வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்

This entry is part 11 of 21 in the series 21 அக்டோபர் 2012

 

ஹெச்.ஜி.ரசூல்

 

ஆந்திரமாநிலம் சிறீனிவாசகுப்பத்தில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் சார்பில் திராவிட மொழிகளின் இருநாள் கவிச்சங்கமம் 19-10-2012 மற்றும் 20-10-2012 ஆகிய நாட்களின் நடைபெற்றது.ஒரு மாறுபட்ட அனுபவமாக இந் நிகழ்வு அமந்திருந்தது. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு மொழிக்கவிஞர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மூத்தகவிஞர்சுகுமாரன்,யுவன்சந்திரசேகர் ,திலகபாமா ஆகியோரும் தமிழ்கவிஞர்கள் சார்பில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த இசைக்கருக்கல் மட்டுமே விடுபடல். இதுபோல் கன்னடத்திலிருந்து அழைக்கப்பட்ட ஆரிப்ராஜாவும் பங்கேற்கவில்லை.

 

முதல்நாள் துவக்கவிழாவில் விசி பேரா. கன்கனல ரத்னய்யா,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புலிகொண்ட சுப்பாச்சாரி,தமிழின் மூத்த கவி சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கவி சுகுமாரன் தனது துவக்க உரையில் நவீனத்துவ கவிதைப்போக்குகளினூடாக உருவாகி உள்ள பெண்ணிய மற்றும் தலித்திய தமிழ்கவிதைப்போக்குகளை முன்வைத்து ஆங்கிலத்தில் தனது கட்டுரையை வாசித்தார்.

 

முதல் அமர்வாக பெண்ணியக் கவிதை அரங்கு நடைபெற்றது. கன்னடக்கவிஞர் மம்தா சாகர்(கன்னடம்) நெறிப்படுத்த சுபத்ரா(தெலுங்கு)திலகபாமா(தமிழ்)ரோஸ்மேரி(மலையாளம்) ஆகியோர் பெண்ணியக்கவிதை குறித்தும், பெண்ணியக்கவிஞர்கள் என்ற அடையாளம் குறித்தும் ,அடித்தள தலித்திய மாதிகா(அருந்த்தியர்)சமூக பெண்களின் வாழ்வுப்பதிவு குறித்தும் ,பாலியல் அரசியல்,பெண்ணுடலை எழுதுதல்,பெண்மொழி .பெண்ணின் இருப்பு என பல்வித சூழல்கள் சார்ந்து பன்முக அளவிளான விவாதங்களை முன்வைத்தனர்.

 

இரண்டாம் அமர்வில் தலித்தியக் கவிதை குறித்த உரையாடல் நிகழ்ந்தது.சுதாகர்(தெலுங்கு) நெறிப்படுத்தி தனது தலித் கவிதை அனுபவங்கள் குறித்து விரிவானதொரு பதிவைச் செய்தார். சாதிய கட்டுமானங்களுக்கு எதிரான கவிதைக்குரல்களை அடையாளப்படுத்தினார்.இந்த அமர்வில் பங்கேற்ற ரேணுகுமார்(மலையாளம்) கன்னட தலித்கவிதையின் முன்னோடியுமான மக்கள் கவிஞர் சித்தலிங்கையா வும் கலந்து கொண்டு தலித் கவிதையின் வரலாற்றுப்போக்குகள்,அதன் பன்முகப்பட்ட வடிவங்கள் குறித்து உரையாற்றினர்.

 

மூன்றாவது அமர்வில் சிறுபான்மையினரின் கவிதை என்ற பொருளில் அமர்வு நடைபெற்றது. அன்வர் அலி(மலையாளம்) நெறிப்படுத்த ஹெச்.ஜி.ரசூல்(தமிழ்) யாகூபு(தெலுங்கு) ஆகியோர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.முஸ்லிம்களின் அக மற்றும் புற வாழ்வியல் பதிவுகள் .நெருக்கடிகள், தொன்மங்களின் மறு உருவாக்கம்,கவிதைகளில் இடம் பெறும் கலாச்சார யதார்த்தம்,மாய யதார்த்தக் கூறுகள் உள்ளிட்ட படைப்பாக்க முறைகளும் விவாத தரப்பில் முன்வைக்கப்பட்டன.

 

இந்த அமர்வில் யாராலும் எழுப்பப்படாமல் மெளனமாக விடப்பட்ட ஒரு கேள்வி பிற அமர்வுகளை எல்லாம்  பெண்ணியக் கவிதை ,தலித் கவிதை என அடையாளப் படுத்திவிட்டு இந்த அமர்வுக்கு சிறுபான்மை யினரின் கவிதை என்று பெயரிடப்பட்டது ஏன் என்றுதான். சிறுபான்மையினரில் கிறிஸ்தவர்களும் இடம் பெறுவதால் இப் பெயரிடப்பட்டது என்று ஒரு பதிலைக் கூறினாலும் கூடஇந்த அமர்வில்  அவர்கள் பிரதிநிதித்துவம் இல்லை. பெண்ணிய அடையாளத்திலும், தலித்திய அடையாளத்திலும் அவர்கள் இடம் பெறுவதற்கான சாத்தியம் இருந்திருக்கிறது.ஒரு வேளை முஸ்லிம்கவிதைஅல்லது முஸ்லிம்களின் கவிதை என்று நேரிடையாகச் சொல்வதற்கான அச்சமாக இருந்திருக்குமோ எனவும் தோன்றுகிறது.

 

இரண்டாம்நாள் அமர்வு திறந்த வெளி அரங்கில் மிகவும் ரம்மியமான இயற்கைச்சூழலில் நடைபெற்றது.இதில் ஐந்து மொழிகளிலிருந்தும் இருபத்திரண்டு கவிஞர்கள் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்களின் கவிதைகளில் ஒன்று ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு அக்கவிதை  தெலுங்கு,கன்னடம்,தமிழ்,மலையாளம்,ஆங்கிலம் என் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு  நூலாக தொகுக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் புதியதொரு அரிய முயற்சியாக இருந்தது. இந்நூல்திராவிடியன் பொயம்ஸ் என்ற தலைப்பில் 235 பக்கங்களைக் கொண்டிருந்த்து.

 

இந்ந் நூலின்  வெளியீட்டு விழாவுக்கு பின்னர் சாகித்திய அகாதமி விருது பெற்ற தெலுங்கின் மூத்த கவி கே.சிவரெட்டி திராவிட மொழிகளின் கவிதைப் போக்குகள், மாறிவரும் குரல்கள்,படைப்பாக்கத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து உரையாற்றியபின் கவிதைவாசிப்பு நிகழ்ச்சி துவங்கியது.

 

தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,தமிழ் என மாறி மாறி கவிஞர்கள் அழைக்கப்பட்டனர். தெலுங்கு கவிதைகளுக்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் உடனுக்குடன் நூலிலிருந்தபடியே வாசிக்கப்பட்டது.பிற பிராந்திய மொழிகளில் வாசிக்கப்பட்ட கவிதைகளுக்கு தெலுங்கில் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பட்டது. ஏறத்தாழ பத்தரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரண்டரை மணிவரை நீடித்தது. அனைத்து மொழிக் கவிஞர்களும்  மரியாதை செய்யப்பட்டனர்.

 

கன்னடத்தின் மக்கள் கவிஞர் சித்தலிங்கையா,தெலுங்கின் சிவாரெட்டியை நேரில் சந்தித்து உரையாடியபோது தமிழின் முன்னோடி மக்கள்கவிஞர் இன்குலாப்தான் என் நினைவுகளில் சுழன்றுக் கொண்டிருந்தார்.

………..

………….

வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது

பயமில்லாமல் சந்தேகமில்லாமல்

உன்னை தட்டி எழுப்பி உட்காரவைக்கும்.

கம்பு கொண்டு வருவானொருவன்

லாந்தர் கொண்டு மற்றொருவன்

எவரும் எண்ணிப்பார்க்காத  திருப்பங்கள் வாழ்வில் நிகழும் போது

அழிக்கத்தக்க அதிசய நிலையில்

உன்னையாரோ புதைத்தபோது சூனியத்தை தவிர மிச்சமொன்றில்லை.

பூமியின் மேற்குப்பகுதியில் என்று உன் மனம் பதறும் போது

திடீரென வாக்கியமொன்று உள்புகும்……

–       தெலுங்குகவி கே. சிவாரெட்டி

தமிழில்: சத்தியவாணி

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.மொழிவது சுகம் அக்டோபர் -20
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *