பஸ் ரோமியோக்கள்

This entry is part 1 of 23 in the series 14 அக்டோபர் 2012

 
லேசாக தாமரையின்  மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின்  சுடர் தள்ளாடித்  தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே  எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

மெழுகு திரியின் ஒளியில் தாமரை  குனிந்து உட்கார்ந்து கொண்டு  நோட்டில் எதையோ  எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த  பக்கவாட்டு முகம் அந்த ஒளியில்  தங்க நிலவாக தக தக வென்று  மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி.

காந்தி ஜெயந்தின்னு இன்று  காலேஜ் லீவு.அதனாலத் தான் இந்த ஒருநாளாவது அந்த பஸ், அந்தக் கண்டக்கரோட  ஜொள்ளுப் பார்வையிலிருந்து தப்பினோம்…எங்க உட்கார்ந்தாலும் வந்து நின்னு பார்த்துக்கிட்டு, காரணம் இல்லாமல் சிரிச்சுக்கிட்டு, வேணுமுன்னே தினம் வந்து பஸ் பாஸை  வாங்கிப் பார்த்து திருப்பிக் கொடுப்பது கொடுக்கும்போது வேண்டுமென்றே விரலைத் தொடுவது.. உற்றுப் பார்ப்பது, .அந்தாள் பண்ற லொள்ளுக்கு அளவே இல்லை. அம்மாகிட்ட மட்டும் வந்து சொன்னேன்….அம்புட்டு தான். சரோஜாவா…. கொக்கா…ன்னு அம்மா வந்து பஸ்ஸில் ஊடு கட்டிடும் பெறவு  அந்த ஆள் நான் இருக்கும் பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டான்.நினைத்தவுடன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள்.

எப்படியோ இன்னைக்கு தப்பியாச்சு…மறுபடி நாளைக்கு அதே பிரச்சனை தானே இருக்கும். அதுக்குத்தான் இந்த அம்மா கிட்ட ஒரு ஸ்கூட்டி வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கேன், நினைக்கும்போதே மனத்தால்  ஸ்கூட்டியை ஒட்டிக் கொண்டு காலேஜ் வரைக்கும் போனாள்..அங்கிருந்த தன்  தோழிகளுக்குபெருமையுடன். கையசைத்தாள். எப்படியாவது அம்மா ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துச்சுன்னாப் போதும். யோசித்துக் கொண்டே இருந்தவள். அச்சச்சோ…தப்பாப்போச்சே….

என்று  நாக்கைக் கடித்து கொண்டு அழிரப்பரை எடுத்து நோட்டில் எதையோ அழிக்கிறாள்.

வெளியில் அந்தி சாய்ந்து வானம் சிவந்து கொண்டிருந்தது…..மாடுகளுக்கு புல்லுக் கட்டை பிரித்து வைத்து விட்டு அங்கிருந்தபடியே  தன்  மகளின் அழகை  ரசித்த சரோஜா . மனதுக்குள் “தாமரை  நல்லாக்  குதிரை மாதிரி வளர்ந்திருச்சு….கலியாணத்துக்கு நிக்கிது…. என் வவுத்துல  வந்து பொறந்த தங்கம். ஆண்டவனா பார்த்துப் போட்ட பிச்சை.இது மட்டும் இப்ப  இல்லையின்னா நான் பொறந்த இந்தப் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போயிருக்கும்..என்று நினைத்துக் கொண்டாள் .இந்த எட்டுப்பட்டி கிராமத்திலயும் என் மவ தாமரைக்கு ஏத்தவன் எவனுமில்லை. இங்க இருந்துக்கிட்டு நான் இவளுக்கு மாப்பிள்ளை தேடினால் சுத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு பய தேறமாட்டானுவ .இன்னும் எம்புட்டுப் பணம் சேக்கணுமோ…?

மோட்டார் ரிப்பேர் மெக்கானிக்கு, பஞ்சர் ஒட்டறவன், எலெக்ட்ரீசியன், காய்வண்டி  தள்ளறவன்….இவனுவ தான் வந்து சிக்குவானுங்க.குடிகாரப் பயலுக,இவங்க கண்ணுல இருந்து நழுவி மவள  நல்லாப்  பெரிய படிப்பு படிக்க வெச்சி… பெரிய ஊருக்குப்  போயி ஒரு மாட்டு லோன் தர பாங்கு மேனேஜரா  பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுப்பேன். அதுக்குத் தானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி பணத்தை குருவி சேக்கிராப்பல சேதது வேச்சுக்கிருக்கேன். மொதல்ல படிப்பு முடியட்டும்.பெறவு  தான் கல்யாண வேட்டை..!

நினைத்துக் கொண்டே முந்தானையால் முகத்தைத் துடைத்தபடியே வந்து தாமரை அருகில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டு இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்த வெத்தலையை எடுத்து மடியில் துடைக்கிறாள்…சரோசா.

தாமரை…உன்  மேல அவுகளுக்கு…அதான் உன்னோட அப்பாருக்குத்  தான் எம்புட்டு ஆசை தெரியுமா? நீ இப்படி வளர்ந்து இளங்குமரியா நிக்கிறதப் பார்க்க நான் தான் கொடுத்து வெச்சிருக்கேன். இப்படி அல்பாயுசுல போயி நம்மள  அல்லாட வெய்ப்பாகன்னு கனவு கூடக் காணலியே.

தாமரை அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு….ம்ம்…இன்னிக்கு .நீ சொல்லு நான் கேட்கிறேன்…என்று சொல்லிக் கொண்டே எழுதலானாள் .

என் ஆத்தா அன்னிக்கு என் மவ சரோசாவுக்கு டவுனுல தான் மாப்பிளை பார்ப்பேன்னு செவகாசிக்கு இட்டுட்டு வந்து அங்க ஒரு காலண்டர் கம்பெனி அய்யாதுரை கிட்ட சொல்லி வச்சு உன் அப்பனுக்கு  என்னிய  கட்டி வெச்ததுக்குப் பெறவு தான் முடியாமே….கொள்ளாமே… ஆத்தா மாரடைப்புல  செத்துப் போச்சு . சேர்ந்தாப்போல இவிகளும்   சிவகாசி வெடி விபத்துல எப்படியோ சிக்கி சாம்பலாகிப் போயிட்டாரு .. அன்னிக்கே என் வாழ்க்கையும் கருகிப் போச்சுது. என்னமோ அன்னிக்கு நீ பச்சக்கொளந்த. இன்னிக்கும் என் கண்ணுக்குள்ளியே  நிக்கிறவ.

அதுக்குப் பெறவு  தான் அந்த ஊரே வேண்டாம்னு என்  அம்மா  ஊட்டுக்கே வந்து கெடந்தேன். தெரிந்த சாதி, சனங்க மத்தில கஞ்சித் தண்ணி குடிச்சாக் கூட ஒரு கெவுரவம்  தான். என்ன சொல்றே….இப்போ… ..இந்த குச்சு வீடும், கொட்டகையும், பத்து மாடுகளும் ஆடுகளும் தான் நம்ம சொத்தும் சுகமும்…எல்லாமும்…ஒத்தையாளா  இப்படி நிமிர்ந்து நிக்கையில மனசுக்குள்ள ஒரு கருவம் வரத்தேன் செய்யிது .என்னாங்கரே ..? என்று வெத்தலையை மடித்து வாய்க்குள் திணித்துக் கொள்கிறாள் சரோசா.

செவகாசியில இருந்து வந்தேனே…இங்க அக்கம் பக்கத்துல ஒருத்தங்களுக்குத் தெரியாது. உங்கப்பாரு செத்துப் போன வெசயம் .எனக்கு நானே போட்டுக்கிட்டேன்  முள்ளுவேலி.என் வாயும் வார்த்தையும் தான் என்னோட முள்ளுவேலி.என்னைச் சுத்தி எப்பவும் நெருப்பு கங்கு மாதிரி வார்த்தையை மூஞ்சீல வீசத் தயாரா வெச்சிருப்பேன். ஒரு பய நெருங்க மாட்டான் என்னிய .!

இப்போ நீ….இந்த சரோசா மவ தாமரை..தாமரைப் .பூ கெணக்கா நிமிர்ந்து நிக்கிற..ஊருல இருக்குற கருவண்டு எல்லாம் வந்து காவாலித் தனம் பண்ணி மொய்க்க ஆரம்பிக்கும்…சாக்கிரத…இப்பமே சொல்லிப் புட்டேன். காலேசுக்குப் போனமா..வந்தமான்னு இருக்கோணம். எதாச்சும் வில்லங்கத்தை கொண்டுட்டு வந்து வீட்டாண்ட நிருத்தினே…அம்புட்டுத் தான். பெறவு…ஆத்தாளும் மவளும் ஆவியா அலையுறாங்கன்னு ஊரெல்லாம் கதை சொல்லும்படியா ஆயிறும் .

இதைக் கேட்டதும்..தாமரை நிமிர்ந்து அம்மாவை முறைத்து ஒரு பார்வை பார்க்கிறாள்..!

என்னாத்துக்கு இப்போ அப்படி ஒரு பார்வை பார்க்கிறே.?

ம்ம்….ஒரு தாய் பேசுற பேச்சா பேசுற நீ…?

அடிபோடி….பட்டவளுக்குத்தேன் தெரியும்…தேள் கொட்டின வலி . என் ஆசையை நீ அணைச்சீன்னா….உன்னியவும் நான் அழிச்சுருவேன்னு சொல்ல வந்தேன். எப்படியோ உன் தலைக்குள் இது ஏறணம் ……அம்புட்டுத்தேன்…சொல்லிக் கொண்டே எழுந்தவள்….”இப்படி கரண்டு கொடுக்காம  சத்தியாக்கிரகம் பண்ணுறாவுளே ..”படிக்கிற புள்ளைங்க எப்படி படிக்கும்? ஒத்தை ஒத்தையா மெழுகு வர்த்தியை  எம்புட்டு தான் ஏத்துறது. நேத்துக் கூட நூத்துக் கெணக்கா சனங்க ஒத்தை மெழுகு வர்த்தியை  எரியவிட்டுத் தூக்கி புடிச்சுக்கிட்டு “போராடுவோம்…போராடுவோம்” ன்னு  கத்திக்கிட்டே போனாங்க….என்ன போராட்டம் நடந்தால் என்ன நிலைமை என்ன மாறியாப் போச்சு.? அங்கன புயல்,இங்கன வெள்ளம் ன்னு சொல்றாப்பல இல்ல இருக்கு இங்க இப்ப இப்படி கரண்ட்டு கட்டு.இந்த இருட்டுக்குள்ளார  என்னத்த சமையல் செய்து ….என்னத்த சாப்பிட்டு..! அலுத்துக் கொண்டே போகிறாள் சரோசா.

யம்மாவ்….அம்மா……யம்மாவ்.…! என்று தாமரை போனவளைச் சத்தமாக அழைக்கிறாள்.

என்னாடி..இம்புட்டு நேரம் அங்கன தான உட்கார்ந்திருந்தேன்…அப்போ என்ன வாயில கொழக்கட்டையா வெச்சிருந்தே….இங்க வந்ததும் இந்தக் கத்து கத்தறே…!என்னா …வேணும் .?நானே இந்த இருட்டுக்குள்ளார பாத்திரத்தை  தடவிகிட்டு நிக்கிறேன்…இதுல இவ வேற…என்று சலித்துக் கொள்கிறாள்.

ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே….பட்டுன்னு கிளம்பிப் போயிட்ட…அதான் கூப்பிட்டேன்…!

அதான்…நீயும் ரோசாத்தோட்டமா வெளியில் நடந்து போறே….உன்னையே நீ பாதுகாத்துக்க வேணும். எவனையும் ஓரக்ககண்ணாலக்  கூட ஏறெடுத்துப் பார்த்துப்புடாதே..போக்கிரிப் பயலுக…சாக்கிரத..!..எவன் எந்தக் கேள்வி கேட்டாலும் வாயே தொறக்காதே …வெளங்குதா? பொழப்பத்தவனுங்க…..அலைவானுங்க….எவ கெடைப்பாள்னு ..! மாட்னா.அம்புட்டுத்தேன் ..ஏப்பம் விட்ருவானுங்க . பொழுதோட வீடு வந்து சேரு …தெனம் என் அடி வவுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டுத்தேன்….அம்மாந் தொலைவுக்கு உன்னிய படிக்க காலேசுக்கு அனுப்புறேன்.வெளங்குதா.?

போதும்…போதும்….இப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்து என்ன செய்யப் போறே….உனக்குப் புடிச்ச ஒருத்தனுக்கு என்னிய  கட்டி வெக்கப் போறே…அந்தாளு மட்டும் என்ன செய்யப் போவுது…? மூணு முடிச்சுப் போட்ட தெம்புல என்னிய அடக்கி வைக்கும்…உன்ன மாதிரியே பொத்திப் பொத்தி வீட்டுக்குள்ளாறயே  வைக்கும்..அப்போ நான் எப்போ தான் இந்த உலகத்தைப் பாக்குறது? உன்னிய மாதிரி ரெண்டே ஊரு….குறிஞ்சிப்பாடியும் செவகாசியும் தான் உலகம்னு சொல்ல முடியும்.

எனக்கு நெறைய இடம் பார்க்கணும். நிறைய ஊரைப் பார்க்கோணும்.பலபேரோட பழகணும் ..! இதெல்லாம் என் ஆசை..!

வாயைக் கொஞ்சம் மூட்றியா ..! இந்த ஆசை வந்துச்சுன்னாலே பொட்டப்புள்ள சீரழிஞ்சுதேன் போவா…மொத்தல்ல உன் ஆசையை அடக்கு. அப்பத்தேன்…அம்புட்டும் சரியாவும். பெத்தத் தாய் சொல்லும் சொல்லுல இருக்குற நியாயம் அப்பப்ப வெளங்காது….! என்னிக்காவது அனுபவப்பட்டு அழுகும்போது மனசு இடிச்சு இடிச்சு சொல்லும்…!

ம்ம்ம்…எனக்கு நல்லா வெளங்கிருச்சு…! உன்னோட கூட்டு சேர்ந்தால்…இந்தப் பொட்டல் காட்டைத்  தாண்ட மாட்டேன்னு..சொல்லியபடியே…கோபத்தோடு நோட்டை மூடி வைக்கிறாள் தாமரை.

சும்மாப் போனவளை இழுத்து வெச்சு வாயைப் புடுங்கி…இப்போ நீ வம்பு வழக்குறியே..சரோசா இப்போது தாமரையை அதட்டுகிறாள் . என்னமோ சொல்லப் போகுதாக்கும்னு பார்த்தால்…வம்புக்கு நிக்குது…!எள  ரத்தம்ங்கறது சரியாத்தேன் இருக்கு.

யம்மா….நான் ஸ்கூல் படிக்கும்போது அரசு சைக்கிள் கொடுத்துச்சில்ல . உனக்கு தையல் மெஷின் கொடுத்துச்சி !  அதுல தானே நான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்தேன். இப்போ அரசு…லாப்டாப் கொடுத்துச்சு இல்ல…  ஆனால் அதுக்கு இப்போ கரண்டு தான்  இல்ல !  தையல் மெஷின்  தூங்குது !   லாப் டாப்  மேஜைக் கடியில் கிடக்குது.   எனக்கு இப்ப ஒரு ஸ்கூட்டி  தான் வேணும்……நீ இந்த ரெண்டு மாட்டை வித்துட்டா எனக்கு ஒரு ஸ்கூட்டி  வண்டி ரெடி.

என்னத்த விக்க சொல்லுத….மறுபடியும் சொல்லு…கேப்பம்…

அதோ…அந்த ரெண்டு பசு  மாட்டையும்…தான் .!சொன்னதும் அவள் மேல் எதிர்பாராமல் சுளீரென்று வந்து விழுந்தது….முருங்கைக் கொம்பு..

முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்த சரோசா….ஆத்திரத்தில்….இலையை உருவியபடியே…”இதுக தான் இப்போ நம்மக் காப்பாத்துதுக…இத்த வித்துப் போட்டு உனக்கு வண்டி…வாங்கி அதுல நீ ஏறி ஒட்டி எங்கே போயி பிச்சை எடுக்கப் போறேங்கறேன்..? பசுவ விக்கணுமாம் . நல்லா வக்கணையா  சொல்லுறதப் பாரு..!

நான் தான் காலேஜே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன்…நீ தான் பிடிவாதம் பிடித்து சேர்ந்துக்கிட்டே . உனக்கு வர ஆசைக்கெல்லாம் நான் அகலக்காலு வைக்க முடியாது. அதான் பஸ் பாஸ் வாங்கி தாரேனில்ல…. அது போதும் போ. நான் என்ன வண்டியா  ஒட்டிக்கிட்டு இருக்கேன்…எங்கிட்டுப் போனாலும் நடந்து போறேன்…தெரிஞ்சுக்க வண்டி வேணுமாம்…வண்டி..பெரிய ஜமீன்  வீட்டு வாரிசு….!ஆனையைக்  கூட வாங்கிறலாம்…அங்குசம்…அதான் வேளா  வேளைக்கு  பெட்ரோல் எவ ஊத்தறது…? கொஞ்ச விலையா விக்கிறது பெட்ரோலு . நம்ம வீட்டுல ஒத்தயாளு  அதும் பொம்பளயாளு சம்பாத்தியம்டி….அதப் புரிஞ்சுக்கிட்டு பொழப்பைப் பாரு போ…

யம்மா….உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?

வரும்…வரும்…சமஞ்ச பொண்ண உலக வாட்டமே அறியாத மவளை வீட்டுல  வெச்சுக்கிட்டு என் மொகரக் கட்டைக்கு நல்ல வார்த்தை அதான்…விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனாப்பல …! என்று எரிந்து விழுகிறாள் சரோசா.

அடச்சை…..ஆண்டவனுக்குக் கண்ணில்லை…இப்படி திகில் பிடிச்சவ மடியில் என்னைக் கொண்டாந்து போட்டார் பாரு…தாமரை திட்டிக் கொண்டே எழுந்து வாசல் திண்ணைக்கு சென்று உட்காருகிறாள்.

அடியே….வேணும்னா மைசூர் மகாராஜாவுக்குப் பேத்தியா  பொறந்திருக்க வேண்டியது தானே….நானா வேணாம்னு சொன்னேன்…..சரோஜாவின்  குரல் பின்னாலிருந்து வந்து தாமரையின் தோளைத் இடித்தது..

கிராமத்துக் காற்று…இதமாக குளிர்ச்சியாக வந்து தாமரையின்  முகத்தை தடவிச் செல்கிறது….அன்பாக.

தென்றலுக்கு அசைந்து ஆடும் அங்கிருந்த வேப்பமரத்தைப் பார்த்து ….”எனக்கு ஒரு வண்டி வேணும்னு கேட்டதுக்குப் பார்த்தியா….என்ன மாதிரியெல்லாம்   பேச்சுக் கேக்க வேண்டியிருக்குதுன்னு .இந்த அம்மாவுக்கு என் மேல பாசமோ, அன்போ இல்லை….எப்பப் பாரு சிடு சிடுன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க….பேசாமல் உன்ன மாதிரி மரமா நின்னிருக்கலாம்…எங்கியும் போகாம ஒரே இடத்தில் நின்னாப் போதும்…” என்று  முணுமுணுத்தாள்.

மரமும் சந்தோஷமாகத் தலையாட்டியது. திடீரென்று இரண்டு பச்சைக் கிளிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே…கீ… கீ… கீ… என்று சந்தோஷமாகப் பறந்து சென்றது.

இந்தப் பறவைகள் கூட அது இருக்கும் இடத்தில்  எவ்வளவு சந்தோஷமா இருக்கு. எனக்கு மட்டும் ..இந்த வெறிச்சோடிக் கெடக்கும்  கிராமம் அலுத்துப் போச்சு…மனசுக்குள் ஒரு தேடலோட எங்கியாவது போயிறலாம் போல இருக்குது.!..அதனாலத் தான் அம்மா மேல கூட கோவம் கோவமா வருது..பாவம் அவுங்க தான் என்ன செய்வாங்க….என்று நினைத்துக் கொண்டே…அம்மா …அம்மா…..எனக்குத் தூக்கம் வருது..நான் தூங்கப் போறேன். என்று சொல்லிக் கொண்டே பாயை உதறி விரிக்கிறாள் தாமரை.

அவள் அம்மா வாங்கித் தராத ஸ்கூட்டியில் அவள் இரவு முழுதும் ஒய்யாரமாக ஒட்டிக் கொண்டிருந்தாள் கனவில்.

பறவைகளின் ஒலியோடும், சேவலின் “கொக்கரக்கோ” வும்…பசு மாட்டின் கழுத்து மணியின் “கிணி  கிணி …” சப்தமும்…..கூடவே…”ம்ம்மா...ம்ம்மா…என்று கத்தும் குரலுமாக கிராமத்துப்  பொழுது புலர்ந்தது.

அவசர கதியில் காலை வேலைகளை முடித்துக் கொண்டு…காலேஜுக்கு கிளம்பும் மகளைப் பார்த்து வெள்ளன வந்துரு.. ..என்று குரல் கொடுக்கிறாள் சரோஜா.

ம்ம்…சரி…சரி..வந்திர்றேன்...தோளில் ஊஞ்சலாடும் புத்தகப் பையோடு கைகடிகாரத்தைப் பார்த்தபடியே “அச்சச்சோ நேரமாயிட்டுதே….பஸ் போயிருச்சோ?…மனம் பரபரத்தபடியே…இந்த ஒரு பஸ் தான் இந்த கிராமத்துக்கு உள்ளே வந்து போகுது. இத்தை விட்டா ரெண்டு மயிலு நடக்கணும்…அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு.இதெல்லாம் ஒரு ஊரு…இதெல்லாம் ஒரு பொழப்பு…இந்த நூற்றாண்டில் கூட இந்த கிராமம் எதுவும்  மாறவே இல்லை..இன்னும் என் பாட்டி காலத்து போக்குவரத்து தான்.இங்க இருக்கற வயசானவங்க  இன்னும் ரயில் வண்டியைக் கூட பார்த்ததில்லையின்னு சொல்லுவாங்க.எல்லாத்துக்கும் அஞ்சு மயிலு நடக்கணும்….நினைத்துக் கொண்டே எட்டி நடை போடுகிறாள். பனை மரம் தான் பஸ் ஸ்டாப்பு. அதன் அருகில் வந்து நின்று கொண்டு…” ஏய்..உன்னைத்  தான் பஸ்சு போயிடுச்சா? என்று கேட்கிறாள்..

பின்பு அண்ணாந்து பார்த்துவிட்டு…இதுக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு…?பண மரமா வளர்ந்து நிக்கிறியே தவிர வாயத் தொறந்து பதிலா சொல்ல மாட்டேங்குற…. என்று அந்த மரத்தை ஒரு தட்டு தட்டுகிறாள் தாமரை.

அவளுக்கென அந்த கிராமத்தில் மரங்கள், குட்டிச் சுவரு, கல்லு மண்ணு, குளம், குருவி..குட்டை..இதெல்லாம் தான் தோழிகள்..அவள் வீட்டு வாசல் மரம் தான் அவளது ஆத்மார்த்தமான தோழி.சந்தோஷமோ , துக்கமோ…அவள் அந்த மரத்தோடு நின்று  பேசிக் கொள்வாள்.அதை விட்டால் இந்த பஸ் ஸ்டாப்பு பனை மரம் தான்.

அவசர அவசரமாக இன்னும் சில தெரிந்த முகங்கள்.வருவதைப் பார்த்ததும்..அவளுக்கு ஒரு நிம்மதி..ம்ம்..இன்னும் பஸ்ஸே  வரலை…நினைத்தவுடன்…தூரத்தில் உறுமிக்கொண்டு பஸ் வரும் சத்தம் கேட்டதும்..இவளும் ஏறுவதற்குத் தயாரானாள் .

பூதாகாரமாக வந்து இவள் அருகில் உரசிக் கொண்டு நின்றது பஸ்.

இவள் படி ஏறும் போதே…”ம்ம்..ஏறு…ஏறு…ஏறு...என்று சொல்லிக் கொண்டே இவளுக்கு நேராக எதிரே வந்து நின்று கொண்டான் அந்த கண்டக்டர் கமலக் கண்ணன்.அவன் முகத்தில் இவளைக் கண்டதுமே ஒரு பிரகாசம்.ஒரு மந்தகாசப் புன்னகை.

தரையிலிருந்து தாவி வானுக்கு ஒரு வெண்ணிலா ஏறியது போலிருந்தது அவனுக்கு.

பின்பு “போலாம்… ரைட் ” என்று நீண்ட விசில் அடித்தவன்..கையோடு  சென்று அங்கிருந்த டேப் ரெக்கார்டரை போடுகிறான்…அதிலிருந்து அவளுக்காக அவன் முன்பே செட் பண்ணி வைத்திருந்த பாடல் பஸ்ஸை  ஒரு உலுக்கு உலுக்கியது..

“சௌக்கியமா கண்ணே…
சௌக்கியமா….சௌக்கியமா…கண்ணே
சௌக்கியமா…சௌக்கியமா…”

என்று உச்சஸ்தாயியில்  பாடிக் கொண்டிருந்தது. அதன் பின்பு அந்த பஸ் யாருடைய அவசரத்துக்கும் ஓடவில்லை…நடந்து போனது போலிருந்தது அவளுக்கு.

“போச்சுடா…இந்த ஜொள்ளுப் பார்டி கிட்ட இருந்து தப்பிக்கணும்…இவள் இடம் பார்த்துக் கொண்டு நிற்க…உள்ள போ…உள்ள போ..என்று கடமைக்காக குரல் கொடுத்தாலும்…கண்களும், கைகளும் சாடையாக அவளுக்கான அந்த முன்பக்க சீட்டைக் காண்பித்து அங்கே உட்காருங்க…என்றது.

சரி..போனால் போகட்டும் என்று அவன் கை காட்டிய இடத்தில் போய்  அமர்ந்து கொண்டவள்.ஜன்னல் வழியாகப் பார்வையைத் திருப்பி…இன்னைக்கு என்ன ஆனாலும் இந்தப் பக்கத்தை விட்டுத் முகத்தைத் திருப்பக் கூடாது. ஆளப் பாரு…பாட்டுப் போடறான்…சௌக்கியமா?ன்னு கேட்டு…நேத்து ஒரு நாள் வரலையின்னா…இப்படியா? எல்லாம் குசும்பு.

ஒரு மனது திட்டிக் கொண்டிருந்தது.இன்னொரு மனமோ…

சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி..!

கூடவே பாடிக்கொண்டிருந்தது.

திரும்பவே கூடாது என்ற வைராக்கியம் இருந்தாலும்….பொறுமையை இழந்து…கொஞ்சம்…சீக்கிரமாப் போங்க….காலேஜுக்கு லேட்டாகுது…என்று டிரைவரைப் பார்த்து சொல்கிறாள்.

“சீக்கிரம் போயி எங்க முட்டணும்…காலேஜு தானே எல்லாம் போகலாம்…என்கிறான்…அவன் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு.

திரும்பியவள்..நினைத்துக் கொள்கிறாள்..”இந்நேரம்  நம்மகிட்ட மட்டும் ஒரு ஸ்கூட்டி இருந்துச்சுன்னா.. காலேஜுக்கு ரெண்டு வாட்டி கூட போயிட்டு வந்திருப்பேன்…என்ன ஜொள்ளுப் பார்ட்டி இது….வேணுமின்னே பண்ணுதுங்க.

தங்கச்சி……..என்ன படிக்கிறாப்புல…? டிரைவர்…ஓட்டிக் கொண்டே இவளைப் பார்த்துக் கேட்க.

நான் தங்கச்சியா இவனுக்கு ?     இவன் எப்போ பிறந்தான் என் கூட ?

இவள் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி…”ம்ம்ம்…ஏன்..?” என்று பதில் கொடுக்க.

அருகில் வந்து நின்ற கண்டக்டர் ” பாஸ்..பாஸ்…எடு..”என்று அவளிடம் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறான்

இவளும்…குனிந்து புத்தகப் பையில் கையை விட்டுத் தேடும் போது …

“தலையைக் குனியும் தாமரையே…
உன்னை எதிர்பார்த்து…உள்ளங்கைகள் வேர்த்து…”

என்று ஆரம்பிக்கிறது பாடல்…

அடப்பாவி…இதுக்கும் ஒரு பாட்டா…?அவளுக்குள் பொங்கி வந்தது கோபம்…இருந்தாலும்..அடக்கிக் கொள்கிறாள்.

சே….இன்னும் எத்தனை தூரம் போக வேணும்..அதுக்குள்ளே இவன் பாட்டுப் போட்டே என்னைப் பைத்தியமாக்கிடுவான்..நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு பாட புத்தகத்தை எடுத்து அதில் பார்வையை ஓட விடுகிறாள்..இருந்தும் மனசு அவளை விட்டு வெளியே குதித்து நிற்கிறது.

“பூவாடைக் காற்று…ஜன்னலைச் சார்த்து…
உத்தரவு தேவி…தத்தளிக்கும் ஆவி…”

பாடலோடு சேர்ந்து அவனின் குரலும்…ஒலிக்க…..ஜன்னலருகில் அமர்ந்த இவளுக்கு கோபம் கோபமாக வருகிறது.
“இவன….என்று நற  நற  வென்று பல்லைக் கடித்துக் கொண்டு “இன்னும் கொஞ்சம் சீக்கிரமாப் போங்க…நேரமாகுது…” என்கிறாள்.

உடனே…கண்டக்டர்….”நீயும் நானும் தான் காலேஜு வாசலை மிதிக்கலை….நீ வண்டி ஸ்டியரிங்கைக்  கட்டிக்கிட்ட..நான் தோல்ப்  பையைக் கட்டிக்கிட்டேன்…சீக்கிரமாப் போப்பா….என்று குரல் கொடுக்க…பஸ்சுக்கும் ரோஷம் வந்தது போல வேகமாகிறது.

பஸ்ஸில் அமர்ந்த சிலர்…விடலைப் பசங்க கையில் பஸ்ஸைக்  கொடுத்தால்….என்னமா…. லூட்டி அடிக்குறானுங்க பாரேன்….இவனுங்க இப்படி இருந்தா….எப்படி விபத்து நடக்காம இருக்கும்..என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

எங்கே கண்டக்டர் காதில் விழுந்துவிட்டால்…பிறகு “எறங்குய்யா…” என்று வனாந்திரத்தில் எறக்கி விட்டுப்புட்டா என்னாவது.. என்ற பயம் தான்.என்ன செய்ய.?..அமைதியாக பஸ் சென்று கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப்பு காலேஜு..வாசல்…..எறங்கு…என்று சத்தம் கொடுத்தபடியே நீண்ட விசிலை அடித்து இவளை ஆசையோடு பார்க்கிறான் அவன். கூடவே பாடலும் மாறி ஒலிக்கிறது.

காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து –
கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்…

அடுத்து….வந்தப் பாடலைக் கேட்டபடியே…எப்படியெல்லாம் மெசேஜ் கொடுக்கிறான்  பார்…என்றெண்னியவள் அவளது காலேஜு ஸ்டாப் வந்ததும் இறங்கி நடக்கிறாள்…மனதுக்குள்..”காத்திருப்பானாம்..கமலக் கண்ணன்….”என்று சொல்லிக் கொண்டே பஸ்சின் உள்ளே பார்வையை கொண்டு செல்ல…அந்த ஜன்னல் வழியாக அந்த கண்டக்டரின் கண்கள் இவளையே மொய்த்துக் கொண்டிருந்தது.அவனது ஒரே பருந்துப் பார்வையில் இவள் மனம் பல விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு இதயத்தை இழுத்து இடம் மாற்றி விடுவது போல திடுக்கிட்டாள் தாமரை.  இவள் நடக்க நடக்க…இவளது மனத்தைத் தூக்கி கொண்டு அந்த பஸ் தூரத்தில்  புள்ளியாக மறைந்தது.

காலேஜுக்குள் நுழைந்ததும்..தோழிகளின் அரட்டை, பாடத்தில் கவனம் என்று பஸ்ஸை சுத்தமாகவே மறந்து போயிருந்தாள். தாமரை. மாலையில் வீடு திரும்பும் நேரம் வர வர….பஸ்ஸின் நினைவும் வந்தது.கூடவே அவனது நினைவும் மெல்ல வந்து எட்டிப் பார்த்தது. “காத்திருப்பான்..கமலக் கண்ணன் .” என்ற பாடல் வரிகள் நெஞ்சோடு வந்து நின்றது.

இப்போ அவருக்கு ட்ரிப்  டூட்டி இருக்குமோ.? ..இருக்க வேண்டும் என்று வேண்டிக்  கொண்டாள் தாமரை.

இன்று காலை வரை கூட அவனது பார்வையில் எரிச்சலானவள்….அவன் அவளைக் பார்வையால் தொடருகிறாள் என்பதை உணர்ந்தவள்…. இனிமேட்டு பஸ்சிலே  ஏற மாட்டேன்…இந்தக் கண்டக்டர் ஆள் மோசம்….யாரை…யார் பார்த்து ஜொள்ளு விடுவது.? அம்மாகிட்ட சொன்னா அம்புட்டுதேன் பல்லைப் பேத்துருவாங்க…என்றெல்லாம் மனசில் கரித்துக்  கொட்டியவள்  இன்று  மெல்ல மெல்ல அவன் பெயர் என்னவாயிருக்கும்…ஒருவேளை கமலக் கண்ணனோ…?  என்று யோசிக்கும் வரை சென்று  விட்டாள் .

நாள் ஆக நாள் ஆக இவளின் மனத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே அவனும் இவள் ஏறும் போதெல்லாம் இவளுக்காகவே பதிவு செய்த பாடல்களை ஒலிக்க  விட்டு  இவளது முக பாவனையை பல பேர் பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான் இவள் முகம் பஸ் ஏறும் போதே பிரகாசத்தை முகத்தில் மாட்டிக் கொள்ளும்..

ஓரக் கண்ணால் பார்ப்பதும்..தலையைக் …குனிந்து  சிரிப்பதும், கொஞ்சல் பார்வை பார்ப்பதும், பஸ்  பாஸ் கொடுக்கும் சாக்கில் சாக்கிலட்டு கை மாறுவதுமாக இவர்களது “காதல் கொண்ட மனம்” படும் அவஸ்தைகளை முகம் எழுதி எழுதி அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தது.

இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இதை கவனித்தாலும் கவனிக்காதவர்கள் போலவே ஜாக்கிரதையாக தெரியாமல் கவனிக்கத் தொடங்கி விட்டனர்.அவர்களுக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு.

வழக்கம் போலவே வீட்டுக்குள் வந்து விட்டாலும்…இவள் மனம் மட்டும் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.இரவும் பகலும். இன்றும்..அவள் இறங்கும் போது  ஒலித்த பாடல் வரிகள் வீட்டுக்கு வந்தும் …..

“மனசு தடுமாறும்…அது நெனச்சா நெறம் மாறும்….
பாறையில….  பூ மொளைச்சு பார்த்தவுக யாரு,,,,?
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு…”

என்று வீடு வந்ததும்  தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள் தாமரை.

என்னாதுடி பாட்டு இது…..சாயங்கால வேளையில….வெளக்கு  வச்சி  சாமிக்கு நாலு பாட்டு பாடாம….எதுக்கு ஆயுசு நூறு…? என்ற சரோஜாவின் கேள்வி தாமரையின் வாய்க்குப் பூட்டு போட்டது.

ஒரு விதத்தில் இந்த இரண்டு வாரத்தில் இவள் மறுபடியும் வண்டி வாங்கித்தா என்று கேட்கவே இல்லை நல்ல வேளை ..

ஒரு வேளை  மறந்து போச்சா?  இல்ல…அம்மா கஷ்டப் படுதே…ன்னு புத்தி வந்து பேசாமல் இருக்காளா…எது எப்படியோ நாமாக வாயைத் தெறக்க வேண்டாம். இப்பப் போறபடி  போகட்டும்…தாமரை இப்பல்லாம்  சந்தோஷமாத்தேன் இருக்கா. என்கிட்டக் கூட எந்த வம்பும் வளர்க்கல .

அடியேய்…..தாமர…..நேத்து என்ன நடந்துச்சுன்னு நீ சேதி கேட்டியா..?

என்னவாம்..நான் எதையும் கேட்கலை…சொல்லிக் கொண்டே வேப்ப மரத்தின் அருகில் சென்று நின்று கொண்டாள் . இன்று அவளுக்கு அதோடு பேச நிறைய விஷயங்கள் இருப்பது அம்மாவுக்கு எப்படித் தெரியும்?

உன் வயசு தான் இருக்கும் அந்தப் பொண்ணுக்கு.ராத்திரி கரண்டு வேற இல்லயா… வேலைக்குப் போயிட்டு பஸ்ஸை விட்டு எறங்கி தனியா ஊட்டுக்கு வார வழியில, இருட்டுல ..யாரோ நாலு போக்கிரிப் பயலுவ வாயிலே துணியைத் திணுச்சி  அவளை மடக்கி கடத்திக்  காருல தூக்கிப் போட்டுகிட்டு….வயக்காட்டுக்கு போயி பலவந்தப் படுத்தி நாசம் பண்ணிட்டானுவுங்க….அத்தோட நிக்காம..இன்னும் ரெண்டு பேரு ஆட்டோல வந்து படு பாவிங்க…ஆறுபேரு சேர்ந்து இந்தப் பச்சை புள்ளைய துவைச்சுப் போட்டுட்டு…வெளில சொன்னே….குடும்பத்தோட வெட்டிப் போடுவேன்னு பயமுறுத்திட்டு போயிருக்கானுங்க..நாசமாப் போறவுனுங்க …! அந்தப் பொண்ணு வெள்ளன கருக்கலோட வீட்டுக்குப் போயி அழுதிருக்கு…ரெண்டு நாள் செண்டு தான் போலீசுக்குப் போயிருக்கு….எவ்வளவு கொடுமை…பெத்த வயிறு எப்படி பத்தி எரியும், துடிக்கும் ? பொம்பளப் பிள்ளைங்கன்னா கிள்ளுக் கீரையாப் போச்சு இவனுங்களுக்கு….என்று ஆத்திரத்தை கொட்டிக் கொண்டிருந்தாள்.

அடியே….நீ சாக்கிரதையா சூதனமா இருந்துக்கடி….உலகம் கெட்டு நாசமாப் போச்சு….பொம்பளப் பிள்ளைக்கு பாதுகாப்பே இல்லை…பெறவு  போலீசு வந்து என்னத்த நொட்ட ..?  வவுத்துக்கு சோறு விளையும் வயக்காடு…. அந்தப் புனித பூமியையும் சேத்து சிதைச்சிருக்கானுங்க ….காவாலிப் பசங்க..! பூமாதேவி சூடு போடாமல்சும்மா விடுவாளா?

அந்த  ராணியம்மாவுக்கு என்னா…? தோட்டத்து விளக்குல வாக்கிங்கு போவும்…இங்க எவ மக சீரழிஞ்சா என்னா..எவன் எவளோட தாலிக் கொடியை அறுத்துக்கிட்டுப் போனா என்னா…இருட்டுல தானே இம்புட்டுக் களவாணித் தனமும் நடக்குது…
ஆனாக் கூட கரண்டு தராம சத்தியாகிரகத்தப் பாரு….எங்க காலத்துல இப்படியா இருந்துச்சு…? படிக்கிற புள்ளங்க அம்புட்டும் ஃபெயிலாயிடும் பாரேன்….!சொல்லிக் கொண்டே மகளைப் பார்க்கவும்…தாமரை வேறு ஏதோ இன்ப நினைவில்….மரத்தோடு சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். அம்மாவின் உபதேசம் காதிலே படவில்லை.

நீ என்னாடி…நான் இம்புட்டு சொல்லுதேன்…..நீ எத்தையோ பறி  கொடுத்தவ மாதிரி அங்கன என்னத்த பாராக்கு பார்த்துக்கிட்டு நிக்கிறவ ?

மிக அருகில் வந்து அதட்டிய குரலைக் கேட்டு ஆடிப் போனாள்  தாமரை…

ம்ம்ம்….சுயநினைவுக்கு வந்தவளாக…..சொல்லுங்க மிஸ் !…என்று உதறலோடு சுதாரித்துக் கொள்ள.

அடடா…..காலேசு கனவா… உனக்கு ?  …இல்ல அங்கியும் இப்படித்தேன்….. கவனிக்காம இருந்துபுட்டு டீச்சரம்மாட்ட திட்டு வாங்குவியா?

ஒரு ப்ராஜெக்ட் வேலை..ம்மா..உனக்கு சொன்னாப் புரியாது.அத்தப் பத்தி தான் யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். ச்சே….இப்போ அதெல்லாம் மறந்து போச்சு எல்லாம் உன்னால..!

ம்குக்கும்….இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…ஆ…ஊ…நா என் தலையில கல்லை ஏத்து…..வயசுப் புள்ளைக்கு என்னாத்துக்கு மறதியும்…சோம்பலும்ன்னேன். என்னது ?   காலேஜு புராஜக்டா  ?  இல்லை காதல் புராஜக்டா ? ம்ஹும்…எனக்கென்னவோ டவுட்டாவே இருக்குது. உன் வயசக் கடந்தவ தானே நானும்…!

நீயே…இப்படி குத்தி குத்திப் பேசினா…நானும் ஒரு நாளைக்கு ஆமாம்னு சொல்ல வேண்டியதாப்  போயிறும் ..ஆமா..!
கோபமானாள் மகள்.

யம்மாடி….காளி   வேஷம் கட்டாதே…….உன்னை ஏதும்  சொல்லலை….நாளைக்கு நானும் டவுனுக்குப் போவோணம்….மாட்டு லோனுக்குப் பணத்தைக் கட்டிப்போட்டு புண்ணாக்கு வாங்கியாரோணம் …கருக்கல்ல  கெளம்பிருவேன்…இப்பமே சொல்லிட்டேன்.

இவளுக்குத் திக்கென்றிருந்தது….என்கூடவா நீ வரப்போறே ? உள்ளுக்குள்ளே திக் திக் என்று கடிகாரம் ஓட ஆரம்பித்தது…

வந்தாத்தான் என்னவாம்…? ஆத்தான்னு  சொல்ல வெக்கமா..? என்றவள் மேற்கொண்டு பேசாமல் உறங்கிப் போனாள்

அடுத்த நாள் சொன்னது போல பஸ் வந்ததும்…சரோஜா பஸ்ஸில் ஏறும்போது…

ஏய்….கெளவி…சீக்கிரமா ஏறு…..காலேஜு பொண்ணுங்க ஏற வேணாம்… இப்படி எடத்தை அடைச்சுக்கிட்டு …கண்டக்டரின் குரல்….தாமரைக்கு திடுக்கிட வைத்தது..

க்கும்….கோடாலிக் கொண்டையும்….வாயில வெத்தலையும் கண்டா…உன் கண்ணுக்கு கெளவியாத் தெரியரனாக்கும்….

அச்சச்சோ ..இது என் அம்மா….ன்னு இவருக்குத் தெரியாதே…….! போச்சுடா….இன்னைக்கு இந்த பஸ்சுல என்ன  கூத்து நடக்கப் போவுதோ… பேசாமல் பின்னாடி போயி உட்கார்ந்திரலாம்…என்று எண்ணி நகர்ந்தவளை….

வாராய் என் தோழி வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ

என்ற பாடல் தாமரையை மேள தாளத்தோடு பஸ் ரேடியோ வரவேற்றது.

அடியே…தாமரை…இங்க வந்து உடகார்ந்தா என்னா ? என்ற சரோஜாவின் குரலில் கண்டக்டர்..எப்புடி கூப்புடுது பாரு…என்னவோ இது தான் பெத்துப் பேருவச்சா மாதிரி..என்று முணுமுணுக்க …

இந்தா ….டிக்கெட்டு எடு …என்று சரோஜாவை அதட்டிவிட்டு அவனின்  கண்கள் தாமரையை மொய்த்தது.

இது தான் சாக்கு என்று…தாமரை…இந்தாங்க…இது என் பஸ் பாஸ் …அப்படியே என் அம்மாவுக்கும் ஒரு டிக்கெட்டு…என்று சொல்லிக் அருகில் சைகை காட்டி  காசை நீட்ட…!

ஷாக் அடித்த கண்டக்டர் தூக்கி வாரிப் போட…அன்று தன்   “காதல் வாகனத்தை”  ரேஸ் குதிரையைப் போல பறக்க வைத்தான்.

பாட்டெல்லாம் பத்திரமாப் போட்டான்..ஜாக்கிரதையாக சரோஜா கண்ணில் பட்டுவிடாமல்  தன்னை மறைத்துக் கொண்டான்  கண்டக்டர்.கமலக் கண்ணன்.சிறிது நேரத்துக்கு முன்னால்  இருந்த சவுடால் எல்லாம் அவனை அம்போ அரோகராவென்று விட்டு விட்டுப் போயிருந்தது .

நிம்மதிப் பெருமூச்சில் தாமரை காலேஜு ஸ்டாப்பில் இறங்கினாள் .அத்தனை நேர இறுக்கம் வெளியில் வந்ததும்….பறந்தது. உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தாள்.

சரோஜா பாங்க் வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டமே இல்லை. என்ன வெய்யில்…என்ன வெய்யில்…பிளௌஸ் எல்லாம் வேர்வை   இந்தாத்தா கொஞ்சம் நவுந்து தான் உட்காரேன்…அருகில் உட்கார்ந்திருந்தவளை நகரச் சொல்லி நன்றாக உட்கார்ந்து கொண்டவள்…ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்க முடியாமல்….”இந்தப் பாட்டும் பவுசும் யாரு கேட்டா உங்க கிட்ட…நிறுத்து   தம்பி..பஸ்ஸை விட்டு இறங்கும்போது தலைவலியோட இறங்கோணமாக்கும் …!  சலித்துக் கொள்கிறாள்.

இதுங்களுக்கெல்லாம் பிரச்சனை ஜாஸ்திடா….அதுங்க டேஸ்டே….தனி.என்று டிரைவர் மெதுவாகச்  சொல்லவும்…பாட்டு நிறுத்தப் படுகிறது

நீண்ட நேரம் காலியாகக் கிடந்த டிரைவர் அருகில் இருக்கும் எதிர்ப்புற சீட்டில் அடுத்த ஸ்டாப்பில் ஒரு இளவயது காலேஜ் பெண் ஏறி அமரவும்…பஸ் வேகத்தை விடுத்து மிதந்தது . சிறிது நேரத்திலேயே  அந்த காதல் வாகனத்தில் அவர்களுக்கு மட்டும் புரியும் மௌன பாஷைகள்… கண்ணோக்குகள், புன்முறுவல்கள்அங்கிருந்த சிலருக்கும் புரிய ஆரம்பித்தது.

இப்போ பஸ் காதல் திருவிளையாடல்கள் தினம் சீரியலாக வந்து விட்டன.

தனக்கு அருகில் அமர்ந்திருந்தவள் இதை நோட்டம் விட்டு “என்ன ஜன்மங்கள்..பொது இடம்னு கூடவாப் புரியாது….வீட்டில் அம்மா அப்பா கஷ்டப் பட்டு வயசுப் பொண்ணுகளை வேலைக்கும், படிக்கக் காலேஜுக்கும் அனுப்பினா….இதுங்க வசதியா டிரைவர் சீட்டுப் பக்கம் உட்கார்ந்துகிட்டு அவன் இவளைப் பாக்குறதும்…சைகையில பேசுறதும்.ஒரே அலம்பல் பண்ணுதுங்க..  பஸ் ரோமியோக்கள்  பொண்ணுகளுக்கு வலை விரிச்சு பிடிச்சுப் போட்டு கடைசீல பேரைக் கெடுத்திடுவானுக…!  அப்புறம் கல்யாணம் புஸ்வாணம்தான்.

போன மாசம் எங்கூட்டு பக்கத்து ஊட்டுல அவுங்க மக இப்படித் தான் ஒரு கண்டக்டரோட ஓடிப் போயி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிச்சு நல்லாப் படிக்கிற பொண்ணும்மா.    இந்தப் பயலுவ…..படிக்காமக் கொள்ளாம….பஸ்ஸை ஒட்டிக்கிட்டு கன்னாப்  பின்னான்னு பாட்டைப் போட்டு பொண்ணுங்கள சைட் அடிச்சு, கரெக்ட் பண்ணி…சொகுசா பெரிய எடத்துப் படிச்ச பொண்ணுகளா பார்த்து காதல்…ன்னு சொல்லி ஏமாத்தி கலியாணம் கட்டிக்கிறானுங்க…  அப்புறம் தாழ்மை உணர்ச்சியிலே குடிகாரப் பயலாகிப் போட்டு அடிப்பானுக படிச்சவளை !  பிறகு தாம்பத்தியம் தப்புத் தாளமா போகும் !

இல்லாக்காட்டி எவ இவனுங்களுக்கு படிச்ச பொண்ணக் கொடுப்பா…? ஒழுங்காக் காலேஜுக்குப் போன பொண்ணு நேரா சுவாமி மலையில போயி கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நின்னுச்சாம்..அந்தம்மா ஒரே அழுது புலம்பல்..பாவம் பின்ன கிளியை  வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி இல்ல ஆவுது…இப்போவே இங்க பாருங்க…என்று கண்ணைக் காட்டினாள் .

சரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது…யாரோ தன்  தலையில் ஆணி அடித்து இறக்கியது போலிருந்தது….கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்…இப்படியா நடக்குது கதை. என்று அந்தப் பெண்ணையே மெளனமாக பார்க்க ஆரம்பித்தவள்…பக்கத்தில் அமர்ந்தவள் சொன்னது சரி தான் என்று புரிந்ததும்…

.” இந்தாப்பா…கண்டக்டர்….ஏன்னா டிரைவர் பா இவன்…வண்டில ஏறின பொண்ணப் பார்த்து இந்த சிரிப்பு சிரிக்கிறான்…வண்டியை ஒட்டாமே உருட்டுறான்…என்னாது…லவ்வா..?

நாங்க வயித்தக் கட்டி வாயை கட்டி பொண்ணுங்கள கெராமத்தில இருந்து டவுனுக்கு படிக்கவோ வேலை பாக்கவோ அனுப்பினா போற வழியில இந்த மாதிரி பண்ணி அதுங்க மனசைக் கலைச்சு…பாட்டுப் போட்டு பாட்டுப் போட்டு பயித்தியக் காரியாக்கி…கட்டுனா இவனைத் தான் கட்டுவேன்னு சொல்ல வெச்சு… தலையில் பாறாங்கல்லைப் போட வெக்கிறீங்களே …

உன் பஸ்  ஓனர் யாரு சொல்லு..அங்கிட்டு போயி  நான் புகாரு கொடுக்கறேன்.  நானும் வயசுப் பொண்ணு வெச்சிருக்குறவ …  என்று பிடி பிடியென்று  வசைபாடிக் கொண்டு சத்தம்  போடுகிறாள்.

பயந்து போன டிரைவர் என்னடாது வம்பாப் போச்சு..இந்தம்மா பாட்டுக்கு போயி வத்தி குத்தி வெச்சா….வேலையில்ல போயிரும்…அப்பறம் வீட்டில் பெண்டாட்டி குழந்தைகளை யாரு பார்க்குறது..? அவளுமில்லக் காரித்  துப்பிட்டு போயிருவா..உள்ளுக்குள் பயந்தவன்… பதறி பஸ்ஸின்  வேகத்தைக் அதிகப் படுத்தினான்….

சம்பந்தப் பட்ட பெண்ணும் நடுங்கியபடியே… ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டிக் கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்து கொள்கிறாள்.

பார்த்தீங்களாம்மா..கொடுமையை…நல்லாக் கேட்டீங்க நீங்க..! இவங்களுக்கு  இப்படித் தான் கொடுக்கணும் …என்று இவளை மகிழ்வோடு பார்க்கிறாள் சரோஜாவை..

கண்டக்டர், சரோஜாவின் அருகில் வந்து…ஏதோ கோளாறுல செஞ்சுப்புட்டான்…..நான் பார்த்துக்கறேன்…நீங்க ஏதும் புகார் செஞ்சுப்புடாதீங்க….புள்ள குட்டிக் காரர்…..என்று மன்னிப்பு கோரும் தொனியில் சொல்லி சுமுகப் படுத்தினான்.

பார்த்து நடந்துக்கங்க…..எல்லா டிரைவருமா இப்படி இருக்காங்க….இதெல்லாம் , இப்படி இருக்குறவங்க இந்த வேலைக்கு லாயக்கில்லாதவனுங்க….வண்டி ஓட்ட வந்தா வண்டிய மட்டும் ஒட்டோணும் . டிக்கெட் கிழிக்கிற வேலைக்கு  வந்தால்
டிக்கெட்டை மட்டும் கிழிக்கணும்…..மாறி நடந்தால் அவுங்க சீட்டும் கிழிஞ்சிரும்னு எப்பவும் நினைப்பில் இருக்க வேணாமா?
அதுக்குத்தேன்…நான் சொல்றது…வெளங்குதா…!யாரும் புகார் கொடுக்க மாட்டாங்கன்னு மெத்தனமா  நினைக்கக் கூடாது.என்று சொல்லி விட்டு தொண்டையை கனைத்துக் கொள்கிறாள் சரோஜா.
ம்ம்ம்..வெளங்குது..வெளங்குது.. “ஆத்தாடி….விட்டா என் சீட்டேக் கிழிஞ்சிரும் போலிருக்கே.” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே பின்னாடி நகர்ந்து விட்டான் கண்டக்டர் .

சரோஜா பஸ்ஸை விட்டு  அவள் இறங்குமிடத்தில் இறங்கி…வீட்டுக்கு நடந்து  போகையில் ” தாமரை கேட்ட ஸ்கூட்டரை…எப்படியாவது ரெண்டு மாட்டை வித்தாவது வாங்கித் தரோணம்….அவளும் இப்படி பஸ்ஸில் போயி ஏதோ ஒரு தருதலை கண்ணுல பட்டு மனசு கலங்கிப் போவதற்குள் நம்ம மவளைக் காப்பாத்தியாவணும் ..இன்னிக்கு ஏதோ ஒரு பிள்ள செய்யுதுன்னு நாம சும்மா இருக்க முடியுமா? நாளைக்கே அது நம்ம வீட்டுக்குள்ளயும் வந்து எட்டிப் பார்க்காதுன்னு என்ன நிச்சயம்…? பிரச்சனைக்கு…இவ வீடுன்னு தெரியுமா? அவ வீடுன்னு தெரியுமா..? நாம தான் இனிமேட்டு கண்ணுல வெளக்கெண்ணெயை  ஊத்திக்கிட்டு கவனமா பார்க்கணும் .

எந்த மாட்டை சீக்கிரமா  விக்கலாம்.என்று யோசனையில் நடந்தாள் .

வீட்டுக்குள் நுழைந்ததும்…அவள் போட்டக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று ஒரு நோட்டில் கிறுக்கி வைத்துக் கொண்டாள் .

மாலையில் தாமரை வீடு வந்ததும்…அடியே.உனக்கு ஒரு சந்தோஷமான சேதி….நீ கேட்டாப்புல வண்டி வாங்கி தந்திறலாம்னு முடிவு செஞ்சிட்டேன் கடைக்கு எப்போ போகலாம். ரெண்டு மாட்டை வித்தாப் போதுமில்ல.. என்று சந்தேகமாகக் கேட்கவும்…

அதெல்லாம் வண்டியும் வேணாம் ஒண்ணும்  வேணாம்…நான் பஸ்பாஸ் எடுத்தாச்சு…இனிமேட்டு பஸ்சுல தான் போவேன்.எனக்கு பஸ் தான் பிடிச்சிருக்கு …! யானையைக் கூட வாங்கிறலாம் .அங்குசம் தான் வாங்க காக்கோணம் ….அதான்..பெட்ரோல்…பெட்ரோல்….! என்று அவள்  சொன்னதையே திருப்பி அவளுக்கே  சொல்லிவிட்டு புழக்கடை பக்கமாக  சென்று விட்டாள் தாமரை.

சரோஜாவின் மனதுக்குள் ஒலித்த அபாய சங்கின் ஒலி  அவளது  இதயஅறையைக் கிழித்துக் கொண்டு  செவிப்பறையைத் தாக்கியது. “எந்த பஸ்ஸில் இருக்கிறான் இவள் ரோமியோ  ?” கண்டுபிடிச்சு உலுக்கணும் .”… என்று.

வேதாளம் மீண்டும் முருங்கை  மரத்தில் ஏறிக் கொண்டது !   எப்படி அவளை மீட்டு தரையில் இறக்குவது என்று         யோசனையில் ஆழ்ந்தாள் அன்னையாய்  சரோசா  !

============================================================

Series Navigationசாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *