முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)

This entry is part 31 of 37 in the series 2 செப்டம்பர் 2012

அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)

“எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா.
“கேள்வி புரியல லதா..”
“ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் பாக்கறது தான் ரொம்பப் பிடிக்கும். ஒரு தரிசு நிலத்தில கூட எங்களுக்கு ஏகப்பட்ட விஷயம் தென்படும். விஷுவல்ல எல்லாமே ஒரு குறிப்பிட்ட மனநிலையை அழுத்தமா வரவழைக்கிற முயற்சி தான் அடிப்படையானது. என்னோட சக்ஸஸுல லொகேஷன் செலக்ஷனுக்கு அதிக பங்கு உண்டு. அது போல எழுதற உங்க பேஷ்ஷன்ல உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?”

“சரி, முதல்ல என்னோட பொசிஷனைக் க்ளியரா சொல்றேன். எழுதறதுங்கிறது பேனா பேப்பர்ல உரசற அந்தக் கணத்தில மட்டும் நடக்கிற ஒண்ணு இல்ல. பல நாட்கள்..ஏன்.. பல வருஷங்கள் கூட உள்ளே ஒண்ணு உருக்கொள்ளாம ஆனா உயிர்த்துடிப்போட தச்சிக்கிட்டே இருக்கும். அது வெளிப்படும் நேரமும் வடிவமும் ஒரு பரிணாமம். இந்த அவஸ்தைக்குள்ளே இடைவெளி ஏதுமே கிடையாது லதா.. துண்டு போட்டு பரிணாமத்தோட இந்தப் பகுதிதான் எனக்குப் பிடிச்சதுன்னு எப்படிச் சொல்லுறது? ‘

“இங்கே வாங்க…” என்று பால்கனியை நோக்கி நடந்தாள்.

பால்கனியில் கடல் காற்றில் அவள் தலைமுடி பறந்து பறந்து அவள் ஒதுக்கிவிட முயன்றும் இன்னும் பறந்தது. அறைக்குள் சென்று ஒரு ‘பேண்ட்’ ஐ எடுத்து வந்து முடியைச் சரி செய்து அணிந்தாள். அந்த லாவகம் வியப்பூட்டியது.

“ரூம்ல இருக்கிறத்துக்கும் பால்கனியில இருக்கிறத்துக்கும் வித்தியாசம் இருக்கில்லே ராஜேந்திரன்?”

“நான் சொல்ல வந்ததே வேற லதா..”

“கம் ஆன்.. ஒரே ஒரு வார்த்தை பதிலாச் சொல்லுங்க…டோன்ட் யூ ஃபீல் பெட்டர்? யெஸ் ஆர் நோ?”

“யெஸ்”

‘விஷுவலும் அதே மாதிரித்தான் ராஜேந்திரன். நீங்க ரீடரை உங்க உலகத்தை நோக்கி வார்த்தை மூலமாக் கூப்பிடறீங்க.. நாங்க ஒரு நிமிஷத்தில அந்த உலகத்துக்கே கூட்டிக்கிட்டுப் போயிடறோம்..”

“ஓகே..லதா.. ஒருத்தர் எதையோ யோசிக்கிறாரு.. அதை எப்படிக் காட்டுவீங்க?”

“பழைய ஞாபகம்னா ப்ளாஷ் பேக்.. கற்பனைன்னா ஒரு ஸீன்ல கற்பனை மறு ஸீன் அது கற்பனைன்னு காட்டற மாதிரி பழைய ஸீன் ரிப்பீட்..”

“மனதுக்குள் விவாதிக்கிறாரு… ஆன்மீகமா.. ஆழமா.. நிறைய யோசிக்கிறாரு.. அப்படின்னா?”

“ஆஃப் கோர்ஸ்.. வித் வாய்ஸ் ஓவர்.. வேற வழியில்ல…”

“சரி.. ஒரு கவிதை இருக்கு.. அதை விஷுவலா எப்படிக் காட்டுவீங்க?”

“வாட் ஈஸ் திஸ் ராஜேந்திரன்.. கவிதையில கதை இருக்கா…?”

ஒரு கணம் மௌனமாகிப் பின் அவளை சற்றே நெருங்கி ” கவிதையில கதை, வரலாறு, வலி, கனவு, புனைவு, அசல், நகல், ஆன்மாவின் அறைகூவல் எல்லாமே இருக்கு லதா.” என்றான் அவள் கண்களை ஊடுருவி.

“ஃபைன். அதை ஒரு ஸ்கிர்ப்டா மாத்த முடியுமா? முடியாதில்ல? அப்புறம் எப்படி ராஜேந்திரன் நீங்க கவிதைக்குள்ளே கதை இருக்குன்னும் சொல்றீங்க?”

“நீங்க கவிதை வாசிக்கிறது உண்டா லதா?”

“ஒய் நாட்? பாரதியாரோட கவிதை வாசிச்சிருக்கேன். லைட் ம்யூஸிக், பில்ம்.. லிரிக்ஸ் கேட்டு மனசுக்குள்ளே ரசிப்பேன்”

“இன் ஷார்ட்.. லிரிக்ஸ் மாதிரி மியூசிகல் வால்யூ இருக்கிற கவிதைகளை வாசிப்பீங்க..”

“ஐ டோன்ட் கெட் யூ”

“கவிதை ரொம்ப தூரம் வந்திடிச்சு லதா… நீங்க லிரிக்ஸ் தவிர்த்த கவிதைகளை வாசியிங்க..”

மதிய உணவுக்குப் பின் “ஜஸ்ட் அ ஷார்ட் நாப்”. நீங்களும் கெஸ்ட் ரூம்ல ரிலாக்ஸ் பண்ணுங்க” என்று தன் அறைக்குச் சென்றாள் லதா. ராஜேந்திரன் பால்கனிக்குப் போனான்.அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். கடற்காற்று நன்றாகவே வீசிக் கொண்டிருந்தது. வெய்யில் சற்றே தணிந்திருந்தது. சில பறவைகள் தென்பட்டன. வாகன இரைச்சலில் அவற்றின் ஒலிகளை அவதானிக்க இயலவில்லை.

ஒரு மணி நேரத்தில் லதா எழுந்து விட்டாள். முகத்தைக் கழுவிய சோப்பு வாசனை அவள் பால்கனிக்கு வந்த போது தென்பட்டது. “தூங்கலியா ராஜேந்திரன்?” ‘இல்லை’ என்று தலையசைத்தான். “என்னதான் பண்ணிக்கிட்டிருந்தீங்க?”

ராஜேந்திரன் பதில் சொல்லவில்லை. அவனருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து அவன் கண்களைப் பார்த்துப் பேசினாள். “உங்க ஸ்டோரீஸ்ல லைஃப் இருக்கு. நிறைய கனவுகள் இருக்கு. ஆனா உங்க முகத்தில ஏன் இப்போ லைஃபே இல்லே ராஜேந்திரன்?” .சிலையாய் அமர்ந்திருந்தான் அவன்.

இருவரும் காபி அருந்துப் போது “இன்னிக்கி எல்லா அப்பாயின்ட்மென்ட்ஸையும் கேன்ஸல் பண்ணிட்டேன். ஆனா நைட் எட்டு மணிக்கி ஒரு ஃபெலிஸிடேஷன் இருக்கு. ஒய் டோன்ட் யூ ஜாயின் மீ?” தொடர்ந்து மௌனாமாயிருந்தான். பெசன்ட் நகர் அறுபடை வீடு கோயிலுக்குப் போகலாம் என்ற போது அவளுடன் படி இறங்கியவன் தன்னுடைய காரில் ஏறிக் கொண்டான்.

அறுபடை வீடு கோயிலுக்கு அருகே லதாவின் டிரைவர் காலை முன் ஜாக்கிரதையாக கோவிலுக்கு எதிரே நீளும் சாலையில் தள்ளி நிறுத்தினான். ராஜேந்திரன் கோயிலுக்கு அருகிலேயே இடம் தேடி நிறுத்தி இறங்கிய போது லதா ஒரு கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள்.

எனக்கு நானே அன்னியமானவன். என் நாக்கு பேசும் போது என் காதுகள் என் குரலைக் கேட்டு வியப்புறுகின்றன. என்னுள்ளான நான் புன்னகைப்பதை, வீறு கொள்வதை, அழுவதை அச்சப் படுவதை இன்னொருவன் போலக் காண்கிறேன். என் இருப்பு என் மூலக் கூற்றை வியக்கையில் என் ஆன்மா என் இதயத்தைக் கூண்டிலேற்றும். ஆனால் நான் அறியப் படாதவனாய் மௌனப் பெருந்தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.

கலீல் கிப்ரானை நீ வாசிக்க வேண்டும் லதா. இன்றேனும் இதையெல்லாம் பற்றி நான் உன்னிடம் பேசத் தொடங்க வேண்டும்.

“டைம் ஆயிடிச்சு வாங்க.” அவள் ஒவ்வொரு படை வீட்டு சன்னதியில் ஏறி இறங்கும் போதும் அவன் பின் தொடர்ந்தான். கடற்காற்றில் அணையாதபடி ஒரு கண்ணாடி வளையத்துக்குள் இருந்த தீபங்கள் ஆராதனை செய்யப் பட்டன.

பூக்கடையிலேயே லதா செருப்பை விட்டிருந்தாள். தனது காருக்கு அருகேயே விட்டிருந்த செருப்பை அணிந்து ராஜேந்திரன் அவளைத் தேடிய போது தனது காரை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.

முதலில் பேரைச் சொல்லி அழைக்கலாமா என்று எண்ணியவன் பிறர் கவனத்தைக் கவராது இருக்க அவள் பின்னே வேகமாக நடை போட்டான். அவளை நெருங்கி ‘ஒன் மினிட் லதா’ என்றான்.

“நீங்க உங்க காரில ஏறினப்பவே என் கூட வரப் போறதில்லன்னு தெரியும் ராஜேந்திரன்” நிற்காமல் நடந்தாள். காரை நெருங்கியும் விட்டாள்.

‘கொஞ்சம் பேசணும் லதா”

“கமான். இன்னிக்கி ஃபுல்லா மூட் அவுட் ஆகி உம்முனு இருந்துட்டு இப்ப என்னப்பா? அடுத்த டிரிப்ல பேசலாம்”

அவள் கார் கதவை இழுத்து மூட கார் கிளம்பியது. ‘குட் நைட்’ என்னும் குரல் தேய அவள் கையசைப்பு கணப் பொழுது தோன்றி மறைந்தது. தன்னையுமறியாமல் காரின் பின்னே ஓடி மூச்சு வாங்க நின்றான்.

அரையிருட்டில் “சாமி. பிச்சை..” என்னும் குரலுடன் ஒரு உருவம் அவனருகே நின்றது. மீசையும் தாடியுமாய் கையில் கம்புடன் ஒருவன். ராஜேந்திரன் அவனை கவனிக்காதது போல நடக்க முயன்ற போது அவன் வழிமறித்து ‘பிச்சை போடு ” என்றான்.

அடி வயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்க “என்னடா…மிரட்டிப் பிச்சை கேக்கறே?” என்றான் ராஜேந்திரன்.

“அஞ்சோ பத்தோ போட்டுட்டு மேலே போ” என்றான் அவன்.

“நீ யார்ரா என்னை மிரட்டறது?” ராஜேந்திரன் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு மேலே நடந்தான்.

நிலை குலைந்து விழுந்த அவன் “த்தா.. பிச்சை கேட்டா கையையா ஓங்குற” என்ற படி கம்பால் ஓங்கி ராஜேந்திரன் தோளில் அடித்தான். பின் பக்கத்திலிருந்து எதிர்பாராத தாக்குதலில் சுள்ளென்ற வலியுடன் திரும்பிய ராஜேந்திரனை அவன் மாறி மாறி அடித்தான். வலியில் அலறிய ராஜேந்திரனின் கூக்குரல் கேட்டு கும்பல் கூடியது. ஓரிருவர் ராஜேந்திரனைத் தூக்கினர். வலியில் அவன் கண்களில் நீர் துளிர்த்தது. “படிச்ச ஆளு… அவரை ஏன்பா அடிக்கிற?”

“நாயி.. பிச்சை கேட்டா கையை ஓங்குறதா?”

“அதுக்காக இந்த அடி அடிக்கிறதா?”

“பிச்சை எடுக்குற நாயீ”.. ராஜேந்திரன் உடைந்த குரலில் கத்தினான்.

“த்தா.. பேசினே இனிமே பொளந்துடுவேன். நானாடா நாயி.. நீ பொம்பளப் பொறுக்கி நாயிடா.. அவ ….தைக் காட்டிக்கிட்டுப் போனப்ப அவ காருக்குப் பின்னே ஓடுனியே.. பொறம்போக்கு..அவ ….யக் காட்டமாட்டேன்னுட்டான்னு கார் பின்னே ஓடுனியே ..”

“யேய்…” என்று சுற்றி இருந்தவர்களைத் தாண்டி ராஜேந்திரன் முன்னேற ஓரிருவர் அவனைப் பின்னுக்கிழுத்தனர்.

“..த்தா.. பாக்கறேன் இவுன ஒரு கை.. நவுருங்கடா.. என்று அவன் கம்பை மிண்டும் ஓங்க அனைவரும் நகர்ந்து கொண்டனர். நொடியில் அவன் கம்பு ராஜேந்திரன் தலையில் இறங்க அவன் நிலை குலைந்தான். கை வலிக்கும் வரை அவனைக் கம்பால் அடித்து விட்டு பிச்சைக்காரன் இருளில் கடற்கரையில் ஓடி மறைந்தான்.

தலையில் ரத்தம் வழிய ராஜேந்திரன் மூர்ச்சையானான். கும்பல் மறுபடி ஒன்று சேர ஒருவர் 108க்கு போன் செய்தார்.
**__
**__**
**
பூக்கள் ஓர் நாள் இதழ்கள்
சிறகுகள் என்று விரித்தன

வானமெங்கும் வண்ணமயமானது
பிரம்மாண்டமான நவீன ஓவியமாய்

பிணந்தின்னிக் கழுகுகள் வல்லூறுகள்
திசையறியாது தரை இறங்கின

சில நொடிகளில் கிரகணம் போல்
சூரியன் ஒளிந்து கொண்டது

பறவைகள் அச்சத்தில்
சலசலத்து மரங்கள் கூடுகள்
பொந்துகளில் ஒடுங்கின

மொட்டுகள் மட்டுமிருந்த
செடி கொடிகளில்
வண்டுகள் மோதி மயங்கி
விழுந்தன

தெருவில் ஆர்ப்பரித்த
பிள்ளைகள் மனமின்றி
வீடு திரும்பினர்

சில நிமிடங்களில்
மெல்ல கதிரவன்
ஒளி தென்பட்ட போது

தரையெங்கும் கருகிய
மலர்கள் உதிர்ந்து கிடந்தன
மேலும் மேலும் குப்பையாய்

அன்று தான் பூக்கள்
பறத்தல் அன்னியமென்று
தெளிந்தன

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *