1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள் விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும்.
சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் முதல் வாரம்வரை காத்திருக்கவேண்டும். கல்விஸ்தாபனங்கள் கோடைவிடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் முதல்வாரத்தில் கதவுகளைத் திறக்கின்றன. இம்மாதத்தில் தொலைகாட்சிகளிலும் புதிய நிகழ்ச்சிகள் அறிமுகமாகும், தொலைகாட்சி நட்சத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். தனது புதிய தோழன் அல்லது தோழியை பிள்ளைகள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தலாம். மிஷல், வீட்டிலிருக்கு பழைய பொருட்களை மாற்றபோகிறேன் என்ன நினைக்கிறாய்? என மனைவி ஆகஸ்டு மாத இறுதியில் தனது கணவரிடம் கேட்கிறாரெனில், அவர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பதில் சொல்வது நல்லது, அல்லது மன்மோகன்சிங் போல பதிலளிப்பதைத் தள்ளிப்போடலாம். படைப்புலகமும் செப்டம்பர் மாதத்தில் புதிய நூல்களுடன கதவைத் திறக்கின்றன. இங்கு பிப்ரவரி மாதத்தில் புத்தகக் கண்காட்சியென்கிறபோதும் பொதுவாக அதிக எண்ணிக்கையில் புதிய படைப்புகள் வாசகர்களுக்கு முகமன் கூறுவது செம்படம்பர் மாதத்தின் தொடக்கத்தில், சில நேரங்கள் அக்டோபர்மாத இறுதிவரை நீடிக்கக்கூடும். படைப்புகள் அறிமுகமாகத் தொடங்குகிறபோதே இலக்கிய இதழ்கள், தினசரிகள், சஞ்சிகைகளில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் வந்துவிடுகின்றன.
இவ்வருடம் உள்ளூர் படைப்புகள், மொழிபெயர்ப்புகளென மொத்தம் 646 புதினங்கள் வாசகர் வாடிக்கையாளர்களை நம்பியிருக்கின்றன. அவற்றுள் 90 விழுக்காடு நூல்களை மூன்றில் ஒருபங்கு விலைக்கு இலக்கமுறையில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட 646 நாவல்களில் இந்திய நாவலென்றும் அறிமுகமாகியிருக்கிறது. கவிதா தஸ்வானி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய Bombay Girl என்ற நூலின் பிரெஞ்சு மொழியாக்கம். பிரெஞ்சு இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியொன்றில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பவரென ஒவ்வொரு பத்தியிலும் சொல்லிக்கொள்கிறார். கதைச்சுருக்கத்தைப் படித்தேன். கதாநாயகிக்கு வீடு ஜுஹ¤வில் இருக்கவேண்டும். விஜயசாந்தி நடித்த படமொன்றின் திரைக்கதை சுருக்கத்தை வாசித்தது போலிருந்தது.
—————————–
3. ‘விரக்தி’யால் எழுதுகிறேன்.
இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள், ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.
லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து அமெரிக்க பிரஜையாகி இறுதியில் சுவிஸ்நாட்டில் பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய வாழ்க்கைப ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில் ; ‘விரக்தி’ எதிரும் புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. 1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத் திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.
விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார். “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் தேர்ந்த கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில் தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.
பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.
——————————-
3. எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ?
பிரிட்டனில் அண்மையில் 49 ஆங்கில எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து Daily Telegraph ஆங்கில தினசரியில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வறிக்கைக்கு வட அமெரிக்கா எழுத்தாளார்கள் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இந்த நாற்பத்தொன்பதுபேரும் கண்டித்திருப்பது R.J. Ellory என்ற எழுத்தாளரை. 49 எழுத்தாளர்களை தமக்கெதிராக ஒன்று திரட்டும் அளவிற்கு எலோரி செய்தக்குற்றம் தமது புனைவுகளுக்கு விமரிசனங்கள் என்ற பெயரில் தமக்குத்தாமே புகழுரைகள் எழுதிக்கொள்வதும் பிறரின் படைப்புக்களை கடுமையாகத் தாக்கி எழுதுவதும் குற்றம் என்கிறார்கள் அவர் எதிரிகள் அல்லது அவரால் விமரிசனம் செய்யப்பட்டவர்கள்.
Jeremey Duns என்கிற மற்றொரு பிரிட்டிஷ் எழுத்தாளர் சமூக வலைத்தல விவாதமொன்றில் பல புனைபெயர்களில் ஒளிந்து தமது படைப்புகளையும், தம்மையும் புகழ்ந்து எழுதிக்கொள்ளும் கூட்டத்தில் ஒருவர் Ellory என வெளிப்படையாக தெரிவிக்க பிரச்சினை வெடித்திருக்கிறது.
Elloryயின் குற்ற புனைவுநாவல்கள் அண்மைக்காலத்தில் வெற்றிகரமாக வலம் வருபவை. அவருடைய Ghost heart, A Quiet Beilef in Angeles ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றவை என்கிறார்கள். ஜெல்லி பீன், என். ஜோன்ஸ் மற்றும் வேறு பெயர்களில் தொடர்ந்து தமது படைப்புக்களையும் தம்மையும் புகழ்ந்து எழுதிவருவாராம். மக்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உயர்வான கருதுகோளை முன்னெடுக்க அவர் மேற்கொள்ளும் தந்திரம் என்கிறார்கள். A Quiet Beilef in Angeles புனைவுக்கு அவரால் எழுதப்பட்ட விமர்சனமொன்றில், நாவலுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியதோடு, “என்னை மிகவும் நெகிழவைத்த, இதுபோன்றதொரு நூலை இதற்கு முன்பு வாசித்ததில்லை” எனப் புகழாரம் சூட்டிக்கொள்கிறார். வேறு இரண்டு புகழ்பெற்ற இரண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தமது பெயருடன் இணைத்துக்கொண்டு இன்றுள்ள பிரிட்டிஷ் எழுத்தளார்களில் (குற்றபுனைவுகள் வரிசை) இவர்கள் மூவரும் தவிர்க்கமுடியாதவர்கள் எனக்கூறிக்கொண்டிருக்கிறார்.
எலோரி யை அறிந்தவர்கள், வியப்பதில்லை. வெகுகாலமாகவே அவர் இதைச் செய்துவருகிறார் என்கிறார்கள். சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எனது நாவல்கள் குறித்து புனைபெயர்களில் சிலாகித்து எழுதியது உண்மை. எனது படைப்புகள் குறித்து விமரிசினங்கள் வைக்கப்படுவதில்லையென்பதால், இப்படி எழுதவேண்டியதாயிற்று.” என்கிறார்.
திருவிளையாடல் திரைப்படத்தில் “ஒரு நாள்போதுமா?” பாடலின் இறுதிவரி “எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ? என முடியும். அப்போது பாலையாவை கவனித்திருக்கிறீர்களா? மீசைமுறுக்கும் ‘ஞானச்செறுக்கு’ பாலையாவின் அகங்காரத்தைக் கட்டவிழ்க்கும் கணங்கள், கலையின் மேன்மையைக் கேலிக்கூத்தாக்கும் தருணங்கள். எலோரியின் சாதுர்யத்தை ஹேம நாத பாகவதர் பெற்றிருப்பாயின் பானபத்திரரை மட்டுமல்ல சுந்தரேஸ்வரரையே வென்றிருக்கக்கூடும்.
——
- கருணையினால் அல்ல…..!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1
- கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
- கேள்விகளின் வாழ்க்கை
- இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42
- மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
- அஸ்லமின் “ பாகன் “
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
- உறு மீன் வரும்வரை…..
- 2016 ஒபாமாவின் அமெரிக்கா
- தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- மிஷ்கினின் “ முகமூடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
- இந்த நேரத்தில்——
- Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
- முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)
- சத்யானந்தன் மடல்
- தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.
- (99) – நினைவுகளின் சுவட்டில்
- திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு
- காலம்….!
- கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
- இஸ்லாமிய பெண்ணியம்
- 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
- ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
- கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற
- Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore