பெய்வித்த மழை

author
0 minutes, 1 second Read
This entry is part 16 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

பா.பூபதி

பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியும், பகலில் இரவு கரைவதை என்று புரிந்தாலும் போதுமான அளவு இரவை போர்வையில் அடைகாத்துக் கொண்டேன். ஆனாலும் நேரம் வளர வளர நான் அடைகாத்த இரவின் நிரம் தேய்ந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தேய்ந்த நிரம் அதற்குமேல் மங்காமல் அப்படியே இருந்தது. இதென்ன இப்படியே இருக்கே! என்று பக்கத்தில் போய் பார்த்ததும் பல்லைக்காட்டி சிரித்தது நிழல். நிழலா! இது நிஜத்தின் பின்னால்தானே இருக்கும். இது… இது இந்த போர்வையின் நிழலாச்சே! அப்படினா போர்வைக்குமேல் இருப்பதென்ன! பார்க்கும் அளவிற்கு போர்வையை விலக்கிப்பார்த்தேன். சுவர்களை ஊடுருவி உள்ளே புகுந்து நிரைந்து வழிந்தது பகலின் வெளிச்சம்.

நான்தான் அப்படிக்கிடந்தேனே தவிர நான் எப்போதோ எழுந்து குளித்து தயாராகிக்கொண்டு இருந்தேன் கனவில். அவ்வப்போது ஏய் மணி எவ்வளவு ஆச்சு தெரியுமா? வேலைக்கு போகலையா! எந்திரி மணி எவ்வளவு ஆச்சு தெரியுமா என்று மனம் அதட்டியபடி இருந்ததால் கைகளை வலையாக்கி வீசிப்பார்த்தேன் ஒன்றிரண்டு முயற்சிக்குப்பின் துடிப்பற்ற மீனாய் சிக்கியது செல்போன். இறுக்கிடந்த இமைகளை திறந்தாலும் கண்கள் இயங்க மறுத்தன. மனம் மட்டுமே விழித்த நிலையில் செல்போனை அருகில் கொண்டுவந்து பார்த்தேன் அதுவும் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. அதை எழுப்புவதற்கான பட்டனை தட்டியதும் அதில் பதுங்கியிருந்த அத்தனை வெளிச்சமும் பளீரென பாய்ந்து கண்களை கூசியது. ச்சை என சலித்தபடி தலையை திருப்பிக்கொண்டேன். மீண்டும் ஏய் மணி எவ்வளவு ஆச்சு தெரியுமா? என்ற கேள்வி தோன்றியதுமே மீண்டும் செல்போனை பார்த்தேன். இப்போது கண்களும் விழித்துக்கொண்டதுபோல் இருந்தது. மணி 7… 7.45 என்னது! ஏழே முக்காலா? உடலை உதறியபடி எழுந்தேன். போர்வை எங்கோ தெறிந்துவிழுந்தது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அவசர நிலையை அறிவித்தேன். தூக்கம், மயக்கம், நிழல் எல்லாம் என் வேகத்தைக்கண்டு விலகி ஓடி ஒளிந்துகொண்டது.

மனசு மட்டும் படபடனு யோசிக்குதே தவிர உடல் நகரவே இல்லை. வீட்டில் யாரைப்பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. ச்சே என்ன வீடு இது! மணி இவ்வளவு ஆச்சே இவன் வேலைக்கு போகவேண்டாமா, எழுப்பிவிடலாம் என்று யாருக்காவது தோனுதா! நவகிரகம் மாதிரி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையை பார்த்தபடி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். யாராவது யாரப்பத்தியாவது கவலைப்படுறாங்களா! யாரையும் காணமே எல்லோரும் எங்க போய் தொலைச்சாங்க? அப்படியே செத்துப்போயிட்டா கூட அவங்கவங்க வேலையை பார்த்திட்டு இருந்திடுவாங்க போலிருக்கு. இனி குளிச்சி, துணியை தேய்ச்சி, ஓடிப்போய் பஸ்சப்புடிச்சி… நினைக்க நினைக்க வீட்டில் இருப்பவர்கள் மேல் ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த ஆத்திரம் மேலும் ஐந்து நிமிடத்தை தின்றுதீர்த்தது.

எப்படியோ போய்தொலைங்க என்பதுபோல அலட்சியமாக நடந்துவந்த அம்மாவை பார்த்ததும் என் ஆத்திரம் எகிரிக்குதித்து அம்மாவை நோக்கி ஓடியது. ஆத்திரத்தை அனுமத்தித்தால் பின்னர் என்ன நடக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியுமென்பதால் பதறியபடி அதை இழுத்துப்பிடித்து என் உள்ளே வைத்துக்கொண்டேன்.

ஏம்மா, இவ்வளவு நேரமாச்சில்ல, எழுப்பிவிட்டிருக்கலாம்ல என்று காபி வேணும் என்பதுபோல சாதாரணமாகத்தான் கேட்டேன். எத்தனதடவ எழுப்புறது? பொழுதுவிடிச்சா எழுப்பிவிடுறதே பொலப்பா இருந்தா குடும்பம் வெலங்கிடும் என்ற அம்மாவின் பேச்சில் “வாடா பாத்திடலாம்” என்ற சண்டைக்கான அழைப்பு இருப்பது புரிந்ததும். அழைப்பை நிராகரித்தபடி ஆக வேண்டிய காரியங்களில் மூழ்க்கிப்போனேன்.

உடல் மெலிந்த பேஸ்ட், உருவம் இழந்த சோப்பு என கண்ணில் பட்ட அனைத்தும் எதையோ எனக்கு குறிப்பிட்டு சொன்னபடியே இருந்தது. என் அவசரம் அதன் வார்த்தைகளற்ற மொழியை புரிந்துகொள்ள என்னை அனுமதிக்கவில்லை. அனைத்தையும் முடித்துவிட்டு அன்னார்ந்து பார்த்தபோது சுவர் கடிகாரம் கைக்கெட்டாத தூரம் வரை ஓடிக்கொண்டிருந்தது. சரி இன்று என்ன நடக்கப்போகிறது என்ற முன்பே தெரிந்துவிட்டது என்ற நினைப்புடன் பாதையில் இறங்கி கால்களை விரட்டிக்கொண்டு ஓடினேன். அடிக்கடி என் கண்களை கைக்கடிகாரத்தையும் பார்க்கும்படி பதட்டம் தூண்டிக்கொண்டே இருந்தது. இன்னிக்கு அவ்வளவுதான் நல்லா மாடிக்கொண்டேன், இன்நேரம் போயிருக்கும். அத விட்டுட்டா அடுத்தது அரை மணிநேரம் கழிச்சுதான் வரும். அதுல போனா இன்னும் அரை மணி நேரம் தாமதம் ஆகும். தலையில் அங்கங்கே தோன்றிய சிறு சிறு ஊற்றுகள் ஒன்றாக இணைந்து ஆறாக முதுகின் வழியே இறங்கி ஓடியது. இதோ வந்துவிட்டேன், எங்கே வழக்கமாக நிற்கும் யாரையும் காணம்! ஒருவேலை போயிருக்குமோ! சரியான நேரத்திற்கு வந்துவிட்டேனே! மனதுடனான மிகப்பெரிய விவாதத்திற்குப்பிறகு தீர்மானமான ஒரு முடிவெடுத்து பக்கத்திலிருப்பவரிடம் அன்னா 43 போயிடுச்சா? என்று தயங்கியபடி மூச்சிறைக்க கேட்டேன்.

அருகில் இருந்தவரிடம் சுவாரசியமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தவர் சிரிப்பினிடையே அங்கே நிற்குது பாரு என்பது போல தலையை ஆட்டினார். அவர் தலை ஆட்டிய திசையில் வழக்கத்திற்கு மாறான வண்ணத்தில் ஒரு பேருந்து நின்றபடி உறுமிக்கொண்டிருந்தது.

இதுவா! என்று எனக்கு மட்டும் கேட்கும்படி பேசிக்கொண்டு அவரை மீண்டும் பார்த்தேன். என்ன? என்பதுபோல பார்த்தார். இல்லண்ணா இது வேற மாதிரி இருக்கு! என்று குழம்பியபடி அவரைப்பார்த்தேன்.

அது இன்னிக்கு வரலப்பா. அதுக்கு பதிலாத்தான் இத விட்டுருக்காங்க. இப்ப எடுத்திடுவா போ என்று கூறிவிட்டு விடுபட்ட தன் சிரிப்பை மீண்டும் பிடித்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் பேச்சை தொடர்ந்தார்.

அவருக்கு நன்றிகூட சொல்லாமல் சட்டென ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். யாருக்கு அதிகம் வேர்த்திருக்கு என்று பார்க்கலாமா என்பதுபோல எல்லோரும் கையை தூக்கியபடி காற்றை உள்ளே விடாமல் நெருக்கியபடி நின்றுகொண்டிருந்தார்கள். உள்ளே புகுந்து நசுங்கி பிதுங்கி ஒரு இருக்கையின் மீது என்னை சாய்த்தபடி நின்று கொண்டேன். ஏற்கனவே பதட்டம் என் உடலை உலுக்கிக்கொண்டு இருக்க, பேருந்தும் தன் பங்கிற்கு உர் உர் உர் என்று மேலும் உடலை உலுக்கி பதட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தபோது ஆங் சொல்லு யாரு என்ன ஆங் என்னது இரு இரு என்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென தன் இருக்கையிலிருந்து கீழே இறங்குவதற்கா எந் தி ரி க் க… அவர் எந்திரிப்பதற்கு முன்பாகவே நான் அதில் அமர்ந்துவிட்டேன். ஆஹா வாழ்க்கைடா, வேலைக்கே வரவேண்டாம் இந்தா இந்த மாதம் சம்பளம் என்று கையில் பணத்தைக்கொடுத்ததுபோல மணம் அந்த சந்தோசத்தை கொண்டாடியது. நேரத்தில் வந்தாக்கூட நின்னுட்டுத்தான் போகனும் இன்று தாமதமா வந்து கூட உட்கார இடம் கிடைத்தது எவ்வளவு அதிர்ஷ்டம். கை தூக்கியபடி நிற்றவர்கள் அதில் உட்காருவதற்காக எத்தனித்து ஏமாந்தது தெரிந்தது. பக்கத்தில் இருந்தவர் முறைக்குமளவிற்கு வசதியாக உட்கார்ந்துகொண்டேன். புஸ் புஸ் என்று வெளிப்பட்ட என் மூச்சும், பாதை தெரியாமல் அலைந்த என் வியர்வையும் அவரை முகம் சுளிக்கச் செய்திருக்க வேண்டும். முகத்தை இறுக்கியபடி ஒதுங்கிக்கொண்டார். இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபோது ஏற்பட்ட ஈர உணர்வு முதுகு நன்றாக வேர்வையில் நனைத்திருப்பதை உணர்த்தியதால் முதல் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டுக்கொண்டேன். இங்க யாரவது வாங்காம இருக்கா என்று வாய்யை குவித்தபடி எட்டிப்பார்த்த நடத்துனர் நாக்கில் விரல் தடவி கொடுத்த வழக்கமான வண்ண சீட்டை வாங்கி சட்டைப்பையில் போட்ட பிறகுதான் ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தி ஏற்பட்டது.

சட்டென அனைவரும் ஒருகணம் முன்னோக்கி தடுமாற, உருமிக்கொண்டிருந்த பேருந்து பாரம் தாங்காமல் முனங்கியபடி முன் நகர்ந்தபோது என் தலை முடியில் விரல்விட்டு கோதியபடி கழுத்தின் வழியாக முதுகுப்புறம் இறங்கி சென்றது சன்னல் வழி காற்று. என் வேர்வைத்துளிகளும் காற்றும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட மகிழ்ச்சியில் என் முதுகுத்தண்டு முழுவதும் சிலிர்த்து அடங்கியது. முகத்தை மூடுவதுபோல இருகைகளால் முகத்தை துடைத்துக்கொண்டபோது விரல்கள் ஏறி இறங்கி முகத்தின் பள்ளமான பகுதிகளை தொட்டதும் இதுவரை என் அவசரத்தை புரிந்துகொண்டு என்னை சந்திப்பதற்கா ஒரு ஓரமாக உட்கார்ந்து காத்திருந்த சோகம், என்ன இப்போ சந்திக்கலாமா? என்பதைப்போல என் முன் வந்துநின்றது.

முதலில் நான் பார்க்கவில்லை காண்ணாடிதான் என்னை பார்த்தது. அது என்னை பார்த்துவிட்டதை பல்துலுக்கும்போது எதேச்சையாகத்தான் நான் பார்த்தேன். பார்த்து திரும்பியவன் அது என்னை பார்த்தை அறிந்ததும் மீண்டும் ஒரு முறை நான்றாகப்பார்த்தேன். மிக அருகில்… என் முகத்தில் விழித்ததற்காக அது நிச்சயம் வெட்கப்பட்டிருக்கும். என்னை பார்த்தபடியே இருந்தது. அது நானே இல்லை. என் முகத்தில் எனக்கென்று நான் கொண்டிருந்த அடையாளங்கள் எங்கே! காய்ந்த கட்டையொன்று அங்குமிங்கும் அசைவதுபோல முகம் மாறிவிட்டிருந்தது. சன்னல் வழியாக வேடிக்கை பார்த்து மனதின் போக்கை மாற்றலாம் என்று நினைத்தாலும் காட்டிய திசையெல்லாம் காண்கள் மட்டும்தான் பார்த்ததே தவிர மனம் என் முகத்தையே உற்றுப்பார்த்தபடி அருகிலேயே மெளனமாக அமர்ந்துகொண்டது. பலவீனமான சிந்தனைகள் மெல்ல மெல்ல தன் பலத்தை பயமாக பரிமாற்றம் செய்துகொண்டு உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஓடிச்சென்று அழிவிற்கான அடையாளங்களை காட்டிக்கொண்டே இருந்தது. காய்ந்து இறுகிய முகம். அதில் புதைந்து கருகிய விழிகள். இங்கே தானே இருந்திச்சி எங்க காணம் என அதிர்ச்சியை ஏற்படுத்தும் தலை முடி, மூங்கில் தண்டுகளால் கோர்த்த மாதிரி கைகள்… என்னைக்கூட நான் கவணிக்காமல் எதற்காக இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறேன்? உடலில் பாதி அழிந்து மீதி மட்டுமே இப்போது இருக்கிறது, சந்தோசமெல்லாம் மறைந்துபோய் பயமும் பாரமும் மனதை அழுத்த உள்ளங்கைகள் வியர்த்து, உடல் தளர்ந்து பசிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டு முழுவதும் தளர்ந்துவிட்டேன். வண்டியின் அதிர்வு மேலும் என்னை பலவீனமாக்கிக்கொண்டிருந்ததால் பேசாமல் வண்டி நின்றதும் கீழே இறங்கிவிடலாமா? என்று யோசித்ததுமே – ம் இறங்கித்தான் பாரேன், உன் மூலம் நிகழ்ந்துகொண்டிருக்கும் பயன்பாட்டை நிறுத்தித்தான் பாரேன் என்று சவால் விட்டபடி வழிமறித்து நின்றது என் மனம். – நான் இந்த வழக்கமான வாழ்க்கைப் பாதையில் ஓடுவதை நிறுத்திவிட்டால் அப்படி என்ன நடந்துவிடும்? என்னை வீணாகப்போனவன், எதற்கும் பயன்படாதவன் என்பார்கள். சொல்லிட்டு போங்கடானு இருந்திடலாம் ஆனா உண்மையிலேயே என்னால அப்படி இருக்க முடியுமா! என்னால மட்டுமல்ல கண்ணில் படுகின்ற எதனாலயும் அப்படி இருந்துவிட முடியாது. எல்லாமே எதாவது ஒரு விதத்தில் யாருக்காவது, எதற்காகவாவது பயன்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி பயன்படாம ஏதாவது ஒன்னு இருந்தா அது உண்மையில் இல்லை என்று அர்த்தம். மனதில் பயம் வந்ததும் சன்னல் வழி காற்றுகூட ஈரத்தன்மையை இழந்துவிட்டது.

ச்சே இதுமட்டும் நம்ம கிட்ட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! எப்படியாவது அத வாங்கிடனும் என்று வாழ்க்கையில கஷ்டப்பட்டு தேடித்தேடி அடைச்சதிலிருந்து, தெருவில் அலட்சியமா அலைந்துகொண்டிருக்கிற நாய் வரை ஒவ்வொன்றுக்கும் அது இருப்பதற்கான காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை அததற்கு அமைந்த பயன்பாட்டின் மூலம் அவை வெளிப்படுத்தியே தீரவேண்டியுள்ளது. அப்படி வெளிப்படுத்த அது தவறும்போது, அது இருப்பதற்கான அர்த்தமே இல்லாமல் போகிறது. இனிக்காத கரும்பு மாதிரி. இப்படி, காற்றில் அலைந்து திரியும் தூசிமுதல் காணயியலாத வகையில் கட்டமைக்கப்பட்ட கடவுள்வரை இங்கே அனைத்தும் காரணங்களினாலேயே காட்சியாகின்றபோது…. என் நிலையை என்னவென்று சொல்வது!

தான் எதற்காக இருக்கின்றோம் என்ற இருப்பை அடைகாத்துக்கொண்டதற்குப் பிறகுதான் அடுத்த நிலையை அடைவதற்கான வேட்கை மனதினுள் மெல்ல மெல்ல வேர்விட்டு படரும். ஆனால் இங்கே காட்சியாகின்ற அனைத்துமே காரணமிழந்து காணப்படுவதால், ஒவ்வொன்றும் தன் இருப்பிற்கான காரணத்தை தக்கவைத்துக்கொள்வதையே தலையாய லட்சியமாக கொண்டலைகின்றன. அர்த்தத்தை தொலைத்துவிட்டு நிற்கும் ஒருவனின் வாழ்வின் இலட்சியம் என்னவாக இருக்கும்! மீண்டும் தன்னை அர்த்தப்படுத்திக்கொள்வதை தவிர!

குழியை நோக்கி ஊர்ந்து வரும் எறும்புகளைப்போல, செயல் வடிவில் காரணங்களை சுமந்துகொண்டு என்னை நோக்கி ஊர்ந்தபடியே வந்துகொண்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் வரவேற்று அவற்றை வசப்படுத்தி என் இருப்பை ஞாயப்படுத்திக்கொள்ளும் எத்தனம் என்னுள் இருந்தது. ஆனால் ஒவ்வொரு காரியமும் அதை செய்து முடிக்க வேண்டிய காலவதி தேதியை கையோடு இழுத்துக்கொண்டுதான் என்னை நோக்கி வருகிறது. என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கும் செயல் ஒரு புறம் என்றால் அதற்கு எதிர் திசையில் பள்ளிக்கு போக மறுத்த பையனை இழுத்துக்கொண்டு செல்வது போல என்னைக் கேட்காமலேயே என்னை தரதரவென இழுத்துக்கொண்டு கருணையே இல்லாமல் காலம் ஓடுகிறது.

இதோ, உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து வந்துகொண்டே இருக்க. அது என்னை கடந்துபோவதற்குள் அதை செய்து முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனையோடு முன்னோக்கிச் சென்று வா வா என்று தயாராய்யிருக்கையில், முதுகுப்புறமிருந்து காலம் முன்னோக்கி போ போ என்று தள்ளிக்கொண்டிருக்கிறது. சுயமாக தயாராய் இருக்கும்போது வரும் தைரியம் வலுக்கட்டாயமாக முன்னோக்கி தள்ளப்படும்போது மட்டும் ஏனோ ஓடி ஒளிந்துகொள்கிறது. ரயிலில் இடம் பிடிக்க காத்திருக்கும் ஒரு பயணியைப்போன்றதொரு பதட்டம். ஒருவேலை செய்ய முடியாவிட்டால்! ச்சே சே அப்படியெல்லாம் முடியாமல் போகாது செய்திடலாம் என்று மனம் ஊசலாடிக்கொண்டிருக்கையில் செலுத்திய அம்பாய் காரியங்கள் என்னை குறிவைத்து வந்துகொண்டே இருக்க, அதை சந்திக்க நீ தயாராய் இருக்கிறாயா சமாளித்துவிடுவாயா என்றெல்லாம் கேட்காமல் அதை நோக்கி காலம் என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டே செல்ல… காரியங்கள் என்னை கடந்து செல்கையில் காலத்தால் நானும் முன்னோக்கி தள்ளப்பட்டு காரியங்களை கடந்து செல்லும்போது சிலதை செய்துமுடிக்க, பல காரியங்கள் என்மீது மோதி காயத்தை ஏற்படுத்திவிட்டு கடந்து செல்கிறது.

கடந்து சென்று கொண்டிருக்கும் காரியங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நின்றுவிட்டால் பரவாயில்லை ஆனால் அது முடிவற்று இலக்கில்லாமல் ஆனால் அதே வேகத்தோடு சென்று கொண்டே இருக்கிறது. அது செல்கிறதா இல்லை அதற்கு எதிர் திசையில் காலம் என்னை கட்டுப்பாடில்லாமல் கடத்திக்கொண்டு போவதால் அப்படி தோன்றுகிறாதா என தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கடந்து போன காரியத்திற்கும் எனக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்துபோன காரியங்களை விரட்டிச் சென்று வெட்டித்தள்ள எவ்வளவு நேரம் ஆகும்! முடியவில்லையே முடியவில்லயே என்று முனங்கிக்கொண்டிருப்பதைவீட விரட்டிச்சென்று அதன் கதையை முடிக்கலாமே! செய்யலாம்தான் ஆனால் பின்னோக்கி திரும்பிப்பார்த்தால் கூட சுற்றியிருப்பவர்கள் அவமானத்தை அள்ளிக்கொண்டுவந்து கொட்டுகிறார்கள். ”ஆமா காலம் போன கடைசியில…”.

கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்கள் ஒருபுறம், கட்டுப்பாடில்லாத காலம் ஒருபுறம் இரண்டும் ஒன்றோடு ஒன்றாக ஒவ்வொரு முறை மோதி முன்னேறிச்செல்கையிலும் ஒன்றை மற்றொன்றை வெல்லவுமில்லை, ஒன்று மற்றொன்றிடம் தோற்கவுமில்லை. இரண்டுக்குமிடையேயான மோதலில் சிக்கி சீரழிந்து அழிவிற்கான அடையாளங்களை பெற்றுக்கொள்வது நான்தான். ம் பரவாயில்லை வாழ்வில் இந்த காயங்கள் கூட இல்லாவிட்டால் எப்படி என்று மனதைக்கூட தேற்றிக்கொள்ள முடியவில்லை. காரணம் காலம் எனக்கு கொடுத்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை கடந்து செல்லும் காரியங்களை என்னால் வெல்ல முடியாமல் போனதால் அந்த காரியங்கள் வாய்விட்டு சிரித்தபடி எனக்கு ”வக்கத்தவன்” என்ற பட்டத்தை வாரி வழங்கி விட்டுத்தான் செல்கிறது.

அடிபட்ட காயம், வக்கத்தவன் என்ற பட்டம், சரி பரவாயில்லை எதுவாக இருந்தாலும் எனக்கு மட்டும்தானே தெரியும், நானாக போய் இதை என்னால் செய்ய முடியவில்லை என்று யாரிடம் சொல்லப்போகிறேன். மெல்ல மெல்ல மறக்க முயற்சிக்கலாம் என்று நினைத்தாலும், என்னால் செய்ய இயலாத காரியத்தை யார் யாரெல்லாம் செய்து முடித்தார்களோ அவர்களின் வாய் வழியாக விசமாக வெளிப்பட்டு ”உன்னால செய்ய முடியலைல, முடியலைல” என்று வார்த்தையால் குத்திக்குத்தி கொல்ல முயற்சிக்கிறது. கொஞ்சம் வீராப்பாக பேசிவிட்டால் உடனே ”உன்னால அதுவே முடியலையாமா” இத செய்யப்போறயாக்கும் என்ற கேலிச்சிரிப்பின் மூலம் கடந்து போன காரியங்கள் மீண்டும் முன் வந்து நிற்கிறது.

தானாக தோன்றும் கவலை, மற்றவர்கள் மூலமாக வரும் கவலைகள் என மாறி மாறி படுத்தியெடுக்க ச்சே இப்படி ஆயிடுச்சே என்று ஒரு இடத்தில் உட்கார்ந்து கவலைப்படவும் முடியவில்லை. ஒரு செயலிடம் தோற்றுக்கொண்டிருக்கும் போதே அடுத்த செயல் ஆயுதத்தை சுழற்றியபடி முன்னேறி வந்துகொண்டே இருக்கிறது. காலமும் கருணையே இல்லாமல் அடிபட்டவன் என்றுகூட பார்க்காமல் இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எனவே உட்கார்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த செயலிடமும் தோற்க வேண்டியிருக்கும். பிறகு மீண்டும் மனதில் வலி, அவமானம், வக்கத்தவன் என்ற பட்டம்… இருக்கின்ற சக்தியை திரட்டி மனதில் விழுந்த ஓட்டைகளை அடைத்துக்கொண்டு எழுந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படி கடந்து சென்ற காரியமானது இனி வரப்போகும் காரியங்களின் முடிவின் மீதும் ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்த நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்கிறது.

மோதித்தள்ளும் முனைப்போடு முன்னேறிவரும் ஒவ்வொரு செயலும் வடிவத்தில் ஒரு செயலாக உருவம் கொண்டிருக்கிறதே தவிர உண்மையில் அது ஒருவனைச் சார்ந்த அல்லது ஒருவனால் மட்டுமே முடியக்கூடிய செயல் அல்ல. ஒரு செயல் செய்து முடிக்கப்படக்கூடும் அல்லது கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டிய வாய்ப்பு ஒருவனோடு மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்னை சார்ந்தவர்கள் அனைவர் மீதும் அதன் விரல்கள் படர்ந்திருக்கிறது. மாபெரும் சிலந்திவலையின் ஒரு சிறிய நூல் மட்டும்தான் நான். இப்படி பல நபர்களைச் சார்ந்து உருவாகியுள்ள செயலை ஒருவனின் தனிப்பட்ட ”பொருப்பு” என்று யார் தீர்மானித்தார்கள் என்று தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் பங்கு பெரும் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்டதொரு ஒவ்வொரு சூழல் இருக்க, அவரவருக்கு அவர்களின் கவலை சூழ்ந்துநிற்க தனியொருவனைப் பற்றி, தனியொருவன் செய்து முடிக்க வேண்டிய செயலைப்பற்றி யார் கவலைப்படுவார்கள். கரிய மேகமாக சூழ்ந்து நிற்கும் கவலையை விலக்க முடியவில்லை. அந்த கவலையினால் அடுத்த செயல் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை. இப்படி ஒவ்வொரு செயலாக ஒவ்வொரு கவலையாக சேர்ந்து சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி சூழ்நிலையால் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான் என்ற நிலையாக மாறிவிட்டது. அவ்வப்போது குடித்திருக்க வேண்டிய ஒரு கோப்பை தண்ணீர்தான் தவிர்த்து தவிர்த்து இன்று மூச்சை முட்டும் அளவிற்கு முன்னேறி நிற்கிறது. அத்தனையும் இப்போது குடித்தாக வேண்டும்.

இந்த வக்கத்தவன் பட்டத்தை வழியனுப்ப ஒரு வாய்ப்புண்டு. தற்போது இந்த நிலையில் செய்துதீர வேண்டிய செயல் என்னவோ அதை வெற்றிகரமாக செய்து தீரவேண்டியதுதான். அதை செய்துவிட்டால் அத்தனை அழிவுகளும் அழிவைச்சந்திக்கும். ஆனால் தற்போது செய்ய வேண்டிய செயல் நான் கடந்து வந்த அத்தனை செயல்களின் முடிவின் வேர்களை பற்றியபடியேதான் என்மீது பாய்கிறது. நான் கடந்து வந்த அனைத்து செயல்களின் உறவாகவே புதிய செயல் உருவாகிறது.

போராடி போராடி வலுவிழந்து, மனம் சோர்ந்து, உடல் சோர்ந்து தன்னை தானே பார்த்துக்கொள்கையில் காய்ந்து சுறுங்கும் கிழங்காய் உடல் மாறி அழிவினுள் மெல்ல மெல்ல புதைந்துகொண்டிருப்பதை காண முடிகிறது. அழிவிற்கான அடையாளங்கள் விதைத்த விதையாய் தளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன. அவமானம் கருதி இங்கே ஓடி ஒளிந்துகொள்ள இடமேதுமில்லை காலை, மதியம், இரவு என காத்திருந்து காத்திருந்து கடந்து சென்று இரவை அடைந்தால் அதுவோ என்னை உட்கொண்டு உவப்பு கருதி காரி உமிழ்வதுபோல உமிழ்ந்துவிட்டு விரைவாக நம்மை விட்டு விலகி சென்றுவிடுகின்றது. கிடைக்கின்ற அந்த கையளவு இரவிலும் கவலையை கொண்டுவந்து கொட்டி கொட்டி தூக்கத்தை அழித்துவிடுகின்றன எனது சிந்தனைகள். இறுதியில் தானாக வாய்க்கும் இந்த தூக்கத்தையும் வாங்கிக்கொள்ளாத வக்கத்தவனாகிவிட்டேன்.

ஒரு படைப்பு படைக்கப்படும்போதே அது செல்ல வேண்டிய பாதை, அடைய வேண்டிய முகவரி என அனைத்தும் அதனிடம் கொடுத்து அனுப்புகின்றார்கள். ஆனால் நம்மை பொருத்தவரையில் நமக்கு கொடுத்த இயக்க முறையை மட்டும் பூர்த்தி செய்தால் போதாது கொடுக்கப்பட்ட இயக்க முறையை பூர்த்தி செய்தபடியே அந்த இயக்க முறையை தாண்டிச்செல்லவும் முயற்சி செய்கின்றோம். ஆனால் இயக்கத்திற்கு அடிப்படையான ஆக்க சக்தியை வண்டியில் நிரப்புவதைப்போல யாரும் நமக்கு நிரப்பிவிடுவதில்லை. அதையும் நாமே போராடி பெறவேண்டியுள்ளது. இயங்குவதற்கான போராட்டம், இயக்கத்தை தாண்டுவதற்கான போராட்டம் என போராடி போராடி நாமாக இயங்குவதில்லை, இயக்கத்திற்கு ஏற்ப இயக்கப்பட்டு இயக்கப்பட்டு முடிவில் முடிவை பெற்றுக்கொள்கிறோம்.

ப்பே….ங் என்ற ஒலி காதை கிழிக்கும் ஒலியை எழுப்பியபடி பேருந்து ஓரமாக ஒதுங்கி நின்றது. சட்டென இந்த நிமிசத்திற்கு வந்து திரும்பிப்பார்த்தேன் நெருக்கிக்கொண்டு நின்றிருந்த கூட்டம் எப்போதோ போய் விட்டது நான்தான் இறுக்கமாகவே இருந்திருக்கின்றேன். பக்கத்தில் இருந்தவர் கண்களை மூடியபடி சன்னலோரம் சாய்தபடி இருந்தார். அங்கிருந்து பேருந்து புறப்படும் போது ஓடி வந்து ஏறிய ஒருவர் உயிர் பயத்தோடு இறை தேடும் எலியைப்போல பரபரவென முகத்தை அங்குமிங்கும் ஆட்டி இருக்கை ஏதேனும் காலியாக இருக்கிறதா என்று தேடினார். அவரை பிடித்திழுத்து என் இருக்கையில் அமரவைத்துவிட்டு நான் எழுந்துகொண்டேன் கிடைத்த சந்தோசத்தை என்னால்தான் அனுபவிக்க முடியவில்லை அவராவது… மங்கிய பற்களை காட்டி சிரித்தார்.

வலித்தாலும், தோற்றாலும், முடிவில் அழிந்தாலும் ஒவ்வொரு முறையும் செயலை எதிர்ப்பதற்கான எத்தனைத்தை காட்டும்போதும் காலம் என்னை இழுத்துக்கொண்டு ஓடுவது போல தோன்றுவதில்லை, நானாக அந்த வாகணத்தை வழிமறித்து ஏறிக்கொள்வதைப்போல் இருக்கிறது. பெய்த மழையில் நனைவதுபோல் இல்லாமல் மழையை பெய்வித்து நனைவது போல் இருக்கிறது.

பா.பூபதி
saireader@gmail.com

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்ஏனோ உலகம் கசக்கவில்லை*
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *