இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்

author
0 minutes, 1 second Read
This entry is part 28 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (25-Aug-2012)

உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கிற உருளைக்கிழங்கு மற்றும் கேரட் துண்டுகளை அதிலே போட்டு சிறிது உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்கு வெந்துவிடும். சற்று நேரத்தில் இறக்கி வைத்து விட்டால் உருளைக்கிழங்கு கேரட் பொறியல் தயார்.
‘என்ன இது கட்டுரை வேறு மாதிரியாகப் போகிறதே..’ என்று படிக்கிற உங்களுக்குச் சந்தேகம் வந்து விட்டது. நாம் சரியான கட்டுரையைத்தான் சொடுக்கியிருக்கிறோமா? என்று மீண்டும் தலைப்பைப் பார்க்கிறீர்கள். சந்தேகம் வேண்டாம். நான்தான் அப்படி ஆரம்பித்திருக்கிறேன். ஏன் என்பதைப் பிறகு பார்க்கலாம். அதுவரை நாக்கில் எச்சில் ஊறட்டும்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2011) உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். அதன் ஏற்பாட்டுக்குழுவில் நானும் இருந்தேன். அதன் தலைவராக லீ குவான் யூ கொள்கை ஆய்வுக்கழகத்தின் துணை இயக்குனர் திரு. அருண்மகிழ்நன் இருந்தார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்திய அனுபவம் கொண்டவர். அவர் ஒருமுறை சொன்னார், ‘நம் இனம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது…’ என்று. அவர் கூற்றில் உண்மை இருக்கிறது என்பதை பல அனுபவங்களில் நான் அறிந்து கொண்டேன்.
மேலோட்டமாகப் பார்த்தால் நம் இனத்துக்கும் மற்ற இனத்தாருக்கும் அப்படியென்ன இடைவெளி இருந்து விடப்போகிறது என்று எண்ணத் தோன்றும். இருக்கிறது! நிறைய இருக்கிறது!!. தலையை ஆட்டுவதில், ஒன்றை வெளிப்படுத்துவதில், பதில் சொல்வதில், எண்ணத்தில், செயலில், பண்பாட்டில் என்று பலப்பல இடைவெளிகள் இருக்கின்றன. ஒரே இனத்தைப் பார்ப்பவருக்கு அல்லது அந்த இனத்துக்குள்ளேயே இருப்பவருக்கு அந்த இடைவெளிகள் தெரியாது. பல இனத்தாரோடும் பழகுகிறவர்களுக்கு அது தெளிவாகத் தெரியும்.
மனிதன் புலம் பெயர்ந்து பல இன சமுதாயத்தில் வாழ்ந்தாலும் எளிதில் அவன் அடுத்த இனத்தோடு அணுக்கமாகப் பழகுவதில்லை. அவரவர் வட்டத்துக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள் மனிதர்கள். ஆனால் பள்ளிகளில், வேலையிடங்களில், பொது நிகழ்வுகளில் அவர்களால் அப்படி இருந்து விட முடிவதில்லை. சேர்ந்து படிக்க, சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. அப்படிச் சேர்ந்து செயலாற்றுகிற போது அவர்களிடையே உள்ள இடைவெளிகள் வெளிப்பட்டு அடையாளம் காட்டிக்கொள்கின்றன. மேலிருந்து பார்ப்பவர்கள் ‘இந்த இனத்தான் இப்படிப்பட்டவன்’ என்று எளிதில் மதிப்பிட்டு விடுகிறார்கள்.
நாகராசன் ஒரு விழாவிற்கு நண்பர்கள், தெரிந்தவர்களை தொலைபேசியில் ஒரே வரிசையில் தொடர்ந்து அழைக்கும் போது அவருக்குக் கிட்டிய அனுபவம் முக்கியமானது. எதிர்முனையில் வந்த பதில்கள் விதவிதமாக இருந்தன. அது ஒன்றும் வியப்பில்லைதான். ஆனால் நாகராசனால் ஒன்றைத் தெளிவாக உணர முடிந்தது. அது எதிர்முனையில் பேசியவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு. இன்னார் இப்படிப்பட்டவர் என்கிற மதிப்பீடு. ஒரே தராசுத் தட்டில் எல்லோரையும் எடை போட்டுப்பார்த்து விட்ட மதிப்பீடு.
இப்படித்தான் தராசுத்தட்டும், எடைபோட்டுப்பார்க்கிற வாய்ப்பும் அமைந்து விடுகிற போது இடைவெளிகள் வெளியில் வந்து அடையாளம் காட்டிக்கொள்கின்றன.
பல இனத்தார் வேலை செய்கிற ஒரு நிறுவனத்தில் அதன் முதலாளிக்குத் தெரிந்திருக்கும் ஒவ்வொரு இனத்தாரும் எப்படி நடந்து கொள்வார் என்பது. அந்த இனத்தைப்பற்றிய ஒரு பொதுவான மதிப்பீடு அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. விதிவிலக்காக ஓரிருவர் இருக்கலாம். அந்த இனத்தின் சாயம் அந்த ஓரிருவர் மீதும் பூசப்பட்டு விடுவது துரதிஷ்டவசமானது.
என்னோடு உடன் வேலை பார்க்கும் ஒரு சீனத்தோழி என்னிடம் ஒருமுறை கேட்டார் இப்படி, ‘ஏன் இந்தியர்கள் எப்போதும் ‘ஆமாம்’ என்பதற்கு ‘இல்லை’ என்பது போலவும், ‘இல்லை’ என்பதற்கு ‘ஆமாம்’ என்பது போலவும் தலையை ஆட்டுகிறீர்கள்? என்று’. அவருக்கு இந்தியர்களைப் பற்றி அப்படி ஒரு மதிப்பீடு!
புலம் பெயர்ந்து வாழ்தலில் பல நன்மைகள் இருக்கின்றன. அது அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் சார்ந்த அவன் சமுதாயத்திற்கே ஏற்படுகிற நல்ல முன்னேற்றமாக அமைந்து விடுகிறது. வாடிப்பட்டியில் வசித்து வந்த கோமளா மதுரைக்குக் குடியேறியதால் கற்றுக்கொண்ட பழக்கங்கள் பல. மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த சேதுராமன் தன்னை மேலும் மெருகேற்றிக்கொண்டான். சென்னையிலிருந்து சிங்கைக்கு வந்த சீதாராமன் தன் வாழ்வை இன்னும் சீராக்கிக்கொண்டான். சென்னைக்கு அவன் திரும்பி வந்த போது அவன் அங்குள்ளவர்களிடம் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, பொது இடங்களை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்றெல்லாம் கொட்டித் தீர்த்தான். இது ஒவ்வொருவரும் புலம் பெயர்ந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்வது போல இருக்கிறது. எழுத்தாளர் மாநாட்டு முதல் நாள் அமர்விலே புலம் பெயர்தலைக் குறிப்பிட்டபோது நாடு விட்டு நாடு போவது மட்டும் புலம் பெயர்தல் ஆகி விடாது. இடம் விட்டு இடம் பெயர்தலும் புலம் பெயர்தலே என்று குறிப்பிட்டார்கள். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். எப்படி நல்ல விசயங்கள் பரவுகின்றனவோ அது போலப் பல நல்லன அல்லாதவையும் பரவும் வாய்ப்பும் இருக்கிறது.
‘நம்மைப்பற்றி மதிப்பீடு செய்கிறார்கள், நாம் பல இனசமுதாயத்தில் வாழ்கிறோம்’ என்கிற பிரக்ஞையோடு நாம் கவனமாகச் செயலாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அப்படி நடந்து கொண்டால் நம் இனத்தின் ஒட்டு மொத்த மதிப்பு உயரும். எல்லோரும் ஒன்றாய்க் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும். மனிதன் அவன் வட்டத்துக்குள்ளெயே இருந்து விடுவானாயின் அங்கே இடைவெளிகள் இருக்காது. முன்னேற்றமும் இருக்காது. புலம் பெயர்ந்து வாழ்கிறவர்கள் இது பற்றி யோசிக்க வேண்டும். தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வர வேண்டும். அடுத்த இனத்தோடு அணுக்கமாகப் பழக வேண்டும். அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் என்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நடுநிலையோடு ஆராய்ந்து அடிமனதில் பதிந்து போய் இருக்கிற நம்பிக்கைகளை வேறோடு பிடுங்கி எறிந்து விட்டுப் புதிய நம்பிக்கை நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். புது நாத்து வளரும். அந்த அறுவடை நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
எல்லாம் சரி உருளைக்கிழங்கு பொரியலுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மிளகாய்ப் பொடியையும், உப்பையும் போட்டுக் கிளறக் கிளற எப்படி எல்லா உருளை, கேரட் துண்டுகளிலும் அவை சீராகப் பரவி எல்லாத் துண்டுகளும் ஒரே மாதிரிச் சுவையைத் தருகின்றனவோ அது போல பல இனங்களை ஒன்றாய்ப் போட்டுக் கிளறக் கிளற எல்லாம் எல்லோருக்கும் சேருகிறது. பல இனங்கள் சேர்ந்து வாழும் பல இன சமுதாயத்தில் சீனர்கள் தோசை சாப்பிடவும், இந்தியர்கள் மீ கோரீங் சாப்பிடவும் எப்படி ஒருவரிடம் ஒருவர் பழகிக் கொண்டார்களோ அது போல பழக்கவழக்கங்களும் பரஸ்பரம் சென்று சேர்கின்றன. அங்கே கற்றலும், கற்றுக்கொடுத்தலும் சாத்தியமாவதால் நாளடைவில் மாற்றம் நிகழ்கிறது. இடம் விட்டு இடம் பெயர்தலால் மனிதன் மேலும் மேலும் மெருகேறுகிறான்.

என்ன இரண்டுக்கும் உள்ள தொடர்பைச் சரியாய்ச் சொல்லி விட்டேனா?

Email: rvairamr@gmail.com

Series Navigationபூனைகளின் மரணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *