இராம.வயிரவன்
rvairamr@gmail.com
ஐபோனில் இரண்டு விரல்களால் ஒரு படத்தைப் பெரிதாக்கி விடுவதைப் போல எதையும் பெரிதாக்கி விடுகிறான் மனிதன். ஆம் மனிதன் எதையுமே மிகைப்படுத்தி விடுகிறான். யதார்த்தம்தான் இயல்பானது; அதுதான் உண்மை நிலை; அதற்கு எப்போதுமே சக்தி அதிகம். ஒருவரை விரும்பினால் ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுவதும், வெறுத்தால் அடியோடு வெறுத்து ஒதுக்குவதும் மிகைப்படுத்தல்களே. அவை உண்மையிலிருந்து இடைவெளி விட்டு வெகுதூரம் போய்விடுகின்றன.
வெகுதூரம் போய்விடாமல் திருக்குறள் இப்போது நம்முடனேயே இருக்கிறது. அதற்கு ஐபோனுக்கும், அதில் திருக்குறள் செயலியை அறிமுகப்படுத்தியவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஐபோனில் ஒரு திருக்குறளைப் பெரிதாக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் குறள் இங்கே கூறப் பொருத்தமாயிருக்கிறது.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய்வாரின் தலை.
பொருள்: ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.
மனம் ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றி ஏற்கனவே கூடவோ, குறையவோ நினைத்து ஒர் இடைவெளியை உண்டாக்கி வைத்திருக்கிறது. அது போதாதென்று மனிதன் வேறு மிகைப்படுத்திக் கூடுதல் இடைவெளியை உருவாக்கி விடுகிறான்.
அவன் உருவாக்கும் இடைவெளி பாதிப்பை உண்டாக்குகிறது. மிகைப்படுத்தப்பட்டவன் புகழுரையில் மயங்கி தன்னைப்பற்றி பெரிதாக நினைத்துப் புகழ் போதையில் மிதக்க ஆரம்பித்து விடுகிறான். இதனைப் பல நேரங்களில் தமிழ்நாட்டு மேடைகளில் பார்க்கலாம். அது ஒரு பாராட்டுக்கூட்டமாக இருக்கலாம். அல்லது அது ஒரு திரைப்பட விழாவாக இருக்கலாம். அல்லது அது ஒரு தமிழ் நிகழ்ச்சியாக இருக்கலாம். வரிசையாகப் பேச வருகிறவர்கள் விழா நாயகனைப் பாராட்டுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விடுவார்கள். இந்திரன் என்பார் ஒருவர்; சந்திரன் என்பார் இன்னொருவர். அங்கே ஒரு போட்டியே நடக்கும். யார் அதிகமாய்ப் பாராட்டிக் கைதட்டு வாங்குகிறார் என்று.
சிங்கப்பூரிலே ஒரு பாராட்டுவிழா நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அது அமைச்சருக்கான ஒரு சிறு பாராட்டுவிழா. நிகழ்ச்சி நெறியாளர் தமிழ்நாட்டுப் பாரம்பரியத்திலே வந்தவர்; என் நண்பர். ‘அவரைப் பற்றி ரொம்பவும் சொல்லமுடியாது. அவருக்குப் பிடிக்காது’ என்று சொல்லிவிட்டு மேடையேறினார் நண்பர். அவரையும் மீறி ஒருசில புகழுரைகள் வந்து விழுந்தன அவர் பேச்சில். அப்போது அமைச்சர் நெளிவதைக் கவனித்தேன் நான். அடுத்துப் பேசவந்தவர் அமைச்சரைப் பற்றி உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சிங்கப்பூர்ப் பாரம்பரியத்தில் வந்தவர். அட இதுகூட நன்றாய் இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு. இயல்பாக உள்ளதை உள்ளபடி பேசுவதில் கூடச் சுவை இருக்கிறது.
பாராட்டும் போது புகழுரையில் துள்ளிக்குதிக்கிற மனம் உண்மை உரைக்கும் மயங்குகிறது. முகஸ்துதிக்கு மயங்காதார் யாரும் இல்லை என்பார்கள். எவ்வளவு பாராட்டினாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். பாராட்டுக்காகவே ஏங்குபவர்களும் இருக்கிறார்கள்.
பாராட்டுக்களில் பல வகை உண்டு. ஊக்கப்படுத்துவதற்காகப் பாராட்டுவது ஒருவகை. பிள்ளைகளை அவர்களின் திறனுக்காகப் பாராட்டுவது அவர்களை மேலும் வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்தும். காரியம் சாதிப்பதற்காக முகஸ்துதி பாடுவது இன்னொரு வகை. சம்பிரதாயத்திற்காகப் பாராட்டுவது மற்றொரு வகை. மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகப் பாராட்டுவதும் இருக்கிறது.
எல்லா வகைப் பாராட்டுக்களும் மனத்தைப் பாதிக்கின்றன. பாராட்டைப் பொருத்து மனம் மகிழவோ, வருந்தவோ செய்வதோடு நின்று விடுவதில்லை. ‘தான் எப்படிப்பட்டவன்’ என்பதை உருவகப்படுத்திக்கொள்கிறது. அது உருவகப்படுத்தி வைத்திருக்கிற ஒன்றுக்கும், உண்மைக்கும் இருப்பதுதான் இடைவெளி. ‘தான் யார்?’, ‘தன் பலம் என்ன?’, ‘தன் பலவீனம் என்ன?’ என்று அறிந்து வைத்திருப்பவர்கள் பாராட்டுக்கள் ஏற்படுத்தும் சலனத்துக்கு ஆளாக மாட்டார்கள்.
அவரைப்பற்றி அவரே குறைத்தோ கூடவோ மதிப்பிட்டு வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒருவரது வளர்ச்சிக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. ஊக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. ஊக்கம் சோர்வை நீக்குகிறது. ‘உன்னால் முடியும் தம்பி’ என்று யாராவது தட்டிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. எதிரே உட்கார்ந்திருக்கிறவர்கள் கை தட்டினால்தான் மேடையில் பேசிக்கொண்டிருப்பவருக்குப் பேச்சே வருகிறது. இல்லாவிட்டால் அவருக்கே ‘தான் சரியாய்ப் பேசவில்லையோ?’ என்கிற சந்தேகம் வந்து விடுகிறது. அது அவர் தன்னம்பிக்கையை அசைத்து விடுகிறது. அவர் மேடையில் உளறிக்கொட்ட ஆரம்பித்து விடுகிறார்.
எல்லாவற்றுக்கும் காரணம் கூடவே வந்துகொண்டிருக்கிற மனம். அது செய்கிற வித்தைகள்தான் எல்லாமே! அது விசா இல்லாமலேயே வெளிநாடு போகிறது; கள்ளத்தனம் செய்கிறது; கற்பனை செய்கிறது; அசிங்கத்தை நினைத்துப்பார்க்கிறது; அழகையும் நினைக்கிறது; அந்தரங்கத்தை ஆராய்கிறது; புகழுரைகளை ஏற்கிறது; அல்லது மறுக்கிறது; எல்லாரைப்பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் அதற்கு ஒரு கருத்து இருக்கிறது. அந்தக் கருத்து எதன் அடிப்படையில் என்பதுதான் முக்கியமாகிறது. அவரவர் அனுபவத்தைப் பொருத்து அவரவர் நம்பிக்கையைப் பொருத்து அந்தக் கருத்து அமைந்து கொண்டு விடுகிறது. அந்தக்கருத்து உண்மைக்குப் பக்கத்தில் இருக்கிறதா? அல்லது தூரத்தில் இருக்கிறதா? அல்லது வெகுதூரத்தில் இருக்கிறதா என்பதைப் பொருத்து இடைவெளி அமைகிறது. அந்த இடைவெளி ஒவ்வொருவருக்கும் அவரவர் மனத்தைப் பொருத்து வேறு வேறாக இருக்கிறது.
மனம் பக்குவப்பட அனுபவங்கள் வேண்டியிருக்கிறது. பக்குவப்பட்ட மனம் உண்மையை நோக்கி நகர்கிறது. பாசாங்கு, ஆரவாரங்களிலிருந்து விலகிச்செல்கிறது. எத்தனை புகழ்ந்தாலும், அது நானில்லை என்று அடக்கமாய் யோசிக்கிறது. அதனைச் செய்ய மனதிற்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது.
எனக்கு இப்போது இன்னொன்று தோன்றுகிறது. அது மனமே இல்லாத நிலை இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான். மனம் இல்லாவிட்டால் கற்பனை இருக்காது; மனம் இல்லாவிட்டால் ஆராய்ச்சியும் இருக்காது; மனம் இல்லாவிட்டால் கருத்தும் இருக்காது; அதனால் மனம் இல்லாவிட்டால் இடைவெளியும் இருக்காது. இதனைச் சொல்ல எனக்கு ஒரு ஜென் கதை தேவைப்படுகிறது.
ஒரு ஜென் துறவியைப் பார்த்து ‘ஆஹா! எவ்வளவு பெரிய ஞானி நீங்கள்! என்று ஒருவர் புகழ்ந்தாராம். அதற்கு அந்தத் துறவி ‘ஞானமா? எனக்கா? ஒன்றுமே தெரியாதே எனக்கு!’ என்று பதிலுரைத்தாராம். ஏன் அப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், ‘ஞானம் நல்லதுதான், ஆனால் அஞ்ஞானம் அதைவிட இயல்பானது!’ என்று சொன்னாராம். சில இடங்களில் மனமற்றுப்போகும் நிலைதான் உண்மை ஒளிரும் நிலை என்கிறது அந்த ஜென் கதை.
அதனால் அதிகம் யோசிக்காமல் மனமற்றுப் போகலாம் வாருங்கள்!
- புதிய அனுபவம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி
- காலமும் தூரமும்
- நல்லதோர் வீணை..!
- இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்
- நேர்மையின்குரல்
- குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு
- சிவாஜி ஒரு சகாப்தம்
- 6 ஆகஸ்ட் 2012
- கருப்பு விலைமகளொருத்தி
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா
- 2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்
- ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)
- காலம்….!
- கதையே கவிதையாய்! (3)
- அது ஒரு வரம்
- உயர்வென்ன கண்டீர்?
- காலத்தின் விதி
- சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41
- உரஷிமா தாரோ (ஜப்பான்)
- ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!
- இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10
- என்ன செய்வார்….இனி..!
- இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்
- முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “
- தொலைந்த உறவுகள் – சிறுகதை
- வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு