மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42

This entry is part 6 of 28 in the series 9 செப்டம்பர் 2012

 

 

நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

ஹரிணி

 

53.       மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும்,  திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை பார்ப்பது, அவரது செஞ்சி நாவல் பற்றிய எழும் ஐயங்களை கேட்டு விளக்கம் பெறுவது, நாவல் பதிப்புச் சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்துவிட்டு இரவு புதுச்சேரி திரும்புவதென்பது எனது திட்டங்கள். என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட சாமிநாதனும், அவன் மாயமாய் மறைந்ததும் எதிர்பாராதது. கையில் முகவரி தெளிவாக இருந்தும், ஊர் பேர் தெரியாத ஒருவனைப் பின்தொடருகின்றோமென்று செஞ்சியின் புறநகர்ப்பகுதிகளில் அலைந்தது தற்செயல் நிகழ்வு. வேணுவின் வீட்டை அடைந்ததும், அவர்கள் வீட்டு மோருக்கு ஆசைபட்டதும், மயக்கமடைந்ததும்,  தற்செயலில்லாமல் வேறென்ன? எரிக் நோவாவிற்கு தற்செயல் நிகழ்வில் நம்பிக்கை இல்லை. பிறப்பும், கல்வியும், தேடும் வேலையும், காதலும் கல்யாணமும் அவனுக்கு எதிர்பாராதவை அல்ல. நடப்பதனைத்தும் தற்செயல் நிகழ்வெனில் மனித முயற்சியை எங்கே நிறுத்தபோகிறாய் என்கிறான். இந்த உலகத்தில் நீயும் நானும் மட்டுமல்ல நம்மைச்சுற்றி இன்னும் நான்கு பேர் இருக்கிறார்கள். அவரவரவர்க்கு குடும்பம், பொருளாதாரம், காதல் கத்தரிக்காய் என்று தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகளை பெறுவதில் நாம் ஒருவரையொருவர் முந்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆறுபேரும் அவரவர் வழியில் அவரவர் திறனில் நம்பிக்கை வைத்து திட்டமிடுகிறோம். சாமர்த்தியசாலி அத்தேவையை எட்டுகிறான். இதில் தற்செயலாவது ஒன்றாவது. இந்தவிவாதம் இரண்டு மணி நேர கார் பயணத்தின் போதும், புதுச்சேரி கடற்கரை உணவுவிடுதியொன்றில் சிலு சிலுவென்று காற்றையும், நிலவொளியுடன் கண்ணாமூச்சி ஆடிய கடல்அலைகளையும் இரசித்தபடி நான்கு முழுபாட்டில் பீரை இருவருமாக குடித்து முடிக்கும் வரை தொடர்ந்தது.  அதிகமாக பீர் குடித்திருந்ததால் அவனிடம், “உன் அறையில் நீ தனியேதானே இருக்கிறாய், துணைக்கு வரட்டுமா? எனக் கேட்டிருக்கிறேன். அவன் தனது வாடகை காரில் எனது குடியிருப்புவரை அழைத்துவந்து விட்டிருக்கிறான்.

 

காலையில் எழுந்திருந்தபோது மணி பன்னிரண்டு. சமயலறையில் மசாலா மணம் தூக்கி யடித்தது. எட்டிப்பார்த்தேன்.

 

– கௌசல்யா அம்மா பிரியாணியா?

 

– ஆமாம்மா?

 

– அதை கண்ல காட்டாதீங்கன்னு சொன்னேனே.

 

– எனக்கு ரொம்ப நல்லா வருமென்று சொன்னேன். நீங்கதான் இன்றைக்கு நாளைக்கென தள்ளிபோட்டுகிட்டுவந்தீங்க

 

– உங்களுக்கு நல்லா வருமென்பதற்காக நான் சாப்பிடமுடியுமா? தமிழர்களின் தேசிய உணவென்று நினைக்கிறேன். பிரான்சுலே இருக்கிறபோது எந்த தமிழராவது வீட்டிற்கு சாப்பிட அழைத்தால் பிரியாணி பயம் வந்திடும். இந்தியாவிலும் வந்த ஒரு மாதத்தில் பார்த்துட்டேன். எங்கே திரும்பினாலும் பிரியாணிவாடை. சாக்கடை மணமே தேவலாம்போல இருக்கிறது

 

– செஞ்சுட்டேனே என்ன செய்ய?

 

– வீட்டுக்கு கொண்டுபோங்க, பிரச்சினை இல்லை. எனக்கு முடிஞ்சா கொஞ்சம் தயிர் சாதம் ரெடி பண்ணுங்க, போதும். சாத்தியமில்லையா எங்கோயாவது வெளியிலே பார்த்துக்கிறேன்.

 

– எம்மேலே கோபம் எதுவுமில்லையே.

 

– சீச்சி அப்படியெல்லாமில்லை.

 

– அந்தோனிண்ணு ஒருத்தர் வந்திருக்கார். வீட்டுக்கார அம்மாவுக்கு தெரிஞ்சவர்போல.

 

அந்தோனி.. அந்தோனியென்று பெயரைச் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். அடட அன்றைக்கு பவானி அம்மா வீட்டைப் பார்க்கச் சென்றபோது, அப்பாவின் சகோதரர் என்று ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டாரே அவராக இருக்குமோவென்ற சந்தேகம்.

 

– அவரை நான் எதுக்கு பார்க்கணும்.

 

– எனக்கென்னமா தெரியும். கீழே வீட்டுக்கார அம்மாவோட பேசிக்கொண்டிருக்கிறார். அந்தம்மா ரெண்டுதரம் மேலே வந்துட்டுது. நான் நீங்க இன்னும் எழுதிருக்கலைண்ணு சொல்லி அனுப்பினேன்.

 

ஒரு மணிநேரம் கழித்து கீழே இறங்கினேன். கூடத்தில் போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவரைத் தெரியாதென்பதுபோல கடந்து வெளியேறுவதற்கு நடைவாசலை நோக்கி நடந்திருப்பேன்.

 

– வெளியே கிளம்பிட்டாங்க போலிருக்கு என்ற குரல்கேட்டது. திரும்பினேன். அதற்குள் வீட்டுகார அம்மாள் சமயறையிலிருந்து ஈமுகோழிபோல எட்டிப்பார்த்தாள்.

 

– ஐந்து நிமிஷம் இப்படி வந்துட்டுபோம்மா

 

– என்னைத் தெரியலையா? முந்தாநாள் வ.உ.சி. ரோட்டுலே ஒரு காலி மனைக்கு முன்னாலே சந்திச்சோமே.

 

கொஞ்சம் யோசிப்பதுபோல பாவனை செய்தேன். சோபாவில் உட்காரவில்லை. உட்கார்ந்தால் அத்தனை சுலபமாக பேச்சைத் துண்டித்துக்கொண்டு வெளியேற முடியாது.

 

– ம்.. ஞாபகம் இருக்கு. ஏன் என்ன விஷயம்? ஏதேனும் அவசரமா? உங்க அண்ணன் அல்லது அண்ணன் மகள் முகவரி கேட்ட ஞாபகம்.

 

– மறக்கலையே.

 

– இல்லை மறக்கலை. எப்படியோ கண்டுபிடிச்சு இதுவரைக்கும் வந்துட்டீங்களே.

 

– புதுச்சேரியிலே நீங்க நினைச்சாலும் ஒளிய முடியாது. அந்த மனையை விற்பதற்கான முயற்சிகள் நடக்குதென்று கேள்விபட்டேன். என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு போறேன். பிரான்சுலே இருக்கும் உங்க சினேகிதி தொலைபேசி எண்ணையோ, என்னுடைய சகோதர் எண்ணையோ கொடுத்தால் நல்லது. தாமதம் கூடாது. இல்லை நீங்களேகூட அவங்கள தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லுங்க. ரொம்ப அவசரம். வேறொருபெண்ணை, எங்க அண்ணன் மகளா நடிக்க வச்சு பத்திரமெழுத முயற்சிகள் நடக்குதுண்ணு கேள்விபட்டேன். அதைச்சொல்லத்தான் வந்தேன்.

 

– அப்படியா? இன்றைக்குக் கிடைப்பாங்க அவங்ககிட்டே பேசிட்டு சொல்றேன். தவிர அவங்களை கேட்காமல் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கொடுப்பது நாகரீகமில்லை. இப்ப நான் கொஞ்சம் அவசரமா வெளியிலே போகவேண்டியிருக்கிறது, எனக்கூறி விடைபெற்றேன். என் முதுகிற்குப்பின்னால் வீட்டுக்கார அம்மாளும் அந்தோனியும் விழிபிதுங்கி நின்றார்கள்.

 

மாலை நான்குமணிக்குப் பாரதியார் பல்கலைகூடத்தைச் சேர்ந்த நண்பரிடம் நேருவிதியில் கவர்னர் மாளிகைக்குபின்புறமிருந்த உணவுவிடுதியொன்றிர்க்கு வருமாறு சொல்லியிருந்தேன். அதுவரை நேரத்தைப்போக்குவது எப்படியென்றிருந்தது. செஞ்சியில் கிழவர் நந்தகோபால் பிள்ளை விடுத்திருந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. ‘தனியே எங்கேயும் போகாதே.’ அந்த எச்சரிக்கை என்மீதுள்ள அக்கறையினால் வந்ததா? அல்லது என்னை அச்சுறுத்தும் முயற்சியா? உண்மையில் கமலக்கண்ணி தேவதை அவர் சொல்வதுபோல கலாவைப் பிடித்திருக்கிறாளா? கூடுதலாக ஒரு மணிநேரம் கிழவருடன் பேசியிருந்தால் ஒருவேளை அவர் சொல்வது அவ்வளவையும் உண்மையென்று நம்பியிருப்பேன். என்னை அப்படி நம்பவைப்பதால் அவர்களுக்கென்ன இலாபம்? பிறகு அவர்கள் வீட்டில் முதன் முறையாக பார்த்திருந்த தாயும் மகள் நிழற்படத்தை நேற்று காணாதது வேறு சந்தேகத்தை எழுப்பியது. விரும்பியே அகற்றியிருப்பார்களா? விரும்பியே அகற்றினார்களெனில் ஏன் ? பெண்குழந்தையின் முகம் பவானி அம்மாவை ஞாபகப்படுத்தியது. ஒருவேளை அது எனது கற்பனையாக இருக்கலாம். அப்படத்தைப்பற்றி கேட்டபொழுது பெரியவர் சடகோபன் ஐந்து அல்லது ஆறுவயதிருக்கும் அக்குழந்தையை பேர்த்தி கலா என்றார். நம்புவதற்கு கடினமாக இருந்தது. படம் மிகவும் பழுப்பாக இருந்தது. குறைந்தது நாற்பது ஐம்பது ஆண்டு புகைப்படமாக இருக்கவேண்டும். கருப்பு வெள்ளையிலிருந்தது ஒரு காரணமெனில், குழந்தையைத் தூக்கி வைத்திருந்த அந்த அம்மாள், கலா பெண்ணின் அம்மா அல்ல. தவிர குழந்தையின் கண்கள் ஆரோக்கியமாகவும் இருந்தன.

 

என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது எரிக் நோவாவிடமிருந்து கிடைத்திருந்த இரண்டு தகவல்கள்.  முதலாவது சாமிநாதனை இரண்டுமுறை செஞ்சியில் ஏற்கனவே சந்தித்திருந்தாக அவன் கூறியிருந்தான். இரண்டாவது தகவல் சாமிநாதன் எரிக் நோவாவிடம் விலைபேசிய புத்தகத்தின் பெயர். சடகோபன் பிள்ளை தமது நாவலில் செண்பகம் எழுதியதாக குறிப்பிடும்  ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’  கற்பனையென்று நினைத்தேன். கடைசியில் அது உண்மைபோலிருக்கிறது. சாமிநாதனிடம் அந்நூல் இருப்பது வேணு குடும்பத்திற்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாதெனில் அவருடைய நாவலில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பே இல்லை. எரிக் நோவாவிற்கு போன் செய்தேன். கவர்னர் மாளிகைக்குப் பின்புறம் ஓட்டல் சற்குரு என்றொரு ஓட்டல் இருக்கிறது,  மாலை ஐந்து மணிக்கு அங்கு வரமுடியுமா எனக்கேட்டேன். சம்மதம் தெரிவித்தான். கைக்கெடிகாரத்தைப் பார்த்தேன். சுளையாக மூன்று மணி நேரமிருந்தது. புதுச்சேரியில் மூன்று மணிநேரமென்பது மூன்றுமாதம்போல. எப்படி நேரத்தை கடத்துவதென்கிற கவலையில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நூலகத்தில் புத்தகங்களோ சிற்றிதழ்களோ வாசிக்கலாமென்று சென்றேன்.

 

 

54.       மாலை நான்கு ஐம்பதுக்கெல்லாம்  ரெஸ்டாரெண்ட்டுக்குள் நுழைந்து காலியாகவிருந்த மேசையைப்பார்த்து உட்கார்ந்தேன். அதிகம் மனிதர்களில்லை. பக்கத்து மேசையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை சமாதானம் செய்துகொண்டிருந்தார்கள். என்னைக் கவனித்த சர்வர், அருகில் வந்து மெனுகார்டை தள்ளிவைத்தார்.

 

– தம்பி பத்து நிமிடம் பொறுக்க முடியுமா? நண்பர்கள் இரண்டுபேரை வரச்சொல்லியிருக்கிறேன். ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். பிறகு ஆர்டர் கொடுக்கிறேனே, என்றேன் போய்விட்டார்.

 

ஐந்துக்கெல்லாம் எரிக் நோவா சொன்னதுபோல வந்தான். சேனல் 5 என்ற பிரெஞ்சு தொலைக்காட்சியின் காலை செய்தி பற்றி பேசினான். கிரீஸ் நெருக்கடி, பிரான்சு அதிபர் ஒலாந்து சமாளிப்பாரா எனபேசிக்கொண்டிருந்தோம். ஐந்து பதினைந்து ஆகியிருந்தது. ஓவியர் நண்பர் வரவில்லை.

 

– சாமிநாதனைப்போல இவரும் எங்காவது காணாமற்போயிருப்பாரா? எரிக் கேட்டான்.

 

– எனக்கெப்படி தெரியும்? ஒருவேளை நீ வருகிறாய் எனத்தெரிந்ததும் தொலைந்திருக்கலாம் என்றேன். எரிக் சிரித்தான்.

 

– இந்தியர் இல்லையா? அதன் தர்மத்தைக் காக்கும் பொறுப்பு அவருக்கிருக்கிருக்கிறது. அவர் அரியாங்குப்பத்திலிருந்து வரவேண்டும். விபத்தில்லாமலும் வரவேண்டும்,  சாலை மறியலென்று பத்துபேர் ரோட்டில் உட்காராமலும் இருக்கவேண்டும். பாரீஸிலிருந்து சென்னைவர உத்தரவாதமளிக்கலாம். இங்கே பக்கத்து தெருவிலுள்ள வீட்டிற்குக்கூட வந்து சேர்ந்தபிறகுதான் சொல்ல முடியும். சாமிநாதனைப் பற்றிச் சொல்.

 

– என்ன சொல்ல?

 

– ஏதாவது. அதாவது யார் அவர்? எப்படி உன்னை தொடர்புகொண்டார். அவரிடம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கிடைத்தது எப்படி ? அதன் முக்கியத்தும்? போன்ற தகவல்கள்.

 

 

– முதன் முறையாக செஞ்சிக்கோட்டையைப் பார்ப்பதற்காக சென்றபோது தொல்பொருள் ஆய்வுத் துறையின் அலுவலகத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. அங்குதான் சாமிநாதன் பணிபுரிகிறான். கோட்டையையும் கட்டடங்களையும் பராமரிக்கிற பொறுப்பில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவைகளைப்பற்றிய விவரம் ஏதேனும் அறிய வேண்டுமானால் சாமிநாதன் போன்ற ஆசாமிகள் உதவி தேவை. ராஜகிரிக்கோட்டைக்கு மேலெ சென்றபோது என்னுடன் வந்தான். எப்படியோ என்னுடைய தேவையை மோப்பம்பிடித்திருக்கவேண்டும். தன்னிடம் செஞ்சிக்கோட்டையோடு சம்பந்தப்பட்ட பதினேழாம் நூற்றாண்டு ஓலைச்சுவடி ஒன்றிருப்பதாவும், தேவையெனில் விலைக்குக் கிடைக்குமென்றான். எனக்கு அந்நூலைக்குறித்து ஆர்வமிருந்ததால் கொண்டுவரச்சொன்னேன். நான் தங்கிருக்கிற ஓட்டலில் சந்திப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

 

– அத்தனை முக்கியமானதா?

 

–  வில்லியம் பெண்டிங் சென்னை கவர்னராக இருந்த காலத்தில் ஆற்காடு கமிஷனராக இருந்த மக்லௌடு கேட்டுக்கொண்டதற்கிணங்க நாராயண கோன் என்பவர் கர்னாடக ராஜாக்கள் சவிஸ்தார சரிதத்தை எழுதினாரென்று உனக்குத் தெரியும். பிறகு எஸ். எம். எட்வர்ட்ஸ் என்பவர் எழுதிய செஞ்சி ஆட்சியாளர்கள் வரலாறு என்றும் ஒன்றிருக்கிறது. இரண்டிலும் செஞ்சி நாயக்கர்கள் பெயர்களும் அவர்கள் ஆட்சிசெய்த காலங்களும் தெளிவில்லாமல் இருக்கின்றன. இவைகளின் குழப்பங்களை தீர்த்துவைக்க  கல்வெட்டுகள், சமகலாத்திய  நூல்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக பிமெண்டா போன்ற சேசுசபை மதகுருமார்களின் நாட்குறிப்பு, தஞ்சை இரகுநாதநாயக்கர் மீதில் எழுதப்பட்ட இரகுநாத அபியுதயம், சாகித்ய இரத்னஹாரம் போன்ற நூல்கள். இவைகளில்லையெனில் கிருஷ்ணப்ப நாயக்கரை அடையாளப்படுத்த முடியாது. கிருஷ்ணப்ப நாயக்கரின் வாரலாறு எனச்சொல்லப்படுகிற கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி முக்கியம் வாய்ந்தது. எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுத்து வாங்கலாம்.

 

– ஓட்டலுக்கு வரும்போது புத்தகத்துடன் சாமிநாதன் வந்தானா?

 

– இல்லை. மறுமுறை சந்திக்கிறபோது கொண்டுவருகிறேன் என்று சொன்னான்.

 

– ஆனால் வரவில்லை. உன்னிடம் வேணுகோபால், அவன் தாத்தா சடகோபன் ஆகியோரைப்பற்றி சாமிநாதன் பேசினானா?

 

– அதுவுமில்லை.

 

– ஆச்சரியம். எனக்கென்னவோ அவர்களுக்கும் நூலைப்பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கவேண்டும்.

 

– எப்படி?

 

– பெரியவர் சடகோபனின் செஞ்சி சொல்லும் கதையில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வருகிறது. அது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.

 

– என் வழிக்கு வந்துவிட்டாய். தற்செயல் நிகழ்வில் உனக்கு நம்பிக்கை இல்லை.

 

– என்னை மடக்கிவிட்டாய். சாமிநாதன் மறைவிற்குப்பிறகு வேறுயாரேனும் அந்நூல் சம்பந்தமாக தொடர்பு கொண்டார்களா?

 

– இதுவரை இல்லை. ஆனால் அவனோடு பார்வையற்ற பெண்ணொருத்தி வந்தாள். அவளை விசாரித்தால் ஏதேனும் தகவற் கிடைக்கலாம்.

 

“கொஞ்சம் பொறு.” – என எரிக் நோவாவிடம் கூறிவிட்டு கைப்பையிலிருந்த டிஜிட்டல் கேமராவை இயக்கி நேற்று செஞ்சியிலெடுத்த கலாபெண்ணின் படங்களை திரையிற் காட்டினேன்.

 

– நீ சொல்கிற பெண் இவளா என்று பார்!

 

– இவள்தான். உனக்குத் தெரியுமா?

 

– வேணுகோபாலின் தங்கை, பெரியவர் சடகோபனின் பேத்தி, பெயர் கலா.

 

இப்புதிய தகவலினாற் கிடைத்த சந்தோஷத்தை முழுவதுமாய் அனுபவிப்பதற்குள் ஓவிய நண்பர் வந்தார்.

 

– என்னங்க இவ்வளவு லேட்.

 

ஓவியர் சிரித்தார். எனது கேள்வியே போதுமென்று நினைத்திருக்கவேண்டும். எரிக் நோவா பக்கத்தில் உட்கார்ந்தவர்.

 

– முதலில் காப்பிக்கு ஏற்பாடு செய்யுங்கள் பிறகு பேசுவோம் என்றார். சர்வரைக்கூப்பிட்டு மூன்று காப்பிவேண்டுமென்றேன்.

 

– பதிப்பாளர் கிடைத்தார்களா? புத்தக ஆசிரியரிடம் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறேன், நல்ல பதிலாகச் சொல்லுங்கள்.

 

– செஞ்சி சொல்லும் கதையை பதிப்பிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். நீங்கள் கொடுத்த கையெழுத்து பிரதியையும் கையோடு கொண்டுவந்தேன். அவர்கள். கணினியில் தட்டி டிடிபி எடுத்திருக்கிறார்கள். மூன்று மாதத்தில் புத்தகம் ரெடியாகிவிடும்.

 

– அவர் பதில் அளித்த திருப்தியில். மூவருமாக எட்டுமணிக்கு ஒரு பாரில் கூடுவதென்று ஏற்பாடு செய்துகொண்டு பிரிந்தோம்.

——————————

 

 

Series Navigationஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *