சுபாவம்

This entry is part 24 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கே.எஸ்.சுதாகர்

ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் •பாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்தவன். நிரப்பிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. றொலி வெறுமையாக இருந்தது. பொருளின் விலையைத் திருப்பிப் பார்ப்பதும், பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு பத்திரமாக இருந்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தான். ஒரு சொல்லில் அவனைப் பற்றிச் சொல்வதென்றால் – •பாம் ஒரு ‘கசவாரம்’.

•பாமை எல்லோரும் ‘மிஸ்டர் பாம்’ என்று அழைப்பார்கள். குண்டிற்கும் அவனது பெயருக்கும் எந்தவிதமான நேரடிச் சம்பந்தமும் இல்லையாயினும் – அவன் வியட்நாம் போரின் போது ஒரு தளபதியாக இருந்திருக்கின்றான். அவனது உடம்பு பூராக இருக்கும் தழும்புகளிலிருந்தும், அவனது கம்பீரமான நடையிலிருந்தும் இதை நம்பவேட்டித்தான் உள்ளது.

அவனிடமிருந்து தப்பித்தேயாக வேண்டும் என நினைத்தான் ஆனந்தன். மூன்று வரிசைகளைக் குறுக்காகப் பாய்ந்தான். அடுத்த வரிசையிலிருந்து தனது தேடுதலை புதிதாக ஆரம்பித்தான் ஆனந்தன். சுப்பர்மார்க்கெட்டில் இப்படிப்பட்ட பாய்ச்சலை ஒருமுறை பாய்ந்தால் போதும். மற்றவர் நினைத்தால் கூடப் பிடித்துவிட முடியாது. அந்தவிதமாக – அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் உங்களைக் கவர்ந்து இழுத்துவிடும்.

•பாமிடம் பிடிபட்டால் – அவனின் காரை ஸ்ராட் செய்ய உதவ வேண்டும். அல்லாவிடில் அவனையும் பிள்ளைகளையும் ஆனந்தன்தான் தனது காரில் ஏற்றிக் கொண்டு போக வேண்டும். •பாமின் காருக்கும் பாம்பிற்கும் ஏதோ ஒரு பூர்வீக சம்பந்தமொன்று இருந்திருக்க வேண்டும். இரண்டையும் பார்த்து எல்லோருமே ஓடுகின்றார்கள்.

இருவரும் ஒரு இரசாயணத் தொழிற்சாலையில் வேலை செய்கின்றார்கள். ஆனந்தன் ஒரு ‘ரீம் லீடர்’ (Team Leader). அவனுக்குக் கீழே வேலை செய்யும் இருபது பேர்களில் •பாமும் ஒருவன். மாலை வேலை. மூன்று மணிக்குத் தொடங்கி இரவு பதினொரு மணிக்கு முடியும். •பாம் தனது கார் ‘நைன்ரீன் •பிப்ரீஸ் மொடல்’ என்பான். அதற்கும் தனக்கும் ஒரே வயது என்றும் சொல்லுவான். இதை அவன் சொல்லும் போதெல்லாம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நா துடிதுடிக்கும்; கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவுஸ்திரேலியாவில் BMW கார் வைத்திருக்கும் தமிழர்கள் போல ஆகிவிடுவான். ஆனந்தனுக்கு, அவர்கள் இருவரும் முதுமையின் விளிம்பில் இருக்கின்றோம் என்பதைத்தான் அவன் இப்படி பூடகமாகச் சொல்கின்றான் என்றே நினைத்துக் கொள்வான்.

இரண்டு மூன்று வாரங்களாக அந்தக் கார் ‘மக்கர்’ செய்வதை ஆனந்தன் அறிவான். அவனிடம் ஆனந்தனுக்கொரு அனுதாபம் உண்டு. அதற்கான காரணத்தைச் சொன்னால் நீங்கள் ஒருவேளை சிரிக்கக்கூடும். அவனை விட்டு மனைவி பிரிந்து போய் விட்டாள். அவர்கள் மணவிலக்குப் பெற்றவர்கள். பிள்ளைகள் வளர்ந்து விட்டதனால் ‘Separate under the one roof’ என்பது அவர்களுக்குச் சரிவராது என்று இங்கு அவர்களைக் கண்காணிக்கும் அரச அமைப்பான செண்டர்லிங் (Centerlink) சொல்லிவிட்டது. அதுவே அவர்கள் இருவருக்கும் தனித்தனி சொத்துக்களைச் சேர்ப்பதற்கும் வசதியாயிற்று. •பாம் ஒரு வீட்டில் ஒரு மகளுடனும், அவன் மனைவி இன்னொரு வீட்டில் மற்ற மகளுடனும் இருக்கின்றார்கள்.

இடையிடையே ஒளிந்து நின்று, •பாம் எங்கு நிற்கின்றான் என நோட்டம் விட்டான் ஆனந்தன். இப்போது ஆனந்தனின் பார்வையில் ஒரு அதிர்ச்சி! •பாமிற்குப் பக்கத்தில் நான்கு அடி உயரத்தில் ஒரு அழகான பெண் தவண்டு தவண்டு வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு சிறு பையன் சிணுங்கியவாறே இழுபட்டுக் கொண்டு வந்தான். ஐந்து அடி உயரத்தை எட்டிப்பிடிக்கும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அவனருகே, அவள் வரும் காட்சி பார்க்க வேடிக்கையாக இருந்தது. உயரத்தைப் பொறுத்தவரை பரிணாமம் அந்தநாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வஞ்சகத்தைச் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

கடந்த வாரம் ஒருநாள் – வேலை முடிந்தபின்பு •பாம் ஒரு பீடிகை போட்டான். தான் தனது காரை ஸ்ராட் செய்து போனதன் பிற்பாடு ஆனந்தனைப் போக முடியுமா என்று கேட்டான். மூன்றாம்தர நாடுகளிலெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் எழ சாத்தியமேயில்லை. ‘சுப்பீரியர் இன்பீரியர்’ வேறுபாடு அதற்கு இடம் கொடாது. இங்கு அது சகஜம். ஆனந்தனால் யாரையுமே மனம் நோக கடிந்து கொள்ள முடியாது. அது அவன் இயல்பு.

அவனது காருக்கும் ஆனந்தனுடைய காரிற்குமிடையே ஐந்து கார்கள் நின்றன. அத்தனையும் புத்தம் புதுக் கார்கள். ஐந்து நிமிடத்தில் ஐந்து கார்களும் பறந்து போய் விட்டன. •பாம் காருக்குள் இருந்து வாயில் ஒன்றை வைத்து ஊதிக் கொண்டிருந்தான். எங்குமே இருள். பனி வேறு உடம்பைச் சில்லிட்டது. கண்ணைக் கூர்மையாக்கி உற்று நோக்கினான் ஆனந்தன். ஆஸ்மா பம் ஊதுகின்றானோ? ஆஸ்மா நோயாளிகள் ‘பம்பை’ அழுத்தி மருந்தை உள்ளே இழுக்க வேண்டும். இவன் என்னவென்றால் கண்கள் சொருக, வாயை பலூன் ஊதுவது போல் உப்பிப் பெரிதாக்கி காற்றை காருக்குள் ஊதிக் கொண்டிருந்தான். சமயத்தில் ஒரு குச்சி போன்ற ஒன்றை போத்தல் ஒன்றினுள் விட்டு அதனுள் உள்ள திரவத்தில் தோய்த்து, தேர்ந்த ஒரு விஞ்ஞானி போல அதனையும் வாய் அருகில் பிடித்தான். ஆஸ்மா காருக்குத்தான் என்பதை அறிந்து கொண்டான் ஆனந்தன். காரை விட்டு இறங்கிய ஆனந்தன் புதினம் பார்ப்பதற்காக அவனது காரை நோக்கிச் சென்றான். கதவுக் கண்ணாடியூடு உள்ளே பார்த்தான். உள்ளே ஸ்ரியரிங்கிற்கு அண்மையாக அறுந்த வயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனந்தன் தனது கையைக் கிள்ளி அவுஸ்திரேலியாவில் தான் இருப்பதை உறுதி செய்து கொண்டான். கடும் குளிர் வீசியது. •பாம் விரைவில் எல்லாம் நன்றாக முடிந்துவிடும் என்றும் ஆனந்தனை வெளியே நிற்கும்படியும் சைகை காட்டினான்.

விர்ரெனக் கிழம்பிப் பந்தயக்குதிரை போலப் பாய்ந்து சென்றது அவனது கார். குளிரில் விறைத்துப் போய் நின்ற ஆனந்தன் அதிர்ச்சிக்குள்ளானான். அவனிற்கு •பாமும் நன்றி சொல்லவில்லை. அவனது காரும் நன்றி சொல்லவில்லை. எங்காவது அவனது கார் பழுதுபட்டிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அவனது காரைக் கலைத்துக் கொண்டு சென்றான் ஆனந்தன். கலைப்பதற்கு கார் இருந்தால்தானே! அது போன சுவடு கூடத் தெரியாமல் போய்விட்டது. எண்பது ஓடக்கூடிய றோட்டில் ஆனந்தனே தொண்ணூறில் போகும்போது அவனது கார் என்ன வேகத்தில் ஓடியிருக்கும்?

பின்பு •பாமை – அவனது வீட்டிலே போய் ஏற்றிக் கொண்டு வேலைக்குப் போகும் அடுத்த கட்ட நகர்வுக்குள்ளானான் ஆனந்தன். முதன் முதலாக •பாமின் வீட்டிற்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. •பாமின் வீடு இரண்டு மாடிகள் கொண்ட பெரிய வீடு. பெரிய பூந்தோட்டம். தோட்டமெங்கும் ‘சோலர் லைற்’. வீதியிலிருந்து வீட்டிற்குப் போகும் மட்டும் சீமெந்திலான பாதை. பாதையில் சந்திரவட்டக் கற்கள் போல வட்ட வட்டக் கற்கள் மின்னின. புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டிற்கு திருஷ்டிப்பூசணிக்காய் அவனது அந்தக் கார்தான். இரண்டு கார்கள் நிற்கக்கூடிய ‘டபிள் கராஜ்’ இருந்தும் அந்தக் கார் வெளியேதான் நின்றது.

“இந்தப் பெரிய வீட்டில் நீயும் மனைவியுமா இருக்கிறீர்கள்?” ஒன்றுமே தெரியாத மாதிரி •பாமிடம் கேட்டான் ஆனந்தன்.
அவன் ஆனந்தனை அதிசயமாகப் பார்த்தான்.
“உனக்குத் தெரியாதா? எனக்கு மனைவியுடன் ஒத்து வராது!”
“அப்பிடியெண்டா…?”
“டைவர்ஸ். விவாகரத்து. பிரிஞ்சு வாழுறம். மனைவி மூத்த மகளுடன் நாலாவது தெருவில் வசிக்கிறாள். நானும் இரண்டாவது மகளும் இங்கே இருக்கிறோம்.”
அதன்பிறகு கதையின் திசையை மாற்றி விடுவான் •பாம்.

•பாமிற்கு உதவி செய்வதை சக தொழிலாளர்கள் விரும்பவில்லை.
“அவன் உன்னை ஏமாற்றுகின்றான். வாய் திறந்தா பொய்தான் சொல்லுவான். பெற்றோல் விலையேற்றத்தால் காசு மிச்சப் படுத்துகின்றான்.” எல்லாரும் ஒரே மாதிரித்தான் சொன்னார்கள்.
“பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் எழுதி வைத்தபடியே நடக்கின்றார்கள். அது •பாமின் இயல்பு. எவருக்கும் உதவி செய்வது உன் இயல்பு. ஒவ்வொருவருடைய இயல்பையும் மாற்ற முடியாது” என்றான் ஆனந்தனுடன் வேலை செய்யும் ‘மாய்’ என்பவன்.

ஆனந்தன் தினமும் காலையில் படிக்கப் போய் விடுவான். தொழில் நுட்பக்கல்லூரியில் ‘குவாலிற்றி அசூரன்ஸ்’ படிக்கின்றான். காலை பத்திலிருந்து மாலை இரண்டு மணிவரை. அதன்பிறகு வீட்டிற்கு வந்து உணவருந்தி வேலைக்குத் தயாராக வேண்டும். அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் இப்பொழுது •பாமையும் ஏற்றிக் கொண்டு போக வேண்டும்.

எண்ணங்களுடன் றொலியும் உருண்டு கொண்டிருக்கும்போது, ‘ஆணன்ட்… ஆணன்ட்’ என்று கூப்பிட்டுக் கொண்டே ஆனந்தனை வளைத்துப் பிடித்துக் கொண்டான் •பாம்.

“இது என் மனைவி. இவர்கள் பிள்ளைகள்” என அறிமுகம் செய்தான் •பாம். அவர்களும் ‘ஹலோ’ சொன்னார்கள். ஆனந்தனுக்கு இப்போது எதுவுமே புரியவில்லை. சிலவேளைகளில் இங்கு எதுவுமே புரிவதில்லைத்தான். மணவிலக்கு, கணவன், மனைவி, காதலன், காதலி, போய் •பிரண்ட், கேர்ள் •பிரண்ட், பார்ட்ணர் இந்தச் சொற்களின் அர்த்தம் தான் என்ன? இந்த நடிப்புக்கூட்டத்தில் தான் சிக்கிவிட்டோமே என மனம் வருந்தினான். இரண்டு பெண் பிள்ளைகளுடன் மூன்றாவதாக ஒரு பையன் துறுதுறுவெண்டு நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் றொலிக்குள் பொருட்களுடன் பொருளாக ஏறி நின்றான். ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் அந்தப் பையன்? இரண்டு பெண் பிள்ளைகள் என்றுதானே •பாம் சொன்னான்.

அவர்கள் கதைத்துக் கொண்டே கார் தரித்து நிற்குமிடம் நோக்கிப் போனார்கள். •பாமின் ‘நைன்ரீன் •பிப்ரீஸ் மொடல்’ கார் விஸ்வரூபம் எடுத்தது. ஆனந்தனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

சிறுவன் றொலிக்குள் நின்றபடியே துள்ளித் துள்ளி கார்கள் நின்ற இடத்தைக் காட்டி ஏதோ சொல்லிச் சிரித்தான்.
“அம்மப்பா(grandpa), உங்கடை காருக்குப் பக்கத்திலை பூனை போல ஒரு கார் நிக்குது” என்றான் ஆங்கிலத்தில் அந்தச் சிறுவன். •பாம் சிறுவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஆனந்தனையும் கவனிக்கவில்லை. தனது மனைவியுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டு வந்தான். அவளது உதட்டிலே இருந்த ஏதோவொன்றைத் தட்டி விட்டுச் சிரித்தான். இடையிடையே அவளின் தலையைக் கோதிவிட்டு, விலங்குகள் முகர்வது போல முகர்ந்தான். அந்தப் பெண் நீரிற்கு அடியிலிருந்து கதைப்பவள் போல ஏதோ சொல்லிக் கொண்டே வந்தாள்.
“யானைக்குப் பக்கத்திலை பூனை. யானைக்குப் பக்கத்திலை பூனை…” சிறுவன் கையைத் தட்டித் தட்டி பாடத் தொடங்கினான். சிறுவன் நோக்கிய திசையில் ஆனந்தனின் ‘யாறிஸ்’ காரும் இன்னுமொரு காரும்தான் நின்றன. அது •பாமின் ‘நைன்ரீன் •பிப்ரீஸ் மொடல்’ கார் அல்ல. செட்டை விரித்த கழுகு போல கன்னங்கரிய நிறத்தில் ஒரு பெரிய ‘குளூகர்’. திடீரென ஆனந்தனின் மூளைக்குள் ஏதோ உறைத்தது.

“•பாம் நான் ஒரு பொருளை வாங்க மறந்து விட்டேன்” சொல்லிவிட்டு திரும்பவும் சுப்பர்மார்க்கெட் நோக்கி ஓடினான் ஆனந்தன்.

‘கொம்பிளெக்ஷிற்குள்’ சென்றவன் பூனை போல பதுங்கி நின்று அவர்கள் போவதைப் பார்த்தான். •பாம் யானை போல கர்வமாக நடந்து சென்றான். ஒரு துள்ளுத் துள்ளி ‘குளுகர்’ மீது ஏறினான். ஏறியவன் உள்புறமாகக் கதவைத் திறக்க, அவன் மனைவி தவண்டடித்துத் தாவி குளுகரில் ஏறினாள். ஏறி முடிய அவளின் சாகஷத்தை மெச்சி, அவளுக்கொரு ‘கிஸ்’ கொடுத்தான் •பாம். மற்றவர்கள் பின்னே ‘காச்சா பீச்சா’ என்று கத்தியபடியே ஏறினார்கள். சிறுவன் திரும்பவும் கண்ணாடிக்குள்ளால் ஆனந்தனின் ‘யாறிஸ்” காரை சுட்டிக் காட்டிச் சிரித்தான். எல்லாருக்கும் அதைப் பார்க்க உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. ‘குளூகர்’ உடலைச் சிலிர்த்தபடியே பறந்தது. அதன் உறுமலில் ஆனந்தனின் ‘யாறிஸ்’ கார் சற்று ஆடியது. ஆனந்தன் கவலை தாளாமல், வேர்த்து விறுவிறுத்து றொலியைப் பிடித்தபடி நின்றான்.

அவனது முதுகை ஒரு வயது முதிர்ந்தவரின் கைகள் ஆதரவாகத் தடவின.

“தம்பி! எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” அந்த முதியவர் கேட்டார். ஆனந்தன் அவர் பின்னாலே தனது றொலியைத் தள்ளிக் கொண்டு போனான்.

Series Navigationஉலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

3 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    உங்கள் கதையைப் படிப்பது ஒரு இனிய அனுபவம், சுதாகர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *