மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10

This entry is part 26 of 37 in the series 2 செப்டம்பர் 2012

மேடம் மோனிகாவின் வேடம் 
(Mrs. Warren’s Profession) 

நான்கு அங்க நாடகம் 


(இரண்டாம் அங்கம்) 
அங்கம் -2 பாகம் -10
 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

 

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

 

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -10

 


இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் :  வேனிற் கால இரவு

அரங்க அமைப்பு:  மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள்.  கூட ஃபிராங்க் வருகிறான்.  வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான். அவர்கள் பேசிக் கொண்டுள்ள போது, பாதிரியார், வாலஸ் நுழைகிறார்.  அதன் பின் உலவச் சென்ற விவியனும், வில்லியமும் வருகிறார்.  எல்லோரும் சப்பருக்கு அழைக்கப் படுகிறார்.  உண்ட பிறகு ஜார்ஜ் வாலஸ் தான் விவியனை மணந்து கொள்ள விரும்புவதாக மேடம் மோனிகா விடம் தனியாகக் கூறுகிறார்.  விவியன் தன் தந்தை யார் என்று கேட்கிறாள்.  மோனிகா பதில் சொல்ல மறுக்கிறாள்.  ஒரு பெண் தன் சுயத் தேவைகளுக்கு செல்வந்த ஆடவன் ஒருவனை வசப்படுத்தி அவனுடன் வாழ வேண்டும் என்று தாய் அறிவுரை கூறுகிறாள். தாய் தன் வறுமைக் கதையைச் சொல்லி தான் புகுந்த தொழிலுக்கு நியாயம் தேடுகிறாள்.

 


(முன்வாரத் தொடர்ச்சி)

மேடம் மோனிகா:  இந்தத் தொழிலைப் பற்றி ஒரு பெண் வெட்கப்படுவது நல்ல நெறிதான்.  பெண்ணிட மிருந்து அதைச் சமூகம் எதிர்பார்க்கிறது.  பெண்கள் உணர்வதில்லை என்று பெண்கள் பெரிதளவு பாசாங்கு செய்ய வேண்டியுள்ளது.  சகோதரி எலிஸபெத் பூரணப் பெண்ணாகத் தெரிபவள்.  உண்மையாகவே அவளுக்கு அந்தப் பண்பு, உணர்வு இருந்தது.  ஆனால் நான் அப்படி அல்ல. என் வாயில் அவச் சொற்கள், கெட்ட வார்த்தைகள் எப்போதும் வரும்.  நீயும் அவளைப் போலொரு நாகரீக நங்கையே.  நேர்மைத் திறமும், துணிச்சல் மனதும் உள்ளவள்.  நான் செய்யும் எதற்கும் நான் வெட்கப் படுபவது இல்லை. நான் பாசாங்கு செய்பவள் இல்லை.  செய்வதைச் சொல்லியே செய்கிறேன்.  ஒளிமறைவு இல்லை என்னிடம்.  நான் செய்வதில் நான் பெருமைப் படுகிறேன்.  நல்ல மேற்பார்வையாளியாய் நான் பெயர் எடுத்தவள்.  என்னை நம்பி எனக்குப் பணி புரிந்த பல பெண்கள் பணக் கவலை, மனக்கவலை இன்றி என்னுடன் வசித்தார். எம்மைப் பற்றி எந்தப் புகாரும் இல்லை சமூகத்தில்.  என் பெண்களை நான் கவனமாய்ப் பாதுகாத்தேன். அவரில் சிலர் நல்ல சாதனை புரிந்தார்.  ஒருத்தி அம்பாஸிடரை ஒருவரை மணந்து பிரமிக்கச் வைத்தாள் எங்கள் தொழில் பெண்களை எல்லாம் !

மிஸ். விவியன்:  நல்ல வெகுமதி அம்மா அந்த அதிர்ஷ்டப் பெண்ணுக்கு ! ஓ அம்பாஸிடர் !  கணவனோடு உலகம் சுற்றி வரலாம்.  ஆனந்தகரமான வாழ்வு;  நிரந்தரச் செல்வம் ! நிம்மதி வாழ்க்கை !

மேடன் மோனிகா:  (கொட்டாவி விட்டு)  தூக்கம் வருது விவியன் !  இப்போது நான் அது பற்றிப் பேசுவதில்லை.  நீ பெரிய பெண்ணாய் வளர்ந்து விட்டாய். என்ன நினைப்பார் நம்மிருவரைப் பற்றி ?  எனக்கு வயதாகி விட்டது ! ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன்.  என் ராஜியம் இப்போது இயங்க வில்லை.  நீ வந்து விட்டாய் முன்னணியில் ! நான் போகிறேன்.  தூக்கம் வருது எனக்கு !

மிஸ். விவியன்:  எனக்கினித் தூக்கம் வராது அன்னையே !  புதிய தென்றல் வீட்டுக்குள் நுழையட்டும். (வெளிக் கதவைத் திறக்கிறாள். வெண்ணிலவு மினுக்கிறது.)  எத்தனை எழிலாக இருக்குது தங்க நிலா !  வானமெங்கும் வைரக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன.  வந்து பார்.

மேடம் மோனிகா:  கவனம் வை விவியன்.  மூக்கைக் குளிரில் நீட்டாதே. குளிர் ஜுரம் தாக்கி விடும்.  நான் போகிறன்.

மிஸ். விவியன்:  அறிவில்லாமல் பேசாதே அம்மா !

மேடம் மோனிகா:  ஆமாம், நான் சொல்வ தெல்லாம் உனக்கு அறிவில்லாத ஒன்றாய்த் தெரியுது இல்லையா ?

மிஸ்.விவியன்:  அப்படி இல்லை அம்மா !  உண்மையாக இன்று நீ என்னிடம் உள்ளதில் உன்னதத்தை வெளியே கொண்டு வந்தாய், நான் உனக்கு எதிராய்க் கிளம்பினாலும்.  நண்பர்களாய் இருப்போம் நாம் இனிமேல்.

மேடம் மோனிகா:  ஆம் என்னை உன் மூத்த சகோதரியாய் நினைத்துக் கொள். நான் உனக்குத் தோழியாய் இருக்க முடியாது.  வய்து வேற்றுமை அதிகம்.

விவியன்:  சரி அம்மா !  நீ ஓய்வெடுக்கப் போ. குட் நைட். நான் சிறிது நேரம் கழித்துப் படுக்கச் செல்வேன்.  நடந்தவற்றை நான் இன்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேடம் மோனிகா:  குட் நைட் விவியன்.

(மேடம் மோனிகா படுக்கை அறைக்கும், விவியன் வீட்டு முற்றத்துக்கும் போகிறார்கள்.)

(இரண்டாம் அங்கம் முடிவு)

அடுத்தது மூன்றாம் அங்கம்

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 29, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஇவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்என்ன செய்வார்….இனி..!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *