மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -44 (முற்றும்)

This entry is part 7 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கி.பி. 2050              

                                                 பவானி

 

60        – செஞ்சி அழிந்து சென்னை பட்டினம் உருவாயிற்று

 

– அப்படீங்களா?

– உன் பேரு என்னன்னு சொன்ன?

– பவானி, உங்கள் சினேகிதி ஹரிணியுடைய பெண்.

– புதுச்சேரின்னு சொன்ன ஞாபகம்?

– தற்போதைக்கு புதுச்சேரி. பிரான்சு நாட்டிலிருந்து வந்து மூன்று மாதமாகுது

நல்ல கோதுமைநிறத்தில் வயதுக்குப்பொருத்தமின்றி மனிதர் ஆரோக்கியமாகவே இருந்தார். கோடைவெயில் நிறத்தில் குர்த்தாவும் பைஜாமாவும், அவர் உயரத்திற்கு நன்றாகவே பொருந்தியது. தலைமயிர்  வெள்ளைவெளேர் என்றிருந்தது.  நரைத்த மயிர்பூசிய மார்பு. முகச்சதை உலர்ந்த பேரீச்சை போலிருந்தது. கண்கள் உள்வாங்கி குழிக்குள் கிடந்தாலும் வெண்முழியின் வெளுப்பில் கரு நாவற்பழங்கள்போல மினுங்கும் கண்மணிகள். கூர்மையான மூக்கு.  நாசி துவாரங்களை துருத்திக்கொண்டு வெண்ணிற ரோமங்கள். முகமயிரை வேருடன் பறித்திருந்தார். அடைப்புக்குறிக்குள் வாயை அடக்கியதுபோல இருபுறமும் – கீழ்மூக்கு தொடங்கி முகவாய்வரை – சுருக்கம். முதுமையின் தசை கட்டுகளில்  சாம்பல் பூத்திருந்தது. அதில் கொசகொசவென்று ரோமங்கள் – ஈஸிசேரில் ஒரு கையைத் தலைக்குக்கொடுத்து சாய்ந்திருந்தார்-  காலடியில் ஒரு ஜோடி செருப்புகள். பெரியவர் எரிக் நோவாவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன் .

– செஞ்சியைவிட்டு வெளியேற மனமில்லை என்று சொல்லுங்கள்.

–  கீழை தேசங்கள் குறித்த ஆராய்ச்சி மாணவனாக 2010ல் இந்தியாவந்தேன். பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த சேசுசபையினரின் நாட்குறிப்புகளின் அடிப்படையில் இந்தியாவை ஆய்வு செய்வது நோக்கமாக இருந்தது. வாழ்க்கை தற்செயல் நிகழ்வுகளால் தீர்மானிக்கப்படுகிறதென்பதை இளம் வயதில் நம்புவதில்லை. இப்போது பரிபூரணமா நம்பறேன். பிரான்சுநாட்டிலே பிறந்து இந்தியாவை சொந்த நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டிவருமென்று அப்போது நினைத்ததில்லை.

– சடகோபன் பிள்ளை எழுதிய ‘செஞ்சி சொல்லும் கதை’ வேண்டும். அதன் பிரதிக்காக அலைந்தேன். கிடைக்கவில்லை.

– அதைப்படித்து ஆவப்போவதென்ன. செஞ்சியே இல்லை என்றான பிறகு செஞ்சியைப்பற்றிய புனைகதைகளால் ஆவதென்ன? பெருநகரமாக விரிவடைந்த சென்னை எதிர்பட்ட கிராமங்களையும் நகரங்களையும் விழுங்கி பல வருடங்கள் ஆகிறது. ராஜகிரியும் தெற்கே சந்திரகிரியும் மாத்திரம் கல்குவாரிகளுக்கு இரையாகாமல்  நிற்கின்றன. கமலக்கண்ணிமேலுள்ள அச்சம் காரணமென்று எனது மனைவி சொல்கிறாள். அதனாலென்ன?  இந்த நாட்டில் கோட்டைகளைக் காட்டிலும் கோவில்களென்றால் உயிர்பிழைக்க முடியும். உனக்கு செஞ்சிமீது அப்படியென்ன ஆர்வம்?

– உங்களுக்கு, அம்மாவுக்கு இந்த ஊர்மக்களுக்கு, ஒரு சில ஆய்வாளர்களுக்கு, இந்த ஊரை தேர்வு செய்து வந்து பார்க்கும் சுற்றுலாவாசிகளுக்குள்ள அதே ஆர்வமென்று வைத்துக்கொள்ளலாம். அண்மையில் ‘Current World Archaeology’யில் செஞ்சிக்கோட்டைக்கு நேர்ந்த சேதத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தியாவைப் பற்றி எதைப்படித்தாலும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்வதுண்டு.  அவளிடம் பெறமுடியாத தகவல்களை உங்களிடம் கேட்டுப்பெறமுடியுமென்ற நம்பிக்கை. தொல்பொருளியல் சஞ்சிகையில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையின் அடிப்படையில் ஒரு விரிவான நூலை அதே பெயரில் கொண்டுவரலாமே?

– அதே பெயரிலென்றால்?

– கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி என்ற பெயரில்

எனது பேச்சில் இணக்கமில்லையென்பதுபோல சாய்வு நாற்காலியில் இருகைகளையும் தலைக்குப் பின்புறம்கொடுத்து  சாய்ந்தார்.

– பவானி! நான் கட்டுரை எழுதும் ஆசாமி, கதைசொல்ல எனக்கு வரவும் வராது. ஹரிணி எப்படி இருக்காங்க? உன்னைபோல சிலத் தகவல்களைத்தேடி செஞ்சிக்கு வந்தவங்கதான். இந்த வீட்டோடு அவர்களைப் பிணைத்து சில முடிச்சுகள் இருந்தன, அதை அவிழ்க்க நினைத்தநேரத்தில் அவர்களோடு நானும் சேர்ந்துகொண்டேன். சில நேரங்களில் இறுகிய முடிச்சை அவிழ்க்காமலிருப்பதே நல்லது.

– கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி?

– 1994ல் கல்யாணமகாலுக்கு தெற்கே அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டபோது ஒரு மட்பானையில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கிடைத்திருக்கிறது. சாமிநாதன் வசமிருந்த கௌமுதியை சடகோபன், வேணுகோபால் இருவருமே அதை அறிவார்கள். கௌமுதியை விலைபேசிய சாமிநாதன் திரும்பாததுபோலவே, புதுச்சேரியில் நிலமோசடி விஷயமாக கைதுசெய்யப்பட்ட வேணு, பொலிஸாரால் விடுவிக்கப்பட்ட பிறகு செஞ்சி திரும்பும் வழியில் விபத்தில் இறந்தான். மறுநாள் உனது அம்மாவும் நானுமாக செஞ்சி வந்தபோது எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு கலா பெண் ஓவென அழுதாள். மூன்று நாட்கள் கழித்து உங்கள் அம்மா ஊருக்குப்புறப்பட்டாள். எனக்கு அப்படி புறப்பட விருப்பமில்லை, தாங்கிவிட்டேன்.

– கௌமுதி?

– ஹரிணி அதைப்பற்றி உன்னிடம் ஏதேனும் சொன்னாளா?

– இல்லை. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அம்மா செஞ்சிபக்கம் போகாதே என்றாள்.

 

– ஆனாலும் ஆர்வம் காரணமாக உன் அம்மா செய்த தவற்றை நீயும் செய்திருக்கிறாய்.- எனக்கு அதுபற்றி பேச விருப்பமில்லை. ஹரிணியும் நானுமாக புதுச்சேரியிலிருந்து செஞ்சி புறப்பட்டுவந்தபோது உன் அம்மாவிடம்  சில ஊகங்கள்  இருந்திருக்கவேண்டும். கலாவிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்பதில் இருவரும் தெளிவாகவே இருந்தோம்.. ஆனால் செஞ்சிக்கு வந்த பிறகு கலாவின் நிலைமையை பார்த்ததும் வேறுவிதமாக நான் முடிவெடுத்தேன். ஹரிணியும் வேண்டாமென்றாள். எனக்கு கௌமுதிக்குப் பதிலாக கலா என்றொரு புதையல் கிடைத்த சந்தோஷம்.  சொல்லவேண்டுமென்று நினைத்திருந்தால் ஹரிணி தனது ஊகத்தை உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கலாம். அவளே வேண்டாமென்று முடிவெடுத்தபிறகு நானும் மௌனம் சாதிப்பதுதான் அறம்.

ஓர் வயதானப்பெண்மணி காப்பித் தம்ளர்களுடன் வந்தார். .

– கலா, என் மனைவி  எரிக் நோவா வந்தவர்களை அறிமுகப்படுத்தினார்.

– வணக்கங்க.

– நான் குருடிண்ணு சொன்னாங்களா?

எனது முழு கவனத்தையும் கலா அம்மா பக்கம் திருப்ப அவ்வார்த்தைகள் போதுமானதாக இருந்தன. துடித்துக்கொண்டிருந்த இரப்பைகளுக்கிடையில் நாணில் பூட்டிய அம்புபோல கிண்ணென்று எந்நேரமும் விடுபடக்கூடிய பார்வை. ஒரு சில நொடிகள்  நிசப்தம்.

– உங்கள் சந்தோஷத்தை குலைச்சுட்டேனா?  காப்பியைக் குடிங்க. குருடியை குருடிண்ணு சொல்லாம எப்படி சொல்வதாம். அப்படிச்சொல்வதன்மூலம் நான் நிமிர்ந்து நிற்கிறேன். பரிதாபப் பார்வையின் தாக்குதலை சமாளிக்க  சடகோபன் தாத்தா எனக்குக் கையளித்த ஆயுதம்.

பேச்சின் போக்கை மாற்ற முனைந்தவள்போல காப்பி தம்ளரை, வாங்கி பெரியவரிடம் கொடுத்தேன். மற்றொரு தம்ளரை கையில் எடுத்துக்கொள்ள, பார்வையற்ற தனது குறையை ஒளித்து ஒரு சராசரி பெண்மணிபோல நீட்டிய  தம்ளரைத் தொட்டுப்பார்த்து செம்புலிருந்த காப்பியை சிந்தாமல் அதில் ஊற்றினார்.  வியப்பில் இமைக்க மறந்த கண்களை பார்வையற்றவரிடமிருந்து அகற்றாமல், காப்பியை உறிஞ்சி முடித்தேன்.

கவனம் வீட்டின் சுவர்கள் மீது சென்றது.பெரிதாக்கப்பட்ட நிழற்படங்கள் நூலாம்படைகளுடன் தொங்கிக்கொண்டிருந்தன. வண்ணப் படமொன்றில் கலா : பச்சை நிற ஜார்ஜெட் சுரிதார், கலிதர் குர்த்தா; ஓரங்களில் பேட்ச்வொர்க் பூவேலைகள் என்றிருந்தார். இருகாதுகளிலும் சுரிதாருக்கு பொருந்தமாக, பச்சைக்கல்பதித்த ஏர் ரிங். கழுத்திலிருந்த பச்சைக்கல் மாலையும் அவளுக்கு நன்றாகவே இருந்தன.   அம்மாவின் ஆல்பத்தில் இப்படத்தைப்பார்த்திருக்கிறேன். எரிக் நோவாவும், கலாவும் கோவிலொன்றில் மாலை மாற்றிக்கொள்ளும் படமும் இருந்தது. அடுத்து கருப்பு வெள்ளையில் ஒருபடம். மிகவும் பழையதாக இருந்தது, அருகிற் சென்று பார்த்தேன். தாயும் மகளுமாக இருந்தார்கள். தாயை அடையாளம் தெரியவில்லை . குழந்தையின் முகத்தை பார்த்த நினைவு. கலாவுடைய அம்மாவா? கிட்டத்தட்ட அதே முகம். பார்வை இல்லை என்ற குறையைத்தவிர இருவரிடத்திலும் ஒற்றுமை.

– என்ன அப்படி பார்க்கிற? ஏதாச்சும் தெரியுதா? – எரிக் நோவா.

 

– கலாவின் அம்மாவை குழந்தையிலே எடுத்ததுபோல இருக்கிறது.

– இல்லை. அது அவர்களல்ல. வயதானப்பெண்மணி  சடகோபன்பிள்ளையின் மகள், படத்திலிருக்கும் சிறுமி உனக்குப் பாட்டி, ஹரிணியின் அம்மா இந்தவீட்டுப்பெண்.

– ஹரிணி அக்கா பெண்ணா வந்திருக்கிறது. நீங்க சொல்லவே இல்லை

– ஹரிணியின் பெண் என்றதும் அதிசயமாக வாய் திறந்திருக்கிறாய்.  வீட்டுக்கு வருபவர்களிடம் நீ அதிகம் பேசுவதில்லையென்கிறபோது, அறிமுகப்படுத்த யோசிக்கவேண்டியிருக்கிறது- எரிக் நோவா.

– மாலை எட்டு மணிக்கு புதுச்சேரியில் இருக்கவேண்டும்.

–  ஹரிணி அக்கா செஞ்சி வந்தால் இரவு தங்குவதில்லை. அவர்களும் உன்னைப்போலவே இரவு எட்டுமணிக்கெல்லாம் புதுச்சேரியில் இருக்கவேண்டுமென்று புறப்பட்டுவிடுவார்கள். உன்னை அப்படி போக அனுமதிக்கபோவதில்லை. இன்றிரவு தங்கத்தான் வேண்டும் -கலா

– காலையில் நீ வருகிறேனென்று போன் செய்தபோதே இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. எங்களை ஏமாற்றாதே. – எரிக் நோவா

அன்றிரவு அவர்கள் வீட்டிலேயே தங்குவதென்று முடிவானது.  உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். புதுச்சேரிக்குத் திரும்பியிருக்கலாமென்று தோன்றியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன் இரவு பதினொன்று. பஸ்பிடித்து போவதென்று அவ்வளவு சுலபமில்லை. புதுச்சேரி போய்ச்சேர காலை மூன்றுமணி ஆகலாம். பாதுகாப்பானதுமல்ல, எரிக் நோவா -கலா தம்பதியினர் வருந்தவும் கூடும், என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவேளை அறைக்கதவை தள்ளிக்கொண்டு யாரோ உள்ளே நுழைவதுபோலிருந்தது. பின்பக்கம் கதவை மூடி மெதுவாக தாளிடும் சத்தமும் கேட்டது.

– யாரது? கேட்க நினைத்தும் வார்த்தைகள் வரவில்லை,  கட்டிலை நெருங்கிய உருவத்தைக் கண்டதும் பதட்டம் தணிந்தது.  – அம்மா நீங்களா? எதற்காக இந்த நேரத்தில், விளக்கைப்போடட்டுமா?

– எனக்கு அவசியமல்ல, உனக்கும் வேண்டுமென்றால் போட்டுக்கொள் எனக் கூறிவிட்டு கலா அருகிலமர்ந்தார். அப்போதுதான் என்னை புதிதாகப் பார்த்ததுபோல கட்டிக்கொண்டார்.

– ம் சொல்லு நீ எதற்காக வந்த? உன் அம்மா அதிட்டவசமாக தப்பித்தார்கள். அவர்கள் எதுவுமே உன்னிடத்தில் சொல்லலையா?

– இரண்டுநாட்களுக்கு முன்பு சடகோபன் பிள்ளை நூல் சம்பந்தமாக எரிக் நோவாவைப் பார்க்கப்போகிறேன் என்றபோது செஞ்சிக்குப்போகாதே என்றார்களேத் தவிர காரணம் சொல்லவில்லை.

– தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள். ஏதாவது ஊகித்திருக்கலாம். உறுதிப்படுத்த முடியாத தகவல்களை கூறி ஏன் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்திருக்கலாம். எனக்கு உன் அம்மாவிடம் சொல்ல முடியாததை உன்னிடமாவது சொல்லவேண்டும். இல்லையென்றால் தலைவெடிச்சுடும். நாற்பது ஆண்டுகால மௌனவிரத்தத்தை உன் தயவிலாவது நான் முடித்துக்கொள்ளவேண்டும்.

– புதிர்போடாமற் சொல்லுங்க, இல்லையென்றால் எனக்குத் தலைவெடிச்சுடும்.

– எங்களுக்கு உதவவந்த ஹரிணிக்கு உபத்திரவம் கொடுக்க நேர்ந்ததற்கு எது மூலகாரணமென்று நினைக்கிற?  எங்கள் வறுமை. அப்பா நிறைய கடனை வச்சுட்டு அகால மரணமடைஞ்சுட்டார். அண்ணன் வேணுவுக்குப் படித்த படிப்புக்கு சரியான வேலை அமையுலே. தாத்தா அடிக்கடி சொல்றமாதிரி எங்கள் தலைவிதி ஒக்கல் வாழ்க்கையா அமைஞ்சுட்டுது. அப்பத்தான் ஓர் அகழ்வாராய்ச்சி குழுவிற்கு உதவப்போன இடத்தில் ‘கிருஷ்ணப்பர் கௌமுதி’ சகோதரன் வேணுவிற்குக் கிடைத்தது. புதுசேரிக்கு அடிக்கடி போகவர இருக்கிற வேணு ‘கௌமுதி’ விஷயத்தை எரிக் நோவாவிடம் சொல்லியிருக்கிறான். யாரிடமும் இதுபற்றிப்பேசவேண்டாம் நல்லவிலைக்குத் தானே அதை எடுத்துகொள்வதாகவும் உறுதி அளித்திருக்கிறான். அன்றே கிட்டதட்ட வேணு எரிக்நோவா எதைக்கூறினாலும் அதைத் தட்டாமல் நிறைவேற்றிவைக்க கடமைப்பட்டவனாகிவிட்டான். அந்த உபகாரத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியிலிருந்த உங்கள் வீட்டை அபகரிக்க ஹரிணியைக் கொல்வதென்ற யோசனையை முன்வைத்து வேணுவையும், தாத்தா சடகோபனையும் ஊக்கப்படுத்தியதுகூட இவர்தான் என்பது பின்னர் தெரிய வந்தது.

– அப்போ அம்மா சாமிநாதனைப்பார்த்தது, அவன் காணாமற்போனது, அம்மா கிணற்றில் விழுந்தது.

– எங்கள் குடும்பத்தினரும் எரிக் நோவாவும் சேர்ந்து நடத்திய நாடகம். சாமிநாதனென்றே ஒருவன் உண்மையிலில்லை.

– கிருஷ்ணப்பர் கௌமுதி என்ன ஆயிற்று?

–  அடுப்பு சாம்பலாயிற்று..

–  எரிக் நோவாவிற்கு தெரியுமா?

– தெரியாது. இந்த ரகசியத்தைக் கட்டிக்காக்கும்வரை எனக்குப் பிரச்சினைகளில்லை. என்றாவது ஒருநாள் நான் வாய் திறந்து அதன் ரகசியத்தைச் சொல்வேனென நினைத்துக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் குளத்திலெரிந்த சிலை தேடலும்  முழுமூச்சாக நடந்துகொண்டிருக்கிறது.

மறுநாள் காலை, புதுச்சேரிக்கு புறப்பட்டேன். எரிக் நோவாவை நேரிட்டுப்பார்க்க மனமில்லை. இருந்தாலும் அவரிடம் சம்பிரதாயமாக விடைபெற்றேன். கலா அம்மாவின் விழிகளில் நீர் புரண்டது. இறுகக் கட்டிக்கொண்டேன். அவள் புடவையிலும் அம்மாவிடமிருக்கும் அதே வாடை.  இந்த மனிதரை குறைநாளுக்கும் இந்தக்குருட்டுப்பெண்மணி எப்படி சமாளிக்கப்போகிறாரென மனதிற்கேள்வி எழும்பியது. அவர் முகத்தைப் பார்த்ததும் அதற்கு அவசியமில்லை தோன்றியது.

– அம்மா! புதுச்சேரியில் இருக்கும்வரை உங்களுக்காகவே இந்த வீட்டுக்கு அடிக்கடி வருவேன்.

– தாராளமா வா. இது உன்வீடு .

எரிக் நோவாவும் கலாவுமாக வெளி வாசலில் வந்து நின்றார்கள். கலா அம்மாவின் மனதில் எனது வடிவம் எப்படி படிந்திருக்கும்மென்பதை கற்பனை செய்தவாறு நடந்தேன்.

– முற்றும்-

 

Series Navigationரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …மொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *