக்கொண்டோம். முட்டாளாகிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்ற வரும் சிரிப்பு. வெளியே வந்து கிராமத்தைச் சுற்றி வரலாமே என்று தோன்றியது. குடிசையில் என்ன இருக்கிறது.? ஆகவே கதவைச் சார்த்திவைத்துக் கிளம்பினோம். நன்றாகத் தான் இருக்கிறது. கிராமம் சுத்தமாக அமைதியாக மரங்களின் நிழலடியில். பெரிய கிராமம் ஒன்றும் இல்லை. தூரத்தில் வீடு கட்டிக்கொண்டி ருந்தார்கள். மண்ணைக்குழைப்பதும் தண்ணீர் கொண்டு வருவதும் சுற்றிச் சுற்றி வரும் ஆட்கள். அந்த இடத்தில் அருகில் நாங்கள் சென்றதும் எங்களைப் பார்த்து வந்தவர் எங்களைக் குடிசையில் அமர்த்திச் சென்றவர் தான் “பொண்ணு வந்தாளா, சாப்பிட் டீங்களா? என்று கேட்டார். கிராமத்தில் ஒருத்தருக்கு வீடு கட்டியாகிறது. கிராமத்தில் உள்ள எல்லோரும் அதற்கு உதவுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து தன் கிராமத்துக் குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்ட உதவுகிறார்கள். உதவி தான்.  எங்கள் பெரியவரும் அதில் சேர்ந்து கொண்டுள்ளார்.

 

பிறகு மதிய வேளையில் எங்களுக்கு உணவு கொண்டு வந்த ஆளோடு சீனிவாசனும் சேர்ந்து கொண்டார். இன்னும் கொஞ்ச நாளக்கு அவர் பிஸியாக இருப்பார் வீடு கட்டி முடிக்கிற வரைக்கும். எனக்குத் தெரியாமல் போயிடுத்து. தெரிந்திருந்தால் இன்னொரு சமயம் வந்திருக்கலாம்.  கிராமத்தில் இப்படித்தான் எல்லாரும் எல்லோருக்கும் ஒத்தாசையாக இருப்பார்கள். உதவிக்கு கூலி ஏதும் கிடையாது. இது மட்டும் இல்லை. கிராமத்தில் அவர்களுக்கு வேண்டியது எல்லாமே இங்கேயே கிடைக்கும். எதற்கும் அநாவசியமாக டவுனுக்கு போகணும்கிறது இல்லை. கிராமத்தில் எது கிடைக்கிறதோ அதை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அனாவசியத் தேவைகளேதும் இவர்களுக்குக் கிடையாது. அது போக இன்னும் ஏதாவது வேண்டுமானால் கிராமத்திலேயே முடியுமானால் செய்து கொள்வார்கள். எந்த வேலையாக இருந்தாலும் சரி, தச்சு வேலை, கொல்லன் வேலை, கூரை வேய்வது, சுவர் எழுப்புவது, எதானாலும் வெளியே போக வேண்டியதில்லை. ஆள் தேடவேண்டியதில்லை. என்று புதிதாக வந்த ஆளிடமிருந்து தெரிந்து கொண்டோம். அவர்களுக்கு சினிமா, மின்சாரம் இதெல்லாம் தெரியாது. இப்போத் தான் மண்ணெண்ணெய்க்கு டவுனுக்கு போக வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வாழ்க்கை மாறிக்கொண்டு வருகிறது.

 

இருப்பினும் இன்னமும், தன்னில் எல்லாம் அடங்கிய ஒரு வாழ்க்கையை அங்கு பார்க்க முடிந்தது. அது எங்களுக்குப் புதிய விஷயம். கம்யூனிஸ்ட் சைனாவின் கம்யூன் தான். ஒரு சின்ன வித்தியாசம். இங்கு கட்சி ஆள் ஒருத்தன் எல்லோரையும் கட்டுப் படுத்த, கொள்கைப் பாடம் நடத்த என்று யாரும் இல்லை. யாரைச் சுட்டுத் தள்ளலாம் என்று சொல்ல மக்கள் நீதி மன்றமும் கிடையாது. கட்சித் தலைவர் படமும் எங்கும் இல்லை. அவர் இல்லாமலேயே, கட்சியின் வழிகாட்டுதல் இல்லாமலேயே எல்லாம் அதனதன் கதியில் நடந்து கொண்டிருந்திருக்கிறது. ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணை, வெளியேயிருந்துவந்திருக்கிற அந்நிய ஆண்பிள்ளைகளுக்கு டீ யும் சிங்காடாவும்  கொண்டு போய் கொடுத்து விட்டு வா என்று அனுப்ப முடிகிறது.

 

பழங்கால வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு தூரத்துப் பார்வை, (a peep என்று சொல்லலாமோ என்னவோ) கிடைத்தது எங்களுக்கு.

 

இப்போது நாம் பத்திரிகைகளில் பஞ்சாயத் ராஜ் பற்றி அரசு நிறையப் பேசுகிறது. காப் பஞ்சாயத்து என்றும் ஒரு சமாசாரம் இருப்பது தெரிகிறது.

 

Series Navigationமுனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழாஎன் இரு ஆரம்ப ஆசான்கள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *