மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1

This entry is part 2 of 28 in the series 9 செப்டம்பர் 2012



(மூன்றாம்  அங்கம்) 
அங்கம் -3 பாகம் -1


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)



ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.


மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.


பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்
**********************
நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்

(மூன்றாம் அங்கம்)
அங்கம் -3 பாகம் -1


இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
பொழுது :  அடுத்த நாள் காலை
அரங்க அமைப்பு:   பாதிரியார் மாளிகைப் பூந்தோப்பு.   உதய சூரியன் முகிலற்ற வானில் தனியாட்சி செய்கிறான்.   ஃபிராங்க் ஒரு நாற்காலில் அமர்ந்து மர நிழலில் காலையில் வந்த செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறான்.   தந்தை பாதிரியார் மெல்லத் தள்ளாடிய வண்ணம் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார்.   கண்கள் சிவந்துள்ளன.   தந்தையின் கண்கள் மகனின் கண்களைச் சந்திக்கின்றன.
ஃபிராங்க்:   [கைக் கடிகாரத்தைப் பார்த்து]  பதினொன்றரை மணி ஆகுது.   சரியான நேரம் ஒரு பாதிரியாருக்கு !  காலை உணவு  எடுக்கும் நேரத்தில் எழுந்திருக்கிறீர் !

பாதிரியார்:  கிண்டல் செய்யாதே ஃபிராங்க் !  எனக்கு சற்று நடுக்கமாய் இருக்குது.   கால்கள் தள்ளாடுகின்றன.   தலை சுற்றுகிறது.   எங்கே உன் அம்மா ?   மாளிகையில் இல்லை  !

ஃபிராங்க்:   அதிர்ச்சி அடையாதீர்கள் !  அம்மா  இங்கில்லை.   வீட்டு வேலைக்காரியுடன் காய்கறி வாங்க  கடைக்குப் போயிருக்கிறாள்.  சில தகவல் உங்களுக்கு அறிவிக்கச் சொல்லிப் போயிருக்கிறாள்.   நான் இப்போது சொல்லவா ?   காலை உணவுக்குப் பிறகு சொல்லவா ?

பாதிரியார்:   நான் காலை உணவு முடித்து அரை மணி நேரம் ஆகுது.   வீட்டில் விருந்தாளிகள் உள்ள போது உன் தாய் எப்படி வெளியே போவாள் ?   விருந்தாளிகள் என்ன நினைப்பார் ?

ஃபிராங்க்:   அதை எல்லாம் அம்மா நினைக்காமல் இருப்பாளா ?  ஜார்ஜ் வாலஸ் இங்கே தங்கினால்,  நீங்கள் தினம் காலை நாலு மணிவரை வளவளவென்று உமது வாலிபக் கதைகளை அளப்பீர்.  அதற்காக உமக்கு ஒரு பாரல் விஸ்கி, பத்துப் பெட்டி பியர் வாங்க அம்மா போயிருப்பாள் என்று தெரியாதா ?

பாதிரியார்:  அப்படி நீ நினைப்பது போல் ஜார்ஜ் ஒரு குடிகாரர் அல்லர்.

ஃபிராங்க்:   உமது நிலைமைப் பார்த்தால் அப்படி நியாயம் சொல்லும் தகுதியில் இப்போது நீங்கள் இல்லை.

பாதிரியார்:   என்ன ?  அப்படியா நான் தடுமாறுகிறேன் ?

ஃபிராங்க்:   இப்படிக் குடித்து விட்டு மதியிழந்த பாதிரியை நான் கண்டதில்லை.   உம்மோடு உரையாட  முடியாமல் வில்லியம் ஏமாற்றம் அடைந்தார்.  அம்மாதான் அவரோடு அன்பாய்ப் பேசிக் கொண்டிருந்தாள்.
பாதிரியார்:   அப்படி எல்லாம் சொல்லாதே !  ஜார்ஜ் வாலஸ் என் விருந்தாளி.   நான்தான் அருகிலிருந்து அவரை உபசரித்தேன். எங்கே மிஸ்டர் வில்லியம் ?  ஜார்ஜ் எங்கே போயிருக்கிறார் ?

ஃபிராங்க்:   வில்லியம் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார்.   வாலஸ் புகைக்கப் போயிருப்பார் !   வீட்டு விருந்தாளிகள் எங்கே என்று தெரியாமல் உங்கள் விஸ்கி மறைத்து விட்டதா ?

பாதிரியார்:   மேடம் மோனிகாவும் மிஸ். விவியனும் இங்கே வருவதற்கு நான் அழைக்கட்டுமா ?

ஃபிராங்க்:  அதுவும் உமக்குத் தெரியாதா அப்பா ?   ஜார்ஜ் வாலஸ்  இங்கு வரும்படி இருவரையும் அழைத்திருக்கிறார் !
பாதிரியார்:   என்ன ?   வாலஸ் அழைத்தாரா ?  நான் செய்ய வேண்டிய வேலையை அவர் ஏன் செய்கிறார் ?  பாதிரியார் மாளிகைக்கு அவர் எப்படி அழைப்பது விருந்தாளிகளை ?   நான் அவர்களை மாளிகைக்கு அழைக்கும்படிச் சொல்ல வில்லையே ?

ஃபிராங்க்:  குடித்து விட்டு நெடுநேரம் நீங்கள் மயங்கிக் கிடந்தது நினை விருக்கிறதா ?  நீங்கள் சொல்லாமல் ஜார்ஜ் வாலஸ் மேடம் மோனிகாவையும் விவியனையும் அழைக்க மாட்டார் !
[அப்போது வெளியே யிருந்து வில்லியம் வருகிறார்]
வில்லியம்:  குட் மார்னிங்.

பாதிரியார்:  குட் மார்னிங்.  மன்னிக்க வேண்டும் என்னை !  நீங்கள் காலையில் உண்ணும் போது கலந்து கொள்ள முடியாமல் போனது.  ஏனோ தூங்கி விட்டேன்.   எழுந்ததும் ஒரு மாதிரி தடுமாற்றம் எனக்கு.

ஃபிராங்க்:  பாதிரியாருக்கு ஏற்படும் வாடிக்கையான தொண்டை எரிச்சல் !  நல்ல வேளை  !  இது தொத்து நோய் இல்லை.   (சிரிக்கிறான்)

வில்லியம்:   மிக்க எழிலான இடம், நல்ல தோற்றம், வசதியான மாளிகை.  கருத்தைக் கவரும் பூந்தோப்பு. தென்றல் காற்றடிப்பு.   இங்கே வாழ்பவர் புனித மனிதர்கள்தான்.

பாதிரியார்:  ஆமாம் வில்லியம்.  ஃபிராங்க் உங்களைக் கூட்டிச் செல்வான் இடத்தைக் காட்ட !   உலாவச் செல்லுங்கள்.  மன்னிக்க வேண்டும் என்னை !   நான் சற்று படுக்கையில் சாய வேண்டும்.  பூமியில் நிற்பவை எல்லாம் எனக்குச் சாய்ந்து போனவை போல் தோன்றுகின்றன.    பிறகு இன்றைய ஆலயச் சொற்பொழிவை நான் தயார் செய்ய வேண்டும் என் மனைவி வருவதற்குள்.  நான் விடை பெறுகிறேன் வில்லியம் !
(தள்ளாடிக் கொண்டு பாதிரியார்  மாளிகை உள்ளே போகிறார்.

 

(தொடரும்)

***************
தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 8, 2012)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationகருணையினால் அல்ல…..!கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *