சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’

This entry is part 8 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’

அவனுக்கென்றொரு பெயர் இருக்கிறது. ஆனால் அவனது வீட்டில், கிராமத்தில் எல்லோரும் சிறு வயதிலிருந்து ‘சின்னவனே’ என்றுதான் அவனை அழைக்கிறார்கள். பலகைகளால் ஆன குடிசையொன்றில் அவனும், அவனது விதவைத் தாயும், சகோதரியும் வசிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சிறுவன் அக் குடிசையின் பலகைச் சுவரில் கரிக் கட்டியால் மூன்று + அடையாளங்களை இட்டு, அவை தானும், அக்காவும், அம்மாவும் என்கிறான். அச் சிறுவனால் சித்தப்பா என அழைக்கப்படும் ஒருவனால் அந்தக் குடும்பத்துக்கு அவ்வப்போது வீட்டுச் செலவுகளுக்கான பணம் கிடைக்கிறது. சித்தப்பா அக் கிராமத்தில் அவர்களது குடிசைக்கு அருகிலுள்ள காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவன். அதற்குத் தேவையான தண்ணீரை தொலைதூரத்திலிருந்த குளத்திலிருந்து பெரிய கொள்கலனொன்றில் தோளில் வைத்துச் சுமந்து கொண்டு வந்து கொடுப்பது சின்னவனின் வேலை. மிகுந்த சிரமப்பட்டு அதை நாள்முழுதும் செய்யும் அவனுக்கு, அங்கு ஒரு வேளை உணவு கிடைக்கிறது.

சித்தப்பாவின் மோசமான பார்வை அவனது சகோதரியின் மேல் விழுகிறது. அவள், தன்னை எங்கேயாவது பாதுகாப்பாக அனுப்பி வைக்கும்படி தனது தாயிடம் கெஞ்சுகிறாள். ஒரு நாள், வீட்டில் சிறுவன் இல்லாத நேரம், அவ் வீட்டுக்கு வரும் சித்தப்பா, அச் சிறிய வீட்டின் பூட்டப்பட்ட கதவினைத் தட்டித் தட்டி அழும் அம்மாவின் கதறலுக்கு மத்தியில் அக்காவை வன்புணர்ச்சி செய்கையில், சிறுவன் அங்கு வந்துவிடுகிறான். அக்காவின் ஓலம் உள்ளிருந்து கேட்கிறது. எதுவும் புரியாமல் ஸ்தம்பித்து நிற்கும் சிறுவனோடு சேர்ந்தழுகிறாள் தாய். சிறுவனின் குரல் கேட்டு வீட்டினுள்ளேயிருந்து வெளியே வரும் சித்தப்பா முற்றத்திலிறங்க, கதவைப் பூட்டிக் கொண்டு அக்கா தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்கிறாள். அம்மா மூர்ச்சையாகி விழ, சிறுவன் மண்வெட்டியொன்றால் கதவை உடைத்துக் கொண்டு சென்று, தூக்கில் தொங்கும் அக்காவின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுகிறான். பின்னர் அதே மண்வெட்டியைக் கொண்டு போய் அகம்பாவத்தோடு வெளியே நிற்கும் சித்தப்பாவின் தலையிலடிக்கிறான். சித்தப்பா செத்து விழுகிறான்.

தாயின், சகோதரியின் பாசத்தில் திளைத்து நன்றாக வளரும் சிறுவனின் வாழ்க்கை இவ்வாறாக ஒரு இரவில் மாறிப் போகிறது. அது முட்கள் நிறைந்த பாதைக்கு அவனைத் திருப்பி விடுகிறது. அவனே அறியாமல் பல துயரங்களை அடுக்கடுக்காக அவனின் மேல் திணிக்கப் போகிறது காலம். அக்காவைப் புதைக்கும்வேளையில் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கதறும் அம்மா, சித்தம் பிசகிப் போய்விடுவதோடு பொலிஸ் ஜீப் அங்கு வருகிறது. சின்னவன், பொலிஸைக் கண்ட பயத்தில் நின்ற நிலையில் அணிந்திருக்கும் ஆடையோடே சிறுநீர் கழித்துவிடுகிறான்.

வாழ்க்கையானது விசித்திரமான பாதைகளைக் கொண்டது. இறுதி வரை செல்லவேண்டியிருக்கும் அப் பாதைகளில் சிலருக்கு மட்டும் அவை மென்மையானவையாகவும், சிலருக்கு அவ்வப்போது கரடுமுரடானதாகவும், இன்னும் சிலருக்கு முட்கள் மட்டுமே நிறைந்த பாதைகளாகவும் அமைந்து விடுகின்றது. அவர்களாகத் தேர்ந்தெடுக்கும் பாதைகள் முட்கள் தூவப்பட்டதாக அமையும் சாத்தியங்களும் ஆயிரம். ஆனால் பிறந்ததிலிருந்து ஏனென்றே அறியாது உயிரைக் கிழித்து வதைக்கும் முட்கள் நிரம்பிய பாதையொன்றில் பயணம் செய்ய வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்படும் ஒருவனின் கதையைச் சொல்கிறது ‘பம்பர வலள்ள (whirlwind – சுழிக் காற்று)’ இலங்கைத் திரைப்படம். இத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டுக்கான World fest International Houston Film Festival சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ரெமி விருதையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் (ஒளிப்பதிவாளர் திஷுல தீபா தம்பவிட்ட) பெற்றுள்ளது. இவ் விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் 2400 திரைப்படங்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலே சொல்லப்பட்டது இத் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு சில நிமிடக் காட்சிகள் மட்டுமே.

காட்சி மாறுகிறது. பதினேழு வருடங்களின் பிறகு ஒரு இளைஞனாக சிறையிலிருந்து விடுதலையாகிறான் சின்னவன். பேரூந்தில் ஊருக்கு வரும் அவனுக்கு, அவனது அயல்வீட்டிலிருந்த குடும்பத்தினர் வயல்வேளைகளுக்காக வளர்க்கும் எருமை மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் அவர்களது வயலில் விவசாயம் செய்யும் வேலையும் கிடைக்கிறது. அவர்கள்தான் அவ்வளவு காலமும், சித்தம் பிசகிப் போன நிலையிலிருக்கும் அவனது அம்மாவுக்கு உணவளித்துப் பராமரித்தவர்கள். சின்னவனை அவனது அம்மாவால் அடையாளம் கண்டுகொள்ள முடியவேயில்லை. அவள் எப்பொழுதும் கரித் துண்டுகளால் வீடு முழுவதும் + அடையாளத்தை வரைந்தபடியே இருக்கிறாள். ஒரு முறை வீதி வழியே + அடையாளம் இட்டபடி சென்று அயல் நகரம் வரை போய்விட்டிருந்தாள். இப்படியாக ஒரு நாள் காணாமலேயே போய்விட்டாள்.

எருமை மாடுகளைப் பார்த்துக் கொள்வதோடு வயல்வெளிகளில் வேலைசெய்யும் அவனுடன் அயல்வீட்டினரும், ஊராரும் பாசத்துடன் நடந்துகொள்கின்றனர். உண்ண உணவும், செலவுக்குப் பணமும் கொடுக்கிறார்கள். இந் நிலையில்தான் அவனது வாழ்க்கைப் பாதையின் மிக முக்கியமான திருப்பத்தை அவன் எதிர்கொள்ள நேரிடுகிறது. சிறுவயதிலிருந்து சிறைக்குள் முடங்கும்படி செய்த அவனது வாழ்க்கை, அவனை ஒரு முன்கோபம் கொண்டவனாகவும், முரட்டு சுபாவம் உடையவனாகவும் மாற்றியிருக்கிறது. அவனுக்கு நேரத்துக்கு உணவளித்து அன்பாகக் கதைக்கும் அயல்வீட்டு இளம்பெண் மேல் அவனுக்குக் காதல் வருகிறது. அதை அவளிடம் சொல்கையில், அவள் கோபம் கொண்டு அவனது முகத்தின் மேல் எச்சிலை உமிழ்ந்து, ‘நீ எங்கள் வீட்டு மாடுகளைப் பார்த்துக் கொள்பவன்’ எனத் திட்டிவிடுகிறாள். கோபத்தில் அவளைப் பிடித்து, தன் வசமிருந்த கத்தியால் முழங்கால் வரை நீண்டிருந்த அவளது நீளமான கூந்தலை முழுவதுமாக வெட்டிக் கையோடு கொண்டு போய் அவளது வீட்டு வாசலில் போட்டுச் செல்கிறான். பெரும் அவமானத்துக்குள்ளாகும் அக் குடும்பத்தினர், சின்னவனின் குடிசை நோக்கிச் சாபமிட்டுவிட்டு, வீட்டுச் சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிடுகின்றனர். கோபத்திற்குள்ளாகும் ஊர் இளைஞர்கள், சின்னவனது குடிசையை எரித்துவிடுவதோடு, இரவில் வீதியில் வரும் அவனைத் தாக்கி, அவனது கால்களை உடைத்து, அவனை நடுவீதியில் போட்டுச் செல்கின்றனர்.

பிணங்களைப் பதப்படுத்தி, சவப்பெட்டிகளிலிட்டு அதனதன் வீடுகளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கும் வேலையைச் செய்யும் சவச்சாலை உரிமையாளனான மெல் என்பவனும், அவனது உதவியாளனான ஜெனி என்பவனும் வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இவனைக் கண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார்கள். பாதி குணமானதும், சின்னவனுக்கு யாருமில்லையென்பதையறிந்து மெல் தனது சவச்சாலைக்கே அவனைக் கூட்டிக் கொண்டுபோய் பராமரிக்கிறான். சவச்சாலையின் கணக்குவழக்குகளைப் பார்த்துக் கொண்டு, எவருடனும் பேசாமல் தன்பாட்டில் இருக்கும், இடுப்புக்குக் கீழே இரண்டு பாதங்களுமற்ற ராலஹாமி என்பவனை, மெல்லினது மகன் என சின்னவனிடம் சொல்கிறார்கள் அங்கிருப்பவர்கள்.

இப்படியாகக் காலங்கள் செல்கின்றன. சின்னவனுக்கு, அநாதரவாக நின்ற தனக்கு வாழ்வளித்த மெல்லின் மேல் மிகுந்த பாசமும் மரியாதையும் வருகிறது. மெல் எதைச் சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்யக் கூடிய ஒரு அடிமையைப் போல அவன் மாறிவிட்டிருக்கிறான். பிணங்களை வெட்டும் மற்றும் பதப்படுத்தி, பெட்டிகளிலிட்டு அனுப்பும் அந்த இடத்திலேயே தங்கி, தனது வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறான். மெல், சின்னவனுக்கு துப்பாக்கியொன்றை வாங்கிக் கொடுக்கிறான். நகரில் பிரதான வீதியிலிருக்கும் மெல்லுக்குச் சொந்தமான சவப்பெட்டிக் கடையை சரத் என்பவன் நடத்தி வருகிறான். தனது சவப்பெட்டிக் கடைக்குப் போட்டியாக புதிதாக ஒரு கடையைத் திறந்திருக்கும் இளைஞனையும், அவனது கடையிலிருந்த சேவகனையும் சரத்துடன் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் சின்னவன். மெல்லினது கட்டளையின் பேரில் செய்யப்படும் அக் கொலைகளுக்கான கைதுகளிலிருந்து அவனைத் தப்ப வைக்க, கொலைகளுக்காக பொலிஸ் சின்னவனைத் தேடிவரும் வேளையில் சவப்பெட்டியொன்றுக்குள் பிணம் போல அவனைப் படுக்கவைத்துக் காப்பாற்றி அவனை மறைவாக ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைக்கிறான் ஜெனி.

தான் ஒளிந்திருக்கும் அவ் வீட்டின் மேல் தளத்தில் ஒரு இளம்பெண்ணும் இருப்பதை கொடியில் உலரும் அவளது ஆடைகள் மூலம் உணரும் சின்னவன், அவனைப் பார்க்க வரும் மெல்லிடமும், ஜெனியிடமும் ஒரு பெண் இருக்குமிடத்தில் தன்னால் இருக்கமுடியாதென அடம்பிடிக்கிறான். அவள் ஒரு செவிட்டூமைப் பெண் எனச் சொல்லி மெல் அவனைச் சமாதானப்படுத்தி அங்கேயே தங்க வைக்கிறான். அவனுக்கான உணவுகளைத் தயாரித்துக் கொடுக்கும் அவள், ஒரு நாள் கைத்தொலைபேசியில் மெல்லினைக் காரசாரமாகத் திட்டுவதை தற்செயலாகக் கேட்கிறான் சின்னவன். அவளை அங்கு சிறைப்படுத்தி வைத்து, அவளிடம் ஆட்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் ஒரு இழிசெயலைச் செய்யும் ஒரு தரகராக மெல் இருப்பதை அவனிடம் அழுதழுது சொல்லும் அவளுடன், அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான் சின்னவன். செல்லும் இடமற்று அவளது தாய்வீட்டுக்கு இருவரும் செல்கையில் மெல் அங்கு அவர்களுக்காகக் காத்திருக்கிறான்.

இருவரையும் திரும்பவும் அவர்களை ஒளித்துவைத்திருந்த அதே வீட்டுக்குக் கூட்டிவரும் மெல், இருவரையும் சரமாரியாகத் திட்டி, அடிக்கிறான். பின்னர் அடுத்தநாள் காலையில் இருவரையும் தனது சவச்சாலைக்குக் கூட்டிச் சென்று பிணங்களை அறுக்கும் இடத்திலேயே அவ்விருவருக்கும் விவாகப்பதிவினைச் செய்கிறான். விவாகப்பதிவு முடிந்ததும், அதன் பிரதியை அவனிடம் கொடுக்கும் மெல்லும், ஜெனியும் அன்று பிற்பகல் வங்கிக்கு இலட்சக்கணக்கான பணத்துடன் செல்லும் ஒரு வாகனத்தைக் கொள்ளையடிக்கும்படி சின்னவனுக்கு கட்டளையிட்டுச் செல்கிறார்கள்.

விவாகப்பதிவு முடிந்த பின்னர், அப் பெண் அழுதுகொண்டே இருக்கிறாள். தன்னை நோக்கி நீட்டப்படும் விவாகப்பதிவுப் பிரதியைத் தட்டிவிடும் அவளிடம் தன்னைப் பிடிக்கவில்லையா எனக் கேட்கிறான் சின்னவன். அவள் தனது சட்டைக்குள் ஒளித்துவைத்திருந்த இன்னுமொரு விவாகப்பதிவுப் பிரதியை அவனிடம் நீட்டி, தனக்கு இது போல சவச்சாலைக்குள் ஏற்கெனவே மெல் திருமணம் செய்துவைத்திருக்கிறான் எனச் சொல்கிறாள். தான் விரும்பிய ராலஹாமிக்கே தன்னைத் திருமணம் செய்துவைத்து, பின் அன்றிரவே ஆட்களைக் கொண்டு அவனைத் தாக்கி, தொடைகளுக்கு மேலால் அவனது இரு கால்களையும் முழுமையாகத் துண்டித்து ஊனமாக்கி, சவச்சாலைக்குள் அவனையும், ஒரு வீட்டுக்குள் அவளையும் சிறைவைத்திருக்கும் கொடியவன் மெல் என்கிறாள். அந்தச் சவச்சாலைக்குள் தடயங்களெதுவுமின்றி மெல்லினால், கொன்று எரிக்கப்படும் உயிர்கள் அனேகமானவை என்றும், அன்று இரவு சின்னவனையும் கொன்று விடத் தீர்மானித்திருக்கிறானென்றும் அவள் சொல்லி அழுகிறாள். திடுக்கிட்டுப் போய் அழுகிறான் சின்னவன்.

அன்றைய தினம் பிற்பகலில் சரத்துடன் வீதியில் காத்திருக்கும் சின்னவன் அக் கொள்ளையைச் செய்து மோட்டார் சைக்கிளில் பணத்தினை எடுத்துக் கொண்டு வருகையில், பொலிஸ் அவனைத் துரத்துகிறது. பொலிஸாரின் குண்டு காலினைத் தாக்கியதால், சைக்கிளிலிருந்து கீழே விழும் சரத்தினை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் சின்னவன். பின் தப்பித்து வந்து அப் பணத்தினை மெல்லிடம் சேர்த்துவிடுகிறான். தனது நண்பனையே தன் கையால் கொல்ல நேர்ந்ததற்காக அவனது மனசாட்சி அவனை உறுத்துகிறது. ஜெனியிடம் வாய்விட்டுக் கதறிக் கதறி அழுகிறான். தன்னை அன்று மெல் கொல்லக் காத்திருப்பதைத் தான் அறிவேனென்று சொல்லி அழும் சின்னவன், அதனை வலிக்காமல் செய்து முடிக்கும்படி கதறுகிறான்.

அதே தினம் இரவில், ஜெனியிடம் தனது பிணங்களை எரிக்கும் இரகசிய இடத்தில் இரண்டு பிணங்களை எரிக்க ஏற்பாடு செய்யும்படி கட்டளையிடுகிறான் மெல். சின்னவனது பிணத்தோடும், இன்னுமொரு பிணத்தோடும் தான் நள்ளிரவில் வருவதாகவும் சொல்கிறான். ஜெனி போன பின்பு, கட்டிலில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் சின்னவனின் முகத்தை போர்வையால் மூடுகிறான் மெல். பின் தனது கத்தியை எடுக்கிறான்.

படத்தின் இறுதிக் காட்சி இதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. சராசரிக்கும் கீழான, எவரினதும் பார்வை படாத மனிதர்களின் இருட்டு வாழ்க்கையின் நிகழ்வுகளை விவரிக்கிறது படம். படத்தின் காட்சியமைப்புக்களும் களங்களும் பிண்ணனியும் பார்வையாளர்களை ஒரு வலி மிகுந்த கவிதையைப் போல தானாக உணரச் செய்பவை. ஒரு கிராமத்திலிருந்து, நகரத்தின் சுயநலமான நடமாட்டத்துக்குள் கதைக்களம் தெளிவாகப் புகுந்துவிடுவதைக் காட்சிகள் சொல்கின்றன. ஒரு பெண் தன் கூந்தலை இழந்ததற்காக, அனுதாபத்தோடு அவளைப் பார்க்க, துக்கம் விசாரிக்கவென அவளது வீட்டுக்கு வரும் கிராமத்துச் சனக்கூட்டம், பட்டப்பகலில் பிரதான வீதியின் கடையொன்றுக்குள் கொலைகள் நிகழும் போதும், தெருவில் கொள்ளை நிகழும் போதும் தன் பாட்டிலிருக்கும் நகரத்துச் சனக் கூட்டமென இயக்குனரின் பார்வை கிராமம், நகரமென இரண்டு தளக் காட்சிகளையும் யதார்த்தமாகவும் தெளிவாகவும் விளக்குகின்றன.

விவாகப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அதன் அருகிலேயே ஒரு முதியவன், நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு பிணத்தினைக் கழுவி அறுக்க முற்படும் காட்சியும், பதிவுக்குக் கையொப்பமிட அம் முதியவனையே அழைப்பதுவும், விவாகப்பதிவு முடிந்த பின்னர் இளம்பெண், சின்னவனிடம் மெல் பற்றிச் சொல்லியழுகையில் அறுக்கப்பட்ட பிணம், அலங்கரிங்கப்பட்டு அங்கு ஒரு மௌன சாட்சியாகக் கிடத்தப்பட்டிருப்பதுவும் பார்வையாளனின் மனதுக்கு அக் களத்தின் தீவிரத்தையும் குரூரத்தையும் உணரச் செய்வன. தனது அடியாளை வைத்து ஆள் கொலை செய்யும் அதிகாரம் நிறைந்தவனுக்கு, குற்றவாளியையும் துப்பாக்கியையும் அதன் ரவையையும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒளித்துவைக்க ஒரு சவப்பெட்டியும், ஊனமுற்றவனும், தேனீர் நிறைந்த ஒரு கோப்பையுமே போதுமானதாக இருக்கிறது.

இவ்வாறாக அதிகமான திருப்பங்களைக் கொண்ட வாழ்க்கையின் விபரீதமான அந்தகாரப் பக்கத்தினை, நேரடியாக முகத்திலறைந்து திறந்து காட்டியிருக்கிறது இத் திரைப்படம். யாராலும் சிந்திக்கப்படாத அடித்தட்டு மக்களின், அடியாட்களின் வாழ்வானது எவ்வளவு துயரமும், உயிரச்சமும் நிறைந்ததென வெளிப்படுத்துகின்றன அதன் காட்சிகளும் பின்புலங்களும். நல்லவன் போலச் சித்தரிக்கப்படும் மெல் எனப்படுபவன், எவ்வளவு கொடியவனென சின்னவன் உணர்கையில் அவனுக்கு ஏற்படும் அதிர்ச்சி பார்வையாளர்களுக்கும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மெல்லினால் கால்கள் துண்டிக்கப்பட்டு, சக்கரநாற்காலியிலமர்ந்து, எவருடனும் கதைக்காமல் எப்பொழுதும் சவச்சாலைக்குள்ளேயே சுற்றிவரும் ராலஹாமி, படத்தின் இறுதியில் எவராலும் மறக்கமுடியாத பாத்திரமாக உருவெடுக்கிறார். இவ்வாறாக திரைப்படத்தில் வந்து செல்லும் எல்லாக் கதாபாத்திரங்களுக்குமே சமமான அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு.

இயக்குனரின் முதல் திரைப்படமாக, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி, இயக்கி, படத்தில் சின்னவன் எனும் பிரதான பாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார் இயக்குனர் திரு.அதுல லியனகே (Athula Liyanage). தற்பொழுது முப்பத்தேழு வயதான இவர், திரைப்படத் துறைக்கு வரும் முன் 15 வருடங்களுக்கும் மேலாக மேடை நாடக இயக்குனராகவும், மேடை நாடக நடிகராகவும் இருந்தவர். சிறந்த நடிகர், சிறந்த கதாசிரியர், சிறந்த இயக்குனர், சிறந்த ஒப்பனைக் கலைஞர், சிறந்த மேடை ஒளியமைப்பாளர், சிறந்த மேடையமைப்பாளர் எனத் தனது மேடை நாடகங்களுக்காக பல தேசிய விருதுகளை வென்றெடுத்த இளைஞர்.

கதாநாயகியாக படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் நடிகை தமிதா அபேரத்ன (Damitha Abeyratne), மிகச் சிறப்பாகத் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவர் இதற்கு முன்னர் நடித்த சுலங் கிரில்லி (காற்றுக் குருவி) திரைப்படத்துக்காக இலங்கையின் சிறந்த நடிகைக்கான சரசவி தேசிய விருதையும், SIGNIS விருதையும், பங்களாதேஷில் நடைபெற்ற எட்டாவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கசுன் கல்ஹார இசையமைத்திருக்கும் இத் திரைப்படத்தில் சின்னவனின் தாயாக, ஒரு மனப் பிறழ்வுள்ள வயதான பெண் பாத்திரத்தையேற்று நடித்திருக்கிறார், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை நீடா பெர்னாண்டோ. இவர் 1998 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், 1999 இல் சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருதையும் வென்றெடுத்தவர். மெல், ஜெனி, அயல்வீட்டுத் தலைவர் என எல்லோருமே இவ்வாறாக சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றெடுத்த நடிகர்கள். இத் திரைப்படத்தில் இவர்கள் சிறு கதாபாத்திரங்களைக் கூட ஏற்று சிறப்பாக நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

கோவணத்திலிருந்து காற்சட்டைக்கும், வெற்றுக் கால்களிலிருந்து மோட்டார் சைக்கிளுக்கும் மாற்றமுறும் ஒரு கிராமத்துச் சிறுவனின் கதையை தனது முதலாவது படத்தின் கருவாக எடுத்து, திறமையான இயக்கம், நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவுடன் கோர்த்து, சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்தைத் தந்திருக்கும் இத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.அதுல லியனகேயைச் சுற்றி அனேகரது பார்வையும் தற்பொழுது குவிந்திருக்கிறது. மேடை நாடகக் கலைஞராக இருந்தவரொருவர் தான் இயக்கி, நடித்த முதல் திரைப்படத்திலேயே இவ்வாறானதொரு பெரு வெற்றியைச் சூடிக் கொள்வதென்பது இலகுவானதொன்றல்ல. எனினும் அவ் வெற்றிகளைத் தனது அடுத்து வரும் படைப்புக்களுக்கும் கொண்டுசெல்வதில்தான் இந்த இளைஞரின் திறமை இனி தங்கியிருக்கிறது.

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9கடிதம்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *